பின்பற்றுபவர்கள்

9 ஜனவரி, 2008

வாரிசு அரசியலும், திமுகவும்

அரசியலில் அவ்வப்போது பேசுவதற்கு சர்சை எதுவும் இல்லை என்றால் ஆளும் கட்சி மீது 'வாரிசு அரசியல்' என்ற குற்றச்சாற்றை கொண்டுவருவது உண்டு. பெரும்பாலும் இந்த குற்றச்சாற்றைக் கொண்டு வருபவர்களில் புதுக் கட்சி ஆரம்பிப்பவர்களே அதிகம். மருத்துவர் ஐயா கட்சி ஆரம்பித்த போது திமுகவின் மீது 'வாரிசு அரசியல்' குற்றத்தை கடுமையாக வைத்தார். 'என் குடும்பத்தினர் எவராவது பாமக அரசியலில் நுழைந்தால் பொதுமக்கள் முன்னிலையில் சவுக்கால் என்னை அடிக்கலாம்' என்று வீரவசனம் எல்லாம் பேசினார். கட்சி வளர்ந்ததும் கைவிட்டுப் போய்விடக் கூடாது என்பதால் அவருடைய அன்பு மகன், மருத்துவர் அன்பு மணியை சின்ன ஐயாவாக பின்வாசல் வழியாக கட்சிக்கு வாரிசாக்கி மத்திய அமைச்சராகவும் ஆக்கினார்.

இதே போன்று காங்கிரசில் உள்ள பலதலைவர்களும் திமுகவை 'வாரிசு அரசியல்' என்று குற்றம் சுமத்தினார்கள். மூப்பனார் இருக்கும் வரை இல்லாத வாசன், அவர் மறைந்ததும் உள்ளே வந்த போது காங்கிரஸ் இரத்தன கம்பளம் விரித்து, தமிழக காங்கிரஸ் தலைவர், மத்திய அமைச்சர் பதவிவரை காங்கிரசார் கொடுத்தார்கள். அதன் பிறகு கேப் கிடைக்கமாலேயே மாயாஜால வித்தை செய்து கார்த்திக் சிதம்பரம் உள்ளே நுழைந்து தனக்கென தனி கோஷ்டியே உருவாக்கிக் கொண்டார். இப்பொழுதெல்லாம் தமிழக காங்கிரசில் வாரிசு அரசியல் பற்றி எவரும் மூச்சு விடுவதில்லை. 60 ஆண்டுக்கும் மேலாக காங்கிரஸ் கட்சியை நேரு குடும்பத்திடம் சாசனம் செய்து கொடுத்துவிட்டதால் 'வாரிசு அரசியல்' பற்றி பேசுவதற்கு காங்கிரஸ் கட்சிக்கு அருகதையே இல்லை.


கட்சி ஆரம்பித்து ஓர் ஆண்டுக்குள்ளேயே தேமுதிக விஜயகாந்தின் குடும்பத்தினரின் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிட்டதால் கட்சி ஆரம்பித்த போது திமுக மீது சொல்லிய 'வாரிசு அரசியல்' குற்றச் சாட்டை தற்போது விஜயகாந்த் தூக்கத்தில் கூட சொல்வதில்லை.

அதிமுக ? வாரிசு அரசியல் இல்லை என்பது போல் தோன்றும். எம்ஜிஆர் இறந்ததும், அதுவரை அரசியல் நிகழ்வுகளில் எதிலும் கலந்து கொள்ளாத எம்ஜிஆரின் மனைவி விஎன் ஜானகி எம்ஜிஆர் அம்மா, அதிமுகவிற்கும் எம்ஜிஆருக்கும் திடீர் வாரிசு ஆனார். எம்ஜிஆருக்கு ஜோடி ஜெயலலிதா தான் என்று எம்ஜிஆர் ரசிகர்களின் மனதில் பதிந்துவிட்டபடியால் நிஜத்தை விட நிழலே உண்மை என்று அதிமுகவுக்கும் எம்ஜிஆருக்கும் வாரிசு ஆக ஏற்றுக் கொண்டுவிட்டார்கள். ஜெயலலிதா எம்ஜிஆர் இறந்தவுடன் அரசியலில் குதிக்கவில்லை தான். ஆனால் எம்ஜிஆருக்கு நேரடி வாரிசுகள் இருந்து, அவர்கள் அரசியல் களத்தில் இருந்திருந்தால் ஜெயலலிதா அரசியலில் நுழைந்திருப்பதற்கான வாய்ப்பே இல்லாமல் போய் இருக்கும். எம்ஜிஆர் இல்லை என்றால் ஜெயலலிதாவிற்கு அரசியலுக்கும் தொடர்பே இருந்திருக்காது. அதிமுகவை பொறுத்தவரை ஜெயலலிதா அறிவிக்கப்படாத எம்ஜிஆரின் வாரிசு. மற்றபடி அதிமுகவில் ஜெவின் பங்கு எம்ஜிஆர் இருக்கும் வரை மற்ற மூத்த அதிமுக தலைவர்களை விட அனுபவ அளவில் குறைந்ததே. ஜெவுக்கு பிறகு வேண்டுமானால் நிலமை மாறலாம். ஆனால் ஜெ வரையிலும் அதிமுகவில் ஒருவகையில் நடப்பதும் வாரிசு அரசியலே.

திமுகவை ஆரம்பித்த அறிஞர் அண்ணாவுக்கு வாரிசு இருந்திருந்தால் கலைஞர் திமுக தலைவர் ஆகி இருப்பதற்கான வாய்ப்புகள் குறைவே. தேசிய கட்சிகளிலும் இதே நிலமைதான். வாஜ்பாய்க்கு வாரிசு இருந்திருந்தால் அத்வானி அமைச்சர், கட்சித் தலைவர் என்ற அளவிற்குத்தான் வந்திருக்க முடியும். ஆனால் இன்று பிரதமர் வேட்பாளாராக தன்னை அறிவித்துக் கொள்கிறார் என்றால் வாஜ்பாய் பேச்சிலராக இருந்ததால் முடிகிறது. பக்கத்து மாநிலத்தில் தேவ கவுட மகன்களின் அரசியலையும் பார்த்தாகிவிட்டது. மும்பையில் சிவசேனா தாக்ரேயின் மகன் மற்றும் மருமகன் சண்டைகளால் கட்சியே உடைந்துவிட்டதாக சொல்கிறார்கள். ஆந்திர அரசியலில் தெலுங்கு தேசம் என் டி ஆரின் மருமகன் வசம் உள்ளது. லாலு பேமிலி பற்றி எல்லோருக்கும் தெரியும். மற்ற மாநில அரசியலிலும் பழைய கட்சிகளில் நிலமை இதே போன்று தான் இருக்கும்.

சிங்கப்பூரின் தற்போதைய பிரதமர் முன்னால் பிரதமரின் மகன். மற்ற சில நாடுகளில் மன்னர்கள் இன்னும் இருப்பதால் பிரதமர் வேட்பாளர்களுக்கு அவ்வளவு செல்வாக்கு இல்லை. கம்யூனிச நாடுகளிலும், சர்வாதிகார நாடுகளிலும் திடீர் அரசியல் வாதிகள் தோன்றுவார்கள். மற்றபடி பாரம்பரை அரசியல் கட்சிகள் எல்லாமும் வாரிசுகளிடம் தான் சொத்து போல விடப்படுகிறது. இந்தியாவில், திமுகவில் கலைஞர் குடும்பம் மட்டும் வாரிசு அரசியல் நடத்துவதாக சொல்வது நகைப்புக்கு இடமானது. நிராகரிக்க கூடியது.

கட்சிக்குள் வாரிசு அரசியலை மீறி பெரிய பொறுப்பு, பதவிகள் அடைய முடியாது என்பதாலேயே பல கட்சிகள் உடைகிறது, பெரிய பதவி, கட்சித் தலைவராக வளரவேண்டும் என்ற அவர்களுடைய (பேரா ?)ஆசையால் சிலர் புதிய தலைவர்களாக உருவாகிறார்கள்.

நான் வாரிசு அரசியலை போற்றவில்லை. ஆனால் அதைச் சொல்ல எந்த கட்சிக்கும், கட்சி சார்புடையவர்களுக்கும் தகுதி இல்லை என்கிறேன். திமுகவின் மீது சொல்லப்படும், வாரிசு அரசியல் ஓரளவுக்கு உண்மை என்றாலும் அவை விபரம் தெரியாமலும் அல்லது காழ்புணர்வாலும் அல்லது வேண்டுமென்றே குழப்பத்தை ஏற்படுத்த முயற்சியாக சொல்லப்படுபவையே. வாரிசுகள் அரசியலுக்கு வருவதில் தவறு என்று ஒரேடியாக தவறாகவும் சொல்ல முடியாது. மற்றவர்களைப் போல அவர்களுக்கும் அடிப்படை உரிமை உள்ளது, கூடுதலாக வாய்ப்பும் இருப்பதால் வாரிசுகள் உண்மையிலேயே திறமையானவராக இருந்து மக்கள் ஏற்றுக் கொண்டால் அவர்களை அசைக்க முடியாது.

வாரிசு அரசியலுக்கு தலைவர்களின் பேராசை ஒரு காரணம் என்றாலும் உளவியல் ரீதியாக நாமும் காரணமாக அமைந்துவிடுகிறோம். அதைப்பற்றி இங்கே

27 கருத்துகள்:

வீ. எம் சொன்னது…

மிக தெளிவாக சொல்லியிருக்கீங்க கோ வீ.

எந்த கட்சிக்கும் வாரிசு அரசியல் என்று குற்றம் சாட்ட அருகதை இல்லை..ஆனாலும் தி மு க என்றால் அனைவரும் வாரிசு அரசியல் வாரிசு அரசியல் என்று வரிந்து கட்டுவது ஏன் என தெரியவில்லை

Arun Kumar சொன்னது…

அப்பாடா அனுதினமும் காலையிலும் மாலையிலும் கருத்து சொல்லும்
கருத்து கந்தசாமி கருத்து சொல்லிட்டாருப்பா. இனிமே உலகம் நிம்மதியாக விழிக்கும் அல்லது கண் உறங்கும். :)) கருத்து கந்தசாமிக்கும் கருத்து சொல்லிய வகையில் நிம்மதியா தூக்கம் வரும்

கோவி.கண்ணன் சொன்னது…

//Talan said...
அப்பாடா அனுதினமும் காலையிலும் மாலையிலும் கருத்து சொல்லும்
கருத்து கந்தசாமி கருத்து சொல்லிட்டாருப்பா. இனிமே உலகம் நிம்மதியாக விழிக்கும் அல்லது கண் உறங்கும். :)) கருத்து கந்தசாமிக்கும் கருத்து சொல்லிய வகையில் நிம்மதியா தூக்கம் வரும்
//

அலுத்துக் கொள்பவர்கள் ஏன் படிக்கனும், படிச்சுட்டு ஏன் கருத்து சொல்லனும் ?

நான் கேட்டேனா ?
:))

கோவி.கண்ணன் சொன்னது…

//வீ. எம் said...
மிக தெளிவாக சொல்லியிருக்கீங்க கோ வீ.

எந்த கட்சிக்கும் வாரிசு அரசியல் என்று குற்றம் சாட்ட அருகதை இல்லை..ஆனாலும் தி மு க என்றால் அனைவரும் வாரிசு அரசியல் வாரிசு அரசியல் என்று வரிந்து கட்டுவது ஏன் என தெரியவில்லை
//

வீ. எம் கருத்துக்கு நன்றி !

aathirai சொன்னது…

Atleast our leaders are not writing a 'party will' like benazir. That was the height of comedy.

Benazir's uncle claimed he has more right before her son (???) to claim the party .

http://www.ibnlive.com/news/its-bhutto-vs-bhutto-as-uncle-slams-bilawal/55515-2.html

✨முருகு தமிழ் அறிவன்✨ சொன்னது…

////////திமுகவை ஆரம்பித்த அறிஞர் அண்ணாவுக்கு வாரிசு இருந்திருந்தால் கலைஞர் திமுக தலைவர் ஆகி இருப்பதற்கான வாய்ப்புகள் குறைவே//////

இன்றைய எல்லா இந்திய அரசியல் கட்சிகளிலும் வாரிசுகள் வருவது நீங்கள் சொல்வது போல உண்மைதான்,ஆனால் அண்ணா தனக்குப் பிறகு நெடுஞ்செழியனையே அடையாளம் காட்டியதாகவும், முக அவருக்கேயுரிய கயமைத்திறமை-cunningness-யுடன் தான் முதல்வர் பதவியைக் கைப்பற்றினார் என்ற கூற்று உண்டு;இயலுமெனில் அக்காலத்தவரை வினவி தெளிவடையலாம்.
அந்த திறமையே அவர் நமக்குப் பிறகு வெளியார் வேறு யாரும் வந்துவிடக் கூடாது என பலமான ஏற்பாடுகள் செய்கிறார்.

எம்ஜிஆர் தெளிவாகாவே நான் யாரையும் வாரிசாக அடையாளம் காட்டவில்லை எனச் சொன்னார்;கட்சியும் காலமும் அதை முடிவு செய்யும் எனச் சொன்னார்.
அவர் நினைத்திருந்தால் அவரின் அண்ணன் மக்களில் யாரையாவது முன்னிலைப்படுத்தியிருக்கலாம்...ஜெ,முன்னேறி கட்சியைப் பிடித்ததும் அதே கயமைத்திறனின் மூலமே,எனவேதான் அவர் முக.வுக்கு சரியான போட்டி லாவணி நடத்துகிறார் !

//////சிங்கப்பூரின் தற்போதைய பிரதமர் முன்னால் பிரதமரின் மகன். /////

இந்தக் கூற்றின் மூலம் முக செய்வதொன்றும் புதிதில்லை எனச் சொல்ல வருகிறீர்கள் என நினைக்கிறேன்.

சீனியர் லீ'யையும் முக'வையும் ஒப்பீடு செய்கிறீர்கள் என்றால் அதைப்பற்றியும்,உங்கள் புரிதலையும் பற்றி சொல்ல ஒன்றுமில்லை,அது மலையையும் மடுவையும் ஒப்பிடுவதற்கொப்பானது !

ஒரு தகவல்-சீனியர் லீ ஆட்சியை விட்டு விலகி 14 ஆண்டுகள் கழித்தே அவரது மகன் வந்திருக்கிறார் !!!

மற்றபடி ஒரு திமுக அனுதாபியாகவே இப்பதிவு அமைகிறது.

Siva Sutty - m of n சொன்னது…

கண்ணன்,

//திமுகவை ஆரம்பித்த அறிஞர் அண்ணாவுக்கு வாரிசு இருந்திருந்தால் கலைஞர் திமுக தலைவர் ஆகி இருப்பதற்கான வாய்ப்புகள் குறைவே//

அண்ணாவிற்கு மகன்/மகள் உண்டு. அவரின் பேரன் என் நெருங்கிய தோழர்.

கோவை சிபி சொன்னது…

தி.மு.க வை தூற்ற எடுத்துக்கொள்ளும் ஆயுதம்தான் வாரிசு அரசியல் என்பது.கருணாநிதியின் கயமைத்தனத்தை விளக்கிய பதிவருக்கு,நெடுசெழியனின் கையலாகத்தனம் ஊரறிந்தது.பொதுக்குழுவிலே மூன்றில் ஒரு பங்கு ஆதரவு கூட இல்லாதவருக்கு முதல்வர் பதவியா!.மாற்றாக ஒருவரை தேடியபோது அந்தவாய்ப்பை சாதுரியமாக பயன்படுத்தியவர் மு.க..இதுதான் தி.மு.க வை 39 வருடங்களாக பாதுகாத்து வருகிறது.

சதுக்க பூதம் சொன்னது…

பாக்கிஸ்தானில் பெனசிர் பூட்டோ, தனது கட்சியை தன் வீட்டு சொத்து போல் பாவித்து, தனக்கு பிறகு கட்சி தலைமை யாருக்கு என்று உயில் எல்லாம் எழுதி வைத்துள்ளார்

கோவி.கண்ணன் சொன்னது…

//சதுக்க பூதம் said...
பாக்கிஸ்தானில் பெனசிர் பூட்டோ, தனது கட்சியை தன் வீட்டு சொத்து போல் பாவித்து, தனக்கு பிறகு கட்சி தலைமை யாருக்கு என்று உயில் எல்லாம் எழுதி வைத்துள்ளார்
//

பெனாசீர் ரொம்ப தெளிவாகத்தான் இருந்திருக்காங்க !
:)

கோவி.கண்ணன் சொன்னது…

///சீனியர் லீ'யையும் முக'வையும் ஒப்பீடு செய்கிறீர்கள் என்றால் அதைப்பற்றியும்,உங்கள் புரிதலையும் பற்றி சொல்ல ஒன்றுமில்லை,அது மலையையும் மடுவையும் ஒப்பிடுவதற்கொப்பானது !

ஒரு தகவல்-சீனியர் லீ ஆட்சியை விட்டு விலகி 14 ஆண்டுகள் கழித்தே அவரது மகன் வந்திருக்கிறார் !!!
//

அறிவன் சார்,
தமிழகத்தையும் சிங்கப்பூரையும் ஒப்பிடுவதும் மலையையும் மடுவையையும் ஒப்பிடுவது போன்றதுதான். ஒரு நாடு என்ற அளவில் நீங்கள் சிங்கப்பூரை கருதும் பட்சத்தில் உங்கள் கூற்று சரியாக இருக்கலாம். எனக்கு கருத்து இல்லை.

அரசியல்வாதிகள் எல்லோருமே எந்தநாடாக இருந்தாலும் ஏறக்குறைய ஒரே சாதிதான்.
:))

ஜூனியர் லீ 14 ஆண்டுகாலம் அமைச்சராக இருந்தார், 14 ஆண்டுகளுக்கு முன்பு பிரதமர் பதவி ஏற்க அவருக்கு வயதும் அனுபவம் இல்லை.

கோவி.கண்ணன் சொன்னது…

// Calgarysiva said...
கண்ணன்,

//திமுகவை ஆரம்பித்த அறிஞர் அண்ணாவுக்கு வாரிசு இருந்திருந்தால் கலைஞர் திமுக தலைவர் ஆகி இருப்பதற்கான வாய்ப்புகள் குறைவே//

அண்ணாவிற்கு மகன்/மகள் உண்டு. அவரின் பேரன் என் நெருங்கிய தோழர்.

4:40 AM, January 10, 2008
//
சிவா,
அப்படியே இருந்திருந்தாலும், அண்ணாவின் ஆட்சி 2 ஆண்டுகளுக்கும் குறைவே, வாரிசுகள் அரசியலில் வளர்ந்திருக்க வாய்ப்பே இல்லை அதற்கு காரணம் கட்சியும் வளரும் நிலையிலேயே இருந்தது.

லக்கிலுக் சொன்னது…

//அண்ணாவிற்கு மகன்/மகள் உண்டு. அவரின் பேரன் என் நெருங்கிய தோழர்.//

கால்கரி சிவா அவர்களே! வழக்கம்போல தவறான தகவல். பேரறிஞர் அண்ணாவுக்கும், அவரது துணைவியார் ராணி அம்மையாருக்கும் புத்திரபாக்கியம் கிடையாது. அண்ணன் சி.என்.பரிமளம் அவர்கள் பேரறிஞரின் வளர்ப்பு மகன் தான்.

எம்.ஜி.ஆருக்கும் புத்திரபாக்கியம் கிடையாது. ஆனால் அவரது மனைவி வி.என்.ஜானகிக்கு முதல் கணவர் மூலமாக ஒரு மகன் உண்டு. எம்.ஜி.ஆருக்கும் நிறைய வளர்ப்பு மகன்/மகள் உண்டு.

கருப்பன் (A) Sundar சொன்னது…

இதில் ஒரு சுவாரஸ்யமான உண்மை என்னவென்றால், அரசியலுக்கு வரும் இந்த "வாரிசுகள்" பிறந்தநாள் முதல் ஒரு அரசியல்வாதியின் பிள்ளைகளாகவே இருக்கின்றனர் ஆனாலும் திடீரென்று/கொஞ்சம் கொஞசமாக அரசியலில் நுழைந்த தங்கள் தந்தை/தாத்தாக்களை போல திறமையாக இருப்பதில்லை!

இதற்காகவாவது கொஞ்சம் கொஞ்சமாக அல்லது திடீரென்று முன்னேறிய அரசியல்வாதிகளை ஆதரிக்கலாம் :-)

✨முருகு தமிழ் அறிவன்✨ சொன்னது…

///கருணாநிதியின் கயமைத்தனத்தை விளக்கிய பதிவருக்கு,நெடுசெழியனின் கையலாகத்தனம் ஊரறிந்தது.பொதுக்குழுவிலே மூன்றில் ஒரு பங்கு ஆதரவு கூட இல்லாதவருக்கு முதல்வர் பதவியா/////
பொதுக்குழு,செயற்குழு போன்ற பம்மாத்துக்களெல்லாம் காற்றடிக்கும்போது சாயும் நாணல் போன்றவை..
அண்ணா உயிரோடு இருந்து தனக்குப் பின்னால் ஒருவரைத் தீர்மானிக்க வேண்டும் என்ற சூழல் வந்திருந்தால்,அவர் நெடுஞ்செழியனையே முன்னிருத்தியிருப்பார் என்பதே நான் சொல்ல விழைவது.
மற்றபடி திறமை அடிப்படையில்,நிதி நிர்வாக அடிப்படையில் அவர் முக'வை விட மேலானவரே...
முக சாதாரணதிறனாளரை விட நுண்ணியவராக(கயமைத்திறமை என்ற வார்த்தைப் பிரயோகம் பதிவரை துடிக்கச்செய்கிறது போலும்! ஆனால் cunningness க்கு சரியான வார்த்தை அதுவே என நினைக்கிறேன்)
இருந்ததால் அவர் வென்றார்...
///////தமிழகத்தையும் சிங்கப்பூரையும் ஒப்பிடுவதும் மலையையும் மடுவையையும் ஒப்பிடுவது போன்றதுதான்.//////

நான் தனிப்பட்ட மனிதர்களையே ஒப்பிட்டேன்,நாடுகளை அல்ல !

அருண்மொழி சொன்னது…

கோவியாரே,

வாரிசு அரசியலுக்கு உலகில் பல உதாரணங்களை காட்டலாம். அமெரிக்கா முதல் ஆங் சான் சூ கி வரை எவ்வளவோ உண்டு.

இதை பற்றி தெளிவாக India Todayவில் ஒரு கட்டுரை வந்தது. ஒவ்வொரு மாநிலத்திலும் ஒரு குடும்பம். நாடு முழுக்க நேரு குடும்பம். தமிழகத்தில் பல குடும்பங்கள். கேரளாவில் கருணாகரன். ஆந்திராவில் NTR. கர்நாடகாவில் தேவகவுடா, பங்காரப்பா . மகாராஷ்டிரத்தில் தாக்கரே, பவார், மகாஜன் , ஒரிசாவில் பட்நாயக், ஹரியானாவில் தேவிலால் , பஞ்சாபில் பாதல், பீகாரில் லாலு, உபியில் முலாயம். இப்போது சந்திரசேகரின் மகன், சரண்சிங்கின் மகன், ஜெகஜீவன்ராமின் மகள், காஷ்மீரத்தில் ஷேக் அப்துல்லா.

ஆனால் கலைஞர் செய்வது மட்டும் சரியல்ல :-)

Unknown சொன்னது…

அழகாக மு.க வுக்காக வாதாடியுள்ளீர்கள் அடிக்கடி அவருடைய பேட்டிகளை படிப்பீர்கள் போல.
தி.மு.க போல எந்தகட்சியும் உள்கட்சி ஜனநாயகத்தைப்பற்றி பீற்றிக்கொள்வது இல்லை என்பது உங்களுக்குத்தெரியுமா. இந்தியா ஒரு ஜனநாயக நாடு என்று கூறிக்கொண்டு ஒரேகுடும்பம் ஆட்சி செய்துகொண்டு அதுவே தேர்தல் பொருப்பாளர்களை நியமித்து ,அதுவே ஆண்டுக்கொண்டு இருந்தால் அதன் பெயர் ஜனநாயகமா?

அப்படி சொல்லிக்கொண்டு வாரிசு அரசியல் செய்வதும்தான் இப்போது விமர்சனம், கூடவே ஸ்டாலின் பற்றி பெரிய எதிர்ப்பில்லை ஆனால் மு.க வின் மற்ற வாரிசு நடவடுக்கைதான் விமர்சனத்துக்கு உள்ளாகிறது

வாரிசுகளுக்காக மு.க நடந்துகொண்ட விதம்தான் இதில் அவரின் அரசியல் அனுபவத்தையே நகைச்சுவைஆக்குகிறது, மாறன் இறந்த பிறகு வாபஸ் வாங்குவது, கனிமொழி பதவிஏற்பில் பிரதமர் வந்து பொன்னாடை போர்த்தி வாழ்த்த வற்புறுத்துவது இதெல்லாம் தான். மூப்பனார் இருக்கும்வரை வாசனுக்காக எதாவது அரசியலில் நுழைய அனுமதி அளித்ததுண்டா? அந்த பெரும்தன்மை மு.க விடம் ஏன் இல்லை ஏதோ மூப்பனாரே வாசனை வாரிசாக அறிவித்ததுபோல் நீங்கள் எழுதியுள்ளீர்கள், வாரிசு அரசியலை தவிர்கமுடியாதுதான் ஆனால் மு.க போன்ற பழுத்த அரசியல்வாதிகளிடம் சாரசரி அப்பா போன்ற நடவடிக்கைகள்தான் விமர்சனத்துக்கு உள்ளாகின்றன, இதனை சாரசரி வாரிசு அரசியலோடு சம்பந்த படுத்தி நியாயப்படுத்த முடியாது.

இக்பால் சொன்னது…

சரியாக சொல்லியிருக்கிறீர்கள் கோ. வி.
வாரிசு அரசியலுக்கு தெளிவான எடுத்துக்காட்டு ராமதாஸ் தான். தேர்தலை சந்திக்கவிடாமலே தன் மகனை மத்திய அமைச்சராக்கியது. ஆனால் என்னவோ வாரிசு அரசியல் என்றாலே திமுக என்று ஊடகங்களும் பெரிதுபடுத்துகின்றன.

பட்டுக்கோட்டை பாரி.அரசு சொன்னது…

வணக்கம் அறிவன் அய்யா!

ஃஃ
அண்ணா உயிரோடு இருந்து தனக்குப் பின்னால் ஒருவரைத் தீர்மானிக்க வேண்டும் என்ற சூழல் வந்திருந்தால்,அவர் நெடுஞ்செழியனையே முன்னிருத்தியிருப்பார் என்பதே நான் சொல்ல விழைவது.
மற்றபடி திறமை அடிப்படையில்,நிதி நிர்வாக அடிப்படையில் அவர் முக'வை விட மேலானவரே...
ஃஃ

நெடுஞ்செழியன் திறமையானவர் என்று வாதம் செய்திருப்பதற்க்கு, ஒரு சிறிய விளக்கம்...

1. சந்திக்கிற நபர்களை நெடுஞ்செழியனால் நினைவில் வைத்திருக்க இயலாது. ஆனால் மு.க. 40 ஆண்டுகளுக்கு முன்பு சந்தித்த தன் கட்சி தொண்டனையும் நினைவில் வைத்திருக்கிறார்... சந்திக்க சென்றால் பெயர் சொல்லி அழைப்பார்.

2. அவர் பிறந்த பட்டுக்கோட்டை நகர் மக்களுக்கே அவரை யாரென்று தெரியாத அளவுக்கு மக்களிடமிருந்து விலகி, வெறும் மேலிட அரசியலே செய்துக்கொண்டிருந்தார். அவரை கடைசி வரை கட்சி லேபிளில் தான் நிற்க வைத்து தேர்தலில் வெற்றி பெற வைத்தார்கள், தவிர அவருக்கு என்று தனிப்பட்ட மக்கள் செல்வாக்கில்லை. இதை அவரே சொல்லிருக்கிறார்.

3. நாவலரும்,பேராசிரியரும் மிக தீவிரமான தமிழ் ஆராய்ச்சி செய்துக்கொண்டிருந்த காலக்கட்டத்தில்... உள்கட்சி அரசியல் மட்டத்தில் மு.க மிக செல்வாக்கு பெற்று இருந்தார். உள்கட்சி அரசியலில் நாவருக்கோ, பேராசிரியருக்கோ செல்வாக்கு இல்லை.

நெடுஞ்செழியன் கல்வி,கேள்வியில் சிறந்தவராகயிருந்தார், ஆனால் அரசியலுக்கு,கட்சி தலைமைக்கு அது மட்டும் போதாதது... தலைமை பண்பு என்பது அவரிடம் மு.க வை விட ஓப்பீட்டளவில் குறைவாகயிருந்தது.

சரவணகுமரன் சொன்னது…

திமுகவில் ஒரு வாரிசு இரண்டு வாரிசு என்று இருந்தால் அது சாதாரணம். அப்படி இல்லையே... ஸ்டாலின், அழகிரி, கனிமொழி, முரசொலி மாறன், செல்வம், தயாநிதி, ஸ்டாலின் மகன், அழகிரி மகன், கனிமொழி மகன் இப்படி போய்க்கிட்டே இருந்துச்சுனா??? எனக்கு தெரிஞ்சு எந்த கட்சியிலையும் இவ்வளோ குடும்ப உறுப்பினர்கள் அதிகாரத்தில இல்ல...

கால்கரி சிவா சொன்னது…

//புத்திரபாக்கியம் கிடையாது. அண்ணன் சி.என்.பரிமளம் அவர்கள் பேரறிஞரின் வளர்ப்பு மகன் தான்.
//

வழக்கமாக துல்லியமாக தகவல் தரும் லக்கிலுக், வளர்ப்பு மகனாக இருந்தாலும் அவர் வாரிசுதானே. மகன் தானே?

அண்ணாதுரை பொதுமக்கள் நலத்தில் அக்கறைக் கொண்டிருந்தார். கருணாநிதி தாம் பெற்ற மக்கள் நலத்தில் அக்க்றைக் கொண்டிருக்கிறார். அதனால்தான் விமர்சனம்.

தடாகம் சொன்னது…

//இன்றைய எல்லா இந்திய அரசியல் கட்சிகளிலும் வாரிசுகள் வருவது நீங்கள் சொல்வது போல உண்மைதான்,ஆனால் அண்ணா தனக்குப் பிறகு நெடுஞ்செழியனையே அடையாளம் காட்டியதாகவும், முக அவருக்கேயுரிய கயமைத்திறமை-cunningness-யுடன் தான் முதல்வர் பதவியைக் கைப்பற்றினார் என்ற கூற்று உண்டு;இயலுமெனில் அக்காலத்தவரை வினவி தெளிவடையலாம்
//

அறிவன் அவர்களே,

கலைஞரின் திறமையை கயமைத்திறமை-cunningness என்று கொச்சைப்படுத்தாதீர்கள். It should be called as "Shrewdness" or "Smartness" or "Sharpness". எந்த ஒரு தலைவனுக்கு இந்த "S" கள் இல்லையோ...அவன் ஒரு தலைவனே இல்லை. கலைஞர் மெத்த படித்தவர் (learned man). After Anna, the only other person who has had better organisation/administration skills in DMK then was Karunanidhi and even now (not only in DMK). நல்ல பேச்சாளர். எதையுமே நண்கு படித்து தெளிந்து எதிரிகளை தன் பேச்சாற்றலால் சமாளிக்கக் கூடிய திறன் அதிகம். சமயோசிதமாகவும் நகைச்சுவை உண்ர்வோடும் அவர் தன் எதிரிகளுக்கு ப்திலளிக்கும் பாஙகு அவருடைய எதிரிகளையே சிரிக்க வைத்து விடும். நீங்கள் ஒத்துக்கொள்கிறீர்களோ இல்லையோ...இது தான் உண்மை.

நெடுஞ்செழியன் நனகு படித்தவர் தான்...மறுப்பதற்கில்லை. ஒரு தலைவனுக்கான தகுதிகள் அவரிடத்திலே இல்லை. நாம் தான் பார்த்தோமே...அவர் தன் இறுதி நாட்கள் வரையில் ஜெ-விடம் (ஜெ அவரை தன் உதிர்ந்த ரோமத்திற்கு சமம் என்று இழிவாக பேசிய பிறகும் கூட) இருந்ததை...

என்னுடைய வருத்தமெல்லாம் கலைஞருக்கு பிறகு அவரளவுக்கு திறமை கொண்ட வேறொருவர் த்மிழர்களுக்கு இல்லையென்பதே.

✨முருகு தமிழ் அறிவன்✨ சொன்னது…

///////கலைஞரின் திறமையை கயமைத்திறமை-cunningness என்று கொச்சைப்படுத்தாதீர்கள். It should be called as "Shrewdness" or "Smartness" or "Sharpness". எந்த ஒரு தலைவனுக்கு இந்த "S" கள் இல்லையோ...அவன் ஒரு தலைவனே இல்லை. கலைஞர் மெத்த படித்தவர் (learned man). After Anna, the only other person who has had better organisation/administration skills in DMK then was Karunanidhi and even now /////////
நீங்கள் சொன்ன சொற்களெல்லாம் ஒருவரின் திறமைகளை நன்னோக்கில் பயன்படுத்துவாருக்கே பொருந்தும்.
நீங்கள் சொன்ன எல்லாத் திறனும் முக.வுக்கு உண்டு,ஆனால்...
ஆனால் 60 களின் இறுதியிலிருந்து தன் அத்தனை திறமைகளையையும் தன் குடும்ப முன்னேற்றத்துக்கு மட்டுமே பயன்படுத்தியவர் அவர்.
அதை அவர் உங்களையும் என்னையும் போல தனியனாக உழைத்து குடும்ப முன்னேற்றத்துக்கு பயன்படுத்தினால் யாரும் குறை சொல்லப்போவதில்லை;சொல்லப்போனால் பாராட்டுவோம் ! ஏனெனில் நாம் அனைவரும் அதைத்தான் செய்கிறோம்.
ஆனால் அவர் ஒரு நாட்டின் தலைவனாக,நாட்டின் பொதுப் பணத்தைக் கையாளும் ஒரு பொறுப்பில் இருந்து கொண்டு அந்த பொறுப்பு தரும் அனுகூலங்கள்,சௌகர்யங்கள் அனைத்தையும் சுயலாபத்திற்கே,தன் குடும்பத்திற்கே பயன்படுத்தியவர்,இன்னும் பலகாலம் அவ்வாறு பயன்படவேண்டும் என்ற நோக்கில் காய்நகர்த்தி வருகிறார்.
அது கயமை அன்றி தொண்டு என்று நீங்கள் சொன்னால்,உங்களைப் போன்றவர்களைப் பார்த்து பரிதாபப்படுவதைத் தவிர வேறு வழியில்லை,ஏனெனில் இவ்வளவு கண்மூடித்தனமாக தன்னை நம்பும் ஒரு பெரும் கூட்டத்தவர் வாழும் நாட்டில் அவர் தன் தலைமைப் பண்புகள் மற்றும் சிறப்புகளாக நீங்கள் கூறும் தன்மைகளால் எந்த ஒரு வியக்கத்தக்க மாற்றமும் கொண்டுவரவில்லை என்பதால் !!!
கனிமொழி கூட ஒரு பேட்டியில் கூறி இருந்தார்,அப்பாவை இவ்வளவு நம்பிக்கையுடன் மக்கள் எதிர்நோக்குவதைப் பார்த்து வியப்பும் பயமுமேற்பட்டதென...ஆனால் அவரும்(கூட) சில நாட்களில் தன் தந்தையின் காலணிகளுக்குக் கச்சிதமாக இருப்பாரெனவே தோன்றுகிறது !
தான் உரையெழுதிய திருக்குறளின் கருத்துக்களில் அவர் 25 சதமாவது தன் ஆட்சிப் பண்புகளில் கடைப்பிடித்திருந்தால் தமிழகம் எங்கோ இருக்கும் !
அவரது நிர்வாகத் திறமைகளை அவர் அளிக்கும் பொருளாதார ஆண்டறிக்கைகளையும்,உலகளாவிய பொருளாதார வல்லுனர்கள் தமிழகத்தின் பொருண்மைத் திறனைப்-financial prudence- பற்றி அளிக்கும் கருத்துக்களையும் தேடி அறிந்தால் புரியும் !!!!!!
திறன்மிக்க சுயநலமிகள்,திருடர்கள் இருப்பதைக் காட்டிலும்,அவ்வளவு திறமற்ற நேர்மையாளர்களே நாட்டின் தலைமைப் பொறுப்பில் இருக்கலாம்,அவர்கள் திறனாளர்களைக் கொண்டு நாட்டை வழிநடத்திச் செல்லலாம்...
இதைத்தான் படித்தவன் சூதும் வாதும் செய்தால் ஐயோ,ஐயோவெனப் போவான் என்றான் பாரதி....

✨முருகு தமிழ் அறிவன்✨ சொன்னது…

///////நெடுஞ்செழியன் கல்வி,கேள்வியில் சிறந்தவராகயிருந்தார், ஆனால் அரசியலுக்கு,கட்சி தலைமைக்கு அது மட்டும் போதாதது... தலைமை பண்பு என்பது அவரிடம் மு.க வை விட ஓப்பீட்டளவில் குறைவாகயிருந்தது.////////

ஆனால் முக.விட நெடுஞ்செழியனிடம் நேர்மை இருந்தது.
இன்றைய ஆட்சியாளர்களுக்கு முதல் தேவை நேர்மை மட்டுமே !

தடாகம் சொன்னது…

//நீங்கள் சொன்ன சொற்களெல்லாம் ஒருவரின் திறமைகளை நன்னோக்கில் பயன்படுத்துவாருக்கே பொருந்தும். நீங்கள் சொன்ன எல்லாத் திறனும் முக.வுக்கு உண்டு,ஆனால்...
ஆனால் 60 களின் இறுதியிலிருந்து தன் அத்தனை திறமைகளையையும் தன் குடும்ப முன்னேற்றத்துக்கு மட்டுமே பயன்படுத்தியவர் அவர்.//

அட என்ன அறிவன் சார், இப்படி சொல்லிட்டீங்க....நீங்கள் உங்கள் தளத்தில் இருந்து உங்களுக்கு ஒவ்வாத எதையும் பார்த்தால் எதுவுமே சரியாகப் படாது. கொஞ்சம் இறங்கி வந்து ஒரு சாமான்யனியன் தளத்திலிருந்து எதையும் பார்க்கப் பழகி கொள்ளுங்கள். அப்போது எல்லாமே எளிதில் புலப்படும். இதை நான் சொல்லித்தான் உங்களுக்கு தெரியவேண்டும் என்பதில்லை.

கலைஞர் என்ன செய்தார் என்று முன்னாள் அ.தி.மு.க கட்சி அவைத் தலைவராக இருந்த (தற்போது தி.மு.கவிலிருக்கும்) க.சுப்புவின் பேட்டியை தேடிப் படித்துப் பாருங்கள். இந்த திராவிட சிங்கங்கள் அன்று போராடியிருக்கவில்லையென்றால் இன்று இந்த சமூகம் சுயமரியாதையுடன் வாழ்ந்திருக்க இயலாது. இன்றைக்கு தொழில் துறையிலே தமிழகம் ஒரு முன்னோடி மாநிலமாக இருக்கின்றதென்றால் அந்த பெருமை கலைஞரையே சாரும், காமராஜருக்குப் பிறகு. இதற்கு முந்தைய அவரின் ஆட்சியிலே அவர் கொண்டு வந்த உழவர் சந்தை திட்டம் எவ்வளவு அருமையான திட்டம் என்று ஒவ்வொரு விவசாயியையும் நீங்கள் கேட்டு பார்த்தால் தான் தெரியும். இத்திட்டத்தை பின்பு ஆட்சிக்கு வந்த ஜெயலலிதா அதனின் அருமை தெரியாமல் அத்திட்டதை தூக்கி கிடாசிவிட்டார். கொடுமையிலும் கொடுமை சார் அது. மேலும் கலைஞரின் முந்தைய ஆட்சியிலே போக்குவ்ரத்து வசதியில்லாத ஒவ்வொரு குக்கிராமத்திற்கும் சிறிய பேருநது வசதியை (mini bus service) கொண்டு வ்ந்தார். அதனின் அருமை கிராமப்புற மக்களுக்குத் தான் தெரியும். மேல் தட்டு மக்களுக்குத் தெரிய வாய்ப்பில்லை. ஏனென்றால் பின்னர் ஆட்சிக்கு வந்த, முதல்வரான் ஜெயலலிதாவுக்கே தெரியவில்லையே. ஏட்டிக்குப் போட்டியாக அதையும் தூக்கி கிடானார். இன்னொரு கொடுமையிலும் கொடுமை சார் அது.

இப்பொழுதும் அவர் செய்ய துடிக்கின்ற "சேதுசமுத்திர" திட்டத்தை தடுக்க ஒரு கயவர் கூட்டமே கங்கனங்கட்டிக் கொண்டு அலைகிண்றது. விந்தையென்னவென்றால் அதே கயவர் கூட்டம் தான் ஆட்சியிலிருந்தபோது அதற்கு ஒப்புதல் அளித்தது. தற்போதைய ஆட்சியில் அவரின் சென்னை துணை நகரத் திட்டம் நல்ல தொலைநோக்கு பார்வை கொண்டத் திட்டம். இது சாத்தியப்படும் என்று நினைக்கிறேன். பொறுத்திருந்து பார்ப்போம். மேலும், தமிழகத்தில் உள்ள ஐந்து முக்கிய நகரங்களான (சென்னையை தவிர்த்து) மதுரை, கோவை, நெல்லை, திருச்சி, சேலம் ஆகியவை தகவல் தொழிற்நுட்ப நகரங்களாக மாறிவ்ருகின்றன.

மேலும் எங்கே முழுவதுமாக அவரை ஆட்சி செய்யவிட்டார்கள். ஒவ்வொரு முறையும் அவர் ஆட்சிக்கு வந்தவுடன் கிலிப் பிடித்த கயவர்கள் ஏதாவதொரு காரணத்தை சொல்லி ஆட்சி கலைப்பை அரங்கேற்றி விடுகிறார்கள் சட்ட ஒழுங்கை நிலைநாட்டுகிறோம் என்ற போர்வையில் சனநாயகப் படுகொலை செய்தார்கள்..


எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலைதாவின் தலைமயில், அ.தி.முக.வின் 23 வருட ஆட்சியினால் தமிழகத்திற்கு எந்த நண்மையும் கிடைக்கவில்லை. மாறாக தமிழகம் மிகவும் பின்தங்கிப் போனது. கிட்டத்தட்ட ஒரு generation காலம் வீனாய் போனது. It was attrocious. தமிழ்நாட்டுக்கு வந்த சாபக்கேடு. என்ன செய்வது ?


கலைஞர் செய்தால் குற்றம், நேரு குடும்பம் செய்தால் குற்றமில்லை. என்னையா நியாயம் இது? சோனியா காந்தி யாரையா? அவரை காங்கிரஸ் தலைவராக ஏற்றுக்கொள்ளவில்லை இத்தேச மக்கள். பிரதமராக முயன்றார். ஒரு நல்ல குடியரசு தலைவர் இருந்ததால் முடியவில்லை. அவ்விடத்திலே வேறொருவர் இருந்திருந்தால் ராஜீவின் மனைவி என்பதற்காகவே அவரை பிரதமராக்கியிருப்பார்கள். இப்போதும் கூட ஒரு சரியான தருனத்துக்காக காத்திருக்கிறார்கள் அவரை பிரதமராக்குவதற்கு. அவரை விடுங்கள். இந்த விடுத்தான் (எங்கப் ஊரு பக்கம் நேத்துப் பிறந்த பசங்களை இப்படித் தான் அழைப்பார்கள்) ராகுல் காந்தி, ஒரு பத்திரிக்கை பேட்டியிலே சொல்கிறார். நான் நினைத்திருந்தால் இந்திய நாட்டின் பிரதமராக ஆகியிருக்க முடியும் என்று. என்ன எகத்தாளம் பாருங்கள் அவருக்கு? என்ன அனுபவம் அவருக்கு இருக்கிறது? அப்படியே ஆனாலும் கூட, அவரை தலையில் தூக்கி வைத்து ஆஹா..ஓஹோ வென்று கொண்டாடுவதற்கு இங்கே ஒரு கூட்டமே அலைகின்றது. அது உங்களுக்கும் தெரியும், எனக்கும் தெரியும்.

//இதைத்தான் படித்தவன் சூதும் வாதும் செய்தால் ஐயோ, ஐயோவெனப் போவான் என்றான் பாரதி....//

சரியாகச் சொன்னீர்கள். இது நேரு குடும்பத்துக்கே சாலப் பொருந்தும். கலைஞருக்கு அல்ல.

கோவை சிபி சொன்னது…

//பொதுக்குழு,செயற்குழு போன்ற பம்மாத்துக்களெல்லாம் காற்றடிக்கும்போது சாயும் நாணல் போன்றவை..//
நல்லது.அந்த காற்றின் திசையையும்,வேகத்தையும் தீர்மாணிப்பது யாருங்க.

பட்டுக்கோட்டை பாரி.அரசு சொன்னது…

//
ஆனால் முக.விட நெடுஞ்செழியனிடம் நேர்மை இருந்தது.
இன்றைய ஆட்சியாளர்களுக்கு முதல் தேவை நேர்மை மட்டுமே !
//

என்ன அறிவன் அய்யா? 1991-96 வரை தமிழகத்தின் நிதியமைச்சர் திரு.நெடுஞ்செழியன் தானே:)

வரலாறு காணாத அளவில் அருவியில் பணம் கொட்டப்பட்டது. வைக்கோல் போரில் வைத்து பணமூட்டைகள் கொழுத்தப்பட்டது எல்லாம் நெடுஞ்செழியன் நிதியமைச்சராக இருந்த போது கொள்ளையடிக்கப்பட்ட பணம். அவருடைய நேர்மையை பற்றி அவ்வளவு தெளிவா சொல்லுறீங்க :)

அப்புறம் அவருடைய குடும்பத்தின் தற்போதைய சொத்து மதிப்பு அவருடைய உறவினர்களின் சொத்து மதிப்பு தெரியுமா!

மு.க. வின் குடும்பத்தினர் அனைவரும் முதலீட்டை பயன்படுத்தி தொழில் தொடங்கி முன்னேறியவர்கள். அதில் உருப்படாம போனது மு.க.முத்து. கலைஞர் கைக்கொடுத்தார் அவ்வளவுதான் யாரையும் முழுவதும் அரசு பணத்தில் கொள்ளையடித்து வாழச்சொல்லவில்லை. ஒவ்வொருவரையும் ஒவ்வொரு துறையில் முன்னேறியிருக்கிறார்கள்.

நெடுஞ்செழியன் குடும்பத்தினர் என்ன தொழில் செய்கிறார்கள் ஏது இவ்வளவு சொத்து? அட அவரை விடுங்க அவரோட உறவினர் ஒருவர் பட்டுக்கோட்டையில் இருக்கிறார். எனக்கு தெரிந்த 20 வருடமாக சும்மாவேயிருக்கிறார். ஆனால் ஆண்டுதோறும் பல லட்சம் செலவுச்செய்து கம்பன்விழா நடத்துகிறார். இது எப்படியிங்க சாத்தியம்! நீங்க சும்மா சொல்லுங்களேன்?

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்