பின்பற்றுபவர்கள்

18 ஜூலை, 2011

மொட்டை !


குழந்தைக்கு ஒரு வயதிற்குள் குலதெய்வம் அல்லது மிகவும் பிடித்த ஏதோ ஒரு கோவிலில் வைத்து மொட்டையடிப்பது தமிழர் வழக்கம், அதை விட்டால் ஒராண்டு சென்று மூன்று வயதிற்குள் அடிக்க வேண்டுமாம். எனக்கு இந்த சடங்குகளில் நம்பிக்கை இல்லாவிட்டாலும், வீட்டில் உள்ளவர்களின் அறிவுறுத்தல், சென்டிமென்ட்ஸ் மற்றும் இதர வகைகளினால் ஒருவயதிற்குள் மொட்டையடிப்பது என்று முடிவாகியது. மேலும் குழந்தையாக இருக்கும் போது முதல் மொட்டை போட முடி கரு கருவென்று வளர்வதற்கு வழிசெய்யும். சிலருக்கு இளம் வழுக்கையை மறைத்து இளமையாக்க மொட்டை பயன்படுகிறது. மகளுக்கு பள்ளி விடுமுறை அடுத்து டிசம்பரில் தான் என்பதாலும் அதற்குள் ஒரு வயது ஓடிவிடும் என்பதால் சிங்கப்பூர் - மலேசியாவில் ஏதோ ஒரு கோவிலில் மொட்டையடிக்கலாம் என்று முடிவாகி, சின்ன சுற்றுலாவாக மலேசியாவிற்குச் சென்று அங்குள்ள பத்து மலையில் மொட்டையடிக்கலாம் என்று உறுதி செய்து பயண ஏற்பாடுகளை செய்தேன். பயண ஏற்பாடுகளுக்கான முன்பதிவுகளை செய்து கொடுத்ததும் கூடவே பயணம் முழுவதும் எங்களுடன் இருந்தார், பதிவர் நண்பர் வெற்றிக்கதிரவன் (எ) விஜயபாஸ்கர். ஒரு நாள் விடுப்பு வெள்ளி அதன் தொடர்ச்சியாக வார இறுதி சனி ஞாயிறு என மூன்று நாள் பயணமாக மலேசியாவிற்குக் கிளம்பினோம்.

சிங்கையிலிருந்து கிளம்பி, அதனை அடுத்துள்ள மலேசியா ஜோகூரில் இருந்து இரவு நேர படுக்கை வசதியுள்ள ரயிலில் தான் பயணம், வியாழன் நள்ளிரவில் கிளம்பிய ரயில் வெள்ளி விடிய காலை 6:30 மணிக்கு கோலாலம்பூர் சென்ட்ரல் சென்று அடைந்தது. அங்கிருந்து மகிழுந்துவில் பயணத்து ஓட்டல் அறையை அடைந்து சிறிது நேரம் இளைப்பாறிவிட்டு கிட்டதட்ட 11 மணி வாக்கில் மற்றொரு மகிழுந்தில் பயணித்து பத்துமலை சென்றோம். கிட்டதட்ட 20 நிமிட பயணம் தான். மலை அடிவாரத்தை நெருங்கும் முன் தொலைவிலேயே பத்து மலை முருகனின் மிகப் பெரிய சிலை வியக்க வைத்தது, இதற்கு முன்பு அங்கு சென்றிருக்கிறேன் என்றாலும் சிலை அமையப் பெற்ற பிறகு சென்றது முதல் முறை என்பதால் அந்த இடமே மாறுபட்டத் தோற்றத்தில் இருந்தது. உருவ வழிபாட்டை புறக்கணிக்கும் இஸ்லாமியர்கள் நிறைந்து இஸ்லாமிய நாடாகவே இருக்கும் மலேசியாவில், இந்திய சமய நம்பிக்கைகளின் ஒன்றான குறிப்பாக தமிழர் நம்பிக்கைகளின் சாட்சியாக கழுத்து சுளுக்கும் அளவுக்கு நிமிர்ந்து பார்க்க வைக்கும் சிலை உருவம், மலேசிய மக்களின் மதச் சகிப்புத் தன்மையின் சாட்சியாக விளங்கியது. இது போன்ற மாபெரும் சிலையை நான் இதுவரை எங்கும் பார்த்தது இல்லை.


சிறுது நேரம் சிலையை நிமிர்ந்து பார்த்துவிட்டு நிழல்படங்களை எடுத்துக் கொண்டு முடி இறக்கும் இடத்திற்கு வந்தோம், கோவில்களில் இருப்பது போன்று முடி இறக்க தனியாக இடம் இல்லை என்பதை நண்பர் முன்பே தெரிவித்திருந்தார், ஆனால் அங்கு அடிவாரத்தில் இருக்கும் முடித்திருத்தகத்திலேயே 'முடி இறக்கும் இடம்' என்ற அறிவுப்பு பலகை இருந்தது,
அங்கு சென்று 10 ரிங்கிட் (மலேசிய நாணயம்) சீட்டு வாங்கி, குழந்தைக்கு மொட்டை ஏற்பாடு செய்தோம், குழந்தையை வெற்றிக்கதிரவன் மடியில் இருத்திக் கொண்டார்,
சிறிது நேரம் அமைதியாக இருந்த குழந்தை அழத் துவங்கினான், பிறகு அவன் அம்மாவிடம் கொடுத்து புட்டிப்பால் புகட்டிக் கொண்டே மொட்டை மொட்டை அடிக்கப்பட்டது, பாதியிலேயே வீரிட்டுக் கத்தத் துவங்கினான்.
மொட்டை அடிக்கும் வேலை 3 நிமிடங்கள் தான் என்பதால் அழுகையை கண்டு கொள்ளாமல் அழுத்திப் பிடித்து கொண்டு மொட்டையை நிறைவு செய்தாகிவிட்டது, கீறல் விழாமல் மொட்டையடித்தைப் பாராட்ட கூடுதலாக 10 ரிங்கிட்டுகள் கொடுத்தோம். குழந்தைகளை குளிப்பாட்ட மின்சார சாதன வெந்நீர் ஏற்பாடு செய்திருக்கிறார்கள், குளித்து முடித்து, புத்தாடை அணிவித்து தலையில் சந்தனத்தைத் தடவி கோவில் படிக்கட்டுகளை நெருங்கினோம் அதுவரை அழுது கொண்டிருந்தான் பிறகு அங்கிருக்கும் புறாக்களைப் பார்த்து அமைதியானான். நம்மை எதோ செய்கிறார்கள் என்கிற பயம் இருக்கும் போல் குழந்தைகளுக்கு, அங்கு பிறந்த ஒரே மாதம் ஆனக் குழந்தைகளைக் கூட மொட்டை அடிக்க அழைத்துவருகிறார்கள், உச்சிக் குழி மூடாமல் மொட்டையடிப்பதை நினைத்தால் பதட்டமாகவே இருக்கிறது, சீனர்களும் கூட அவர்கள் வழக்கத்தில் தங்கள் குழந்தைகளுக்கு ஒரு மாதத்தில் மொட்டை அடிப்பதாக முன்பு என்னிடம் தெரிவித்திருந்தார்கள்.


செங்குத்தான படி, 15 - 20 படிக்களுக்கு இடையே கொஞ்சம் அகலமான படிக்கட்டுகளுடன் 300க்கு மேலான படிக்கட்டுகளுடன் படிகள் அமைக்கப்பட்டுள்ளன, முக்கால் பங்கு தொலைவு மேலே ஏறியதும் தான் முருகன் சிலையின் தலை உயரம் வருகிறது, உயரமும், அதன் பின் இருக்கும் மாலை அலங்காரமும் மொத்த சிலையும் கலை அமைப்புடன் 'விசுவ ரூப' தோற்றம் என்று வடமொழியில் கடவுள் குறித்தான கதையாடலில் சொல்ல்படுவதன் சாட்சியாகக் காணப்படுகிறது. அமைப்பாளர்களைப் பாராட்டலாம்.





படிகளின் கைப்பிடிச் சுவர்களில் அங்கங்கே குரங்குகள் விளையாடுகின்றன, சுற்றுலாவாசிகள் படமெடுக்கிறார்கள், மேலே சென்றால் பெரிய குகை, மலைகள் உருகி கூம்புகளாகத் தொங்கிக் கொண்டிருந்தன
அவற்றில் இருந்து தண்ணீர் சொட்டிக் கொண்டு இருந்தன, நல்ல குளுமை, மழைத் துளிபோல் குகையின் திறந்த பகுதிகளில் மேலிருந்து தண்ணீர் துளிகள் எப்போதும் விழுந்து கொண்டிருக்கின்றன. குகையின் நடுவே தனியாக இருக்கும் முருகன் கோவிலும்,
அதைக் கடந்த படிக்கட்டுகளில் மேலே ஏற அதனை அடுத்து வள்ளி தெய்வானையுடன் நிற்கும் முருகன் கோவிலும் உள்ளது, குகையின் சுவர்களில் சுற்றுலாவாசிகள் பெயர்களை எழுதி இருக்கிறார்கள், அதனைத் தடுக்க 'சுவர்களில் எழுதாதீர்கள்' என்ற அறிவிப்பும் அங்கங்கே இருக்கிறது, குகைச் சுவர்களில் அங்கங்கே பல்வேறு சாமி சிலைகள் அமைக்கப்பட்டுள்ளன. அந்த இடமே இயற்கைச் சூழலுடன் அமைதியாகவும் காணப்படுகிறது.



அங்குள்ள பூசாரிகளிடம் (இங்கு பார்பனர்கள் அர்சகர்களாக இல்லை, முழுக்க முழுக்க தமிழ் வழிபாடு தான்) திருநீறு குங்குமம் வாங்கிக் கொண்டு சிறிது நேரம் அமர்ந்திருந்துவிட்டு திரும்பினோம்,
ஏராளமான ஐரோப்பியர்கள் அங்கு வந்து செல்கிறார்கள், தன் மதம் பற்றிய தெளிவுகளையெல்லாம் மூட்டை கட்டி வைத்துவிட்டு அல்லது புறம் தள்ளிவிட்டு அங்கு கோவிலில் இருக்கும் பூசாரியிடம் மணிக்கட்டில் மஞ்சள் கயிற்றைக் கட்டிக்கொள்கிறார்கள். இந்தக் காட்சியை பிறமதவாதிகள் பார்த்தால் 'இந்தப் பூசாரி சைலண்டாக பிற மதத்தினரை மதம் மாற்றுகிறார் பார்...' என்றும் இந்துமதவாதிகள் பார்த்தால் 'இந்து ஞானமரபினைப் போற்றி இந்து கோவிலுக்கு ஆர்வமாக வரும் கிறித்துவர்கள்' என்றும் சொல்லுவார்கள் நண்பரிடம் சிரித்துக் கொண்டே சொன்னேன், கயிறு கட்டிக் கொண்டவர்களில் இஸ்லாமியர்கள் யாரும் இல்லை (வாகபிகள் 'இன்சா அல்லா' என பெருமூச்சு விடலாம்), ஆனால் சுற்றுலாவாசிகளாக குகைகளில் எல்லா இடங்களையும் சுற்றிப்பார்க்கிறார்கள்.






நடக்க இயலாதவர்கள் படிக்கட்டு வழியாக மேலே வர வாய்ப்பில்லை, பிற ஏற்பாடுகள் எதுவும் இல்லை, அவர்கள் கிழிறிந்து பார்த்துக் கொள்ள வேண்டியது தான், இழுவை ரயில்கள் இன்னும் அமைக்கப்படவில்லை, எதிர்காலத்தில் அவை வரலாம். முன்கூட்டியே வேட்டி எடுத்துவந்த்தால் மடித்துக் கட்டிக்கொண்டு ஏறுவதற்கும், இறங்குவதற்கும் வசதியாகத்தான் இருந்தது, சுற்றுலாவாசிகள் காலணிகளுடன் ஏறுகிறார்கள், அவை தடைசெய்யப்படவில்லை, இந்துக்கள் காலணிகளை கீழேயே விட்டுவிட்டு ஏறுகிறார்கள்.

பதிவின் நீளம் கருதி இத்துடன் முடித்துக் கொள்கிறேன். ஒருவிதத்தில் பத்து மலை மலேசியாவின் ஆகச் சிறந்த சுற்றுலா தளங்களில் ஒன்றாக விளங்குகிறது. புலம் பெயர்ந்த தமிழர்கள் எங்கு வாழ்ந்தாலும் அங்கு தமிழர் பண்பாட்டு சின்னங்களை அமைத்திருப்பது அடுத்து செல்லும் நமக்கு மிகவும் வசதியாக இருக்கிறது, அவர்களின் உழைப்பும், ஈடுபாடும் போற்றுதலுக்குரியது. பிற நாடுகளில் வாழும் சீனர்களுக்கு அடுத்து தங்களுக்கான அடையாளங்களை உருவாக்கிக் கொள்வதில் தமிழர்கள் முனைப்புடன் தான் இருக்கிறார்கள் என்பது நமக்கெல்லாம் பெருமைக்குரிய ஒன்றாகும் என்பதை நினைத்துக் கொண்டே திரும்பினேன்.

பின்குறிப்பு : குழந்தைப் படங்களை பதிவுகளில் போடுவதற்கு நிறைய நண்பர்கள் எதிர்ப்பு தெரிவித்து தனிப்பட்ட முறையில் நன்கு சொல்லி இருக்கிறார்கள், இதில் ஏன் போடுகிறேன் என்றால், எனக்கு இருக்கும் பதிவர் நண்பர்கள் ஒவ்வொருவருக்கும் என்னுடைய மகிழ்ச்சியான பொழுதுகளை பகிர்ந்து கொள்ளவும், குழந்தை வளர்ந்து பிறகு இவற்றையெல்லாம் தெரிந்து கொள்ள வேண்டும் என்கிற ஆவணமாகத் தான் போடுகிறேன்.

23 கருத்துகள்:

ஸ்வாமி ஓம்கார் சொன்னது…

பத்தமலை முருகா...!

வெற்றிக்கதிரவன் மாமா நல்லா இருக்காரா :)

// ஆவணமாகத் தான் போடுகிறேன்.//

எதையும் ஆணவமாக போடாமல்
ஆவணமாக போட்டால் தப்பில்லை..!

துளசி கோபால் சொன்னது…

அட! அட! முருகன் மொட்டை!!!!

குட்டிப் பழனி(யாண்டி) போல இருக்கார் நம்ம கதிர்.

இனிய வாழ்த்து(க்)கள்.

பத்துமலை நமக்குத் தட்டிக்கிட்டே போகுது.

அடுத்தவருசம் போகலாமுன்னு இருக்கோம்.முருகன் மனசு வைக்கணும்.

தாய்மாமன் விஜயபாஸ்கருக்கு இனிய பாராட்டுகள். குழந்தையை அழாமப் பார்த்துக்கப் படிச்சுட்டாரா:-)))))

கோவி.கண்ணன் சொன்னது…

//வெற்றிக்கதிரவன் மாமா நல்லா இருக்காரா :)
//

வெற்றிக்கதிரவனோட மாமா போய்விட்டார், ஒருவார விடுப்பில் ஊருக்குப் போய் இருக்கான்

//எதையும் ஆணவமாக போடாமல்
ஆவணமாக போட்டால் தப்பில்லை..!//

இதுல ஆணவம் எதுவும் இல்லையே
:)

கோவி.கண்ணன் சொன்னது…

//இனிய வாழ்த்து(க்)கள்.
//

வாழ்த்துக்கு அவர் சார்பிலும் நன்றி அம்மா.
//

//பத்துமலை நமக்குத் தட்டிக்கிட்டே போகுது.//

சிங்கப்பூர் வழியாகப் போகும் போது ஒரு முயற்சி செய்யுங்கள். கோலாலம்பூரில் மஸ்ஜித் இந்தியா பகுதியில் சரவணபவன், சங்கீதா ரெஸ்டாரெண்ட் இருக்கு, அங்கு அருகில் தங்கினால் உணவுக்கு கவலை இல்லை

//தாய்மாமன் விஜயபாஸ்கருக்கு இனிய பாராட்டுகள். குழந்தையை அழாமப் பார்த்துக்கப் படிச்சுட்டாரா:-)))))//

மடியில் உட்கார வைக்கும் போது மாமன் என்று தான் சொன்னோம்

நிகழ்காலத்தில்... சொன்னது…

சிறுவயது படங்கள் போடலாம். வளர வளர போடுவதை தவிர்ப்பது நலம்.

சூப்பரா இருக்கார் குட்டி கோவியார் :))

அவருக்கு என் வாழ்த்தினையும் அன்பினையும் தெரிவியுங்கள்.,

கூடவே வெற்றிக்கதிரவனிடத்திலும்..

suvanappiriyan சொன்னது…

மலேசிய பயணம் சந்தோஷமாக அமைந்ததற்கு வாழ்த்துக்கள்!

//கயிறு கட்டிக் கொண்டவர்களில் இஸ்லாமியர்கள் யாரும் இல்லை (வாகபிகள் 'இன்சா அல்லா' என பெருமூச்சு விடலாம்), ஆனால் சுற்றுலாவாசிகளாக குகைகளில் எல்லா இடங்களையும் சுற்றிப்பார்க்கிறார்கள்.//

கோவிக் கண்ணனை நான் மதிப்பது என்பது வேறு. அதற்காக அவர் மனது சந்தோஷப்பட வேண்டும் என்று பொய்யாக இறை வழிபாட்டில் கலந்து கொள்வது தவறில்லையா? ஒரு இதயத்தில் இரு வேறுபட்ட மாறுபட்ட கருத்துக்கள் இருக்க முடியாது அல்லவா? கருணாநிதி தொப்பி போட்டு கஞ்சி குடிக்கிறார் என்றால் அவருக்கு விழும் இஸ்லாமியரின் ஓட்டுக்களை குறி வைத்தே!

எனவே மற்றவர்களின் நம்பிக்கையை மதிக்க வேண்டும். மாற்று மதத்தவரோது சகோதர பாசத்தோடு பழக வேண்டும்.

//உருவ வழிபாட்டை புறக்கணிக்கும் இஸ்லாமியர்கள் நிறைந்து இஸ்லாமிய நாடாகவே இருக்கும் மலேசியாவில், இந்திய சமய நம்பிக்கைகளின் ஒன்றான குறிப்பாக தமிழர் நம்பிக்கைகளின் சாட்சியாக கழுத்து சுளுக்கும் அளவுக்கு நிமிர்ந்து பார்க்க வைக்கும் சிலை உருவம், மலேசிய மக்களின் மதச் சகிப்புத் தன்மையின் சாட்சியாக விளங்கியது. இது போன்ற மாபெரும் சிலையை நான் இதுவரை எங்கும் பார்த்தது இல்லை.//

இந்தியாவில் இஸ்லாம் வளர்ந்தால் இந்து மத கோட்பாடுகளுக்கு பங்கம் வந்து விடும் என்ற போலியான பிரசாரம் செய்பவர்கள் இந்த பதிவையும் கொஞ்சம் பார்க்க வேண்டும்.

sultangulam@blogspot.com சொன்னது…

செங்கதிர், அப்பாவுடைய டிட்டோ. இரண்டு பேர் முகமும் அருகில் இருக்கும் போது நார்மல் வித் மினியேச்சர். செங்கதிருக்கும் ஜிகே குடும்பத்தாருக்கும் வாழ்த்துகள். பொறுப்பான அங்கிள் விஜயபாஸ்கருக்கும் வாழ்த்துகள்.

//கயிறு கட்டிக் கொண்டவர்களில் இஸ்லாமியர்கள் யாரும் இல்லை (வாகபிகள் 'இன்சா அல்லா' என பெருமூச்சு விடலாம்)//
நாங்களும் சுற்றிப்பார்க்க என்று நிறைய கோவிலுக்கு போய் இருக்கின்றோம்.
இன்ஷா அல்லாஹ் என்பது இறைவன் நாடினால் என பொருள் படும் எனவே அப்படி சொல்ல மாட்டார்கள். அல்ஹம்துலில்லாஹ் (எல்லாப் புகழும் இறைவனுக்கே) என நிறைவு கொள்வார்கள்.

சினிமாவில் கூட அடிக்கடி வரும் இந்த முருகர் சிலை கம்பீரமாக, அழகாக இருக்கிறது. வந்தால் பார்க்க வேண்டும்.

புதுகை.அப்துல்லா சொன்னது…

நிகழ்வுக்கு வாழ்த்து. இடுகைக்குப் பாராட்டு. படத்திற்கு வழக்கம்போல எதிர்ப்பு :)

cheena (சீனா) சொன்னது…

அன்பின் கோவி

கதிரின் முடி இறக்கும் நிகழ்வு நன்கு விவரிக்கப்பட்டிருகிறது. அதுவும் கதிர் வேலன் சன்னிதியில். படங்கள் அத்தனையும் அருமை. கதிருக்கு நல்வாழ்த்துகள். ஆசிகள். நட்புடன் சீனா

முரளிகண்ணன் சொன்னது…

வாழ்த்துக்கள்

Romeoboy சொன்னது…

அப்பனும் மகனும் அம்சமா இருக்கீங்க தலைவரே .. பையன் இன்னும் அழகா இருக்கான்.. வாழ்த்துக்கள்

naren சொன்னது…

இந்த பதிவை படித்தால் பலர் வாழ்க்கையில் நடந்த நிகழ்ச்சியாகவே இருக்கும். இது ஒரு பொதுவான அனுபவம்.

ஆமாம், பில்லா படத்தில் அஜித் பாட்டு பாடி ஆடியதைப்போல் அங்கே யாராவது செய்தார்களா?

R.Gopi சொன்னது…

தலைவா...

“குட்டி மொட்டை” படு சூப்பர்... விவரித்த விதமும் அழகோ அழகு...

குமரன் (Kumaran) சொன்னது…

வாழ்த்துகள் கண்ணன்! பையர் உங்களைப் போலவே இருக்கார். :-) படங்களோட பகிர்ந்துகிட்டதுக்கு நன்றி. நானும் பத்துமலை முருகனைப் பார்த்துக்கிட்டேன் உங்க தயவால!

கோவி.கண்ணன் சொன்னது…

//சுவனப்பிரியன் said...
மலேசிய பயணம் சந்தோஷமாக அமைந்ததற்கு வாழ்த்துக்கள்!//

வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி.

//இந்தியாவில் இஸ்லாம் வளர்ந்தால் இந்து மத கோட்பாடுகளுக்கு பங்கம் வந்து விடும் என்ற போலியான பிரசாரம் செய்பவர்கள் இந்த பதிவையும் கொஞ்சம் பார்க்க வேண்டும்.
//

:)

ஆனாலும் குறிப்பிட்ட பத்தியை நான் எழுதும் முன்பு எனக்கு பாமியன் மலைக் குன்றில் ஓங்கி நின்று கொண்டிருந்து பின்னர் பீரங்கியால் தலை சிதறடிக்கப்பட்ட புத்தர் சிலைகள் தான் நினைவுக்கு வந்தன.

கோவி.கண்ணன் சொன்னது…

//செங்கதிர், அப்பாவுடைய டிட்டோ. இரண்டு பேர் முகமும் அருகில் இருக்கும் போது நார்மல் வித் மினியேச்சர். செங்கதிருக்கும் ஜிகே குடும்பத்தாருக்கும் வாழ்த்துகள். பொறுப்பான அங்கிள் விஜயபாஸ்கருக்கும் வாழ்த்துகள்.
//

நன்றி ஐயா,

என் மகனைவிட என் மகளின் முகம் என் முகத்துக்கு மிக நெருக்கமாக இருக்கும். இணைய சைக்கோக்களால் தான் இதுவரை அவள் புகைப்படத்தை நான் பதிவில் போட நினைத்தது இல்லை.

கோவி.கண்ணன் சொன்னது…

//புதுகை.அப்துல்லா said...
நிகழ்வுக்கு வாழ்த்து. இடுகைக்குப் பாராட்டு. படத்திற்கு வழக்கம்போல எதிர்ப்பு :)//

அப்து அண்ணே, நன்றி

கோவி.கண்ணன் சொன்னது…

//cheena (சீனா) said...
அன்பின் கோவி

கதிரின் முடி இறக்கும் நிகழ்வு நன்கு விவரிக்கப்பட்டிருகிறது. அதுவும் கதிர் வேலன் சன்னிதியில். படங்கள் அத்தனையும் அருமை. கதிருக்கு நல்வாழ்த்துகள். ஆசிகள். நட்புடன் சீனா//

சீனா ஐயா,

சிலதெல்லாம் தானாக அமையும் என்பார்களே அப்படித்தான், அவனுக்கு பெயர் அமைந்ததும் எதிர்பாராத ஒன்று, மொட்டை அமைந்ததும் எதிர்பாராத ஒன்று, அதாவது அதன் குறித்து ரொம்பவும் திட்டமிடவில்லை.

கோவி.கண்ணன் சொன்னது…

//முரளிகண்ணன் said...
வாழ்த்துக்கள்//

நன்றி முரளி

கோவி.கண்ணன் சொன்னது…

// அருண்மொழித்தேவன் said...
அப்பனும் மகனும் அம்சமா இருக்கீங்க தலைவரே .. பையன் இன்னும் அழகா இருக்கான்.. வாழ்த்துக்கள்//

மிக்க மகிழ்ச்சி, பாராட்டுக்கு நன்றி அருண்மொழித்தேவன்

கோவி.கண்ணன் சொன்னது…

//R.Gopi said...
தலைவா...

“குட்டி மொட்டை” படு சூப்பர்... விவரித்த விதமும் அழகோ அழகு...//

மிக்க நன்றி கோபி

கோவி.கண்ணன் சொன்னது…

//குமரன் (Kumaran) said...
வாழ்த்துகள் கண்ணன்! பையர் உங்களைப் போலவே இருக்கார். :-) படங்களோட பகிர்ந்துகிட்டதுக்கு நன்றி. நானும் பத்துமலை முருகனைப் பார்த்துக்கிட்டேன் உங்க தயவால!//

அது என்ன பையர் ? ன் விகுதி குறிப்பிடலாமே. மகள் என்று இருந்தால் எப்படிச் சொல்லுவீர்கள் ?
:)

இந்தப்பதிவுக்கு உங்கள் பின்னூட்டம் எதிர்பார்த்தேன், அதற்காகவே ஒரு சிறப்பு நன்றி. நண்பர்களுக்கான பகிர்தல் என்கிற பின்குறிப்பு கூட அதற்குத்தான். எல்லோரிடமும் மின் அஞ்சல், அலைபேசி என்று அழைத்து தெரிவிப்பதற்கு பதில் வலைப்பதிவில் எழுதுவது எளிதாக இருக்கிறது.

குமரன் (Kumaran) சொன்னது…

கண்ணன். பரவாயில்லை. என் உள்ளுணர்வு இந்த இடத்தில் வென்றுவிட்டது. (நிறைய இடத்தில் நினைத்ததற்கு நேர்மாறாக நடக்கும்; அப்போதெல்லாம் வெளியில் சொல்வதில்லை; சொல்லக்கூடாது பாருங்கள். :-) )

'உங்களுக்காகவும் பகிர்ந்து கொண்டேன்; பின்னூட்டத்திற்கு நன்றி' என்று நீங்கள் சொல்லப் போகிறீர்கள் என்று நினைத்தேன். சொல்லிவிட்டீர்கள்.

பையர் என்று சொன்னது துளசியக்கா தாக்கத்தால். :-) மகளை மகர் என்று சொல்லிவிடலாமா? ஓ அது மகனை மகர் என்று சொல்வதாகக் குழப்பிவிடுமோ? டீச்சரைத் தான் கேட்க வேண்டும். :-)

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்