பின்பற்றுபவர்கள்

19 பிப்ரவரி, 2010

பக்கத்து வீட்டு பாட்டி !

எங்க பக்கத்து வீட்டு சீனப் பாட்டி முந்தா நாள் இரவு 1:30 மணிக்கு போய் சேர்ந்து விட்டது. 87 வயது ஆன பாட்டி. இரண்டு ஆண்டுகளாக வீட்டுக்குள் இருந்தது, எப்போதாவது பார்க்கும் போது மலாய் மொழியில் எங்களுடன் பேச முயற்சிக்கும், இந்தியர்களுக்கு மலாய் நன்றாக தெரியும் என்று சீனப்பாட்டிகள் நினைப்பார்கள். எங்களுக்கு மலாய் தெரியாததால் நாங்க பேசுவதை கான்டனீசில் (சீன வட்டார மொழி வழக்கில் ஒன்று) மொழிப் பெயர்த்து அந்த பாட்டியிடம் சொல்லுவார்கள். சிரிப்பு முக மொழிகளுடன் மட்டும் தான் அந்த பாட்டியிடம் பேச முடியும்.அன்பாக எங்களைப் பற்றி கேட்டுக் கொள்கிறது என்று மட்டும் தான் பாட்டி சொல்ல வருவது விளங்கும்.

இங்கே சீனர்கள் வழக்கப்படி இறந்த உடலை கீழே குடியிருப்பின் அடித்தளத்தில் தற்காலிக பந்தல் அமைத்து வசதியைப் பொருத்து ஒரு சிலர் ஒருவார காலமும், சிலர் மூன்று நாட்கள் வரையிலும் வைத்திருக்கும் வழக்கம் உண்டு. உடல் வைத்திருக்கும் இடத்திற்கு நேர் மேலாக முதல் தளத்தின் படுக்கை அறை இருக்கும், முதல் தளத்தில் குடி இருப்பவகளுக்கு மன அளவில் சங்கடங்கள் உண்டு. இருந்தாலும் உடலை மூன்று நாள் வரை வைத்திருப்பது சீனர் வழக்கம் என்பதால் புரிந்து கொள்கிறார்கள். திருமணத்திற்கு முன்பு நான் குடியிருந்த வீடு கூட அப்படித்தான், கீழே தரைதளத்தில் உடல் பெட்டியில் கிடத்தப்பட்டு இருக்கும், முதல் தளத்தில் நான் தங்கி இருந்த வீட்டின் படுக்கை அறை இருந்தது. படுக்கும் போது நமக்கும் கீழே ஒரு பிணம் இருக்கிறது என்று நினைத்துப் பார்கும் போது தூக்கம் வருவது ஐயமும் அச்சமும் ஏற்படுத்துவதாக இருக்கும். நல்ல வேளை இப்போது இருக்கும் எங்கள் வீட்டின் நேர் கீழே மின் சார அறை இருப்பதால் அந்த பகுதி முழுவதும் இது போன்ற நிகழ்வுக்கு பயன்படுத்த வாய்பில்லை, தூங்கும் போது அச்சம் ஏற்படுவதில்லை.

இறந்த உடலில் ஒருவார காலம் வரை உயிர் தங்கி இருப்பதாக சீனர் நம்பிக்கை, அதனால் தான் ஒருவார காலத்திற்கு உடலை புதைக்கவோ, சிதைக்கு எடுத்துச் செல்லவோ மாட்டார்கள், நாள் தோறும் புத்த மத வழக்கப்படி சிறப்பு வழிபாடுகள் நடக்கும், பெரிய வட்ட மேசைகளில் துக்கம் கேட்க வந்திருப்பவர்கள் அமர்ந்திருப்பார்கள். பெரும்பாலும் வெள்ளை நிற உடை, சிலர் கருப்பு நிற உடைகளில் உறவினர்கள் துக்கம் கேட்க வருவது வழக்கம். மற்றவர்களுக்கு உடை நிறக் கட்டுபாடு எதுவும் கிடையாது. வட்ட மேசையில் சுற்றிலும் அமர்ந்து விசாரித்துக் கொண்டிருப்பார்கள், அவர்களுக்கு தோல் நீக்காத வருத்த வேர்கடலை மற்றும் இனிப்பு சாக்லேட்டுகள், குளிர்பானங்கள் வழங்கப்படும், இந்திய வழக்கப்படி துக்கத்தின் போது தண்ணீர் தவிர வேறு எதையும் உண்பது கிடையாது, அரை நாள் ஒரு நாள் என்பதுடன் இந்திய துக்கம் முடிவுக்கு வந்துவிடும். ஒரு பக்கம் இறந்த உடலை போட்டு வைத்துக் கொண்டு மறுபக்கம் தின்று கொண்டிருப்பது அவர்களைப் பொருத்த அளவில் பெரியது இல்லை, அவர்களது பண்பாடு பழக்கவழக்கம் அப்படி இருக்கிறது என்பதால் அது தவறாக தெரியவில்லை. அந்த பகுதியின் ஒதுக்குபுறத்தில் ஒரு விளக்கு அல்லது வத்தியை எரியவிடுவார்களாம்.

உடலை பெட்டியில் வைத்திருப்பார்கள், அதைச் சுற்றி முன்பக்கம் தவிர்த்து சின்ன தடுப்பு போல் அமைத்து வைத்திருப்பார்கள், பெட்டியில் முகத்திற்கு நேராக கண்ணாடியால் அமைக்கப்பட்ட திறப்பு இருக்கும், அந்த தடுப்புக்கு முன் பக்கம் இறந்தவரின் கருப்பு வெள்ளைப் படம் ஒன்று இருக்கும். ஏழு நாள் வரை உடல் கெடாமல் இருக்க இறந்த உடனேயே பதப்படுத்துபவர்களால் உடலுக்கு தேவையான ரசாயனங்களை உடலுனுள் வைத்த உடன் உடல் பெட்டியில் வைக்கப்படுகிறது. அந்த பாட்டியின் முகத்தை பார்த்தேன், நன்றாக ஆழமாக தூக்கத்தில் இருப்பது போன்று இருந்தது. சீனர்களுக்கு அவர்களுடைய புத்தாண்டின் போது பெரியவர்களின் வாழ்துகள் மிக முதன்மையானது, அந்த பாட்டியின் மகனுக்கு துக்கம் இருந்தாலும், அவங்க அம்மா சீனப் புத்தாண்டு வரை இருந்து அனைவருக்கும் ஆசி வழங்கினார்கள் என்பதை நினைவு கூர்ந்து மகிழ்ந்தார்.

அரசு விதி முறைகளின் படி இடுகாட்டில் இறந்த உடலை புதைத்து வைக்க 17 ஆண்டுகள் மட்டுமே ஒப்புதல் வழங்குகிறார்கள், அதனால் பலர் எரிக்கும் முறைக்கு மாறி இருக்கிறார்கள். ஐந்தாண்டுக்கு முன்பு உருவாகப்பட்ட உட்லே எனப்படும் மிகப் பெரிய பூங்கா ஒன்று முன்பு கிறித்துவ இடுகாடு அமைந்த இடம், அங்கு இடுகாடு இருந்ததை நான் பார்த்திருக்கிறேன். அங்கு ஐந்தாண்டுகளாக ஒரு தொடர் வண்டி நிலையம் கூட உண்டு, ஆனால் அது இன்னமும் திறக்கப்படவில்லை. சீனர்களுக்கும் ஓர் ஆண்டு துக்கம், ஓர் ஆண்டுகளில் எந்த ஒரு மகிழ்ச்சியான நிகழ்வும் இருக்காது, கருப்பு வெள்ளை ஆடைகளை அணிவார்கள், காலணி தவிர்த்து வேறு அழகு அணிகள் எதுவும் அணியமாட்டார்கள்.

சீனர்களின் நம்பிக்கை படி வயதானவர் இறக்கும் போது அருகில் இருக்கும் மகனோ மகளோ தான் அவர்களுக்கு என்று பிறந்த உண்மையான வாரிசு என்ற பெருமை இருக்குமாம். மற்றவர்கள் அவர்களுக்கு பிறந்திருந்தாலும் கடைசியில் கூடவே இருப்பவர்கள் மட்டுமே அவர்களின் மனதிற்கும் அன்பானவர்களாக கடவுள் காட்டும் வாரிசு என்று நம்புகிறார்கள். அப்படி இறக்கும் போது அருகில் இருக்கும் மகனோ மகளோ அந்த பெருமையை அடைகிறார்கள்.

சிங்கையில் வயதானவர்களைப் பார்த்துக் கொள்வது மிகக் கடினம், ஆண் பெண் இருவரும் வேலைக்குச் செல்வதால் முதியோர்களைப் பார்த்துக் கொள்ள வசதியானவர்கள் பணிப் பெண்ணை அமர்த்துகிறார்கள், மற்றவர்கள் முதியோர் இல்லங்களுக்கு அனுப்புகிறார்கள், எப்படி என்றாலும் அதை முதியவர்களும் புரிந்து கொள்கிறார்கள். பக்கத்து வீட்டுப் பாட்டியை பணிப் பெண் தான் கவனித்துக் கொண்டிருந்தாள். வரும் திங்கள் கிழமை தான் உடல் எரியூட்ட எடுத்துச் செல்லப்படுமாம்.

சீனர்களின் திருமணங்கள் ஆங்கில முறைப்படியே மோதிரம் அணிந்து, கேக் வெட்டி, சாம்பேயினுடன் நடந்தாலும், இறப்பு சடங்குகள் அவர்களது பண்பாட்டு வழக்கப்படி தான் நடக்கிறது. அன்றாட (சீன) உணவு மற்றும் இறப்பு சடங்குகளில் பண்பாடு காத்துவருகிறார்கள்.

10 கருத்துகள்:

துளசி கோபால் சொன்னது…

பாட்டியின் ஆன்மா சாந்தி அடையட்டும். பிரார்த்திக்கிறேன்.

கோவி.கண்ணன் சொன்னது…

//துளசி கோபால் said...

பாட்டியின் ஆன்மா சாந்தி அடையட்டும். பிரார்த்திக்கிறேன்.//

பெட்டியினுள் அந்த பாட்டி முகத்தைப் பார்த்தால் சாந்தி அடைந்தது போல் ரொம்ப அமைதியாக இருந்தது

பித்தனின் வாக்கு சொன்னது…

பாட்டியின் ஆன்மா சாந்தியடையப் பிரார்த்திக்கின்றேன். தகவகல்களுக்கு நன்றி. அவர்களின் கலாச்சாரத்தைப் பற்றி அறிய முடிந்தது.

பித்தனின் வாக்கு சொன்னது…

இதுல கூட புலியா? நான் வயசு ஆவதால் புளியைக் குறைக்கலாம் என உள்ளேன்.

அத்திவெட்டி ஜோதிபாரதி சொன்னது…

பாட்டிக்கு ஆழ்ந்த இரங்கல்!

இன்முகம் காட்டிப் பேசுபவர்கள், பிறப்பின் பேறு அடைந்து அமையட்டும்!

ஏழு நாளும் டின்னர் சிறப்பாக இருக்கும். நானும் சாப்பிட்டிருக்கிறேன்!

மொத்தத்தில் அவர்களுக்கு திருமணமாக இருந்தாலும், சாவாக இருந்தாலும் செலவு கணிசமாக ஆகும்.

அதனால் திருமணத்திற்கு ரெட்(தல இல்ல) பாக்கெட்டில் ஆங் பா வும்(உள்ள பணம் வச்சு கொடுப்பது), சாவுக்கு ஒயிட் கோல்டும்(இதும் பணம் தான்) கொடுப்பது வழக்கம். நிவாரணமாக இருக்கும்.

பித்தனாரே! இந்த ஆண்டே உங்க ஆண்டுதான் “புலி ஆண்டு”!

சிநேகிதன் அக்பர் சொன்னது…

பாட்டியின் ஆன்மா சாந்தி அடையட்டும்.

குட்டிபிசாசு சொன்னது…

//ஒரு பக்கம் இறந்த உடலை போட்டு வைத்துக் கொண்டு மறுபக்கம் தின்று கொண்டிருப்பது அவர்களைப் பொருத்த அளவில் பெரியது இல்லை//

ரொம்ப நக்கலா தெரியுதே.

Thekkikattan|தெகா சொன்னது…

பாட்டி நல்லபடியாக பொயிட்டு வரட்டும். இது போன்ற சீனச் சடங்குகளை அதிலும் குறிப்பாக சிங்கையில் நடைபெறுவதாக ஒரு டாகுமெண்டரியில் காட்டியதை நின்று நிதானமாக பார்த்திருக்கிறேன்.

cheena (சீனா) சொன்னது…

பாட்டியின் ஆன்மா சாந்தியடைய பிரார்த்தனைகள்

VIKNESHWARAN ADAKKALAM சொன்னது…

//நாள் தோறும் புத்த மத வழக்கப்படி சிறப்பு வழிபாடுகள் நடக்கும்,//

அது புத்த மத வழக்கம் இல்லை. சீனர்களின் மூதாதையர்கள் சாங்கிய சடங்கு முறைகள்.

பொதுவாகவே பொரும்பாலான சீனர்கள் தங்களை புத்த மதத்தினர் என்றே குறிப்பிடுவார்கள். இருப்பினூம் அவர்களின் வழிபாட்டு வழக்கங்கள் அனைத்தும் மூதாதயர்களை வணக்கும் முறையைக் கொண்டது.

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்