பின்பற்றுபவர்கள்

28 ஏப்ரல், 2009

கலைமாமணி விருதை வீசினார் கவிஞர் இன்குலாப் !

ஈழ விவாகரத்தில் ஈழத் தமிழர்கள் பற்றிய கருத்தில் இஸ்லாமியர்களில் சிலர், விடுதலைப் புலிகளுக்கும் - இலங்கை இஸ்லாமியர்களுக்கும் இருந்த கருத்து வேறுபாடுகளைக் குறிப்பிட்டு, விடுதலைப் புலிகளால், இலங்கை இஸ்லாமியர்கள் இடம் பெயர நேரிட்டதாகவும், இன்னல்கள் அடைந்ததாகவும் சொல்லி காங்கிரஸ் நிலைப்பாட்டுடன் இருந்தனர், அதாவது ஈழத்தமிழ்ர்கள் மீது இரக்கப்படுகிறோம், விடுதலைப் புலிகள் அழிவதைப் பற்றி கவலை இல்லை என்பதாக கருத்து தெரிவித்திருந்தனர்.

இஸ்லாமியர்களான இயக்குனர் அமீர் போன்றவர்கள் மிகவும் உரக்க குரல் கொடுத்து சிறை வரை சென்றனர். மேலும் ஒரு இஸ்லாமியர், கவிஞர் திரு இன்குலாப் தனக்குக் கொடுக்கப்பட்ட கலைமாமணி விருதை ஈழத்தமிழர்கள் படுகொலைக்கு ஆதரவான காங்கிரசையும் கூட்டணியில் இருந்து கொண்டே அதை தடுக்கும்படி வலியுறுத்தாமல் இருந்த திமுகவிற்கு கடுமையான எதிர்ப்பு தெரிவிக்கும் வண்ணம் திருப்பி அனுப்பி இருக்கிறார்.

தமிழருவி மணியன் போன்ற தமிழுணர்வு மிக்கவர்கள் கட்சிக்காரன் என்கிற அடையாளத்தை விட எப்போதும் நிலையான தமிழன் / தமிழின உணர்வே மேலானது, உண்மையானது, உணர்வு பூர்வமானது என்று வெளிக்காட்டி தமிழின உணர்வாளர்களால் போற்றப்படுகிறார்கள்.

அந்த வரிசையில் கவிஞர் இன்குலாப் ஐயாவின் செயலும் மிகவும் போற்றத் தக்கது.

***
இனப் படுகொலை: கலைமாமணியை திருப்பி அனுப்பினார் இன்குலாப்!

சென்னை: ஈழத் தமிழர் படுகொலையைத் தடுக்கத் தவறிய தமிழக அரசைக் கண்டித்து அது தனக்கு அளித்த கலைமாமணி விருதை கவிஞர் இன்குலாப் திருப்பி அனுப்பி விட்டார்.

கடந்த 2006ம் ஆண்டு இன்குலாப்புக்கு கலைமாமணி விருது அளிக்கப்பட்டது.

இந்த விருதை தற்போது தமிழக அரசுக்கே திருப்பி அனுப்பி விட்டார் இன்குலாப். இதுகுறித்து அவர் அரசுக்கு எழுதியுள்ள கடிதத்தில்,

எனக்கு அளிக்கப்பட்ட 'கலைமாமணி' விருதைப் பின்வரும் காரணங்களால் திருப்பி அனுப்புகின்றேன்.

தமிழீழத்தில் நடைபெறும் தமிழினப் படுகொலைக்கு எதிரான தமிழக மக்களின் போராட்டத்தில் முத்துக்குமார் உள்ளிட்ட இளைஞர்கள் உயிர்த்தியாகம் செய்வது தொடர்கிறது. உண்மையான மக்கள் அரசு இங்கு இருக்குமேயானால், இவற்றால் துணுக்குற்றுத் தமிழினத்துக்கு நியாயம் செய்திருக்கும்.

ஆனால் தமிழின ஒழிப்பை முன்னின்று நடத்தும் சிங்களப் பேரினவாத அரசுக்கு, காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி அரசு இன்றும் வஞ்சகமாக உதவிக் கொண்டிருக்கின்றது.

வன்முறையில் நம்பிக்கை அற்றதாகப் பீற்றிக்கொள்ளும் காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகள், தமிழக இளைஞர்கள் மேற்கொண்ட உயிர்த்தியாக அகிம்சைப் போராட்டத்தைச் சிறிதும் பொருட்படுத்தவில்லை.

அகிம்சைப் போராட்டங்களைப் பொருட்படுத்தாத வல்லாதிக்க மரபு காங்கிரசுடையது. தமிழ் நாடு என்ற பெயர் சூட்டக் கோரிய தியாகி சங்கரலிங்கனார் உண்ணாநோன்பிருந்து உயிர்துறந்தது காங்கிரஸ் ஆட்சியின் போதுதான்.

1965 இல், இந்தி ஆதிக்கத்துக்கு எதிராக உணர்வுகொண்ட தமிழர்கள் தீக்குளித்து உயிர்துறந்தபோதும், துப்பாக்கிச் சூடு நடத்தி இரத்தவெறி தீர்த்துக் கொண்டது காங்கிரஸ் ஆட்சிதான்.

இந்திய அரசு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றக் கோரி திலீபன் யாழ். மண்ணில் உண்ணாநோன்பிருந்து உயிர்நீத்த போதும் பொருட்படுத்தாது, ஈழத் தமிழர்களை ஆயிரக் கணக்கில் கொன்று குவித்ததும், தமிழ்ப் பெண்களை வல்லாங்கு செய்து கொடுமைப்படுத்தியதும் இதே காங்கிரஸ் ஆட்சிதான்.

இன்று இலங்கையில் போர் நிறுத்தம் கோரித் தமிழக முதல்வர் கலைஞர் அவர்கள் காலவரம்பற்ற உண்ணாநோன்பை மேற்கொண்டிருக்கிறார். அவர் எல்லா நலத்துடனும் நீடுழி வாழவேண்டும்.

தமிழகச் சட்டமன்றமும் தமிழக மக்களும் ஒருமித்து நடத்திய அனைத்து அறப் போராட்டங்களையும் கண்டு கொள்ளாது, சிங்களப் பேரினவாத அரசுக்குப் படை, கருவி, நிதி முதலியவற்றை வழங்கியது காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி அரசுதான்.

இது குறித்துத் தமிழக அரசு மேற்கொண்ட செயல்பாடுகள் அனைத்தும், நடுவணரசின் தமிழின விரோத நடவடிக்கைகளுக்கு உதவுவதாகவே முடிந்தன.

இந்திய அரசே தமிழகத்தில் நிகழ்ந்த உயிர்த் தியாகங்களைப் பொருட்படுத்தாத போது, ராஜபக்சே அளவிலான சிங்கள பாசிச அரசு, கலைஞரின் உண்ணாநோன்புப் போராட்டத்தை ஏற்று நியாயம் வழங்கும் என்று எப்படி எதிர்பார்க்க முடியும்?

கலைஞர் அவர்களின் இந்தப் போராட்டத்தின் பயனாக, முன்பு கலைஞர் அவர்களே முன்வைத்த இலங்கை அரசுடனான அரசியல் (ராஜீய) உறவைத் துண்டிக்கவேண்டும் என்ற கோரிக்கையையாவது இந்திய அரசு நிறைவேற்றுமா?

கலைஞர் அவர்களின் இந்தப் போராட்டம் தமிழகத்தில் மூண்டெரியும் சிங்களப் பேரினவாத எதிர்ப்பையும், இந்திய அரசின் துரோகத்துக்கு எதிரான தமிழ் உரிமை உணர்வையும் மடை மாற்றத் தான் பயன்படும்.

இன்று கலைஞர் செய்ய வேண்டியது தேர்தலைப் பற்றிக் கவலைப்படாது காங்கிரஸ் கூட்டணியை விட்டு வெளியேறுவது தான்.

மனிதன், தமிழன், படைப்பாளி என்றவகையில் இந்தக் கொடுமைகளுக்கு எதிராகச் செயற்பட வேண்டிய கடமை எனக்கும் இருக்கிறது.

இந்த வகையில் 2006 ஆம் ஆண்டு, தமிழக அரசின் தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தால் வழங்கப்பட்ட 'கலைமாமணி' விருது, எனக்குக் கௌரவமாக அல்லாமல் முள்ளாகக் குத்திக் கொண்டிருக்கிறது. இதைத் தமிழக அரசிடமே திருப்பித் தருவதுதான் எனது மனித கௌரவத்தைத் தக்க வைத்துக் கொள்வதாக அமையும்.

தமிழக இளைஞர்கள் நிகழ்த்திய உயிர்த்தியாகங்களுடன் ஒப்பிடும்போது இது நிரம்பச் சாதாரணமானது.

அதனால் இம்மடலுடன் எனக்கு அளிக்கப்பட்ட 'கலைமாமணி' விருதுக்கான தங்கப்பதக்கம், சான்றிதழ் ஆகியவற்றைத் தமிழ்நாடு இயல் இசை நாடகமன்றச் செயலாளர் அவர்களுக்குப் திருப்பி அனுப்புகிறேன் என்று கூறியுள்ளார் இன்குலாப்.

தகவல் : நன்றி தட்ஸ்தமிழ்

28 கருத்துகள்:

Selva சொன்னது…

அவன் மனிதன்

கோவி.கண்ணன் சொன்னது…

//selva said...
அவன் மனிதன்
//

'அவர் பெரிய மனிதர்' என்று முன்று சொற்களில் சொல்லி இருந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்

thiru சொன்னது…

கோவி,

அவருக்கு தலைதாழ்ந்த வணக்கம்!
தமிழ் இனம் மீதான அக்கறையுள்ள கலைஞர்கள் இந்திய மற்றும் தமிழக அரசு வழங்கியுள்ள பதவிகளையும், விருதுகளையும் திருப்பி அனுப்ப வேண்டும். தமிழர்களின் ஒன்றுப்பட்ட எதிர்ப்பு உருவானால் எந்த அதிகாரவர்க்கமும் வாலாட்டமுடியாது போகும்.

வில்லங்கம் விக்னேஷ் சொன்னது…

எதற்கு நீங்கள் இன்குலாப்பினை இஸ்லாமியர் என்ற கூட்டுக்குள்ளே அடைக்கின்றீர்கள்?
அவர் எப்போதாவது தன்னை மதம் சம்பந்தப்பட்ட கூட்டுக்குள்ளே அடைத்து நீங்கள் பார்த்ததுண்டா?

அவருடைய குடும்பத்தினையே எடுத்துப்பாருங்கள். அவருக்கு மத நம்பிக்கை இருக்கின்றதா என்றேனும் கேட்டிருக்கலாமே?

Selva சொன்னது…

'அவர் பெரிய மனிதர்' என்று முன்று சொற்களில் சொல்லி இருந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்


உண்மைதான்
தனது திறமைக்கு கிடைத்த பரிசான விருதை தனது இனத்துக்காக தூக்கி வீசும் மனம் எல்லோருக்கும் வராது.

கோவி.கண்ணன் சொன்னது…

//வில்லங்கம் விக்னேஷ் 11:05 PM, April 28, 2009
எதற்கு நீங்கள் இன்குலாப்பினை இஸ்லாமியர் என்ற கூட்டுக்குள்ளே அடைக்கின்றீர்கள்?
அவர் எப்போதாவது தன்னை மதம் சம்பந்தப்பட்ட கூட்டுக்குள்ளே அடைத்து நீங்கள் பார்த்ததுண்டா?

அவருடைய குடும்பத்தினையே எடுத்துப்பாருங்கள். அவருக்கு மத நம்பிக்கை இருக்கின்றதா என்றேனும் கேட்டிருக்கலாமே?
//

இஸ்லாமியர்களில் பலர் பெரியவர் அப்துல் கலாமை நாங்கள் ஒரு முஸ்லிமாக நினைப்பது இல்லை என்பார்கள், அதே போல் இவரையும் சொல்லுகிறார்களா ? என்று தெரிந்தால் என் கருத்தை மாற்றிக் கொள்கிறேன்

பதி சொன்னது…

//ஒரு இஸ்லாமியர், கவிஞர் திரு இன்குலாப் தனக்குக் கொடுக்கப்பட்ட கலைமாமணி விருதை திருப்பி அனுப்பி இருக்கிறார்.//

இவர்களைப் போன்றவர்களை மத/கட்சி அடையாளப் படுத்தாமல் பாராட்டுவோம். இவர்களைப் போன்றவர்களினால், தமிழ் உணர்வாளர்கள் மத்தியில் மதப் பாகுப்பாட்டினை ஏற்படுத்தும் நோக்கோடு விளம்பிக் கொண்டிருப்பவர்களின் முயற்சி சறுக்கட்டும்...

//தமிழருவி மணியன் போன்ற தமிழுணர்வு மிக்கவர்கள் கட்சிக்காரன் என்கிற அடையாளத்தை விட எப்போதும் நிலையான தமிழன் / தமிழின உணர்வே மேலானது, உண்மையானது, உணர்வு பூர்வமானது என்று வெளிக்காட்டி தமிழின உணர்வாளர்களால் போற்றப்படுகிறார்கள்.//

உண்மை.. அதே சமயம், இவர்களைப் போன்றவர்களை தொடர்ந்து உதாரணமாக காட்டுவோம்.. அப்பொழுதுதாவது நான் போஸ்டர் ஒட்டினேன், சுவரில் கட்சி சின்னம் வரைந்தேன், ஓட்டு சிலிப் எழுதிக் கொடுத்தேன் போன்ற விஜயகாந்த் பாணி கட்சிப் பணியாற்றியவர்கள் எல்லாம் தங்களது கட்சிவிசுவாச நிலையை மாற்றுவார்களா எனப் பார்ப்போம்..

ராஜ நடராஜன் சொன்னது…

இன்குலாப்!ஜிந்தாபாத்!

அத்திவெட்டி ஜோதிபாரதி சொன்னது…

இவர் மானச்தனா? இந்தியாவை, அன்னை இந்தியா சோனியாவை, கலைஞரை வசதியாக மறந்துவிட்டு அமெரிக்காவைச் சாடும் வைரமுத்து மானஸ்தனா?

ramalingam சொன்னது…

வெல்டன் ஜோதிபாரதி. வைரமுத்துவுக்கு சரியான செருப்படி.
இன்குலாப் மாமணி. மற்றவர்கள் மாமாமணிகள்.

கோவி.கண்ணன் சொன்னது…

திரு (யோ.திருவள்ளுவர்),
selva,
ராஜ நடராஜன்,
பதி,
ஜோதிபாரதி
ramalingam

பின்னூட்டங்களுக்கு மிக்க நன்றி !

எம்.எம்.அப்துல்லா சொன்னது…

உங்களுக்குத் தெரிந்த இஸ்லாமியர்கள் இன்குலாபும்,அமீரும் மட்டும்தான் போலும்.

பதி சொன்னது…

//இன்குலாப் மாமணி. மற்றவர்கள் மாமாமணிகள்.//

:)

கோவி.கண்ணன் சொன்னது…

//எம்.எம்.அப்துல்லா said...
உங்களுக்குத் தெரிந்த இஸ்லாமியர்கள் இன்குலாபும்,அமீரும் மட்டும்தான் போலும்.
//

உணர்ச்சி வசப்படாதிங்க பதிவில் 'சிலர், போன்றவர்கள்' என்ற சொற்களைப் பயன்படுத்தி இருக்கிறேன். ஒரு பானை சோற்றுக்கு துளி உப்புப் போதும் என்பதும் ஏற்கக் கூடியது தானே

வில்லங்கம் விக்னேஷ் சொன்னது…

/இஸ்லாமியர்களில் பலர் பெரியவர் அப்துல் கலாமை நாங்கள் ஒரு முஸ்லிமாக நினைப்பது இல்லை என்பார்கள், அதே போல் இவரையும் சொல்லுகிறார்களா ? என்று தெரிந்தால் என் கருத்தை மாற்றிக் கொள்கிறேன்/

அட நீங்க ஒண்னு. கலாம் ஒரு பொன்மனச்செம்மல். பாவ்லா பாய்சன். அவரை தூக்கி ஆடறவங்களைத்தான் ஒங்களுக்குத் தெரியுமே? பக்கா பாஜக பார்பனபேர்வழிங்க.

இன்குலாப் ஒரு சோசலிச்டு. அவரோட மகன் பேரு செல்வம். அவரோட புள்ளைங்க வேறுவேறு மதத்தவங்கள மணந்திருக்காங்க. ஈழத்துக்குச் சென்று சந்தித்து வந்தவரு. அவரு இஸ்லாத்த என்னிக்கு முன்னுக்கு வெச்சிருக்காரு?

கலாமையும் இன்குலாபையும் ஒரு தட்டுல வெச்சுப் பாக்கறதா?

SurveySan சொன்னது…

'அவர் பெரிய மனிதர்'

Machi சொன்னது…

//இன்குலாப் மாமணி. மற்றவர்கள் மாமாமணிகள்//

இன்குலாப் மாமணி. மற்றவர்கள் மாமா மணிகள்

Naina சொன்னது…

கோவி. கண்ணன் அவர்களே!
விடுதலை புலிகள் ஈழ தமிழ் தேசத்திற்காக போராடுகிறார்கள் என்ற காரணத்திறகாக அவர்கள் செய்த அழித்தொழிப்பு நடவடிக்கைகள் எல்லாம் நியாயமானதாக ஆகிவிடுமா? தற்போது இனவெறி சிங்களர்களால் கொத்து கொத்தாக தமிழினம் கருவருக்கப்படுவது போலவே இலங்கையில் வாழும் தமிழை தாய் மொழியாக கொண்ட இஸ்லாமியர்களை கொன்றதும் அகதிகளாக இடம் பெயர செய்ததும் விடுதலைப் புலிகளின் கொடும் செயல்களுக்குரிய வரலாற்று பதிவுகள்.

அநியாயம் எவர் செய்தாலும் அவர்கள் தண்டிக்கப்பட வேண்டியவர்களே, அது தான் மனித நேயம்

நட்புடன்
நெய்னா முஹம்மது

கோவி.கண்ணன் சொன்னது…

//Naina said...
கோவி. கண்ணன் அவர்களே!
விடுதலை புலிகள் ஈழ தமிழ் தேசத்திற்காக போராடுகிறார்கள் என்ற காரணத்திறகாக அவர்கள் செய்த அழித்தொழிப்பு நடவடிக்கைகள் எல்லாம் நியாயமானதாக ஆகிவிடுமா? தற்போது இனவெறி சிங்களர்களால் கொத்து கொத்தாக தமிழினம் கருவருக்கப்படுவது போலவே இலங்கையில் வாழும் தமிழை தாய் மொழியாக கொண்ட இஸ்லாமியர்களை கொன்றதும் அகதிகளாக இடம் பெயர செய்ததும் விடுதலைப் புலிகளின் கொடும் செயல்களுக்குரிய வரலாற்று பதிவுகள்.//

இதே போல் நடந்து முடிந்த இராசீவ் படுகொலையை சாக்கிட்டுதான் இலங்கை அரசுக்கு காங்கிரசார் உதவி செய்கிறார்கள், ஆனால் செத்தொழிபவர்கள் அப்பாவி தமிழ்மக்களே என்றும் பார்க்க வேண்டும்.

//அநியாயம் எவர் செய்தாலும் அவர்கள் தண்டிக்கப்பட வேண்டியவர்களே, அது தான் மனித நேயம்

நட்புடன்
நெய்னா முஹம்மது//

தவறு செய்பவர்கள் தண்டிக்கப் படுவது நீதி மனித நேயம் கிடையாது. மன்னிப்பது தான் மனித நேயம், எங்கே இருக்கும் பாலஸ்தீனத்திற்கு குரல் கொடுப்பவர்கள் பக்கத்து நாட்டில் தமிழன் அழிக்கப்படுவதைப் பார்க்கும் போது குரல்வலை வரவில்லை, அதற்கு பதிலாக நீதி பேசுகிறோம் என்றால் அதை மனித நேயம் என்று சொல்ல முடியாது மத நேயம்.

எதிரிக்கு எதிரி நண்பன் என்ற சித்தாந்தம் சரிதான் என்றால் ஒரே நாளில் மனிதர்கள் அத்தனை பேரும் கூட கொலை செய்யப்படுவார்கள். எல்லாவற்றிலும் குரான் மேற்கோள்காட்டும் சிலர் 'எதிர்களைப் அவர்களின் பொல்லாத நேரம் பார்த்து பழிவாங்குவது தான் சிறந்தவழி' என்று சொல்லி இருக்கிறதா என்று தெளிவு படுத்தினால் நீங்கள் சொல்வதை நானும் மனித நேயம் என்று ஒப்புக் கொள்கிறேன்

சண்டாளச்சாமி சொன்னது…

We expect the same/some response from other artists/writers of Tamil Nadu who are alive, if any.

ARV Loshan சொன்னது…

அந்த உண்மைக் கவிஞனை, நல்ல மனிதரை சிரம் தாழ்த்தி வணங்குகிறேன்..
அவர் மனசும் அவர் கவிதைகள் போலவே அழகானது.. விரிந்தது..

திண்ணை தோழன் சொன்னது…

கவிஞர். இன்குலாப் ஒருபோதும் தன்னை ஒரு முஸ்லிமாக அடையாள காட்டியதில்லை. பிறப்பால் அவர் முஸ்லிமாக இருக்கலாம், ஆனால் அவர் தன்னை ஒரு நாத்தியகனாக,(தி.க. அல்ல) ஒரு தமிழனாக அடையாளப்படுத்திக் கொண்டவர் ஏன் இந்தியனாகவே கூட அவர் தன்னை அடையாளப் படுத்திக் கொள்ள விரும்பியதில்லை. சிறந்த தமிழ் நேசரான அவருடைய இச்செயல் நமக்கு வேண்டுமானால் தியாகமாக தெரியலாம் ஆனால் அவரளவில் இது மிக அற்பமே! கல்லூரி காலங்களில் அவருடன் விவாதம் செய்தது உண்டு.

மறத்தமிழன் சொன்னது…

கோவி கன்னன்,

பத்மசிறீ பட்டத்தை தூக்கி எரிந்து முதலில் மத்தியில் ஆளும் காங்கிரசு கட்சியின் முகத்தில் கரியை பூசியது இயக்குனர் பாரதிராஜாதான்.அந்தவழியில் இப்போது இன்குலாப். இருவரும் பாராட்டபட வேன்டியவர்கள்.தமிழருவி மணியனும் காங்கிரசு இயக்கதில் இருந்து வெளியேரியதும் ஒரு முன்னுதாரனம்.இயக்குனர் அமீர் தான் ஒரு இஸ்லாமியன் எனக்காட்டிகொன்டது கிடையாது.
அப்துல் கலாம் இந்து கோயில்கலுக்கு போவதாலேயே அவரை பா.ஜ.க.முத்திரை குத்த கூடாது(உங்களை சொல்லவில்லை).
ஈழ விவகாரத்தில் இன்னும் எத்தனை நாட்களுக்குதான் ஒரு ராஜீவ் காந்தி இறந்ததையும்,இலங்கைவாழ் முஸ்லிம்கள் விரட்டபட்டதாகவும்(?) சொல்லி விடுதலை புலிகளை எதிர்ப்பார்களோ ! மறத்தமிழன் அண்னன் சீமான் கூறுவதுபோல் பொதுமக்களே புலிகளாக மாறி இன்று களம் காண்கிரார்கள்.
மத்திய அரசின் கவனத்தை உடனே பெற தமிழகமக்கள் மத்திய அரசு அலுவலகங்களை இயங்கவிடாமல் முடக்கவேன்டும். போர்நிறுத்தம் செய்யும் வரை போராடவேண்டும்.காங்கிரசு அனைத்திலும் தோற்க வேண்டும்.

பொன்னர் சொன்னது…

நைனா
யாழ்ப்பாணம் கடந்த 14 வருடங்களாக இலங்கை அரசின் பிடியில் தான் உள்ளது. அவர்கள் முஸ்லீம்களை அங்கே குடியேற்றியிருக்கலாம் தானே ஏன் செய்யவில்லை? முஸ்லீம்களை வைத்து அரசியல் செய்கின்றார்கள் சிங்களவரும் முஸ்லீம் தலைவர்களும் இல்லையென்றால் முஸ்லீம் அகதிகளுக்கு சொந்தமான நிவாரணப் பொருட்களை தாங்கள் பாவிக்கமுடியாது. முஸ்லீம அமைச்சர் ஒருவர் (யாழ்ப்பாணத்தில் இருந்து துரத்தப்பட்டவர்) இன்ரைக்கு ஸ்ரீலங்காவின் பெரிய பணக்காரர்களில் ஒருவர் எப்படி இது சாத்தியம். சும்மா விடயம் தெரியாமல் கதைக்கவேண்டாம்.

யாழ்ப்பாணத்தில் முஸ்லீம்கள் சும்மாவா இருந்தார்கள் எத்தனை காட்டிக்கொடுப்புகள். முஸ்லீம்கள் யாழில் இருந்து துரத்தியடிக்கபடாவிட்டால் யாழ்ப்பாணமும் ஒரு அம்பாறையாக மட்டக்களப்பாக மாறி தினமும் தமிழர்கள் கொல்லப்பட்டிருப்பார்கள். ஏற்கனவே பாதி சுடுகாடாக மாறிய அந்த அழகிய நகர் முழுச்சுடுகாடாக மாறியிருக்கும்.

நாவேந்தன்

Bharathy சொன்னது…

"மறத்தமிழன் அண்னன் சீமான் கூறுவதுபோல் பொதுமக்களே புலிகளாக மாறி இன்று களம் காண்கிரார்கள்".
தயவு செய்து..உணர்ச்சி வசப்பட்டு இப்படிஎல்லாம் எழுதவேண்டாம்..பொதுமக்கள் தாமாகவே புலிகளாக மாறவில்லை..மாற்றப்படுகின்றனர்..அதை இலங்கை ராணுவம் மறைமுகமாக விரும்புகிறது..ஊடகங்களில் வரமறுக்கும்..மறுக்கமுடியாத உண்மை..

மறத்தமிழன் சொன்னது…

ernesto said...
தயவு செய்து..உணர்ச்சி வசப்பட்டு இப்படிஎல்லாம் எழுதவேண்டாம்..பொதுமக்கள் தாமாகவே புலிகளாக மாறவில்லை..மாற்றப்படுகின்றனர்..அதை இலங்கை ராணுவம் மறைமுகமாக விரும்புகிறது..ஊடகங்களில் வரமறுக்கும்..மறுக்கமுடியாத உண்மை..
ernesto,
இப்போது உணர்ச்சிவசப்படாமல் எப்போது உணர்ச்சிவசபடுவது?
எம்மின‌ம் முழுதும் அழிந்த‌ பின்பா?
பொதும‌க்க‌ள் புலிக‌ளாக‌ மாறுவ‌தை இல‌ங்கை விரும்புகிர‌தா?
என்ன உள‌ருகிரீர்க‌ள்...
ஈழத்த‌மிழ‌ர்க‌ளின் ஒரே ந‌ம்பிக்கை விடுத‌லைபுலிக‌ள் தான் என்ப‌தை உல‌க‌த்த‌மிழ‌ர்க‌ள் ஒத்துகொன்டு ரொம்ப‌ நாளாச்சு..
இப்ப‌ வ‌ந்து வர‌ம‌றுக்கும்,ம‌றுக்க‌ முடியாத‌ உண்மை, பொய்னு வார்த்தை விளைய‌ட்டு விளையாடிகிட்டு...

Bhuvanesh Babu Chinnadurai சொன்னது…

இன்குலாப் என்பவரை நான் ஒரு இடதுசாரி எழுத்தாளராகக் கருதியிருந்தேன். அவர் பின்பற்றும் மதம் பற்றிய விடயத்தை இன்றே அறிகிறேன். பலருக்கும் இது புதிய தகவலாய் இருக்குமென நம்புகிறேன்.

இலங்கையிலுள்ள தமிழ் இசுலாமியரில் பலரை சந்தித்திருக்கிறேன். அவர்கள் தங்களை 'முஸ்லீம்' என்று சொல்லிக்கொள்வதில்தான் ஆர்வம் காட்டுகிறார்களேயன்றி, 'தமிழன்' என்று ஒருபோதும் சொல்லிக்கொள்வதில்லை. விடுதலைப் புலிகளுக்கு மட்டுமல்ல ஒவ்வொரு இலங்கைத் தமிழனுக்கும் "தனி ஈழம்' தொடர்பான முஸ்லீம்களது நீலைபாடு நன்கு தெரியும்.

"ஈழத்தமிழ்ர்கள் மீது இரக்கப்படுகிறோம், விடுதலைப் புலிகள் அழிவதைப் பற்றி கவலை இல்லை" - இதுதான் அனைத்து இசுலாமியர்களின் நிலை!

"சிங்களர்" என்றாலே பெரும்பாலும் மதம் பவுத்தமாகத்தான் இருப்பார்(ஒரு சில கத்தோலிகர்களைத் தவிர). ஆனால், பவுத்த சமயத்திற்கெதிரான கருத்துக்களை ஒருபோதும் அனுதிப்பதில்லை சிங்கள இன மக்கள்.

தமிழரில் பெரும்பான்மையோர் இந்துக்கள்தான் (ஒரு சிலர் கத்தோலிகர்). இருந்தாலும், நம் தமிழகத்தின் பிரதானக் கட்சிகள் ஈழத்தமிழரை 'இந்து'வாகப் பார்க்காமல் 'மதம்-சாராத' நிலையில் பிரச்சனையை அணுகுவதையே நான் பார்க்கிறேன்.

பல இந்து அமைப்புகள், வெளிப்படையாகவும், மறைமுகமாகவும், புலம் பெயர்ந்த தமிழரோடு தொடர்பு வைத்திருப்பதையும் மறக்கவோ மறைக்கவோ முடியாது (கனடாவிலும் சுவிஸ்ஸிலும் உள்ள இந்து ஆலயங்களிலும், சாய்பாபா சங்க கூட்டங்களிலும் காணும் புலம் பெயர்ந்த தமிழர்களின் கூட்டமே ஒரு சாட்சி.)

தமிழீழப் போரட்டத்தின் அடுத்த கட்டத்தில், இந்துத்வ அரசியலுக்கு பெரும் பங்கு இருக்கும் என நம்புகிறேன்.

ஜோசப் பால்ராஜ் சொன்னது…

கலைமாமணியை தூக்கியெறிந்து மாமணி விருதை மக்களிடமிருந்து பெற்றுவிட்டார் என சொல்லுங்கள்.

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்