சுப்பையா ஐயாவிற்கு நான் கோவை வந்துவிட்டதைத் தெரிவித்து.. அவரைப் பார்க்க காந்திபுரம் நோக்கி நானும் சிபியாரும் சென்று கொண்டிருந்தோம்
கோவை செல்வது இது முதல் தடவை இல்லை என்றாலும் சிறுவயதில் மருதமலைக் கோவிலுக்கு கோவை வழி சென்றது என்ற அளவில் கோவை மண் ஏற்கனவே அறிமுகமானது தான். ஆனால் அதிக அளவில் நினைவில் வைத்துக் கொள்ளும் அளவுக்கு அந்த வயதில் கோவையைப் பற்றிய எண்ணங்கள் எதுவும் இல்லை. எனவே கோவையின் 'சில்'லென்ற காற்று புத்துணர்வு அளிக்கும் போது கோவை புதிய அனுபவமாகவே இருந்தது.
சென்ற நேரம் இரவு 10:30க்கு மேல் என்பதால் கோவையின் இயல்பழகை தரிசிக்கும் வாய்ப்பு கிட்டவில்லை... என்றெல்லாம் யோசித்தபடியும், சிபியாருடன் பேசியபடியே காந்திபுரம் பேருந்து நிலையத்தை நோக்கி பைக்கில் பயணித்தேன். 5 நிமிட பயணத்திற்கு பின் தானியங்கி பணமெடுக்கும் இயந்திரத்தின் (atm) முன்பு பைக்கை நிறுத்திவிட்டு சிபி உள்ளே சென்றார்... நான் வெளியில் நின்று கொண்டிருந்தேன். மெல்லிய காற்று கூடவே மல்லிகை நறுமணம், ஜல்ஜல் கொலுசு ஒலி ... இந்த நேரத்தில் ? யார் அது ? என்று கேட்பதற்கு முன் ... 'ஹாய் கோவி, நான் தான் ஆவி அம்மணி !, வருக வருக !' என்றது. குளிரில் வியர்த்தாலும்... பழக்கப்பட்டது தானே என்று புரிந்து கொண்டு... 'நீ எப்படி இங்கே ?' என்று கேட்டேன். 'நான் கோவையில் தான் இருக்கிறேன், சிபியாரிடம் இதுபற்றி கேட்காதீர்கள், அவருக்கே தெரியாது' என்று பை பை சொல்லி மறைந்தது. அதற்குள் சிபியார் வந்துவிட்டார்.
மீண்டும் காந்திபுரம் நோக்கிய பயணத்தில். எனக்குப் பின் எவரோ உட்கார்ந்திருப்பது போன்ற உணர்வு, முதுகில் செல்லமாக தட்டியது போல இருந்தது. காதுக்குள் மெல்லியதாக கிசுகிசுப்பில் 'ஹலோ ! கோவி.. நான் தான் ஆவி அண்ணாச்சி ... நானும் இங்கதான் இருக்கேன்...இரவில் மட்டும் சிபியாருக்கு தெரியாமல் பைக்கில் உட்கார்ந்திருப்பேன். நீங்கள் கவனிக்காமல் என்மீது உட்கார்ந்து இருக்கிறீர்கள். என்றது குரல். 'ஆகா ! நல்லா மாட்டிக் கிட்டேனே...' என்று நினைத்துக் கொண்டிருக்கும் போது காந்திபுரம் பேருந்து நிலையத்தை அடைந்து வாத்தியார் ஐயாவைப் பார்த்தோம்.
சுப்பையா ஐயா பார்ப்பதற்கு வாத்தியார் போலவே இருந்தார்... இருவருக்கும் கைகுலுக்கினார். அருகில் இருந்த உணவு விடுதிக்குள் (ஓட்டல்) சென்றோம். சிறிய ஆஞ்சநேயர் லாமினேடட் படம் கொடுத்து... 'இதைப் பாருங்கள் நாமக்கல் ஆஞ்சநேயர், உங்களுக்கென்றே ... எடுத்து வந்தேன் ... இது உங்கள் அப்பாவுக்கு' என்று இன்னும் சில படங்களையும் கொடுத்தார். சிபியாரிடம் சில படங்களையும், ஒரு புத்தகத்தையும் கொடுத்தார். எனக்கு ஒன்றும் புரியவில்லை. நாமக்கல் ஆஞ்சநேயருக்கும் எனக்கும் என்ன சம்பந்தம், அப்பாவுக்கு என்று சொல்லி வேறு சில படங்களையும், கொடுக்கிறாரே' என்று கொஞ்சம் ஆழ்ந்து சிந்தித்தபோது 'பளிச்' என்று எண்ணம் தோன்றியது.[புரிந்தது]
'சிபியாரே.... உங்களை கோவி.கண்ணன் என்றும் ... என்னை சிபி என்றும் நினைத்துக் கொடுக்கிறார் என்றேன்'. [அப்போது] உடனே இருவரும் சிரித்தோம். அவருக்கு அப்போதுதான் புரிந்தது ஆளை மாற்றி நினைத்துக் கொண்டிருந்தது. இதில் என்ன தமாஷ் என்றால், அவரும், சிபியும் ஏற்கனவே நேரடியாக சந்தித்து இருக்கின்றனர். சிபியாரின் திடீர் தொப்பையின் ஏகபோக வளர்ச்சியால் வாத்தியாருக்கு குழப்பம் ஏற்பட்டு இருக்க வேண்டும்.
அதன் பிறகு எல்லோரும் சிரித்து இயல்புக்கு (நிதானத்துக்கு) வந்தோம். எனக்கு மசால் தோசை.. சிபிக்கு பூரி .. வாத்தியார் ஐயாவுக்கு காஃபி சொல்லி சாப்பிட்டுக் கொண்டே பேசினோம்.
வாத்தியார் ஐயா பேசிக் கொண்டிருந்தால் நாம் கேட்டுக் கொண்டே... கேட்டுக் கொண்டே இருக்கலாம்.. சொற்பொழிவு போன்ற மடைதிறந்த பேச்சு... வலையுலகில் எழுத ஆரம்பிக்கும் முன் சிற்றிதழ்களில் எழுதிய அனுபவம்... கண்ணதாசன் நண்பர் மற்றும் கண்ணதாசனின் குருவுடன் ஏற்பட்ட பழக்கம் ... தமிழ்வாணன் பற்றிய தகவல் பகிர்வு ... என சொல்லிக் கொண்டே வந்தார்... ஒரு மணி நேர சந்திப்பில் ... பதிவுலகின் செயல்பாடுகள் பற்றி குறிப்பிட்டார்... எவையெல்லாம் தவிர்த்தால் ... பதிவுலகம் முன்னேற்ற பாதையில் பயனுற அமையும் என்று தற்போதைய கறைகள் பற்றி அக்கறைகளை வாத்தியாருக்கே உரிய பாணியில் சொன்னார். துடிப்புள்ள இளைஞராக அவரது பேச்சும் நடவடிக்கையும் இருந்தது.
அன்றைய இனிய நல்லிரவு .... நடு இரவு நேரம் நெருங்கவே, வாத்தியார்.... 'கோவையில் இன்றிரவு தங்கிவிட்டு... பார்க்க வேண்டிய இடங்கள் நிறைய இருக்கிறது பார்த்துவிட்டுச் செல்லுங்களேன்' என்றார்... கால அவகாசம் அதிகம் இல்லை என்பதால் ... அடுத்த முறை குடும்பத்துடன் வந்து கோவையை ரசிக்கிறேன் என்று சொன்னேன். பின்பு அவர் விடை பெறுவதாக சொல்ல ... சிறிய நிழற்பட நிகழ்விற்குப் (வைபவத்திற்கு) பிறகு விடை பெற்றார்.
சிபியாரும் நானும் இருந்தோம்... சென்னைக்கு செல்லும் பேருந்து தேடி பேருந்து நிலையத்துக்கு வந்தோம்.
தொடரும்...
15 கருத்துகள்:
நல்லவர்களைச் சந்தித்ததை நல்லவிதமாகச் சொல்லியிருக்கிறீர்கள்!
நல்லபடியா போகுது!
நல்லா இருங்க!
:))
GK,
Nice to read!!
Good!
//சிபியும் ஏற்கனவே நேரடியாக சந்தித்து இருக்கின்றனர். சிபியாரின் திடீர் தொப்பையின் ஏகபோக வளர்ச்சியால் வாத்தியாருக்கு குழப்பம் ஏற்பட்டு இருக்க வேண்டும்.//
எனக்கு இன்னும்கூட அந்த சந்தேகம் இருக்கிறது!
அன்று உங்களுடன் வந்தது உண்மையிலேயே சிபிதானா அல்லது ஆவியுலக அண்ணாச்சியா?
ஏனென்றால் நான் முதன் முதலில் சந்தித்துப்பேசிய சிபி ஷாருக்கான் போல இருந்தார். இவர் ஜூனியர் பாலையா போல அல்லவா இருந்தார்
வந்த இடத்தில் கேட்கக்கூடாதென்று கேட்கவில்லை!:-))))
ஆவி அண்ணாச்சி, ஆவி அம்மணி, சிபி, ஒரே திகில் பயணமா இல்ல இருக்கு!
சுப்பையா வாத்தியார் உங்க ரெண்டு பேரையும் குழப்பிக் கொண்டதைக் கேள்விப்பட்டேன்.. நல்ல காமெடி :)
இப்போ பதிவெழுதுவது யாரு? கோவியா சிபியா? :))))
கோவியாரே பயணக்கட்டுரை அருமை,
போன வாரம் நான் கோவையில் தான் இருந்தேன், தாங்கள் வந்தது எப்போது? உங்களை சந்திக்க முடியாமை வருத்தமளிக்கின்றது,:(((
கோவைப் பதிவர்களிடம் தொடர்பில் இருக்க விரும்புகிறேன், வாத்தியார் ஐயா மற்றும் சிபி அண்ணாச்சி உங்களின் கைத்தொலைபேசி எண்ணைத் தயவு செய்து எனக்கு தனிமடலிடவும்.கோவையில் இருக்கும் மற்ற அன்பு வலைப்பதிவர்களும் தயவு செய்து மடலிடவும்( எவ்வள்வு பெரிய ஒரு வாய்ப்பை தவறவிட்டு விட்டேன்!:((()
கோவையில் ஒரு வலைப் பதிவர்கள் மாநாடு நடத்தலாம் தானே? சிபியாரும் ஆசிரியரும் ஆவணம்செய்வார்களா?
//சிபியாரின் திடீர் தொப்பையின் ஏகபோக வளர்ச்சியால் வாத்தியாருக்கு குழப்பம் ஏற்பட்டு இருக்க வேண்டும்.
//
:)))))))))
அன்புடன்...
சரவணன்.
/உங்கள் நண்பன் said... கோவைப் பதிவர்களிடம் தொடர்பில் இருக்க விரும்புகிறேன், வாத்தியார் ஐயா மற்றும் சிபி அண்ணாச்சி உங்களின் கைத்தொலைபேசி எண்ணைத் தயவு செய்து எனக்கு தனிமடலிடவும்.கோவையில் இருக்கும் மற்ற அன்பு வலைப்பதிவர்களும் தயவு செய்து மடலிடவும்( எவ்வள்வு பெரிய ஒரு வாய்ப்பை தவறவிட்டு விட்டேன்!:((()//
சரா,
நான் பிப் 20 ஆம் தேதி இரவு 10:30 மணிக்கு கோவை வந்தேன். முன்கூட்டியே சிபியாரிடம் தெரிவித்தேன். நீங்கள் கோவைகாரர் என்று தெரியாது தெரிந்திருந்தால் தொடர்பு கொண்டிருந்திருப்பேன். அங்கு இருந்தது வெறும் 2 மணி நேரம் தான். அடுத்த முறை வரும் போது உறுதியாக சந்திப்போம்.
:)
மேலும் முந்தைய பதிவுகளில் யார் யாரெல்லாம் சந்தித்தேன் என்று தெரிவித்து உள்ளேன். இன்னும் எழுத இருக்கிறது 2 பதிவு செய்திகள்.
// SK said...
நல்லவர்களைச் சந்தித்ததை நல்லவிதமாகச் சொல்லியிருக்கிறீர்கள்!
நல்லபடியா போகுது!
நல்லா இருங்க!
:))
//
எஸ்கே ஐயா,
நல்லவற்றை சந்திப்பதில் நடுக்கமில்லை.
:)))
//சிவபாலன் said...
GK,
Nice to read!!
Good!
//
சிபா,
நன்றி !
//SP.VR.சுப்பையா said... அன்று உங்களுடன் வந்தது உண்மையிலேயே சிபிதானா அல்லது ஆவியுலக அண்ணாச்சியா?//
ஐயா,
சிபிதான் ஐயா,
ஆவி உலகைப் பற்றி அவருக்கு ஒன்றும் தெரியாது.
:)
//பொன்ஸ் said...
ஆவி அண்ணாச்சி, ஆவி அம்மணி, சிபி, ஒரே திகில் பயணமா இல்ல இருக்கு!
சுப்பையா வாத்தியார் உங்க ரெண்டு பேரையும் குழப்பிக் கொண்டதைக் கேள்விப்பட்டேன்.. நல்ல காமெடி :)
இப்போ பதிவெழுதுவது யாரு? கோவியா சிபியா? :))))
//
பொன்ஸ்,
உண்மையிலேயே திகில் பயணம்தான். ஆவிகளுடன் நெருக்கமாக இருந்ததால் பயம் இல்லை.
எதுக்கும் கோவை பக்கம் சென்றால் எச்சரிக்கையாக இருங்க.
:)
ஞானவெட்டியார், சிபி,சுப்பையா வாத்தியார்ன்னு அருமையானவர்களைச் சந்திச்சு இருக்கீங்க.
பயணக்கட்டுரையும் அருமையா இருக்குங்க.
//துளசி கோபால் said...
ஞானவெட்டியார், சிபி,சுப்பையா வாத்தியார்ன்னு அருமையானவர்களைச் சந்திச்சு இருக்கீங்க.
பயணக்கட்டுரையும் அருமையா இருக்குங்க.
//
துளசியம்மா,
உங்களை சிங்கையில் சந்தித்தது பற்றி எழுதி வைத்திருந்தேன். நண்பர் வடுவூரார் நாம் சந்தித்துப் பேசியதை சிறப்பாக எழுதிவிட்டதால் என்னுடைய அந்த பதிவு Draft ல் தூங்குது. :(
அனைத்துப் பதிவையும் படித்துப் பாராட்டுவதற்கு நன்றிம்மா.
பயணக்கட்டுரை ஆவிகள் அச்சுறுத்தலுடன் சிறப்பாக இருக்கிறது.
//ஏனென்றால் நான் முதன் முதலில் சந்தித்துப்பேசிய சிபி ஷாருக்கான் போல இருந்தார். இவர் ஜூனியர் பாலையா போல அல்லவா இருந்தார்
வந்த இடத்தில் கேட்கக்கூடாதென்று கேட்கவில்லை//
முதல் சந்திப்பிலேயே வேறொருவரைத்தான் சிபி என்று நினைத்திருக்கிறார். அநேகமாக குமரன் எண்ணம் செந்திலைத்தான் சிபி என்று நினைத்திருப்பார் போலும்.
"போன முறை ஜீன்ஸ் அணிந்து வந்திருந்தீர்களே" என்று கேட்டார்.
ஐயா அவர்களுக்கு ஒரு தகவல். நான் ஜீன்ஸ் அணிவதே இல்லை!
// நாமக்கல் சிபி said...
முதல் சந்திப்பிலேயே வேறொருவரைத்தான் சிபி என்று நினைத்திருக்கிறார். அநேகமாக குமரன் எண்ணம் செந்திலைத்தான் சிபி என்று நினைத்திருப்பார் போலும்.
"போன முறை ஜீன்ஸ் அணிந்து வந்திருந்தீர்களே" என்று கேட்டார்.
ஐயா அவர்களுக்கு ஒரு தகவல். நான் ஜீன்ஸ் அணிவதே இல்லை!
//
சிபி,
ஒருவேளை சுப்பையா ஐயாவை ஆவி அண்ணாச்சி சந்தித்து இருப்பாரோ ?
:))))
கருத்துரையிடுக