பின்பற்றுபவர்கள்

16 செப்டம்பர், 2008

மதங்கள் உலக மக்களை மேம்படுத்துமா ?

மதங்கள் இல்லாமல் மனிதன் இருக்க முடியாதா ? சிக்கலான கேள்வி தான்,

உலகம் ஐரோப்பிய நாடுகளையும் ஆசியாவையும் உள்ளடக்கி இருந்த போது, ஒன்றுக் கொன்று தொடர்பில்லாத காலகட்டங்களில், அந்தந்த பகுதி மக்களின் இறைக் கொள்கைதான் மதங்கள், அவற்றை கடவுள் அருளினாரா, அருள் வந்து எழுதிக் கொண்டார்களா ? என்பதை எல்லாம் பற்றி ஆய்வு கூடத் தேவையில்லை, ஏனெனில் அதெல்லாம் அதனைப் பின்பற்றுவோருக்கு இருக்கின்ற கவலை.

இவற்றின் பரவல்கள் தான் உலகத்தில் குழப்பங்களை ஏற்படுத்தவே தொடங்கியது, இந்தியா தவிர்த்து மங்கோலிய இனம் வாழும் தெற்காசியாவில் ஆசியாவில் ஒருங்கிணைக்கப் பட்ட மதம் என்று எதுவுமே இல்லாததால் பெளத்தம் அந்த நாடுகளில் வளர்ந்தது. அது போல் தான் மதமே இல்லாத (ஆப்பிரிக்க) நாடுகளில் தான் இஸ்லாம் மற்றும் கிறித்துவ மதங்கள் அந்நாடுகளின் மதாங்களாக மாறின. வளைக்குடாப் பகுதில் அனைத்தும் இஸ்லாமிய நாடுகளாக இருப்பதற்கு மற்றொரு காரணம் அவர்கள் இன அடிப்படையிலும் ஒன்றாக இருந்தனர்(உட்பிரிவு தவிர்த்து). இஸ்லாம் பற்றி இன்று கூட மேற்கத்திய நாடுகளால் அரபுக்களின் மதம் என்றும், கிறித்துவம் யூதர்களின் மதம் என்று தான் சொல்லப்படுகிறது.

மதங்களே இல்லாத நாட்டுக்கு ஒரு புதிய மதம் சென்றால் எதிர்ப்புகள் எதுவுமில்லாமல் அந்த மதம் அங்கே எளிதாக பரவிவிடும், மலேசிய மலாய் இனத்தினர் முற்றிலும் இஸ்லாமியர்கள் ஆனது, பிலிப்பைன்ஸ் பழங்குடிப்பிரிவினர் கிறித்துவத்தை தழுவியது இப்படித்தான்.

இந்தியாவில் கிறித்துவ மற்றும் இஸ்லாம் மதம் அவ்வாறு எளிதாக பரவ முடியவில்லை. முகலாய ஆட்சியின் மூலம் ஓரளவு பரவியது என்றாலும் விரும்பி மதம் மாறியவர்கள் குறைவாக இருக்கலாம். அந்த சமயத்தில் இந்திய சமயத்தினரிடம் இருந்த சாதி வேறுபாடுகள் கிறித்துவ மற்றும் இஸ்லாம் மதம் பரவலுக்கு வழிசெய்தது. மேலும் பெளத்த, சமண சமயங்களை உள்வாங்கிக் கொண்டு வளர்ந்தது போல் இந்துமதத்தால் இவ்விரு மதங்களையும் உள்வாங்க முடியவில்லை, ஏனெனில் இவை இரண்டும் வெளியிலிருந்து வந்தவை முற்றிலும் மாறுபட்ட சமய நம்பிக்கை, கொள்கைகளைக் கொண்டவை.

எந்த மதத்தை எடுத்துக் கொண்டாலும், வழிபாடு முறைகள், அதன் மீது ஆளுமை செலுத்துபவர்கள் என அது தோன்றிய இடத்தைச் சேர்ந்ததாகவே இருக்கும் ( இதுவரை ஐரோப்பியர் அல்லாதவர் போப் ஆண்டவராக வந்ததே இல்லை), பார்ப்பனர் தவிர்த்து இந்து மதத்தின் ஒரு பிரிவாகிய சன்யாசிகளின் சமயத்தில் யாரும் சங்கராச்சாரியார் ஆகமுடியாது. சங்கராச்சாரியார் இந்துமதத்தை கட்டுப்படுத்துபவரோ, தலைவரோ இல்லை என்பது வேறு விடயம்.

இன்றைக்கு எந்த மதமாக இருந்தாலும் அவை செயல்படும் இடங்கள்:

1. அரசியல் தலையீடு
2. பிரிவினை வாதம்

இவைதான் மதங்களின் நோக்கம் என்பதாக வளர்ந்து நிற்கிறது. நோக்கத்திற்கு செலவிடப்பட, வளர்க்க நம்பிக்கையாளர்களின், இறைப்பற்றாளர்களின் இறை நம்பிக்கைத்தான் உரம்.

எந்த மதமும், எந்த மதக் கொள்கைகளும் உலக மக்கள் அனைவரையுமே உய்விக்க முடியாது, ஏனெனில் உலக மக்களின் பண்பாடு மற்றும் கலாச்சாரம் ஆகியவற்றில் ஒரு இனத்துக்கு மற்ற இனம் முற்றிலும் மாறுபட்டது, மதவழி மூலம் வழிபாடுகள் முறைகள், வாழ்வியல் கட்டுப்பாடுகள் பிற இனக்கலாச்சாரத்திற்கு முற்றிலும் மாறுபட்டவை.

மதங்கள் நில அமைப்பின் அரசியலையும், அந்த பகுதி இறை நம்பிக்கை, இறைக் கொள்கையை ஒட்டி ஏற்பட்டவை, முழுவுலகத்துக்குமான ஒரே மதம் ? இவை எந்த காலத்திலும் ஏற்பட முடியாத ஒன்று. மதங்கள் தோன்றிய காலத்தில் ஒரு கண்டத்திலிருந்து மற்றொரு கண்டத்திற்கு புலம் பெயர்ந்தவர்களும் குறைவே. இன்று இருப்பது போல் உலக மக்கள் அனைவரும் எப்போதும் இடம் பெயர்ந்து கொண்டிருந்தால், உலமக்களுக்காகவே தோன்றியதாகச் சொல்லப்படும் அந்தந்த மதங்களில் அனைத்து மக்களை உள்ளடக்கிய வழிபாட்டு முறைகள், வாழ்வியல் நெறிகள் இருந்திருக்க வேண்டும். எந்த ஒரு மதத்திலும் அந்த தன்மை கிடையாது.

திணித்தல், திரித்தல், வலியுறுத்தல் ஆகிய முக்கொள்கையளால் 20 நூற்றாண்டின் ஆரம்பங்களியேலேயே மதங்கள் ஆட்டம் காண ஆரம்பித்துவிட்டன.

மதங்களின் வளர்ச்சியால், பரவலால் பாழாகியது அரசியல் மட்டுமல்ல, இறை நம்பிக்கையும் சேர்ந்தே தான்.

14 கருத்துகள்:

கிருஷ்ணா சொன்னது…

அருமையான பதிவு..

Krishna

VIKNESHWARAN சொன்னது…

மறுபிறப்பு எனும் மிரட்டலை அல்லது வார்த்தையை எடுத்துவிட்டால் இந்து மதம் அழிந்துவிடும் என்பது என் கருத்து. என்ன சொல்கிறீர்கள்.

சரவணகுமரன் சொன்னது…

ஏதோ விபத்தாமே? விரைவில் குணமடைய வாழ்த்துக்கள்.

அறிவகம் சொன்னது…

// மதங்களின் வளர்ச்சியால், பரவலால் பாழாகியது அரசியல் மட்டுமல்ல, இறை நம்பிக்கையும் சேர்ந்தே தான்.//

இறை நம்பிக்கை பாழாகியதை கூட ஒரு விதத்தில் ஜீரணித்துவிடலாம். இந்தியாவில் ஆன்மீககலைளை அடியோடு பாழாக்கிவிட்டதே மதங்கள் மன்னிக்கவும் மதவியாபாரிகள்.

பதிவர் திரு. அறிவன் தனது நட்சத்திர வாரத்தில் 64 கலைகள் குறித்து அரு¬மாக குறிப்பிட்டிருந்தார். அந்த கலைகள் இன்று இருக்கும் கோலம் என்ன?

இப்போது கூட இந்தியாவில் மதங்களை கலாச்சாரமும், கலாச்சாரத்தை பண்பாடும் தான் வென்றிருக்கிறது. ஆனால் சில மன்னிக்கவும் பல மதவியாபாரிகள் மதத்தையும் சிதைப்பதோடு மானுடத்தையும் சிதைக்கிறார்கள்.

மதத்தை குற்றம் சொல்வதை விட இங்கு மதவியாபாரிகளை குற்றம் சொன்னால் சரியாக பொருந்தும் என நினைக்கிறேன்.

மதம் வேண்டாம் என்பதில் எனக்கு உடன்பாடில்லை. மதவியாபாரம் தான் கூடாது. நன்றி.

கோவி.கண்ணன் சொன்னது…

//மதம் வேண்டாம் என்பதில் எனக்கு உடன்பாடில்லை. மதவியாபாரம் தான் கூடாது. நன்றி.//

அறிவகம் அவர்களே,

இன்றைய சூழலில் மதத்தையும் மதவியாபாரிகளையும் வேறாக உங்களால் பிரித்துப் பார்க்க முடிகிறதா ?

வேதபுத்தகம் என்னும் மூலதனத்தை வைத்து தானே மதவியாபாரம் நடந்துவருகிறது ?

மதநோக்கம் இறை நம்பிக்கை ஊட்டுவது என்கிற நோக்கமெல்லாம் எப்போதோ செத்துவிட்டது.

இரண்டே இரண்டுதான் அவற்றின் நோக்கம்
1. அரசியல் தலையீடு
2. பிரிவினை வாதம்

அரசியல் தலையீடு இல்லாமல் அவர்களால் மதத்தைக் கட்டிக்காக்க முடியாது, பிரிவினை வாதமின்றி அவர்களால் மதத்தை வலிமையுடையதாக ஆக்க முடியாது

கோவி.கண்ணன் சொன்னது…

//VIKNESHWARAN said...
மறுபிறப்பு எனும் மிரட்டலை அல்லது வார்த்தையை எடுத்துவிட்டால் இந்து மதம் அழிந்துவிடும் என்பது என் கருத்து. என்ன சொல்கிறீர்கள்.

1:01 PM, September 16, 2008
//
விக்கி,
இந்து மதத்தில் மறுபிறப்பு மிரட்டல் என்றால் மற்ற மதங்களில் நிரந்தர சொர்க நரக மிரட்டல், எல்லாமும் ஒன்று தான். மரணபயம் இருக்கும் வரை மதங்களின் பயணம் தொடரவே செய்யும்.

கோவி.கண்ணன் சொன்னது…

//சரவணகுமரன் said...
ஏதோ விபத்தாமே? விரைவில் குணமடைய வாழ்த்துக்கள்.

1:13 PM, September 16, 2008
//

சரவணகுமரன்,

சிறுவிபத்துதான், லேசான வலி இருக்கிறது, ஒருவாரத்தில் சரியாகிவிடும். அன்புக்கு மிக்க நன்றி !

கோவி.கண்ணன் சொன்னது…

///கிருஷ்ணா said...
அருமையான பதிவு..

Krishna
//

கிருஷ்ணா நன்றி !

ஜோ / Joe சொன்னது…

நல்ல பதிவு.

//கிறித்துவம் யூதர்களின் மதம் என்று தான் சொல்லப்படுகிறது.//

அப்படியா ? இது எனக்கு புதிய செய்தி .இயேசு யூதரே தவிர ,யூதர்கள் அவரை ஏற்றுக்கொள்ளவில்லை .யூதர்களின் மதம் யூத மதம் .கிறிஸ்தவ மதம் அல்ல.

ஜோசப் பால்ராஜ் சொன்னது…

//எந்த மதத்தை எடுத்துக் கொண்டாலும், வழிபாடு முறைகள், அதன் மீது ஆளுமை செலுத்துபவர்கள் என அது தோன்றிய இடத்தைச் சேர்ந்ததாகவே இருக்கும் ( இதுவரை ஐரோப்பியர் அல்லாதவர் போப் ஆண்டவராக வந்ததே இல்லை), //

அண்ணா, கிறிஸ்தவ மதம் தோன்றிய இடம் என்றுப் பார்த்தால் அது இஸ்ரேல் நாட்டில் தான். யேசு பிறந்தது, வாழ்ந்தது, மரித்தது எல்லாம் அங்கு தான். ஆனால் தலைமையிடம் இருப்பது வத்திகனில். இஸ்ரேல் ஐரோப்பியா கிடையாது.

எல்லா மதங்களும் இன்று தீவிரமான அரசியலால் தான் பீடிக்கப்பட்டுள்ளன எனும் கருத்தை வரவேற்கிறேன்.

கிறிஸ்தவ பாதிரியார்களை எடுத்துக் கொள்ளுங்கள், தமிழகத்தில் எல்லா இடங்களிலும் சாதி ரீதியாய் மோதிக் கொள்கின்றார்கள். இதை என்ன செய்வது? கடவுளுக்கு சேவை செய்ய என்று வாழ்க்கையை அர்பணிக்கும் இவர்களுக்குள் எதற்கு சாதி பிரிவினை? ரொம்ப கேவலமான செயல்பாடுகள் அவை. இப்படி இவர்கள் வெளியில் மோதிக்கொண்டும், சண்டையிட்டுக் கொண்டும் இருந்துவிட்டு வழிபாடுகளை நடத்த வந்தால் எப்படி அதில் மனம் ஒன்றும் நமக்கு ? நான் மனம் விரும்பி ஆலயத்திற்கு செல்வது வழிபாடு இல்லாத நேரங்களில் தான். வழிபாடுகளில் எனக்கு நம்பிக்கை சுத்தமாக போய்விட்டது. பெற்றோர் மற்றும் வீட்டாரின் கட்டாயத்தால் அவர்கள் மனம் புண்படாதிருக்க சில சமயம் செல்வதுண்டு.

ஆனால் எனக்கு கடவுள் நம்பிக்கை மிகுதியாய் உண்டு.

இறைவனின் கட்டளைகளில் எது மிக உயர்வானது என ஒருவன் யேசுவிடம் கேட்டபோது அவர் சொன்னது நீ உன்னையே நேசிப்பதைப்போல் உன் அயலானை நேசி என்று. அதை கடைபிடிக்கத்தான் நான் பெருமளவில் முயற்சிக்கிறேன்.

கோவி.கண்ணன் சொன்னது…

// ஜோ / Joe said...
நல்ல பதிவு.//

பாராட்டுக்கு நன்றி !

//அப்படியா ? இது எனக்கு புதிய செய்தி .இயேசு யூதரே தவிர ,யூதர்கள் அவரை ஏற்றுக்கொள்ளவில்லை .யூதர்களின் மதம் யூத மதம் .கிறிஸ்தவ மதம் அல்ல.

1:44 PM, September
//

'Religion of Europe' என்று சொல்லலாமா ?
:)

கோவி.கண்ணன் சொன்னது…

//ஆனால் எனக்கு கடவுள் நம்பிக்கை மிகுதியாய் உண்டு. //

அதுல தவறே இல்லை, மத உணர்வு தவிர்த்து இறையுணர்வு, உள்ளுணர்வு, மெய்யுணர்வு எல்லாம் ஒன்றுதான்.

//இறைவனின் கட்டளைகளில் எது மிக உயர்வானது என ஒருவன் யேசுவிடம் கேட்டபோது அவர் சொன்னது நீ உன்னையே நேசிப்பதைப்போல் உன் அயலானை நேசி என்று. அதை கடைபிடிக்கத்தான் நான் பெருமளவில் முயற்சிக்கிறேன்.//

எல்லா மதத்திலும் அடி நாதம் 'அன்பு' இது அடிப்பட்டு போய்விட்டது.

புத்த மதத்தில் "அன்புதான் இன்ப ஜோதி, அன்புதான் இன்ப ஊற்று, அன்புதான் உலக மகா சக்தி"

என்பவை புகழ்பெற்ற வாக்கியங்கள்,,

இலங்கையில் பெளத்த மதத்தினரிடையே இவை இல்லை.

1:47 PM, September 16, 2008
//

கிருஷ்ணா சொன்னது…

//மத உணர்வு தவிர்த்து இறையுணர்வு, உள்ளுணர்வு, மெய்யுணர்வு எல்லாம் ஒன்றுதான்//

//அரசியல் தலையீடு இல்லாமல் அவர்களால் மதத்தைக் கட்டிக்காக்க முடியாது, பிரிவினை வாதமின்றி அவர்களால் மதத்தை வலிமையுடையதாக ஆக்க முடியாது
//

//எல்லா மதத்திலும் அடி நாதம் 'அன்பு' இது அடிப்பட்டு போய்விட்டது.

புத்த மதத்தில் "அன்புதான் இன்ப ஜோதி, அன்புதான் இன்ப ஊற்று, அன்புதான் உலக மகா சக்தி"

என்பவை புகழ்பெற்ற வாக்கியங்கள்,,

இலங்கையில் பெளத்த மதத்தினரிடையே இவை இல்லை.
//

அருமை.

உங்களுடைய எழுத்துக்கள் என் பகுத்தறிவை மேலும் கூா்மையாக்குகிறது.

Krishna

கோவி.கண்ணன் சொன்னது…

//அருமை.

உங்களுடைய எழுத்துக்கள் என் பகுத்தறிவை மேலும் கூா்மையாக்குகிறது.

Krishna//

கிருஷ்ணா,
மீண்டும் வந்து படித்துப் பாராட்டுவதற்கு நன்றி

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்