
பிறந்து வளரும் போதே நாம் சில விலங்குகள், பூச்சி இனங்கள், ஊர்வன ஆகியவற்றில் சிலவற்றின் மீது ஈர்ப்பு மற்றும் சிலவற்றின் மீது தேவையற்ற வெறுப்பு மற்றும் பயம் இயல்பாகவே அமைந்துவிடுகிறது. நான் எங்கள் ஊரில் சிலர் குறிப்பாக பெண்கள் பாம்புக்கு பயப்படுவார்களை அறிந்து இருக்கிறேன். அவர்களிடம் சென்று 'பாம்பு' என்று சொன்னாலே 'ப்ல் கிட்டி' மயங்கிவிடுவார்கள். அப்படிபட்டவர்களிடம் சிறுவயதில் 'பாம்பு' என்று சொல்லியும், தென்னை ஓலையை அவர்கள் மீது தூக்கிப் போட்டு அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறேன். ஒரு மளிகைக் கடைக் காராரும் அப்படிபட்ட சிலரிடம் வம்பு வளர்த்தார். அதாவது மளிகை சாமனுடன் ப்ளாஸ்டிக் பாம்பு ஒன்றையும் கூடவே வைத்து அவர்களை பயப்படவைப்பார். பாம்புக்கு பயப்படும் அந்த பெண் (பேரிளம்) கடுமையான வசை மொழிகளை அவரை அறியாது சொல்லி திட்டுவார். இது எல்லாம் முன்பு தமாசாக இருக்கும்.
இன்னும் நான் பார்த்த சிலர் கரப்பான் பூச்சியைப் பார்த்தால் காத(10 மைல்) தூரம் ஓடுவார்கள். நண்பர் ஒருவர் திரைப்படத்தில் பாம்பு வரும் காட்சியை பார்த்தவுடன் 'உவ்வே' என்று தலையைக் குணிந்து கொள்வார். சிலர் நாய்களைப் பார்த்தால் நடுங்குவார்கள், பூனை சிலருக்கு அருகில் வரும்போது நடுக்கமே வந்துவிடும். நானும் கூட முறைத்துப் பார்க்கும் பூனைகளைப் பார்த்து நடுங்குவேன். தெரு நாய்கள் அருகில் வந்தால் உடனே மயிர்கூச்சல் வரும். பூரான், பல்லி (சென்னையில் Balli என்று சொல்வார்கள்) ஆகியவற்றை பார்த்தவுடனே சிலர் பயப்படுவார்கள்.
பாம்புகளை மிக அருகில் பார்த்தால் எனக்கும் பயமாகவே இருக்கும்.
இயற்கையிலேயே பருந்தைக் கண்டு தாய் கோழியின் இறக்கைக்குள் பதுங்கும் கோழிக் குஞ்சு போல நமக்குள் இருக்கும் பாதுகாப்பு உணர்வு நம்மை அறியாமல் நடுங்க வைத்துவிடுகிறது. விலங்குகள் திடீர்தாக்குதல் நடத்தும் என்ற அச்ச உணர்வும் ஒரு காரணமாக இருக்கும். மன அளவில் இருக்கும் ஒவ்வாமைகள் பெரும்பாலும் தேவையற்ற அச்சமாகவே இருக்கிறது. நண்பர்களே உங்களுக்கு ஒவ்வாமை ஏற்படுத்தும் விலங்குகள், ஊர்வன உண்டா ?