பின்பற்றுபவர்கள்

17 செப்டம்பர், 2010

தனியார் பள்ளிகள் - என்ன நடக்குது தமிழ்நாட்டில் ?

தரமான கல்வி என்று கடைவிரித்த தனியார் கல்வி நிறுவனங்கள் இன்று தமிழ் நாட்டின் கல்வி அமைப்பை அக்டோபஸ் போன்று வளைத்தும், குழந்தைகளின் எதிர்காலத்தையும் பெற்றோர்களின் பணத்தையும் உரிஞ்சும் அட்டைகளாக மாறிவிட்டன. முன்று ஊருக்கு 3 என்ற அளவில் இருந்த தனியார் பள்ளிகள் இன்று பெருகி மாநகராட்சி பள்ளிகளையே மூட வைத்துள்ளன. நான் படித்த மாநகராட்சிப் பள்ளிக் கூட மாணவர்கள் சேர்க்கையே நடைபறாததால் மூடப் பட்டுவிட்டது. நான் படிக்கும் காலத்தில் இருந்த தனியார் பள்ளிகளிலும் தரமான கல்வி என்பது கிடையாது என்பது அம்மாணவர்கள் என்னுடன் +2 படிப்பில் சேரும் போது தான் தெரிந்தது, அம்மாணவர்களைவிட அரசு பள்ளியிலேயே ஆங்கில வழியில் கற்றவர்கள் ஆங்கிலத்தில் நல்ல அறிவை பெற்றிருந்தனர். இதற்குக்காரணம் தனியார் பள்ளிகளில் ஆங்கில வழிக்கல்வி என்றாலும் சொல்லிக் கொடுக்கும் ஆசிரியர்கள் எவரும் +2 படிப்பை தாண்டாதவர்கள் என்பதும் அவர்களைத்தான் மிகக் குறைவான ஊதியத்தில் ஆசிரியர் வேலைக்கு வைத்துக் கொள்ள முடியும் என்பது தனியார் பள்ளிகளின் தேர்வாக இருந்தது. ஆனாலும் அந்தப் பள்ளிகளுக்கு ஒரு ஆண்டில் செலவிடும் தொகையை ஒரு பெற்றோர் அரசு பள்ளி மாணவர்களின் 10 வகுப்பு படிக்கும் வரை கூட செலவிடலாம். ஏனென்றால் அரசு பள்ளிகளில் குறிப்பேடுகள் தவிர்த்து அனைத்தும் இலவசம், மேலும் ஆண்டுக்கட்டனம் மிகக் குறைவே. நான் படிக்கும் போது ஆண்டுக் கட்டணம் ரூபாய் இருபது, அதுவும் தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கு கிடையாது. தனியார் பள்ளிகளுக்கு தீனி போட முடியவில்லை என்பதால் என் பெற்றோர்கள் என் தம்பி தங்கைகளை 5 ஆம் வகுப்போடு நிறுத்திவிட்டு அரசு பள்ளிகளில் சேர்த்துவிட்டனர்.

தற்போது என் தம்பி மகன்கள் தனியார் பள்ளியில் படித்து போது தான் தெரிந்தது அவர்கள் படித்த தனியார் பள்ளிகள் அரசு அங்கிகாரத்துடன் துவங்கி இருக்கவில்லை என்பதே, பிறகு வேறு வழியின்று வேறொரு பள்ளிக்கு மாற்ற வேண்டிய சூழல் உருவானது, ஐந்தாம் வகுப்புகள் முடிந்த பிறகு பழைய படி தம்பியும் மகன்களை அரசு சார்பு/ உதவி பள்ளியில் ஆங்கில வழி கல்வியிலேயே சேர்த்துவிட்டார். நகரங்களில் ஐம்பதற்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகள் மெட்ரிகுலேசன் கல்வி வழியாக சொல்லிக் கொடுக்கின்றனர். இருந்தாலும் அவற்றில் படிக்கும் மாணவர்களால் அரசு பள்ளி மாணவர்கள் பெரும் மதிப்பெண்களை பெற முடியவில்லை. மாணவர்களுக்கு டை கட்டி, காண்வெண்ட் சீருடைகள், சீரற்ற ஆங்கிலப் பேச்சு, அம்மாவுக்கு 'மம்மி' அப்பாவுக்கு 'டே(ர்)டி' இவைகள் தான் தனியார் கல்வி நிறுவனங்கள் வழியாக கிடைக்கும் வெகுமதிகள், இவற்றிற்கு செல்ல வாகனம் உட்பட பெற்றோர்கள் செலவழிக்கும் தொகை கிட்டதட்ட வருமானத்தில் கால் பங்கு, இவ்வாறு வசூலிக்கப்படும் கல்வி கட்டணம் தவிர்த்து பள்ளிக்கு புதிய கட்டிடங்கள் மற்றும் பிற வசதிகள் இவற்றிக்கு நன்கொடை என்ற பெயரில் ஆயிரக் கணக்கில் பெற்றோர்களிடம் இருந்து பிடுங்கப்படுகிறது, இவற்றிற்கெல்லாம் முறையான கணக்கு வழக்குகளை பெற்றோர்களுக்கு கல்வி நிறுவனங்கள் கொடுப்பதும் இல்லை.

குழந்தைகளை (விதைத்து) வைத்து செய்யப் படும் இந்த தனியார் பள்ளி விவசாயங்களில் நட்டமென்ற பேச்சுக்கே இடமின்றி பல மடங்கு லாபமும் வசதிகளும் கூடவே பள்ளியில் தாளாளர், முதல்வர் என்கிற தகுதியும் அதனால் சமூக பெரும்பேறு (அந்தஸ்து) கிடைப்பதால் சாராயம் விற்றவர்களெல்லாம் கல்விக் கூடம் அமைக்கச் சென்றுவிட்டார்கள் என்பதும் உண்மை. அதற்காக பார்பன தனியார் கல்வி நிறுவனங்கள் தரமான கல்வியைத் தருவதாக நினைக்க வேண்டாம். அந்த கல்வி நிறுவனத் தொழில் கிடைக்கும் நன்மைகள் என்பதற்க்காக 'சாராயம் விற்பவர்கள்' என்று குறிப்பிட்டேன். மற்றபடி அந்த தொழில் குறிப்பிட்ட சமூகம் தான் செய்கிறது என்பதற்கு எந்த ஒரு புள்ளிவிவரம் கிடையாது. ப்ரவுசிங் செண்டர் எனப்படும் இணைய மையங்களைப் போல் தனியார் கல்வி நிறுவனங்களும் சாதிமதம் சாராது அனைத்து பிரிவினர்களாலும் நடத்தப்படுகின்றன, ஆனால் பார்பனர்கள் நடத்தும் கல்வி நிறுவனங்களில் கூடுதல் கட்டணங்கள் என்பதுடன் அதனை 'ஆஸ்ரமம் அல்லது சேவை அமைப்பு' என்பதாக விளம்பரப்படுத்துவார்கள். (மற்றபடி) எந்த ஒரு தனியார் பள்ளிகளும் பலமடங்கு லாபம் எதிர்நோக்கி உருவாக்கப்பட்ட நிருவனங்கள் என்று சொல்வது பொருத்தமானது.

கல்வி கட்டணம் குறைக்கப்பட வேண்டும் என்கிற் பெற்றோர் கோரிக்கைகளால் ஓய்வு பெற்ற கோவிந்தராஜன் தலைமையில் குழு அமைக்கப்பட்டு குறைக்கப்பட்டது, இதற்கு தனியார் பள்ளிகள் ஒப்புக் கொள்ளவில்லை. கொள்ளையில் பங்கு கேட்டாலும் பரவாயில்லை கொள்ளையே அடிக்கக் கூடாது என்பது கொடுமை அல்லவா என்பதாக அவர்கள் கோவிந்தராஜன் பரிந்துரைக்கு தடை ஆணையும் பெற்றுவிட்டார்கள். அந்த தடையை எதிர்ப்பு பெற்றோர்கள் முறையிட்டு போராட தற்போது தனியார் பள்ளிகள் தன்னிச்சையாக பள்ளிகளை மூடும் போராட்டம் அறிவித்துள்ளார்களாம்.

இந்த ஆண்டு பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் நெல்லையைச் சேர்ந்த அரசு பள்ளி மாணவியே முதல் இடம் பெற்றார். மார்கெட்டிங்க் டிமாண்ட் எனப்படும் சந்தை தேவை இருக்கும் வரை அதற்கான விலையும் மிகுதியாகவே இருக்கும் என்பதாக தனியார் பள்ளிகள் பணவேட்டை நடத்துகின்றனர். தனியார் பள்ளிகளின் கொட்டத்தை அடக்க பெற்றோர்கள் தனியார் பள்ளிகளை புறக்கணிப்பதே சரியான முடிவு ஆகும்.

14 கருத்துகள்:

நிகழ்காலத்தில்... சொன்னது…

தனியார் பள்ளிகளின் கொட்டத்தை அடக்க பெற்றோர்கள் தனியார் பள்ளிகளை புறக்கணிப்பதே சரியான முடிவு ஆகும்.


உங்கள மாதிரி படிக்கிற புள்ள எங்கபடிச்சாலும் நல்லாத்தான் படிக்கும்.

ஆனா என்ன மாதிரி சுமாரான பசங்கல்லாம் தனியார் பள்ளியில் போட்டு பெண்டு நிமித்தினாத்தான் ஓரளவிற்கு நிமிருது:)

அரசு பள்ளிகளின் தரம் உயர்வாக இருந்தால் ஏன் தனியாருக்குப் போறாங்க,...

கோவி.கண்ணன் சொன்னது…

/
ஆனா என்ன மாதிரி சுமாரான பசங்கல்லாம் தனியார் பள்ளியில் போட்டு பெண்டு நிமித்தினாத்தான் ஓரளவிற்கு நிமிருது:)

அரசு பள்ளிகளின் தரம் உயர்வாக இருந்தால் ஏன் தனியாருக்குப் போறாங்க,...//

எல்லாம் மோகம்தான் சிவா.

தள்ளுவண்டியில் வைத்து விற்கும் கொய்யா பழம் 10 ரூபாய் என்றாலும் வாங்க மாட்டோம், அதையெ ரிலையன்ஸில் வைத்து விற்கும் போது 40 ரூபாய் கொடுத்து வாங்குவோம். இரண்டுக்கும் சுவை தரம் ஒண்ணும் வேறுபாடு இருக்காது. இடம் நல்லா இருப்பதால் தரம் நல்லா இருக்கும் என்பது நம்ம மனக்கணக்கு தான்

கையேடு சொன்னது…

//தள்ளுவண்டியில் வைத்து விற்கும் கொய்யா பழம் 10 ரூபாய் என்றாலும் வாங்க மாட்டோம், அதையெ ரிலையன்ஸில் வைத்து விற்கும் போது 40 ரூபாய் கொடுத்து வாங்குவோம். இரண்டுக்கும் சுவை தரம் ஒண்ணும் வேறுபாடு இருக்காது. இடம் நல்லா இருப்பதால் தரம் நல்லா இருக்கும் என்பது நம்ம மனக்கணக்கு தான்//

இந்த உதாரணம் நல்லா இருக்கு.

ஒரு முறை பாதசாரிக் கடையொன்றில் பல்துலக்கும் மெஸ்வாக் குச்சிகள் கிடைத்தன. அதனை எப்படி நம்பி வாங்குவது என்றேன், இதுவே ஒரு பலசரக்கு அங்காடியில் சில குச்சிகளை கட்டி கீழே மெஸ்வாக் என்று ஒட்டியிருந்தால் நீங்கள் எதுவும் பேசாமல் அதிக விலையும் கொடுத்து வாங்குவீர்கள் என்றான் எனது நண்பன் நியாஸ்.

எனக்கு நிதர்சனம் புரிந்தது.. :)

ஆ.ஞானசேகரன் சொன்னது…

//தனியார் பள்ளிகளின் கொட்டத்தை அடக்க பெற்றோர்கள் தனியார் பள்ளிகளை புறக்கணிப்பதே சரியான முடிவு ஆகும்.//

முடியமா? ஆழமரம் பொல் பழ்கிவிட்டது கொஞ்சம் கடினம்தான்

சிநேகிதன் அக்பர் சொன்னது…

இதே கேள்விதான் என்னுள்ளும்...

எல்லாம் பணம் படுத்தும் பாடு.

snkm சொன்னது…

அரசு பள்ளிகளில் தரம் குறைவாகத் தான் இருக்கிறது! எல்லா அரசுப் பள்ளிகளையும் அவ்வாறு சொல்ல முடியாது, அரசுக்கு மக்கள் மேல் அக்கறை சுத்தமாக கிடையாது. இருந்தால் தரமான கல்வியைத் தாங்கள் வழங்குவதாக இருந்தால் அவர்கள் வீட்டுப் பிள்ளைகளைக் கூட அனுப்ப மாட்டார்கள், வேறு பள்ளிக்கு. நன்றி!

priyamudanprabu சொன்னது…

முன்று ஊருக்கு 3 என்ற ???

or ஊருக்கு 3 என்ற /??

priyamudanprabu சொன்னது…

தற்போது என் தம்பி மகன்கள் தனியார் பள்ளியில் படித்து போது தான் தெரிந்தது அவர்கள் படித்த தனியார் பள்ளிகள் அரசு அங்கிகாரத்துடன் துவங்கி இருக்கவில்லை என்பதே,
////

இதையெல்லம் அரசு கவனிக்கதா ? ?

எல்லம் முடிந்து மானவர்கள் சேர்த்ந் பிந்தான் ர்தெரியுது

priyamudanprabu சொன்னது…

அரசு பள்ளிகளின் தரம் கேள்விக்குறியாய் இருக்கும் வரை இது தொடரவெ செய்யும்
பள்ளிகளின் மீது மக்களின் நம்பிக்கை வர அரசு முயர்ச்சிக்கனும்

கிரி சொன்னது…

கில்லாடி கண்ணன் அவர்களே! அதெல்லாம் சரி ... கொஞ்சம் பத்தி பிரித்து எழுதுங்கள். இவ்வ்வ்வளோ பெரிய பத்தியா எழுதினா எப்ப்பூடி! :-)

ஜோதிஜி சொன்னது…

மனதில் இன்று வரைக்கும் தீராத யோசனைகளை உருவாக்கிக் கொண்டுருக்கும் விசயத்தை தொட்டு இருக்கீங்க.

குழந்தைகளின் கடந்த நான்கு வருடங்களில் மற்ற பள்ளிக்குழந்தைகளின் வாழ்க்கையையும் ஒப்பிட்டு பார்க்கும் போது தான் படிப்பு என்பது படிக்கிற குழந்தைகள் எங்கு படித்தாலும் ஆர்வம் இருந்தால் இயல்பாகவே வரக்கூடியது என்பதை உணர வைத்தது. இதுவே தான் கன்யாகுமரி மாவட்டத்தில் மீன் விற்பவர் குழந்தை பெற்ற உச்சக்கட்ட மதிப்பெண்கள் வரைக்கும் உணர்த்தியது.

நான் எப்படியோ தப்பிவிட்டேன். தொடக்கத்தில் குழந்தைகள் விசயத்தில் அதிக ஆர்வம் இருந்த காரணத்தால் தேர்ந்தெடுத்த பள்ளியில் சேர்த்து இருந்தால் இன்று கொலையே செய்து இருப்பேனோ என்று யோசித்துக் கொள்வதுண்டு.

கொள்ளை என்றால் வார்த்தைகளால் எழுதமுடியாத கொள்ளை.

ஆனாலும் அவர்கள் மேல் தவறில்லை. காரணம் சமீபத்தில் சந்தித்த நண்பர் சொன்ன வாசகம்.

படிக்க வைக்கவேண்டுமென்றால் அந்தப் பள்ளியில் தான் படிக்க வைக்க வேண்டும். என் பையன் இங்கீலீசு என்னமா பேசுறான் தெரியுமா? என்கிறார்.

அளவுக்கு அதிகமாக கடன் வாங்கி வாழ்ந்து கொண்டுருக்கும் வாழ்க்கையைப் பார்க்கும் போது தான் நாம் பெற்றுள்ள சிந்தனைகள் மட்டுமே பலருக்கும் பணம் சம்பாரிக்க ஒரு காரணமாக அமைந்து விடுகிறது.

நல்வாழ்த்துகள் கண்ணன். 27ந்தேதி இல்லத்தில் விசேடங்க. நீங்கள் ஏற்கனவே பெற்ற முகப்பு அங்கீகாரம்.

வடுவூர் குமார் சொன்னது…

கோவியாரே,பள்ளிக்கே இந்த நிலமை என்றால் கல்லூரியில் இருக்கும் பேராசிரியர்களும் அவர்கள் திறமையும் பெரிய கேள்விக்குறியாக இருக்கு.
விஜய் டிவியில் "அகரம்" நிகழ்ச்சியில் ஒரு புள்ளிவிபரம் .....கல்லூரியை விட்டு பட்டப்படிப்பு சான்றிதழுடன் வரும் மாணவர்களில் வெறும் 17~20 விழுக்காடு வரை தான் வேலைக்கான தகுதியுடன் வருகிறார்களாம்,இப்படி போனதற்கு யார் யாரெல்லாம் காரணம். நாடு போகும் நிலமை மிகவும் கவலைக்கிடமாக இருக்கு.

TBR. JOSPEH சொன்னது…

இதுவரை எப்படியோ, சமச்சீர் கல்வி அறிமுகப்படுத்தப்பட்டு அரசு பள்ளியானாலும் தனியார் பள்ளியானாலும் பயில்விக்கப் போவது என்னவோ ஒரே பாடத் திட்டம்தான். ஆகவே எந்த பள்ளியானாலும் இனி ஒன்றுதான்.

ஆனால் வரதராஜன் கமிட்டி இதை செயல்படுத்திய விதம்தான் நீதிமன்றத்தின் கண்டனத்திற்குள்ளாகியுள்ளது. எதை செய்தாலும் சரிவர செய்ய வேண்டும் என்பதற்கு இது ஒரு நல்ல உதாரணம். இனியாவது தமிழக அரசு நீதிமன்றம் சுட்டிக்காட்டிய தவறுகளை தவிர்த்து இறுதி முடிவு எடுத்தால் நல்லது.

சிங்கக்குட்டி சொன்னது…

//பணத்தையும் உரிஞ்சும் அட்டைகளாக மாறிவிட்டன//


உண்மை உண்மை உண்மை :-)

நான்கு மணிநேர விளையாட்டு பள்ளிக்கு பதினைந்து ஆயிரம் கட்டும் படி இருக்கிறது இன்று.

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்