பின்பற்றுபவர்கள்

24 செப்டம்பர், 2008

மதங்கள் உலக மக்களை மேம்படுத்துமா ? - மறுமொழிப் பதிவு

//சகோதரர் கோவி.கண்ணனின் மதங்கள் உலக மக்களை மேம்படுத்துமா? என்ற பதிவில் மதங்களைப் பற்றிய அவரின் புரிந்து கொள்ளலை எழுதி இருந்தார், "எம்மதமும், கோட்பாடும் உலக மக்களை மேம்படுத்தாது" என்று எழுதி இருந்தது சரியல்ல;. மற்ற மதங்களைப் பற்றி சம்பந்தப்பட்டவர்கள் விரும்பினால் அவரின் கூற்றுக்கு எதிர்வினையாற்றலாம். இஸ்லாம் உலக மக்களை மேம்படுத்தியது, மேம்படுத்திக் கொண்டிருக்கிறது, மேம்படுத்தும் என்பதைச் சொல்லவே இப்பதிவு.//

சகோதரர் நல்லடியார் அவர்களே, மதம் உலக மக்களை மேம்படுத்துகிறாதா என்ற கேள்வியை எல்லா மதங்களுக்கும் பொதுவாகத்தான் எழுதி இருந்தேன். எந்த மதமாக இருந்தாலும் உலக மக்கள் அனைவரையும் மேம்படுத்த வேண்டும் என்ற பொருளில் சொல்லவில்லை, அப்படி பொதுக் கொள்கைக்கு வாய்ப்பே இல்லை என்பது தெரியும். நான் சொல்வது குறைந்த அளவாக அந்த மதத்தைப் பின்பற்றுவர்களையாவது மேம்படுத்துகிறாதா என்று கேட்பதாக எடுத்துக் கொள்ளலாம். அது எந்த ஒரு தனிப்பட்ட மதத்தையும் நோக்கிய கேள்வியே அல்ல. நீங்கள் என் கேள்வியை தவறாக புரிந்து கொண்டு இஸ்லாம் உலக மக்களை மேம்படுத்துவதாக எழுதி இருக்கிறீர்கள், இஸ்லாம் மதத்தை இஸ்லாமியர்கள் தவிர்த்து யாரும் ஏற்றுக் கொள்வதில்லை, எனவே நீங்கள் அதைப் பொதுப்படுத்தி எழுத முடியாது, நீங்கள் உங்கள் கருத்தாக 'இஸ்லாம் இஸ்லாமியர்களை மேம்படுத்துகிறது' என்றவகையாக பதிலிட்டு இருந்தால் பொருத்தமாக இருக்கும்.

//உலக மக்கள் அனைவருக்கும் ஏற்ற, எல்லாக் காலத்திற்கும் பொருத்தமான மார்க்கம் என்றால், உலகமக்களின் பிரச்சினைகளும் பொதுவானதாகவும் அதற்கான தீர்வுகள் எல்லாக் காலத்திற்கும் பொருத்தமானதாகவும் இருக்க வேண்டும்.உலக மக்களின் பிரச்சினைகளுக்கு இஸ்லாம் கூறும் தீர்வுகள் இப்படித்தான் இருந்து வருகின்றன.//

அப்படியெல்லாம் இருப்பதாக தெரியவில்லை. ஒவ்வொரு நாட்டின் பண்பாடு கலாச்சாரம் வேறு வேறு, சீனர்கள் பன்றி இறைச்சி இல்லாமல் ஒரு நாள் கூட இருக்கமாட்டார்கள், பெரும்பாலான இந்தியர்கள் மாட்டு இறைச்சியை உண்ணமாட்டார்கள், இவர்களெல்லாம் இஸ்லாமைப் பின்பற்ற வேண்டுமென்றால் தங்களது உணவு பழக்க வழக்கத்தைக் கூட மாற்றியாக வேண்டும், அடுத்து உடை, இஸ்லாமில் இருக்கும் உடைக்கட்டுப்பாடு உங்களுக்குத் தெரிந்ததுதான், இறை நம்பிக்கை என்பதற்காக தங்களது உடைப் பண்பாட்டையும் மாற்றிக் கொள்ள வேண்டும் என்ற நிர்பந்தம் இருந்தால் எந்த ஒரு சமூகம் உடனே முடிவெடுத்துவிடாது. ஆக இஸ்லாம் கொள்கைகள் அதனைச் சார்ந்திருப்பவர்களுக்குத்தானே அன்றி, உலகத்தில் இருக்கும் அனைத்து இறை நம்பிக்கையாளர்களுக்கும் பொதுவானது அல்ல. அடுத்தது காலம், மதங்கள் தோன்றிய காலமும் தற்போதைய காலமும் முற்றிலும் மாறுபட்டது, விரைவு வாழ்க்கைச் சூழலில் இருக்கிறோம். இஸ்லாமியர்களைப் பொறுத்த அளவில் பெண்களுக்கு ஆண்கள் மருத்துவம், மகப்பேறெல்லாம் பார்க்க முடியாது, இவையெல்லாம் உலகத்துக்கும் பொதுவான, காலத்துக்கு ஒவ்வும் கருத்துக்களா ?

//இஸ்லாத்தின் வழிகாட்டல்கள் கிறிஸ்தவத்தின் மேம்படுத்தப்பட்டவையே என்ற போதிலும் கிறிஸ்தவர்கள் பெயரளவில் மட்டுமே கிறிஸ்தவத்தைப் பின்பற்றுகிறார்கள். உதாரணமாக மது/போதை,விபச்சாரம் போன்றவை இரண்டிலுமே தடுக்கப்பட்டவை.கிறிஸ்தவர்கள் இதைப் பின்பற்றுவதில்லை. ஞாயிறு மற்றும் வெள்ளிக்கிழமை சிலமணி நேரங்களே கிறிஸ்தவர்களாக இருக்கிறார்கள்.!
//

உங்கள் மதத்தைப் பற்றி நீங்கள் உயர்வாக பேசும் உரிமை உங்களுக்கு உண்டு, பிற மதத்தினரைக் குறைச் சொல்ல உங்களை அவர்கள் அனுமதிக்கிறார்களா ? அல்லது நீங்களாக உரிமை எடுத்துக் கொள்கிறீர்களா? இஸ்லாமியர் எவரும் மது, போதை, பாலியல் தொழிலாளிகளிடம் செல்பவர்கள் இல்லையா ? நீங்கள் இஸ்லாமில் இருக்கும் அனைத்து கொள்கைகளையும் பின்பற்றுபவராக இருக்கலாம், ஆனால் அதே அளவுகோலில் எல்லா இஸ்லாமியர்களை எப்படி நினைத்துப் பார்க்கிறீர்கள், எனது இஸ்லாமிய நண்பர்களுக்கு மதுப்பழக்கம் இருக்கிறது, அவர்கள் இஸ்லாமியர்கள் இல்லை என்று நீங்கள் சொல்லுவீர்களா ? நான் சொல்ல மாட்டேன். பின்பற்றுதல், பின்பற்றாதது எல்லாமதத்தில் இருப்பவர்களிலும் சிலர் அல்லது பலர் கூட உண்டு. எல்லா நல்லக் கருத்துக்களுக்கும் தோன்றிய நாட்டிற்கு ஏற்றக் கருத்தாக அந்தந்த மத வேதப்புத்தகத்திலும் இருக்கும்.

//இஸ்லாமியத் தீர்வுகள்,மற்றவற்றைவிட எதார்த்தமாகவும் நியாயமாகவும் உள்ளன. ஒரு கன்னத்தில் அறைந்தவரிடம் மறுகன்னத்தைக் காட்டு என்பது கேட்பதற்கு இனிமையாக இருந்தாலும் உண்மையில் பாதிக்கப்பட்டவரின் உள்மனம் ஏற்காது. உலகலாவிய மார்க்கமென்றால்,அதன் வழிகாட்டல்களும் உலகமக்கள் அனைவருக்கும் பொதுவானவையாக இருக்க வேண்டும். எக்காலத்திற்கும் பொருத்தமான,தனிநபரால் மாற்ற முடியாதத் தீர்வாதாக இருக்க வேண்டும். உலகம் எதிர்கொண்டுள்ள நீண்டகாலப் பிரச்சினைகள் சிலவற்றையும் அவற்றிற்கு இஸ்லாம் கூறும் தீர்வுகளையும் பார்ப்போம்://

உலகளாவிய ? அதற்கு மேலேயே விளக்கம் சொல்லிவிட்டேன். ஒரு மதம் முதலில் தன்னை சார்ந்துள்ளவர்களை மேம்படுத்தினாலே போதும், உலகம் அமைதியாகிவிடும், இங்கே உலகளாவில் நடக்கும் மதச் சண்டைகளுக்குக் காரணம் ? உங்கள் மதமே மோசமானது என்கிற எதிர் எதிர் (இரு பக்க கோஷம்) குற்றச்சாட்டு தானே.

//கொலை,கொள்ளை, திருட்டு,இலஞ்சம், ஊழல், மது, சூது, விபச்சாரம், பொய், புறம்,அவதூறு/வீண்பழி ஆகியவை உலக மக்கள் அனைவருக்கும் பொது. ஏழை-பணக்காரர், முதலாளி-தொழிலாளி, கடனீந்தோர்-கடனாளி, நுகர்வோர்-வியாபாரி, வட்டி,கடன்,வியாபாரம், கொடுக்கல்-வாங்கல் ஆகிய பொருளியல் பிரச்சினைகளுக்கும் எக்காலத்திற்கும் பொருந்தும் நிரந்தர வழிகாட்டல்கள் இஸ்லாத்தில் உள்ளன. கற்பழிப்பு, வரதட்சணை, விவாகரத்து, சிசுக்கொலை, கருக்கலைப்பு போன்ற பெண்ணிய்ப் பிரச்சினைகளுக்கும் இஸ்லாத்தில் அழகியத் தீர்வுகள் உள்ளன.//

இந்திய இஸ்லாமியர்களுக்கு அரபு நாடுகளில் இருக்கும் கிரிமினல் சட்டங்களை அமுல் படுத்தினால் எத்தனை இஸ்லாமியர்கள் வரவேற்பார்கள் ? நீங்கள் வரவேற்பீர்களா / ஒரு நாட்டின் சட்ட அமைப்பு அந்த நாட்டி மக்களின் மன நிலையையும், குற்ற விகிதத்தையும் பொறுத்தது, ஒரே மாதிரி சட்டம் எந்த நாட்டுக்கும் பொருந்தாது. மரண தண்டனையைக் கூட ஒழிக்க வேண்டும், ஒழித்துவிட்டோம் என்று சில நாடுகள் சொல்லி வருகின்றன.

//எயிட்ஸை ஒழிக்க முடியாது. ஆனால், பரவலைத் தடுக்கலாம் என்று ஒப்புக் கொண்டுள்ளனர். தீர்வாக, ஆணுரை, கட்டுப்பாடுடன்கூடிய உடலுறவு என்ற தீர்வுகளைச் சொல்கிறார்கள்.கொள்ளிக்கட்டையால் முதுகு சொறியலாமா? தீவிரவாதம் குறித்து உலகநாடுகள் கவலை படுகிறார்கள். தீவிரவாதத்தை ஒழிப்பதற்குப் பயங்கரவாதத்தைக் கையால்கிறார்கள். //

நீங்கள் சொல்வது சரிதான், ஆனால் கருத்தடை சாதனங்களே குடும்பத்தில் இருப்பவர்களுக்கு பயன்படுத்தி குடும்பத்தின் அளவைக் குறைத்துக் கொள்ள இஸ்லாமும் சரி வாடிகனும் சரி அனுமதிக்கவில்லையே ? எய்ட்ஸ் வேறு, அது ஒழுங்கீன பிரச்சனை, அதை மதக் கொள்கைகள் அதனை தடுத்துவிடாது. காம உணர்வுகளும், அதற்கான வடிகாலும் அவரவர் தேர்ந்தெடுத்துக் கொள்வது அதன் விளைவை அவர்கள் அனுபவிக்கிறார்கள். எல்லாவற்றையும் மதமே தீர்மாணிக்கிறது நீங்கள் சொல்லலாம், ஆனால் நடைமுறைச் சாத்தியமில்லாதவைகள் எல்லாம் வெறும் கொள்கைகள் தான். கிட்டதட்ட நன்னெறி ஒழுக்கம் மாதிரி. படிக்க நன்றாக இருக்கும், செயலுக்கும், சூழலுக்கும் சரிவராது. உங்களைத் தாக்க வருபவரிடம் உடனடியாக எதிர்தாக்குதல் நடத்துவீர்கள், இல்லை என்றால் உங்களைக் காப்பாற்றிக் கொள்வீர்கள், அந்த நேரத்தில் நம் மதத்தில் இதற்கு என்ன தீர்வு சொல்லி இருக்கிறதென்று எவரும் பார்க்க மாட்டார்கள்.

//உலக வெப்பமயம், நதிநீர் பங்கீடு, நாடுகளுக்கு இடையேயான எல்லைப் பிரச்சினைகளுக்கு மதங்கள் காரணமல்ல;ஆட்சியாளர்களின் பொறுப்பற்றத் தன்மையும் பொருளாசையுமே காரணம்.சுருக்கக்கூறின் தனிநபர் பிரச்சினை முதல் சர்வதேசப் பிரச்சினைவரை,படுக்கையறை முதல் பாராளுமன்றம் வரை எல்லாவகையானப் பிரச்சினைகளுக்கும் இஸ்லாத்தில் தீர்வுண்டு. அதாவது,உலக மக்களை மேம்படுத்தும் தகுதி இஸ்லாத்திற்குச் சற்று அதிகமாகவே உள்ளது.//

உலக வெப்பம் மற்றும் ஏனைய பிரச்சனைகள் மக்கள் பெருக்கம், தொழிற்சாலைகள் மிகுந்தது, எலக்ட்ரானிக் கருவிகளைப் பயன்படுத்துவது, பொருட்களை மறுபயனீடு செய்யாதது போன்றவற்றால் ஏற்படுபவை, அது இயற்கைச் சீரழிவு, ஆனால் ஆன்றாடம் நடக்கும் மதம் தொடர்பான சண்டைகள், சர்வதேசப் பிரச்சனைகள் இவற்றிற்கெல்லாம் காரணம் பழமை வாதத்தில் திளைத்திருக்கும் மதவாதிகளே காரணம், இவைகள் அனைத்து மதவாதிகளாலும் ஏற்படுபவையே. இருமதத்தைச் சேர்ந்தவர்கள் திருமணம் செய்து கொள்ள முயன்றால் அவர்களின் திருமணத்திற்கு குறுக்கே நிற்பது எது ? படுக்கை அறைக்குச் செல்வதே பிரச்சனை ஆகிவிடுகிறதே.

*****

நான் இந்து மதத்தை முன்மொழிபவனாகவோ, எந்த மதத்தையும் உயர்த்தியோ இந்த இடுகையை எழுதவில்லை. நீங்கள் எழுதியவற்றிற்கு மறுமொழி மட்டுமே, முடிந்தால் பிறமதத்தைத் தொடர்ப்பு படுத்தாது பதில் அளியுங்கள், மேலும் உங்களின் புனிதமதமான ரமழான் மாதத்தில் இந்த பதிவை எழுதவும் எனக்கு விருப்பமில்லை. உங்களுக்கு கருத்துக்கு மாற்றுக் கருத்து என்ற முறையில் மட்டுமே எழுதினேன். நேரம் கிடைத்தால் அரசியலும் ஆன்மீகமும் ! - இதற்கும் சேர்த்தே பதில் அளியுங்கள். நீங்கள் மிக முதன்மையாக கருதி, வழிநடக்கும் (இறைநம்பிக்கை, வழிபாடு முறைகள் தவிர்த்த பிற) கொள்கைகளை சீர்தூக்கி இது இதெல்லாம் உலக மக்களுக்கு பொதுவானது என்று ஒரு பட்டியல் இடமுடியுமா ?


சுட்டிகள் :
அரசியலும் ஆன்மீகமும் ! - கோவி.கண்ணன்
மதங்கள் உலக மக்களை மேம்படுத்துமா ? - கோவி.கண்ணன்

மதங்கள் உலக மக்களை மேம்படுத்துமா? - நல்லடியார் (எதிரொலி)

7 கருத்துகள்:

Robin சொன்னது…

//இஸ்லாத்தின் வழிகாட்டல்கள் கிறிஸ்தவத்தின் மேம்படுத்தப்பட்டவையே என்ற போதிலும் கிறிஸ்தவர்கள் பெயரளவில் மட்டுமே கிறிஸ்தவத்தைப் பின்பற்றுகிறார்கள். உதாரணமாக மது/போதை,விபச்சாரம் போன்றவை இரண்டிலுமே தடுக்கப்பட்டவை.கிறிஸ்தவர்கள் இதைப் பின்பற்றுவதில்லை. ஞாயிறு மற்றும் வெள்ளிக்கிழமை சிலமணி நேரங்களே கிறிஸ்தவர்களாக இருக்கிறார்கள்.!
// இந்த கருத்துக்கு நான் பின்னூட்டம் இட்டிருந்தேன், ஆனால் வெளியிடப்படவில்லை. இந்த விஷயத்தை பொறுத்தவரை என்னுடைய கருத்துக்களும் உங்களுடையதும் ஒன்றே.

Robin சொன்னது…

//ஆனால் கருத்தடை சாதனங்களே குடும்பத்தில் இருப்பவர்களுக்கு பயன்படுத்தி குடும்பத்தின் அளவைக் குறைத்துக் கொள்ள இஸ்லாமும் சரி வாடிகனும் சரி அனுமதிக்கவில்லையே ? // - கிறிஸ்தவர்கள் எப்படி நடக்க வேண்டும் என்று வாடிகன் தீர்மானிக்க முடியாது. இந்தியாவில் கிறிஸ்தவர்களின் பிறப்பு விகிதம் மற்றவர்களை விட குறைவு என்பதை நினைவு படுத்த விரும்புகிறேன்.

KARMA சொன்னது…

அருமையான பதிவு.

நினைத்துப்பார்க்கிறேன். மற்றவர்களை மட்டம்தட்டாமல் தன் மதத்தில் உள்ள சிறந்த கருத்துக்களை எடுத்து வைப்பதில் என்ன சிரமம்?

சட்டம், நீதி என்பது புத்தகத்தில் இருந்தாலும் அதை interpret செய்வது ஒரு மனிதனே. அவனின் திறன் மற்றும் நல்லொழுக்கத்தை பொருத்தே நீதி தீர்மானிக்கப்படுகிறது.
இதில் எல்லா காலத்திற்கும், எல்லா மனிதர்க்கும் ஒரே சட்டம், அது ஒரு நூலில் எழுதியாகிவிட்டது, மாற்றங்கள் தேவைப்படாது என்பது விளையாட்டுத்தனமானது. அது பைபிள், பகவத்கீதை, குர்ரான் இன்னும் பிற எந்த நூலாக இருந்தாலும் சரி.

கோவியின் நடுநிலையான கருத்துக்களை வரவேற்கிறேன்.

செல்வன் சொன்னது…

தங்களின் கருத்தை அப்படியே வழிமொழிகிறேன்.

ரங்குடு சொன்னது…

மதங்கள் இல்லாமல் மக்கள் இருக்க முடியும். அவர்கள் நல்லவர்களாகவும்
இருக்க முடியும். ஆனால் மக்கள் இல்லாமல் மதங்கள் இருக்க முடியாது.
மத வெறி பிடித்தவர்கள் தான் தங்கள் மதமே உயர்ந்தது என்பது
மட்டுமில்லாமல், அடுத்த மதங்கள் தாழ்ந்தது என்றும் கூக்குரலிடு-
வார்கள்.

அத்திவெட்டி ஜோதிபாரதி சொன்னது…

பட்டதை...! மனசுக்குப் பட்டதை பட்டென்று சொல்லி இருக்கிறீர்கள்.
கவுண்டமனியைக் கேட்டால், சூப்பர் அப்பு என்று சொல்லியிருப்பார்!
எனக்கு வார்த்தைகள் கிடைக்காமல் நிராயுத பாணியாக நிற்கிறேன்.

நல்லடியார் சொன்னது…

பின்னர் விரிவாகப் உரையாடுவோம்!

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்