பின்பற்றுபவர்கள்

10 ஆகஸ்ட், 2012

பிணம் தின்னிக் கழுகுகள் !


மனிதனைத் தவிர்த்து ஏனைய உயிரினங்களுக்கு ஓய்வு பெற்ற வாழ்க்கை (Retired Life) என்பதே கிடையாது, இடையே அவை வேட்டையாடப்பட்டு உணவாக்கப்படுகிறதா ? அல்லது வளர்த்தே உணவாக்கப்படுகிறதா ? என்பதெல்லாம் அவை காட்டு விலங்கா ? வீட்டு விலங்கா ? என்பதைப் பொறுத்தது. மனிதன் உண்ணும் விலங்கினம் பறவை இனம, மீன் இனம் இவற்றிற்கெல்லாம் மனித வயிரே இடுகாடு அல்லது அவர்களது சமையல் அறையே சுடுகாடு மற்றும் அவர்களது குளிர்சாதனப் பெட்டியே பிணவறை. வளர்ப்பு விலங்குகள் பறவைகள் தவிர்த்து மற்ற விலங்குகளின் ஓய்வு கால வாழ்க்கை என்ன என்பதெல்லாம் நமக்கு தெரியாத மற்றும் நாம் சிந்திக்காத கவலைப்படாத ஒன்று. உடல் வலிந்த விலங்கினம் தவிர்த்து ஏனைய விலங்கினங்களுக்கும் ஓய்வு கால வாழ்கை வாய்ப்பில்லை, அப்படியே இருந்தாலும் அவையும் (வேட்டைக்கு) உழைத்தால் தான் அவைகளுக்கும் உயிர் வாழ்க்கை (Survival). மனிதன் தவிர்த்த ஏனைய படைப்புகள் மனித உணவிற்கானது என்கிற மேற்குலக  (மதவாத) சித்தாந்தங்களைத் தாண்டி காட்டு விலங்குகள், பறவைகள் மீன் இனங்கள் பிழைத்திருப்பதே அதிசயம் தான். உணவு வகையில் இடம் பெறாதா வகைகளாகவும், உணவு வகைக்குள் அடங்கும் உயிரினங்களில் உற்பத்தி இனப்பெருக்கத் திறனில் மேம்பட்டு இருப்பதுமான காரணமே இன்றும் அவை நிலைத்திருப்பதற்குக்கான முதன்மைக் காரணம். அது தவிர்த்து  மனித இனத்தின் கருணையாக விட்டுவைக்கப்பட்ட உயிரினங்கள் எதுவும் கிடையாது.

*****

சிங்கையின் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள குடியிருப்புப் பகுதியில் தான் அடுக்குமாடி (Apartments) குடியிருப்பில் உள்ள என்னுடைய வீடும் இருக்கிறது. வீட்டின் அருகே அடர்ந்த காடு உண்டு, காட்டின் அடுத்தப் பகுதி கடற்கரையும் அதனை ஒட்டிய வீடுகளும் உண்டு. சிங்கையில் கலப்பில்லாத காற்றை நுகரக் கூடிய இடங்களில் அந்தப் பகுதியும் ஒன்று. அந்தப் பகுதியில் தொடர்ந்து 12 ஆண்டுகளாக வசித்துவருகிறேன். சிங்கையின் பிற குடியிருப்பு பகுதிகளைவிட இங்கு இரைச்சல் குறைவு, வாகன நெருக்கமும் குறைவு, இரவு 10 மணிக்கு மேல் மிகவும் அமைதியாக இருக்கும். அந்தப் பகுதிக்கு முன்பு வாடகைக்கு வந்து ஆறு ஆண்டுகள் வாடகை வீட்டில் குடியிருந்து அந்தப் பகுதி பிடித்திருந்ததால் அங்கேயே வீட்டை வாங்கி குடியிருந்துவருகிறோம். பிற பகுதியை ஒப்பிட எண்ணிக்கை அடிப்படையில் வீடுகள் குறைவாகவும், கடற்கரையை ஒட்டிய கிழக்கு பகுதி என்பதால் அப்பகுதி நகருக்குள் போக்குவரவுகளும் குறைவு, சனி / ஞாயிறுகளில் வணிக வளாகங்கள் / கடைத்தொகுதிகளில் பெரிதாக மக்கள் நெருக்கத்தைப் பார்க்க முடியாது, அதுவே பிற பகுதியில் உள்ள மக்கள் நெருக்கம், அங்கே வணிக வளாகங்களில் எங்கேயாவது சாப்பிடப் போனால் உட்கார இடம் கிடைக்காத நிலை. எல்லாம் நல்லப்படியாகத்தான் போய் கொண்டு இருந்தது. மேற்சொன்ன அடர்ந்த காட்டில் அரசாங்கத் திட்டம் நுழைய காட்டின் அருகே 'இந்த இடத்தில் ஒரு பள்ளியும் தனியார் குடியிருப்பும் வர இருப்பதாக' அறிவிப்பு பலகை வைக்கப்பட்டது.

அறிவிப்பைப் பார்த்தவர்களுக்கு மிகுந்த அதிர்ச்சி ஏற்பட்டது, காரணம் இயற்கையாக அமைந்த காடுகளில் எஞ்சி இருப்பவை மிகச் சிலதான், பிற காடுகள் எல்லாம் நகர ம(மை)யமாகவும், செயற்கை பூங்காக்களாக உருவாக்கப்பட்ட நிலையில் ஒரு சில இடங்களில் மட்டுமே காடுகள் காடுகளாகவே நீடித்து இருக்கின்றன. வருத்தப்பட்டவர்களில் சிலர் அப்பகுதி குடியிருப்பாளர் அமைப்புகளில் கூடிப் பேச, 'காட்டில் கை வைக்கக் கூடாது !' என்று ஒன்று கூடி தீர்மானம் போட்டுள்ளனர்.
குறிப்பிட்ட காட்டுப்பகுதியில் நன்கு உயர்ந்த மரங்களும் அவற்றில் கழுகுக் கூடுகளும் உள்ளன, எங்கள் வீட்டு அருகே நின்றுப்பார்த்தாலும் உயர்ந்த மரங்களும் அதில் கழுகுக் கூடு இருப்பதைப் பார்க்க முடியும், கழுகுகள் அவ்வப்போது கூட்டுக்கு திரும்புவதைக் காண முடியும், கழுகுகள் பொதுவாக நெடிந்து வளர்ந்த மரங்களில் மட்டுமே கூடுகட்டும், காடுகளில் மட்டுமே அத்தகைய மரங்கள் உண்டு என்பதால் கழுகுக் கூடுகளை பொதுவாக காணுதல் மிக அரிதே. கழுகுகள் தவிர்த்து ஆந்தைகள் உள்ளிட்ட 30 க்கும் மேற்பட்ட பறவை இனங்களின் சரணாலயமாக அந்த காடு இருந்துவருகிறது, அடிக்கடி சாலைப்பகுதிக்கு எட்டிப்பார்த்துச் செல்லும் காட்டுப்பன்றிகளும் வசிப்பதை நான் பார்த்திருக்கிறேன். தவிர அழியக் கூடிய நிலையில் இருக்கும் பறவைகளும், மரம் மற்றும் செடிகளும் கூட அதே காட்டில் உண்டு. பறவை ஆராய்சியாளர்கள்  (Bird Watcher) அடிக்கடி அங்கே வந்து பறவைகள் பற்றிய ஆராய்ச்சியைத் தொடந்துவந்தார்கள்.
சிங்கையில் அரசாங்கத் திட்டங்களை எதிர்ப்பதற்கு நடைமுறையில் சாத்தியமில்லை என்பதே பரவலாக நம்பபடும் ஒன்றும், பெரும்பாலான சிங்கைவாசிகளும் அவ்வாறு நம்புகிறார்கள், ஆனாலும் எதிர்ப்புகளை தெரிவிக்க வழிமுறைகள் உள்ளன, மேற்சொன்னது போல் குடியிருப்பாளர்கள் அமைப்புகளில் முறையிடலாம், அவை எதிர்ப்பாக எடுத்துக் கொள்ளப்படாமல் (மாற்றுக்) கருத்து (Feedback) என்ற அளவில் எடுத்துக் கொண்டு ஆராயப்படும். காட்டை ஒட்டி அமைந்த குடியிருப்புகள் மொத்தம் ஒரு 300 இருக்கும், அந்த 300 வீட்டில் இருந்தும் ஆளுக்கு ஒருவர் அல்லது மேற்பட்டவர் என்று கணக்கில் 300க்கும் மேற்பட்டவர்கள் கழுகுகளைக் காப்பாற்ற வேண்டும், காடுகளில் கை வைக்கக் கூடாது என்று வழியுறுத்தலும் அதை ஒட்டி பல்வேறு தரப்பினர் பேசினார்கள். எனக்கு இந்தக் கூட்டம் பற்றி அழைப்பு வந்த பொழுது 'இயற்கை வளங்கள் சுரண்டப்படுவதும், அழிப்பதையும் நான் ரசித்தது இல்லை' என்பதால் தயங்கமல் ஒப்புக் கொண்டேன்.


உயர்ந்த பதவியில் இருப்பவர்கள், அமைப்புகளின் தலைமைப் பொறுப்பில் இருப்பவர்கள், சிறு குழந்தைகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர்கள் ரொம்பவும் உணர்ச்சி வசப்பட்டு பேசினார்கள், 'கட்டப் போவது பள்ளிக் கூடமாக இருந்தாலும், அதை ஏன் இந்த காட்டை அழித்துவிட்டு கட்ட வேண்டும் ?  காடுகளை அழிக்க முடியும், உருவாக்க முடியாது, அதுவாக உருவாகி இருந்தால் தான் உண்டு, அவ்வாறு உருவாகிய காடுகளில் எஞ்சி இருப்பது மிகச் சிலதான், அதை அகற்றும் முன் அது பற்றிய முழுமையாக தெரிந்து கொண்டு தான் அரசு அதில் கை வைக்கிறதா ?' என்றெல்லாம் சற்று உணர்ச்சி வசப்பட்டு பேசினார்கள், குறிப்பாக அந்த காட்டில் குடியிருக்கும் கழுகுகள் பற்றி பலரும், குழந்தைகளும் குறிப்பிட்டனர், காட்சிக்காகவும், ஆவணமாகவும் அசை படங்களை எடுத்துவந்து அந்தப் பகுதியில் வசிப்பவர்களின் கருத்துகளைக் கேட்டு தொகுத்திருந்தனர், தவிர காட்டில் வசிக்கும் உயிரினங்கள், பறவைகள் (ஆந்தை உள்ளிட்ட பிற) மற்றும் மரங்களின் புகைப்படங்களும் காட்சிக்கு வைக்கப்பட்டு இருந்தன. 

அரசாங்கம் காடுகளை அழித்து குடியிருப்புகளையும் அதை ஒட்டி அழகிய பூங்காங்களை உருவாக்கினாலும், அந்த பூங்கக்களில் விலங்குகள் பறவைகளும் வாழும் சூழலை அது உருவாக்கவில்லை என்பதே பலரின் குற்றச் சாட்டாக இருந்தது, மைனா, காகம், புற, குயில் உள்ளிட்ட பறவை இனம் தவிர்த்து பிற பறவை இனங்களெல்லாம் ஆள் நடமாட்டம் இல்லாத இறைச்சல் இல்லாத பாதுகாப்பான சூழலில் தான் வசிக்க விரும்பும், எனவே பூங்காக்களினால் அவற்றிற்கு பலன் இல்லை, சென்ற திங்கள் (மாதம்) பீஷான் பூங்கப்பகுதியில் காட்டுப்பன்றி அங்கு சென்றவர்களை கடித்துவிட்டது என்ற முறையிடல்கள் வர, காட்டுப்பன்றிகள் பிடிக்கப்பட்டு விலங்கியல் பூங்காவிற்கு அனுப்பப்பட்டது இதையும் கூடி இருந்தவர்கள் அறிந்திருந்தனர், இந்தக் காட்டுப்பகுதியை அழிக்கக் கூடாது என்பதற்கு போதிய காரணங்களை நாங்கள் முன்வைக்கிறோம், அரசு அந்தக் காட்டில் கைவைப்பதற்கு தகுந்த காரணங்களை எங்களுக்குச் சொல்ல வேண்டும் என்று கடுமையாகவே பேசினார்கள். அங்கு வந்திருந்த அரசாங்கத் தரப்புகள் எல்லாவற்றையும் கவனமாகக் கேட்டுக் கொண்டு இதுபற்றி முடிவுகள் பின் அறிவிக்குமாறு தெரிவித்தனர், இது தொடர்பாக நடக்கும் அடுத்தடுத்த கூட்டங்களுக்கு குடியிருப்பாளர்கள் வருவதாகவும் ஒருமனதாக ஒப்புக் கொண்டனர், முடிவுகள் இன்னும் வரவில்லை, அதற்கு ஒர் ஆண்டாவது ஆகலாம். 

எனக்கு ஒன்றே ஒன்று மனதை கொஞ்சம் உறுத்தியது, கூட்டத்திற்கு வந்தவர்கள் அனைவருக்கும் சுத்திகரிக்கப்பட்ட (மினரல்) தண்ணீர் பாட்டில் வழங்கினார்கள், அதற்கு பதிலாக பொதுத் தண்ணீர் குடுவையை வைத்து விட்டு பேப்பர் டம்பளர்களை வைத்து விருப்பப்படுபவர்கள் எடுத்துக் கொள்ளும்படி ஏற்பாடு செய்திருக்கலாம், நான் பார்த்த வகையில் தண்ணீர் பாட்டில் கையில் வைத்திருந்தவர்களில் பாதிபேர் பாதி தண்ணீரை குடித்துவிட்டு பாட்டிலை அங்கேயே வைத்துச் சென்றார்கள். அமைப்பினர் பணம் கொடுத்து வாங்கும் பாதி தண்ணீர் வீண் என்றாலும் ப்ளாஸ்டிக் பாட்டில் சுற்றுச் சூழலுக்கு உகந்ததும் அல்ல. சுற்றுச் சூழல் பற்றிப் பேசும் பொழுது இது போன்றவற்றிலும் கவனம் செலுத்தினால் நிகழ்வுகள் முழுமையாக உணர்வுடன் கலந்தே வெற்றி அடையும்.

*****

பொதுவாகவே நகர மைய சூழலில் எந்திர வாழ்க்கையில் விலங்குகள், பறவைகள் மற்றும் காடுகள் பற்றி மக்களுக்கு அக்கரை இருக்குமா ? என்னும் கேள்வியை புறம் தள்ள வைத்தது நிகழ்வு, உலகமெங்கும் பசுமைச் சூழல் பற்றிய புரிந்துணர்வு வளர்ந்துள்ளதும் இந்த குட்டி நாட்டில் அதில் தீவிரமாகவே இயங்குகிறார்கள் என்பது தெரிய வந்தது. காடுகளை அழிப்பதால் தம்முடைய இயற்கையான வாழ்வியல் சூழலும் கெட்டுவிடுகிறது என்பதையும் கூடவே பிற உயிரினங்கள் மீதும் அன்பு செலுத்துகிறார்கள் என்பதும் தெரியவர நெகிழ்ச்சியாகவே இருந்தது. 'கழுகும் பறவைகளும் யாரிடம் முறையிடும் ? அவற்றை யார் காப்பற்றுவது ? யார் பொறுப்பேற்றுக் கொள்வது ? இந்தப் பகுதியில் வசிக்கும் எங்களைத் தவிர்த்து ! - ஒட்டுமொத்த மனநிலையும் எதிரொலிக்க 'எதிரே இருந்த காடுகளைப் பார்க்கும் பொழுதெல்லாம் நாளைக்கு இந்தக் காடுகள் இருக்குமா ?' என்று கேள்வி எழுப்பியவர்களின் மன நிலை தற்காலிகமாக கிடைத்த நிம்மதிப் பொருமூச்சில் அந்தக் காடுகளுக்கு தேவையான கார்பண்டை ஆக்சைகடுகளின் தேவைகளின் துளிகளாக சிலவற்றை வெளி இட்டிருக்கும். கண்டிப்பாக அந்தக் காடுகளும் கழுகுகளும் காப்பாற்றப்படும் என்ற எண்ணம் எல்லோருக்கும் ஏற்பட்டுள்ளது.

கூட்டத்துக்கு போனிங்களே என்ன ஆச்சு ? மகளும் மனைவியும் கேட்க 'நான் பார்த்த வகையில் தான் மட்டும் வாழ்ந்தால் போதும் என்று நினைக்கும் பிணம் தின்னிக் கழுகள் எதுவும் இங்கே இல்லை அதனால் இப்போதைக்கு காட்டுல கைவைக்க மாட்டாங்க, வீட்டெதிரே வசிக்கும் வெள்ளை வயிற்றுக் கழுகள் இங்கே தான் வாழும்' என்றேன்.31 கருத்துகள்:

ப.கந்தசாமி சொன்னது…

அருமையான முயற்சி. வெற்றி பெற வாழ்த்துக்கள்.

விருச்சிகன் சொன்னது…

நல்ல முயற்சி. நம் ஊரில் தான் சரியான முறையில் எதிர்ப்பை தெரிவிக்க எந்த ஒரு வாய்ப்பும் இல்லை. சிங்கையில் எவ்வளவோ பரவாயில்லை.

இராஜராஜேஸ்வரி சொன்னது…

இப்போதைக்கு காட்டுல கைவைக்க மாட்டாங்க,

தப்பிப் பிழைத்தது காடு !

கோவி.கண்ணன் சொன்னது…

//பழனி.கந்தசாமி கூறியது...
அருமையான முயற்சி. வெற்றி பெற வாழ்த்துக்கள்.//

மிக்க நன்றி ஐயா, முதல் பின்னூட்டம் உங்களதாகத் தான் இருக்கும் என்று நினைத்தேன், நினைப்பு பொய் ஆகவில்லை. மீண்டும் நன்றி

கோவி.கண்ணன் சொன்னது…

//விருச்சிகன் கூறியது...
நல்ல முயற்சி. நம் ஊரில் தான் சரியான முறையில் எதிர்ப்பை தெரிவிக்க எந்த ஒரு வாய்ப்பும் இல்லை. சிங்கையில் எவ்வளவோ பரவாயில்லை.//

நம் ஊரில் தரிசு நிலத்தைக் கூட பட்டாப் போட்டுவிடுவங்க, காடுகளை விடுவாங்களா

கோவி.கண்ணன் சொன்னது…

//Rajeswari Jaghamani கூறியது...
இப்போதைக்கு காட்டுல கைவைக்க மாட்டாங்க,

தப்பிப் பிழைத்தது காடு !//

அப்படித்தான் நம்புகிறோம்

நம்பள்கி சொன்னது…

நன்றாக இருந்தது! எவ்வளவு பேருக்கு புரியுது!

நான் ஒரு தமிழ்நாட்டில் உள்ள கிராமத்தில் தான் கடைசி காலத்தில் வசிக்க வேண்டும் என்று சொன்னபோது!எல்லோரும் சிரித்தார்கள்!

உண்மை என்ன வென்றால், என் மகனுக்கு திருமணம் ஆகி விட்டால், நானும் அவனும் பார்ப்பது X-mas, Thanks giving, Memorial day week end--அவ்வளவு தான். அது தான் அமெரிக்கா!

நான். ஏன் நான். எல்லோரும் அடிப்படையில் விவசாயி தான். என் வீட்டில், நான் வளர்ந்த அடையார் வீட்டில் (அதாவது என் அப்பாவின் சொந்த வீட்டில் தான், இருந்தாலும்) நான் வைத்த பழம் கொடுத்துக் கொண்டிருந்த மாமரத்தை வெட்டி விட்டார் என்று எனது பெற்றோர்களிடம் சண்டை போட்டுக் கொண்டு பேச்சு வார்த்தையை முறித்துக் கொண்டேன்.

என் மனைவி தான் போனது போகட்டும் என்று சமாதானம செய்தார்கள்...ஆறு மாதம் கழித்து தான் பேசினேன்!

.இருந்தாலும், என்னால் இந்த "மரக்" கொலையை என்னால் இன்றும் மறக்க முடியவில்லை@!

கோவி.கண்ணன் சொன்னது…

//இருந்தாலும், என்னால் இந்த "மரக்" கொலையை என்னால் இன்றும் மறக்க முடியவில்லை@!//

அதுபோன்ற சூழல்களை அனுபவித்தவன் என்ற முறையில் உங்கள் உணர்வுகளை புரிந்து கொள்ளமுடிகிறது, பாராட்டுகள்

துளசி கோபால் சொன்னது…

நல்லவேலை செஞ்சீங்க. காடுகளை ஒருபோதும் அழிக்கக்கூடாது. பறவைகளும் விலங்குகளும் வேறெங்கு போகும்?

சண்டிகரில் இருந்தபோது வயதான பறவைகள் குறித்து நானும் கோபாலும் ஒரு சமயம் பேசிக்கிட்டு இருந்தபோது....... வயசாகி பறக்கும் சக்தி இல்லாமப்போனா பறவைகள் இரை கிடைக்காமல் பட்டினி இருந்து செத்துப்போயிரும். அதனால்தான் வீட்டுத் தோட்டத்தில் கொஞ்சம் சாப்பாடு போட்டு வைக்கணும். அக்கம்பக்கம் இருக்கும் பறவைகளுக்கு கொஞ்சமாவது பசி போகணும்.

ராமாயணத்தில் கூட அனுமன் இலங்கையைக்குப் போகுமுன் வயதான ஒரு கழுகரசனைப் பத்திச் சொல்லி இருக்கு. சம்பாதி என்ற கழுகு. ஜடாயுவின் அண்ணன். இந்த வயதான பறக்க முடியாத கிழக்கழுகு சம்பாதிதான் தூரக்கே இருக்கும் இலங்கையைத் தன் கூரிய பார்வையில் பார்த்து அனுமனுக்குத் தீவைப் பற்றிச் சொல்லுது. வயசானாலும் பார்வை மழுங்கலை பாருங்க!!!!!

நண்டு @நொரண்டு -ஈரோடு சொன்னது…

இயற்கையை காக்கவேண்டி அரசுகளே இதனை செய்யும் பொழுது தான் மிகவும் வேதனையாக இருக்கிறது.

கோவி.கண்ணன் சொன்னது…

//சண்டிகரில் இருந்தபோது வயதான பறவைகள் குறித்து நானும் கோபாலும் ஒரு சமயம் பேசிக்கிட்டு இருந்தபோது....... வயசாகி பறக்கும் சக்தி இல்லாமப்போனா பறவைகள் இரை கிடைக்காமல் பட்டினி இருந்து செத்துப்போயிரும். அதனால்தான் வீட்டுத் தோட்டத்தில் கொஞ்சம் சாப்பாடு போட்டு வைக்கணும். அக்கம்பக்கம் இருக்கும் பறவைகளுக்கு கொஞ்சமாவது பசி போகணும்.//

இந்த இடுகையில் முதல் பத்தியை எழுதும் பொழுது உங்கள் கோகி தான் நினைவில் வந்து போனது, எத்தனை வீட்டு விலங்குகள் வயதாகி சாகும் நிலையை எய்துகின்றன என்று நினைக்கையில் உங்க கோகி கொடுத்துவைத்தது.

கோவி.கண்ணன் சொன்னது…

//நண்டு @நொரண்டு -ஈரோடு கூறியது...
இயற்கையை காக்கவேண்டி அரசுகளே இதனை செய்யும் பொழுது தான் மிகவும் வேதனையாக இருக்கிறது.//

இங்கே அரசு மக்கள் குரலுக்கு கொஞ்சம் செவி சாய்பார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. பார்ப்போம் நல்லதே நடக்கும் என்று நினைக்கிறேன்.

Unknown சொன்னது…

முயற்சி வெற்றிபெற வாழ்த்துக்கள்!


சா இராமாநுசம்

கோவி.கண்ணன் சொன்னது…

//புலவர் சா இராமாநுசம் கூறியது...
முயற்சி வெற்றிபெற வாழ்த்துக்கள்!


சா இராமாநுசம்//

வாழ்த்துக்கு நன்றி ஐயா

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

நல்லதொரு முயற்சி...

வெற்றிபெற வாழ்த்துக்கள்...

நன்றி…

suvanappiriyan சொன்னது…

சிறந்த முயற்சி! வெற்றி பெற வாழ்த்துக்கள். தமிழ்நாட்டில் எல்லாம் முடிந்த பிறகுதான் யோசிக்கவே ஆரம்பிப்பார்கள் போலிருக்கிறது. இதே போன்ற விழிப்புணர்வு தமிழகத்துக்கும் தேவை.

வடுவூர் குமார் சொன்னது…

சிங்கையிலா இப்படி!
நகரமைப்பு கழகம் எப்படி அனுமதி கொடுத்தது? எல்லாவித கட்டுமானங்களுக்கு இயற்கை மீது ஏற்படுத்தும் தாக்கம் பற்றிய அறிக்கை சமர்பிக்கபட்டிருக்குமே? அது தான் முதன்மை காரணமாக எடுப்பார்கள். சாலை ஓர மரங்களையே பிடிங்கி நடுபவர்கள் இவ்வளவு மரத்தை வெட்டுவார்களா?எங்கோ தவறு நடந்திருக்கு ஆனாலும் அதை பொதுமக்கள் அரசாங்கத்துக்கு எடுத்துச்சொல்லக்கூடிய வழியும் இருப்பது ஒருவிதத்தில் சந்தோஷமே.

யோகன் பாரிஸ்(Johan-Paris) சொன்னது…

கோவி!
விலங்கினத்துக்கு ஓய்வு உண்டா? ஓய்வென்ன, முடம், முதுமை கூட இல்லையெனலாம்.வாழ்க்கை வட்டத்தில் ஒன்றை ஒன்று தின்று வாழ்வதால் அவை சமநிலை அடைகின்றன. சிம்பன்சிகள் மாமிசமும் உண்ணும், அதன் நெருங்கிய உறவான மனிதன் உண்பதில் ஆச்சரியமல்ல! ஆதிமனிதனும் எல்லாவற்றிலும் அளவோடு இருந்து இன்றுவரை இந்த உலகை நம் கையில் தந்தான். நாம் தான் பேராசையால் இவற்றை அழித்து விட்டோம். என்று குளிசாதனப் பெட்டியை மனிதன் கண்டுபிடித்தானோ!!அன்றே...அழிவு தொடங்கிவிட்டது. அன்றைய தேவைக்கு அதிகமாக வேட்டையாடி உலக உயிர்களைச் சூறையாடிவிட்டான். கடலில் வாழும் மிகப்பெரிய விலங்கு திமிங்கிலம் அதன் உணவு இறால்; கணவாய், சிறுமீன்கள், இதே கடலில் வாழும் மிகப்பெரிய மீனினமான திமிங்கிலச் சுறா இதன் உணவு கடல்நீரில் உள்ள நுண்ணுயிர், நாளோன்றுக்கு பலலட்சக்கணக்கான லீற்றர் கடல் நீரை வடித்து, உணவைத் தேடி கடலையும் சுத்தப்படுத்துவதே அதன் வேலை! சிங்கம், புலி பசித்தானே வேட்டையாடும்.படைத்தவன் சரியாகத் தான் வகுத்துள்ளான்.

கோடிக்கணக்கான மக்கள் வீதியில் குடும்பம் நடத்தும் நம் நாடுகளில் தான் வயது சென்ற கோமாதாவுக்கு , மடுவம் அமைத்துப் பாதுகாக்கிறோம். கோவில் யானைக்கு உல்லாசப் பயண ஏற்பாடு செய்கிறோம்.
நம் நாட்டில் மனித உயிரின் மதிப்பைப் பார்த்தீர்களா? நீலச்சிலுவையின் செயற்பாடுடன் ஒப்பிடும்போது செஞ்சிலுவை ஆழ்ந்த தூக்கத்தில் இருப்பது நம் நாடுகளில்...
இவை ஒரு புறம் இருக்க.... சிங்கையில் உங்கள் அழகிய வனத்தை அழிக்க முற்பட்டது. மிக ஆச்சரியம் தருகிறது. உங்கள் போராட்டம் வெற்றி பெறவேண்டும். பணமிருப்பதால் சவூதி அரேபியா போல் கடலினுள் செயற்கைக் குடியிருப்பு அமைக்கக் கூடாதா? இருக்கும் சொற்ப காடுகளில் கைவைக்க முற்படுவது வேதனை தருகிறது.
நீங்கள் , இட்டுள்ள வெண்வயிற்றுக் கழுகுகை , ஈழத்தில் ஆலா என்போம். சோடி சோடியாக உயர்ந்த ஆல்,அரசு,பனைமரங்களில் கூடுகட்டி வாழும், அவற்றின் பிரதான உணவு மீன், கடல் பாம்பு
ஆலா என்பது கட்டாயம் நீர்ப்பறவையைச் சுட்டும் பெயர். ஆல் என்பது நீரைச் சுட்டும் சொல் (என் முகநூல் பக்கத்தில் ஒரு குறிப்பு எழுதியுள்ளதைச் சுட்டுகின்றேன். வெண்ணகடு நீர்க்கழுகு (white-bellied Sea Eagle) என்பது ஆலா இல்லாமலும் இருக்கலாம் என்பது என் கருத்து. அகடு = வயிறு
ஆனால் ஆலா என்றால் White-bellied Sea Eagle என்கிறது தமிழ்ப் பேரகராதி.

மாதேவி சொன்னது…

நல்ல முயற்சி. கழுகுகள் நிம்மதியாக வாழட்டும்.

சார்வாகன் சொன்னது…

வணகக்ம் சகோ,
நல்ல பதிவு,முயற்சி வெற்றி பெறட்டும்.வாழ்த்துக்கள்
நன்றி

பெயரில்லா சொன்னது…

நல்லதொரு முயற்சி .. சிங்கப்பூர் போன்ற சிறிய நாடுகளில் நிலப்பற்றாக்குறைகளுக்காக காடுகளை அழிக்கப் பார்க்கின்றனர்.. ஆனால் மக்களின் பொது உணர்வும், ஒற்றுமையும், அக்கறையும் காடுகளைக் காப்பாற்றும் என நம்புகின்றேன். அத்தோடு மக்களின் குரல்களை அரசும் செவிமடுக்கும் சூழல் இருப்பதால் அந்த கழுகுகள் நிம்மதியாக வாழும் என்று நினைக்கின்றேன் ..

நம் சென்னையிலும் பள்ளிக்கரணையில் சதுப்பு நிலங்களும், பறவைகளும் இருந்தன. பின்னர் அவை அழிக்கப்பட்டு இப்போ எந்த நிலையில் இருக்குனு தெரியல.. பாதி இடத்தில் குப்பையைக் கொட்டினார்கள்.. பிறகு ப்ளாட் போட்டு விற்றார்கள். மக்களும் நமக்கென்ன என போய்விட்டார்கள் ...

புதுவையின் ஆரோவில் பகுதியில் நல்லக் காடுகளை உருவாக்கி உள்ளார்கள் .. அதைத் தவிர்த்து தமிழகத்தில் காடுகள் அழிந்ததே ஒழிய !!! உருவாக்கப்படவோ, காக்கப்படவோ இல்லை ..

'பசி'பரமசிவம் சொன்னது…

பிறருக்கு முன்னுதாரணமாக வாழ்கிறீர்கள்.
தங்களின் கூட்டு முயற்சி வெற்றி பெற வேண்டும்.
அழகிய கிராமத்தில் பிறந்துவிட்டு, தொடர்ந்து நகரத்தில் வாழும் நிலைக்குத் தள்ளப்பட்டதை நினத்து நினைத்த போதெல்லாம் வருந்துபவன் நான். மனதுக்குகந்த சூழலில் வாழ்கிறீர்கள்.
மிக்க மகிழ்ச்சி கண்ணன்.

-/பெயரிலி. சொன்னது…

தலைப்பைப் பார்த்து ஏதோ டெஸோ மாடுநாடு பற்றிய கட்டுரையாக்கும் என்று வந்து ஏமாந்தேன் :-(

ராஜ நடராஜன் சொன்னது…

ஆக்கபூர்வமான செயலில் இணைந்து கொண்டதற்கு வாழ்த்துக்கள்.உங்கள் குழுவின் தீர்மானம் நிறைவேறுகிற்தா அல்லது அரசாங்கத்தின் மாற்று சிந்தனைகளினால் உங்களுக்கு எதிரான நிலை உருவாகிற்தா என்பதை மீண்டும் ஒரு வருடம் கழித்து சொல்லுங்கள்.

தற்போதைக்கான காட்டின் சூழலுக்கு வாழ்த்துக்கள்.

கோவி.கண்ணன் சொன்னது…

//யோகன் பாரிஸ்(Johan-Paris) கூறியது...
கோவி!
விலங்கினத்துக்கு ஓய்வு உண்டா? ஓய்வென்ன, முடம், முதுமை கூட //

நெடிய விளக்கமான பின்னூட்டத்திற்கு நன்றி அண்ணன்

கோவி.கண்ணன் சொன்னது…

//சுவனப் பிரியன் கூறியது...
சிறந்த முயற்சி! வெற்றி பெற வாழ்த்துக்கள். தமிழ்நாட்டில் எல்லாம் முடிந்த பிறகுதான் யோசிக்கவே ஆரம்பிப்பார்கள் போலிருக்கிறது. இதே போன்ற விழிப்புணர்வு தமிழகத்துக்கும் தேவை.//

நன்றி சுவனப் பிரியன்

கோவி.கண்ணன் சொன்னது…

//திண்டுக்கல் தனபாலன் கூறியது...
நல்லதொரு முயற்சி...

வெற்றிபெற வாழ்த்துக்கள்...

நன்றி…//

மிக நன்றி

கோவி.கண்ணன் சொன்னது…

//இக்பால் செல்வன் கூறியது...
புதுவையின் ஆரோவில் பகுதியில் நல்லக் காடுகளை உருவாக்கி உள்ளார்கள் .. அதைத் தவிர்த்து தமிழகத்தில் காடுகள் அழிந்ததே ஒழிய !!! உருவாக்கப்படவோ, காக்கப்படவோ இல்லை ..//

தமிழகத்தில் காடுகள் தான் அரசியல் வாதிகளின் சொத்துக்களாக இருந்தது. அதை சுரண்டிவிட்டு தற்பொழுது மலைகளை சுரண்டுகிறார்கள்

கோவி.கண்ணன் சொன்னது…

//முனைவர் பரமசிவம் கூறியது...
பிறருக்கு முன்னுதாரணமாக வாழ்கிறீர்கள்.
தங்களின் கூட்டு முயற்சி வெற்றி பெற வேண்டும்.
அழகிய கிராமத்தில் பிறந்துவிட்டு, தொடர்ந்து நகரத்தில் வாழும் நிலைக்குத் தள்ளப்பட்டதை நினத்து நினைத்த போதெல்லாம் வருந்துபவன் நான். மனதுக்குகந்த சூழலில் வாழ்கிறீர்கள்.
மிக்க மகிழ்ச்சி கண்ணன்.//

பாராட்டுக்கு மிக்க நன்றி ஐயா

கோவி.கண்ணன் சொன்னது…

//-/பெயரிலி. கூறியது...
தலைப்பைப் பார்த்து ஏதோ டெஸோ மாடுநாடு பற்றிய கட்டுரையாக்கும் என்று வந்து ஏமாந்தேன் :-(//

நான் பொய்யாக தலைப்பு வைக்க மாட்டேன், மேட்டர் இருக்கே. உங்க எதிர்பார்ப்பு வேற :)

கோவி.கண்ணன் சொன்னது…

//ராஜ நடராஜன் கூறியது...
ஆக்கபூர்வமான செயலில் இணைந்து கொண்டதற்கு வாழ்த்துக்கள்.உங்கள் குழுவின் தீர்மானம் நிறைவேறுகிற்தா அல்லது அரசாங்கத்தின் மாற்று சிந்தனைகளினால் உங்களுக்கு எதிரான நிலை உருவாகிற்தா என்பதை மீண்டும் ஒரு வருடம் கழித்து சொல்லுங்கள்.

தற்போதைக்கான காட்டின் சூழலுக்கு வாழ்த்துக்கள்.//

மன்னரே மிக்க நன்றி.

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்