சிங்கப்பூரில் முறைப்படியான வேலை அனுமதி அட்டை இல்லாமல் எங்கும் வேலை செய்ய முடியாது, குறிப்பிட்ட கால சுற்றுலா அனுமதி அல்லது வேலை அனுமதி முடிந்து திரும்பாமல் இருப்பவர்கள் மற்றும் வேறுவழியாக உள்ளே நுழைந்தவர்களை கள்ளக் குடியேறிகள் என்பார்கள், பத்தாண்டுக்கு முன்பு வரை கள்ளக் குடியேறிகளின் எண்ணிக்கை குறிப்பிட்ட அளவு இருந்தது, பின்னர் அரசின் கடுமையான விதிமுறைகளினால் கள்ளக் குடியேறிகளை ஓரளவு வெளியேற்றினார்கள். கள்ளக் குடியேறிகள் சிங்கப்பூர் நுழைவிற்கான வாய்ப்பு வேலை வாய்ப்பு ஆசை காட்டி முகவர்களால் சுற்றுலா அனுமதியில் அழைத்து வரப்பட்டு விட்டு செல்லுதல் என்ற அளவிலும், ஏற்கனவே வேலைக்கு பணம் கட்டி குறிப்பிட்ட வேலையில் குறைந்த ஊதியம் என்ற நிலையில் நிறுவனத்தைவிட்டு சொல்லிக் கொள்ளாமல் வெளியேறி, முகவருக்கு கொடுத்தப் பணத்தை ஈட்ட வழியின்றி வெறெங்காவது தங்கிக் கொண்டு வேலை தேடுதல் என்ற அளவில் கள்ள குடிநுழைவிற்கான வாய்ப்புகள் இருப்பதால் கள்ளக் குடியேற்றத்தை முற்றிலுமாக தடுக்க முடியாத நிலை உள்ளது. இதனைக் கட்டுப்படுத்த கள்ளக் குடியேறிகள் மற்றும் முறைப்படியான வேலை அனுமதி இல்லாதவர்களை வேலைக்கு வைத்திருப்பது சட்டப்படி குற்றம் அதற்கு சிறை தண்டனை மற்றும் ஆயிரக் கணக்கில் தண்டம் ஆகியவை குற்றவியல் சட்டமாக உள்ளது, எனவே கள்ளக் குடியேறிகளுக்கு 99.99 விழுக்காட்டினர் வேலை கொடுக்க மாட்டார்கள். அதுமட்டுமின்றி வேலை அனுமதி கிடைக்கப் பெற்றவர்களுக்கும் எந்த நிறுவனங்களுக்காக வேலைக்கு வந்தார்களோ அந்த நிறுவனம் தவிர்த்து வேறு எங்கும் வேலை செய்வதும் சட்டபடி குற்றம், நிரந்தரவாசி தகுதி பெற்றவர்களும், குடிமகன்களுக்கும் இந்த விதி பொருந்தாது என்றாலும் ஒரே நபர் ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் வேலை செய்தால் அதற்குறிய கணக்கு வழக்குகளை முறையாக வைத்திருக்க வேண்டும், இல்லை என்றால் வருமானவரி ஏய்ப்பு குற்றச் சாட்டுக்கு உள்ளாக நேரிடும்.
இவ்வளவு கெடுபிடிகள் இருந்தும் ஒப்பந்த அடிப்படையில் வேலை எடுத்த முதலாளிகளில் ஒருசிலர் கள்ளக் குடியேறிகளுக்கு வேலை கொடுக்கின்றனர், இதற்கு காரணம் முறையான வேலை அனுமதியுடன் ஒருவரைப் பணிக்கு அமர்த்த அந்த நபரின் கல்வித் தகுதியுடன் விண்ணப்பம் செய்து, தங்குமிடம், முறையான ஊதியம் மற்றும் காப்பீடு ஆகியவற்றுடன் ஒருவருக்கு குறிப்பிட்ட தொகை அரசிற்கு லெவியாக செலுத்த வேண்டி இருக்கும், இது கூடுதல் செலவு என்பதால் கள்ளக் குடியேறிகளை அமர்த்துவர். ஆனால் இப்படியாக வேலைக்கு அமர்ந்தவர் இந்த முதலாளிகளிடம் எதையும் கேட்டுப் பொற முடியாது, கொடுப்பதைத் தான் வாங்கிக் கொள்ள வேண்டும், தவிர விபத்து நேர்ந்தால் எந்த இழப்பீடும் கிடைக்காது, சம்பளமே கொடுக்கவில்லை என்று முதலாளியிடம் தகராறு செய்தால் குறிப்பிட்ட நபர் எங்கு தங்கி இருக்கிறார் என்பதை காவலர்களுக்கு தெரிவித்து சிக்க வைத்துவிடுவர், தவிர குறிப்பிட்ட நபர் அந்த முதலாளியிடம் வேலை செய்வதற்கான எந்த ஆதரமும் வைத்துக் கொள்ளவும் மாட்டார்கள். வெளியே சொன்னால் வேலைக்கு கூப்பிடவும் மாட்டார்கள்,
இவ்வளவு சிக்கல்களையும் தாண்டி எதோ ஒரு நம்பிக்கையின், வறுமையின் அடிப்படையில் வேலை செய்பவராக கள்ளக் குடியேறிகள் உள்ளனர். 10 ஆண்டுக்கு முன்பு வரை தமிழ் நாளிதழ்களில் இன்னார் பணியில் இருந்து ஓடிவிட்டார் என்று புகைப்படத்துடன் தகவலும் அந்த நபரை எங்கேயாவது பார்த்தால் தெரிவிக்க வேண்டும் என்று ஒரு தொலைபேசி எண்ணும், அவருக்கு வேலை கொடுப்பது சட்டபடி குற்றம் என்ற எச்சரிக்கை விளம்பரங்கள் வாரம் ஒன்றாவது வரும். அரசாங்கக் கட்டுபாடுகளினால் கள்ளக் குடியேற்றம் முற்றிலும் ஒழிந்த நிலையில் அத்தகைய விளம்பரங்கள் மிக அரிது, தற்போதைய விளம்பரங்களில் எப்போதாவது ஒன்றாக 'பணிப் பெண்ணைக் காணவில்லை' என்ற அளவில் வேலைக்கு வந்து (வேலையில் தாக்கு பிடிக்கமுடியாமல் அல்லது வேறு காரணங்களுக்காகவோ) வேறு எங்கேயாவது சென்றவர்களைப் பற்றிய விளம்பரங்கள் வருவதுண்டு.
இன்றைக்கு வந்த செய்தி மிகவும் கவலையாகவும் வேதனையாகவும் இருந்தது, முறைப்படியான அனுமதி இல்லாமல் வேலைக்கு வைத்திருந்தவருக்கு விபத்து நேர்ந்ததும், முதலாளி அவரை கொண்டு சாலை ஓரத்தில் போட்டுச் சென்றுவிட்டு, தொலை பேசி வழியாக 'யாரோ உயிருக்கு போராடுகிறார்கள்' என்று தொலைபேசியில் விபத்துப் பிரிவுக்கு அழைத்துச் சொன்னாராம், ஆம்புலன்ஸ் வந்து சேருவதற்குள் அந்த நபர் இறந்துவிட்டார். அதாவது
செல்லதுரை லெனின் என்பவரை (வயது 47) முறைப்படியான வேலை அனுமதி இல்லாமல் சீன முதலாளி ஒருவர் வேலைக்கு அமர்த்தி இருந்தார், வேலையின் போது கீழே விழுந்ததில் தலையில் பலத்த அடிபட்டு இரத்தம் வெளியேற அருகில் இருந்த க்ளீனிக் மருத்துவர்களிடம் அழைத்துச் சென்றிருக்கிறார், மருத்துவர்கள் சோதித்து இவர் மிகவும் தளர்வாக இருக்கிறார், உடனடியாக பெரிய மருத்துவமனைக்கு கொண்டு செல்லுங்கள் என்றதும், வெளியே தெரிந்தால் சிக்கல் என்பதால் சந்தடி இல்லாமல் அவரை காருக்குள் திணித்து ஆள் அரவமற்ற சாலையில் கிடத்திவிட்டு அழைத்துச் சொல்லி இருக்கிறார். ஆனால் நபர் பிழைக்கவில்லை. ஒரளவு மனிதாபிமானம் இருப்பதால் அழைத்துச் சொல்லி இருக்கிறார் என்றே கருதுகிறேன், இருந்தாலும் அரசை ஏமாற்றியது குற்றம் தான்.
கள்ளக் குடியேறிகளுக்கு சிகிச்சை அளிக்காமல் அரசு கைவிரித்துவிடாது, சிகிச்சை முடிந்ததும் சிறையில் அடைப்பார்கள், கூடவே வேலைக்கு வைத்திருந்தவர்களுக்கு தண்டனை உண்டு, செல்லதுரை வின்சண்ட் என்பவர் எப்படி கள்ளக் குடியேறி ஆனார் என்பதன் விவரம் தெரியவில்லை, பொழைக்கலாம் என்று வந்த இடத்தில் ஆதரவற்று இறந்து கிடந்தது மிகவும் வேதனையான ஒன்று, அவருக்கு காத்திருக்கும் உறவினர்களுக்கு இந்த செய்தி பேரிடியாக இருக்கும்.
முகவர்களை நம்பி வேலைக்கு வருபவர்கள் முறைப்படியான வேலை அனுமதியை சென்னையில் இருந்தே சரிபார்க்க முடியும், வேலையில் தாக்கு பிடிக்கமுடியாமல் வேலை மிகக் கடுமையானதாக இருந்தால் மனிதவள துறையில் தெரிவித்துவிட்டால் அவர்களே வெளியேற்றுவதற்கான நடவடிக்கைகளை எடுப்பார்கள், ஆனாலும் முகவர்களிடம் கொடுத்த பணம் திரும்பக் கிடைக்க வாய்ப்பு இல்லை, இவ்வளவு 'ரிஸ்க்' எடுத்து வெளிநாட்டிற்கு சென்றால் தான் பிழைக்க முடியும் என்ற நிலைக்கு தனி நபராக ஒருவர் தன்னைத் தானே தன் தகுதி குறித்து நொந்து கொள்ள முடியுமா ? அல்லது குடிமக்களை அந்த நிலைக்கு வைத்திருக்கும் மத்திய மாநில அரசுகளை குறை சொல்ல முடியுமா ?
அறிவு ஜீவிகளாய் வெளிநாட்டிற்குச் சென்று கக்கூஸ் கழுவும் வேலை செய்கிறவன் உள்நாட்டில் செய்வானா ? என்ற கேள்வியைக் கேட்டுவிட்டு தீர்வு சொல்லிவிட்டது போல் நம்மை நாமோ மெச்சிக் கொள்கிறோம், வெளிநாட்டில் கக்கூஸ் கழுவ கொடுக்கும் கூலியை உள்நாட்டிலும் கொடுத்தால் ஏன் செய்ய மாட்டார்கள் ? ஒரு காலத்தில் சாராயம் விற்பது கேவலம் என்ற நிலையை, அரசே அந்த வேலையையும் ஒரு பணியாக அமர்த்தி கேவலம் என்பதை மாற்றிவிடவில்லையா ? டாட்டாவோ பிர்லாவோ கீழ் நிலையில் இருந்து முன்னேறினால் எல்லோராலும் அவ்வாறு முன்னேற முடியுமா ? திடீர் பணக்காரர்களின் பின்னனிகளை ஆராய்ந்து, அவர்களின் முன்னேற்றத்தினால் வீழ்த்தப்பட்ட பின்புலன்களை யாரும் கணக்கில் எடுத்துக் கொள்வதே இல்லை.
திருடுவது, கூலிபடையாக இருப்பது, தீவிரவாத குழுக்களில் சேருவது, விபச்சார முகவராக இருப்பது உள்ளிட்ட கல்வித் தகுதி சாராத வேலைகளில் விருப்பம் இல்லாமல் நேர்மையாக பிழைப்போம் என்று தானே வெளிநாடுகளுக்கு செல்கிறார்கள், போகிற இடத்திலும் சோதனை என்றால் ?
செல்லதுரை லெலினின் பரிதாப மரணத்திற்கு நாம் யாரைக் குறைச் சொல்ல முடியும் ?
18 கருத்துகள்:
மிகக் கொடுமை. பரிதாபம். அவரது குடும்பத்தினர்? :((
கோவி,
இது போன்று வெளிநாட்டில் மாட்டிக்கொண்டு இறப்பது மிகவும் வருந்தத்தக்கது.
//அறிவு ஜீவிகளாய் வெளிநாட்டிற்குச் சென்று கக்கூஸ் கழுவும் வேலை செய்கிறவன் உள்நாட்டில் செய்வானா ? என்ற கேள்வியைக் கேட்டுவிட்டு தீர்வு சொல்லிவிட்டது போல் நம்மை நாமோ மெச்சிக் கொள்கிறோம், //
வெளிநாட்டில் கொடுக்கும் சம்பளம் குறைவா இருக்குன்னும் நீங்களே சொல்லுறிங்க.
//ஏற்கனவே வேலைக்கு பணம் கட்டி குறிப்பிட்ட வேலையில் குறைந்த ஊதியம் என்ற நிலையில் நிறுவனத்தைவிட்டு சொல்லிக் கொள்ளாமல் வெளியேறி, //
இந்தியாவில் குறைவான சம்பளம் என்றாலும் உயிர் போகாது , போனாலும் இப்படியான நிலை வராது. நீங்க இப்படி வந்தவங்களை குற்றம் சொல்லுறிங்க,ஆனால் உயிர்ப்போகும் சூழலில் பாதுகாப்பு இல்லாமல் வேலை செய்ய வைத்த சிங்கை முதலாளியை ஓரளவு மனிதாபிமானம் உள்ளவர்னு சொல்லுறிங்க. அவருக்கு தண்டனையே வேண்டாம் அப்படித்தானே.நல்ல அறிவுஜீவித்தனம் :-))
இந்தியாவோ ,அயல்நாடோ முதலாளிகள் ஒரே மாதிரி தான் சட்டத்தினை ஏமாற்றவும், எளியோரை வதைக்கவும் தயங்கமாட்டார்கள்,தண்டனையும் கிடைக்காது.
//போனாலும் இப்படியான நிலை வராது. நீங்க இப்படி வந்தவங்களை குற்றம் சொல்லுறிங்க,ஆனால் உயிர்ப்போகும் சூழலில் பாதுகாப்பு இல்லாமல் வேலை செய்ய வைத்த சிங்கை முதலாளியை ஓரளவு மனிதாபிமானம் உள்ளவர்னு சொல்லுறிங்க. அவருக்கு தண்டனையே வேண்டாம் அப்படித்தானே.நல்ல அறிவுஜீவித்தனம் :-))//
ஆனால் கள்ளக் குடியேறிகளுக்கு வேலை கொடுப்பவர்கள் கிடைத்தால் அவர்களுக்கு அந்த முதலாளி தெய்வம் என்று தான் நினைப்பாங்க,
முதலாளிகளும் பெரும் ரிஸ்க் எடுத்து தான் வேலைக்கு வைக்கிறார்கள்.
//வெளிநாட்டில் கொடுக்கும் சம்பளம் குறைவா இருக்குன்னும் நீங்களே சொல்லுறிங்க.//
கடைநிலை ஊழியத்திற்கு ஒரு நாளைக்கு 18 வெள்ளிகள் என்ற அளவுக்கு தான் தருகிறார்கள், அது நம் ஊர் பணத்திற்கு 720 ரூபாய். ஆனால் தங்கும் இடம் கொடுத்துவிடுவார்கள், சாப்பாடு செலவு, இதர செலவு போக 10 வெள்ளி மீதம் ஆனாலும் ஏஜெண்டுக்கு கட்டிய 2 லட்ச ரூபாயை அடைக்க 5000 வெள்ளி சம்பாதிக்க வேண்டும், கிட்டதட்ட ஓராண்டு வேலையுடன் OT யும் கிடைத்தால் தான் கடனே அடையும், அப்பறம் ஓராண்டு வேலை பார்ப்பதில் மீதம் பிடித்தால் சேமிப்பு. யாராவது வேலையை விட்டு ஓடிவா நான் வேற இடத்தில் நல்ல வேலை வாங்கித் தருகிறேன் என்ற வாய் வார்த்தையை நம்பிக்கையாக எடுத்துக் கொண்டு ஓடி விடுபவர்கள் சிக்கலில் மாட்டிக் கொள்கிறார்கள்
//வருக்கு தண்டனையே வேண்டாம் அப்படித்தானே.நல்ல அறிவுஜீவித்தனம் :-))//
நான் அப்படிச் சொல்லவில்லை, அவருடைய சூழல் விட்டு விட்டு ஓட வைத்தாலும் மனசு கேட்காமல் போன் பண்ணி தகவல் சொல்ல முடிந்திருக்கிறது.
அரபு நாடுகளில் இது போல் இறந்தால் பிணம் நாட்டுக்கு வந்து சேருமா ? அதையெல்லாம் ஒப்பிட இவர்களை மனிதாபிமானம் அற்றவர்கள் என்று சொல்ல முடியாது என்பது எனது தனிப்பட்ட கருத்து
கோவி.கண்ணன்!பதிவைப்படிக்கும் போது சிங்கப்பூருக்கும்,அரபு நாடுகளுக்கும் வித்தியாசம் ஒன்றுமில்லை என்றுதான் உணர்கிறேன்.
பின்னூட்டத்தில் அரபு நாடுகளில் இது போல் இறந்தால் பிணம் நாட்டுக்கு வந்து சேருமா ? என்ற கேள்வியை எழுப்பியுள்ளீர்கள்.ஒருவர் மருத்துவமனையிலோ அல்லது விபத்திலோ இறந்தால் மருத்துவ,போலிஸ்,மரண சான்றிதழ் மூன்றும் குறைந்த கால அவகாசத்தில் இறப்புக்கு யார் பொறுப்பு ஏற்பவர் பெற்று விட முடியும்.நீ யார்,உனக்கும் இறந்தவருக்கும் என்ன தொடர்பு,இந்தியாவில் உறவினர் அனுமதி சான்றிதழ் வேண்டும் என ஏகப்பட்ட தொல்லைகளை செய்து மரணித்தவரை அதிக நாள் குளிர்சாதனப் பெட்டியில் உறங்க விடுவது இந்திய தூதரகங்களே.
அரபு நாடுகளில் மனித உரிமை குறித்த குறைகள் இருக்கலாம்.ஆனால் மரணம் போன்ற சூழலில் அவர்கள் மனிதாபிமானத்துடனே நடந்து கொள்கிறார்கள் என்பது என் சுய அனுபவம்.
மிக வருத்தத்துக்குரிய மரணம். கனவுகளுடன் வாழும் அவர் குடும்பம், தவிக்கப் போகிறது. இப்படி எத்தனையோ?
பிரேத பரிசோதனையில், மரணத்தின் காரணம் அறிந்து விசாரிக்கும் போது, இந்த முதலாளி மாட்டிக் கொள்ள வாய்ப்பில்லையா?
அல்லது இவர் இந்தியர் தானே என்பதால் சிங்கை அரசு கண்மூடிவிடுமா?
//ஒருவர் மருத்துவமனையிலோ அல்லது விபத்திலோ இறந்தால் மருத்துவ,போலிஸ்,மரண சான்றிதழ் மூன்றும் குறைந்த கால அவகாசத்தில் இறப்புக்கு யார் பொறுப்பு ஏற்பவர் பெற்று விட முடியும்.நீ யார்,உனக்கும் இறந்தவருக்கும் என்ன தொடர்பு,இந்தியாவில் உறவினர் அனுமதி சான்றிதழ் வேண்டும் என ஏகப்பட்ட தொல்லைகளை செய்து மரணித்தவரை அதிக நாள் குளிர்சாதனப் பெட்டியில் உறங்க விடுவது இந்திய தூதரகங்களே.//
இங்கேயும் அதே தூதரகங்கள் தான் இருக்கின்றன, இங்கே மட்டும் எப்படி ஒன்று அல்லது இரண்டு நாளில் கொண்டு செல்ல முடிகிறது....?
பொறுப்பேற்றுக் கொள்பவர்களின் பாஸ்போர்ட் விவரங்களைப் பெற்று அவர்களிடம் ஒப்படைப்பதில் என்ன சிக்கல் வந்துவிடும் ?
இறந்தவர் குடும்பத்துக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.
இதிலும் அரபு நாடுகளை இழுத்து அரிப்பை தீர்த்துக் கொள்ள வேண்டுமா? :-( ராஜ நடராஜன் அழகாகவே உங்களுக்கு பதிலளித்துள்ளார்.
//இதிலும் அரபு நாடுகளை இழுத்து அரிப்பை தீர்த்துக் கொள்ள வேண்டுமா? :-( ராஜ நடராஜன் அழகாகவே உங்களுக்கு பதிலளித்துள்ளார்.//
அரிப்பா சொரிப்பா ? பாதிக்கப்பட்டவர் நிலையில் இருந்து பார்த்தால் சரியாகலாம், உங்களுக்கு.
"துபாயில் இறந்த கணவரின் உடலை கொண்டு வர மனைவி கண்ணீர் மனு"
"துபாயில் இறந்த தமிழர் உடல் சொந்த ஊரில் இன்று தகனம் : 24 நாளுக்குப்பின்பு உடல் வந்தது"
வருசத்துக்கு ஒரு செய்தியாவது இப்படி வருவதை நான் படித்துள்ளேன்.
திரு சுபி,
மேலும் இணைப்பு
வருந்துகிறேன்.
செல்லதுரை லெலினின் பரிதாப மரணத்திற்கு நாம் யாரைக் குறைச் சொல்ல முடியும் ?
இது ஒரு எச்சரிக்கை பதிவு நன்பர் கே.வி அவர்களுகு நன்றி.
செல்லதுரை லெலினின் குடும்பத்துக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்தான் நம்மால் கூறமுடியும்.
வேதனை அளிக்கும் சம்பவம்......
(TM2)
மிகவும் வருத்தமான சம்பவம்.
//அரபு நாடுகளில் மனித உரிமை குறித்த குறைகள் இருக்கலாம்.ஆனால் மரணம் போன்ற சூழலில் அவர்கள் மனிதாபிமானத்துடனே நடந்து கொள்கிறார்கள்//
உயிருடன் பெண்களை கூட வேலைக்கு போன ஆசிய இஸ்லாமிய பெண்கள் உட்பட துன்புறுத்தி இன்புறும் அரபு கொடுமைகாரர்கள் இறந்து போன பின்பு மட்டும் மனிதாபிமானத்துடன் நடப்பார்கள்!!!!
உங்களின் தளம் வலைச்சரத்தில் இன்று திரு. சொக்கன் அவர்களால் அறிமுகப்படுத்தி உள்ளது...
வாழ்த்துக்கள்...
மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2012/08/blog-post_2.html) சென்று பார்க்கவும். நன்றி !
//திடீர் பணக்காரர்களின் பின்னனிகளை ஆராய்ந்து, அவர்களின் முன்னேற்றத்தினால் வீழ்த்தப்பட்ட பின்புலன்களை யாரும் கணக்கில் எடுத்துக் கொள்வதே இல்லை.//
100% correct
கோவி!விட்டுப்போன சுட்டியை இப்பொழுதுதான் வாசித்தேன்.
தமிழகத்தின் கலெக்டர் மூலமாக என வெளியுறவுத்துறை துவங்கி துதரகங்களிலிருந்து அரேபிய நாடுகளின் சம்பந்தப்பட்ட அரசு துறை,மருத்துவ மனை,மார்ச்சுவரி,அதன் பின் விமான புக்கிங்,இந்திய பயணமென காலதாமதங்களுக்கான சூழல்கள் நிலவுகின்றன.
இறந்தவர்களுக்கு எனது அனுதாபங்கள்.
//ராஜ நடராஜன் கூறியது...
கோவி!விட்டுப்போன சுட்டியை இப்பொழுதுதான் வாசித்தேன்.
தமிழகத்தின் கலெக்டர் மூலமாக என வெளியுறவுத்துறை துவங்கி துதரகங்களிலிருந்து அரேபிய நாடுகளின் சம்பந்தப்பட்ட அரசு துறை,மருத்துவ மனை,மார்ச்சுவரி,அதன் பின் விமான புக்கிங்,இந்திய பயணமென காலதாமதங்களுக்கான சூழல்கள் நிலவுகின்றன.
இறந்தவர்களுக்கு எனது அனுதாபங்கள்.//
இதெல்லாம் சால்சாப்பு தானே, ஒருவர் வெளிநாட்டுக்கு வேலைக்குப் போகும் பொழுது வெறும் பாஸ்போர்ட் எடுத்துக் கொண்டு செல்வதில்லை, வேலை அனுமதிக்கான பாரத்தை பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும், அதன் பிறகு வேலைக்கான தகுதி இருந்தால் தான் வேலை கொடுப்பார்கள், அந்த பாரமில் அவருடைய நாட்டில் எந்த முகவரியில் இருந்து வசிக்கிறார் என்கிற விவரங்களும் இருக்கும். உடலை அனுப்புவதற்கு வேறு என்ன சிக்கல் ? இங்கெல்லாம் எப்படி 2 நாளில் முடிகிறது.
பல ஆண்டுகளால இத்தகைய பிரச்சனைகள் தொடர்வதால் 'ஒருவேளை இறந்தால் உடலை பெறும் நபரின் பெயரையும் அதே வேலை அனுமதி பாரத்தில் சேர்த்துவிட்டால் சிக்கல் ஏன் ஏற்படப் போகிறது ? எதற்கு கெஞ்ச, கதற வைக்கிறார்கள.
உங்கள் பதிவை மறுபரிசீலனைப் செய்யுங்கள், கண்டனங்களும் வழிமுறைகளும் தான் பரிந்துரை செய்யப்பட வேண்டுமன்றி இருக்கும் சிஸ்டத்தில் பிரச்சனை என்று பூசி மொழுகுவதால் எதிர்கால பாதிப்புகளை தடுத்துவிட முடியுமா ?
அன்பு கூர்ந்து சிந்திக்கவும்.
கருத்துரையிடுக