பின்பற்றுபவர்கள்

23 ஆகஸ்ட், 2012

கு_கா_ன் பே_சு வி_ஞ்_ப் போ_சு !


பிரச்சனை முடிஞ்சதா இல்லையான்னு தெரியவில்லை,  பதிவர் ஆரூர் மூனா செந்தில் மற்றும் நாய் நக்ஸ் - நக்கீரன் ஆகிய இருவர் தனிப்பட்ட முறையில் பேசியதை திரை ஒற்று (ஸ்கீரீன் ஷாட்) எடுத்து போட்டு, பதிவர் சந்திப்பு என்றாலே குடிகாரர்கள் கூடிக் களிக்கும் இடம் என்பது போன்ற தோற்றம் விளைவிக்க ஒரு முயற்சி மதவாதப் பதிவர்களால் நடந்தது,   இவங்க இரண்டு குழுவிற்கும் என்ன பிரச்சனை என்று ஊகித்தால், தமிழ்மணம் மகுட போட்டிகளில் அண்மைக்காலமாக முனா செந்திலின் இடுகைகளும் இடம் பிடிப்பது கூடக் காரணமாக இருக்கலாம் என்பது எனது தனிப்பட்ட கருத்து, தமிழ்மணம் மகுடம் சூடும் பதிவுகளின் 'தரம்' உருவாக்கப்படுபவை / தெரிந்தவை தான் என்பதால் நமக்கு அதில் ஏதும் நட்ட/நாட்டமில்லை, ஆனால் அதை 'தரமாக' நினைப்பதுடன் அதில் தங்கள் 'தரமான' பதிவுகளை போட்டிப் போட்டு வாக்குக் குத்தி இணைப்பவர்களுக்கும் மூனா செந்தில் மீது எரிச்சல் ஏற்பட்டிருக்க வாய்ப்பு உள்ளது என்பது எனது அனுமானம் என்றாலும் அதில் உண்மைகள் இருக்காது என்று சொல்ல ஏதேனும் வாய்ப்புள்ளதா என்பதை வாசிப்பவர்களின் பார்வைக்குவிட்டுவிடுகிறேன், நான் தனிப்பட்டு யாரையும் குறைச் சொல்லவில்லை, குழுவாகச் செயல்படுபவர்கள் குறித்து தான் சொல்கிறேன், விமர்சனங்கள் என்பது தவிர்த்து தனிமனித தாக்குதலில் எனக்கு விருப்பம் கிடையாது, தவிர 'முகம் தெரியாதவர்களை' பழகி இருக்காதவர்களுடன் விவாதம் செய்வதையும் கூட நான் தவிர்த்தே வருகிறேன், மூனா செந்திலோ, நக்கீரனோ கூட எனக்கு நேரடியாகவோ, மின் அஞ்சல் மூலமாகவோ தொடர்ப்பு அற்றவர்கள், இக்பால் செல்வன், சார்வாகன், ராஜ நடராஜன் ஆகியோருடன் கூட எனக்கு நேரடித் தொடர்புகள் எதுவும் கிடையாது,  குழுவாக செயல்படும் போது அதில் இணைந்திருப்பவர்களின் தனிப்பட்ட செயல்பாட்டுக்கும் சேர்த்தே முட்டுக் கொடுக்கும் மூட்டுவலி பற்றி அறிந்தவன் என்பதால் எந்த ஒரு குழுவிலும் சேர்ந்து செயல்படுவதில் விருப்பமற்றவன். இருந்தாலும் பதிவர் சார்ந்த ஒருங்கிணைப்பு சந்திப்புகளில் கலந்து கொள்வதுண்டு. வார இதழில் வாசிப்பாளர் போல் வாசித்துவிட்டு கருத்துகளை பின்னூட்டமாகச் சொல்வதுடன் சரி. இந்தக் கருமாந்திரத்தை நான் ஏன் எழுதனும் ? யாருக்காவது முட்டுக் கொடுத்து துட்டுப் பார்க்கப் போகிறேனா ? என்று கூட ஒரு சிலர் நினைக்கக் கூடும் என்பதால் விளக்கம் பின்னர் அளிக்கிறேன்.

******

ஒரு பழமொழி சொல்லுவாங்க 'குடிகாரன் பேச்சு விடிஞ்சா போச்சு' கொலை வெறியோடு வசைபாடியதையோ, மதுவாடையுடன் சொட்டும் எச்சிலுடன் மேலே விழுந்து அன்பு செலுத்த முயற்சித்தையோ போதை தெளிந்து விடிந்தவுடன் மறந்துவிட்டு, யாரேனும் அதுபற்றிச் சொன்னால் 'ராத்ரி போதை அதிகமாச்சு மாப்ளே' என்று வழிந்துவிட்டு மறந்துவிடுவார்கள், குடிகாரர்களில் 95 விழுக்காட்டினர் கட்டிப் புரண்டு சண்டை இடுபவர்களோ, சாக்கடையில் விழுந்து கிடப்பவர்களோ கிடையாது, இருந்தாலும் மது உடலுக்கு நல்லது இல்லை என்பதால் அது 'தீய பழக்கம்' என்று வகைப்படுத்தப்பட்டு தவிரக்கச் சொல்லி வலியுறுத்தப்படுகிறது. பருவ வயதைக் கடந்தவர்களின் தனிப்பட்ட விருப்பம் என்ற வகையில் அரசுகளே மதுபான கடைகளை திறந்து விற்பனை செய்கின்றன என்பதால் மது ஒட்டு மொத்த சமூகத்தீன் சீர்கேடு என்று சொல்ல ஒன்றும் இல்லை, உடல் நலன் என்ற அளவில் தனிப்பட்ட மனிதனுக்கு மது குறித்த விழிப்புணர்வை ஊட்டுகிறார்கள், ஆனாலும் மதுவும் மருந்தாகும் என்ற அடிப்படையில் போதைக் குறைவான ஒயின் வகைகளை இதய நோயாளிகளுக்கு இரத்த சுத்திகரிப்புக்காக மருத்துவர்களும் பரிந்துரை செய்கிறார்கள்.  எனவே மதுவின் நன்மை தீமை என்பவை எல்லாம் அவற்றின் அளவான மற்றும் தேவையான பயன்பாடுகளைப் பொருத்து மாறும். ஒட்டு மொத்தமாக மது சமூகத்தின் சாபக் கேடு என்று சொல்ல முடியாது.

மனித சமூகத்தின் சாபக் கேடுகள் மதங்கள் தான், மதுவைக் காட்டிலும் போதைத் தரக் கூடியவை மதங்களே, நானும் அவனும் உற்ற நண்பர்களாக இருந்தாலும் எதோ ஒரு அசம்பாவிதத்தினால் மத ரீதியில் பிளவு பட்டு நிற்கும் பொழுது என் கையில் இருக்கும் அறிவாள் அவனைப் பதம் பார்க்காது என்பதற்கு மதம் உத்திரவாதம் கொடுக்காது, ஆனால் மனித நேயமும், நட்பும் உத்திரவாதம் அளிக்கும், அவை மதங்களினால் சொல்லிக் கொடுக்கப்பட்டு வருவதில்லை.

எந்த ஒரு மதம் சார்ந்த தீவிர வாதச் செயலிலும் குடிகாரர்களின் பங்கு என்று எதாவது இருக்கிறதா ? குடிகாரன் என்பதால் மட்டுமே குண்டு வைத்தான் என்று ஏதேனும் செய்திகள் வந்ததுண்டா ? துளி கூட ஆல்ஹால் இல்லாமல் போதை ஏற்றும் மதத்திற்கு இருக்கும் பண்பு நலன்களில் மிகக் குறைந்த விழுக்காடே ஆல்ஹால் சேர்ந்த மதுவில் இருக்கிறது. குழுவை ஏற்படுத்தவும், குழுவிற்கு போதை ஏற்றவும் சக்தி படைத்தவை மதங்கள், அதை ஒப்பிட டாஸ்மாக் கடைகளோ, குடிகாரர்களோ அற்பம் தான். 

மதப்பற்றாளர்கள், மதவெறியர்கள் போதை பற்றிய விழிப்புணர்வு பிரச்சாரம் செய்தால் அதன் முரண்பாடுகள் எத்தகையதாக இருக்கும் என்பதை மதம் - மது - எது போதை ? என்பதை ஒப்பிட்டு தெரிந்து கொள்ளலாம். நான் பல இடுகைகளில் எழுதிவருவது 'மதவெறி/சாதிவெறி - மதப்பற்று/சாதிப்பற்று' இவைகளுக்கான அடைப்படை வேறுபாடு சம்பவம் நடந்த பிறகு, சம்பவம் நடப்பதற்கு முன்பு' என்பது தவிர்த்து வேறுபாடுகள் இல்லை, அதாவது சாதி / மதம் சார்ந்து குழுவாக ஊர்வலம் செல்லும் போது கூட்டத்தில் ஏதேனும் சலசலப்பு அல்லது கூட்டத்தை நோக்கி சிறு கல்வீச்சு நடந்தாலும் கூட அதே குழு சாதி வெறி / மதவெறி குழுவாக மாறி தாண்டவம் ஆடிவிடும் இதை மறுப்பவர்கள் மதவெறிக்கும் மதப்பற்றிற்கும் பெருத்த வேறுபாடுகள் உள்ளது என்று  எனக்கு பாடம் நடத்தலாம்.

******

சென்ற மாதம் ஐயா புலவர் இராமனுசம் அவர்களை அவரது சிங்கை சுற்றுலா பயணத்தின் போது சந்தித்தேன், சென்னைப் பதிவர்களின் மாபெரும் சந்திப்புக்கு திட்டமிட்டு பொறுப்பேற்று செயல்படுவதாக குறிப்பிட்டு இருந்தார், அவருக்கு தனிப்பட்டு லாப நட்டமில்லாமல் (நேர விரயம் கொஞ்சம் பண விரயம் என்கிற நட்டம் இருந்தாலும்) இப்படி ஒரு முயற்சியை அவரது 80 வயதை கடந்த நிலையில் எடுத்திருப்பது வியப்பாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தது, கிட்டதட்ட நூறு பேருக்கும் மேற்பட்ட பதிவர்களை தனிப்பட்டு தொடர்பு கொண்டு சந்திப்பின் பொழுது அவரவரின் செயல்பாடுகள் குறித்த திட்டமெல்லாம் தீட்டி ஒருங்கிணைப்பதன் கடினம் எனக்கு புரிந்தது, 'ராமா - கிருஷ்ணா, என்பதுடன் பேரக் குழந்தைகளுடன் பொழுதை கழிக்க வேண்டிய வயதில் தமிழ் சார்ந்த நிகழ்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து அவர் செயல்படுவதை என்னால்  மிகச் சாதரண நிகழ்வாக எடுத்துக் கொள்ள முடியவில்லை. அண்ணா காலத்தில் அவருடன் தொடர்பு கொண்டவர்களில் மிகச் சிலரே எஞ்சி இருக்கும் நிலையில் அது போன்ற ஒருவரின் தமிழ் நலம் குறித்த செயல்பாடுகளை வரவேற்காவிட்டால் நட்டம் நமக்குத்தான் என்பதால் ஐயாவின் முயற்சியை பாராட்டி பதிவர் சந்திப்பு விழா வெற்றிகரமாக நடக்க வாழ்த்துக் கூறினேன், எல்லாம் கூடிவரும் சமயத்தில் பதிவர் சந்திப்பு என்றாலே குடிகாரர்களின் சம்மேளனம் என்று கிளப்பிவிடுவது கண்டிக்கத் தக்கதுடன் அத்தகைய தூண்டல்களை துண்டித்து வெற்றிகரமாக பதிவர் சந்திப்பு செயல்பாடுகள் நடந்தேற வேண்டும், மூனா செந்திலோ, நக்கீரனோ ஒரு பெரியவர் எடுக்கும் முயற்சியில் 'தண்ணீ' அடித்துவிட்டு கலந்து கொள்வார்கள் என்பது போன்ற வதந்திகளை நான் நம்பவில்லை. மற்றபடி அந்த நிகழ்வு தவிர்த்த வேளைகளில் அவர்கள் குடிப்பதோ விழுந்து கிடப்பதோ யாருக்கும் நட்டம் ஏற்படுத்தாது என்றே நினைக்கிறேன்.

பொதுவாகவே நண்பர்களின் திருமணத்திற்கு அழைப்பின் பேரில் செல்லும் நண்பர்கள் குடியுடன் அதிகாலை 3 மணி வரை சீட்டாடிக் கொண்டு இருந்தாலும் காலையில் எதுவும் நடைபெறாது போல் திருமணத்தில் கலந்து கொள்வார்கள், மட்டையானவர்கள் மண்டபம் பக்கம் தலையை காட்டமாட்டார்கள், அதைத் தாண்டி அசம்பாவிதங்கள் பெரிதாக எதுவும் நடைபெறாது, எனவே குடிப்பழக்கம் உள்ளவர்களை நிகழ்ச்சிக்கு அழைப்பது தவறு என்று சொல்வதைக் கூட நான் மறுக்கிறேன், அப்படியே சொன்னாலும் சொல்லுபவர்களின் தகுதிகள் அறிந்து அதன் பிறகே அதை பரிசீலனை செய்யலாமா  புறந்தள்ளலாமா என்பதெல்லாம் முடிவு செய்யப்பட வேண்டும்.

மதுவின் தீமையை எடுத்தும் சொல்ல விரும்பும் எவரும் மதவாதத்தின் தீமைபற்றியும் விழிப்புணர்வு கொடுத்தால் அவர்களின் "நல்ல எண்ணம்" குறித்து அவர்களே கூட மகிழ்ந்து கொள்ளலாம். நாலு பேரு மட்டும் தான் இஸ்லாமியப் பதிவர்கள் இல்லை என்பதால் இதை 'இஸ்லாமியப் பதிவர்களின் எதிர்ப்பு' என்றும் வகைப்படுத்துவதை நான் புறக்கணிக்கிறேன், மத போதையுடன் 'தமிழ்மணம் மகுட' போதையும் சேர்ந்தால் அதன் விளைவுகள் எத்தகையது என்பதை ஒப்பிட்ட குடிகாரர்களின் போதை பெரிய விசயமே இல்லை,

23 கருத்துகள்:

சார்வாகன் சொன்னது…

வணக்கம் சகோ,
//மதுவின் தீமையை எடுத்தும் சொல்ல விரும்பும் எவரும் மதவாதத்தின் தீமைபற்றியும் விழிப்புணர்வு கொடுத்தால் அவர்களின் "நல்ல எண்ணம்" குறித்து அவர்களே கூட மகிழ்ந்து கொள்ளலாம். நாலு பேரு மட்டும் தான் இஸ்லாமியப் பதிவர்கள் இல்லை என்பதால் இதை 'இஸ்லாமியப் பதிவர்களின் எதிர்ப்பு' என்றும் வகைப்படுத்துவதை நான் புறக்கணிக்கிறேன், மத போதையுடன் 'தமிழ்மணம் மகுட' போதையும் சேர்ந்தால் அதன் விளைவுகள் எத்தகையது என்பதை ஒப்பிட்ட குடிகாரர்களின் போதை பெரிய விசயமே இல்லை,//

அருமையான விளக்கம்.

நம் தமிழ்மண தாவா சகோகளின் பொதுத் தளத்தில் பகிரப்படும் தனிப்பட்ட கருத்துகளுக்கு பதில் சொல்கிறோம்.இதில் மதம்(அல்லது மார்க்கம்) தொடர்பில்லாதது.

நம் பதிவில் ஹலால்(0.01% >ஆல்கஹால்) குடிகாரர் ஹராம்(0.01% > ஆல்கஹால்) குடிகாரரை விமர்சிகாமல் குடிமகன்களின் ஒற்றூமைக்காக பாடுபட வேண்டும் என விள்க்கி இருக்கிறோம்.
************
அனைவருக்கும் பொது இடத்தில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்ற நாகரிகம் உண்டு.

ஆகவே மதவாதிகள் பொது தளத்தில் இடும் கருத்துகளில் நாகரிகம் காட்ட அன்புடன் வேண்டுகிறோம்.

பதிவர்கள் மாநாடு வெற்றி பெற வாழ்த்துக்கள்!!!

நன்றி

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

நல்ல அலசல்...

' புகழ் ' போதை விடவா ?

நன்றி...

நண்டு @நொரண்டு -ஈரோடு சொன்னது…

சரியா சொன்னீங்க .

Avargal Unmaigal சொன்னது…

மது குடிக்காமல் இருந்து மனித நேயம் இல்லாமல் இருக்கும் மதவாதிகளை விட மது குடித்துவிட்டு மனிதநேயத்துடன் இருக்கும் மத சார்பற்ற மனிதர்களே இமயத்தை விட மிக உயர்ந்தவர்கள்

தருமி சொன்னது…

நானும் தொடர்புள்ள பதிவுகளைப் படித்து விடலாமாவென முயன்றேன். தோல்வி. கொடுத்தால் வாசித்துக் கொள்வேன்.

உங்கள் பதிவுக்கு நன்றியும் பாராட்டும்.

Unknown சொன்னது…

நல்ல பதிவு சகோ.

புகழினில் போதை இல்லையோ
பிள்ளை மழலையில் போதை இல்லையோ
காதலில் போதை இல்லையோ
கருணையில் போதை இல்லயோ
நீ நினைக்கும் போதை வரும் நண்மை செய்து பாரு
நிம்மதியை தேடிச் சென்றால் உண்மை சொல்லிப் பாரு....

குடிமகனாக இருந்தும் கண்ணதாசன் எவ்வளவு தெளிவாக சொல்லியிருக்கிறார். மது போதையைவிட மத போதையில்தான் பாதிப்பு அதிகம் இருப்பதாகவே கருதுகிறேன். மது அருந்தினால் போதை இருக்கும் வரையில் தான் அதன் பாதிப்பும் இருக்கும். ஆனால் மதபோதை அவன் வாழ்நாள் வரையில் தீவிரமாகித் தெளியாத பாதிப்பை ஏற்படுத்திவிடும்.

இனியவன்....

ராஜ் சொன்னது…

உண்மை தான் பாஸ். உங்களுடன் 100% உடன்படுகிறேன்.
~முஹம்மத் ஆஷிக் citizen of world~ சம்பந்தமே இல்லாம செந்தில் பதிவுல வந்து ஆஜர் ஆகும் போதே எனக்கு லைட்டா பொறி தட்டிச்சு.
citizen of world செந்தில் பதிவுல வந்து அவரை வெறுப்பு ஏற்றுவது போல் கேள்வி கேட்டார், வழக்கம் போல் அது வழ வழா கொழா கேள்வி தான். பதிவுக்கு சம்பந்தமே இல்லாத கேள்வி.
அவரை செந்தில் தனது பாணியில் முக்கை உடைத்து திருப்பி அனுப்பி விட்டார், அந்த கோபம் தான் அவர்கள் செந்திலை குறி வைத்து தாக்க காரணம்.
citizen of world செந்தில் பதிவில் இட்ட பின்னுட்டம்...
//சென்ற பதிவு 'Tamilmanam மகுடம்' என்பதால்... நீண்ட நாள் கழித்து இங்கே வந்தேன்..! அந்த பதிவு எவ்விதத்திலும் என்ன கவராததால்... வந்ததுக்கு அடையாளமாக ஒரு பின்னூட்டமிட நாடினேன்..! //
//அதற்கு பதில் சொல்ல வில்லை என்றாலும் கூட பரவாயில்லை. மனம் புண்படும்படி கேலி பேசி இருந்தீர்கள். வருத்தப்பட்டேன். //
இவங்க பாஷையில வருத்தம் என்றல் உன்னை திருப்பி அடிப்பேன் என்று தான் பொருள்.
இதுல இருந்தே தெரியுது, அவங்கனால் தங்கள் குழுவை சேராத பதிவு ஒன்று மகுடத்தில் வந்துவிட்டதே என்ற வயித்தெரிச்சல் காரணமாக தான் அவங்க செந்திலை தாக்கி இருக்காங்க.
அதுவும் இல்லாம அவங்களுக்கு மத்த பதிவர்கள் ஒத்துமையா இருந்தா தான் ஆகாதே. அதனாலே பதிவர் சந்திப்பில் குழப்பம் விளைவிக்க அது போன்ற ஒரு பதிவை அவர்கள் "குழு பதிவில்" போட்டு ஒரே பதிவில் ரெண்டு மாங்கா அடிக்க முயற்சி செய்து இருக்கிறார்கள், (செந்தில் மீது தனி மனித தாக்குதல், பதிவர் சந்திப்பில் குழப்பம் ஏற்படுத்துவது), ஆனால் வழக்கம் போல் அவர்கள் முயற்சி தோல்வியில் முடிந்து விட்டது.

அஞ்சா சிங்கம் சொன்னது…

என்ன முயற்சி செய்தாலும் பதிவர்கள் மாநாட்டை வெற்றிகரமாக நடத்தி காட்டுவோம் .
நீங்கள் சந்தேக பட்டது சரிதான் அந்த சந்தேகம் எனக்கும் உண்டு .
பாவம் அவர்கள் நினைத்திருப்பார்கள் தேனீ கூட்டில் கல் எறிந்தால் தேன் மட்டும்தான் கிடைக்கும் என்று .

ராஜ நடராஜன் சொன்னது…

கோவி!ஒரு முறைதான் மஞ்சத்தண்ணி ஊத்தி பழைய நினைவுகளை அசைப்போடுறீங்கன்னு பார்த்தா தொடர்ந்து மஞ்சத்தண்ணி ஊத்தி கெடா வெட்டுவீங்க போல இருக்குதே!(நான் சொல்வது மஞ்சள் வரி குறிப்பான்களை)

இருக்குற சண்டை போதாதுன்னு நீங்க வேற புது மகுட கோணத்தில் பைனாகுலர் பார்க்கிறீங்களே!இது எந்த வகையில் சரியென்று எனக்குப் புரியவில்லை.நான் வாசித்த வரையிலும் ஸ்கீரின் ஸாட் ஒன்றைத் தவிர மனிதாபிமனி குழுவின் பதிவு கருத்து சரியானது மாதிரியாகவே தோன்றியது.ஆ.மு.செந்திலுக்கு தனது பெயரைக் குறிப்பிட்ட கோபம் நியாயம் என்ற போதிலும் பின்னூட்டக்கோப வரிகள் சரியெனப்பட வில்லை.கோபங்களால் குழுவாக இணைந்து மதம் பரப்பும் கோபத்தோடு இதுவும் சேர்ந்து வெறுப்பு உணர்ச்சி மட்டுமே மிஞ்சும்.எதை முன்னிலைப்படுத்தக்கூடாது என்ற அடிப்படை உணர்வுகள் அற்றும் கூட மதப்பதிவுகள் வந்தாலும் மதசார்பு பதிவர்கள் பின்னூட்டங்களில் பொறுமையும் காக்கிறார்கள் என்பது எனது கணிப்பு.

பதிவில் நீங்கள் குறிப்பிட்ட மது அருந்துபவர்களின் தேவைகள்,அவசியங்களோடு மது அருந்துவோரின் குணநலன்கள் மனிதனுக்கு மனிதன் வித்தியாசப்படுவதால் தமிழகத்தின் மதுக்கலாச்சாரம் இன்னும் நீண்ட விவாதப்பொருளே.முக்கியமாக அடிமட்ட பொருளாதார வாழ்க்கை வருமானத்தின் ஒரு பகுதி போதைக்கு சென்று விடுவதும்,குடும்ப கட்டமைப்பு சிதைவதும் சிந்தனைக்குரியது.ஆனால் இங்கே பதிவர்களின் விவாதப்பொருளோடு அதனை ஒப்பீடும் செய்ய இயலாது.

தமிழர்கள் அடிப்படையில் ஈகோ குணம் படைத்தவர்கள் என்று நினைக்கின்றேன்.ஆ.மு.செந்தில் ஸ்கீரின் ஸாட்டை எடு என்பதோடு ஏனைய சக பதிவர்களின் பின்னூட்டங்களும் குறிப்பிடும் போது கண்டனங்கள்,சிபாரிசுகள் வரும் போது மனிதாபிமானி அதனை டேக் இட் ஈஸி செய்திருக்கலாம்.அப்படியும் அவர் வருத்தம் தெரிவித்திருந்தார்.தற்போதைய கள நிலை என்னவென்று தெரியவில்லை.

மது விவாதம் பதிவர்களின் கலந்துரையாடலுக்கு பூஸ்ட்டா அல்லது கண் திருஷ்டி பொட்டா என்பதை பதிவர் விழாவின் இறுதியில் வரும் பதிவுகளோடு பார்ப்போம்.கலந்துரையாடல் சிறப்பாக அமைய வாழ்த்துவோம்.

புலவர் இராமனுசம் குறித்து அறிய தந்ததற்கு நன்றி.அண்ணாவின் கல்லூரித்தோழர்களில் ஒருவரின் மகன் என் நண்பராக இருந்தார்.

ராஜ நடராஜன் சொன்னது…

இனியவன்!கண்ணதாசன் கவிதைகள் ரசிக்க மட்டுமே சிறந்தவை.அவரது வாழ்க்கை முறை நேர்,எதிர் விமர்சனத்துக்குரியது.

suvanappiriyan சொன்னது…

நானும் குடிச்சிருக்கேன்(ஹலால் பீர்): குடிப்பாரை பார்த்திருக்கேன்:

நல்ல புத்தி வருவதில்லை குடியிலே........

ஒரு நாய் கூட மதிப்பதில்லை தெருவிலே...

சொன்னாலும் புரிவதில்லை... சொந்த புத்தி ஏதுமில்லை....

பட்டால்தான் தெளிவு வரும் அறிவிலே.....(கண்ணதாசனைப் போல்)

பட்டால்தான் தெளிவு வரும் அறிவிலே....'

வர்ட்டா ......:-)))))))))

கோவி.கண்ணன் சொன்னது…

வாங்க சகோ சுபி,

நாலு பொண்டாட்டிக் கட்டிக்கிட்டு மாற்றி படுத்து எந்திரிச்சாலும் அல்லா ஆசிர்வதிப்பார், திருமணமே ஆகமலோ அதற்கு வாய்பில்லாதவனோ ஒரு முறை பாலியல் தொழிளாலியிடம் சென்று வந்தாலும் பாவம் செய்துவிட்டான் என்று அல்லா தண்டித்துவிடுவார் என்று பாடம் எடுப்பவர் நீங்கள், நீங்க எது சொன்னாலும் சரியாகத்தான் இருக்கும். ஹலல் பியர் பற்றி குரானோ,ஹதீசோ ஆதாரம் காட்டுவிங்க இல்லாட்டிலும் பிராக்கெட் போட்டு விளக்கம் கொடுப்பிங்க, நடத்துங்க.

கோவி.கண்ணன் சொன்னது…

//இருக்குற சண்டை போதாதுன்னு நீங்க வேற புது மகுட கோணத்தில் பைனாகுலர் பார்க்கிறீங்களே//

மகுட போதை பற்றி உங்களுக்கு இன்னும் ஐயம் இருக்கிறது என்றே நினைக்கிறேன்.

:)

யோகன் பாரிஸ்(Johan-Paris) சொன்னது…

எனக்கு மது, புகைப் பழக்கமில்லை.அதற்காக மது, புகை பாவிப்போரை வெறுப்பதுமில்லை. சில நிகழ்வுகளில் மது அருந்திச் சற்று மகிழும் நண்பர்கள் எனக்குண்டு. ஆனால் அவர்கள் பெரிய தொல்லை கொடுப்போரில்லை.
இந்த பதிவர் சந்திப்பில் கூட , அதற்கு எந்த பாதிப்புமின்றி தம் சொந்த செலவில் அருந்துவோரை தடுக்க வேண்டிய அவசியமில்லை.
மது அருந்தாக் கயவர்களையும், மது அருந்தும் கண்ணியவான்களையும் நாம் கண்டுவிட்டோம்.
நமது நாடுகளில் துப்பரவுப் பணியில் ஈடுபடும் பலர், மது இல்லாவிடில் அந்த வேலைகளைச் செய்யமுடியாது. அவனிடம் மோட்சம் பற்றியும்,புனித நூல்களைப் பற்றியும் பேசமுடியுமா?
உலகம் பூராகவும் மது அளவுடன் அங்கீகரிக்கப்பட்டது. மருத்துவக் குணங்களும் உண்டென நிரூபிக்கப்பட்டது.
மது அளவுக்கு மீறிப் பாவிப்பவைரையே பாதிக்கும், பக்கத்திலிருப்பவரைப் பாதிக்காது. மதிவினால் வரும் வியாதிகள் கூட தொற்றுவியாதியல்ல!
ஆனால் புகை பிடித்தல் கொடியது. புகைபிடிப்பவனைச் சுற்றியுள்ளவர்களையும் பாதிக்கும். அத்துடன் , புகை பிடிப்பவர்களுக்கு வரும் காசநோய், ஒரு பயங்கரத் தொற்று நோய். அதனால் இந்த பழக்கம் உள்ளவர்கள் யாராயினும், எந்தச் சமயத்தைச் சேர்ந்தவராகிலும், ஒதுக்கி வைக்கப்படவேண்டியோர்.
எனினும் இஸ்லாமியர்கள் மது அருந்துவதில்லை; ஆனால் பலர் புகை பிடிக்கிறார்கள். புனித நூலில் தடுக்கப்படவில்லை எனும் காரணத்தால், இத் தீமையைத் தமக்கும் தமைச் சூந்திருப்போருக்கும் தீமையென அறிந்தும் செய்கிறார்கள்.
அதனால் மது, புகை யுடன் ஒப்பிடும் போது, குறைந்த தீமையுள்ளது. அதனால் மது அருந்துவோரிலும் புகைபிடிப்போரையே தீண்டத் தகாதவர்களாகக் கொள்ளவேண்டும்.
அவுஸ்ரேலிய அரசு; சமீபத்தில் புகைத்தலுக்கு எதிரான போர்க் கொடியைத் தூக்கியுள்ளது. அதைப் பல நாடுகள், வரவேற்றுள்ளன.
புகை பிடித்தலை ஏற்றுக் கொள்வோர்; மதுவை வெறுப்பது வேடிக்கையாகவுள்ளது.

Darren சொன்னது…

//கோவி.கண்ணன் சொன்னது…
வாங்க சகோ சுபி,

நாலு பொண்டாட்டிக் கட்டிக்கிட்டு மாற்றி படுத்து எந்திரிச்சாலும் அல்லா ஆசிர்வதிப்பார், திருமணமே ஆகமலோ அதற்கு வாய்பில்லாதவனோ ஒரு முறை பாலியல் தொழிளாலியிடம் சென்று வந்தாலும் பாவம் செய்துவிட்டான் என்று அல்லா தண்டித்துவிடுவார் என்று பாடம் எடுப்பவர் நீங்கள்,//

hhahahahhahahhahahahahahahahahahhahahaahhaahahahhh

பெயரில்லா சொன்னது…

முதலில் என்னை மன்னிக்கனும். நான் காலையிலிருந்து ஆன்லைனுக்கு வரவில்லை. தொழிற்சாலையில் வேலையிருந்ததால் நேரமாகி விட்டது. இப்பொழுது தான் தங்களின் பதிவை படித்தேன். உங்களுக்கும் எனக்கும் மகுடத்தின் சூட்சமம் தெரியும். அதைப் பற்றி பேச வேண்டாம்.

இரண்டு பதிவுளுக்கு முன்பாக ஒரு பதிவர் வந்து என்னிடம் வல்லவன் நல்லவன், அமெரிக்காவை நீங்கள் ஆதரிக்கிறீர்களே என்று என்னிடம் கேள்வி கேட்டிருந்தார். சொம்மா மொக்க போட்டுக்கிட்டு இருக்க கடுப்பாகிடுச்சி. திட்டி அனுப்பிட்டேன். அப்பொழுதே பதிவுலக நண்பர் சொன்னார். இதற்கு எதிர்விளைவுகள் இருக்கும் என்று.

நான் எதைப் பற்றியும் கவலைப்படவில்லை. சர்ச்சைக்குரிய அந்த பதிவில் என் பெயரைப் போட்டதை கூட நான் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. ஒரு முறை திட்டி விட்டு விட்டு விட்டேன். உடனே அவருக்கு ஆதரவாக அவர் சார்ந்துள்ள சமூகத்தின் ஆட்கள் சரமாரியாக பின்னூட்டத்தில் பதில் அளித்ததால் தான் எனக்கு கடும் கோபம் வந்து வார்த்தைகளை விடும்படி ஆகி விட்டது.

அரை மணிநேரம் இருந்த கோவம் பிறகு இறங்கி விட்டது. அதன்பிறகு அந்த பதிவைப் பற்றி நான் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.

நீங்கள் சொன்ன கோணத்தில் தான் இருக்கும் என மற்றொரு பதிவுலக நண்பர் சொன்னார். பலரும் அந்த கோணத்தில் தான் இந்த தாக்குதல் நடந்தது என்று சொல்கிறார்கள் நானும் இவர்கள் அந்த நோக்கத்திற்காகவும் என்னை கோவப்படுத்தி பலவீனமடையச் செய்யவும் தான் தான் முயற்சிக்கிறார்கள் என்று நினைக்கிறேன்.

எனவே எதை பற்றியும் கவலைப்பட மாட்டேன். என்னை மறைமுகமாகவோ நேரடியாகவோ பதிவிட்டால் எனக்கு விளம்பரம் தான் என்று எடுத்துக் கொள்ளப் போகிறேன்.

தங்களின் ஆதரவுக்கு நன்றி கோவி. கண்ணன்.

பெயரில்லா சொன்னது…

பல உண்மைகளைப் போட்டு உடைத்துவிட்டீர்கள் --- சிலருக்கு இந்த குழுப்பதிவர்களின் அரசியல் புரியாமல் இருப்பது வியப்பாகவே உள்ளன ---

நம்பள்கி சொன்னது…

///யோகன் பாரிஸ்(Johan-Paris) சொன்னது….மது அருந்தாக் கயவர்களையும், மது அருந்தும் கண்ணியவான்களையும் நாம் கண்டுவிட்டோம்.///

எம்ஜியார் மது அருந்தமாட்டார்! அது எத்தனை பேருக்கு தெரியும்?

பழூர் கார்த்தி சொன்னது…

கோவி. கண்ணன், தெளிவான விளக்கமான பதிவாக்கி உள்ளீர்கள், நன்றி, வாழ்த்துகள்!

// மூனா செந்திலோ, நக்கீரனோ ஒரு பெரியவர் எடுக்கும் முயற்சியில் 'தண்ணீ' அடித்துவிட்டு கலந்து கொள்வார்கள் என்பது போன்ற வதந்திகளை நான் நம்பவில்லை. மற்றபடி அந்த நிகழ்வு தவிர்த்த வேளைகளில் அவர்கள் குடிப்பதோ விழுந்து கிடப்பதோ யாருக்கும் நட்டம் ஏற்படுத்தாது என்றே நினைக்கிறேன். //

பதிவின் மூலக்கருத்து இதிலே அடங்கிவிடுகிறது, நானும் இதற்கு உடன்படுகிறேன்

பதிவர்கள் மாநாடு சிறப்பாக நடக்க வாழ்த்துவோம்!!

அப்பாதுரை சொன்னது…

ஆச்சரியமாக இருக்கிறது - எப்படியெல்லாம் கேடு தேடுகிறார்கள், தேடிக்கொள்கிறார்கள்!!
புலவர் முயற்சி பற்றி அறியாதிருந்தேன், நன்றி.

sathishsangkavi.blogspot.com சொன்னது…

கோவி அண்ணே இது மத போதையோ, சரக்கு போதையோ அல்ல...

நிச்சயம் புகழ் போதை தான்....

சரியான நேரத்தில் சரியான பதிவு..

கோவி.கண்ணன் சொன்னது…

//எனவே எதை பற்றியும் கவலைப்பட மாட்டேன். என்னை மறைமுகமாகவோ நேரடியாகவோ பதிவிட்டால் எனக்கு விளம்பரம் தான் என்று எடுத்துக் கொள்ளப் போகிறேன்.//

சென்னைப் பதிவர்கள் ஒன்று கூடல் மனிதாபிமானம் அற்றவர்களால் மது போதை என்று புனையப்பட்டாலும், நிகழ்ச்சி நடப்பது குறித்து நல்ல வெளம்பரமாக அமைந்திருக்கிறது, இப்போது நன்றாக ரீச் ஆகி இருக்கிறது. விழா ஏற்பாட்டாளர்களுக்கும் கலந்து கொள்பவர்களும் இதையும் கருத்தில் கொள்ள வேண்டும். பதிவர் நிகழ்ச்சியில் இது பற்றிப் பேசி நேரத்தை வீணடித்துவிடாதீர்கள்.

பெயரில்லா சொன்னது…

இவர்களைப் பற்றி பேசி நமக்கு ஆகப்போவது ஒன்றுமி்ல்லை. பதிவர் சந்திப்பில் என் வாயில் இருந்து இவர்களைப் பற்றியோ அல்லது அந்த சர்ச்சையை பற்றியோ ஒரு வார்த்தை கூட வராது.

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்