பின்பற்றுபவர்கள்

9 மே, 2008

மென்பொருள் வல்லுனர்களின் ஊதியமும், போலியான சமூக வாதிகளும் !

ஒருகாலத்தில் அரைகாசு சம்பளம் வாங்கினாலும் அரசாங்க சம்பளமே சிறந்ததாக கருதப்பட்டது. காரணம் ஓய்வு பெறும்வரை வேலைக்கு உறுதி உண்டு, வேலையை சரிவர செய்யாவிட்டாலும், தற்காலிக பணிநிறுத்தம், ஊதிய உயர்வு நிறுத்தம், பதவு உயர்வு நிறுத்தம் என சிறு சிறு தண்டனைகளுடன் 58 வயது வரை அரசு மேசையை தேய்த்துவிட்டு ஊதியத்தைப் பெற்றுக் கொள்வார்கள். அரசு ஊழியர்களுக்கு பெண் கிடைப்பதும் கூட எளிது, கூடவே அவர்களுக்கு தங்கள் சொத்துமுழுவதையும் சீராக எழுதிவைக்கத் தயங்காத அப்பாமார்கள். கடைநிலை அரசு ஊழியர்கள் கூட காலரை தூக்கிவிட்டுதான் நடப்பார்கள்.

அதுபோலவே மருத்துவராக இருக்கும் மாப்பிள்ளைகளுக்கும் ஏகப்பட்ட வரவேற்பு இருந்தது. காரணம் மிகுந்த ஊதியம், வசதிகள் எதையும் பெருக்கிக் கொள்ளும் அளவுக்கு வருமானம். தனியார் நிறுவனத்தில் வேலை செய்தவர்களுக்கு வேலை நிரந்தரமில்லை என்று பெண்களை வைத்திருக்கும் பெற்றோர்கள் அத்தகைய வரன்களை தேர்ந்தெடுக்க தயக்கம் காட்டினார்கள். நாளைக்கு வேலை போய்விட்டால், தம் மகளின் வாழ்க்கை சூனியம் ஆகிவிடும் என்றெல்லாம் பெற்றோர்கள் மிகவும் கவலைப்பட்டு எவ்வளவு சீர் கொடுக்க வேண்டுமானாலும் கடன் வாங்கியாவது கொடுத்து அரசு ஊழியர்களையே மணமகனாகத் தேர்ந்தெடுத்தார்கள்.

இதெல்லாம் 10 ஆண்டுகளுக்கு முன்புதான், தகவல் தொழில் நுட்ப புரட்சி ஏற்பட்டபிறகு எல்லாம் தலைகீழாக மாறிவிட்டது, 'எலேய் நம்ம குப்புசாமி மகன் மெட்ராசுல பெரிய ரூபாய் (ஒருலட்சம்) மாச மாசம் சம்பளமாக வாங்குறானாமே ? குப்புசாமியின் மகன் மென்பொருள் வேலையில் லட்சம் ரூபாய் ஊதியமாகப் பெருவது வியப்பளித்தாலும் அவர்களுக்கு அதிர்ச்சியே அளித்தது. நேற்றுவரை தன்னோடு கடைநிலை ஊழியம் பார்த்த குப்புசாமிக்கு வசதி வாய்ப்புகள் பெருக பெருக, மற்றவர்களுக்கு வாய்ப்பு இல்லாமை காரணமாக பொறாமை ஏற்படுவதும், வயிற்றெரிச்சல் ஏற்படுவதும் இயல்புதானே.

மென்பொருள் வல்லுனர்களுக்கும், மற்ற பொறியாளர்கள், அல்லது கலைக்கல்வி பயின்றவர்களுக்கும் உள்ள ஊதிய வேறுபாடு மலைக்கும் மடுவுக்கும் இருப்பது போல் இருப்பதால் தான் மென்பொருள் வல்லுனர்களின் ஊதியம் பயமுறுத்துகிறது. இந்தியாவில் தான் இத்தகைய நிலமை. மற்ற வெளிநாடுகளில் கணக்கு வழக்கு (அக்வண்ட்) மற்றும் பிற துறைகளில் வேலை செய்பவர்கள், வேறு பொறியாளர்கள் ஆகியோருக்கும் மென்பொருள் வல்லுனர்களுக்கும் ஊதிய அளவில் பெரிய வேறுபாடு இல்லாததால் வெளிநாடுகளில் இத்தகைய பெருமூச்சுகள் ஏற்படுவதே இல்லை.

அப்படி இருந்தாலும் அதுபற்றி பேசும் போதுதான் பேசுவார்கள், எப்போதும் பேசமாட்டார்கள்.
மற்ற நாடுகளில் வேலைக்கு ஏற்ற ஊதியம் என்பது நடைமுறை இருக்கிறது. இந்தியாவில் அப்படி எதுவுமே இல்லாததால் அரசு ஊழியர்கள் தவிர்த்து பிறருக்கு தகுதி அடைப் படையிலேயே ஊதியம் நிர்ணயிக்கப்படுகிறது, பொறியியல் படிப்பை முடித்து உடனே வேலைக்குச் செல்வோர்களுக்கு சிங்கையில் மாதம் 1500 - 2000 வெள்ளிவரை கிடைக்கும், ஆனால் இந்தியாவின் நிலவரப்படி நிறுவனங்களுக்கு ஏற்றவாறு இந்த தொகை 10000 ரூபாய் முதல் 25 ஆயிரம் ரூபாய்வரைதான். சிங்கையில் கொடுக்க முடிகிறது ஏன் இந்தியாவில் கொடுக்க முடியவில்லை ? உற்பத்தி செலவை சொல்கிறார்கள், இந்தியாவில் உற்பத்தி செலவு குறைவு என்ற காரணத்தினால் தான் பல்வேறு நிறுவனங்களும் தங்கள் இடத்தை
பலநாடுகளில் இருந்து இந்தியாவிற்கும் சீனாவுக்கு மாற்றிக் கொண்டன. சிங்கை போன்றே உற்பத்தி செலவு இருந்தால் அவர்கள் இங்கு வந்திருக்க மாட்டார்கள் என்பது ஒரு காரணம். உலகதேவைகளுக்கு ஏற்ப கூடுதலாக உற்பத்தி செய்யக் கூடிய மனிதவளம் இருக்கிறது என்பது மற்றொரு காரணம். ஊதியமாக பொரும் பகுதி சென்றால் லாபத்தின் விழுக்காடு குறையும் என்ற முதலாளிகளின் பேராசையே பிற பொறியியல் வல்லுனர்களுக்கு கிடைக்கும் ஊதியத்திற்கும் மென்பொருள் வல்லுனர்களுக்கு கிடைக்கும் ஊதியத்திற்கும் உள்ள வேறுபாடு. எல்லாம் நவீனமயமாக வளர்ந்துவிட்டதால் மற்ற பொறியியல் துறையில் உடல் உழைப்பாளிகள் (காசுவல் லேபர்) தவிர்த்து மேலதிகாரிகள், பொறியாளர் என மிகச் சிலரே தேவையாக இருக்கும், இந்த வேலைக்களுக்கு முயற்சிப்பவர்களின் எண்ணிக்கையும் கனிசமான அளவில் இருப்பதால், அங்கு ஊதியத்தைக் குறைத்து பேசி தகுதியானவர்களை வேலைக்கு முடிவு செய்வதற்கு அது வாய்ப்பாகவே அமைந்துவிடுகிறது. இந்த வேலை இல்லாவிட்டால் பிழைப்பே இல்லை என்று நிலை இருக்கும் போது ஊதிய குறைவைப்பற்றி கவலைப்படாமல் வேலை கிடைக்கிறதே என்று செல்பவர்கள் தானே மிகுந்தது.

இந்தியாவில் இயங்கும் உலகளாவிய (மல்டிநேசனல்) நிறுவனங்களில் ஊதியம் ஓரளவுக்கு ஞாயமானதாகவே இருக்கிறது, இந்திய நிறுவனங்கள் கிடைக்கும் லாபம் குறைந்துவிடும் என்பதற்காக ஊதியத்தை கட்டுப்பாட்டுக்குள்ளேயே வைத்திருக்கிறார்கள். ஆனால் மென்பொருள் துறையில் அவ்வாறு செய்யவே முடியாது. மென்பெருள் வல்லுனர்களின் தேவை நாளுக்கு நாள் மிகுந்து கொண்டே செல்வதால் அவர்களில் திறமையானவர்களாலேயே அந்த வேலையை சிறப்பாக செய்யமுடியும் என்ற அடிப்படை காரணம் இருப்பதால் அந்த வேலையை செய்யும் வல்லுனர்கள் கேட்கும் ஊதியத்தை வேலை முடியவேண்டுமென்றால் கொடுத்தே ஆகவேண்டும். அதுதவிர மென்பொருள் நிறுவனங்களில் 50 விழுக்காடு வெளிநாட்டு நிறுவனங்கள், மீதம் 50 விழுக்காடு இந்திய நிறுவனங்களும் வெளிநாட்டின் மென்பொருள் தேவைகளைத்தான் செய்துவருகின்றனர். மென்பொருள் வேலைக்கு கொடுக்கப்படும் ஊதியத்தை குறைத்தால் எங்கு நல்ல வாய்ப்பு கிடைக்கிறதோ, உடனடியாக பார்த்துக் கொண்டிருக்கும் வேலையை அப்படியே விட்டுவிட்டு அந்த வேலைக்கு தாவிவிடுவார்கள் என்ற பயமும், எப்படியும் ப்ராஜெக்ட்டை முடித்துக் கொடுக்க வேண்டும் என்ற காலநிர்ணயமும் இருப்பதால், மென் பொருள் துறையில் வேலை செய்பவர்களின் ஊதியத்தில் கைவைக்கவே முடியாது. அதுமட்டுமல்ல இந்திய மென்பொருள் வல்லுனர்களுக்கு உலக அளவில் எங்கும் வரவேற்பு இருக்கிறது. மற்ற பொறியாளர்கள் வாய்ப்புகளை மிகவும் கடினப்பட்டு தேடித்தான் பிடிக்க முடிகிறது.

மென்பொருள் துறையினருக்கு அள்ளிக் கொடுக்கிறார்கள் என்றால் இதுதான் காரணம். இதில் மென்பொருள் வல்லுனர்கள் மட்டும் தான் லாபம் அடைகிறார்களா ? விமானங்களை ஆகயத்தில் மட்டுமே பார்த்த அவர்களது பெற்றோர்கள் அதில் பயணம் செய்யும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது, நடுத்தரவர்க்க இல்லங்களில் ஓரளவுக்கு வசதிகள் பெருகி இருக்கிறது, அப்பாக்களின் சுமைகளை குறைக்கப்பட்டுள்ளன. இதைத்தாண்டி மென்பெருள் வல்லுனர்களின்
பெயரைச் சொல்லி கொள்ளை அடிப்பவர்கள் வீட்டுமனை விற்பனையாளர்களே மிகுதி. சென்னையில் ஓர் அறை வீட்டை வாடகைக்கு கேட்டாலும் குறைந்தது 5000, கொஞ்சம் யோசனை செய்து பேரம் பேசினால், சாப்டுவேர்காரர்கள் வந்து பார்த்துட்டுப் போனார்கள் என்று சொனனாலேயே 5000 ரூபாய்க்கு வேறு வழியில்லாமல் ஒப்புக் கொள்ளும் அப்பாவிகள். வாடகையே இப்படி என்றால், சென்னையில் வீட்டுமனைகள் கோடிகளில் பேரம்
பேசப்படுவதற்கும் இதுவே காரணம், சாப்டுவேர்காரர்கள் விலைகொடுத்து வாங்கத்தயாராக இருக்கிறார்கள் என்று சொல்லியே கொள்ளை அடிக்கின்றனர். தற்போதைய விலைவாசியில் மென்பொருள் வல்லுனர்கள் தவிர்த்து மற்றவர்கள் எவருமே சொந்த வீடு, மனை வாங்கமுடியாமல் செய்ததற்கு மென்பொருள் வல்லுனர்களின் ஊதியத்தால், ரியல் எஸ்டேட் ஏஜெண்டுகளின் எழுந்த பேராசையே. இவர்கள் மட்டுமல்ல முன்பு 5 லட்சத்து வாங்கிய அடுக்குமாடிக் குடியிருப்பை 50 லட்சத்துக்கு பேரம்பேசி விற்கலாம் என்ற பொதுமக்களின் ஞாயமான ஆசையும் சேர்ந்து கொண்டு வீட்டுமனைகளின் விலைகள், வாடகைகள் எட்டமுடியாத உயரத்திற்கு சென்றுவிட்டன. முன்பு சாதரணமாக இயங்கிவந்த முடித்திருத்தும் இடங்கள் குளிர்சாதனம் பொறுத்திவிட்டு 50 ரூபாய்க்கு முடித்திருத்தியவர்கள், 150 வரை வாங்குகிறார்கள், 'என்னப்பா இவ்வளவு கட்டணம் ?' யாராவது கேட்டால், 'சார்...இங்கெல்லாம் சாப்டுவேர் எஞ்ஜினியர்கள் வருவாங்க...உங்களுக்கு கட்டுபடியாகலை என்றால் மரத்தடியில் ஸ்டூல் போட்டு உட்கார்ந்திருப்பவர்களிடம் போங்களேன்' என்று மென்பொருள் வல்லுனர்களின் பெயரைச் சொல்லி தங்கள் வருமானத்தைப் பெருக்கிக் கொள்கிறார்கள்.

இவைதடுக்கப்பட்டு, அனைவரும் வீட்டுமனைகள் வாங்க வேண்டுமென்றால், விலைவாசி உயர்வை சரியாக எதிர்கொள்ள வேண்டுமென்றால் எல்லா நிறுவனங்களும் லாபத்தைக் குறைத்துக் கொண்டு மற்றவர்களின் ஊதியத்தையும் உயர்த்த முன்வரவேண்டும். அதுதவிர தனியார் நிறுவனங்களுக்கு ஊதிய நிர்ணயம் செய்து அதை கண்காணிக்க வேண்டும் இல்லை என்றால் மென்ப்பொருள் ஊழியர்களின் பெயரைச் சொல்லி சமூகபொருளாதாரத்தை சீரழிப்பவர்களை தடுக்கவே முடியாது.

மென்பெருள் வல்லுனர்கள் மீது வைக்கபடும் மற்ற குற்றச் சாட்டுகள் ? குடி கும்மாளம், காசை தண்ணீராக செலவளிப்பது ? இதையெல்லாம் எல்லோரும் செய்வது இல்லை. பொறுப்பானவர்கள் பெற்றோருக்கு களங்கம் வராமல் அளவோடுதான் நடந்து கொள்கிறார்கள். அதே போல் முன்பு பணக்காரர்களால் மட்டுமே செய்ய முடிந்தது என வெளியில் இருந்து ஏங்கியதெல்லம் கைக்கெட்டும் தொலைவில் இருக்கும் போது சிலர் அதையெல்லாம் அனுபவிக்க நினைத்து அதனை செயல்படுத்துவதை குற்றம் செய்கிறார்கள் என்று நினைக்க முடியவில்லை. இதைப்பற்றி குறை சொல்பவர்கள் 'தகுதி' பற்றி உயர்சாதி மனப்பாண்மையில் தான் பேசுகிறார்கள் என நினைக்க வேண்டி இருக்கிறது. அதாவது இவர்கள் முன்பிருந்த தகுதிக்கு இவர்கள் ஆட்டம் போடலாமா என்று அவர்களின் பழைய தகுதியை ஒப்பிட்டு போலியான அக்கரையில் இவர்களைப் பற்றி குறைசொல்கிறார்கள். எவரோ ஒருசிலர் ஆட்டம் போடுவதை ஒட்டுமொத்த மென்பொருள் வல்லுனர்கள் செய்வதாக கட்டமைப்பது வயிற்றெரிச்சல் என்றே நினைக்க வைக்கிறது. ஊதிய ஏற்ற இரக்கம் சரிசெய்ய எதாவது புரட்சி ஏற்பட்டாலே வழி உண்டு, அதைத் தவிர்த்து மென் பொருள் வல்லுனர்கள் மீது எரிச்சல் அடைவதால் எந்த பயனும் இல்லை.

என் அம்மா முதல் முறை சிங்கை வந்து இறங்கிய போது விமான நிலையத்தில் சொன்னது, 'கண்ணா, சொர்கத்துக்கு வந்தது போல் இருக்குடா, ப்ளைட்டெல்லாம் ஆகாயத்தில் போவதைப் பார்த்து இருக்கிறேன். இங்கெல்லாம் நான் வருவேன் என்று நினைத்துப் பார்த்ததே இல்லை...' என்றார்

அரசு ஊழியர்களும், மருத்துவர்களும் அனுபவித்ததை, மிகுந்த ஊதியம் காரணமாக நடுத்தர குடும்பத்தில் இருந்து வந்த மென்பொருள் வல்லுனர்கள், அவர்கள் குடும்பத்தினர் அனுபவித்தால் ஏன் ஏற்கமுடியவில்லை ? நடுத்தரவர்கத்தினரும் தான் அனுபவிக்கட்டுமே. மென்பொருள் வல்லுனர்கள் அடித்துபிடுங்கவோ, தவறான வழியிலோ பொருள் சேர்க்கவில்லையே ?

பின்குறிப்பு : இது பதிவர் பாமரனின் இந்த பதிவுக்கான எதிர்வினை அல்ல.

18 கருத்துகள்:

கோவி.கண்ணன் சொன்னது…

இந்த இடுகைக்கு வரும் எதிர்வினை பின்னூட்டங்களுக்கு பதிவர் நையாண்டி நைனா மறுமொழி அளிப்பார்.

:)

நையாண்டி நைனா சொன்னது…

மிக அருமையான பதிவு...
என் போன்றோர்களின் கருத்தை/ஏக்கத்தினை பிரதி பலித்தது இது.

இன்னும் நிறைய கருத்துகள் வரும்....

கருத்துகளை பரிமாறுவோம்.

கையேடு சொன்னது…

//என் அம்மா முதல் முறை சிங்கை வந்து இறங்கிய போது விமான நிலையத்தில் சொன்னது, 'கண்ணா, சொர்கத்துக்கு வந்தது போல் இருக்குடா, ப்ளைட்டெல்லாம் ஆகாயத்தில் போவதைப் பார்த்து இருக்கிறேன். இங்கெல்லாம் நான் வருவேன் என்று நினைத்துப் பார்த்ததே இல்லை...' என்றார்//

There are something that money cant buy. It could still make it possible.. :))
Sorry for english..

வடுவூர் குமார் சொன்னது…

கோவியாரே,சென்னையில் வீட்டு விலையைப்பற்றி சொல்கிறீர்கள்...சமீபத்தில் ஊருக்கு போனபோது ஒரு கட்டுமான வேலைக்கு எப்படி விலை பேசுகிறார்கள் என்பதை காண என் நண்பன் அவனுடன் கூட்டிப்போனான்!!!!
நாமெல்லாம் போட்டி என்று அவன் எதிரே கூட நிற்கமுடியாது,அப்படி இருக்கு.
ஒரு கோடியாக வீட்டு மனை கிடைக்கும் போது வாங்கிப்போடுங்க இல்லை அது 10 கோடியாகிவிட போகிறது.

நையாண்டி நைனா சொன்னது…

திரு. கையேடு
அவர்களே..
வருகைக்கும், கருத்துக்கும் நன்றி.
/*There are something that money cant buy. It could still make it possible.. :))*/

அது அனைவருக்கும் தெரியும்.
இருப்பினும், அடிப்படை தேவைகளுக்கே பணம் இல்லை என்றால்? சின்ன சின்ன அன்பு
பரிசுகலாலே தானே பேரன்பை காட்ட வேண்டி இருக்கிறது.

/*Sorry for english..*/

மொழி ஒரு தடை அல்ல....

கருத்து பரிமாற்றம் தொடரட்டும்...

நையாண்டி நைனா சொன்னது…

/*கோவியாரே,சென்னையில் வீட்டு விலையைப்பற்றி சொல்கிறீர்கள்...சமீபத்தில் ஊருக்கு போனபோது ஒரு கட்டுமான வேலைக்கு எப்படி விலை பேசுகிறார்கள் என்பதை காண என் நண்பன் அவனுடன் கூட்டிப்போனான்!!!!
நாமெல்லாம் போட்டி என்று அவன் எதிரே கூட நிற்கமுடியாது,அப்படி இருக்கு.
ஒரு கோடியாக வீட்டு மனை கிடைக்கும் போது வாங்கிப்போடுங்க இல்லை அது 10 கோடியாகிவிட போகிறது.*/

திரு. வடுவூர் குமார் அவர்களே..
தங்களின் வருகைக்கு மிக நன்றி.
தங்கள் யோசனைக்கு மிக, மிக நன்றி...
நாங்களும் வாங்கலாம்... ஆனால் எங்களிடம் உள்ளது அனைத்தும் வெள்ளை பணம் ஆயிற்றே.

Sanjai Gandhi சொன்னது…

ஆனாலும் காசு தேவைக்கு அதிகமாக இருக்கிறது என்பதற்காக எல்லாவற்றுக்கும் தகுதிக்கு மீறிய விலை கொடுத்து அத்தியாவசிய பொருட்கள் விற்பவரோ இல்லை ஆட்டோகாரரோ, அவர்களின் பேராசையை அதிகரிக்கச் செய்து அவர்களை பெரும் கொள்ளைக்காரர்களாய் மாற்றிய பெருமை சாஃப்வேர்காரர்களையே சேரும். இதனால் எவ்வளவு பேர் பாதிக்கப் பட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்பதை எண்ணி பாருங்க. எதர்கு இந்த ஊதாரித்தனம்? வசதியாய் வாழ்வதை யாரும் குறை சொல்லப் போவதில்லை... அதன் எதிர் விளைவுகளை ஏன் பிறர் மீது திணிக்கிறீர்கள்?

TBCD சொன்னது…

கோவியாரே,
சம்பளத்தை ஏற்றச் சொல்லுறீங்களே, அப்படி ஏற்றினால், நம்ம நாடு குறைந்த செலவு நாடு என்ற இடத்திலிருந்து நகன்று, மிதமான செலவு நாடாகும். நாம் இருப்பது சேவைத்துறை, அது நமக்கு சாதகமானது அல்ல.
மென்பொருள் வளர்ச்சிக்கு முன்னரே, வெளிநாடுகளுக்கு ஏற்றுமதிகள் தொடங்கிவிட்டது. ஆனால், அப்பொழுது விற்பனை விலையயை நாம் நிர்னயிக்கும் இடத்தில் இல்லை. இன்றும் நாம் தயாரிக்க விட்டால், தாய்வானோ, கொரியாவோ, சைனாவோ தயாரிக்கும் அதனால் லாப விகிதத்தில் கொள்ளை லாபம் வைத்தோ, விலையயை ஏற்றி வைத்தோ,நாம் கொடுக்க முடியவில்லை. அதனால், ஊழியர்களின் சம்பளமும் உள்ளூர் நிலவரத்தைப் பொறுத்தே அமைகிறது.

ஆனால், மென்பொருள் துறையில் அவ்வாறில்லை, இந்திய நிறுவனங்கள் சாதகமான நிலையில் இருக்கின்றது. இவ்வளவு சம்பளம் கொடுத்தும், அவர்களால் லாப விகிதத்தை தக்க வைக்க முடிகிறது ஏன் என்றால், அவர்கள் முதலீடு செய்வது நிலத்தில் மட்டுமே. மற்ற இயந்திரங்களுக்குப் பதில் மூளைகள் வேலை செய்கின்றது.
சிங்கையில் இந்தியாவிலிருந்து வேலைக்கு அழைத்துச் செல்வதன் காரணம், ஆட்கள் இல்லை என்பது மட்டுமில்லை. குறைந்த விலைக்கு ஆள் தேவை. நம் நாட்டில் அனைவரது சம்பளத்தை ஏற்றிவிட்டால், அடித்தட்டு மக்களுக்கு உதவித் தொகை கொடுப்பதாக உத்தேசமா..?
மென்பொருளாளர்கள் மீது பொறாமை இல்லை. மத்திய தர வர்க்கம் மீது பொறாமை இல்லை. முன்னேறட்டும். அவர்கள் செலவழிப்பதால்,பலர் வீட்டில் கஞ்சி குடிக்கின்றார்கள். பாதகமில்லை. ஆனால் விலைக் கட்டுப்பாடு வேண்டும். அரசு நிர்னயம் செய்ய வேண்டும் . மலேசியாவில், அடித்தட்டு மக்களை பாதிக்கும் பொருட்களின் விலை கட்டுப்பாடுக்குள்ளே வைக்கின்றது அரசு.

ஏன், விலை கட்டுப்படுத்தவில்லை என்றால், மேல் தட்டு மக்களுக்கு கொடுக்க பதுக்கப்படும்.விலையுர்த்தி விற்கப்படும். அதேப் போல் நிலத்திற்கும் அரசு விலை நிர்னயம் செய்ய வேண்டும்.
வெளிநாட்டிற்கு குறைந்தப்பட்ச ஊதியம் விதித்ததுப் போல், உள்ளூருக்கும் நிர்னயம் செய்ய வேண்டும். மனித உழைப்பிற்கு குறைவான கூலிக் கொடுத்துவிட்டு, அவர்களைச் சுரண்டி, நாம் மேலே ஏறவது நியாமில்லை. ரூ30./-தினக்கூலிக்கு மென்பொருள் நிறுவனங்களை கட்டுகிறார்கள். அங்கே ரூ. சுற்றி, ரூ.50/-க்கு கொ.வ.நீர் கடைகள் வைத்தால், அவன் பாடு திண்டாட்டமே.


சொல்லிக் கொண்டே போகலாம். மென்பொருள் நிறூவன ஊழியர்கள் எண்ணிக்கையில் அதிகம் சட்டென்று வந்ததால், அந்த உணர்ச்சி தவிர்க்கப் படமுடியாதது. அதிக பணம் கொடுத்து வாங்க எண்ணுகின்றவர்கள் இருக்கும் வரை இந்த சர்ச்சைகள் ஓயாது. பொருளின் மதிப்பிற்கு ஏற்ற பணம் என்று முடிவு செய்தால், மென்பொருளார்களை சமூகம் வாழ்த்தும்.

dondu(#11168674346665545885) சொன்னது…

நல்ல பதிவு கோவி கண்ணன் அவர்களே. இது பற்றி நானும் "புதுப் பணக்காரர்களை ஏன் பலருக்கு பிடிப்பதில்லை" என்ற தலைப்பில் பதிவு போட்டுள்ளேன். பார்க்க: http://dondu.blogspot.com/2008/03/blog-post_11.html

அன்புடன்,
டோண்டு ராகவன்

Sanjai Gandhi சொன்னது…

//மென்பொருள் நிறூவன ஊழியர்கள் எண்ணிக்கையில் அதிகம் சட்டென்று வந்ததால், அந்த உணர்ச்சி தவிர்க்கப் படமுடியாதது. அதிக பணம் கொடுத்து வாங்க எண்ணுகின்றவர்கள் இருக்கும் வரை இந்த சர்ச்சைகள் ஓயாது. பொருளின் மதிப்பிற்கு ஏற்ற பணம் என்று முடிவு செய்தால், மென்பொருளார்களை சமூகம் வாழ்த்தும்.//

நிச்சயமாக...

கோவி.கண்ணன் சொன்னது…

//கோவியாரே,
சம்பளத்தை ஏற்றச் சொல்லுறீங்களே, அப்படி ஏற்றினால், நம்ம நாடு குறைந்த செலவு நாடு என்ற இடத்திலிருந்து நகன்று, மிதமான செலவு நாடாகும்.//

டிபிசிடி ஐயர்,
எல்லா விலை உயர்ந்த பிறகு, ஊதியம் ஏறவில்லை, வசதியானவர்கள் மட்டுமே விலைகொடுத்து வாங்க முடியும், அவர்களுக்குத்தான் எல்லாமும் என்ற நிலை ஏற்பட்டால், சமூக பொருளாதார ஏற்ற இறக்கம் அப்பட்டமாக தெரியும், பணக்காரவீடுகளை குறிவைத்து கொள்ளை அடிக்கப்படும், இயலாமையால் குற்றம் செய்பவர்கள் உருவாகுவார்கள்.

//நாம் இருப்பது சேவைத்துறை, அது நமக்கு சாதகமானது அல்ல.
மென்பொருள் வளர்ச்சிக்கு முன்னரே, வெளிநாடுகளுக்கு ஏற்றுமதிகள் தொடங்கிவிட்டது. ஆனால், அப்பொழுது விற்பனை விலையயை நாம் நிர்னயிக்கும் இடத்தில் இல்லை. இன்றும் நாம் தயாரிக்க விட்டால், தாய்வானோ, கொரியாவோ, சைனாவோ தயாரிக்கும் அதனால் லாப விகிதத்தில் கொள்ளை லாபம் வைத்தோ, விலையயை ஏற்றி வைத்தோ,நாம் கொடுக்க முடியவில்லை. அதனால், ஊழியர்களின் சம்பளமும் உள்ளூர் நிலவரத்தைப் பொறுத்தே அமைகிறது.
//

எக்ஸ்போர்ட் என்ற பெயரில் வெளிநாட்டில் விற்கப்படும் இந்திய பொருள்களின் விலை, ஏற்றுமதி, வரி ஆகிய செலவுகள் போக மிகக்குறைவே, இதில் லாபம் அடைபவர்கள் ஏற்றுமதி ஏஜெண்டுகளும், வெளிநாட்டினரும் தான். எக்ஸ்போர்ட் குவாலிடி என்ற பெயரில் தரமான பொருள்களை உலக சந்தை விலையைவிட குறைவாக கொடுத்துவிட்டு, இந்தியர்களுக்கு தரமற்றவற்றை குறைவான விலைக்கு விற்பதால் என்ன பலன் ? இந்தியா உணவு உற்பத்தியில் தன்னிறைவு பெற்ற நாடு, நம் தேவைக்கு இருப்பதை வெளியில் விற்றுவிட்டு உள்நாட்டு பொருள்களின் விலையை ஏற்றுவதால் பாதிக்கப்படுவது இந்தியர்களே, வெளிநாட்டு ஏற்றுமதிக்கு ஏற்றவாறு உள்நாட்டில் ஊதிய உயர்வு கொடுத்தால் பாதிப்பு அவ்வளவாக தெரியாது.

//அதிக பணம் கொடுத்து வாங்க எண்ணுகின்றவர்கள் இருக்கும் வரை இந்த சர்ச்சைகள் ஓயாது. பொருளின் மதிப்பிற்கு ஏற்ற பணம் என்று முடிவு செய்தால், மென்பொருளார்களை சமூகம் வாழ்த்தும்.
//

இங்குதான் தவறான புரிதலும் இருக்கிறது, எந்த மென் பொருள் வல்லுனரும், நீ எவ்வளவு ஏற்றிவிற்றாலும் நான் வாங்குவேன் என்று மார்தட்டவில்லை. இவர்கள் பெயரைச் சொல்லியே விலையை ஏற்றி விற்கிறார்கள், அப்படியும் வாங்குபவர்கள் மென்பொருள் வல்லுனர்கள் மட்டுமே இல்லை. ஐசிஐசிஐ வங்கியின் கடன் மூலம் மற்றவர்களும் வாங்குகிறார்கள். இதில் லாபம் அடைவது வங்கிகளும் ஏஜெண்டுகளும் தான். முன்பு வெறும் 2 லட்சத்துக்கு வாங்கப்பட்ட 2 அறை அடுக்குமாடி குடியிருப்புகளுக்கும் 30 லட்சம் வரை விலை சொல்லுகிறார்கள். இவ்வாறெல்லாம் லாபம் பெறுபவர்கள் மென்பொருள் வல்லுனர்கள் மட்டும் தானா ? மென்பொருள் வல்லுனர்களினால் தான் விலை ஏற்றம் என்பதை ஏற்றுக் கொள்ளமுடியவில்லை. அவர்களின் பெயரைச் சொல்லி ஏற்றியதே மிகுந்தது.

கோவி.கண்ணன் சொன்னது…

//dondu(#11168674346665545885) said...
நல்ல பதிவு கோவி கண்ணன் அவர்களே. இது பற்றி நானும் "புதுப் பணக்காரர்களை ஏன் பலருக்கு பிடிப்பதில்லை" என்ற தலைப்பில் பதிவு போட்டுள்ளேன். பார்க்க: http://dondu.blogspot.com/2008/03/blog-post_11.html

அன்புடன்,
டோண்டு ராகவன்
//

டோண்டு ராகவன் அவர்களே,

நீங்கள் சமீபத்தில் ( மார்ச் 2008) எழுதிய இடுகையை படித்திருக்கிறேன். ஒத்தக்கருத்துக்கும், பாராட்டியதற்கும் மிக்க நன்றி

நையாண்டி நைனா சொன்னது…

/*ஆனாலும் காசு தேவைக்கு அதிகமாக இருக்கிறது என்பதற்காக எல்லாவற்றுக்கும் தகுதிக்கு மீறிய விலை கொடுத்து அத்தியாவசிய பொருட்கள் விற்பவரோ இல்லை ஆட்டோகாரரோ, அவர்களின் பேராசையை அதிகரிக்கச் செய்து அவர்களை பெரும் கொள்ளைக்காரர்களாய் மாற்றிய பெருமை சாஃப்வேர்காரர்களையே சேரும். இதனால் எவ்வளவு பேர் பாதிக்கப் பட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்பதை எண்ணி பாருங்க. எதர்கு இந்த ஊதாரித்தனம்? வசதியாய் வாழ்வதை யாரும் குறை சொல்லப் போவதில்லை... அதன் எதிர் விளைவுகளை ஏன் பிறர் மீது திணிக்கிறீர்கள்?*/


திரு. சஞ்சை அவர்களே, வருக வணக்கம்.
தகுதிக்கு மீறிய விலை யாரும் கொடுப்பதற்கு தயாரில்லை. ஒரு 6 மாதத்திற்கு முன்பு எட்டா கனியாக இருந்த ஆட்டோ பயணம், இப்போ நான் அதன் உயரத்திற்கு வந்த பிறகு, பிறர் பொறாமை பட காரணம்?
சென்னை ஆட்டோ மீட்டர், மற்றும் அதன் செயல்பாடு அனைவரும் அறிந்தது. அது எத்தனை
காலமாக அவ்வாறு உள்ளது? எந்த மென்பொருளாலன் இதற்கு காரணம்? இன்று அதே ஆட்டோவில்
ஒரு மென் பொருளாலன், ( நன்கு கவனிக்க, நேற்று வரை பாதசாரியாய் சென்றவன்! ) செல்லும்பொழுது
பொறாமை கண்களோடு பார்க்கும் காரணம் என்ன?

நையாண்டி நைனா சொன்னது…

வருகை தந்த, திரு.TBCD அவர்களுக்கும், மற்றும் திரு.டோண்டு அவர்களுக்கும்,நன்றி.
மேலும் அவர்களுக்கு மறுமொழி இட்ட திரு. கோவி.கண்ணன் அவர்களுக்கும் நன்றி.

✨முருகு தமிழ் அறிவன்✨ சொன்னது…

சில விதயங்கள் வேறு கோணத்தில் பார்க்கப்பட வேண்டும் என நினைக்கிறேன்
பார்க்க,இதே பொருளில் என்னுடைய பதிவு சில மாறுபட்ட கருத்துக்களை முன்வைக்கிறது.

http://sangappalagai.blogspot.com/2007/12/31.html

நையாண்டி நைனா சொன்னது…

/*சில விதயங்கள் வேறு கோணத்தில் பார்க்கப்பட வேண்டும் என நினைக்கிறேன்
பார்க்க,இதே பொருளில் என்னுடைய பதிவு சில மாறுபட்ட கருத்துக்களை முன்வைக்கிறது.*/

அறிவன் ஐயா..
தங்களின் வருகைக்கு நன்றி.
தங்களின் இடுகை கண்டேன்.
மிக நன்றாய் இருந்தது.

வந்தியத்தேவன் (நீர்க்குமிழி ) சொன்னது…

மென் பொறியாளர்களின் சம்பள மிகுதியால் அவர்களின் வாங்கும் திறன் மற்றவர்களை விட அதிகமாக இருக்கிறது. இதனால் அவர்களின் வாங்கும் திறனுக்கு ஏற்பவே பல பொருட்களின், சேவைகளின் விலை நிர்ணயப்படுத்தப்படுகிறது. ஆக மென்பொருள் பொறியாளன் ஒரு வகையில் இந்த விலைவாசி உயர்வுக்கு காரணமாக இருக்கத் தான் செய்கிறான். இல்லை என்று சொல்ல முடியாது. இதனால் பாதிக்கப்படுவது மென்பொருளில் பணி புரியாதவர்கள் தான். இது அவர்களிடம் ஏக்கத்தையும், பொறாமையையும், எரிச்சலையும் ஏற்படுத்துகிறது.

இதில் யாரைக் குற்றம் சொல்வது?

//தற்போதைய விலைவாசியில் மென்பொருள் வல்லுனர்கள் தவிர்த்து மற்றவர்கள் எவருமே சொந்த வீடு, மனை வாங்கமுடியாமல் செய்ததற்கு

மென்பொருள் வல்லுனர்களின் ஊதியத்தால், ரியல் எஸ்டேட் ஏஜெண்டுகளின் எழுந்த பேராசையே. //

மென் பொருள் பொறியாளர்களின் வாங்கும் திறனுக்கேற்ப வீட்டு மனை விலை ஏற்றப்படவில்லை என்று வைத்துக் கொள்வோம். இந்த மென்பொருள் பொறியாளன் ஒரு வீட்டு மனைக்கு பதில் ஐந்து வீட்டு மனை வாங்குவானா மாட்டானா? கண்டிப்பாக வாங்குவான்! investment என்பான்!
சப்ளை - டிமாண்டு வரைபடம் என்ன சொல்கிறது? When supply is fixed, any shifts in demand will only affect price. வீட்டுமனை விஷயத்திலும் இது தானே நடக்கிறது. இது அவர்களின் பேராசை என்று எப்படி சொல்வது ?

இதற்கு என்ன தான் வழி? நீங்கள் சொல்வது போல் எல்லா நிறுவனத்திலும் லாபத்தை குறைத்து சம்பளத்தை கூட்ட முடியுமா? அனைத்து நிறுவனங்களும் மென்பொருள் நிறுவனங்கள் போல லாபம் பார்கின்றனவா?

// எவரோ ஒருசிலர் ஆட்டம் போடுவதை ஒட்டுமொத்த மென்பொருள் வல்லுனர்கள் செய்வதாக கட்டமைப்பது வயிற்றெரிச்சல் என்றே நினைக்க
வைக்கிறது. ஊதிய ஏற்ற இரக்கம் சரிசெய்ய எதாவது புரட்சி ஏற்பட்டாலே வழி உண்டு, அதைத் தவிர்த்து மென் பொருள் வல்லுனர்கள் மீது எரிச்சல்
அடைவதால் எந்த பயனும் இல்லை. //

உண்மை தான்! :) ...அந்த புரட்சி எப்பொழுது ஏற்படும் என்று தான் தெரியவில்லை.

// அரசு ஊழியர்களும், மருத்துவர்களும் அனுபவித்ததை, மிகுந்த ஊதியம் காரணமாக நடுத்தர குடும்பத்தில் இருந்து வந்த மென்பொருள் வல்லுனர்கள்,
அவர்கள் குடும்பத்தினர் அனுபவித்தால் ஏன் ஏற்கமுடியவில்லை ? நடுத்தரவர்கத்தினரும் தான் அனுபவிக்கட்டுமே. மென்பொருள் வல்லுனர்கள்
அடித்துபிடுங்கவோ, தவறான வழியிலோ பொருள் சேர்க்கவில்லையே ? //

இதற்கு டிபிசிடி அருமையாக சொல்லி இருக்கிறார். மென்பொருள் நிறூவன ஊழியர்கள் எண்ணிக்கையில் அதிகம் சட்டென்று வந்ததால், அந்த உணர்ச்சி தவிர்க்கப் படமுடியாதது. அதிக பணம் கொடுத்து வாங்க எண்ணுகின்றவர்கள் இருக்கும் வரை இந்த சர்ச்சைகள் ஓயாது.

இதையே தான் நானும் எண்ணுகிறேன். ஆனால் அதிக பணம் இருந்தால் கொடுத்து வாங்கத் தான் செய்வார்கள். இது ஒரு catch22 situation-ஆ தெரியவில்லை.

கோவி.கண்ணன் சொன்னது…

//வந்தியத்தேவன் (நீர்க்குமிழி ) said...
மென் பொறியாளர்களின் சம்பள மிகுதியால் அவர்களின் வாங்கும் திறன் மற்றவர்களை விட அதிகமாக இருக்கிறது. இதனால் அவர்களின் வாங்கும் திறனுக்கு ஏற்பவே பல பொருட்களின், சேவைகளின் விலை நிர்ணயப்படுத்தப்படுகிறது. ஆக மென்பொருள் பொறியாளன் ஒரு வகையில் இந்த விலைவாசி உயர்வுக்கு காரணமாக இருக்கத் தான் செய்கிறான். இல்லை என்று சொல்ல முடியாது. இதனால் பாதிக்கப்படுவது மென்பொருளில் பணி புரியாதவர்கள் தான். இது அவர்களிடம் ஏக்கத்தையும், பொறாமையையும், எரிச்சலையும் ஏற்படுத்துகிறது.

இதில் யாரைக் குற்றம் சொல்வது?

மென் பொருள் பொறியாளர்களின் வாங்கும் திறனுக்கேற்ப வீட்டு மனை விலை ஏற்றப்படவில்லை என்று வைத்துக் கொள்வோம். இந்த மென்பொருள் பொறியாளன் ஒரு வீட்டு மனைக்கு பதில் ஐந்து வீட்டு மனை வாங்குவானா மாட்டானா? கண்டிப்பாக வாங்குவான்! investment என்பான்!
சப்ளை - டிமாண்டு வரைபடம் என்ன சொல்கிறது? When supply is fixed, any shifts in demand will only affect price. வீட்டுமனை விஷயத்திலும் இது தானே நடக்கிறது. இது அவர்களின் பேராசை என்று எப்படி சொல்வது ?

இதற்கு என்ன தான் வழி? நீங்கள் சொல்வது போல் எல்லா நிறுவனத்திலும் லாபத்தை குறைத்து சம்பளத்தை கூட்ட முடியுமா? அனைத்து நிறுவனங்களும் மென்பொருள் நிறுவனங்கள் போல லாபம் பார்கின்றனவா?


உண்மை தான்! :) ...அந்த புரட்சி எப்பொழுது ஏற்படும் என்று தான் தெரியவில்லை.


இதற்கு டிபிசிடி அருமையாக சொல்லி இருக்கிறார். மென்பொருள் நிறூவன ஊழியர்கள் எண்ணிக்கையில் அதிகம் சட்டென்று வந்ததால், அந்த உணர்ச்சி தவிர்க்கப் படமுடியாதது. அதிக பணம் கொடுத்து வாங்க எண்ணுகின்றவர்கள் இருக்கும் வரை இந்த சர்ச்சைகள் ஓயாது.

இதையே தான் நானும் எண்ணுகிறேன். ஆனால் அதிக பணம் இருந்தால் கொடுத்து வாங்கத் தான் செய்வார்கள். இது ஒரு catch22 situation-ஆ தெரியவில்லை.

7:53 AM, May 15, 2008
//

வந்தியத்தேவன்,

மேற்கண்ட உங்களது மற்றும் மேற்கண்ட பின்னூட்டங்களில் இருந்து ஒன்று தான் தெரிகிறது.

அத்தனை மென்பொருள் வல்லுனர்களும் வெளிநாடுகள் சென்று எவ்வளவு சம்பாதித்து வந்தாலும் விலைவாசி பிரச்சனையே வராது ?

உள்ளூரில் சிலருக்கு தகுதியினால் பணம் ஈட்ட வாய்ப்புக் கிடைத்தால் இதுபோன்ற பிரச்சனைகள் வருமென்றால் அது சமூக குறைபாடேயன்றி மென்பொருள் வல்லுனர்களின் வாங்கும் திறன் என்று மட்டுமே என்று சொல்வதை ஏற்கமுடியவில்லை. பணம் வைத்திருப்பவர்களெல்லாம் எல்லாத்தையும் வாங்கிப் போடுவார்கள் என்று சொல்ல முடியாது. சிலருக்கு சிறிய வீட்டையே அனைத்து அடிப்படை செய்து அழகுபடுத்தி வசதியாக வைத்திருப்பதற்கு மிகவும் பிடிக்கும். ஊரில் இருக்கும் வீடுகளையெல்லாம் வாங்க முடிந்தால் அரசியல் வாதிகளையே அனைத்தையும் வாங்கிவிடும் அளவுக்கு அவர்களிடம் பணம் இருக்கிறது.

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்