பின்பற்றுபவர்கள்

2 அக்டோபர், 2010

எந்திரன் சொல்லும் தீர்ப்பு !

வழக்கமாக காது பிளக்க அடிக்கப்படும் விசில்கள் கூட நான் பார்த்த திரையரங்கில் இல்லை. திரையரங்கில் அத்தனை பேருமே 'டீசண்ட் பீப்பிள்ஸ்' தானா என்று வியக்க வைத்தது. படத்தில் இரஜினி எங்கே என்பதற்கு படம் முடிவதற்கு முன் 40 நிமிடங்கள் காத்திருக்க வேண்டி இருக்கிறது. வழக்கமாக ரஜினி செய்யும் ஸ்டைல்கள் படத்தில் இல்லை. ஆனால் அந்த ஒட்டுமொத்த எதிர்ப்பார்பையும் வில்லன் ரோபோவில் சிறப்பாக செய்திருக்கிறார். இவ்வளவு திறமையான நடிகர் ஏன் விசிலடிப்பதற்கு மட்டுமே இதுவரை படங்கள் நடித்தார் ? இரஜினி படங்களில் மாறுபட்ட படம் எந்திரன் என்றால் மிகை அல்ல. வழக்கமான ரஜினியின் அதிரடி கதாநாயகன் எந்திரனில் இல்லை என்பதால் இரஜினி ரசிகர்களுக்கு இந்தப் படம் ஏமாற்றம் தான். படத்தில் ரோபாக அவரே நடித்திருக்கிறார் என்பதை நம்பும் படி இல்லை அந்த அளவுக்கு இரஜினி ரோபோவாகவே மாறி இருக்கிறார். விஞ்ஞானி ரஜினியும் ரோபோ இரஜினியும் ஒருவருக்கொருவர் முற்றிலும் மாறுபட்டவராக ரஜினி அந்த பாத்திரங்களுக்குள் நுழைந்தே நடித்திருக்கிறார். மற்ற படங்களில் நடித்த போது அவருக்கு கிடைத்த சிறந்த நடிகருக்கான விருது எந்திரனுக்கு கிடைத்தால்/ கொடுத்தால் சிறப்பாக இருந்திருக்கும்.

இரஜினியின் எந்திரன் அவதாரம் அட்டகாசம். இரஜினிக்குள் இருந்த வில்லன் நடிப்பு அப்படியே தான் இருக்கிறது, இதுவரை அதை வில்லன் பாத்திரங்களுக்கு அறைகூவல் விடும் கதாநாயகனுக்காக மட்டுமே வில்லானாக தெரியும் படி நடித்தார். இந்தப் படத்தில் முழுமையாக இல்லாவிட்டாலும் வில்லன் பாத்திரத்தில் சிறப்பாக நடிக்க முடியும் என்று நிருபனம் செய்திருக்கிறார். இவ்வளவு நாட்களாக இவருக்குள் இருந்த வில்லனை தூங்கவைத்தவர்கள் தயாரிப்பாளர்களா இயக்குனர்களா ? அல்லது மாஸ் ஹிரோ என்று இவரே போட்டுக் கொண்ட வேடமா ? தெரியவில்லை. இருந்தாலும் முதல் முறையாக பல ஆண்டுகளுக்கு பிறகு நடிப்பு அறைகூவல் விடும் வில்லன் பாத்திரத்தில் தன்னாலும் செய்ய முடியும் என்று காட்டி இருப்பது திரை ரசிகர்களுக்கு மகிழ்ச்சி மற்றபடி இது போன்ற நடிப்பு இரஜினி ரசிகர்களுக்கு ஏமாற்றமே. காதல் பாடல்களில் இரஜினி ரசிகர்களுக்கான ஸ்டைல் இருக்கிறது. மற்றபடி சயின்டிஸ்ட் ரஜினி ஒரு பயந்தாங்கொள்ளிக் கேரக்டர் என்பதை ரஜினி ரசிகர்களால் ஜீரணிக்க முடியாது. சூப்பர் ஸ்டாரின் நடிப்பு அட்டகாசம், இன்னும் ஒருமுறை பார்க்கக் கூட எனக்கு தோன்றுகிறது. என் மகளுக்கும் எந்திரன் மிகவும் பிடித்திருந்ததாம்.

ஷங்கர் படம் தான் என்பதற்கு கிராபிக்ஸ் காட்சிகளைத் தவிர்த்தும், ரிச் சீன்ஸ் எனப்படும் செலவு மிக்கக் காட்சிகளைத் தவிர்த்து படத்தில் ஷங்கர் முத்திரைகள் இல்லை. வழக்கமாக ஊழலை ஒழிக்கிறேன். லஞ்சத்தை எதிர்க்கிறேன் என்று காட்சிப்படுத்துபவர் துவக்கத்தில் ரோபோவை இராணுவத்திற்கு பயன்படுத்தப் போவதாக கதையை நகர்த்தி அதையும் இடையில் மீட்டுக்கொண்டார். அவருக்கே அவரது தேசியவா(வியா)தி அவதாரம் போரடித்துவிட்டது போலும், அதனால் கதையை மாற்றும் கட்டாயத்தில் ரோபோ ஐஸ்வர்யாவை (சனா) காதலிக்க எடுக்கும் முயற்சியில் கொள்ளையடிப்பது, அதை விஞ்ஞானி ரஜினி எப்படி முறியடிக்கிறார் என்பதாக ஒரு வித காதல்கதை போல் சொல்ல முயற்சித்திருக்கிறார். ஒரு சில நையாண்டி வசனங்கள் சுஜாதா எழுதியவை என்பதாக தெரிகிறது. படத்தில் முழுதுமாக சுஜாதா பணியாற்றி இருந்திருந்தால் படம் கலகலப்பாக நகர்ந்திருக்கும். 2 1/2 மணி நேரத்திற்கும் மேலாக படம் ஓடுவது அயர்ச்சியைத் தருகிறது.

இடைவேளை வரையிலும் கூட ரோபோவை வைத்து ஸ்பைடர் மேன் அவதாரம் போல் எதுவும் பெரிதாக காட்சிகள் வைக்கப் போகிறார்களோ என்பதற்கு ஒரு ட்ரைன் சண்டைக்காட்சியைத் தவிர்த்து எதுவும் இல்லை. பிற்பாதியின் பாதியில் தான் படம் வேகமாக நகர்கிறது. பாடலுக்கு அழகாக நடனம் ஆடுகிறார் ஐஸ். விஞ்ஞானி ரஜினியின் ஐஸும் சந்திக்கும் காட்சிகள் ஒருவருக்கொருவர் கோவித்துக் கொள்வதாகவும் அதன் முடிவில் பாடல் என்பதை அமைத்திருக்கிறார்கள், படத்தில் ரஜினிக்கும் ஐஸுக்கும் காதல் எவ்வாறு வந்தது என்பதைக் காட்ட மெனக்கடாமல் அவர்களை காதலர்களாகவே அறிமுகப்படுத்துகிறார் ஷ்ங்கர். பிறகு ரோபோ ரஜினி ஐஸை காதலிக்கக்த் துவங்குவதால் இரண்டுமுறை காதல் உருவாகும் காட்சிகளை அமைப்பது போர் என்று விட்டிருப்பார் போலும். ஐஸுக்கும் ரஜினிக்கும் படத்தில் கெமிஸ்ட்ரி பிசிக்ஸ் எதுவும் தெரியவில்லை, காட்சிகளில் சேர்ந்து நடிக்கிறார்கள் அதுவும் ரசிகர்களுக்கு அவர்களின் வயது தெரிந்திருப்பதால், இருவரிடமும் அது போல் பெரிதாக ரொம்பவும் எதிர்பார்க்க முடியவில்லை.

ரஹ்மான் இசைதான் படத்தை முழுதாமாக தூக்கி நிறுத்தி இருக்கிறது. அத்தனை பாடல்களும் ஏற்கனவே கேட்டுச் சென்றதால் படத்தில் காட்சிகளுடன் பார்க்க இன்னும் சிறப்பாகவே இருந்தது.

மனிதர்களைப் போல் சிந்திக்கத் தெரியும், உணர்ச்சிவசப்படும் ரோபாக்களால் மனித இனத்துக்கு பலன் எதுவும் இல்லை, மனித இனத்துக்கு போட்டியாகவும் எதிரியாகவும் அமையும், அதை அழித்துவிட வேண்டும் என்பதாக ஷங்கர் நீதிபதிகள் மூலம் தீர்ப்பு எழுதி இருக்கிறார். வருணாசிரம தருமத்தில் ஊறிய இந்தியாவில் சிந்திக்கத் துவங்கினால் உருவாகும் பிரச்சனையை நன்று அறிந்து, அதனால் தானே சூத்திரன் படிக்கக் கூடாது அவன் உடல் வழியான வேலையை மட்டும் பார்த்தால் போதும் என்று சொல்லி சூடுவைத்தார்கள், அதையே சன்குழுமம் ஷங்கரும் இரஜினி என்கிற ரோபோவை வைத்து சொல்லி இருக்கிறார். எந்திரன் ஷங்கரின் மனுதர்மம்.

ரஜினி, ரஹ்மான் இவர்களின் உழைப்பிற்காகவும், தமிழில் இதுவரை வராத கிராபிக்ஸ் முயற்சிக்காக படம் பார்கலாம்.

22 கருத்துகள்:

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

ரொம்ப வித்தியாசமான, நேர்மையான விமர்சனம் கோவியாரே!

Chittoor Murugesan சொன்னது…

கோவி.கண்ணன் அண்ணாவுக்கு,
//வருணாசிரம தருமத்தில் ஊறிய இந்தியாவில் சிந்திக்கத் துவங்கினால் உருவாகும் பிரச்சனையை நன்று அறிந்து, அதனால் தானே சூத்திரன் படிக்கக் கூடாது அவன் உடல் வழியான வேலையை மட்டும் பார்த்தால் போதும் என்று சொல்லி சூடுவைத்தார்கள், அதையே சன்குழுமம் ஷங்கரும் இரஜினி என்கிற ரோபோவை வைத்து சொல்லி இருக்கிறார். எந்திரன் ஷங்கரின் மனுதர்மம்.//

இந்த பாராவை எழுதவே விமர்சனம் எழுதவந்திங்களோன்னு தோணூது. சூ...........ப்பர்.

குளவி பூச்சியை கூட கொட்டிக்கொட்டி குளவியாய் மாற்றுவது போல் ஷங்கரையும் மாற்றிவிட்டார்கள்

ஜோதிஜி சொன்னது…

முதலில் இன்ட்லில் சேர்த்து விட்டு அடுத்த வேலை பார்க்கச் செல்லவும்.

Starjan (ஸ்டார்ஜன்) சொன்னது…

வாரே வா... எந்திரன் பாத்தாச்சா.. கலக்கல்.

Raghav சொன்னது…

"மனிதர்களைப் போல் சிந்திக்கத் தெரியும், உணர்ச்சிவசப்படும் ரோபாக்களால் மனித இனத்துக்கு பலன் எதுவும் இல்லை, மனித இனத்துக்கு போட்டியாகவும் எதிரியாகவும் அமையும், அதை அழித்துவிட வேண்டும்"

"அதனால் தானே சூத்திரன் படிக்கக் கூடாது அவன் உடல் வழியான வேலையை மட்டும் பார்த்தால் போதும் என்று சொல்லி சூடுவைத்தார்கள்"

மொட்டை தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு... i-Robot பார்த்து இருக்கீங்களா??

தவிர கிருஷ்ண த்வைபாயனர் என்றும் வேத வியாசர் என்றும் போற்றப்படும், வேதங்கள் நான்கு என்று வகைபடுதியவருமான வியாசர் எண்ண குலம்??

நான்கு வேதங்களுக்கு ஒப்பான நான்கு பிரபந்தங்கள் எழுதிய ( திருவாய்மொழி, திருவிருத்தம், திருவாசிரியம் மற்றும் பெரிய திருவந்தாதி) நம்மாழ்வார் என்ன குலம்? என்ன ஜாதி?

தேவை இல்லாதன/ தவறானவை பேசுவதே பகுத்தறிவு ஆகாது - நான் பார்க்கும் பல வலைபதிவுகளில் ஏனோ இதுதான் தெரிகிறது...

வேதம் சொல்வதையும் சாஸ்திரங்கள் சொல்வதையும் தன் சுயநலத்திற்காக திரித்து சொல்லுபவன் பிராம்மணன் ஆனாலும் சரி நரகத்திற்கே போக கடவான் என்பதும் வேதத்தின் வாக்கு!

Prasad Raj சொன்னது…

அருமையான விமர்சனம்!!!

ரஜினியின் நடிப்பு அருமை!! 60பதை ..20ஆகா அழகாக மாற்ற முடியும் முடியும் என்பதை ஷங்கர் அழகாக சொல்லி இருக்கிறார்.

ஐஷ்வர்யா அழகு!!! :) கண்ணுக்கு தீணி.
ரஹுமான் ...காதுக்கு தீணி.

அருமையான பொழது போக்கு சித்திரம்....

Ŝ₤Ω..™ சொன்னது…

எந்திரன்:
ரஜினி அடுத்த தலைமுறையைக் கவர சிறந்த படம்.
சிட்டி பாடி லாங்குவேஜ் கலக்கல்.. அந்த எகத்தாளமான சிரிப்பு.. அது போதும்..
ஐஸ்வரியா குளிர்ச்சி.. நடனத்தில் “இருவர்” நினைவிற்கு வருவதைத் தவிற்கமுடியவில்லை..

ரஜினி படம் பார்த்த எஃபெக்ட் இல்லை.. ரஜினியிடம் எதிர்பார்க்கும்(த்த) விஷயங்கள் மிஸ்ஸிங்.. ஸ்பைடர் மேனை ரோபோவாக உறுமாற்றம் செய்து, வில்லனாக சித்தரிக்கப்பட்ட கதை. கெட்டவனாக ரஜினி இருக்கமுடியாததால் இறுதியில் சிட்டி திருந்தியேயாக வேண்டிய கட்டாயம். கிளிமாஞ்சாரோ தினிப்பு, செல்லமுடியாத இடத்திற்கு செல்வோம் என்ற கொக்கறிப்பு..


மொத்தத்தில் எந்திரன்: Toy Story
(ஒரு வேளை ஓவர் பில்டப் உடம்புக்கு ஆகலையோ)
------------
இப்படி சொன்னா, என்னைத் திட்டுவாங்களா?? ஆட்டோ ஏதும் வருமா???

ராஜரத்தினம் சொன்னது…

திரு ராகவ் என்ற பேரில் பின்னூட்டமிட்டவருக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்.இந்த கோவி போன்ற ஆட்களுக்கு தன்னை எத்தனை பேர் திட்டுகிறான் என்பதையே தன் வெற்றியாக வாழ்பவர்கள். இது தெரியாமல் நானும் கொஞ்ச காலம் இப்படித்தான் இங்க வந்து குப்பை கொட்டினேன். அது இங்க உதவாது. கண்ணனுக்கு தெரிந்த ஒரே டாபிக்.
1. ஆர்ய மாயை
1.வருனாசிரமம்
1. மாரியாத்தா ஏன் தலை மட்டும்
அதனால் நீங்க இந்த கோவி தூங்கறார்னு நினைத்து எழுப்ப நினக்கவேண்டாம். அப்புறம் உங்களை ரொம்ப நல்லவனு கோவி ஏதாவது ஒரு பதிவு போட்டு வழக்கம்போல் உளற போகிறார்.

கோவி.கண்ணன் சொன்னது…

//Blogger பன்னிக்குட்டி ராம்சாமி said...

ரொம்ப வித்தியாசமான, நேர்மையான விமர்சனம் கோவியாரே!//

நன்றிங்க சார்.

கோவி.கண்ணன் சொன்னது…

//ஜோதிஜி said...

முதலில் இன்ட்லில் சேர்த்து விட்டு அடுத்த வேலை பார்க்கச் செல்லவும்.//

:) சேர்க்கனும்

கோவி.கண்ணன் சொன்னது…

//Blogger Starjan ( ஸ்டார்ஜன் ) said...

வாரே வா... எந்திரன் பாத்தாச்சா.. கலக்கல்.//

டெம்ப்ளேட் பின்னூட்டமா ? அவ்வ்வ்

கோவி.கண்ணன் சொன்னது…

//தவிர கிருஷ்ண த்வைபாயனர் என்றும் வேத வியாசர் என்றும் போற்றப்படும், வேதங்கள் நான்கு என்று வகைபடுதியவருமான வியாசர் எண்ண குலம்??//

அவிங்களெல்லாம் ஏன் 'ப்ராமனர் ஆக முயற்சிக்கவில்லை ?' முடிந்தாலும் 'சோ' கால்ட் பார்பனர்கள் சேர்த்துக் கொள்ளமாட்டார்கள் என்பதால் தானே ?

//நான்கு வேதங்களுக்கு ஒப்பான நான்கு பிரபந்தங்கள் எழுதிய ( திருவாய்மொழி, திருவிருத்தம், திருவாசிரியம் மற்றும் பெரிய திருவந்தாதி) நம்மாழ்வார் என்ன குலம்? என்ன ஜாதி?//

மாணிக்கவாசகரை ஏன் பெருமாள் பக்கத்தில் நின்னா தீட்டுன்னு சொல்லி அகற்றச் சொன்னா ? ஏன் நந்தனார் சிலையை அகற்றி படிக்கட்டுக்கு அடியில் போட்டா ? அவா குலம் தாழ்ந்த குலம் என்பதால் தானே ?

//தேவை இல்லாதன/ தவறானவை பேசுவதே பகுத்தறிவு ஆகாது - நான் பார்க்கும் பல வலைபதிவுகளில் ஏனோ இதுதான் தெரிகிறது...//

தேவை எது / இல்லை என்பதற்கு தீர்வு சொல்பவர் யா ?


//வேதம் சொல்வதையும் சாஸ்திரங்கள் சொல்வதையும் தன் சுயநலத்திற்காக திரித்து சொல்லுபவன் பிராம்மணன் ஆனாலும் சரி நரகத்திற்கே போக கடவான் என்பதும் வேதத்தின் வாக்கு!//

'நரகம்' அப்படி ஒண்ணும் இல்லை என்று எல்லை மீறி கருவரையை பள்ளியறையாக மாற்றியதும், கோவிலுக்குள்ளேயே கொலைக் கும்பலை ஏவி விட்டதெல்லாம் யார் ? இவாளெல்லாம் ப்ராமனாள் இல்லை என்று சொல்லுவீரா ?

கோவி.கண்ணன் சொன்னது…

// Prasad said...

அருமையான விமர்சனம்!!!

ரஜினியின் நடிப்பு அருமை!! 60பதை ..20ஆகா அழகாக மாற்ற முடியும் முடியும் என்பதை ஷங்கர் அழகாக சொல்லி இருக்கிறார்.

ஐஷ்வர்யா அழகு!!! :) கண்ணுக்கு தீணி.
ரஹுமான் ...காதுக்கு தீணி.

அருமையான பொழது போக்கு சித்திரம்....//

நன்றி பிரசாத்

கோவி.கண்ணன் சொன்னது…

//
மொத்தத்தில் எந்திரன்: Toy Story
(ஒரு வேளை ஓவர் பில்டப் உடம்புக்கு ஆகலையோ)
------------
இப்படி சொன்னா, என்னைத் திட்டுவாங்களா?? ஆட்டோ ஏதும் வருமா???//

:)

கோவி.கண்ணன் சொன்னது…

// ராஜரத்தினம் said...

திரு ராகவ் என்ற பேரில் பின்னூட்டமிட்டவருக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்.இந்த கோவி போன்ற ஆட்களுக்கு தன்னை எத்தனை பேர் திட்டுகிறான் என்பதையே தன் வெற்றியாக வாழ்பவர்கள். இது தெரியாமல் நானும் கொஞ்ச காலம் இப்படித்தான் இங்க வந்து குப்பை கொட்டினேன். அது இங்க உதவாது. கண்ணனுக்கு தெரிந்த ஒரே டாபிக்.
1. ஆர்ய மாயை
1.வருனாசிரமம்
1. மாரியாத்தா ஏன் தலை மட்டும்
அதனால் நீங்க இந்த கோவி தூங்கறார்னு நினைத்து எழுப்ப நினக்கவேண்டாம். அப்புறம் உங்களை ரொம்ப நல்லவனு கோவி ஏதாவது ஒரு பதிவு போட்டு வழக்கம்போல் உளற போகிறார்.//

நன்னா புரிஞ்சு வச்சிருக்கேள், சிங்கப்பூரில் தானே இருக்கேள், உங்கள் ப்ரொபைல் சொல்றது. தரிசனம் தரமாட்டேளா ?

ஜோ/Joe சொன்னது…

//ரஜினி, ரஹ்மான் இவர்களின் உழைப்பிற்காகவும்//

ரஜினி சரி ..அதென்ன ஷங்கரை விட ரகுமானின் உழைப்பு ? உங்களுக்கே கொஞ்சம் ஓவரா தெரியல்ல ? :)

அருண் பிரசாத் சொன்னது…

சரியான விமர்சனம்... ஆகா என புகழவும் இல்லை, தூ என துப்பவும் இல்லை...

மாலோலன் சொன்னது…

"""""வருணாசிரம தருமத்தில் ஊறிய இந்தியாவில் சிந்திக்கத் துவங்கினால் உருவாகும் பிரச்சனையை நன்று அறிந்து, அதனால் தானே சூத்திரன் படிக்கக் கூடாது அவன் உடல் வழியான வேலையை மட்டும் பார்த்தால் போதும் என்று சொல்லி சூடுவைத்தார்கள், அதையே சன்குழுமம் ஷங்கரும் இரஜினி என்கிற ரோபோவை வைத்து சொல்லி இருக்கிறார். எந்திரன் ஷங்கரின் மனுதர்மம்.""""""


அதெப்பிடி சார்? ரூம் போட்டு ஒக்காந்து யோசிப்பீங்களோ?
அப்போ சூத்திரனும் ரோபோவும் ஒண்ண?:)- போங்க சார் !படத்த பாத்தமா!எஞ்சாய் பண்ணமான்னு இல்லாம வந்திட்டீங்க சொம்ப தூக்கிட்டு! எல்லாத்துக்கும் காரணம் பாப்பான் ,மனுதர்மம் ன்னு!
மொதல்ல மனுதர்மத்த் ஒழுங்கா படிச்சிட்டு வாங்க! இவ்ளோ பேசறீங்களே, ப்ரேமானந்தா முதல் நேத்து மாட்ன நித்யா,ப்ங்க்காரு வரைக்கும் எந்த மனுத்ர்ம்ப்பிரகாரம் ஊர ஏமாத்தினாங்க?

ராஜரத்தினம் சொன்னது…

//நன்னா புரிஞ்சு வச்சிருக்கேள், சிங்கப்பூரில் தானே இருக்கேள், உங்கள் ப்ரொபைல் சொல்றது. தரிசனம் தரமாட்டேளா ?//

அது எப்படீனா சரியா சொல்லிட்டேள்!
அப்ப நீங்க கிறுத்துவத்துக்கு மாறிவிட்ட பேரை மாற்றாம இருக்கும் தலித்தா?

இது மாதிரிதான் இருக்குது உங்க கேள்வியும். எப்பவாவது நாம பாத்துக்காமலா போயிட போறோம்?

சீனு சொன்னது…

என்னா விமர்சனம் இது? :(

Raghav சொன்னது…

"மொட்டை தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு... i-Robot பார்த்து இருக்கீங்களா??"

இதுக்கு பதில் இல்லை... சந்தோஷம் :)

"//தேவை இல்லாதன/ தவறானவை பேசுவதே பகுத்தறிவு ஆகாது - நான் பார்க்கும் பல வலைபதிவுகளில் ஏனோ இதுதான் தெரிகிறது...//

தேவை எது / இல்லை என்பதற்கு தீர்வு சொல்பவர் யா ?"

தவறானவை என்று குரிபிட்டதில் சந்தேஹம் இல்லை போலும்...

"சூத்திரன் படிக்கக் கூடாது" - என்று நீங்கள் குறிப்பிட்ட கூற்று தவறு.

நீங்கள் கூறியது தவறு என்று சாற்றுவதாக நீங்கள் கேட்டுஇருக்கும் கேள்விகளே உள்ளன.

நான் முக்கியமாக பேசவந்தது இதை தான். சம்பந்தம் இல்லாத இரண்டு விஷயங்களை என்ன எண்ணம் கொண்டு முடிசிடுகீரீகள்?

விமர்சனகளை எந்த சமூஹமும் எடுத்துகொள்ள வேண்டும், விமர்சனமே கூடாது என்று சொல்ல்வது முட்டாள் தனம். அதே சமயம் மொட்டை தலை முழங்கால் விழயங்களை பார்த்துகொண்டு சும்மா இருக்கவும் தேவை இல்லை :) அது நான் சொன்னாலும் சரி, நீங்கள் சொன்னாலும் சரி

தெளிவாக ஒன்றை புரிந்துகொள்ள வேண்டும், தமிழும் சரி இந்திய நாடும் சரி எந்த காலத்திலும் ஒரு ஜாதியையோ அல்லது ஒரு இறை பின்பற்றுதலையோ ஒழித்து கட்ட வேண்டும் என்று எண்ணியதில்லை - சுமார் ஒரு 50 ஆண்டுகளுக்கு முன்னால் தான் ஆரியம், ப்ராமியம் இவைகளை ஒழித்தே தீருவோம் என்பது போன்ற தொனியில் யோசிக்காமல் பேசி பார்கிறார்கள், ஆழ்ந்து சிந்திப்போமேயானால் இதன் வேறு ஆரியதயோ பிரமியதயோ ஒழிப்பது அல்ல... இந்த பேச்சுகளில் உள் கரணம் வேறு.

ஒரு வேளை ஆரியம் ப்ராமியம் இல்லை என்று கொள்வோம் நிச்சயம் சிலகட்சிகளின் உந்துதல்களால் வேறு எதையோ எவரையோ தீர்துகட்டியே தீருவது என்று துடிக்கும் பேசும் கூட்டம் இருக்கும்.

அடக்குமுறை எல்லா நாடுகளிலும் இருந்து உள்ளது. இன்றும் பல நாடுகளில் தீண்டாமை உள்ளது. இவையெல்லாம் விமர்சனதுகுரியவை திருதபடவேண்டியவை. ஆரியம் பிரமியம் இல்லாத இந்திய சமூகங்களில் நான் குடித்த தேநீர் குடுவையை இன்னொருவனுக்கு கொடுக்க கூடாது என்று சண்டையிடுவதில்லை என்று துண்டை போட்டு தாண்டுவீர்கள??

இதிஹாச காலம் தொட்டே பிராமணன் என்றல் எண்ண? பிறப்பு தான் அதை குறிக்குமா, பிறந்து விட்டதால் நீ பிராமணன் ஆகிவிடுவாயா போன்ற கேள்விகள் இருக்கின்றன. இதற்கு அவைகளிலே தெளிவான பதில்களும் இருக்கின்றன. அப்படி பார்க்கும்போது நீங்கள் கேட்கும் மாணிக்கவாசகர் நந்தனார் கேள்விகள் எல்லாம் சீரியவையே...
1) அதற்காக நீங்கள் சொல்லும் "தீர்ப்பு" போன்ற முட்டாள் தனமான பேச்சை ஒப்புகொள்ள தேவை இல்லை.

2) ஊரில் இருபவர்களெல்லாம் பிராமணனாக இருந்தால் தான் படிக்கலாம் என்றும் சொல்லவில்லை, பிராமணன் எழுதினால் தான் படிப்பேன் என்று பிராமணனும் சொல்லவில்லை - இதற்கு எடுதுக்காட்டகதான் இதிகாசமும் வரலாறும் மெச்சும் பெயர்களை குறிப்பிட்டேன். அதற்கும் சம்பந்தம் இல்லாத ஒரு கேள்வி.

சிலவிஷயங்களில் முதலில் தெளிவாகுங்கள் - உங்கள் பார்வை விமர்சனமா அல்ல ஒழிப்பேன் என்ற என்னமா அல்ல சின்ன வயசில் மேடைகளில் இப்படி பேசிதான் கேட்டு இருக்கேன் நானும் இப்படி தான் பேசுவேன் என்பதா???
இவைகலாவது பரவில்லை இப்படி பேசினால் ஒருகூட்டத்தில் நானும் ஒருவன் என்ற தெயரியமும் உங்களை கேள்வி கேட்டாலோ விமரிசிதலோ குரல் கொடுக்க ஆளிருக்கு என்கிற என்னமா?

உங்கள் சில பதிவுகள் நன்றாக இருந்தன. நல்ல சிந்தனையாளர்கள் நம்தமிழ் நாட்டின் பாரத்தின் சொத்து. அதனால் தான் உரிமையுடன் இவ்வளவு பேசியுள்ளேன். நிச்சயம் இதில் வேறு எந்த உள்ளுணர்வோ, கீழ்படுத்த வேண்டும் என்ற என்னமோ இல்லை - விமர்சனத்தின் பார்வையிலும் இல்லை என்று நம்புகிறேன்.

- வெ. ராகவ்

dondu(#11168674346665545885) சொன்னது…

@சித்தூர் முருகேசன்
ஒரு முக்கியத் தகவலை சித்தூர் முருகேசனுக்கு சொல்ல வேண்டும். அவர் தளத்துள் போக முடியாமல் உலவு.காம் இணைப்பு காரணமாக வைரஸ் அறிவிப்பு வந்து பயமுறுத்துகிறது. தேவையற்ற விட்ஜெட் அது. நீக்கினால் நலம்.

நண்பர் கோவி கண்ணனிடம் சற்றே அதிகமாக உரிமை எடுத்துக் கொண்டதற்கு அவர் என்னை மன்னிக்கட்டும்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்