பின்பற்றுபவர்கள்

25 பிப்ரவரி, 2010

ஹலோவுக்கு உரிய இறைவன் மிகப் பெரியவன் !

இறை என்ற தமிழ் சொல்லுக்கு பொருந்தும் வகையில் வேற்று மொழிகளில் இறையின் பொருள் அவ்வளவு சிறப்பாகக் கூறப்பட்டு இருக்கிறதா என்று தெரியவில்லை. தேடல் என்கிற சொல்லின் தன்மையுடன் 'இறை' (அழை), தொழு, வேண்டு, நினைவில் கொள் என்ற பொருளாக இறைவன் > நினைக்கப்பட்டவன், நினைக்கபடுகிறவன், நினைக்கப்படுபவன் அல்லது அழைக்கப்பட்டவன், அழைக்கப்படுகிறவன், அழைக்கபடுபவன் என்னும் வினைத் தொகையாக (முக்கால வினைச் சொல் பகுதி) தனிச் சிறப்பு வாய்ந்த சொல்லாக பயன்படுத்தபடுகிறது. மற்ற மொழியின் சொற்களில் இத்தகைய தனிச் சிறப்பு இருக்கிறதா என்று தெரியவில்லை.

மொழி காட்டும் பொருளை விட எந்த ஒரு மதம் சார்ந்த சொல்லும் அந்த ஒரு தனிப் பொருளை தருகிறதா என்று தெரியவில்லை. இருந்தாலும் இறைவன் என்ற சொல்லை தத்தம் மதத்தின் (காட்)கடவுளைக் குறிப்பதாக தமிழர்கள் நம்புகிறார்கள். இன்றைக்கு பெரிய மதங்கள் என்றால் நான்கே நான்கு தான் மற்றவை சிறியவை அவை சீக்கிய,பார்ச்சி என்பது போல் இனக்குழுவுக்குள் அடங்கிவிடும். இந்த நான்கு பெரிய மதங்களின் சின்னங்களான வழிபாட்டு தளங்கள் உலகெங்கிலும் சம அளவில் உள்ளன. இதில் யார் பணக்கார கடவுள் என்பதை யாரும் எளிதாகச் சொல்லிவிட முடியாது, திருப்பதி கோவிலுக்கு வரும் உண்டியல் வருமானம் உலகில் எந்த ஒரு வழிபாட்டு தளத்திற்கும் கிடைக்காத ஒரு பெருமை. அதே போல் சிவன் கோவில்களுக்கு இருக்கும் சொத்துக்களின் மதிப்புகள் அளவிட முடியாதவை. உலகங்கிலும் இருக்கும் சர்சுகள், மசூதிகள், புத்தவிகார்கள், இந்துக் கோவில்கள் எண்ணிக்கையில் சம அளவானவை, தாய்லாந்து போன்ற புத்த நாடுகளில் பிள்ளையார் கோவில் போல் புத்தவிகார்களை வீதிக்கு வீதி காணலாம், ஆசிய நாடுகளில் இருக்கும் புத்தர் கோவில்களின் எண்ணிக்கை ஒட்டு மொத்த இந்தியாவிலும் உள்ள இந்து கோவில்கள் எண்ணிக்கைக்கு சமமானவை, இதே போன்ற எண்ணிக்கையில் தான் உலகெங்கிலும் சர்ச்சுகளும் மசூதிகளும் இருக்கின்றன.

செல்வ வளம் என்ற அடிப்படையும் எந்த மதத்தின் கடவுள் பணக்காரர் என்று சொல்வது கடினம் தான். செல்ல வசதி படைத்த பெருமாளும், நில உடமைதாரர் சிவனும், ஆயிரம் கைகளை உடைய புத்தரும், தனக்காக போர் புரியும் வீரர்களைக் கொண்ட அல்லாவும், பணக்கார மேற்கத்திய நாடுகளின் ஆதரவு பெற்ற ஏசுவும் ஒவ்வொரு விதத்தில் மக்கள் செல்வாக்கு பெற்றவர்களாகத்தான் இருக்கிறார்கள். இதில் யார் மிகப் பெரியவன் ?

உலக மக்கள் தொகையில் சுமார் 17 விழுக்காடு கத்தோலிக்கர்கள் இருக்கிறார்களாம், அதே போன்று தான் இஸ்லாமியர், இந்து, பவுத்த மதத்தினரும் இருப்பார்கள், மீதம் உள்ள விழுக்காடு உதிரி மதங்களைச் சார்ந்தவையாக இருக்கும். வருங்காலத்தில் இந்த மத இறைவன் தனிச் சிறப்பு வாய்ந்தவன் என்று சொல்லி மதம் மாற்றுவது கடினமாகத்தான் இருக்கும், காரணம் மக்கள் ஆதாரத்தின் படியே முடிவு எடுப்பவர்களாக உள்ளனர். மதக் கொள்கைகளைக் காட்டலாம், ஆனாலும் அதிலும் சிக்கல் உதாரண புருஷன் என்று சொல்லிக் கொள்ளக் கூடிய மதப் பற்றாளர்கள் எவருமே இல்லை. அதனால் தான் மதவாதிகள் அறிவியல் அறிஞர்கள் பின்னே ஓடுகிறார்கள், ஒரு அறிவியலாளர் மதம் சார்ந்த நல்ல கருத்துச் சொல்லிவிட்டால் அவரது அறிவியல் அறிவு முழுவதும் மதத்தை தாங்கிப் பிடிக்கும் கேடயம் என்பது போல் பேசுகிறார்கள். இன்றை சூழலில் அறிவியல் துணை கொண்டு கடவுள் நம்பிக்கையை மெய்பிக்க வேண்டும் என்பதைவிட மதக் கொள்கைகளை மெய்பிக்க முடியுமா என்கிற முயற்சியும் மெய்பிக்கிறது என்பதாக கட்டுரைகளும் எழுதப்படுகிறது. இதில் குழப்பம் அடைபவர்கள் மதவாதிகள் அல்ல, இறை நம்பிக்கை உடைய ஒருவன் தான் குழப்பம் அடைக்கிறான், ஒருவேளை இவர்கள் சொல்வது தான் சரியோ என்பது போன்ற குழப்பம் அடைகிறான்.

நேற்று படித்த ஒரு பதிவு செய்தி உண்மையிலே வியப்படைய வைத்தது. 'வணக்கம் தமிழகம்', 'காலை வணக்கம்' போன்ற வணக்க சொற்களை இறைவனுக்கு இணை கற்பிக்க தடை விதிகப்பட்ட இஸ்லாமிய வானொலி, தொலைகாட்ச்சி அறிவிப்பாளர் பயன்படுத்தலாமா ? அப்படி அவர்களை சொல்லச் சொல்லி கட்டாயப்படுத்துவது மத நல்லிணக்கத்தை குலைப்பதாகும், இஸ்லாமியர்களை இழிவு படுத்துவது ஆகும் என்றெல்லாம் படித்தேன். எப்படியெல்லாம் யோசிக்கிறாங்க என்பதைத் தவிர்த்து வேறெதும் தோன்றவில்லை.

'வணக்கம்' என்ற ஒரு சொல்லை பொதுவாக இந்துக்கள் 'கும்பிடுதல்' என்ற சொல்லின் மாற்றாக பயன்படுத்துவதில்லை. வணக்கம் என்பது ஒரு மதிப்பு குறித்து தனக்கு முன்னால் இருப்பவர்களுக்கு 'அறிமுகச்' சொல் தான். அதற்கு மேல் பொருள் இருப்பதாகத் தெரியவில்லை. வணங்குதல் என்றால் பக்தி குறித்த சொல்லாகவும் அது பயன்படுத்தப் படுகிறது. ஆனால் அந்த சொல் வெறும் பக்தி சார்ந்தது மட்டுமே இல்லை. உள்ளேன் ஐயாவுக்கு பதில் 'வணக்கம் ஐயா' என்று சொல்லும் மாணவர்களும், பள்ளிகளும் உண்டு, இவை வெறும் பழக்கம் சார்ந்தவை தான். ஆங்கிலத்தில் இருக்கும் 'Sir' க்கு மாற்றாக 'ஐயா' வைப் பயன்படுத்துகிறோம், அதே போன்று தான் 'வணக்கம்' 'Hello' என்பது போல் பேச்சு வழக்கில் பயன்படுத்தப்படுகிறது. எனக்கு தெரிந்து நிறைய நண்பர்கள் தொலைபேசியில் அழைக்கும் போது 'ஹலோ' க்கு பதிலாக 'வணக்கம்' சொல்லுவார்கள். கண்டவர்களையெல்லாம் வணங்கி இறைவனுக்கு இணை வைக்கிறார்கள் என்று சொல்ல முடியுமா ? இஸ்லாமியர்களைப் பொருத்த அளவில் வணக்கம் பெரும் பிரச்சனையாகவே இருக்கிறது.

வணக்கத்துக் குரியவன், வணங்கத்தக்கவன் இறைவன் ஒருவனே என்பதற்கு பதிலாக கும்பிடுவதற்கு உரியவன், கும்பிடத்தக்கவன் இறைவன் என்று மாற்றிக் கொண்டால் 'வணக்கம்' சொல்வது ஒரு பெரும் குற்றமாகிவிடாது என்று நினைக்கிறேன். இறைவன் மிகப் பெரியவன் ஆனால் அவன் மொழி ஆராய்ச்சி செய்து இணை வைக்கிறார்களா என்று பார்த்து 'வணக்கம்' சொல்லும் இஸ்லாமியர்களுக்கு மறுமையில் தண்டனை விதிப்பானா என்று தெரியவில்லை. அப்படி அச்சப்பட்டால் வணக்கத்தை பின் தள்ளிவிட்டு வேண்டத்தக்கவன் அல்லது கும்பிடத்தக்கவன் இறைவன் என்று மாற்றிக் கொள்ளலாமே. எனக்கு தெரிஞ்ச இஸ்லாமிய சகோதரர்கள் நிறைய பேர் எனக்கு வணக்கம் தெரிவித்து அலைபேசியில் தொடங்குகிறார்கள். அவர்களெல்லாம் இறைவனுக்கு இணை வைப்பதாக நான் நினைக்கவில்லை. வணக்கத்துக்கு உரியவன் இறைவன் என்ற நீளமான சொல் கூடத் தேவையற்றது, ஏனெனில் மேலே சொன்னது போல் 'இறை'வன் என்று சொன்னாலே அதில் வேண்டுதல், அழைத்தல், கும்பிடுதல் என பல பொருள்களை உணர்த்தும் 'இறை' என்ற வினைத் தொகையுடன் தான் இருக்கிறது.

இறைவன் அல்லா, ஆண்டவராகிய ஏசு கிறித்து, இந்து கடவுள் என இறைவன், ஆண்டவன், கடவுள் என்ற சொல்லை மூன்று மதங்களும் பயன்படுத்துகின்றன. இந்த மூன்றும் தற்காலத்தில் ஒரே பொருளைக் குறித்தாலும் அரபியில் அல்லா எனச் சொல்லப்படுகின்ற சொல்லுக்கு நேரடி பொருள் கொண்டது தானா 'இறைவன்' என்ற சொல் என்று எத்தகைய ஆராய்ச்சியும் நடந்தது போல் தெரியவில்லை. ஏன் கடவுள் என்றோ, ஆண்டவன் என்றொ சொல்லுவதில்லை என்று தெரியவும் இல்லை. ஆனால் கும்பிடுதல், வேண்டுதல் என்ற பொருளில் 'வணக்கத்தை' எடுத்துக் கொண்டு அதை அவ்வப்போது விவாதமாக மாற்றி வருவதற்கு இஸ்லாமியர்கள் முற்றுப் புள்ளி வைப்பது நல்லது. வணக்கத்திற்கு மாற்று வேண்டுமென்றால் 'தொழு' வையே வைத்துக் கொண்டு 'தொழுகைக்கு' உரியவன் இறைவன் என்றே சொல்லி வரலாமே.

இறைவன் மிகப் பெரியவன் தான், வணக்கம் மிகச் சிரியது இதற்கெல்லாம் இவ்வளவு முதன்மைத்துவம் கொடுக்க வேண்டுமா ? இறையச்சம், இறை வேண்டுதல் போன்ற அரபியில் பொருள் தரும் ஒரு சொல்லுக்கு (அரபி சொல் எது என்று தெரியவில்லை) பதிலாக 'வணக்கத்தை' பயன்படுத்துவது வெறும் மொழிப் பெயர்ப்பு சிக்கல் மட்டும் தானே.

வணக்கம் சொல்லுவது தவறு என்றால் 'ஹலோ' சொல்லுவது கூட தவறு தான். எனக்கு தெரிந்து ஹலோவுக்கு பதிலாகத்தான் பல இடங்களில் வணக்கம் பயன்படுகிறது. இஸ்லாமிய நண்பர்களில் பலர் கூட வணக்கம் என்றே அலைபேசியில் பேசத் தொடங்குகிறார்கள். இஸ்லாமியர்கள் எடுத்துக் கொள்ளும் வணக்கப் பொருள் 'ஹலோ' என்றால், ஹலோவுக்கு உரியவன் அல்லா, அல்லாவைத்தவிர யாருக்கும் ஹலோ சொல்லக் கூடாது என்று சொன்னால் அது சரியா ? வணக்கத்தை (மத)அரசியல் ஆக்குவது வெறும் மதவாதமாகத்தான் தெரிகிறது.

23 கருத்துகள்:

நட்புடன் ஜமால் சொன்னது…

இறையச்சம் என்பது அரபியில் ‘தக்வா’

இறைநம்பிக்கை(குரானில் சொல்லியிருப்பது போல் நம்புவது) என்பது ஈமான்.

ஈமான் என்ற சொல்லுக்கு பொதுவாக நம்பிக்கை என்ற பொருளும் உண்டு.

---------------

மற்றவை பற்றி பிறகு கருத்திடுகிறேன்.

கோவி.கண்ணன் சொன்னது…

//நட்புடன் ஜமால் said...

இறையச்சம் என்பது அரபியில் ‘தக்வா’

இறைநம்பிக்கை(குரானில் சொல்லியிருப்பது போல் நம்புவது) என்பது ஈமான்.

ஈமான் என்ற சொல்லுக்கு பொதுவாக நம்பிக்கை என்ற பொருளும் உண்டு.//

ஜமால்,

ஈமானுக்கு பொருள் தெரியும், தக்வா தெரியாது, பாத்வா தெரியும் !
:)

// ---------------

மற்றவை பற்றி பிறகு கருத்திடுகிறேன்.//

வருக !

வால்பையன் சொன்னது…

”மதம்” புடிச்சிட்டா மருந்தேயில்லையாமாம்!

VIKNESHWARAN ADAKKALAM சொன்னது…

//வணக்கத்தை (மத)அரசியல் ஆக்குவது வெறும் மதவாதமாகத்தான் தெரிகிறது.//

எதற்காக ஒருவரை ஒருவர் வணங்கிக் கொண்டிருக்க வேண்டும்...

பேரா.நன்னன் சொல்வார் வணக்கம் என்பதற்கு பதில் வாழ்த்துவதே சிறந்ததென.

உதரணம் ஒரு சிறவரும் பெரியவரும் சந்திக்கிறார்கள்.
சிறுவன் பெரியவரை வணக்கலாம். அப்பெரியவர் எதற்காக சிறுவனை வணங்க வேண்டும்?
ஆனால் வாழ்த்தும் முறைமை இவ்விடத்தில் இருவருக்கும் பொதுப்படையாக அமைகிறது.

கோவி.கண்ணன் சொன்னது…

//உதரணம் ஒரு சிறவரும் பெரியவரும் சந்திக்கிறார்கள்.
சிறுவன் பெரியவரை வணக்கலாம். அப்பெரியவர் எதற்காக சிறுவனை வணங்க வேண்டும்?
ஆனால் வாழ்த்தும் முறைமை இவ்விடத்தில் இருவருக்கும் பொதுப்படையாக அமைகிறது.//

வணக்கம் தம்பி ங்கிற சொல்லை பல பெரியவர்கள் சிறியவர்களுக்கு சந்திப்பின் போது கூறுவார்கள், அதற்காக அவர்கள் சிறியவர்களை துத்திக்கிறார்கள், தொழுகிறார்கள் என்று பொருள் இல்லை. இவை வெறும் சொல் அரசியல் தான். அதைப் பிடித்துக் கொண்டு தொங்கினால் மொழி என்ன செய்யும்.

கோவி.கண்ணன் சொன்னது…

// வால்பையன் said...

”மதம்” புடிச்சிட்டா மருந்தேயில்லையாமாம்!//

மதம் பிடித்த யானை உடனே இறப்பது இல்லை, எதிரே வருகிறவர்கள் தான்.

VIKNESHWARAN ADAKKALAM சொன்னது…

வணங்குவதும். தொழுவதும் மத பற்றுதலுக்கு பின் ஏற்பட்டவை அல்லது புகுத்தப்பட்டவை. பண்பாட்டு படையெடுப்புகளில் மறுவியவை இப்படி பல உண்டு. சொல் அரசியல் என்பதைக் காட்டினும் பண்பாட்டு மறுவல் ஏற்பட்டுள்ளது என்பதே தகும்.

ஆண்டான் அடிமை எனும் ஃபீயூடலிசம் ஏற்பட்ட பின்னரே மேல்மட்டத்தினர கீழானவர்கள் வணங்கும் நிலைகள் ஏற்பட்டன.

கோவி.கண்ணன் சொன்னது…

//ஆண்டான் அடிமை எனும் ஃபீயூடலிசம் ஏற்பட்ட பின்னரே மேல்மட்டத்தினர கீழானவர்கள் வணங்கும் நிலைகள் ஏற்பட்டன.//

அதன் பெயர் கூழைக் கும்பிடு, வணக்கம் இல்லை. 'வணக்கம் விக்னேஷ்' என்று உன்னைச் சொல்வதன் மூலம் உன்னை துதிக்கிறேன் விக்னேஷ் என்ற பொருளில் நான் சொல்வது கிடையாது. பலரும் அப்படித்தான்.

Kesavan சொன்னது…

வணக்கம் கோவியரே !!!!!!!!!!

கோவி.கண்ணன் சொன்னது…

//Kesavan said...

வணக்கம் கோவியரே !!!!!!!!!!//

கேசவன் நமஹ !
:)

சிநேகிதன் அக்பர் சொன்னது…

நல்ல அலசல் கோவி அண்ணா.

நீங்கள் சொல்வது போல் வணங்குதல் என்ற தமிழ் சொல் மாற்று மதத்தினரால் பயன்படுத்தப்படுவதால் ஏற்பட்ட நிலை இது.

பிற நாடுகளில் கவனித்து பார்த்தால் அங்கும் இது போல் சதாரணமாக புழக்கத்தில் உள்ள சொற்களுக்கு இம்மாதிரி அர்த்தம் இருக்கலாம்.

முன்னொருகாலத்தில் எங்கோ ஓர் இடத்தில் ஏற்பட்ட கசப்பான சம்பவங்களின் தொடர்ச்சியாக இப்போதும் தொடர்கிறது.

எடுத்துக்காட்டிற்கு. மதவாதத்தை தூக்கி பிடிக்கும் கட்சி எதிர் மதத்தினருக்கு முழுக்க முழுக்க நன்மை செய்யும் கட்சியாக மாறினால் கூட அந்த கட்சியின் பெயரைக்கேட்டால் ஏற்படும் கசப்பை போல.

( இது என்னுடைய தனிப்பட்ட கருத்து )

Kesavan சொன்னது…

// கோவி.கண்ணன் said... கேசவன் நமஹ ! :) //



வாழ்த்துக்கள்! தங்களின் பணி செவ்வனே நடக்க வாழ்த்துக்கள் !!!!!
:)

Unknown சொன்னது…

'வணக்கம் ஐயா' என்பதன் பொருள் 'ஹலோ சார்'க்கு இணையானதுதான் என்று சொல்கிறீர்களா? இதை அனைவரும் ஏற்றுக் கொள்வரா?

இஸ்லாத்தை பொருத்த வரை, அல்லாஹ்வின் முன்னிலையில் செயல்கள் யாவும் அவரவருடைய எண்ணங்களை அடிப்படையாகக் கொண்டே கணிக்கப்படும்.

கோவி.கண்ணன் சொன்னது…

//சுல்தான் said...

'வணக்கம் ஐயா' என்பதன் பொருள் 'ஹலோ சார்'க்கு இணையானதுதான் என்று சொல்கிறீர்களா? இதை அனைவரும் ஏற்றுக் கொள்வரா?
//

வணக்கம் சுல்தான் ஐயா,

:)

காது காது என்றால் லேது லேது என்று புரிந்து கொண்டால் காதின் பொருள் லேது ஆகிவிடாது. நீங்களும் அல்லாவே மிகப் பெரியவன் என்கிறீர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்கிறார்களா ? ன்னு தெரியுமா ? எனக்கு ஏற்றுக் கொள்வதில் பிரச்சனை இல்லை. பொதுவாக புழக்கத்தில் இருக்கும் ஒரு சொல்லுக்கு புனிதத்துவம் கொடுத்துவிட்டு பயன்படுத்த தடை போட்டால் சொல்லுக்கு ஒன்றும் இழப்பு இல்லைன்னு தான் நினைக்கிறேன். உங்கள் பள்ளி வாத்தியாருக்கு நீங்கள் வணக்கம் சொன்னதே இல்லையா ?

இறைவனுக்குத்தான் இணை வைக்கக் கூடாது வணக்கத்திற்குமா ? வணக்கம் பல பொருள்களுக்கு இணையான சொல், எப்படி வேண்டுமானாலும் பயன்படுத்தலாம். வணக்கம் என்ற சொல் தொழுவது அல்லது துதிப்பது என்பது மட்டுமே என்றால் வணக்கம் என்ற சொல்லே தேவையற்றதாகத்தான் இருக்கும்.

வணக்கம் அதில் ஒன்றும் இல்லை, வணக்கத்துக்குரியவன், வணங்கத்தக்கவன் என்று அதை நீட்டிக்கும் போது தான் அதன் பயன்பாடு குறித்து நினைக்க வேண்டி இருக்கிறது, எந்த ஒரு வானொலி தொலை காட்சி அறிவிப்பாளரும் வணங்கத்தக்க நேயர்களே என்று அழைப்பதை நான் பார்த்தது இல்லை வெறும் வணக்கம் தான் சொல்லுகிறார்கள், தக்கதோ, குரியதோ இல்லாமல் வணக்கத்தை பொதுவாக பயன்படுத்துவதில் என்ன தவறு இருக்க முடியும் என்று கருதுகிறீர்கள் ? இதையெலாம் மதப் பிரச்சனை ஆக்குவதும், அதற்கும் நான்கு பேர் பரிந்து பேசுவதும் வியப்பாகத்தான் இருக்கிறது

// இஸ்லாத்தை பொருத்த வரை, அல்லாஹ்வின் முன்னிலையில் செயல்கள் யாவும் அவரவருடைய எண்ணங்களை அடிப்படையாகக் கொண்டே கணிக்கப்படும்.//

இது அனைத்து மதவிதிகளிலும் உள்ளவை தான் இதில் புதிதாக ஒன்றும் இல்லை, கொள்கைகள் இல்லாத மதம் என்று எதுவுமே இல்லை. எனக்கு தெரிந்து எந்த ஒரு மதக் கொள்கையும் உங்கள் எண்ணத்திற்கு மாறான பலன்கள் தான் கிடைக்கும் என்று (அவ)நம்பிக்கை ஏற்படுத்துவதில்லை.

Unknown சொன்னது…

இடுகையில் நீங்கள் காது காது என்பதை நான் லேது லேது என புரிந்து இருக்கிறேனா? நிறைய எழுதுபவர். நீங்கள் சொன்னால் சரியாய்தான் இருக்கும். நல்லது.
ஏதோ கோபமாய் இருப்பது போல் தெரிகிறதே.

//நீங்களும் அல்லாவே மிகப் பெரியவன் என்கிறீர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்கிறார்களா? ன்னு தெரியுமா?//
ஒரு முஸ்லீம் என்று சொல்லிக் கொள்பவன் இந்த அடிப்படையை ஏற்றால்தான் முஸ்லீம்.

இஸ்லாத்தில் ஒருவனை மட்டுமே வணங்க வேண்டும் என்ற அடிப்படைக்கு சிறு ஊறு விளைவிக்கும் அத்தனை அம்சங்களையும் விட்டு விலகி இருக்க நாங்கள் நினைக்கிறோம்.
வணக்கம் என்பதன் பொருள் வணங்குகிறோம் என்றில்லை என உங்களைப் போன்ற சிலர் நல்லெண்ணத்தில் நினைக்கலாம். பொதுவான கருத்தா என்றால் காது காது லேது லேது என்கிறீர்கள்..

வணக்கம் என்பதற்கு வணங்குகிறோம் என்ற அடிப்படை பொருளில்லை என நினைக்கும் உங்களிடம் நானும் அது மாதிரி உண்மையிலேயே நம்பி வணக்கம் சொன்னால் அது தவறாகாது. வார்த்தைக்கு முக்கியத்துவம் இல்லை. ஏனெனில் எல்லா செயல்களும் அவரவர் எண்ணங்களின் அடிப்படையிலேயே இறைவன் முன்னிலையில் தீர்மானிக்கப் படுகின்றன. எனினும் பொதுவில் அவ்வாறில்லை என்பதால் இதை பொதுமைப் படுத்த இயலாது.

//உங்கள் பள்ளி வாத்தியாருக்கு நீங்கள் வணக்கம் சொன்னதே இல்லையா?//
வேறு வழியில்லாததாலும், விவரம் இல்லாத வயதிலும் நிலையிலும், சொன்னவற்றுக்கும் செய்தவற்றுக்கும் இறைவன் குற்றம் பிடிக்க மாட்டான் என்பதும் என்னுடைய நம்பிக்கை.

//வணக்கத்தை பொதுவாக பயன்படுத்துவதில் என்ன தவறு இருக்க முடியும் என்று கருதுகிறீர்கள் ? இதையெலாம் மதப் பிரச்சனை ஆக்குவதும், அதற்கும் நான்கு பேர் பரிந்து பேசுவதும் வியப்பாகத்தான் இருக்கிறது//
'வணக்கம் என்பதற்கு வணங்குகிறேன் என்று பொருளில்லை', 'காலில் விழுவதும் கைகொடுப்பது போலத்தான்' என ஒரு சிலர் பிரச்னைகள் தீர்க்கப்பட வேண்டும் என்ற நல்லெண்ணெத்தில் நினைத்தாலும் அதை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியாது. ஏனெனில் எது இஸ்லாத்தின் ஆணிவேரோ அதை அசைக்க வைக்கின்ற பிரச்னை இது. பிரச்னைகள் தோன்றாத இதை விட சிறந்த முகமன் இஸ்லாத்தில் சொல்லித்தரப்பட்டு எங்களால் நடைமுறை படுத்தவும் படுகிறது.

//இது அனைத்து மதவிதிகளிலும் உள்ளவை தான் இதில் புதிதாக ஒன்றும் இல்லை, கொள்கைகள் இல்லாத மதம் என்று எதுவுமே இல்லை. எனக்கு தெரிந்து எந்த ஒரு மதக் கொள்கையும் உங்கள் எண்ணத்திற்கு மாறான பலன்கள் தான் கிடைக்கும் என்று (அவ)நம்பிக்கை ஏற்படுத்துவதில்லை.//
நன்மை தீமைகள் இறைவனால் தீர்மானிக்கப்படும்போது வெறுமனே நமது செயல்கள் மட்டும் நோக்கப் படுவதில்லை. அச் செயலைச் செய்ததற்குரிய நமது எண்ணங்களே முதலாவதாக கொள்ளப் படுகிறது என்பது நான் சொன்னதன் பொருள்.

கோவி.கண்ணன் சொன்னது…

//சுல்தான் said...
இடுகையில் நீங்கள் காது காது என்பதை நான் லேது லேது என புரிந்து இருக்கிறேனா? நிறைய எழுதுபவர். நீங்கள் சொன்னால் சரியாய்தான் இருக்கும். நல்லது.
ஏதோ கோபமாய் இருப்பது போல் தெரிகிறதே.
//

மன்னிக்கவும் ஐயா, நான் கோபத்துடன் அப்படிச் சொல்லவில்லை. ஒரு சொல்லுக்கான பொருள் எப்படி எல்லாம் பயன்படுத்தப்படுகிறது என்பதற்காக கொஞ்சம் அழுத்தமாக குறிப்பிட்டேன்.

//வேறு வழியில்லாததாலும், விவரம் இல்லாத வயதிலும் நிலையிலும், சொன்னவற்றுக்கும் செய்தவற்றுக்கும் இறைவன் குற்றம் பிடிக்க மாட்டான் என்பதும் என்னுடைய நம்பிக்கை. //

இப்படியாக மதவாதிகள் நம்பிக்கையாளர்கள் அவர்களாகவே மொழி பெயர்க்கும் சொல்லை எடுத்துக் கொண்டு தொங்குவது அதீத உணர்ச்சி வடிவம் என்று தான் கொள்ள வேண்டி இருக்கிறது. நாளைக்கு யாருக்கும் 'திரு' போட்டு அழைக்கக் கூடாது என்று சொன்னால் அது எப்படி ஏற்புடையது அல்லவோ அதே போல் தான். சொற்களுக்கான பொருள் அதைப் பயன்படுத்தும் இடத்திற்கு ஏற்றது. 'நான் எண்ணிக் கொண்டு இருந்தேன்' எண்ணத்திற்கும் வரும் எண்ணிக்கைக்கும் வரும், எதோ ஒன்று தான் சரியான பொருள் என்பதான வாதம் வீன்வாதம்.

'வணக்கம்' சொல்லப் பிடிக்காதவர்களை யாரும் கட்டாயப்படுத்தவில்லை, அதே போல் வணக்கத்திற்கான பொருள் இறைவனை தொழுதல், இறைவனை வணங்குதல் என்பதாக மட்டுமே கொள்ள வேண்டும் என்பதும் ஏற்புடையது அல்ல.

//'வணக்கம் என்பதற்கு வணங்குகிறேன் என்று பொருளில்லை', 'காலில் விழுவதும் கைகொடுப்பது போலத்தான்' என ஒரு சிலர் பிரச்னைகள் தீர்க்கப்பட வேண்டும் என்ற நல்லெண்ணெத்தில் நினைத்தாலும் அதை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியாது. ஏனெனில் எது இஸ்லாத்தின் ஆணிவேரோ அதை அசைக்க வைக்கின்ற பிரச்னை இது. பிரச்னைகள் தோன்றாத இதை விட சிறந்த முகமன் இஸ்லாத்தில் சொல்லித்தரப்பட்டு எங்களால் நடைமுறை படுத்தவும் படுகிறது.
//

உங்கள் கூற்றுபடி எனக்கு வணக்கம் சொல்லும் இஸ்லாமிய நண்பர்களை இஸ்லாமியர் இல்லை என்று சொல்லும் துணிவு எனக்கு கிடையாது. அவர்கள் என்னை இறைவனுக்கு இணை வைக்கிறார்கள் என்று கொள்வதும் இல்லை.

நாளைக்கு நன்றி கூட பிரச்சனை ஆகலாம், இறைவனைத் தவிர்த்து ஒரு மனிதம் யாருக்கும் நன்றி சொல்லக் கூடாது என்று ஒரு சிலர் கிளம்பினால் இது போன்ற பிரச்சனைகள் போய் கொண்டே இருக்கும். வணக்கம், வந்தனம், (சு)ஸ்வாகதம் ஆகியவை வெறும் வரவேற்புச் சொற்கள், முகம் நோக்கிய சொல் மட்டுமே. பரவலாக அந்த பொருளில் தான் வழங்கப்படுகிறது.

//நன்மை தீமைகள் இறைவனால் தீர்மானிக்கப்படும்போது வெறுமனே நமது செயல்கள் மட்டும் நோக்கப் படுவதில்லை. அச் செயலைச் செய்ததற்குரிய நமது எண்ணங்களே முதலாவதாக கொள்ளப் படுகிறது என்பது நான் சொன்னதன் பொருள்.
//

இது ஒரு முரண்பட்ட சிந்தனை, பலரும் நீங்கள் சொல்வது போல் சொல்கிறார்கள், மதங்களுக்கும் பொதுவானவை. எல்லாம் இறைவனின் சித்தம் விதித்தது என்றால் நாம செய்யும் செயல்களுக்கு நாம பொறுப்பேற்க வேண்டும் என்று சொல்வது கூட முரண்பாடு உடைய கூற்றே.

'அம்பைக் கொடுத்து, மானையும் காட்டி கொள் என்று சொல்பவனை விட்டு விட்டு அம்பை எய்தவனை' தண்டிப்பது தான் சரியானது என்பது போன்ற கூற்று எந்த ஒரு நீதியையும் தரவில்லை.

ஒருமனிதனுக்கு என்ன கிடைக்கனும், அவன் பணக்காரனாக பிறப்பானா, ஏழையாக பிறப்பானா என்பது இறைவனின் முடிவு, அவன் தப்பு செய்வதை தடுக்காமல் அவனை அப்படியே விட்டுவிட்டு அதை அவன் யார் தூண்டுதலும் இல்லாமல் செய்தான் தண்டனை கொடுக்க வேண்டும் என்று சொல்வதும் ஞாயமற்றது. ஒரு வேளை அவன் சாத்தானால் தூண்டப்பட்டான் என்றாலும் தண்டனை அடைய வேண்டியவன் சாத்தானே அன்றி அப்பாவி மனிதன் அல்ல என்று நான் சொன்னால் அது தவறாக எனக்கு தெரியவில்லை.

உங்கள் மத நம்பிக்கையை குலைக்க நான் இதை எழுதவில்லை. பொதுவாக தமிழ் சொற்கள் குறித்து அவ்வப்போது எழுதி வருகிறேன், அதில் வணக்கம் படும் பாடு பற்றி இங்கே எழுதி இருக்கிறேன்

Starjan (ஸ்டார்ஜன்) சொன்னது…

இறைவன் ஒருவனுக்கே வணக்கங்கள் அனைத்தும்.

வணக்கம் என்று மனிதருக்கு மனிதர் சொல்வதெல்லாம் எப்படி சும்மா ஃபார்மாலிட்டிக்கே..

வணங்குதல் என்று வந்துவிட்டால் அது இறைவனைத்தான் குறிக்கும்.

இது முன்னோர்கள் ஏற்படுத்திய நியதி.

EKSAAR சொன்னது…

//'வணக்கம் தமிழகம்', 'காலை வணக்கம்' போன்ற வணக்க சொற்களை இறைவனுக்கு இணை
கற்பிக்க தடை விதிகப்பட்ட இஸ்லாமிய வானொலி, தொலைகாட்ச்சி அறிவிப்பாளர் பயன்படுத்தலாமா ? அப்படி அவர்களை சொல்லச் சொல்லி கட்டாயப்படுத்துவது மத நல்லிணக்கத்தை குலைப்பதாகும், இஸ்லாமியர்களை இழிவு படுத்துவது
ஆகும் என்றெல்லாம் படித்தேன்.//

அப்படி எங்கு கூறப்பட்டுள்ளது? வணக்கம் சொல்ல விரும்பாதோரை வணக்கம் சொல்ல நிர்ப்பந்தித்தல், அதற்கு பதிலளிக்க நிர்ப்பந்தித்தல் அனைத்தும் திணிப்பு. திணிப்புதானே என்னுடைய தலைப்பு. நீங்கள் சொன்ன விடயங்கள் பதிவில் எவ்விடத்தில் இருக்கிறது என்று காட்டமுடியுமா .
http://eksaar.blogspot.com/2010/02/blog-post_21.html

ஒரு பதிவை விளங்க முடியாத நிலையில், வணக்கம் என்பதை மட்டும் விளங்கிகொண்டீர்களா? இனி இவ்வாறான தகிடுதத்தங்களில் ஈடுபடவேண்டாம். மக்களை பிழையாக வழிநடத்தவேண்டாம்.

பெயரில்லா சொன்னது…

எங்கள் கல்லூரி தமிழாசிரியரை, மாணவர்கள், ‘வண்க்கம்’ என்றால், அவர்,

‘வாழ்க..வாழ்க’ என்றோ,

‘வாழ்க...வளர்க’ என்றோதான் சொல்வர்ர்.

சிறியவர்கள் பெரிய்வ்ர்களுக்கு ‘வணக்கம்’
சொல்வது பெரியவர்களின் நல்வாழ்த்துகளைப் பெறவே.

பெரியவர்கள், ‘வணக்கம்’ என்று பதில் சொன்னால்,
ஏமாற்றமாகிறது.

கோவி.கண்ணன் சொன்னது…

//அப்படி எங்கு கூறப்பட்டுள்ளது? வணக்கம் சொல்ல விரும்பாதோரை வணக்கம் சொல்ல நிர்ப்பந்தித்தல், அதற்கு பதிலளிக்க நிர்ப்பந்தித்தல் அனைத்தும் திணிப்பு. திணிப்புதானே என்னுடைய தலைப்பு. நீங்கள் சொன்ன விடயங்கள் பதிவில் எவ்விடத்தில் இருக்கிறது என்று காட்டமுடியுமா .
http://eksaar.blogspot.com/2010/02/blog-post_21.html//

இன்று சக்தி TV இல் Grand Master நிகழ்ச்சி பார்த்துக்கொண்டிருந்தபோது "வணக்கம்" ஊடகங்களில் ஒரு மதத்திணிப்பின் கருவியாக இருக்கிறதா என்றொரு சந்தேகம் வந்தது.

முஸ்லிம் மாணவி ஒருவருக்கு நிகழ்ச்சியின் அறிவிப்பாளரும் நிகழ்ச்சி நடத்துபவரும் "வணக்கம்" என்றே வரவேற்றனர்.

- இது உங்க பதிவில் தான் இருந்தது. அடுத்து இஸ்லாமியர்கள் 'சக்தி' என்ற இந்து பெயரில் இருக்கும் தொலைகாட்சியைப் பார்கலாமான்னு கூட நீங்க கேளுங்க.

EKSAAR சொன்னது…

முஸ்லிம் ஒருவருக்கு வணக்கம் சொல்லி பதில் சொல்ல அவரை நிர்ப்பந்திக்கிறார்கள் என்பதே சாரம். இந்துக்கள் வந்தால் தாராளமாக சொல்லுங்கள். யார் வேணாம் என்றது.

முதலில் தமிழை விளங்குங்கள். நான் சொன்னதை சரியாக மேற்கோள் காட்டியிருக்க வேண்டும். மாறாக உங்கள் வியாக்கியானங்களை உங்கள் இஷ்டம் போல் செய்திருக்கிறீர்கள்.

சக்தி என்பது இந்து பெயர் எனும் நீங்கள் வணக்கம் பொது என்பதுதான் இடிக்கிறது.

பெயரில்லா சொன்னது…

//அடுத்து இஸ்லாமியர்கள் 'சக்தி' என்ற இந்து பெயரில் இருக்கும் தொலைகாட்சியைப் பார்கலாமான்னு கூட நீங்க கேளுங்க.//

கோவி கண்ணன்!

இங்கு தனிநபர் உணர்ச்சிகளுக்கு இடமில்லை. இது பொது விசயம்.

இதில் இரு கருத்துகளுக்கு சாத்திய்மும் முடிவற்ற நிலையும் எப்போது உள

நீங்கள் இதைத்தெரியாத மாதிரி நடித்து, முற்றுப்புள்ளி வைக்க முயலுகிறீர்கள்!

ஏன் இசுலாமியர் ‘வணக்கம்’ என்ற தமிழ்ச்சொல்லை மத்ததோடு ஒட்டி எடுக்கக்கூடாது?

தமிழ்ச்சொற்கள் மட்டுமல்ல, எம்மொழிச்சொற்களின் பொருட்கள் என்றும் ஒரே ஒன்றாகத்தான் இருப்பதில்லை. காலமே அதன் கண்ணாடி.

’சக்தி’ என்ற சொல்லும் இசுலாமியர் தவிர்க்க விரும்பினால் அது சரியே.

அவர்கள் மதம் அவர்களுக்கு. அங்கு எந்த கலப்படமும் இருக்கக்கூடாது என்று அவர்கள் நினைக்கின்றார்கள். அவர்கள் மதத்தலைவர் எப்படி அவர்களுக்குச் சொல்லிச்சென்றாரோ அப்படியே இருக்க்வேண்டுமென நினைக்கிறார்கள்.

அஃதில் என்ன தவறு.

நீங்கள் உங்கள் மதத்தை ஊருக்கொன்றகவும், கிழமைக்கொன்றாலும், கண்டவ்னுக்கொன்றாகவும், நாட்டுக்கொன்றாகவும்,
வைத்துக்கொண்டால்,
அப்படியே இருக்க்ட்டும்.
மற்றவர்கள் மீது திணிக்காதீர்கள்.

நினவிருக்கட்டும். கேரள jehovaas witnesses சுப்ரீக் கோர்ட்டு வரை போய் தங்கள் உரிமையைக்காப்பாற்றிக்கொண்டார்கள்.

என்ன அது:

“தேசியகீதததைப் பாடமாட்டோம்; தேசீயக்கொடியை வணங்க மாட்டோம்.
எங்கள் வணக்கமும் பணிவும் ஜெகோவாவுக்கே.”

அவர்களிடம் போய் உங்கள் நக்கலைவைத்துக்கொள்ள முடியுமா?

நாடா? மதமா?

கோவி கண்ணன்,

பதில் எப்படியும் இருக்கும்.

உங்கள் பதில் உங்களுக்கு.

அவர்கள் பதில் அவர்களுக்கு.

என் பதில்: மதமே.

ஏனென்றால்,

நாடே என்றால், அது கம்சனின் ராஜ்ஜியம்; ராவணனின் ராஜ்ஜியம்.
அரக்கர்கள் தம்மைத்தான் வழிபடவேண்டும்; உம் இறைவனைத் தொழக்கூடாது என்று சொல்லி, தங்கள் உருவச்சிலையை வணங்கச்சொன்னார்கள்.

என் பதிலை உங்கள் மீது திணிக்கவில்லை!

கோவி.கண்ணன் சொன்னது…

//என்ன கொடும சார் said...
முஸ்லிம் ஒருவருக்கு வணக்கம் சொல்லி பதில் சொல்ல அவரை நிர்ப்பந்திக்கிறார்கள் என்பதே சாரம். இந்துக்கள் வந்தால் தாராளமாக சொல்லுங்கள். யார் வேணாம் என்றது.

//

உங்களுக்கு தெரியும் பிற மதத்தினர் கொண்டாடும் பண்டிகைகளுக்கு உங்களுக்கு வாழ்த்து சொல்ல தடை இருக்கிறது, பிற மதத்தினர் உங்கள் மதம் சார்ந்த பண்டிகைகளுக்கு வாழ்த்து சொன்னால் அதை ஏற்றுக் கொள்வதற்கும் தடை இருக்கிறது என்பது, எனக்கும் தெரியும். ஒரு காஃபிருக்கு வாழ்த்து சொல்வதோ, காஃபிரிடம் இருந்து வாழ்த்து பெறுவதோ உங்கள் மத வழக்கப்படி குற்றம், மீறிச் செய்தால் நகர நெருப்பில் நிரந்தரமாக வாடுவீர்கள். இது பிற மதத்தினருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை.

நீங்கள் ஒரு இந்துவுக்கோ, கிறித்துவனுக்கோ வாழ்த்து சொல்வதை நிறுத்திவிட்டீர்களா ?

அப்படியெல்லாம் ஒண்ணும் இல்லை, எங்களுக்கு எந்த மததினருக்கும் அவர்கள் மதம் சார்ந்த விழாக்களுக்கு வாழ்த்து சொல்ல தடை இல்லை என்று உங்களால் சொல்ல முடியுமா ?

நான் அடிப்படை வாதிகளுக்காக, மதவாதிகளுக்காக இந்த பதிவை எழுதவில்லை.

//சக்தி என்பது இந்து பெயர் எனும் நீங்கள் வணக்கம் பொது என்பதுதான் இடிக்கிறது.//

எனக்கு எப்படி வேண்டுமானாலும் இருந்துவிட்டு போகட்டும், ஆனால் வணக்கம் மதம் சார்ந்ததாக தெரியும் உங்களுக்கு 'சக்தி' தொலைகாட்சி கூட மதம் சார்ந்ததாகவே தெரிந்து அந்த தொலைகாட்சி பார்ப்பதையே தடுத்திருக்க வேண்டும். உங்களுக்கு பொழுது போக்கான இசை, இலக்கியம் எல்லாம் தடை செய்யப்பட்டு இருக்கிறது ஈமான் கொண்ட இஸ்லாமியரான நீங்கள் தொலைகாட்சி பார்பதே தவறு.

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்