முதலில் 'பதின்ம' என்றால் என்னவென்று சொல்லிவிடுகிறேன், ஆங்கிலத்து 13 முதல் 19 வரை இருக்கும் எண்களில் அகவை உடையோரை 'டீன் ஏஜ்' என்று சொல்வதுண்டு, அதுவே தான் தமிழில் பயன்படுத்தும் போது பதின்ம அகவை அல்லது வயது என்றாகிறது. 'பதி' மூன்று முதல் 'பதி'னொன்பது(பத்தொன்பது) வரையிலான அகவை 'பதி'ன்ம அகவை என்கின்றனர்.
அந்த அகவையில் எட்டாம் வகுப்பிலிருந்து இளநிலை பட்டப்படிப்பு முதல் / இரண்டாம் ஆண்டுவரை படித்திருப்போம் (6 ஆம் வகுப்பை ஆறுமுறை படிக்கிறவர்களை கணக்கில் சேர்க்கவில்லை). எட்டாம் வகுப்பில் படிக்கும் போது தான் சில பசங்க சைட் அடிப்பதையும், 'அவ என் ஆளு' என்று சொல்வதையும் அரசல் புரசலாக கேள்வி பட்டேன். நான் எட்டாம் வகுப்பு படிக்கும் போது ஒன்பதாம் வகுப்பு மாணவர்களில் சிலர் மாணவிகளை காதலிக்கத் தொடங்கி இருந்தனர். அடுத்தது ஒன்பதாம் வகுப்பு, ஒரு மாணவன் பள்ளி விடுமுறையின் போது மரணம் அடைந்துவிட்டான், ஒரு சிலர் மாற்றலாகி சென்றுவிட்டார்கள். ஒன்பதாம் வகுப்பு படிக்கும் போது உடன்படிக்கும் மாணாவர்களில் சிலர் முழு கால்சட்டை எனப்படும் பேண்ட்டும், சிலர் வேட்டி அணிந்து வந்தார்கள் (நம்புங்கள் அப்போதெல்லாம் (எப்போதுன்னு கேட்கபடாது) வேட்டி அணிந்து வருவதால் இழுக்கு இல்லை, ஆசிரியர்களும் ஒப்புதல் அளிக்காவிட்டாலும் எதிர்ப்பு காட்டவில்லை) மாணவர்கள் மட்டுமே இருக்கும் வகுப்பு ஆகையால் பெண்களுடன் படிக்கும் அரிய வாய்ப்பு கிடைக்காமல் போய்விட்டது. பெண்களுக்கான தனி வகுப்புகளில் மாணவிகள் பலர் தாவணி அணிந்திருந்தார்கள். 'டேய் என்னடா......' ன்னு பேசும் மாணவிகள் தாவணிக்கு மாறியதும், எதிர்படும் போது தலையைக் குணிந்து கொண்டு சென்றார்கள் (வெட்கப்பட்டு சிரித்தார்கள் என்று பொய்யெல்லாம் சொல்ல மாட்டேன்), மனித உறவுகள், குழந்தை பேறு இவை பற்றிய அறிவு வளர்ச்சி அடைந்திருந்தது. பத்தாம் வகுப்பு படிக்கும் போது அறிவியல் வகுப்பு ஆசிரியர் தான் ஆண் பெண் இனப்பெருக்க உருப்புகள் குறித்தும், இனப்பெருக்கம் எப்படி நடைபெறுகிறது என்பது பற்றியெல்லாம் சிறிய பாடம் நடத்தினர். அதுவரையில் ஆண் பெண் திருமணம் செய்து கொண்டால் பிள்ளை பிறக்கும், வயிற்றை பிளந்து குழந்தை பிறந்ததும் வயிறு தானாகே மூடிக் கொள்ளும் என்கிற கற்பனையெல்லாம் முடிவுக்கு வந்தது. சுமாராக படிக்கும் மாணவன் தான். ஆங்கிலம் என்றால் அலர்ஜி அதற்கு காரணம் தமிழ் வழி மாணவர்களுக்கு புரியக் கூடிய வகையில் எந்த ஒரு ஆங்கில ஆசிரியரும் பாடம் எடுப்பதில்லை. ஆங்கிலத்தில் தேறுவது தான் பெரும் க(வ)லையாகவே இருந்தது, எப்படியோ எல்லை மதிப் பெண் எடுத்து தேறி, பட்டாம் பூச்சி பருவமான +1, +2 வில் சேர்ந்தேன்.
வீட்டில் கூடப் பிறந்த அண்ணன் தம்பிகள் மூவர் (என்னுடன் சேர்த்து 4 பேர், மேலும் அக்கா, தங்கை) இருந்தாலும் அடித்துக் கொண்டது, புத்தகங்களைக் கிழிப்பது, மிதிவண்டியை உடைப்பது போன்ற ஓற்றுமையைத்தான் செயலில் காட்டி வந்தேன். திரைப்படங்களில் காட்டுவது போல் அண்ணன் தம்பி பாசம் இருக்க வேண்டுமென்றால் அவர்களுக்கு இடையே நிறைய ஆண்டு வேறுபாடு இருக்கவேண்டும் இல்லை என்றால் இருவர் அல்லது மூவராக குறைந்த எண்ணிக்கையில் உடன்பிறந்த உறவு முறைகள் இருக்க வேண்டும். ஆனால் இருபது அகவைக்கு மேல் உடன் பிறப்புகளின் மீதான ஈர்ப்பு இயல்பாக வந்துவிடும்.
+1, +2 படிக்கும் போது நானும் பேண்ட் - க்கு மாறிவிட்டேன், ஜட்டி போட்டு போடனுமாம், அதுக்கு முன்பு வரை அரை ட்ராயர் போடும் போது அந்த வழக்கம் இல்லை. (பெரு)நகர் புறங்களிலும், படித்த பெற்றோர்களின் பிள்ளைகளிடமும் அந்த வழக்கம் இருந்தது, தற்போது வசதி குறைந்த மாணவர்கள் கூட ஜட்டி அணியாமல் அரை ட்ராயர் அணிவது கிடையாது. என் தம்பி மகன்கள் வெறும் அரைடிராயருடன் செல்வது இல்லை. அப்போதெல்லாம் அரை ட்ராயர் பின்னால் கிழிந்து தபால் பெட்டி என்று கிண்டல் செய்வோரும் உண்டு, எப்படிடா உங்களுக்கெல்லாம் பின்னால் கிழியுது என்று கேள்வி கேட்பார்கள், அதில் ஒன்றும் புதிர் இல்லை, சறுக்கு மரம் எனப்படும் சாய்வு ஏறி (ஸ்லைடிங் ரெய்ட்) சிமெண்டால் தான் செய்யப்பட்டு இருக்கும், தற்போது ப்ளாஸ்டிக்கில் செய்கிறார்கள், சிமெண்ட் சாய்வில் சருக்கும் போது அரை ட்ராயரின் பின்பக்கம் தேய்ந்து ஓட்டை ஆக்கிவிடும், வீட்டில் உள்ளவர்கள் போடக் கூடாது என்று சொல்லும் வரை தபால் பெட்டி அரை ட்ராயருடன் வெளியே சென்றதில் அப்போதைய மாணவர்கள் யாரும் வெட்கப்பட்டது போல் தெரியவில்லை.
+1, +2 படிக்கும் போது தான் சாதிய முகங்கள் அறிமுகம் ஆகின, மாணவர்களுக்குள்ளேயும், இவன் பறையன், பள்ளன், செட்டி(யார்), முதலி(யார்), பூணூல்காரன் என்றெல்லாம் சாதிய அடையாள பட்டப் பெயர் வைத்து அழைத்துக் கொள்வார்கள். என்னுடன் படித்த பார்பன மாணவர்கள் யாரும் சொல்லிக் கொள்ளும் வகையில் வகுப்பில் முதலாக வந்ததே இல்லை. ஆங்கில அகர வரிசை படி வகுப்புகளின் மாணவர் வருகைப் பதிவேடு வாசிப்பதன் மூலம் ஒரிரு வாரங்களில் அனைவரின் பெயர்களும் தெரிந்துவிடும், எப்படியோ கூடவே அதே மேசையில் அமர்ந்திருக்கும் மாணவர்கள் அவர்களுக்குள் நட்பை மேலும் வளர்த்துக் கொள்வார்கள், அவர்களுக்கு பிடித்தவர்கள் என வகுப்பினுள் குழுக்கள் உருவாகி இருக்கும், இப்படியாக உருவாகும் குழுக்கள் உடற்பயிற்சி வகுப்பின் போது அவிழ்த்து விடுவதை வாய்ப்பாக்கிக் கொண்டு காமக் கதைகளையும், பாலியல் பற்றிய அறிவுகளை வளர்த்துக் கொள்வார்கள், கற்பத்தடைகள் வகைகள் பற்றியெல்லாம் அப்போது தான் உடன்படிக்கும் மாணவர்கள் சொல்லக் கேட்டுக் கொண்டேன். என்னுடன் படித்த மாணவர்களில் மிகச் சிலரே நல்ல நிலையில் இருக்கிறார்கள். மற்றவர்களின் முகவரிகள் தெரியவில்லை.
பிறகு கல்லூரிக்குச் செல்வார்கள், எனக்கு கல்லூரி செல்லும் வாய்ப்பு அப்போது கிடைக்கவில்லை (பிறகு கிடைத்தது, பின்னர் பகுதி நேரமாக இளநிலை முடித்தேன்), பெரிதாகவும் முயற்சிக்கவில்லை, பாலிடெக்னிக் எனப்படும் பட்டய படிப்பில் தான் சேர்ந்தேன். கூடவே 20 மாணவர்கள் வரை படித்தார்கள், 18 அகவை ஆகி இருந்தது, உடன் படிப்போர் அவர்களது வீட்டுக்குச் செல்லும் போது அவர்களின் தங்கைகள் பார்த்துவிட்டால் உள்ளே சென்று அறையினுள் முடங்கிவிடுவார்கள். ஒவ்வொரு முதிர்நிலை பதின்ம வயது மாணவனுக்கும் தன்னுடைய நண்பனின் தங்கையை சைட் அடிப்பது அல்லது அவள் தன்னை காதலிக்கிறாளோ என்கிற நினைப்பு இருக்கத்தான் செய்கிறது. பதின்ம வயதில் மட்டுமல்ல, நான்காம் வகுப்பு படிக்கும் போது என்வயதை ஒட்டிய என்னுடன் அப்போது நான்காம் வகுப்பு நண்பன் (அதே தெருவில் இருப்பவன்) ' அந்த (எட்டாம் வகுப்பு)அக்காவை லவ் பண்ணப் போகிறேன்' இன்னொரு மாணவனிடம் சொல்லி, அவன் அதை வெளியே சொல்ல இரண்டு பக்கமும் பெற்றோர்களிடம் நன்றாக முதுகு வீங்கும் அளவுக்கு வாங்கினான், நினைத்தால் இன்றும் சிரிப்பு வருகிறது.
மற்றபடி அந்த வயதில் பெற்றோர்களுடனோ, உடன் பிறந்தோர்களுடனோ நல்லதொரு புரிந்துணர்வு வளர்ந்தது என்று சொல்ல முடியவில்லை. அவையெல்லாம் பின்னால் வேலைக்குச் சென்ற பிறகே ஏற்பட்டது.
பதின்ம வயதுகள் மன முதிர்ச்சி வளரத்தொடங்கும் வயது, பாலியல் ஆர்வம், கல்வித் தேர்வு என பல அறை கூவல்களை உள்ளடக்கியது.
என்னை தொடருக்கு அழைத்த இயற்கை நேசி, நண்பர் தெகா அவர்களுக்கு நன்றி. இத் தொடரைத் தொடர நான் அழைக்க விரும்புவது...
பெரியவர் மதுரை கிருஷ்ண மூர்த்தி (Consent tobe Nothing)
பெரியவர் மதுரை சீனா ( அசைபோடுவது)
துளசி அம்மா (துளசி தளம்)
இளைஞர் அக்பர் (சினேகிதன்)
இளைஞர் ஸ்டார்ஜன் (எ) ஷேக் (நிலா அது வானத்து மேலே)
என்றும் இளைஞர் சஞ்செய் காந்தி (முன்னாள் பொடியன், இன்னாள் SanjaiGandhi)
(பழைய நினைவுகளில் விருப்பம் உள்ளவர்கள் எல்லோரும் வெட்கப்படாமல் எழுதுங்க)
பிகு : மேலே உள்ள படம் இணையத்தில் கிடைத்தது மற்றபடி எனக்கு படத்துக்கும் தொடர்ப்பு இல்லை.
பின்பற்றுபவர்கள்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
மதமும் மார்க்கமும் !
எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"
இறைவன் - மதம்
இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !
-கோவியார்
23 கருத்துகள்:
அண்ணே படிக்கும்போதே நினைச்சேன். என்னையையும் கூப்பிடுவீங்கன்னு. ரொம்ப சந்தோசமண்ணே !. உங்கள் வாழ்த்துக்களுடன் தொடர்கிறேன்.
//'பதி' மூன்று முதல் 'பதி'னொன்பது(பத்தொன்பது) வரையிலான அகவை 'பதி'ன்ம அகவை என்கின்றனர்.//
அப்போ
பதினொன்று?
//ஆங்கிலம் என்றால் அலர்ஜி அதற்கு காரணம் தமிழ் வழி மாணவர்களுக்கு புரியக் கூடிய வகையில் எந்த ஒரு ஆங்கில ஆசிரியரும் பாடம் எடுப்பதில்லை. ஆங்கிலத்தில் தேறுவது தான் பெரும் கவலையாகவே இருந்தது,//
உங்களுக்குமட்டுமல்ல தமிழ் மீடியத்தில் படித்த அனைவரின் நிலையும் அன்று இதுதான் அண்ணா. ஆனால் பின்னாளில் அனுபத்தின் மூலமாக ஆங்கிலம் தெரியும் போது, இவ்வளவு எளிதான விசயத்தை ஏன் அவ்வளவு கஷ்டப்பட்டு நடத்தினர் என்று தோன்றியது.
//மாணவர்களுக்குள்ளேயும், இவன் பறையன், பள்ளன், செட்டி(யார்), முதலி(யார்), பூணூல்காரன் என்றெல்லாம் சாதிய அடையாள பட்டப் பெயர் வைத்து அழைத்துக் கொள்வார்கள்.//
அப்ப எரிய ஆரம்பித்த தீயாண்ணே.
//பதின்ம வயதுகள் மன முதிர்ச்சி வளரத்தொடங்கும் வயது, பாலியல் ஆர்வம், கல்வித் தேர்வு என பல அறை கூவல்களை உள்ளடக்கியது.//
கடவாய்ப்பல் முளைக்கும் போது ஏற்படும் வலியைப்போன்று. இந்த பருவத்தில் ஏற்படும் மன வலிகள் ஏராளம்.
பதிவு அருமை.
என்னை தொடர்பதிவுக்கு அழைத்ததற்கு நன்றி அண்ணா விரைவில் எழுதுகிறேன்.
//அக்பர் said...
//'பதி' மூன்று முதல் 'பதி'னொன்பது(பத்தொன்பது) வரையிலான அகவை 'பதி'ன்ம அகவை என்கின்றனர்.//
அப்போ
பதினொன்று?//
பதினொன்று அடுத்து பணிரெண்டு எனவே பதின்ம தொடர்ச்சி பதிமூன்றில் இருந்து தான் :)
அழைப்பை ஏற்றதற்கு மிக்க நன்றி !
// Starjan ( ஸ்டார்ஜன் ) said...
அண்ணே படிக்கும்போதே நினைச்சேன். என்னையையும் கூப்பிடுவீங்கன்னு. ரொம்ப சந்தோசமண்ணே !. உங்கள் வாழ்த்துக்களுடன் தொடர்கிறேன்.//
:) மிக்க நன்றி தம்பி ஷேக் !
மிகவும் கலக்கலாக எழுதி இருக்கீங்க.
// V.Radhakrishnan said...
மிகவும் கலக்கலாக எழுதி இருக்கீங்க.//
மிக்க நன்றி இராதாகிருஷ்ணன்.
நானும் விக்கிபீடியாக்களில் தேடி கொண்டிருந்தேன்
பதின்மத்தை
இங்கு விளக்கம் கிடைத்துவிட்டது. இன்று மதியம் முதல் தெலுங்கில் இது என்ன வார்த்தைன்னு யோசிச்சிகிட்டு இருக்கேன்.
தபால் பெட்டி இரசித்தேன்.
குழுக்களாய் உருவாவது முன்பிருந்தே துவங்கி இப்போ பஸ்ஸூ வரைக்கும் வந்திருக்கு
// நட்புடன் ஜமால் said...
நானும் விக்கிபீடியாக்களில் தேடி கொண்டிருந்தேன்
பதின்மத்தை
இங்கு விளக்கம் கிடைத்துவிட்டது. //
:) விளக்கமாக எழுதினால் பலர் அறிந்து கொள்வார்கள் என்பதால் விளக்கம் எழுதினேன். குறிப்பிட்டதற்கு நன்றி.
/இன்று மதியம் முதல் தெலுங்கில் இது என்ன வார்த்தைன்னு யோசிச்சிகிட்டு இருக்கேன்.//
பதமூறு, பதநாலகு, பதனஞ்சி, பதனாறு, பதனெனிமிதி, பததொம்பது.....அப்படி என்றால் தெலுகில் பத(மான)வயசுலு :)
தபால் பெட்டி இரசித்தேன்.
:)
கோவி, மிக இயல்பாக பதின்மத்தில் நடைபெறும் விசயங்களையும், எழும் அத்துனை ஐயப்பாடுகளையும் அந்த காலக் கட்டத்தில் நமக்கு தோன்றிய முறையில் குறிப்பிட்டது நல்லாருந்துச்சு.
கிட்டத்தட்ட பதின்மங்களில் இதுபோன்று இனப்பெருக்கம் சார்ந்த விசயங்களை புரிந்து கொள்ள ஆர்வம் பீறிட்டு வெளிக்கிளம்புவதும், சரியான புரிதலை ஏற்படுத்திக் கொடுக்காத கல்வி முறையும் நம்மை முடக்கி விடுகிறது ... நம்மை கற்பனை நிலையிலேயே மிதக்க விட்டுவிடுகிறது.
என்னுடைய பதிவில் பதின்மங்களாக நான் இணத்துக் கொண்டது 17க்குள்ளாகவே, கல்லூரியில் கால் எடுத்து வைத்ததோடு நிப்பாட்டிக் கொண்டேன்.
அழைப்பில் கலந்துகொண்டமைக்கு நன்றி, கோவி.
//+1, +2 படிக்கும் போது நானும் பேண்ட் - க்கு மாறிவிட்டேன், ஜட்டி போட்டு போடனுமாம், அதுக்கு முன்பு வரை அரை ட்ராயர் போடும் போது அந்த வழக்கம் இல்லை//
அவ்வ்வ்வ்..
நான் மட்டுந்தான்னு நினைச்சேன்:))))
நன்றி..
வாழ்த்துகள்
அன்பின் கோவி,
இயல்பான நடையில் உண்மையைச் சோன்னது சாலச் சிறந்தது. மிகவும் ரசித்தேன். பாதி படிக்கும் போதே என்னையும் அழைப்பீர்களோ - அதுவும் கிண்டலாக - என நினைத்தேன். ஆனால் மிக மரியாதையாக அழைத்திருக்கிறிர்கள். நன்றி - எழுத வேண்டுமா ? எழுதிடுவோம்ல.
ஸ்ட்ராஜன்னும் என்னைப் போலவே ( அல்லது நான் அவரைப்போலவே ) நினைத்திருக்கிறார்.
நினைப்பிற்குக் காரணம் :
http://cheenakay.blogspot.com/2007/11/5.html எனற் எனது இடுகையில் தங்களின் 18.11.2007 - இரவு 18:16 பின்னூட்டம் : பெண் பிள்ளைகள் பக்கத்தில் உட்கார்ந்து படித்தது இல்லையா ?
ம்ம்ம்ம்ம் பதின்ம வயது : 13 - 19 - 7 ஆண்டுகள் - 8ம் வகுப்பு முதல் - இள்நிலை பட்டப் படிப்பு இறுதி ஆண்டு வரை - 8 அண்டுகள் - எப்படி டபுள் பிரமோஷனா ?
மிக மிக ரசித்தேன் கோவி
நல்வாழ்த்துகள் கோவி
//நினைப்பிற்குக் காரணம் :
http://cheenakay.blogspot.com/2007/11/5.html எனற் எனது இடுகையில் தங்களின் 18.11.2007 - இரவு 18:16 பின்னூட்டம் : பெண் பிள்ளைகள் பக்கத்தில் உட்கார்ந்து படித்தது இல்லையா ?
ம்ம்ம்ம்ம் பதின்ம வயது : 13 - 19 - 7 ஆண்டுகள் - 8ம் வகுப்பு முதல் - இள்நிலை பட்டப் படிப்பு இறுதி ஆண்டு வரை - 8 அண்டுகள் - எப்படி டபுள் பிரமோஷனா ?
மிக மிக ரசித்தேன் கோவி
நல்வாழ்த்துகள் கோவி
10:27 PM, February 24, 2010
//
சீனா ஐயா, எழுதுவதற்கு அலுப்பாக இருந்தால் எழுதியதை மீள் பதிவு செய்யலாம் சிறப்பு அனுமதி உண்டு !
:)
டபுள் ப்ரோமசன் இல்லை, 17 வயது வரை +2 முடிக்க சரியாக இருக்கும், அதன் பிறகு பாலிடெக்னிக் படித்தேன், பிறகு 25 வயதில் கிண்டி என்ஜினியரிங்க் கல்லூரியில் பகுதி நேரமாக இளநிலை படித்தேன். அது பதின்மத்தில் வராது :)
நல்லா எழுதி இருக்கியள் கோவியாரே!
இன்னும் கண்ணதாசனின் வனவாசம் போன்ற நிகழ்வுகளையும், நீங்க எதும் சைட்டு,கிய்ட்டு..., நீங்க அடிக்க மாட்டிய... அப்படி எதும் இருந்தா தொடரா போடுவியன்னு எதிர் பார்க்கிறேன்!
:)
நீங்க அழைத்த பதிவர்கள் அனைவரும் தகை சான்ற பெரியவர்கள்! சஞ்சய் யய்யும்தான் சொல்றேன்! அவர் பொடியன் இல்ல...!
:)
பகிர்வு பளிச்சுன்னு இருக்கு
பெரிசுங்களுக்குத்தான் யூத் ஆகறதுக்கு இதெல்லாம் சான்ஸ்.. நான் இன்னும் பதின்ம வயசுல தானே இருக்கேன்.. :))
ஆனாலும் கோவியாரின் அன்புக்காக எழுதிவிடுகிறேன்.. நாமல்லாம் அன்புக்கு கட்டுப்பவங்களாச்சே :)
கோவிஜி, நம்ம அத்திவெட்டியாரை கோர்த்து விடுங்க.. இப்போல்லாம் எதுமே எழுத மாட்டேங்கறார்..
//என்னுடைய பதிவில் பதின்மங்களாக நான் இணத்துக் கொண்டது 17க்குள்ளாகவே, கல்லூரியில் கால் எடுத்து வைத்ததோடு நிப்பாட்டிக் கொண்டேன்.
அழைப்பில் கலந்துகொண்டமைக்கு நன்றி, கோவி.//
உங்களுக்கும் நன்றி தெகா.
//அத்திவெட்டி ஜோதிபாரதி said...
நல்லா எழுதி இருக்கியள் கோவியாரே!
இன்னும் கண்ணதாசனின் வனவாசம் போன்ற நிகழ்வுகளையும், நீங்க எதும் சைட்டு,கிய்ட்டு..., நீங்க அடிக்க மாட்டிய... அப்படி எதும் இருந்தா தொடரா போடுவியன்னு எதிர் பார்க்கிறேன்!
:)//
ஜோதிபாரதி ஐயா,
சைட்டு கிய்ட்டு அடித்ததில்லைன்னு நானும் சொல்லவில்லையே.
:)
// நீங்க அழைத்த பதிவர்கள் அனைவரும் தகை சான்ற பெரியவர்கள்! சஞ்சய் யய்யும்தான் சொல்றேன்! அவர் பொடியன் இல்ல...!
:)//
அவரு யூத்தை மெயின்டென் பண்ணுவதாகத்தானே லொள்ளி வருகிறார்.
// SanjaiGandhi™ said...
பெரிசுங்களுக்குத்தான் யூத் ஆகறதுக்கு இதெல்லாம் சான்ஸ்.. நான் இன்னும் பதின்ம வயசுல தானே இருக்கேன்.. :))//
அதுக்காக 113 - 119 வயதெல்லாம் பதின்மத்தில் வராது !
:)
// ஆனாலும் கோவியாரின் அன்புக்காக எழுதிவிடுகிறேன்.. நாமல்லாம் அன்புக்கு கட்டுப்பவங்களாச்சே :)//
மிக்க நன்றி பாஸ்
//SanjaiGandhi™ said...
கோவிஜி, நம்ம அத்திவெட்டியாரை கோர்த்து விடுங்க.. இப்போல்லாம் எதுமே எழுத மாட்டேங்கறார்..
11:50 PM, February 24, 2010//
அவர் வீட்டுல கணிணியில் தட்டச்சும் சத்தம் கேட்டால் கரண்டி பறக்கும் என்று எச்சரிக்கை விட்டு இருக்கிறார்களாம். பாவம் பொழச்சு போகட்டுமேன்னு.........அவரை இழுக்கவில்லை
//நான்காம் வகுப்பு படிக்கும் போது என்வயதை ஒட்டிய என்னுடன் அப்போது நான்காம் வகுப்பு நண்பன் (அதே தெருவில் இருப்பவன்) ' அந்த (எட்டாம் வகுப்பு)அக்காவை லவ் பண்ணப் போகிறேன்' இன்னொரு மாணவனிடம் சொல்லி, அவன் அதை வெளியே சொல்ல இரண்டு பக்கமும் பெற்றோர்களிடம் நன்றாக முதுகு வீங்கும் அளவுக்கு வாங்கினான், //
அட்டகாசம் அட்டகாசம் அவருடன் தொடர்பிலே இருங்கத்தால் இன்றும் சிரிப்பு வருகிறது.
டீன் ஏஜ் பருவத்தைப்பற்றிய நினைவுகளில் பாலியல் நினைவுகளுக்கே அதிக முக்கியத்துவத்தைக் கொடுத்து எல்லாரும் எழுதிவருவது போலத் தெரிகிறது.
அப்படியெல்லாம் இல்லை. நினைவுகள் இருப்பினும், அவற்றைக்காட்டிலும் மற்ற பல விடய்ங்கள் அவ்வயதினரை ஆக்கிரமிக்கின்றன.
குடும்ப நிகழ்வுகள், பள்ளிகளில் ஏற்படும் கசப்பு நிகழ்வுகள், பொதுவாழ்வு நிகழ்வுகள் - என பல நீரோட்டங்களில் இழுத்துச்செல்லப்பட்டு கடைசியாக கரைசேர்கிறோம். பதிவர்கள் ஏன் அவற்றை அசைபோடவில்லை என்பது எனக்கு வியப்பே.
அவைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்த மாதிரி தெரியவில்லை - சாதியைத் தவிர.
//தமிழ் வழி மாணவர்களுக்கு புரியக் கூடிய வகையில் எந்த ஒரு ஆங்கில ஆசிரியரும் பாடம் எடுப்பதில்லை. //
எங்களுக்குக் கிடச்ச ரெண்டு ஆசிரியர்கள் மாதிரி உங்களுக்கெல்லாம் கிடைக்கலையா ...? பாவம் :(
கருத்துரையிடுக