பின்பற்றுபவர்கள்

8 அக்டோபர், 2007

சில 'வெளிப்படையான' எண்ணங்கள் !

மனித மனம் பலவகை, அதில் சிலர், "சார், நான் எதையும் மறைக்க மாட்டேன், மனசுல வச்சிக்க தெரியாது சார் ! உள்ளே ஒண்ணு வச்சு, வெளியே ஒண்ணு வச்சு பேசறதெல்லாம், சுட்டுப் போட்டாலும் எனக்கு வரவே வராது சார்" என்று சொல்லுவார்கள். கேட்கிறவர்களுக்கு 'இவர், ஹரிசந்திரனுக்கு ஒண்ணு விட்ட தம்பியோ ?' ன்னு நினைக்கத் தோன்றும் :)

இது போன்ற ஆசாமிகள் உண்மையிலேயே வெகுளித்தனமானவர்களா ?, பரந்த மனப்பான்மையானவர்களா ? என்று பார்த்தால் பெரும்பாலும் 'இடம், பொருள், ஏவல்' அறிந்து பேச வேண்டிய / தவிர்க்க வேண்டிய இடத்தில் அங்கெல்லாம் உண்மையோ, அல்லது இவர்களே உண்மை என்று கருதிக் கொண்ட அனுமானமோ உளரிக் கொட்டுவார்கள்

'நம்ம வீட்டுக்கு நாமளே கூப்பிட்டு இருக்கிறோம், அவர்களிடம் போய், இப்படி வெளிப்படையாக கேட்டு வைத்து ஏன் அவமானப்பட்டுத்த வேண்டும் ?' என்று ஒரு மனைவியோ, கணவனோ சென்சீடிவ் பிரச்சனைகளை கிளரியவரைப் பார்த்து கேட்கும் போது, 'எனக்கு எதையும் மனசில் வச்சிக்கத் தெரியாது என்று சொல்வது வெகுளியான பதிலா ?

நன்று பழகியவராக கூட இருக்கும், "சார் என் செல்போனைக் காணும், உங்க மேசை டிராயரை செக் பண்ணனும் கொஞ்சம் திறந்து காட்டுகிறீர்களா ?" அவர் முறைத்தால், " மனசில ஒன்னு வச்சிக்கிட்டு பேச தெரியாது, தப்பா எடுத்துக் கொள்ளாதீர்கள்" என்று சொல்வது வெளிப்படையா ? வெகுளித்தானமா ? இதன் பெயர் சந்தேக புத்தி, நெருங்கிய உறவாக இருந்தாலும் சரி, இப்படி உள்ளவர்கள் நெருக்கத்தின் உணர்வுகளை புரிந்து கொள்ள மாட்டார்கள். பதிலுக்கு கோபப்பட்டால் தாம் வெளிப்படையாக பேசுவதாக சொல்லுவார்கள். 'உண்மை என்பது தாம் நம்புவதாகவே இருக்க வேண்டும் !' என்று நினைப்பதன் வெளிப்படை அது :).

இன்னும் சிலர் சற்று விநோதமானவர்கள், "நீ மோசமானவனிடம் பழகுகிறாய், அதானால் நீயும் மோசமானவன் தான்" என்று வெளிப்படையாக சொல்லுவார்கள். ஆனால் இவர்கள் தம்மை நல்லவராகத்தானே நினைக்கிறார்கள், இவர்களிடமும் பழகுவதால் ஏன் நல்லவனாக இவர்களால் நினைக்க முடியவில்லை ? தமக்கு சாதகமாக நடந்து கொள்ளவில்லை என்ற ஆதங்கத்தில் எழும் வெளிப்படையான மனநிலை.

சில மேதாவிகள், "நான் வெளிப்ப்படையாக சொன்னது தவறாக கூட இருக்கலாம், இருந்தாலும் நீங்க அப்படி நடந்து கொள்ளக் கூடியவர் தானே" என்று தம் 'வெளிப்படை' உளரல், தவறென்று நிரூபணம் ஆனதும் சமாளிப்பர்.

நாகரீகமாக பொதுநலம் கருதி சிலவற்றை தவிர்ப்பதென்பது உண்மையை மறைப்பது என்ற பொருளல்ல, தவிர்த்தல் வேறு, மறைத்தல் வேறு இரண்டுக்கும் ஒரு நுண்ணிய வேறுபாடு உண்டு. தவிர்த்தல் என்றால் இங்கு இது தேவையற்றது என்று உணர்ந்து அது குறித்து பேசாதிருப்பது. மறைத்தல் என்பது இதை இங்கு சொல்வதால் எங்கே சிக்கல் ஆகிவிடுமோ என்று கருதி சொல்ல வேண்டிய இடத்தில் சொல்லாமல் மறைப்பது. எதையும் பொது இடத்தில் அல்லது ஒருவரை சுட்டிச் சொல்லும் போது, விளைவுகளை முன்கூட்டி அறிதல் என்னும் பகுத்தறிவின் துணை கொண்டு, இந்த இடத்தில் இதை சொன்னால் விவகாரம் ஆகுமோ என்று சிரிதேனும் நினைத்துப் பார்க்க வேண்டும்.

பொய்மையும் வாய்மையிடத்த புரை தீர்ந்த
நன்மை பயக்கும் எனில்


இது பெரும்பாலும் நடைமுறையில் இருக்கிற பொருளைப் பார்த்தால், 'தமக்கு நன்மை பயக்குமெனில்' என்று தன்நலம் கருதும் இடத்திலெல்லாம் பொய் மெய்யாக்கபடுகிறது.

வெளிப்படையான பேச்சு நல்லதுதான், ஆனால் அது எவரையும் காயப்படுத்துவதாகவே, அவமானப்படுத்துவதாகவே இருக்கக் கூடாது. அப்படி இருப்பவர் வெகுளியானவர். அப்படி இல்லாத பேச்சுக்கள் அசட்டுத் தனமானவை, பிறரை புரிந்து கொள்ளவோ, மதிக்கவோ விரும்பாதவார்களின் வெளிப்படையான பேச்சுக்கள் நாகரீகமற்றவைகள். பெரும்பாலும் இத்தகைய வெளிப்படை சில சமயங்களில் தன் நலம் சார்ந்தும், அதிமேதாவியாக காட்டிக் கொள்ளவும் நடத்தும் அறிவிலித்தனங்கள்.

சாதுக்கள் என்ற சொல்லின் புனித தன்மையை தனக்கு அடையாளமாகக் காட்டிக் கொள்ளும் போலி சாமியார்களைப் போலவே, 'வெளிப்படையானவர்' என்று தம்மை அறிவித்துக் கொள்பவர் பெரும்பாலும், 'வெளிப்படையானவர்' என்ற உரிச்சொல்லின் மதிப்புக்கு ஆசைப்படும் உள் நோக்காளர்களாவே இருக்கிறார்கள்.

வெளிப்படையாக இருக்கும் எவரும் தன்னைப் பற்றி ஒருபோதும் 'தாம் வெளிப்படையானவர்' என்று சொல்லிக் கொள்ள மாட்டார், 'பேச வேண்டிய இடத்தில் தாம் நினைத்ததை தயங்காமல் சொல்லுபவர்' என்று அவரை அறிந்த பிறர் தான் அவரை 'வெளிப்படையானவர்' என்று அடையாளப்படுத்துபவர்.

சிலர் உண்மையிலேயே வெகுளித்தனமாக இருப்பார்கள் அவர்கள் எப்போதுமே அப்படி இருப்பவர்கள். அவர்கள் தமக்கே பிரச்சனையாக முடியும் என்று கூட அறியாது சொல்லுபவர்கள்.

பல இடங்களில், பலரின் வெளிப்படையான பேச்சுக்கள் என்பது முதிர்வற்றதின் தன்மை, சுயநல வெளிப்பாடு, மேதாவித்தனம் போன்று பல பரிணாமங்கள் கொண்டது.

--
அன்புடன்,

கோவி.கண்ணன்

19 கருத்துகள்:

துளசி கோபால் சொன்னது…

நல்ல பதிவு.

எனக்கு உண்மையை மறைச்சு வைக்கத் தெரியாதுங்க:-) அதான் வெளிப்படையா இது நல்லபதிவுன்னு சொல்லிட்டேன்.

ரவி சொன்னது…

அப்போ கோவி.கண்ணன் எப்படி ? வெளிப்படையானவரா ? வெகுளித்தனமானவரா ? அல்லது பொய்மையும் வாய்மையிடத்து குறளை நூல் பிடித்து பாலோ செய்பவரா ?

கோவி.கண்ணன் சொன்னது…

//துளசி கோபால் said...
நல்ல பதிவு.

எனக்கு உண்மையை மறைச்சு வைக்கத் தெரியாதுங்க:-) அதான் வெளிப்படையா இது நல்லபதிவுன்னு சொல்லிட்டேன்.
//

வாங்கம்மா,

உங்க வெளிப்படையான பாராட்டுக்கு எனது வெளிப்படையான நன்றி !
:)

கோவி.கண்ணன் சொன்னது…

//செந்தழல் ரவி said...
அப்போ கோவி.கண்ணன் எப்படி ? வெளிப்படையானவரா ? வெகுளித்தனமானவரா ? அல்லது பொய்மையும் வாய்மையிடத்து குறளை நூல் பிடித்து பாலோ செய்பவரா ?
//

செந்தழலாரே,

என்னப்பற்றி நானே சொன்னால், எனது இடுகையில் சொல்லி இருப்பது '?' ஆகிடும்.
:)

தொடர்பில்லாத இடத்தில் உண்மையும், பொய்யும் கூட தேவையற்றது. எனவே அங்கெல்லாம் நான் அந்த திருக்குறளை பயன்படுத்துவதில்லை.
:)

VSK சொன்னது…

பொது இடத்திற்கு நீங்கள் சொல்வது சரியே!

தனிப்பட்ட முறையில் பரிமாறிக் கொள்ளும் கருத்துகளையும் இந்த லிஸ்டில் சேர்க்கும் போது, அவரவர் குணநலன் வெளிப்படுகிறது என்பது என் கருத்து.

கொஞ்சம் வரையறுத்தால் நலம்.

செல்ஃபோன் காணமல் போனவரின் மனவருத்தத்தைப் புரிந்து கொள்ளாது,
"என்னைப் போயி இப்படிக் கேட்டுட்டானே!' என முறைப்பது புரிதலற்ற செயல் எனவே கருதுகிறேன்.

நன்றாகப் பழகியவர் என்பதைக் கருத்தில் கொள்ளாத செயல் இது.

கோவி.கண்ணன் சொன்னது…

கோவி.கண்ணன் said...
//VSK said...
பொது இடத்திற்கு நீங்கள் சொல்வது சரியே!

தனிப்பட்ட முறையில் பரிமாறிக் கொள்ளும் கருத்துகளையும் இந்த லிஸ்டில் சேர்க்கும் போது, அவரவர் குணநலன் வெளிப்படுகிறது என்பது என் கருத்து.//

வீஎஸ்கே ஐயா,

தனிப்பட்ட முறையில் எவரைப் பற்றியும், பரிமாறிக் கொள்ளும் கருத்துக்கள் எதையும் இங்கே சொல்லவில்லை. இங்கு சொல்லி இருப்பது பலருக்கும் நேரும் பொதுவான நிகழ்வு. நிகழ்ச்சி வேறுபடலாம். ஆனால் நிகழ்வின் தன்மை ஒன்றே தான். தனிப்பட்ட முறையில் உள்ளதை சொல்லி இருந்தால் நான் எழுதிய இடுகை என்னாலேயே கொச்சைப்படும் !
:)


//செல்ஃபோன் காணமல் போனவரின் மனவருத்தத்தைப் புரிந்து கொள்ளாது,
"என்னைப் போயி இப்படிக் கேட்டுட்டானே!' என முறைப்பது புரிதலற்ற செயல் எனவே கருதுகிறேன்.//

மனவருத்தம் யாரை வேண்டுமானாலும் சந்தேகம் கொள்ளலாம் என்ற வரையரையில் கட்டிய மனைவியையும், உற்ற நண்பரையும், நன்கு பழகியவரையும் சந்தேகப்படுவது என்பது என்னைப் பொருத்து தவறு என்றும் அது அன்பை கொச்சைப்படுத்துவதும் என்று சொல்வேன்.

நீங்கள் 'புரிதலற்ற செயல்' என்று சொல்வது உங்கள் புரிதல் அனுபவமாக கூட இருக்கலாம். பொருமைசாலிகள் அப்படி இருப்பார்களோ. ஆராய்ச்சிக்கு உரியது.

ஒருவேளை 'இவர் இப்படித்தான்' என்று நினைப்பவர்கள் தவறாக நினைக்க மாட்டார்கள் என்றே நினைக்கிறேன்.

//
நன்றாகப் பழகியவர் என்பதைக் கருத்தில் கொள்ளாத செயல் இது.

இடுகையில் சொல்லி இருப்பதும் இதேதான். மிக்கநன்றி !
//

இறக்குவானை நிர்ஷன் சொன்னது…

வெளிப்படையா பேசினாலும் இடம்,பொருள்,காலம் அறிந்து பேசுவது எப்போதும் நல்லது தானே கண்ணன்?

இறக்குவானை நிர்ஷன் சொன்னது…

வெளிப்படையாக பேசுவது நல்லதுதான். ஆனாலும் இடம்,பொருள்,காலம் அறிந்து பேசுவது எப்போதும் நல்லதுதானே கண்ணன்?

கோவி.கண்ணன் சொன்னது…

//இறக்குவானை நிர்ஷன் said...
வெளிப்படையா பேசினாலும் இடம்,பொருள்,காலம் அறிந்து பேசுவது எப்போதும் நல்லது தானே கண்ணன்?//

இறக்குவானையாரே முதல் வருகைக்கு நன்றி !

வெளிப்படை பேச்சுக்கள் நல்லதே ! இடம் பொருள் காலம், மற்றும் அங்கு நிலவும் உணர்வும் அறிந்தே பேசவேண்டும்.

உதாரணத்திற்கு சாவு வீட்டில் துக்கத்தில் இருப்பவர்களிடம் செத்துப் போனவரைப் பற்றிய உண்மைகளை அவை மோசமானவையாக இருந்தால் பேசுவதை முற்றிலுமே தவிர்க்க வேண்டும்

VSK சொன்னது…

"நீதான் எடுத்திருப்பே!" எனச் சொல்வது சந்தேகபுத்தி.

"உன் டிராயரையும் ஒரு பார்வை பார்த்திரலாமா, இல்லே நீயே பார்துட்டு சொல்லு" எனக் கேட்பது,
பறிகொடுத்தவரின் பரிதவிப்பே!

இதப் புரிந்து கொள்ளாமல், 'என் மேல சந்தேகப் பட்டுட்டானே' என ஆத்திரமோ, மனவருத்தமோ கொள்வது, சரியில்லை எனவே நான் எண்ணுகிறேன்.

அதுவும் இது தனிப்பட்ட முறையில் மட்டும் நிகழ முடியும் என்பதால்.

மாறாக, இதை வெளியில் போய் சொல்லிக்கொண்டு திரிவானானால், பறிகொடுத்தவனின் நோக்கம் தவறாகிறது அங்கே!

அது நிகழாத வரை, இதில் குறை சொல்ல ஒன்றும் இல்லை எனவே கருதுகிறேன், கோவியாரே!
:))

லக்கிலுக் சொன்னது…

தலைப்பு சூப்பர் நல்லவரே!

கோவி.கண்ணன் சொன்னது…

//VSK said...
"நீதான் எடுத்திருப்பே!" எனச் சொல்வது சந்தேகபுத்தி.

"உன் டிராயரையும் ஒரு பார்வை பார்த்திரலாமா, இல்லே நீயே பார்துட்டு சொல்லு" எனக் கேட்பது,
பறிகொடுத்தவரின் பரிதவிப்பே!

இதப் புரிந்து கொள்ளாமல், 'என் மேல சந்தேகப் பட்டுட்டானே' என ஆத்திரமோ, மனவருத்தமோ கொள்வது, சரியில்லை எனவே நான் எண்ணுகிறேன்.

அதுவும் இது தனிப்பட்ட முறையில் மட்டும் நிகழ முடியும் என்பதால்.

மாறாக, இதை வெளியில் போய் சொல்லிக்கொண்டு திரிவானானால், பறிகொடுத்தவனின் நோக்கம் தவறாகிறது அங்கே!

அது நிகழாத வரை, இதில் குறை சொல்ல ஒன்றும் இல்லை எனவே கருதுகிறேன், கோவியாரே!
:))
//

விஎஸ்கே ஐயா,

எனது கருத்துக்களை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று நான் வலியுறுத்தவில்லை.

'வெளிப்படை' பேச்சின் சில நிகழ்வுகளைச் சுட்டினேன். நீங்கள் குறித்துக் காட்டி இருப்பதில் சொல்லி இருப்பது நெருங்கியவர்களை சந்தேகம் கொள்ளலாமா ? என்ற பொருளில் கேட்டு இருக்கிறேன்.

செல்போன் போனால் கிடைக்காமல் போகலாம், இல்லையேல் புதிதாகக் கூட வாங்கிக் கொள்ள முடியும்.

சீதையை சந்தேகம் கொண்ட இராமன் உயர்ந்தவனாக நினைக்கலாமா ? என்ற கேட்டால் நம் ஊரில் அப்படியும் நினைக்கலாம் என்ற கருத்தும் இருக்கிறது. எனவே உங்கள் பார்வையிலான கருத்தையும் நான் மதிக்கிறேன்.

கோவி.கண்ணன் சொன்னது…

//லக்கிலுக் said...
தலைப்பு சூப்பர் நல்லவரே!
//

லக்கி சார்,

தலைப்பு தாங்க அப்படி, எதையுமே வெளிப்படையாக சொல்லுவது அவ்வளவு நல்லதல்ல என்றும் கருத்து இருக்கு, தலைப்பை மட்டும் தானே படித்தீர்கள் ?
:)

உண்மைத்தமிழன் சொன்னது…

கோவி ஸார்,

வெளிப்படையாகப் பேசுவதால் சில சமயங்களில் நம்மை மீறி நமக்கு நாமே சொந்தச் செலவில் சூனியம் வைத்துக் கொள்ள நேரிடும். மிகச் சிறந்த உதாரணம் நான்தான்..

ஆரம்பக் காலங்களில் என்னை செல்போனில் தொடர்பு கொள்ளும் பதிவர்கள் அனைவரிடமும் என்னைப் பற்றி முழுமையாக நானே தயக்கமே இல்லாமல் சொல்லித் தொலைத்தேன். கூடுதலாக நான் எப்பவுமே இப்படித்தானாக்கும் என்று பெருமையை வேறு ஜம்பமாக அடித்துக் கொண்டேன்.

விளைவு.. உங்களுக்கே தெரியுமே..?

இன்றைக்கு யாரிடமும் பேசவே கூடாது என்ற நிலையில் உள்ளேன்..

சூழ்நிலைக்கு ஏற்றாற்போல் நடந்து கொண்டு எப்போதுமே வெளிப்படையாகவே இருக்கக்கூடாது. ஒவ்வொருவருக்கும் ஒரு முகமூடி கட்டாயமாக இருக்க வேண்டும். அது வாழ்க்கையாக இருந்தாலும் சரி வலைப்பதிவாக இருந்தாலும் சரி..

கோவி.கண்ணன் சொன்னது…

//உண்மைத் தமிழன்(15270788164745573644) said...
கோவி ஸார்,

வெளிப்படையாகப் பேசுவதால் சில சமயங்களில் நம்மை மீறி நமக்கு நாமே சொந்தச் செலவில் சூனியம் வைத்துக் கொள்ள நேரிடும். மிகச் சிறந்த உதாரணம் நான்தான்..

ஆரம்பக் காலங்களில் என்னை செல்போனில் தொடர்பு கொள்ளும் பதிவர்கள் அனைவரிடமும் என்னைப் பற்றி முழுமையாக நானே தயக்கமே இல்லாமல் சொல்லித் தொலைத்தேன். கூடுதலாக நான் எப்பவுமே இப்படித்தானாக்கும் என்று பெருமையை வேறு ஜம்பமாக அடித்துக் கொண்டேன்.

விளைவு.. உங்களுக்கே தெரியுமே..?

இன்றைக்கு யாரிடமும் பேசவே கூடாது என்ற நிலையில் உள்ளேன்..

சூழ்நிலைக்கு ஏற்றாற்போல் நடந்து கொண்டு எப்போதுமே வெளிப்படையாகவே இருக்கக்கூடாது. ஒவ்வொருவருக்கும் ஒரு முகமூடி கட்டாயமாக இருக்க வேண்டும். அது வாழ்க்கையாக இருந்தாலும் சரி வலைப்பதிவாக இருந்தாலும் சரி..
//

உண்மைத் தமிழன் சார், இதற்கு முன்பு உண்மை விளம்புயாக இருந்து சூடுபட்ட அனுபவத்தைச் சொல்லி இருக்கிங்க.

நாம் செய்வதை / சொல்வதை தவறாக புரிந்து கொள்ளும் போது அங்கு தன்னிலை விளக்கம் கொடுக்கலாம் தவறே இல்லை. சுயபுராணங்களின் தன்மைகளைப் பொருத்தே அது 'வெளிப்படையான பேச்சின்' அளவீடுகளும் அமைகிறது.
:)

இலவசக்கொத்தனார் சொன்னது…

//அல்லது இவர்களே உண்மை என்று கருதிக் கொண்ட அனுமானமோ உளரிக் கொட்டுவார்கள்//

கண்ணன், இந்த மாதிரி ஆட்கள் எழுதுவதை இப்போ எல்லாம் நிறையா பார்க்கறேன்!!

கோவி.கண்ணன் சொன்னது…

//இலவசக்கொத்தனார் said...

கண்ணன், இந்த மாதிரி ஆட்கள் எழுதுவதை இப்போ எல்லாம் நிறையா பார்க்கறேன்!!//

இகோ,

நான் சுற்றிவுள்ளவர்களின் நேரடி நடவடிக்கை, நடந்து கொள்வதைப் பற்றிச் சொல்கிறேன். நீங்கள் எழுத்தைப் பற்றிச் சொல்கிறீர்கள்.

வரலாறுகள் 50 க்கு 50 புனைவுகள் தானே. வரலாற்றில் எப்போதுமே திரித்தல்கள் உண்டு. வரலாற்று திரித்தில் என்பது மிக நுட்பமானது. அதைச் செய்பவர்கள் பாராட்டப்பட வேண்டியவர்கள். இல்லையென்றால் அதைத் தோண்டிப் பார்ப்போம் என்று எவருமே வரலாற்றுபக்கம் எட்டிக் கூட பார்க்க விரும்ப மாட்டார்கள்.

எவ்வளவு சாமார்த்தியமாக இருந்தாலும் சில தடயங்களை விட்டுச் செல்வார்களாமே. திரித்தல்களும் நீடிக்காது என்றே நினைக்கிறேன். படிக்கும் போதே பெரும்பாலான திரித்தல்கள் உடனே தெரிகிறது. தொழில் நுட்பத்தில் வளர்ந்திருக்கிறோமா ?
:)

காரூரன் சொன்னது…

நல்ல பதிவு கோவி. கண்ணன். எனது அனுபவத்தில் இப்படியாக பேசுவதாக கூறி மற்றவர்களை காயப்படுத்துபவர்களை பார்த்திருக்கின்றேன். இவர்களுடன் ஏன் நாங்கள் போய், ஏன் வீணாய் வாய் கொடுப்பான் என்று ஒதுங்குவதை தங்கள் பலம் என்று எண்ணி வாழும் பல‌வீனமானவர்கள். நானும் நட்பை பற்றி ஒரு சிறிய புலம்பல் செய்துள்ளேன், முடிந்தால் வாசித்து விமர்சியுங்கள்.

கோவி.கண்ணன் சொன்னது…

//காரூரன் said...
நல்ல பதிவு கோவி. கண்ணன். எனது அனுபவத்தில் இப்படியாக பேசுவதாக கூறி மற்றவர்களை காயப்படுத்துபவர்களை பார்த்திருக்கின்றேன். இவர்களுடன் ஏன் நாங்கள் போய், ஏன் வீணாய் வாய் கொடுப்பான் என்று ஒதுங்குவதை தங்கள் பலம் என்று எண்ணி வாழும் பல‌வீனமானவர்கள். நானும் நட்பை பற்றி ஒரு சிறிய புலம்பல் செய்துள்ளேன், முடிந்தால் வாசித்து விமர்சியுங்கள்.
//

காருரான் பின்னூட்டத்திற்கு நன்றி,

தாம் நினைப்பதே சரி என்பது போல் உண்மை விளம்பிகளாக இருப்பவர்கள் நெருங்கியவர்களாக / நட்புகளாக இருந்தால் அவர்கள் விளம்பும் போது கேட்பதற்கு அருவெருப்பாகவும், வெறுப்பாகவும் ஆகிவிடுகிறது. நானும் பல சமயங்களில் இதை உணர்ந்திருக்கிறேன். சுயத்தின் மீது அளவில்லாத பற்று வைத்திருப்பதால் தாம் சொல்வது மட்டுமே உண்மையாக இருக்க முடியும் என்றும் நம்பி நட்பையும் தொலைக்கிறார்கள். உண்மையான நண்பர் என்றால் மனவியாதி என்று ஏற்றுக் கொள்ளத்தான் செய்வர்.
:(
:))

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்