தொலைகாட்சி தொகுப்பாளர்கள் பேசுவதைக் கேட்கும் பொழுது இரத்தக் கொதிப்பு தான் வருகிறது, நாகரீகம் என்ற பெயரில் இவர்கள் அடிக்கும் கூத்துகளுக்கு அளவே இல்லை, இவர்கள் பேசுவதில் 5 விழுக்காடு தமிழ் இருக்குமா என்பது ஐயமே, இதை ஒரு ஆங்கிலத் தொலைகாட்சி நிகழ்ச்சியாக கற்பனை செய்து கொண்டு தொகுப்பாளர் தமிழைத் தாய்மொழியாகக் கொண்டவராக நினைத்து, அவர் தொகுப்பு நிகழ்ச்சியில் தவறிப் போய் ஒரே ஒரு சொல்லை தமிழில் சொல்லிவிட்டால் நாக்கைக் கடித்துக் கொண்டு மன்னிப்பு கேட்பாரா இல்லையா ? கூடவே கண்டனம் தெரிவித்து வாசகக் கடிதங்களும் குவிந்துவிடும், தினமலர் உள்ளிட்ட நாளிதழ்களிலும் ஆங்கிலம் பரவலாகவே இடை இடையே எழுதப்படுகிறது தவிர 'கோர்ட்' என்று தலைப்பிட்டு நீதிமன்றம் சார்ந்த செய்திகளையும் வெளி இடுகிறான், 'கோர்ட்' என்பதற்கு மாற்றாக இவர்களால் ஏன் 'நீதித்துறை' என்று தலைப்பிட்டு அதன் கீழ் செய்திகளை போட முடியவில்லை. இதை வேண்டுமென்றே செய்யும் திமிர்த் தனம் என்று வகைப்படுத்த முடியுமா முடியாதா ? அல்லது பார்பனக் கொழுப்பு என்று நான் விமர்சனம் செய்தால் சண்டைக்கு வருபவர் யார் ? அவ்வாறு சண்டைக்கு வந்தால் தினமலரின் திமிர் தனங்களுக்கு போதுமான காரணங்களைச் சொல்லிவிட்டு சண்டையிடலாமே. தொலைகாட்சி, செய்தி ஊடகம் இவற்றில் இருந்துதான் மக்களும் தமக்கான மொழியறிவை வளர்த்துக் கொள்கிறார்கள் என்ற புரிந்துணர்வில் தமிழ் என்ற பெயரில் அன்றாடப் புழக்கமாகிப் போன தமிங்கிலத்தை சகித்துக் கொள்ளத்தான் வேண்டி இருக்கிறது, யாருமே நேரங்களைக் குறிப்பிடுவதில் கூட 10 மணி , 12 மணி என்றெல்லாம் சொல்வது கிடையாது டென் ஓ க்ளாக், ட்வள் ஓ கிளாக் என்று தான் கூறுகிறார்கள், சுரணை அல்லது அது பற்றிய சிந்தனைகளே இல்லை என்றால் கேட்கும் நமக்கு எரிச்சல் ஏற்படாது. கண்ணுக்கு முன் மொழிச் சிதைவை பார்க்கும் பொழுது ஏற்படும் ஆற்றாமைகள் தொடர்ச்சியாகக் கிடைக்கும் தண்டனைகளை துய்ப்பது போன்ற கொடுமை. நான் செந்தமிழில் உரையாடுங்கள், பேசுங்கள் என்று சொல்லவரவில்லை, ஆனால் புழக்கத்தில் இருக்கும் சொற்களை புதைத்துவிடுகிறார்கள் என்று புலம்புகிறேன், நான் என்னதான் முடிந்த வரையில் தூய தமிழில் உரையாடலாம் என்று முயற்சி எடுத்தாலும்'பேருந்து வருகிறது' என்று சொன்னாலும் எதோ புரியாத ஒன்றை சொல்லக் கூடாத ஒன்றைச் சொல்லிவிட்டது போல் கொஞ்சம் நக்கலாகப் பார்த்து நகைப்பதால் யாரிடம் தமிழில் மட்டுமே பேசுவது என்றெல்லாம் நான் முடிவு செய்ய வேண்டி இருக்கிறது, ஒரு சிலருக்கு நான் என்ன சொன்னேன் என்பதை திருப்பிச் சொன்னால் தான் புரியும் என்ற நிலையும் உள்ளது. தமிழன் தமிழன் என்று நாம் பெருமை பீற்றிக் கொண்டாலும் நாம் பேசுவது தமிழ்தானா ? இன்றைக்கு தமிழ் பேசும் எவரும் 50 விழுக்காடுகள் ஆங்கிலச் சொற்கள் கலவை இன்றி பேசுவதே கிடையாது. பிறகு நாம் பேசுவது எப்படி தமிழாகும் ?
*****
சிங்கப்பூர் தமிழ் மாணவர்கள் எல்லது தமிழர்கள் தொலைகாட்சி நிகழ்ச்சியின் செய்தியில் / அல்லது வேறு நிகழ்ச்சிகளின் இடையே பேசும் பொழுது பேசுவதைக் கேட்கும் பொழுது தமிழை தாய்மொழியாகக் கொண்ட இவர்கள் ஏன் தமிழைப் பேச இப்படித் திணறுகிறார்கள் ? என்று முதல் முறைப் பார்ப்பவர்கள் நினைக்கத் தோன்றும், திணறுவதற்கு முதல்காரணம் அவர்கள் மொழி தாய் மொழி தமிழ் என்றாலும் வீட்டில் பேசுவது முழுக்க முழுக்க சிங்கை ஆங்கிலம் (சிங்லிஸ்), எனவே ஒரு நிகழ்ச்சியின் இடையே தமிழில் பேச வேண்டும் என்கிற நிலை வரும் பொழுது ஆங்கிலத்தில் பேசிப் பழகிய அவர்கள் தமிழுக்கு மாற வேண்டிய சூழலும் ஏற்பட சற்று திணறலாகத்தான் இருக்கும், தவிர திணறலுக்கு அது மட்டுமே காரணம் இல்லை, பேசப் போவது தமிழ் என்பதால் அதில் அவர்களின் சிந்தனையில் கலந்த ஆங்கிலச் சொற்கள் கலந்து பேசிவிடக் கூடாது என்பதால் பொருத்தமான தமிழ் சொற்களை ஆங்கில சிந்தனை வழியாக சிந்தித்து பிறகு பேசுவார்கள், பொருத்தான தமிழ் சொற்கள் குறித்த அவர்கள் சிந்திக்கும் நேரம் பேசுவதின் தொடர்ச்சியில் நேரத் தொய்வை ஏற்படுத்த கேட்கும் நமக்கு அவர்கள் தமிழில் பேச திணறுகிறார்கள் என்பது போல் தோன்றும், உண்மை அதுமட்டுமல்ல, தமிழில் பேசும் போது தமிழில் மட்டும் தான் பேச வேண்டும் என்கிற நிலைபாடு தான் காரணம், நம்மைப் போன்று ஆங்கிலச் சொற்களைக் கலந்து பண்ணித் தமிழில் பேசலாம் என்று அவர்கள் நினைத்திருந்தால் அவர்களாலும் திணறல் இன்றிப் பேசிவிட முடியும். எந்த ஒரு மொழியையும் பேசும் பொழுது அந்த மொழியில் விளக்க பொருத்தமான சொற்கள் இல்லாத நிலையில் சொற்களை கடன் வாங்கிப் பயன்படுத்துவது தவறே இல்லை.
'பார்க் பண்ணிட்டிங்களா ?', லஞ்சுக்கு கெளம்புறிங்களா ? டிக்கெட் எடுத்துட்டிங்களா ? இதை கொஞ்சம் கட் பண்ணித் தாங்க. ஒரு வாக் போய்ட்டு வந்துடுறேன், அவரு போன் பண்ணி சொன்னார், நாளைக்கு மார்னிங்க் உங்களுக்கு மிஸ்டு கால் கொடுக்கிறேன், அந்த மூவி செம ஃபோர்... உஙக வைப் ஒர்க் பண்ணுறாங்களா ? உங்க டாட்டர் என்ன ஸ்டாண்டார்ட் படிக்கிறா ? - இது போல் தான் பேசுகிறோம், இதை தமிழில் பேசுவதாகவும் கூறிக் கொள்கிறோம்.
*****
முந்தைய நாள் பேருந்தினுள் பக்கத்து இறுக்கையில் முதலாம் வகுப்பு படிக்கும் தமிழ் குழந்தை அவளுடைய அம்மாவிடம் "அம்மா பெட் (Bet) - டுக்கு தமிழில் என்னம்மா ?" என்று கேள்வி கேட்டுக் கொண்டு இருந்தாள், நான் பெட் - டுக்கு என்ன தமிழ் சொல் என்று சிந்திக்கத் துவங்கியதும் அந்த குழந்தையின் அம்மா என்ன சொல்லி கொடுத்திருப்பார் என்று கவனிக்கவும் இல்லை, ஆனால் குழந்தையின் அம்மா சரியான சொல்லை எடுத்துச் சொல்லவில்லை என்று தான் தெரிந்தது, நானும் சிந்தித்து சிந்துத்துப் பார்த்து 'நாம பெட் கட்றது, பெட் வச்சிக்குவோம் வரியா ? ன்னு தானே போட்டிப் போடுவோம் ? வேற என்ன சொல் தமிழில் இருக்கும் ? என்றெல்லாம் மிகுந்த நேரம் சிந்தித்து 'பந்தயம்' தான் சரியானச் சொல் என்று முடிவு செய்தேன், அவர்களிடம் சொல்லவும் தயக்கம், நாம பேசிவருவதை இவர் ஏன் காது கொடுத்துக் கேட்டார் என்று நினைப்பார்களோ என்று பேசாமல் இருந்துவிட்டேன், சிறுவயதில் 'வாடா பந்தயம் வச்சிக்கலாமா ?' வெகு இயல்பாக புழங்கிய ஒருச் சொல் கால ஓட்டத்தில் மறக்கடிக்கப்பட்டு பெட் அதில் படுக்கைப் போட்டுக் கொண்டதை நினைத்துப் பார்க்க ஊடகங்கள் செய்துவரும் தமிழ் துரோகமே காரணம் என்று நினைக்கத் தோன்றியது. செய்தி ஊடகங்களும், அரசியல்வாதிகளும், திரைப்படத் துறையினரும் தமிழை வைத்து தான் பிழைப்பு நடத்துகிறார்கள், அவர்கள் வயிற்றுப் பிழைப்பான தமிழை அவர்களே அழிக்கிறார்கள் என்பது எவ்வளவு கொடுமையான நடைமுறையாக இருக்கிறது. சில அறிவிலிகள் மொழிகள் என்பவை தொடர்புக்கானவை என்ற புல்லரிக்கும் விளக்கங்களையெல்லாம் கொடுக்கும் பொழுது உணவு என்பது சாப்பிட மட்டும் தான் அதில் வேறு சிந்தனைகள் தேவை இல்லை என்று கண்டதையும் ஏன் நீ உண்பது இல்லை ? வெந்ததையும் வேகாததையும் கூட திண்ணலாமே என்றெல்லாம் கேட்கத் தோன்றும்,
*****
முன்பு ஒரு நாள் நண்பர் ஒருவர் தமிழ் குறித்த சற்று சூடான உரையாடலில் நீங்க தமிழ் தமிழ் என்று பேசுகிறீர்கள், நான் கேட்பதற்கு பதில் சொல்லுங்க என்று சொல்லிவிட்டு 'ரிஸ்க் எடுக்காதீங்க ? ' என்பதற்கு தமிழில் எப்படிச் சொல்லுவிங்க என்று மடக்கினார், நான் 'முயற்சி செய்யாதிங்க ?' என்று சொன்னேன், அப்ப 'ட்ரை பண்ணாதிங்க' என்பதற்கு என்னச் சொல்லுவிங்க என்று மறு கேள்வி கேட்டார். அந்த நேரத்தில் மாற்றுச் சொல் தேடி சிந்தனைகள் அலைந்தது தவிர்த்து உருப்படியாக ஒன்றும் அவருக்கு மாற்றாகச் சொல்லத் தோன்றவில்லை, அவரும் நக்கலாக சிரித்துக் கொண்டார், பிறகு யோசித்துப் பார்க்க, ரிஸ்க் என்பது செய்யலாமா வேண்டாமா என்கிற கேள்வியை கொண்ட ஒரு சொல், இதற்கு சரியான தமிழ் சொல் சொல்ல வேண்டுமென்றால் ரிஸ்க் எடுக்காதிங்க என்பதற்கு மாறாக 'துணியாதீர்கள்' என்று தான் சொல்ல வேண்டும், துணிவு என்பது வெறும் துணிச்சல் சார்நத சொல் மட்டுமே இல்லை, அதில் செய்யலாமா வேண்டாமா என்கிற எண்ணமும் சேர்ந்த சொல்லாகவும் பயன்பாடுடையது. நம்மாளுங்க இன்னும் பயன் என்ற எளியச் சொல் இருக்க 'உபயோகம்' என்றெல்லாம் எழுதுகிறார்கள் தெரியுமா ?
செந்தமிழில் பேச வேண்டும் என்பது தேவை இல்லை, ஆனால் பேசுவது ஆங்கிலம் உள்ளிட்ட வேற்றுமொழிகள் கலந்த கொடுந்தமிழாக இல்லாமல் தூய தமிழாக இருந்தால் போதும், வலைப்பதிவில் எழுதும் பொழுது முடிந்த வரை தமிழில் எழுதுகிறோம், அதையே நாம் பேச்சிலும் செயல்படுத்தினால் நம்மைப் பார்த்து தமிழில் கலப்பின்றி பேசுவது தாழ்வானது இல்லை என்று நம்பத் துவங்குவார்கள். சிங்கையில் முகவை இராம் என்கிற நண்பர் ஒருவர் யாரு என்ன நினைப்பாங்க என்றெல்லாம் கவலை படமாட்டார், நல்ல தெளிவான தமிழில் பேசுவார். அவரைப் பார்த்து நகைத்தவர்கள் இல்லை, பாராட்டியவர்களே மிகுதி.
25 கருத்துகள்:
நிறைய எழுத வேண்டும் என்று நினைக்கின்றேன். தற்போதைய சூழ்நிலை, பள்ளியில், குழந்தைகளின் தற்போதைய வாழ்க்கையில் இந்த மொழி படும் பாடு என்பதை கோர்வையாக எழுதிக் கொண்டுருக்கின்றேன்.
தமிழர்களுக்கு இருக்கும் வெளியே சொல்ல முடியாத தாழ்வு மனப்பான்மை வேறு எந்த இனத்துக்கும் உண்டா?
கூகுள் ப்ளஸ் ல் சில மேதாவிகள் பேசுவதை பார்த்துருப்பீர்கள் தானே? பறிமாறிய இலையில் தானே விருப்பப்பட்டு மலத்தை அள்ளி வைத்துக் கொள்ளும் குணம் இது.
காலத்தின் கொடுமை... மிக்க நன்றி சார்...
கோவி,
நல்லப்பதிவு, அவ்வப்போது இதே நினைப்பு எனக்கும் வரும், ஆனால் தமிழ்ப்படுத்தி எழுதினால் வலிந்து எழுதுவதாக மக்கள் நினைக்கிறார்களே என பேச்சுமொழியில் எழுத வேண்டியதாகிறது. எப்போதாவது ஆசைப்பட்டு தமிழில் எழுதினால் உடனே சிலர் முன்னர் பேச்சு வழக்கில் எழுதுவிங்களே அப்படி எழுதுங்க அதான் நல்லா இருக்குன்னு சொல்லுறாங்க, என்ன சொல்லுறது.
நானும் ஒரு சுவாரசியமான நடை வேண்டி கலப்பினமாக எழுதுகிறேன்.
ஆனால் தொழிநுட்ப சொல்லுக்கு இணையான தமிழ் சொல்லை வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல தமிழில் பயன்ப்படுத்தி அறிமுகப்படுத்த செய்வேன். ஏன் எனில் வழக்கமான பேச்சு வழக்கு சொல்லில் ஆங்கிலம் கலப்பதை பெரிதாக நினைக்கவில்லை என்றாலும் , தமிழில் தொழில்நுட்ப சொல் இல்லை அல்லது எழுத முடியாது என மக்களின் பொதுவான எண்ணம் என்பதால் அதனை செய்கிறேன்.
நாம் நிறைய இணையான தொழில்நுட்ப சொற்களை தமிழுக்கு கொண்டுவர வேண்டும் , அல்லது உருவாக்க வேண்டும்.
டன்னல் போரிங் மெஷின் என்பதை சுரங்க துளைப்பான் என நானாகவே மாற்றி எழுதினேன்,உண்மையில் அகராதியில் இருக்கிறதா என்பதெல்லாம் எனக்கு தெரியாது.
எனவே பலரும் தொழில்நுட்ப ரீதியாக தமிழின் மொழிவளத்துக்கு புதிய சொற்களை அறிமுகப்படுத்தலாம் ,மேலும் புழக்கத்தில் இல்லாத சொற்களை புழக்கத்திற்கு கொண்டு வரலாம்.
பெட் கட்டுவதனை சூதாடுவது என சொல்லலாமா? சூது தமிழ் தானே? படித்தவன் சூதும் வாதும் செய்தால் அய்யோ எனப்போவான் என இருக்கிறதே.
பந்தயம் என்பது போட்டி என்பதாகிறது அதில் ஒரு பொருளை ஈடு வைக்க வேண்டும் என அவசியம் இல்லை.
ஓட்டப்பந்தயம் =ஓட்டப்போட்டி ஒரே பொருள்.
பெட்= சூதாடுதல்=ஈடு கட்டி ஆடுதல் என வரலாம் என நினைக்கிறேன்.
கோவி !
இந்த தொகுப்பாளர்கள் தொல்லை சொல்லி மாளாது, அவர்கள் இதை நாகரீகமாகக் கருதுகிறார்கள்; ஓரளவு தமிழ் சொற்களைப் போட்டு பேசினால், வேற்றுக்கிரகவாசி என நினைக்கிறார்கள்.
அத்துடன் இவர்களில் பலர் தமிழ் நாட்டவர்கள் இல்லை. தோல் நிறத்துக்காக இறக்குமதி செய்யப்பட்டோர். அத்துடன் இவர்களுக்கு தமிழறிவு அதிகமிருந்தாலே அதைத் தகுதிக் குறைவாகக் கருதுவதாக ஒரு பிரபல தொகுப்பாளினி(வெள்ளைத்தோல், மலையாளம் தாய் மொழி) கூறக் கேட்டுள்ளேன். அவர் ""ஓடி விளையாடு பாப்பா"...ஔவையார் பாடியதாகக் கூறி, அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம் - வள்ளுவர் குறள் என்றார். அத்துடன் அவர் செய்யும் வேலைக்கு இதெல்லாம் அறிந்திருக்கத் தேவையில்லை என்றார்.உண்மை அதுதான்.
தமிழ் வளர்க்கப் அவதாரமெடுத்தவரென "மானாட மயிராட" நடத்துபவரில் தொலைக்காட்சியில் சீர்கேட்டை விடவா?
நம் தலையெழுதுங்க!, இந்த சனியனே வேண்டாமெனதான் வாழ்கிறேன். அப்பப்போ நண்பர் வீடு செல்லும் போது இந்தத் தொல்லைகளைக் காணவேண்டியுள்ளது.
அடுத்து,
risk எடுக்காதீங்க என்பதை அபாயத்தை அணுகாதீங்க எனக் கூறக்கூடாதா?
try பண்ணாதீங்க என்பதை முயலாதீர்கள். எனச் சொல்லக்கூடாதா?
bet - சூதென்பது மிகப் பெரிய கனத்தைத் தருகிறது., அதனால் பந்தயம் என்பதே சகசமான உரையாடலுக்கு ஏற்றதாகக் கருதுகிறேன்.
இதையும் இங்கு பதிவு செய்ய விரும்புகிறேன்.
சிங்கப்பூர் வானொலி 96.8fm , அறிவிப்பாளர்கள் அழகு தமிழ் பேசுகிறார்கள். கேட்டுக் கொண்டே இருக்கலாம்.
தமிழக அறிவிப்பாளர்களை இவர்களிடம் பயிற்சிக்கனுப்பலாம்.
தமிழ் தொலைக்காட்சிகளைப் பார்ப்பதை முற்றிலும் நிறுத்திவிட்டேன். தொகுத்துவழங்குகிறோம் என இவர்கள் அடிக்கும் கூத்துக்கு அளவில்லை. ரிஸ்க் என்ற வார்த்தை அணுகுமுறை பொருத்தது. ரிஸ்க் எடுக்காதிங்க என்பது எதிர்மறையான வார்த்தை, அதை வழக்கமான முறையில் சொல்ல பிரச்சனைக்கு சந்தர்ப்பம் கொடுக்காதிங்க எனலாம்.
//நம்மைப் போன்று ஆங்கிலச் சொற்களைக் கலந்து பண்ணித் தமிழில் பேசலாம் என்று அவர்கள் நினைத்திருந்தால்//
கலந்து மட்டும் போதுமே, பண்ணி தேவையில்லையே.
நான் 12ம் வகுப்பு வரை புழங்கிய சொற்களே இப்ப மறந்து போச்சு :(. பாரதியார் member என்பதற்கு ஏற்ற தமிழ் சொல் கண்டுபிடிக்க சிரமப்பட்டாராம். இப்ப எல்லாருக்கும் அது உறுப்பினர் என தெரியும். அடுத்தவர்கள் எண்ண நினைப்பார்கள் என்று நினைக்காமல் நாம முடிந்த வரை தமிழில் பேச வேண்டியது தான். சாதம் என்பதை நான் சோறு என்று தான் எல்லா இடங்களிலும் சொல்லுவேன் முதலில் என்னடா இவன் என்று பார்த்தாலும் அப்புறம் பழகிவிடுகிறார்கள். உங்கள் நண்பரைப்போல் நிறைய பேர் இதுக்கு தமிழில் என்ன சொல்லு பார்க்கலாம் என்று கேட்கிறார்கள். அவர்களுக்கு தெரிவதில்லை நானும் அப்படி இருந்தவன் தான் என்று. இப்போ சரியான தமிழ் சொல் தெரிந்தால் பயன்படுத்துகிறேன், எனக்கு எல்லாம் தெரிந்திருக்க வாய்ப்பில்லையே, தெரிந்தவர்களிம் கேட்டு தெரிஞ்சுக்கிறேன்.
//பெட்= சூதாடுதல்=ஈடு கட்டி ஆடுதல் என வரலாம் என நினைக்கிறேன்.//
சின்னக் குழந்தைகள் பெட் பற்றிக் கேட்கும் பொழுது சூதாட்டம் பற்றிப் பேசலாமா ? :) அவர்களுக்கு புரியும் படித்தான் சொல்ல வேண்டும்
//risk எடுக்காதீங்க என்பதை அபாயத்தை அணுகாதீங்க எனக் கூறக்கூடாதா?//
அபாயம், உபாயம் இவை எல்லாம் தமிழ் சொற்கள் அல்ல. எதிலும் ரிஸ்க் எடுப்பவர்களை ரொம்ப துணிஞ்சவங்க என்று தான் சொல்லுவோம்.
//சாதம் என்பதை நான் சோறு என்று தான் எல்லா இடங்களிலும் சொல்லுவேன் முதலில் என்னடா இவன் என்று பார்த்தாலும் அப்புறம் பழகிவிடுகிறார்கள். //
சோறு என்றால் முகம் சுளிக்கும் ஆசாமிகள் நிறைய பேர் உள்ளனர்.
சிலர் ரைஸ் என்பார்கள். அரிசியையா திண்கிறார்கள். :)
//தமிழர்களுக்கு இருக்கும் வெளியே சொல்ல முடியாத தாழ்வு மனப்பான்மை வேறு எந்த இனத்துக்கும் உண்டா?//
சென்னையில் யாரிடம் பேசினாலும் 10 சொற்களில் 6 சொற்கள் ஆங்கிலம் கலந்தே பேசுகிறார்கள், கூடவே வலிந்து சொல்லும் சார். மலையாளிகளும் இந்திக்காரர்களும் தெளிவாக இருக்காங்க, நம்ம ஆளுங்களுக்கு அறிவு போதவில்லை
சிவகங்கை வட்டார்ரத்தில் risk என்பதற்கு இணையாக இக்கு என்ற சொல் உண்டு.
It is a risky job.இது இக்கான வேலை.
They take risk and do அவர்கள் இக்கு எடுத்துச் செய்கிறார்கள்.
இந்த இக்கிற்கு இன்னொரு பயன்பாடும் உண்டு. இக்கு வைத்தல் என்பது மற்றோருக்கு சிக்கலான வேலை வைத்தல். ”இக்கு வைத்துப் பேசுகிறான் பார்த்தீர்களா?” இக்கின் பயன்பாடு மிகுதி.
bet-ற்குப் பந்தயம், சூது என்பதோடு பகடையாடல், கவறாடல் என்று இன்னும் பல சொற்கள் உண்டு.
பகடை = dice
தாயம் = dice
கவறு = சோழி = cowry
கழங்கு = ஒரு பக்கம் ஒரு நிறமும், இன்னொரு பக்கம் இன்னொரு நிறமும் இருக்கும் கொட்டை. இதை வைத்தும் ஆடமுடியும்.
சூதாட்டத்திற்குத் தமிழிற் சொற்களா, இல்லை? வரலாற்றில் எவ்வளவு பேர் செல்வங்களைத் தொலைத்திருக்கிறார்கள்? இலகத்திற்கே கவற்றையும், சோழியையும், கழங்கையும், தாயத்தையும், பகடையையும் கொடுத்தவர்களாயிற்றே?
தமிழிற் பேசுவது மட்டுமல்ல, நல்ல தமிழில் எழுதுவதும் முகன்மையானது. இப்பொழுதெல்லாம் வலைப்பதிவுகளில் தமிங்கிலம் புழங்குவது எக்கச் சக்கமாகி விட்டது. யாரும் முன்வந்து நடை பற்றிச் சொல்ல மாட்டேம் என்கிறார்கள். கண்ணெதிரே தமிழ்நடை சீரழிந்து கொண்டிருக்க நாமெல்லோரும் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.
அன்புடன்,
இராம.கி.
வணக்கம் சகோ,
நல்ல பதிவு. பல்முறை பதிவு எழுதும் போது ஆங்கிலச் சொல்லுக்கு தமிழ் பதம் தேடும் சிரமம் ஏற்பட்டது உண்டு.
ஒரு ஆங்கில சொல்லுக்கு ஒரு த்மிழ் சொல்லே பொருளாக் இருக்க வேண்டும் என ஏனெதிர்நோக்க வேண்டும்??
ரிஸ்க்=ஆபத்தான முயற்சி
ட்ரை= முயற்சி
பெட்=ஈடு கட்டுதல்(நன்றி சகோ வவ்வால்)
பரிணாமம் பற்றி எழுதும் போது சில தமிழ் சொற்களை இணைத்து நானே பயன்படுத்தினேன் ஆனால் பொருள் புரியும் வண்ணம் இருக்கும்.அதில் சில பகிர்கிறேன்.
Speciation=உயிரின பிளவு[ஒரு உயிரினம் இரு அல்லது மேற்பட்ட உயிரினமாக பிரிதல்]
Extintion=உயிரின மறைவு[ ஒரு உயிரினம் அற்றுப் போதல்]
Mutation=சீரற்ற சிறு மாற்றம்
Random Gentic Drift=சீரற்ற மரபு விலகல்
அனைவரும் இருக்கும் த்மிழ் சொற்களையே இரண்டு மூன்று இணைத்து ஆங்கில சொல்லுக்கு இணையாக பயன்படுத்தலாம்.முதலில் பயன்படுத்தும் போது ஆங்கிலம் அடைப்புக் குறி[இதை நம்மால் விட முடியவில்லையே!!!!!!!!!!] போட்டு விள்க்கி விட்டால் பிறகு அச்சொற்கள் வழக்கத்தில் வந்து விடும்.
கோவி,
//'ரிஸ்க் எடுக்காதீங்க //
ரிஸ்க்கான வேலை என்பதை வம்பான வேலை என எங்க ஊருப்பக்கம் பேசுவோம்.
மாட்டிக்கிட்டா வம்பா போயிடும் என்றேல்லாம் இன்றும் சொல்வதுண்டு.
இல்லைனா பிரச்சினையான வேலை எனலாம்.
சென்னையில ரொம்ப சுலுவா சொல்றது "இம்சையான வேலை சார்'
சுலுவா என்றால் எளிதான :-))
//பல்முறை பதிவு எழுதும் போது ஆங்கிலச் சொல்லுக்கு தமிழ் பதம் தேடும் சிரமம் ஏற்பட்டது உண்டு.//
இராம.கி அய்யா வழங்கியுள்ள சற்றேறக்குறைய 1900 தமிழ்ச் சொற்களின் தொகுப்பை இங்கு காணலாம்.
சகோ வவ்வால்,
//சென்னையில ரொம்ப சுலுவா சொல்றது "இம்சையான வேலை சார்'
சுலுவா என்றால் எளிதான :))//
ஏழை மக்களின் மொழி அவர்கள் வாழ்வு போலவே இயல்பானது & எளிதானது.உள் ஒன்று வைத்து புறம் ஒன்று பேசாது,மொழிக் கலப்பும் செய்யாது.
எண்ணத்தில் இருப்பதை அறிந்த தாய்மொழிச் சொல் கொண்டு அழகாய் ,உண்மையை உரைத்திடும்!!!!..
அருமையான அவதானிப்பு. இம்சையான வேலை அய்யா, சுளுசான வேலை பாராட்டுகள்.
நன்றி
ஆக உங்களுக்கும் வயசாயிருச்சு.. வலையுலகத்துல மட்டும் என்ன வாழுதாம். சின்ன ர பெரிய ற வுக்கு கூட வித்யாசம் தெரியாம, ல,ள பேதமில்லாம, ன,ண வை எங்கன போடனும்னு தெரியாமத்தான் எழுதறாய்ங்க.
இதையெல்லாம் பார்த்து அலார்ட்டாகித்தான் நாம பேச்சுத்தமிழுக்கு தாவிட்டம்.
இல்லின்னா இன்னம் கடுப்பாகி சவட்டி எழுத வேண்டி வந்திருக்கும்
//இராம.கி கூறியது...
சிவகங்கை வட்டார்ரத்தில் risk என்பதற்கு இணையாக இக்கு என்ற சொல் உண்டு.
It is a risky job.இது இக்கான வேலை.
They take risk and do அவர்கள் இக்கு எடுத்துச் செய்கிறார்கள்.
இந்த இக்கிற்கு இன்னொரு பயன்பாடும் உண்டு. இக்கு வைத்தல் என்பது மற்றோருக்கு சிக்கலான வேலை வைத்தல். ”இக்கு வைத்துப் பேசுகிறான் பார்த்தீர்களா?” இக்கின் பயன்பாடு மிகுதி.//
ஐயா, முதலில் மன்னிக்கவும், சென்ற பதிவின் இடையே உங்களது பெயரை நான் குறிப்பிடவில்லை, ஆனால் பின்னூட்டத்தில் தந்துள்ளேன்.
இக்கு - சரியான சொல் தான், இடற்பாடு, தொல்லை நிறைந்த என்ற பொருளில் வரும் சொல், பேச்சு வழக்கில் கூட இக்கு வச்சிப் போசுவதாகக் குறிப்பிடுவார்கள், குழந்தைகளுக்கும் புரியும் வகையான மாற்றுச் சொல்லை நான் தேடினேன். பந்தயம் தமிழ் சொல் தானா என்பதிலும் எனக்கு ஐயமாகத்தான் இருக்கிறது. :)
சகோ.சார்வாகன்,
அதே ,,அதே, உழைக்கும் மக்கள் உடைத்து,கலந்து எனப்பேசினாலும் சரியாப்புரிந்துக்கொள்வார்கள், அவர்கள் பேசும் மொழியில் பல தூயத்தமிழ் சொல் இருக்கு ஆனால் நாம் அது வேற மொழி என நினைத்துக்கொள்கிறோம்.
நம்மைப்போன்றவர்கள் நன்றாக மொழியை கையாள்வதாக நினைப்போம், ஆனால் நாமும் அவர்கள் போலத்தான்.
இப்போ கோவியாரே "காலம்" என வடமொழியினை தான் தலைப்பா வைத்து இருப்பதை சொல்லலாம் :-))
எப்பூடி :-))
"பந்தயம் தமிழ் சொல் தானா என்பதிலும் எனக்கு ஐயமாகத்தான் இருக்கிறது." பந்தயம் தமிழ் சொல்லாக இருக்க முடியாது. கன்னடத்தில் 'பந்த்ய' (Sport) என்ற தலைப்பில் கட்டுரை ஒன்றை இப்போது தான் படித்து முடித்தேன்.
"பந்தயம் தமிழ் சொல் தானா என்பதிலும் எனக்கு ஐயமாகத்தான் இருக்கிறது." பந்தயம் தமிழ் சொல்லாக இருக்க முடியாது. கன்னடத்தில் 'பந்த்ய' (Sport) என்ற தலைப்பில் கட்டுரை ஒன்றை இப்போது தான் படித்து முடித்தேன்.
பந்தயம் வடமொழி தான் என நினைக்கிறேன் எனக்கு தெரிந்ததை வைத்து சொல்கிறேன், "Bandh" என்ற சமஸ்கிருத சொல்லுக்கு கட்டுதல் ,பிணைத்தல் என்ற பொருள் உண்டு,"யம்" என சம்ஸ்கிருத விகுதி "noun" ஆக சொல்லப்பயன்படும்,
ஆரியம் என்பது போல மேலும் அப்படி முடித்தால் அதனுடன் என பொருள் வருமாம்.
பந்தயம் என்றால் கட்டுடைய ,கட்டுடன்,பிணைக்கப்பட்ட என பொருள் வருவதால் ஏதோ ஒருப்பொருளை சன்மானமாக கொடுக்க ஒப்பந்தம் என சொல்லலாம்.
அதனை தான் ஈடு கட்டல் என தமிழ்ப்படுத்தினேன், அப்போது நேரமின்மையால் சொல்லாமல் போய்விட்டேன்.
மேலும் கூலி போல தமிழில் இருந்து வட மொழிக்கு போய் இருக்குமோ எனவும் சந்தேகம் என்பதால் சொல்ல வேண்டாம் என விட்டேன்.
பந்து, பந்தம், பந்தனம் என இதில் இருந்து நிறைய சொற்கள் உண்டு.
பந்தயம் என்பது திராவிட மொழிகளில் உள்ள சொல். இணையத்தில் தேடியபோது
Proto-South Dravidian : *pandaj-am
Meaning : contest; bet
Tamil : pantayam
Tamil meaning : contest for prize, stake, wager, prize
Malayalam : pantayam
Malayalam meaning : a stake
Kannada : panta, pandya
Kannada meaning : bet, wager
Tulu : panta
Tulu meaning : bet, wager
என வந்தது.
வவ்வால்,
panthக்கும் bandhக்கும் thodarpillai என நினைக்கிறேன்.
//சுலுவா என்றால் எளிதான :-))//
சுலுவா என்பது சுலபமாக. சுலபம் - சுலப் - ஹிந்தியிலிருந்து.
இம்சை என்பது ஹிம்ஸா என்ற சம்ஸ்கிருத வார்த்தை.
குட்டிப்பிசாசு,
சுலு, இம்சை எல்லாம் சென்னைப்பாஷையில் பயன்ப்படுத்துவது என தான் சொல்லியிருக்கேன்,மேலும் அவர்கள் பயன்ப்படுத்துவதில் நல்ல தமிழ்சொற்களும் உள்ளது என சொன்னேன்.
இஸ்துக்கினு பூட்டான் என்பார்கள்,
இழுத்துக்கொண்டு எனப்பொருள்,ஆனால் "இசு" என்பதும் தமிழ்ச்சொல் ,அதே இழுப்பு தான் பொருள்.
பந்தயம் என்பது கூலி போல இருக்கலாம் என்று சொன்னதை கவனிக்கவும்.
ஹி அ தமிழில் இ ஆக்குவதில்லையா panth மற்றும் bandh அக்கியவையும் மாற வாய்ப்புண்டு.
ஒவ்வொரு சொல்லுக்கும் வேர் சொல்,மற்றும் தொடர்பில் பல கிளைச்சொற்கள் எம்மொழியில் இருக்கிறதோ அதனையே மூல மொழி எனலாம்.
தமிழிலும், வடமொழியிலும் ஒரு சொல் முன்னால் "அ" போட்டால் எதிர் மறை என சிலப்பொதுப்பண்புகள் உள்ளது.அதே போல பல் சொற்கள் கலப்பும் இருபக்கமும் உண்டு.
நீங்கள் தேடும் தமிழ்ச்சொல் பணயம்.
பந்தயம் என்பது போட்டிக்கு இணைச்சொல். வெற்றி தோல்வி உண்டே தவிர பந்தய வெற்றி தோல்வியில் சொந்த இழப்பு கிடையாது. இன்னொன்று: பந்தயம் தமிழ்ச்சொல் அல்ல :-) தமிழில் கலந்த சொல்.
கருத்துரையிடுக