பின்பற்றுபவர்கள்

19 பிப்ரவரி, 2008

தமிழ்நாட்டில் பிறந்தவன் தான் தமிழன் ?

ரஜினி அரசியலுக்கு வரவேண்டும் என்று பல்வேறு தரப்பினர் 1996ல் "கருத்து" தெரிவித்ததைத் தொடர்ந்து, "தமிழன் தான் தமிழ்நாட்டை ஆள வேண்டும்" என்ற எதிர்கருதும் எதிரொலித்தது. அதனை குறிப்பிட்டு சாடியதில் மருத்துவர் இராமதாசு ஐயா அவர்களும் அடக்கம். அப்போது அவரது சமூகத்தைச் சேர்ந்த அமரர் வாழப்பாடி இராம மூர்த்தி "தமிழ் பேசுபவர்கள் எல்லோருமே தமிழர் தான்" என்று அவருக்கு பதிலடியாகவும் ரஜினிக்கு ஆதரவாகவும் சொல்லி இருந்தார். அதே பதிலை சன் டிவி நேருக்கு நேர் நிகழ்ச்சியில் ரஜினி அவர்களும் தெரிவித்து இருந்தார். நான் ரஜினி தமிழன் என்றோ இல்லை என்றோ சொல்வதற்காக இந்த இடுகையை எழுதவில்லை.

அரசியல்வாதிகளின் பச்சை அரசியல் தனத்தில் மொழி அரசியலே முன்னிலை வகிக்கிறது. இந்த மொழி அரசியலால் பவுத்தமும், சமணமும் எப்படி தந்திரமாக தமிழ்மண்ணை விட்டு அகற்றப்பட்டன என்று ஒரு இடுகையில் சொல்லி இருக்கிறேன். மொழியை அரசியலுக்காக பயன்படுத்துவது... இதை வளரவிடுவது தமிழுக்கு எதிரான ஒன்று, தமிழ்மீது பற்று கொண்ட பிறரையெல்லாம் தள்ளி நிற்க வைத்துவிடும் என்று உணர்ந்தே தான் 'திராவிட' என்ற பொதுப்பெயரை பெரியார் திராவிட இயக்கத்திற்கு சூட்டி இருந்தார். அதையே திரித்து பெரியார் தமிழனல்ல என்பதால் 'திராவிட' என்ற சொல்லை பபயன்படுத்தினார் என்ற திரிப்பு எதிர் அவதூறு பிரச்சாரங்களையும் நாம் பார்த்து வந்திருக்கிறோம். 'திராவிட இயக்கத்தின் வெற்றி என்று தான் அதனை கொள்ளவேண்டும். காரணம் அதன் வளர்ச்சியை குறை சொல்வதற்கு இதுபோன்ற சொத்தை வாதங்களை கேட்கும் போது, அவர்கள் "திராவிட இயக்கத்தில்" உள்ள 'திராவிட' என்ற சொல்லைத்தான் குறை சொல்கிறார்கள். அவரது இயக்கதைச் சொல்வதற்கு இவர்களிடம் எதுவுமே இல்லை என்ற மறைமுக ஒப்புதல் போன்றது அது.

மொழிப்பற்று வேறு, மொழி வெறி வேறு. கர்நாடகாவிலும், மகாராஷ்டிரத்திலும் நடப்பது மொழி அரசியல், வாட்டள் நாகராஜ் மற்றும் ராஜ்குமார் ஆகியோர் தமிழகத்தில் பிறந்திருந்தாலும் தங்களை தமிழர்கள் என்று சொல்லிக் கொண்டது கிடையாது. 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' என்ற செய்யுளில் உலகம் ஒரே இல்லமாக நினைத்தும், 'வந்தாரை வாழவைக்கும் செந்தமிழ் நாடு' என்று சிறப்பு பெற்றது நம் தமிழ்நாடு மற்றும் தமிழர்கள். பிறப்பின் அடிப்படையில் தீண்டாமை, சாதிகளை அமைத்துக் கொண்டு மக்களுக்குள் கூறுபோட்டு தள்ளிவைத்தது போலவே, பலர் அரசியலுக்காவே பிறப்பின் அடைப்படையில் தமிழ் நாட்டில் பிறந்தவன் தான் தமிழன் என்கிறார்கள்.

தமிழுக்கு முதன் முதலாக அச்சு எழுத்தை ஆக்கித்தந்த வெளிநாட்டு கிறித்துவ பாதிரிமார்கள், தமிழே இந்தியாவின் தொன்மை மொழி என்று நிறுவிய ஜியுபோப், கால்டுவெல் ஐயர் ஆகிய ஐரோப்பிய இன பாதிரிமார்கள், சீகன் பால்கு, பாதர் பெஸ்கி என்ற பெயரை வீரமாமுனிவர் என்று மாற்றிக்கொண்டு தமிழில் முதல் கிறித்துவ இதிகாசமாக தேம்பாவனியைப் படைத்ததும் இல்லாமல், பரமார்த்த குருகதைகள் என்ற எள்ளல் நடையிலும் எழுதப்பட்ட உரைநடை கதைகளில் மூடர்களையும், மூடப் பழக்கவழக்கங்களையும் சாடிய வீரமாமுனிவர் ஆகியோர் தமிழர்களே. அதை இல்லை என்று மறுப்பவர்கள் தமிழர்களா ?

இன்னும் எத்தனையோ பேர் தமிழ்மண்ணில் பிறக்காது தமிழை தாய்மொழியாக கொண்டிருக்காது தமிழை நேசித்து வளர்த்து வந்திருக்கின்றனர். கன்னடராக பிறந்தாலும், கன்னடத்தை தாய்மொழியாக கொண்டு பலமாநில படங்களில் நடித்து அதில் கிடைக்கும் பணத்தை தமிழில் படமெடுக்கும் நடிகர் பிரகாஷ் ராஜ் தமிழன் தான். மலையாளியாக பிறந்து தமிழ் திரை இசையில் முத்திரை பதித்து, உயரம் குள்ளாமானாலும் புகழில் இமயமாக உயர்ந்து நிற்கும் இசை அமைப்பாளர் எம் எஸ் விஸ்வநாதன் தமிழன். சவுராஸ்டிராக பிறந்தும் திரை இசைப் பாடலில் பட்டி தொட்டி எங்கும் தொட்டு எழுப்பி இசைத் தொட்டிலால் தாலாட்டி, எழுச்சிப் பாடல்களால் கிராம இளைஞர்களை எழுந்து நிமிர செய்த பாடகர் திலகம் டிம்எம்சவுந்தராஜன் தமிழன். இதுபோன்றே தாய்மொழி தமிழல்லாது தமிழர்களை தாலாட்டிய பிறமாநிலத்து, பிறநாட்டு பெண்கள் எல்லோருமே தமிழச்சிகள் தான்.

"இங்கு தமிழிலும் அர்சனை செய்யப்படும்" என்று தமிழை இரண்டாவது இடத்துக்கு தள்ளிவிட்டு, "இதுவே அதிகம், அதற்கும் மேல் பேசினால், ஆண்டவனுக்கு அபச்சாரம்" என்று கடவுளை வைத்து வியாபாரம் பேசுபாவன் வெளியில் தமிழை மட்டுமே பிழைப்புக்காக பேசினாலும் அவன் தமிழனல்ல. 'சொம்மொழி சோறு போடுமா ?' என்று நக்கல் பேச்சை நயவஞ்சகமாக படிக்காத பாமரர்களுக்கும் ஒரு சேவை போலவே அதையும் "தமிழிலேயே விதைக்கும்" சோ அண்ட் சோ க்கள் தமிர்களா ?. நாங்களும் தமிழர்கள் தான் என்று பொதுப்படுத்திக் கூறிக் கொண்டே "தமிழ் ஆண்டு துவக்கம் தை முதல் நாளா ?" என்று கேட்டு எக்காளமிட்டு தை தை என்று குதிக்கும் தமிழ்பேசுபவர்களெல்லாம் தமிழர்களா ? தமிழ் ஆண்டு முதல் நாளை தைக்கு மாற்றினால் பங்கு சந்தையில் இந்திய ரூபாயின் மதிப்பு உயருமா ? என்று தமிழிலேயே எழுதி நக்கல் அடிப்பவர்கள் தமிழர்களா ?. தமிழ் நாட்காட்டியின் மாற்றத்தினால் தமிழ்நாட்டிற்கு, தமிழ் மொழிக்கு ஏதேனும் ஆதாயம் உண்டா? குறைந்தளவாக மென்பொருள் எழுதுவர்களுக்கு Y2K வை சரிசெய்யுமா ? என்று பகடி செய்பவர்களெல்லாம் தமிழர்களா வெளிநாட்டில் இருக்கும் தமிழ்நாட்டில் பிறந்த, தமிழையே பேசினாலும், தன் அடையாளத்துக்கு சாதி பெயரை
சொல்லி தன்னை அறிமுகப்படுத்திக் கொள்பவர்கள் தமிழர்களா ?

தமிழ்நாட்டில் குடியேறி தெலுங்கு மொழி, கன்னட மொழி, மலையாளம் ஆகிய ஒன்றை தாய் மொழியாகக் கொண்டு வீட்டிற்குள் தாய்மொழி பேசினாலும் தமிழை விருப்பப் பாடமாக படித்து தமிழுக்கு பெருமை சேர்க்கும், தமிழ்பண்பாட்டை தமது பண்பாடு ஆக்கிக் கொண்டவர்களும், தமிழை நேசித்து தமிழுக்கு புகழ்சேர்த்தவர்கள், தமிழனாகவே மாறிவிட்டவர்கள் என எந்த தாய்மொழி பேசுபவராக இருந்தாலும் எந்த மாநில, நாட்டினராக இருந்தாலும் அவர்கள் தமிழர்களே.

9 கருத்துகள்:

வவ்வால் சொன்னது…

கோவி,
//'சொம்மொழி சோறு போடுமா ?' என்று நக்கல் பேச்சை நயவஞ்சகமாக படிக்காத பாமரர்களுக்கும் ஒரு சேவை போலவே அதையும் "தமிழிலேயே விதைக்கும்" சோ அண்ட் சோ க்கள் தமிர்களா ?. நாங்களும் தமிழர்கள் தான் என்று பொதுப்படுத்திக் கூறிக் கொண்டே "தமிழ் ஆண்டு துவக்கம் தை முதல் நாளா ?" என்று கேட்டு எக்காளமிட்டு தை தை என்று குதிக்கும் தமிழ்பேசுபவர்களெல்லாம் தமிழர்களா ? தமிழ் ஆண்டு முதல் நாளை தைக்கு மாற்றினால் பங்கு சந்தையில் இந்திய ரூபாயின் மதிப்பு உயருமா ? என்று தமிழிலேயே எழுதி நக்கல் அடிப்பவர்கள் தமிழர்களா ?. தமிழ் நாட்காட்டியின் மாற்றத்தினால் தமிழ்நாட்டிற்கு, தமிழ் மொழிக்கு ஏதேனும் ஆதாயம் உண்டா? குறைந்தளவாக மென்பொருள் எழுதுவர்களுக்கு Y2K வை சரிசெய்யுமா ? என்று பகடி செய்பவர்களெல்லாம் தமிழர்களா ? தமிழ்நாட்டில் பிறந்துவிட்டு, தமிழையே பேசினாலும், தன் அடையாளத்துக்கு சாதி பெயரை
சொல்லி தன்னை அறிமுகப்படுத்திக் கொள்பவர்கள் தமிழர்களா ?//

நெத்தி அடி :-))

ஆனாலும் யாரையும் ஆட்சிக்கு வாங்க என்று வருந்தி அழைப்பது தவறு! நல்லவர் , வல்லவர் என்றால் போராடி வரட்டும், நீங்க இல்லாட்டி எங்களுக்கு வாழ்வில்லை என்பதெல்லாம் இனி எடுபடாது.

//தமிழ்நாட்டில் குடியேறி தெலுங்கு மொழி, கன்னட மொழி, மலையாளம் ஆகிய ஒன்றை தாய் மொழியாகக் கொண்டு வீட்டிற்குள் தாய்மொழி பேசினாலும் தமிழை விருப்பப் பாடமாக படித்து தமிழுக்கு பெருமை சேர்க்கும், தமிழ்பண்பாட்டை தமது பண்பாடு ஆக்கிக் கொண்டவர்களும், தமிழை நேசித்து தமிழுக்கு புகழ்சேர்த்தவர்கள், தமிழனாகவே மாறிவிட்டவர்கள் என எந்த தாய்மொழி பேசுபவராக இருந்தாலும் எந்த மாநில, நாட்டினராக இருந்தாலும் அவர்கள் தமிழர்களே.//

இதில இந்தி , சமஸ்கிருதம் எல்லாம் விட்டுப்போச்சா :-))

எல்லாம் தமிழரே என்று பரந்த மனப்பான்மை தேவை என்றாலும், தமிழனுக்கு அதே மரியாதை மகாராஷ்டிராவிலோ, கர்நாடகாவிலோ கிடைக்காத போது , இங்கே மட்டும் ரொம்ப நல்லவன் என்று பேர் வாங்கனுமா?

நமக்கு அங்கே போய் காலம் காலமாக உழைத்து , அங்கே ஒருவனாக மாறிய பின்னரும், அடி உதை தான் கிடைக்குதே ஏன்?

TBCD சொன்னது…

வவ்வால்,

தமிழர்கள் நம் நாட்டில் எந்த மூலைக்குச் சென்றாலும், தமிழர்களாகவே இருந்துவிடுகிறார்கள். கலாச்சாரம், மொழி என்று. அதுவே பெரிய உறுத்தல் மற்ற மாநிலத்துக்கார்களுக்கு என்று நினைக்கிறேன்..

ஆனால், தமிழகத்தில் பல நூறு வருடங்களுக்கு முன் வந்தவர்கள் பெரும்பாலும் தாய் மொழி கற்காமல் தமிழ்ர்களாகவே மாறிவிடுகிறார்கள். செள்கார்பேட்டையில் "பம்பிளிக்கி பிலாப்பி" என்றுப் பேசுபவரை கோவியார் தமிழர் என்றுச் சொன்னால், கல்லால் அடிப்பீங்க தானே..

அதையே, மாற்று மொழிக்காரர், அழகுத் தமிழில் பேசி, பழகி, எழுதி என்று இருந்து, அவர் சொன்னால் ஒழிய நீங்க வேற்று மொழிக்காரர் என்று அறிய வந்தால் அவரை தமிழர்கள் என்றுச் சொல்லுவதும் சரி தானே.

இராம.கி சொன்னது…

நண்பரே!

ஒரு சிறு திருத்தம்.

வீரமாமுனிவர் என்பவர் Father Beschi எனப்பட்டவர்; தென்பாண்டி நாட்டில் பணிபுரிந்தவர். மதுரைக்கு அருகிலும் இருந்தவர்; அடிப்படையில் இத்தாலியரோ, ஸ்பானியரோ சரியாகத் தெரியவில்லை; ஆனால் கத்தொலிக்கர். ஜி.யூ போப் போன்றும், கால்டுவெல் போன்றும் பெரிதும் அறியப்பட்டவர்.
மாறாகச் Ziegen Balg என்பவர் செருமனிக்காரர்; தரங்கம்பாடியில் டேனிசுக்காரர்களோடு பணிபுரிந்தவர்; protestant. தமிழக வரலாற்றில் இவருக்குச் சரியாகப் பெருமை சேர்க்கவில்லை. அண்மையில் தான் பலரும் இவர் பங்களிப்பைக் கொஞ்சம் கொஞ்சமாய் வெளிக்கொணருகிறார்கள்.

இருவரும் வெவ்வேறு ஆட்கள்.

அன்புடன்,
இராம.கி.

RATHNESH சொன்னது…

தமிழன் என்கிற அடையாளம், தமிழ்நாட்டில் முதலமைச்சர் நாற்காலிக்கு ஆசைப் படுபவர்களுக்கு ஓர் அசட்டுத் தேவை. மற்றபடி அந்த அடையாளம், வெளிமாநிலங்களிலும் வெளிநாடுகளிலும் அடி வாங்கிக் கொடுக்கும். வேறு என்ன SIGNIFICANCE இருக்கிறது அதில்?

ஜோ/Joe சொன்னது…

//தமிழ்நாட்டில் குடியேறி தெலுங்கு மொழி, கன்னட மொழி, மலையாளம் ஆகிய ஒன்றை தாய் மொழியாகக் கொண்டு வீட்டிற்குள் தாய்மொழி பேசினாலும் தமிழை விருப்பப் பாடமாக படித்து தமிழுக்கு பெருமை சேர்க்கும், தமிழ்பண்பாட்டை தமது பண்பாடு ஆக்கிக் கொண்டவர்களும், தமிழை நேசித்து தமிழுக்கு புகழ்சேர்த்தவர்கள், தமிழனாகவே மாறிவிட்டவர்கள் என எந்த தாய்மொழி பேசுபவராக இருந்தாலும் எந்த மாநில, நாட்டினராக இருந்தாலும் அவர்கள் தமிழர்களே.
//

உண்மை..உண்மை!

ஜோ/Joe சொன்னது…

இராம.கி ஐயா,
வீரமாமுனிவர் எனப்படும் இத்தாலிய நாட்டு பெஸ்கி பாதிரியார் தென்பாண்டி நாட்டில் மட்டுமல்ல ,வட தமிழகத்திலும் பணிபுரிந்திருக்கிறார் .கடலூர் மாவட்டம் உளுந்தூர் பேட்டை அருகில் உள்ள கோனான் குப்பத்தில் மேரி மாதாவை சேலை உடுத்தி தமிழ் பெண்ணாக உருவகித்து 'பெரிய நாயகி அம்மன்' என்று பெயர் சூட்டி வீரமாமுனிவர் கட்டிய கோவில் இன்றும் கத்தோலிக்கர்களிடையே மிகவும் பிரசித்தம் .

ஜோ/Joe சொன்னது…

பெரிய நாயகி அம்மன் ஆலயம் பற்றிய தகவலுக்கும் ,சேலை கட்டிய மாதா படத்திற்கும் இங்கே செல்லவும்

http://www.pondyarchdiocese.org.in/konankuppam.htm

Thamizhan சொன்னது…

தமிழ் பேசுபவர்கள் அனைவரையும் தமிழர்களாக்கத்தான் பெரியாரின் "திராவிடர்" என்ற இனப் பெயரிலிருந்து
"ர்"ஐ எடுத்துவிட்டு அறிஞர் அண்ணா "திராவிட" என்று நிலப் பெயரை வைத்தார்.
அந்த ஒரு எழுத்து மாற்றந்தான் இன்று
பாப்பாத்தியும் கழகத்தின் தலைமைக்கு வர வழி வகுத்து விட்டது.

திராவிடர் இனத்திலிருந்து {திராவிட என்பதே தமிழ் என்பதிலிருந்து திரிந்தது தான் என்று பாவாணர் சொல்கிறார்)தமிழ் மேல் பற்று கொண்டு,தமிழர்களுக்காகவும் தமிழுக்காகவும் உழைப்பவர்கள் எங்கே
பிறந்தாலும்,வாழ்ந்தாலும் தமிழர்களே!

தமிழைப் பேசிக்கொண்டு,தமிழால் பிழைப்பையும் நடத்திக் கொண்டு தமிழுக்கும்,தமிழர்கட்கும் கேடு செய்பவர்கள் தமிழர்கள் ஆக மாட்டார்கள்.த்றுதலைகள் தான் ஆவார்கள்.

JTP சொன்னது…

வீரமாமுனிவர் கட்டிய மற்றும் ஒரு புகழ் பெற்ற கோவில், கல்லணை அருகில் இருக்கும் பூண்டி மாதா பேராலயம்.
http://www.poondimadha.org/evolution.htm

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்