ஸ்டார் வேல்யூ, டைரக்டர் வேல்யூ என்ற பிரிவாக திரைப்படங்கள் பார்க்கப்படுவதும் விமர்சனம் செய்வதும் நடைமுறை, இந்த வகையில் ஒரே படத்திற்கு பல்வேறு பதிவர்களிடமிருந்து 50க்கும் மேற்பட்ட விமர்சனங்கள் வரும். செல்வராகவன், கவுதம் மேனன் படங்களுக்கு மிகுதியான விமர்சனங்கள் வந்தது. அங்காடித் தெரு பற்றி கேபிள் சங்கர் பதிவைப் படித்ததும் பார்க்க வேண்டும் என்று நினைத்தேன். மற்றப் படங்களின் விமர்சனங்களை விட இந்தப் படம் பற்றி எழுதும் போது 'இவருமா ?' என்று சிலருக்கு சலிப்பு ஏற்படுத்தினாலும், மேலும் பார்க்காத ஒருவர் படம் பார்க்க விரும்புவார் என்கிற நம்பிக்கையில் எழுதுகிறேன்.
விளிம்பு நிலைக்கும் நடுத்தரவர்கத்திற்கும் இடைப்பட்ட மக்களின் வாழ்க்கையின் போக்குகள் பற்றி நன்றாக சொல்லி இருக்கிறார்கள். ஐந்து மாடி ஜவுளிக்கடைகளின் கிழிந்த பக்கங்கள் படத்தில் காட்சி படுத்தப்பட்டு இருக்கிறது. கூலித் தொழிலாளிகளுக்கு முடிந்த அளவில் பிடித்தம் செய்து ஊதியம் வழங்கிவிட்டு கோடிகளில் லாபம் பெரும் நிறுவனங்கள் உபரிப் பணத்தை (விளம்பர) நடிகைகளின் படுக்கை அறையில் நிறைத்துவிடுகிறார்கள் என்பது நாம் அறிந்த தகவல் தான்.
கொத்தடிமை முறை தற்போது இல்லை என நினைக்கிறோம், ஆனால் அது வேறொரு வடிவமாக தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது. இது போன்ற படங்களைப் பார்க்கும் போதும், உழைப்பால் உயர்ந்தவர்கள் என்று ஒருசிலரை அடையாளம் காட்டி தன் முனைப்பு கட்டுரையாக எழுதுவதையெல்லாம் படித்த பிறகு, தான் கஷ்டப்பட்டு வந்ததை உணர்ந்த ஒருவன் அதே போல் கஷ்டப்படுபவர்களுக்கு எந்த ஒரு உதவியும் செய்யாமல் முடிந்த அளவுக்கு அவர்களை பிழிந்தே, சுரண்டியே தான் மேலும் மேலும் வளர்கிறான் என்பது மென்று விழுங்கக் கூடிய உண்மையாக இருக்கிறது.
ஒருமுறை அசோக் நகர் சரவண பவனுக்குச் சென்றேன். அங்கு சப்ளையராக பல சிறுவர்கள் இருந்தார்கள். இவர்களுக்கு 18 வயதிற்கும் குறைவாக இருக்கலாம் என்று நினைத்து ஒருவனிடம் கேட்டேன். 'தம்பி உனக்கு என்ன வயது ?' கொஞ்சம் யோசித்துவிட்டு 18 என்றான். 18 என்று சொல்ல அவ்வளவு யோசனையா ? என்று நினைக்கும் போதே அவன் பொய்தான் சொல்கிறான் என்று விளங்கியது.
பல ஐந்து மாடிகள் அண்ணாச்சி கடைகளில் வேலை செய்யும் சிறுவர்கள் 15 - 18 வயதிற்குள் இருப்பவர்களே மிகுதி என்று நினைக்கிறேன். 18 வயதிற்கும் மேல் அவனுக்கு விவரம் தெரிந்துவிடும், இது போன்ற கடைகள் பிழிந்து எடுக்கிறார்கள் என்று கண்டிபாக உணர்ந்தே ஓடிவிடுவார்கள்.
சிறுவர்களுக்கு வேலை கொடுப்பது சட்டபடி குற்றம் என்றாலும் அவர்களின் வயதைக் கூட்டிச் சொல்லச் சொல்லி எப்படியோ வேலையில் வைத்துக் கொள்கிறார்கள். சிறுவர்கள் வேலைக்கு வருவது வெறும் வறுமை தான் காரணம் என்பதைவிட சிறுவயதில் பீடி சுற்றி, வெடி சுற்றி அவர்கள் காசுகளைப் பார்ப்பதால் பிறகு படிப்பதற்கு அவர்களால் இயலாமல் போய் பதினைந்து வயதிலேயே ஐந்து மாடிக் கடைகளின் விறிந்த வலையில் விழுந்துவிடுகிறார்கள்.
திரைப் படம் என்பது நம் கண் முன் நடக்கும் காட்சியின் பதிப்பு என்பதாக அமைந்திருக்கும் மற்றொரு படமாக அங்காடித் தெரு மனதில் நிறந்திருக்கிறது. இது வெற்றிப்படமா தோல்வி படமா என்பதைவிட இது போன்ற படங்களின் மூலம் நடப்புகளை தமிழ் திரை பதிவு செய்துள்ளது என்று எதிர்காலத்தில் நினைவு கூறத்தக்கப்படம் என்று தான் சொல்லுவேன்.
திருநெல்வேலி வட்டார மொழியில் கைதேர்ந்தவர் என்பதால் ஜெயமோகனின் பேச்சுரை படத்திற்கு சிறப்பாகவே பொருந்துகின்றன. பாடல்கள் நன்றாக இருந்தாலும் பின்னனி இசை அவ்வளவு சிறப்பாக இல்லை.
வசந்தபாலன் மற்றொரு பாலா என்று தினமலரில் யாரோ ஒருவர் பின்னூட்டங்களில் குறிப்பிட்டு இருந்தார். எனக்கும் சரி என்றே தோன்றுகிறது.
வாழ்க்கைச் சூழலில் ஒன்றாக இருக்கும் நம்மில் ஒருவன் தான் நமக்கான படைப்பை உருவாக்க முடியும் என்பதை நிருபனம் செய்யும் மற்றும் ஒரு இயக்குனர் வசந்த பாலன்.
படத்தின் இயல்பான முடிவு, வாழ்ந்து காட்டுகிறேன் என்கிற நாயகனின் அறைகூவல்.....மற்ற படங்களில் என்றால் ஐந்து மாடி முதலாளிக்கு பதிலாக பத்து மாடிக்கு முதலாளியாக நாயகன் உயர்ந்ததாக காட்டுவார்கள். இங்கு அந்த வாழ்ந்து காட்டுதல் என்பது இவனிடம் வேலையை விட்டா வழியே இல்லையா ? இருக்கே...வேறொரு வேலை என்பதாக முடிகிறது. மேலும் மேலும் வாழ்க்கையில் உயர்வது என்பது மட்டுமே வாழ்க்கை என்று நம்ப வைக்கப்படும் திரைச் சூழலில் இயல்பாக தொடர்வதும் கூட வாழுதல் தான் என்று சொல்லப்படுகிறது. குள்ளமனிதன் - விலைமகள் மனைவி, கண் தெரியதா பெரியவரின் கடை, கட்டண கழிப்பிடம் நடத்தும் மற்றொரு வேலை அற்ற இளைஞன் என அதற்கேற்றபடியே கதையில் வரும் பிற பாத்திரங்களின் வாழ்க்கைச் சூழலும் கூட காட்டப்படுகிறது. நம்பிக்கையும், பொருளியல் சமூக உயர்வு மட்டுமே வாழ்க்கை அல்ல....பிரச்சனைகளில் இருந்து, விபத்திலிருந்து மீண்டு(ம்) தொடர்வது கூட வாழ்க்கை தான் எனச் சொல்லும் படத்தின் தகவல் (மெசேஜ்) ரொம்ப புடிச்சிருக்கு.
துவக்கத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தும் சிறைக் கூடம் போன்ற உணவுக் கூட மற்றும் இரவு நேரக் காட்சிகள் படத்தில் பிற்பகுதியில் வேறு மாதிரி இயல்பாக காட்டப்படும் போது அவ்வளவு அதிர்ச்சி ஏற்படுத்தாதது திரைக்கதையின் சிறு தொய்வு.
கலைப்படம், கருத்துப் படம், சிறப்பான வசனங்கள் என்ற அளவில் அங்காடித் தெரு பல்பொருள் அங்காடி.
பின்பற்றுபவர்கள்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
மதமும் மார்க்கமும் !
எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"
இறைவன் - மதம்
இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !
-கோவியார்
4 கருத்துகள்:
நல்ல பார்வை தலைவரே..
கேபிள் சஙக்ர்
kalakkal pathivu thala ...
சினிமாத்தனம் இல்லாத யதார்த்த சினிமா. அதுவே முதல் வெற்றி.
பகிர்விற்கு நன்றி.
நல்ல விமர்சனம், எல்லோர்க்கும் புரியும் படி.
தி. நகரில் இருந்த எனது அனுபவத்தில் எல்லா ஐந்து மாடிக்கட்டடங்களிலும் அவ்வாறு நடத்தப்படுவதில்லை.
இது ரங்கனாதன் தெருவுக்கு மட்டுமல்ல பல சிறுதொழில் கூடங்களுக்கும் பொருந்தும்.
இருந்தாலும் படம் பார்த்தால்தான் சொல்லமுடியும்.
கருத்துரையிடுக