பின்பற்றுபவர்கள்

7 மே, 2008

இந்த சுற்றுலா பயணம் இன்னுமொரு - 2

மே 2 ஆம் தேதி காலை 8.30 மணிக்கு பெரிய விசை படகில் ( Ferry) லங்காவி செல்லத் திட்டமிட்ட படி, திரும்பி வர இருநாட்கள் ஆகும் என்பதால் டிபிசிடி வாக்கனத்தை வீட்டின் அருகில் நிறுத்தும் இடத்தில் இருப்பதுதான் பாதுகாப்பு எனவே வாடகைக் வாகனத்தில் காலை 7.45 க்கு படகு துறைக்கு வந்து சேர்ந்தோம். லங்காவி செல்ல படகு 2:30 மணி நேரம் பயணிக்கும் என்ற தகவல் தெரிந்தது, காலை உணவு செய்து நேரம் வீணாக்க விரும்பாததால் முன்கூட்டியே வாங்கி வைத்த கொரிக்கும் பண்டங்களையும், குளிர் பானங்களையும் நம்பி படகில் காலை 8.15 மணிக்கு ஏறிவிட்டோம். சுமார் 200 பேர் வரை பயணம் செய்யும் படகு, மூன்று அடுக்குகளாக இருந்தது. கீழ் தளத்தில் லங்காவி செல்லும் பயணிகளை ஏற்றிக் கொண்டார்கள், அதன் மேல் தளத்தில் வழியில் இருக்கும் இன்னொரு தீவிற்கு செல்லும் பயணிகளை ஏற்றிக் கொண்டார்கள், மேல் தளத்தில் விஐபி அறைகள் இருந்தன. அதில் ஓரிருவர் தவிர யாரும் இல்லை. பயணச்சீட்டு கூடுதலாக 20 வெள்ளிகள் தான் முன்பே தெரிந்திருந்தால் அதற்கு பயணச்சீட்டு வாங்கி இருப்போம், கீழ் தளத்தில் பயண இடம் அவ்வளவு மோசமில்லை தான். முற்றிலும் குளிர்வசதி பொருத்தப்பட்ட படகாக இருந்தது.

சுமார் 1 கிலோ மீட்டர் பயணத்திற்கு பிறகு மேல் தளத்தில் பார்வையாளர்கள் பகுதியை திறந்துவிட்டார்கள். அங்கிருந்து பார்க்க பினாங்கின் உயரக் கட்டிடங்களும், பினாங்கின் ஒருபகுதியும் தெரிந்தது, நேரம் ஆக ஆக அவை மறையத் தொடங்க, அந்த பகுதி கடலின் நீளத்தில் முற்றிலும் மறைந்து தண்ணீர் எல்லையைக் காட்டியது. படகு செல்லும் பகுதியில் இருபுறமும் தீவுகள் அங்கங்கே தெரிய ஆரம்பித்தன. சில இடங்களில் கடல் பறவைகளைப் பார்க்க முடிந்தது. கீழ்தளத்திற்கு சென்றோம், பல்வேறு வெளிநாட்டினரும் அங்கே வந்து நின்று கொண்டு கதைத்துக்கொண்டு இருந்தனர். கீழ்தளத்தில் படகு செல்லும் வேகத்தில் அசைவு நன்றாக உணர முடிந்தது. சிறிது நேரம் கொறித்துவிட்டு கொஞ்சம் தூங்கிப் போனோம். சுமார் 1:30 மணி நேரத்தில் ஒரு மீன்பிடி தீவில் படகு நிற்க, சில வெள்ளைக் காரர்கள் இறங்கிக் கொண்டனர். அங்கு கடல் நீர் தூய்மையாக இருந்தது. படகில் பணியில் உள்ள சிலர் கடலில் உள்ள மீன்களுக்கு உணவு அளித்தனர். திறந்த கடலில் ( open sea) இவ்வளவு கூட்டமாக பலவிதமான மீன்களை நான் முன்பு பார்த்ததே இல்லை. அதை சிறிது நேரம் ரசித்தோம், இடையில் படகில் எதோ கயிறு சிக்கிக் கொள்ள முக்குளிப்பாளர் (ஸ்கூபா டைவர்) ஒருவர் அதை சரி செய்தார்.

10 நிமிடத்திற்கு பிறகு படகு அந்த இடத்தைவிட்டு இரு தீவுகளின் ஊடாக லங்காவியை நோக்கி அடுத்த ஒரு மணி நேர பயணத்தை தொடர்ந்தது. இடையில் அலுவலகத்தில் இருந்து தொலைபேசி அழைப்பு அலுவலக சர்வர் டவுன் ஆகிவிட்டது எதாவது செய்ய முடியுமா ? கைப்பேசி வழியாகவே ஆலோசனை கூறி மாற்று ஏற்பாடு செய்யச் சொல்லிவிட்டு, தூங்கிவிட்டேன். எழுந்து பார்த்த போது படகு லங்காவியை நெருங்க, லங்காவியின் சின்னமான பெரிய கழுகு சிலை கண்களுக்கு தெரிந்தது.

என்னையும் மற்றவர்களையும் காத்திருக்கச் சொல்லிவிட்டு தங்குமிடம் (ஓட்டலுக்கு) செல்ல வாடகை கார் ஏற்பாடு செய்து வந்தார் டிபிசிடி, வாடகைக் கார் ஓட்டுனர் தமிழர் தான்.

Jetty Point என்னும் லங்காவி தீவின் முகப்பில் இருந்து விடுதிக்குச் செல்ல ஒரு மூன்று நிமிட பயணம் தான், விடுதியில் ஏற்கனவே சொல்லிய படி இரு அறைக்குப் பதில் ஒரு அறைதான் இருப்பதாகவும் மாலை மூன்று மணிக்குத்தான் மற்றொரு அறை கிடைக்கும் என்று சொன்னார்கள். வேறு வழியின்றி ஒரு அறையில் இரு இல்லத்தினரின் பொருள்களை வைத்துவிட்டு சற்று இளப்பாறி விட்டு உடனடியாக தீவைச் சுற்றிப்பார்க்க முடிவெடுத்து வெளியே வந்தோம். அதே வாடகை வண்டி ஓட்டுனர் எங்களுக்காக காத்திருந்தார். மதியம் 1 மணி ஆகிவிட்டதாலும், காலை உணவாக வழக்கமான உணவு எதையும் எடுக்காமல் இருந்ததால் பசி கிள்ள ஆரம்பதுவிட்டது. ஓட்டுனரிடம் சொல்லி இந்திய / தமிழ் சாப்பாட்டுக் கடைக்கு வாகனத்தைச் செலுத்தச் சொன்னோம். ஒரு தமிழ் உணவு கடைக்கு முன்பாக நிறுத்தினார். இது போன்ற சுற்றுலா தீவுகளில் வாகன ஓட்டுனர்களுக்கும் உணவு கடைகளுக்கும் இணக்கம் இருக்கும், அவர்களுக்கு ஒரு பகுதி விடுதியில் நாம் செலவு செய்யும் பணம் போய்ச் சேரும். அதைத் தவிர வாகன ஓட்டுனருக்கும் உணவுக்கு பணம் சேர்த்துக் கொடுக்க வேண்டும். அங்கு 90 விழுக்காடு அசைவ உணவையே வைத்திருந்தார்கள். சோறு, ரசம் மற்றும் கொஞ்சம் பருப்பு குழம்பும், வேகவைத்த காய்கரிகளும் கிடைத்தது. 5 பேருக்கு 40 மலேசிய வெள்ளிகள் செலவானது, அதே அளவு உணவு வகைகளுக்கு பினாங்கு தீவில் 20 வெள்ளிகள் கூட ஆகாது, சுற்றுலா தளங்களில் அடிக்காமல் பிடுங்குவார்கள்.இங்கும் அப்படித்தான்.

அதன் பிறகு சதுப்பு நிலக்காடுகள், மலைகள், மாங்க்ரோவ் பகுதிக்கு வாகன ஓட்டுனரை விடச் சொன்னோம், போகும் போதே பில்லா படப்பிடிப்பு நடந்த அந்த தீவின் வான் வழி பாலம் (SKY WAY BRIDGE) பற்றிய பேச்சு வந்தது. உடனே வாகன ஓட்டுனர், "சார் நமீதா மேடத்தை நான் தான் பில்லா படப்பிடிப்பின் போது மூன்று நாட்கள் ஓட்டல் அறையில் அழைத்துச் சென்றேன், உங்கள் நண்பர் (டிபிசிடி) உட்கார்ந்திருந்த இடத்தில் தான் உட்கார்ந்திருந்தாங்க, ஒரு நாளைக்கு 300 வெள்ளி வரை எனக்கு சம்பளமாக கொடுத்தார்கள். ரொம்ப இயல்பாக நடந்து கொண்டாங்க" என்றார்.

நமீதா உட்கார்ந்த இடம் என்றவுடன் கூட்டமாக டிபிசிடியை கலாய்க்க, அவர் காலரை தூக்கிவிட்டுக் கொள்ள காலரைத் தேடினார். அந்த டி-சட்டையில் காலர் இல்லை. :) இந்த பிறவியின் பயன் பெற்றது போன்று அவருக்கு அப்படி ஒரு பெருமிதம். அதே காரில் பலமுறை நாங்கள் ஏறியும் இறங்கினாலும் நமீதா உட்கார்ந்திருந்த இடத்தை அவர் விட்டுத்தரவே இல்லை. அந்த காரை படம் பிடிக்காமல் வந்துவிட்டேன் என்ற வருத்ததில் இருக்கிறார்.

ஒருவழியாக சதுப்புநில காடுகளுக்குள் (Gua Kelawar) அழைத்துச் செல்லும் மற்றொரு படகுதுறைக்கு மாலை 2 மணிக்கு வந்து சேர்ந்தோம். இரண்டு மணி நேரப் பயணம் நான்கு முதன்மையான மையங்களைக் காட்டுவதாகச் சொல்லு ஒரு படகுக்கு 250 மலேசிய வெள்ளி கட்டணம் கேட்டார்கள், வாகன ஓட்டுனரை மாலை 4 மணிக்கு வரச் சொல்லிவிட்டு, படகு பயணத்டிற்கு ஆயத்தம் ஆனோம். 10 பேர் பயணம் செய்யக் கூடிய சிறிய படகு, பாதுகாப்பு அங்கி எதும் தேவை இல்லை, நான் நிதானமாக ஓட்டுவேன் என்றார் படகுக்காரர். படகு பயணம் ஆனது.

முதலில் சென்றது அதே சதுப்பு நிலத்திலேயே ( எல்லாம் கடல் தண்ணீர்தான்) அமைக்கப்பட்ட மீன் வளர்ப்பு மையத்தை ஒரு 20 நிமிட படகு பயணத்திற்கு பிறகு அடைந்தோம். அங்கு வலைகள் சூழப்பட்ட 2 மீட்டர் விட்டக் குழிகளில் பலவிதமான மீன்கள் சுற்றி சுற்றி வந்தன, பெரிய மீன்கள் முதல், திருக்கை மீன்கள் (சிங்ரே), குதிரை காலடி வடிவ நண்டுகளையெல்லாம் ( horse shoe crabe) கையில் எடுத்து ஒரு 15 வயது சிறுவன் ஆங்கிலத்தில் அதைப் பற்றியெல்லாம் சொன்னான். என் கையிலும் ஒரு நண்டை கொடுத்தான். ஒரு கிலோ எடைக் கல்லை தூக்கிவைத்தார் போல் எடை, கூடவே அது வழப்வழப்பான ஆமை ஓடு ஓன்ற அதன் முதுகை சிலிப்பியது. கையில் இருந்து நழுவ முயன்றது, நிழல்படம் எடுத்துக் கொண்டு அங்கிருந்து கிளம்பினோம்.

அடுத்து படகு சென்ற இடம் முதலை தலை போன்ற குகை, அந்த குகையினுள் படகு செல்லும் போது விசில் அடித்து எதிரொலி வருவதை ரசித்தோம். பிறகு படகு மற்றோரு பாதைவழியாக கழுகுகளுக்கு உணவிடும் இடத்திற்கு வந்தது. படகு ஓட்டுனர் தயாராக எடுத்து வந்த கோழி தோல்களை வீசி எறிந்து ஓசை எழுப்பவும் 15 முதல் 20 வரை கிருஷ்ண பருந்துகள், நீர்மேல் மிதந்த இறைச்சிகளை லாவகமாக கால்களால் கவ்விச் சென்றன.

அதையும் புகைப்படம் எடுத்தோம், அடுத்து திறந்த கடல் பகுதிக்கு அழைத்துச் செல்வதாகச் சொன்னார். இதுவரை சென்றதெல்லாம் மாங்க்ரோவ் காடுகளால் சூழப்பட்ட மலைப்பகுதியுன் ஊடுகள்தான். திறந்த கடல் பகுதியை அடைந்ததும், உண்மையிலேயே படகு மிக ஆழமான பகுதியில் நிற்பதை நினைத்து வயிறு கலங்கியது.

அந்த கடலில் ஒருபக்கம் மலைகள், எதிர்புறம் கண்ணுக்கு எட்டிய தொலைவு வரை கடல் தான். ஓட்டுனர் அதோ பாருங்கள் அதுதான் தாய்லாந்து ஆரம்பிக்கும் பகுதி என்று எதிர்திசையில் மலைகள் நிறைந்த தொலைவு பகுதியைக் காட்டினார். நாங்கள் பயணம் செய்த பகுதியில் டால்பின் மீன்கள் அவ்வப்போது வருமாம். நாங்கள் சென்ற போது எதுவும் காட்சி கொடுக்கவில்லை. அந்த பகுதியைக் கடந்து புறப்பட்ட இடத்துக்கு திரும்பும் போது படகு பயணத்தின் 1 1/2 மணி நேரம் கடந்து இருந்தது.

படகு புறப்பட்ட இடத்தின் வழியாகவே வவ்வால்கள் வசிக்கும் குகைபகுதியில் இறக்கிவிட்டு, வவ்வால்களை காணுவதற்காக ஒரு மின் குழல் விளக்கு (டார்ச் லைட்) ஒன்றையும் கொடுத்தார். உள்ளே நல்ல இருட்டு, கூடவே குளிர் கண்ணாடி அணிந்து இருந்ததையே மறந்துவிட்டு ஏன் இந்த இடம் இவ்வளவு இருட்டாக இருக்கிறதென்றார் டிபிசிடி. அந்த குகையில் மேல் பகுதியில் விளக்கின் வெளிச்சத்தை பாய்ச்ச 500க்கும் மேற்பட்ட வவ்வால்கள் தொங்கிக் கொண்டு இருந்தன. அங்கே திரும்பும் வழியில் மேல்பகுதியில் இருட்டுக்குள் ஒரு குகைக்குள் ஏறி சில நிழல் படங்களை எடுத்துக் கொண்டோம்.


அதன் பிறகு மாங்க்ரோவ் காடுகளின் வழியாக நீர் பயணம் மாலை 4 மணிக்கு முடிவுக்கு வந்தது. தயாரக நின்றிருந்த நமீதா புகழ் வாகனத்தில் ஏறி விடுதியை நோக்கி பயணித்தோம். இரண்டாவது அறையை ஒதுக்கி இருந்தார்கள். களைப்பு தீர குளித்துவிட்டு அதே வாகனத்தில் அடுத்த இடம் செல்ல தீர்மானித்தோம். வாகனம் காத்து இருந்தது.

அடுத்து சென்ற இடம் அதே தீவு பகுதியில் அமைந்த கடற்கரை பகுதி (Cenang Beach). அங்கு சென்று சேரும் போது மாலை 5ஐ நெருங்கியது. அம்மணிகளும் டிபிசிடியின் குட்டிக் குழந்தையையும் கடற்கரையில் இருத்திவிட்டு, நானும், டிபிசிடியும் அரைக்கால் சட்டைக்கு மாற, என் மகளும் கடற்கரையில் குளிக்க கிளம்பினால், அந்த கடற்கரையில் விரிகுடை (பாராசூட்) மற்றும் நீர் மோட்டார் விளையாட்டுகளும் இருந்தன எனக்கு ஆர்வம் இல்லை.

கடல் கரையில் பல ஜோடிகள் கும்மாளமிட்டுக் கொண்டிருந்தார்கள், டிபிசிடி கடலில் இறங்கியதால் தானோ தெரியவில்லை, பெரிய பெரிய அலைகள் வந்து சென்றது. அதில் தாவி தாவி குதித்து ஒரு 30 நிமிடம் கும்மாளமிட்டோம், பிறகு நன்ணீரில் குளித்துவிட்டு உடைமாற்றி கிளம்பவும் சூரியன் மெதுமெதுவாக அருகில் இருந்த தீவின் மலைக்கு பின்னால் சென்று மறைந்தான். வானம் செந்நிறமாக காட்சி அளித்தது.


கடற்கரையிலேயே தின்பண்டங்கள் தீர்ந்துவிட்டது. விடுதிக்கு செல்ல திட்டமிட்டோம், மேலும் மாலை 7.30 நெருங்கி இருந்தது, செல்லும் வழியிலேயே இரவு உணவை முடித்துவிட்டு செல்வதற்காக மற்றொரு தமிழ் கடையில் நிறுத்தச் சொன்னோம், இந்த கடையில் சாப்பாடு பரவாயில்லை. மதியம் கொடுத்ததைவிட பாதிதான் வாங்கிக் கொண்டார்கள். அங்கிருந்து சுமார் இரவு 8:30 மணி அளவில் விடுதிக்கு
திரும்பினோம். அதுவரை வாகனத்துக்கு ஆன செலவு முதலில் 8 வெள்ளி, பிறகு 50 வெள்ளி, கடைசியில் 80 வெள்ளி என மூன்று தவணைகளாக வாங்கிக் கொண்டார். மொத்தம் 130 வெள்ளிக் மேல் ஆகிவிட்டது.

டிபிசிடி யோசனை செய்தார், நாளைச் சுற்றுலாவுக்கு நாமே ஏன் வாடகைக் கார் ஏற்பாடு செய்துக் கொள்ளக் கூடாது ? பிறகு விடுதியாளர்களிடம் பேச அவர்களே ஒரு வாடகை வாகனத்தை 24 மணி நேரக் கணக்கில் 80 வெள்ளிக்கு ஒப்பந்தம் செய்து கொடுத்தார்கள். அம்மணிகளை விடுதியில் இருக்கச் சொல்லிவிட்டு வாடகைக் வாகனம் இருக்கும் இடத்திற்கு சென்று அதை எடுத்துக் கொண்டு ஒரு 10 கிலோ மீட்டர் சுற்றி வந்தோம், எரிபொருள் நிறப்பிவிட்டு, இண்டெர் நெட் செண்டர் இருந்தால் கொஞ்ச நேரம் ஆன்லைனில் இருக்கும் பதிவர்களிடம் பேசலாம் என்று தேடினோம். எங்கும் இணைய நிலையம் கிடைக்கவில்லை. விடுத்திக்கு திரும்பினோம், அங்கேயே இணைய இணைப்பு இருப்பதாகச் சொன்னார்கள், விலை பேசிவிட்டு அமர்ந்தால் லினெக்ஸ் சிஸ்டம். தமிழ்மண பக்கம் சென்றால் தமிழ் எழுத்துக்கள் தெரியவில்லை. அதை மூடிவிட்டு, சிறிது நேரம் பேசிவிட்டு அவரவர் அறைக்கு உறங்கச் சென்றோம்

டிபிசிடியின் ஒன்றறை வயது குழந்தை அடம் செய்யாமல், அழுவாமல் எங்களை அவ்வபோது மகிழ்வு கொடுத்துக் கொண்டே வந்தது. எனது மகளும் அவர் குழந்தையும் நன்கு நெருக்கமாகி இருந்தார்கள்.

இந்த சுற்றுலா பயணம் இன்னொமொரு மறக்க முடியாத நினைவுகளில் இருக்கும்.

மே 3, மறுநாள் சென்ற இடங்களைப் பற்றி அவருக்கே உரிய பாணியில் தம்பி டிபிசிடி ஐயர் நாளை எழுதுவார் (எழுதிவிட்டார்).


முதல் பகுதிகளின் சுட்டி 1 சுட்டி 2

3 கருத்துகள்:

TBCD சொன்னது…

நல்ல படங்கள் எல்லாம் நான் எடுத்தது..சுமாரான படங்கள் கோவியார் எடுத்தது என்று தன்னடக்கத்துடன் கூறிக் கொள்கிறேன்.. :)


உங்க கேமிரா புராணம் எழுதலையே... :P

வடுவூர் குமார் சொன்னது…

ஒரு வெள்ளை அட்டை எடுத்துப்போய் உங்களை படம்பிடித்திருக்கலாம். :-)
12 மணி வெய்யிலா? முகம் முழுவதும் கருப்பாகிவிட்டது.

priyamudanprabu சொன்னது…

:)

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்