பின்பற்றுபவர்கள்

14 பிப்ரவரி, 2008

கயவனைப் பற்றி தெரிந்து என்ன ஆகப்போகிறது ?

சரமாரி வெட்டிக் கொலை, கற்பழித்துக் கொலை என்ற செய்திகள் எல்லாம் தலைப்பில் ஒரு ஈர்ப்பை வைத்து பரபரப்புக்காக செய்தி ஊடகங்கள் வெளி இடுவார்கள். பரபரப்பு தலைப்பு வைப்பதால் தான் இதுபோன்ற செய்திகளைப் தேடிப் படிக்கிறார்களா ? படிப்பவர்கள் அதைத்தான் விரும்புகிறார்கள் என்று அப்படிப்பட்ட தலைப்புகளை வைக்கிறார்களா ? தலைப்பில் ஒரு ஈர்ப்பு இருப்பது உண்மையே.

பிறந்த 54 நாள் ஆன குழந்தையை தந்தை கற்பழித்து கொலை, என்ற செய்தியை தாங்கிக் கொண்டு ஊடகம் வந்தால் அதனால் என்ன பயன் ? காமக் கொடுரர்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாக இனம், சாதி, மதம் தாண்டி எங்கேயும் இருக்கிறார்கள், அதுபோன்ற விலங்குகளின் விழுக்காடு 0.0000000001% இருக்கலாம். அவர்கள் செய்யும் ஈனச் செயல்களை செய்தியாகப் போடுவதால் யாருக்கு என்ன பயன் ? செய்திகள் என்றால் எதாவது நிகழ்வுகளின் தகவல் தான். ஊடகவாதிகளைப் பொறுத்து அவர்களுக்கு எல்லாமும் செய்திதான். சமூகத்தை சிந்திக்க வைக்கவோ, திசைத்திருப்பவோ ஊடகத்துறைக்கு ஆற்றல் உண்டு. ஊடகத்துறை மக்களுக்காக இயங்குவதால் அதற்கு பொறுப்புணர்வு என்பது மிக முதன்மையானது.

"பிறந்து 54 நாட்களே ஆன தனது பென்குழந்தையை கற்பழித்து கொன்ற தந்தை!! - என்ற செய்திகளை வெளி இடுவதன் மூலம், இவர்கள் பொதுமக்களுக்கு என்ன தகவல் சொல்லப் போகிறார்கள் ?

அதையும் ஒரு பதிவர் மத அரசியலுக்காக பயன்படுத்துகிறார். எல்லா மதத்திலும் கயவர்கள் இருக்கவே செய்கிறார்கள், ஒரு கயவன் செய்யும் கயமைக்காக அந்த மதத்தில் உள்ளவர்களையோ ஒரு மதத்தையோ குறைச் சொல்ல முடியுமா ? மொட்டைத்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போடுவது போல் இருக்கிறது. பின்லேடன் செயலுக்கோ, தீவிரவாதிகளின் செயலுக்கோ 'முஸ்லிம் தீவிரவாதம்' என்று சொன்னால் இஸ்லாமியர்களுக்கு ஏற்புடையதா ?

ஒரு கயவனின் இழிசெயலை செய்தியாக போட்டதே பெரும் தவறு, அதைப் பார்த்து திருந்துவதற்கு அந்த அளவு யாரும் கொடுமைக் காரர்கள் கிடையாது, அந்த செய்தியை அறிந்து கொள்வதால் இதுபோன்ற பிறவிகள் இருக்கும் கேடு கெட்ட உலகத்தில் நாமும் வாழ்கிறோம் என்ற வேதனைதான் மிஞ்சுகிறது. இதுபோன்ற செய்திகளை ஊடகங்கள் தவிர்க்கலாம், அத்தகைய செய்திகள் காவல்துறையின் உள்ளே முடித்துக் கொள்ளப்படவேண்டியவை. அதையும் மத அரசியலுக்காக அந்த பதிவில் பயன்படுத்தி இருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது

9 கருத்துகள்:

வடுவூர் குமார் சொன்னது…

நிச்சயமாக தவிர்க்கப்பட வேண்டிய செய்தி.

கல்வெட்டு சொன்னது…

// ஒரு கயவன் செய்யும் கயமைக்காக அந்த மதத்தில் உள்ளவர்களையோ ஒரு மதத்தையோ குறைச் சொல்ல முடியுமா ? //

இது ஒரு நொண்டிச்சாக்கு கோவி
அப்படிப்பட்ட கயவனை அந்த அந்த மதங்களில் இருந்து விலக்கலாமே ?

இறைவனின் சித்தம் இருந்தால் தான் எதுவும் நடைபெறும் என்று நம்பும் மத நம்பிக்கையில், இந்த செயல்கள் மட்டும் இறைவனின் சித்தம் இல்லாமலா வந்தது?

என்ன கொடுமை கோவி?

ஒருவன் செய்யும் தீய செயல்களுக்கு மதம் பொறுப்பு ஏற்காது என்றால், அவன் செய்யும் நல்ல செயல்களுக்கும் அது பொறுப்பு ஏற்காதுதானே? சரியா?

அப்படி இருக்கையில், மனிதனின் எந்தவிதமான செயல்களுக்கும் (நல்லது/கெட்டது/ etc.,) பொறுப்பு ஏற்கவில்லை என்றால் , பின்னர் எதற்கு மதம் ? மதத்தின் தேவைதான் என்ன?

நிறுவனமயமாக்கப்பட்ட மதங்களில் கிராம, மாவட்ட,மாநில,நாடு.உலக அளவில் அதிகார அமையங்கள் உண்டு. இப்படி செயல்படுபவர்களை மதத்தில் இருந்து நீக்க ஏன் யாரும் முயல்வது இல்லை. அல்லது சிந்திப்பதுகூட இல்லை?
ஏன் என்றால் மதம் என்பது அரசியல்.

தார்மீகப் பொறுப்பு என்று சொல்லி பதவிவிலகும் சில அரசியல் வாதிகளுக்கு இருக்கும் குறந்த பட்ச தார்மீகப் பொறுப்பு ஏற்கும் பண்பு கூட மதம்/மதவாதிகளிடம் (கடவுளிடம் ?) இல்லை என்பதே உண்மை.

தனிமனிதனுக்கு சமுதாயத்தில் இணைந்து வாழும் அடிப்படை ஒழுங்கை/தகுதியைக்கூட கற்றுத்தராத மதம் என்ன மதம்? அதனால் என்ன பயன்?

மேலும்....
மதங்களின் மூத்திரச் சந்துகளின் வழியாக வரும் கோர்வையற்ற நாற்றம்
http://kalvetu.blogspot.com/2007/12/blog-post.html


** மதங்கள் உள்ளவரை அதன் அரசியலும் , இது போன்ற செய்தி வாசிப்பும் இருக்கத்தான் செய்யும்.

** நான் சொல்வது எந்த மதமாக இருந்தாலும் ***

கோவி.கண்ணன் சொன்னது…

கல்வெட்டு ஐயா,

மதம் மனிதனைப் பிடித்த மோசமான வியாதி என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. அங்கே ஒரு மதத்துக்காரார் இன்னொரு மதத்தினரை குற்றம் சொல்ல ஒரு கயவனின் இழிசெயலைப் பயன்படுத்துகிறார். அது குறித்து தான் கண்டனம் தெரிவித்தேன். மற்றபடி மத நம்பிகை உடையவர்கள் அக்மார்க் தங்கம் என்று எப்போதும் நான் பரிந்துரை செய்தது இல்லை.

//இது ஒரு நொண்டிச்சாக்கு கோவி
அப்படிப்பட்ட கயவனை அந்த அந்த மதங்களில் இருந்து விலக்கலாமே ?//

மதத்திலிருந்து விலக்குவதா ? எந்த மதத்திலும் அது போன்ற தள்ளி வைப்புகள் இல்லை. முடிந்த அளவுக்கு முட்டுக் கொடுக்கவே பார்ப்பார்கள்.
:)

//இறைவனின் சித்தம் இருந்தால் தான் எதுவும் நடைபெறும் என்று நம்பும் மத நம்பிக்கையில், இந்த செயல்கள் மட்டும் இறைவனின் சித்தம் இல்லாமலா வந்தது?//

இங்கு இறைவன் பற்றியே பேச்சு இல்லை. மதநம்பிக்கையை வைத்துதான் அந்த பதிவில் பேசுகிறார்கள். நீங்கள் சொல்வதைக் கேட்டால் பின்வாங்குவது கடவுள் நம்பிக்கையாளர்கள்.

//ஒருவன் செய்யும் தீய செயல்களுக்கு மதம் பொறுப்பு ஏற்காது என்றால், அவன் செய்யும் நல்ல செயல்களுக்கும் அது பொறுப்பு ஏற்காதுதானே? சரியா?//

அடுத்த மதத்துக் காரணின் தீயசெயலுக்கு கைக் காட்டுவது போலவே தன்மதத்தினர் செய்யும் தீயசெயலுக்கு தன்னை நோக்கி நீட்டிக் கொள்ள முடியுமா ? என்று தான் சொல்லி இருக்கிறேன்.
:)

பிறைநதிபுரத்தான் சொன்னது…

மதத் துவேஷம் வளர்க்கும் - கயவர்களுக்கு தங்களின் பதிவு நெத்தியடி.

மதத்திலிருந்து விலக்குவதா ? எந்த மதத்திலும் அது போன்ற தள்ளி வைப்புகள் இல்லை. முடிந்த அளவுக்கு முட்டுக் கொடுக்கவே பார்ப்பார்கள்.:) கோவி.கண்ணன்

தப்பு செய்கிறவனையெல்லாம் மதத்திலிருந்து விலக்கிவிட்டால் - உலகில் ‘மதம்' என்ற வார்த்தை மட்டும்தான் மிஞ்சும் - மத வியாபர்ரிகளின் வாயில் மண் விழும்!

மனிதனை பண்படுத்த தோற்றுவிக்கப்பட்டதாக கூறப்படும் மதத்தை - போர்வையாக கொண்டு மற்றவ்ர்களை புண்படுத்தலாமா?

மனிதனுக்கு மதம் தேவையோ இல்லையோ ஆனால் மதத்திற்கு பகுத்தறிவும்-மனிதமுமற்ற - மனிதன் தேவை..

RATHNESH சொன்னது…

"அகப்பட்டி ஆவாரைக் காணின் அவரின் மிகப்பட்டுச் செம்மாக்குங் கீழ்" என்றார் வல்ளுவர். கேவலமானவன், தன்னினும் கேவலமானவனைப் பற்றி அறிய நேர்ந்தால் அதனைப பற்றிப் பெரிதாக விளம்பி, "பார், பார், நான் இவனை விட பெட்டர் தானே" என்பானாம். இந்தச் செய்தியைப் போட்ட பத்திரிகைக்காரர் அதைத் தான் செய்திருக்கிறாரோ என்னவோ.

என்னைக் கேட்டால், அந்தக் கேவலக் காரியத்தைச் செய்தவன் ஒரு பிரக்ஞையற்ற பைத்தியக்கார மிருகம் என்றால் அதனைக் காட்சியாக்கிய மீடியாக்காரன் தான் அவனிலும் வக்கிரம் கொண்ட கேவலப்பிறவி.

கருப்பன் (A) Sundar சொன்னது…

//
மதத்திலிருந்து விலக்குவதா ? எந்த மதத்திலும் அது போன்ற தள்ளி வைப்புகள் இல்லை. முடிந்த அளவுக்கு முட்டுக் கொடுக்கவே பார்ப்பார்கள்.
:)
//
இதில் இன்னும் ஒரு விஷயம் என்னவென்றால் மதத்தில் இருந்து ஒருவரை நீக்குவதால் அவருக்கு எந்த நஷ்டமும் இல்லை. முதலில் மதத்தில் யாரும் சேர்க்கப்படுவதில்லை அதனால் நீக்கப்படுவதும் சாத்தியமில்லாத ஒன்று.

----------------------

செய்தியை நாம் தெரிந்து கொண்டு ஒன்றும் ஆகப்போவதில்லை, ஆனால் அந்த தவறை செய்தவன் படும் அவமானம் தான் அவனுக்கு கிடைக்கும் தண்டனை. சமுதாயத்தால் ஒதுக்கப்டுதல் என்ற கடுமையான தண்டனை அவனுக்கு கிடைக்கிறது அல்லவா?? செய்தி வெளியில் தெரியாவிட்டால் தவறு செய்தவனுக்கும், இது போன்ற தவறு செய்ய நினைப்பவனுக்கும் எந்த பயமும் இருக்காது!!

நீங்கள் கூறிய "அந்த பதிவர்" கிட்டத்தட்ட எல்லா செய்திகளையும் கொண்டு கேவலமான "மத அரசியல்" செய்து கொண்டிருக்கிறார். இது குறித்து ஒரு பதிவை எழுதலாம் என்று நினைத்தேன் இருப்பினும் சாக்கடையில் கல் எறிய வேண்டாம் என்று விட்டுவிட்டேன்.

பதிவுகளில் மத போதனை செய்வதை விட வேறு நல்ல விஷயங்களை பகிர்ந்து கொண்டால், பதிவர் வட்டம் இன்னும் ஆரோக்கியமாக இருக்கும்.

TBR. JOSPEH சொன்னது…

பதிவுகளில் மத போதனை செய்வதை விட வேறு நல்ல விஷயங்களை பகிர்ந்து கொண்டால், பதிவர் வட்டம் இன்னும் ஆரோக்கியமாக இருக்கும்.
//

உண்மைதான். அதற்கென முழுநேர போதகர்கள் ஒவ்வொரு மதத்திலும் உள்ளனரே. நமக்கெதற்கு?

பாச மலர் / Paasa Malar சொன்னது…

காதல் முதல் வக்கிரம் வரை இன்னும் அதிகம் விகாரப்படுத்திக் காண்பிப்பதுதான் இன்று ஊடகங்களின் "சமுதாயப் பொறுப்பாக" இருந்து வருகிறது...

மதம், அரசியல் இதைவிட இப்போது மிகவும் ஆபத்தானது ஊடகம்..
அதனால்தான் மதவாதிகளும், அரசியல்வாதிகளும் இந்த ஊடகங்களைக் கையில் வைத்துக் கொண்டு சிலம்பாட்டம் ஆடி வருகிறார்கள்..

கோவி.கண்ணன் சொன்னது…

பின்னூட்டமிட்ட வடுவூரார்,

கல்வெட்டு,

பிறைநதிபுரத்தான்,

ரத்னெஷ்,

கருப்பன்/Karuppan,

பாச மலர்,

டிபிஆர் ஜோசப்

ஆகியோருக்கு நன்றி !

இது ஒரு செய்தி விமர்சனம் என்பதால் உங்கள் கருத்துக்களை கருத்துக்களாக எடுத்துக் கொள்கிறேன். அதற்கு மறுமொழி தேவை இல்லை என நினைக்கிறேன்.

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்