பின்பற்றுபவர்கள்

8 மார்ச், 2007

சுற்றிச் சுற்றி வந்தேங்க - சென்னை 2

சிங்கையில் இருந்து கிளம்பும் முன் நண்பர் குழலியிடம் சென்னை வலைப்பதிவாளர்கள் தொடர்பு எண்கள் கேட்டிருந்தேன். பாலபாரதியின் எண்ணைக் கொடுத்து ... 'எப்போதும் வலை நண்பர்களின் தொடர்பில் இருக்கும் பாலபாரதியைப் பார்த்தீர்கள் என்றால் அவர் அங்கிருக்கும் நண்பர்களை சந்திக்க உதவுவார்' அதன் படியே முதலில் பாலபாரதியை சந்திப்போம் என்று வித்தலோகா சென்றேன். ஏற்கனவே நண்பர் குழலி என் நிழல்படம் அவரது நிழல்படக் கருவி மூலம் காட்டி இருந்தார் எனவே பாலபாராதி வித்தலோகா கடையின் கண்ணாடி தடுப்பு சுவருக்கு பின் இருந்தே என்னை அடையாளம் கண்டு கொண்டு கை அசைத்தார்.

உள்ளே சென்றேன்... மற்ற நண்பர்கள் போலவே தழுவி ... கைகுலுக்கி கொண்டோம். அவர் நல்ல உயரம் ... உயரத்துக்கேற்ற உடல் வாகு ... எதற்கும் கவலைப்படாமல் எல்லாவற்றையும் சந்திக்க முடியும் என்பது போன்ற முக உணர்வுகள் ... உண்மையிலும் இளைஞர். புத்தகக் கடையில் உள்ள புத்தகங்களைக் காட்டினார். வலையுலகை அறியாத என் நண்பர் சுஜாதாவின் நாவல்களை வாங்கினார். எனக்கு பாலபாராதியே புத்தகங்களைத் தேர்வு செய்து கொடுத்தார். 'தெரிந்தவர்களுக்கு தள்ளுபடி இல்லையா ?' என்றேன். 'அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை' எனச் சொல்ல ... புத்தகங்களில் இருந்த விலைப்பட்டியல் படி ரசீதுக்கு பணம் கொடுத்துப் பெற்றுக் கொண்டேன்.

'மற்ற வலைபதிவு நண்பர்களுக்கு தொலைபேசியில் தெரிவித்து நாளை பகல் உணவுக்கு வரச் சொல்கிறேன், நாளை பிற்பகல் 1 மணிக்கு வந்துவிடுங்கள் ' என்றார். சரி என்று சொல்லிவிட்டு அங்கிருந்து நானும் என் நண்பரும் மாலை 6 மணிக்குக் கிளம்பினோம். பின்பு தேவி காம்ளெக்ஸ் சென்று 7 மணி காட்சி 'தீபாவளி' படத்துக்கு 2 சீட்டுக்கள் பெற்றுக் கொண்டு ... படத்திற்கு நேரம் இருந்ததால் ஹக்கின் பாதாம்ஸ் சென்று எதாவது புத்தகங்கள் வாங்கலாம் என்று அங்கு சென்றேன். 'மறைந்து போன தமிழ் நூல்கள்' - மயிலை சீனி. வெங்கடசாமி எழுதிய புத்தகம் ஒன்று வாங்கிக் கொண்டேன். பின்பு மாலை 7 மணியை நெருங்க தீபாவளி படம் பார்த்துவிட்டு வீட்டுக்குச் செல்ல அன்றைய நாள் முடிந்தது.

மறுநாள் 22 பெப் 2007 அன்று வேறொரு நண்பரை அழைத்து பகல் 12:50க்கு வித்தலோக சென்றேன். பாலபாரதியுடன் பேசிக் கொண்டு இருக்கும் போது முதலில் வந்தவர் எனக்கு அறிமுகம் இல்லாதவர். பாலபாரதி அறிமுகப் படுத்தினார். இவர் 'தங்கவேலு' புளியமரம் என்ற பெயரில் பதிவு வைத்திருப்பவர் என்றார். பதிவின் பெயரைக் கேட்டதும் எனக்கு நினைவு வந்தது ... 'நான் தந்தையான போது' என அந்த பதிவில் எழுதப்பட்ட ஒரு இடுகை. மிக நல்ல கட்டுரை ... என்று சொல்வதைவிட ... நிகழ்வைப் பற்றி இயல்பாகவும் நெகழ்வாகவும் எழுதப்பட்ட ஒரு இடுகை. அந்த இடுகை நினைவு வந்ததும் ... அந்த இடுகையை எழுதியவர் இவர் என்று தெரிந்து கொண்டு அது குறித்துப் பாராட்டிப் பேசினேன். எனது இடுகைகளையும் படித்துவருவதாக சொன்னார்.

சிறிது நேரத்தில் மின்னலாக எங்கிருந்தோ வந்து சேர்ந்தார் வலைப்பூ சுனாமி என்ற அழைக்கப்படும் லக்கி லுக். அழகான லுக் ... அதிர்ஷ்ட பார்வை என்பது பொருத்தமான பெயர். நம் பக்கத்து வீட்டுப் பையன் போல எளிதில் கவரும் ...மிகச் சாதாரண தோற்றம். இயல்பாக சென்னை மொழியில் பேசும் அவரைப் பார்க்க வியப்பாக இருந்தது. அவர் இருக்கும் இடம் களைகட்டும் என்பது மிகை அல்ல. மிக அருகில் மணி அடித்ததும் அனைவரும் திரும்பிப் பார்க்க யானைத் தலைவி வந்தாங்க ... அதாவது பா.க.ச மகளீர் அணித் தலைவி பொன்ஸ் (பூரணா) தன்னுடைய வாகனத்தில் வந்து இறங்கினாங்க. ஒருவருக்கொருவர் (பரஸ்பர) வணக்கம் தெரித்துவிட்டு. நன்பகல் உணவுக்கு செல்லலாம் என தீர்மானித்தோம். எல்லோரும் இரு சக்கர வாகனம் வைத்திருந்ததால் பாலபாரதி லக்கியின் வண்டியில் பின் இருக்கையில் அமர்ந்து கொண்டார். நான் புளியமரம் தங்கவேலு அவர்களின் வண்டியில் அமரந்து கொள்ள மைலாப்பூர் நோக்கிச் சென்றோம்.

சங்கீதா ரெஸ்டாரெண்ட் வந்தோம். அது இவர்கள் அடிக்கடி சந்திக்கும் ரகசிய இடம் என்று நினைக்கும் படி இவர்களின் பேச்சு இருந்தது. மேலே குளிரூட்டப்பட்ட அறைக்குச் சென்று உணவு சொல்லிவிட்டு வருவதற்குள் பதிவுகள், பதிவர்கள், சர்சைகள் பற்றி பேச்சு நடந்தது. அமுக அமைப்பின் செயல்பாடுகள் குறித்து லக்கி பகிர்ந்து கொண்டார். பொன்ஸ், பாலபாரதி மற்றும் தங்கவேலு பா.க.ச வேர்ட் ப்ரஸ்சில் எழுதும் புதிய பதிவை எப்படி கொண்டு செல்வது என்று (கவலை ?) தெரிவித்தனர். அமுக அபிமானிகள் இருந்தும் பின்னூட்டம் திரட்டியில் காட்டுவதாக தற்போதைக்கு எந்த திட்டமும் இல்லை என்றார்கள். உணவு வந்தது எல்லோரும் சாப்பாடு சாப்பிட்டோம். பொன்ஸ் மட்டும் சிற்றுண்டி (சோளப் பொறியான்னு கேட்காதிங்க) எடுத்துக் கொண்டார். பேச்சு விவாகாரம் போளி(லி)கள் ... போண்டா என்று சென்றது.

தின்றுமுடித்து ஹோட்டலை விட்டு வெளியில் வந்ததும் என்னையும் சேர்த்து மற்ற மூவரை நிழல் படம் எடுக்க பொன்ஸ் உதவி செய்தார். அங்கேயே விடைபெறுவதாக கையைத் தூக்கி ஆசிகொடுத்துச் சென்றார். பின்பு நாங்கள் 4 பேரும் வித்தலோகா வந்து சேர்ந்தோம். புளியமரம் தங்கவேலுவை பற்றி தனிப்பட்ட முறையில் கேட்டபோது தாம் ஒரு சித்த மருத்துவர் என்றார். வலைப்பதிவில் நாள் முழுவதும் விழுந்து கிடப்பதாகவும். வீட்டுக் கணனிக்கு சுகவீனம் ஆனதால் சிறிது நாட்களாக வீட்டில் பொறுப்பாக நடந்து கொள்வதாகவும் சொன்னார். தற்போதைக்கு வீட்டு கணனிக்கு மருத்துவம் பார்க்கப் போவதில்லை. அலுவலகத்தில் மட்டுமே கணனியைப் பயன்படுத்துவது என்று மன உறுதி பூண்டுள்ளதாக சொன்னார். அவரும் விடை பெற பின்பு லக்கியிடம் சிறுது அளாவினேன் ... சிறிது நேரத்தில் கிளம்பி சென்றுவிட்டார்.

அதன் பிறகு என் நண்பரை வரச் சொல்லிவிட்டு பாலபாரதியுடன் பேசிக் கொண்டிருந்தேன். தாம் கவிதை எழுதுவதைப் பற்றி சில கவிதைகளைக் காட்டினார். என் நண்பர் வந்ததும் அவருக்கு தமிழ் தட்டச்சு உதவும் மென்பொருள்கள் வலைத் தளங்கள் குறித்து பாடம் நடத்தினார். இப்படி மணி மாலை 4ஐத் தொட அவர் துறத்தும் முன் பெரும்தன்மையாக விடை பெறுவதாக சொல்லி கிளம்பினேன். அன்று இரவே சென்னையில் இருந்து கிளம்பி பிறந்தகம் நாகைக்கு மறுநாள் காலை வந்து சேர்ந்தேன்.

இந்த சந்திப்பில் நான் பார்த்வர்கள் எல்லோருமே வலைப்பதிவில் அறிமுகமாகி உண்மையில் நான் முகம் பார்க்காதவர்கள் தான். ஆனால் ஒவ்வொருவரிடமும் முன்பே நன்கு பழகியது போன்ற உணர்வு அவர்களைச் சந்திக்கும் போது இருந்தது. சென்னையில் வரவனையான் செந்தில் மற்றும் மிதக்கும் வெளி சுகுனாதிவாகர் இருவரையும் சந்திக்க வேண்டுமென்று நினைத்திருந்தேன். வரவனையான் அன்று சென்னையில் இல்லை. சுகுனாதிவாகரிடம் சொல்வதற்கு பாலபாரதி மறந்துவிட்டேன் என்றார்.

மூன்று நாள் நாகை - திண்டுக்கல் - கோவை - சென்னை - நாகை என தொடர் பயணத்தில் 7 பதிவர்களை சந்தித்தேன். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு தனித்துவம் இருந்தது. இந்த இடுகைகளைப் படித்துவிட்டு முன்பே தமிழகம் செல்வதைக் குறிப்பிட்டு இருந்தால் சந்தித்து இருக்கலாம் என்று செந்தில் குமரன், உங்கள் நண்பன் சரவணன் மற்றும் கோவையில் இருந்து சூப்பர் சுப்ரா என்ற பதிவு நண்பர்கள் தெரிவித்தனர். அவர்களுக்கு வருத்தம் தெரிவித்து ... அடுத்தமுறை முன்கூட்டியே வருகையைச் சொல்லி உறுதியாக சந்திப்பேன் என்று தெரிவிக்கிறேன்.

நான் சந்தித்த திரு ஞானவெட்டியான் ஐயா, சுப்பையா ஐயா, நாமக்கல் சிபியார், ஆவிகள் அண்ணாச்சி மற்றும் அம்மணி, பாலபாரதி, லக்கி லுக், பொன்ஸ் மற்றும் தங்கவேல் ஆகியோர்களை சந்தித்தற்கு நான் பெருமகிழ்ச்சியையும் நன்றியையும் இப்பதிவின் மூலம் தெரிவித்துக் கொள்கிறேன்.

இதுவரை தொடரைப் படித்தும், படித்து பாராட்டிய அனைத்து பதிவு நண்பர்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். மென்மேலும் வளர்க நம் பதிவுலக நண்பர்களின் புரிந்துணர்வும் ஒற்றுமையும் .

பின்குறிப்பு : ஊருக்கு போய் வந்ததில் ஆறு இடுகைகள் எழுத எனக்கு செய்திகள் கிடைத்தது. சிங்கை திரும்பும் போது பத்து இடுகைக்கு விசயம் தேறும் என்று நண்பர் எஸ்கே ஐயா வாழ்த்தி இருந்தார் என்பதை நினைவு கூறுகிறேன். :)

நட்புடன்
கோவி.கண்ணன்


முந்தைய இடுகைகள் ...
சுற்றிச் சுற்றி வந்தேங்க - சென்னை 1
சுற்றிச் சுற்றி வந்தேங்க - திண்டுக்கல் 1
சுற்றிச் சுற்றி வந்தேங்க - திண்டுக்கல் 2
சுற்றிச் சுற்றி வந்தேங்க - கோவை 1
சுற்றி சுற்றி வந்தேங்க - கோவை 2

6 கருத்துகள்:

சென்ஷி சொன்னது…

//பின்குறிப்பு : ஊருக்கு போய் வந்ததில் ஆறு இடுகைகள் எழுத எனக்கு செய்திகள் கிடைத்தது. சிங்கை திரும்பும் போது பத்து இடுகைக்கு விசயம் தேறும் என்று நண்பர் எஸ்கே ஐயா வாழ்த்தி இருந்தார் என்பதை நினைவு கூறுகிறேன். :)//

அதையும் தாண்டிடுவீங்கன்னு நெனக்கிறேன்.

//இந்த சந்திப்பில் நான் பார்த்வர்கள் எல்லோருமே வலைப்பதிவில் அறிமுகமாகி உண்மையில் நான் முகம் பார்க்காதவர்கள் தான். ஆனால் ஒவ்வொருவரிடமும் முன்பே நன்கு பழகியது போன்ற உணர்வு அவர்களைச் சந்திக்கும் போது இருந்தது.//

உண்மைதான்.. எனக்கும் எல்லோரையும் சந்திக்க வேண்டுமென்ற ஆவல் உங்கள் கட்டுரை படித்த பின்பு அதிகமாகியுள்ளது.

நேரம் அமையட்டும்.. :(

சென்ஷி

கோவி.கண்ணன் சொன்னது…

//சென்ஷி said... அதையும் தாண்டிடுவீங்கன்னு நெனக்கிறேன்.//

ஆறுபதிவு ஏற்கனவே எழுதியாச்சு. அதற்குமேல் நீட்டித்தால் அயர்வு தரும் ! போதும் விட்டுடுங்கன்னு கதறுவாங்க !
:))

//உண்மைதான்.. எனக்கும் எல்லோரையும் சந்திக்க வேண்டுமென்ற ஆவல் உங்கள் கட்டுரை படித்த பின்பு அதிகமாகியுள்ளது.

நேரம் அமையட்டும்.. :(

சென்ஷி //

நேரம் பற்றி சரியான நேரத்தில் பதிவிட்டு இருக்கிறீர்கள். உங்களுக்கு நேரம் அமையும்.

கருப்பு சொன்னது…

கண்ணன் ஐயா,

சொல்லி இருந்தால் நானும் வந்திருப்பேன் அல்லவா!

சரி சரி... கோவிச்சுக்காதீங்க.. அடுத்த தபா போகும்போது மறக்காம சொல்லுங்க.

துளசி கோபால் சொன்னது…

//யானைத் தலைவி வந்தாங்க ... அதாவது பா.க.ச மகளீர் அணித் தலைவி பொன்ஸ் (பூரணா) தன்னுடைய
வாகனத்தில் வந்து இறங்கினாங்க. //

காலம் அய்யா காலம். யானை வாகனமா இருக்கறது போய் இப்ப யானைக்கே வாகனம்:-))))))

siva gnanamji(#18100882083107547329) சொன்னது…

உங்கள் வருகையை எமக்குத் தெரிவிக்காத பாலபாரதி
நடேசர் பூங்காவிற்கு வரட்டும் பார்ப்போம்....

லக்கிலுக் சொன்னது…

உங்களது சுற்றுலாப் பதிவுகள் மிக அருமை!!!

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்