கால ஓட்டத்தின் கணக்கு வழக்குகளை பின்னுக்கு தள்ளும் குழந்தைகளின் வளர்ச்சி வியக்க வைக்கிறது, மணமானவர்கள் பெற்றோர்களானதும் அவர்களின் வாழ்நாள் இறக்கைகட்டிப் பறக்கும். குழந்தைகளின் ஒவ்வொரு 10 ஆண்டு அகவைகளும் பெற்றோர்களின் மண வாழ்க்கை மற்றும் அகவைகளை பத்து ஆண்டுகள் கூட்டிச் செல்லும். மகள் பிறந்ததே நேற்றைய நிகழ்வு போல் 12 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில் மகன் பிறந்தது முன்னிரவு நிகழ்வு போல் இருந்து, ஓராண்டு ஆகி, ஈராண்டும் ஆகிவிட்டது. ஒரு வயதில் எழுந்து நடக்கத் தெரியும், பசிக்கு அழத்தெரியும், சிரித்து மகிழவும், கையை நீட்டி வாங்கவும் தெரியும் என்று நிலையில் இரண்டாம் ஆண்டை எதிர் கொள்ளும் குழந்தைகள் விருப்பங்களை முடிவு செய்து அடம் பிடிக்கத் துவங்குகிறது, தனக்கு வேண்டியவை, வேண்டாதவை, கூடவே மொழியைப் புரிந்து கொண்டு பேச முயற்சிக்கும் ஆற்றல் இவைகளை வளர்த்துக் கொள்கிறார்கள், பெண் குழந்தைகள் 18 மாதங்களின் பேசத் துவங்கினால் ஆண் குழந்தைகள் பேசத் துவங்க கூடுதலாக இரண்டு மாதங்கள் ஆகிறது, எங்கப் பையன் 'சிவ செங்கதிர்' கோர்வையாகப் பேசாவிட்டாலும், 'அப்பா மியாவ்' என்று கூறினால் பூனைகளைப் பார்க்க வெளியே அழைத்துச் செல்லச் சொல்கிறான் என்று நாம் புரிந்து கொள்ள வேண்டும், 'அம்மா தண்ணீ' அல்லது 'தண்ணீ' என்றூ சொன்னால் தண்ணீர் கேட்கிறான் என்று பொருள். கூடவே 100க் கணக்கான சொற்களை கற்றுக் கொண்டு தேவையின் போது சொல்கிறான், அக்கம் பக்கம் குழந்தைகளை பெயர் சொல்லி அழைப்பது உள்ளிட்ட அவனது மழலைப் பேச்சு இனிக்க வைக்கிறது. அழுது அடம் பிடித்தால் எப்படியும் கொடுத்துவிடுவார்கள் என்பதை தெரிந்து கொண்டு அதை ஒரு கருவியாகவே பயன்படுத்துகிறான். குழந்தைகள் 2 - 3 வயதில் குணங்களை உருவாக்கிக் கொள்கிறார்கள், பிடித்தது - பிடிக்காததெல்லாம் இந்த வயதில் அவர்களாக முடிவு செய்பவைகள் அவர்களின் குணங்களாக மாறுகிறது என்றே நினைக்கிறேன்.
ஒண்ணரை வயது வரை விரும்பி நடப்பார்கள், பிறகு தூக்கிச் செல்லச் சொல்லி அடம் பிடிப்பார்கள், நடப்பதால் ஏற்படும் (பிஞ்சுக்) கால்வலி உணர்வும், தூக்கிச் செல்வதால் கால் வலிகாது என்று தெரிந்துவிடுவதால் நடந்து செல்ல விரும்ப மாட்டார்கள், தண்ணீரில் ஆட்டம் போட இந்த வயதில் ரொம்பவே விருப்பம் இருக்கும், மற்ற விளையாட்டுப் பொருள்களைவிட தண்ணீர் விளையாட்டு ரொம்பவும் பிடிக்கும், தண்ணீர் அவர்களின் விருப்பதிற்கேற்ப வளைந்து கொடுப்பதால் தண்ணீரில் விளையாட கொள்ளை விருப்பம் இருக்கும், தண்ணீர் நிரம்பிய பாத்திரங்களை, வாலிகளை அவர்களுக்கு எட்டும் படி வைக்கக் கூடாது, முடிந்த அளவுக்கு வெற்றுப் பாத்திரங்களையும், குளியல் அறைக் கதவுகளை மூடி வைத்திருப்பதும் நலம்.
********
குழந்தைகளுக்கு தாய்மொழிப் பேச்சு வழக்கு குழந்தைப் பருவத்தில் பயிற்றுவைக்காவிட்டால் பின்னர் அவர்களுக்கு அதன் மீது கவன ஈர்ப்பு வரவே வராது, முடிந்த அளவுக்கு தாய்மொழியில் பேசி வளர்ப்பது தான் குழந்தைகளுக்கு நல்லது, மூன்று வயதில் பாலர் பள்ளியில் குழந்தைகள் ஆங்கிலம் கற்றுக் கொள்வது எளிது, மூன்று வயதில் எதையும் கற்றுக் கொள்ளும் ஆற்றலில் ஆங்கிலம் கற்றுக் கொள்வது அவர்களுக்கு சுமையான ஒன்று இல்லை, பாலர் பள்ளிக்குச் செல்லும் பொழுது குழந்தைகள் ஆங்கிலம் தெரியாமல் இன்னல் படுவார்கள் என்பது பெற்றோர்களின் தவறான எண்ணம், அனுபவப்பட்டவன் என்ற முறையில் தான் இதனை எழுதுகிறேன், மகளை 2 1/2 வயதில் சிங்கையில் பாலர் பள்ளியில் சேர்த்த போது அவளால் மற்றக் குழந்தைகளுடனும், காப்பாளருடனும் உரையாடமுடியவில்லை என்பது உண்மை தான், ஆனால் இவையெல்லாம் ஒரு மாதங்களில் சரியாகிவிட்டது, ஆங்கிலமே பேசி வளர்த்திருந்தால் அவளால் இயல்பாக பேசக் கூடிய தாய் மொழியை கற்றுக் கொள்ள முடியாமல் போய் இருக்கும், குழந்தைகள் மட்டுமல்ல பெரியவர்களும் கூட 'சூழல்' என்று வரும் பொழுது எதையும் கற்றுக் கொள்வார்கள். தாய்மொழியை ஒவ்வொரு தலைமுறைக்கும் சரியாகப் பயிற்று வைத்து அடுத்தத் தலைமுறைக்கு மொழியையும் கூடவே அழைத்துச் செல்வது தாய்மொழியைப் பேச்சு மொழியாகக் கொண்ட ஒவ்வொருவரின் கடமையும் கூட. ஒரு குழந்தைக்கு தாய்மொழியை பயிற்றுவிப்பதன் மூலம் தாய் மொழியின் புழக்கத்தை இன்னும் ஒரு 80 - 100 ஆண்டுகளுக்கு நம்மால் நீட்டிக்க முடியும், நம்புங்கள், தமிழ் நாட்டில் கன்னடம் மற்றும் தெலுங்கை தாய் மொழியாகக் கொண்டவர்கள் குழந்தைகளிடம் அம்மொழியில் தான் பேசுவார்கள், பின்னர் பள்ளியிலும் வெளியிலும் தமிழில் உரையாடுவதற்கு அவர்கள் எந்த ஒரு இன்னலையும் சந்தித்தது கிடையாது, இதை ஏன் ஆங்கிலத்திற்கும் பொருத்திப் பார்க்க மறுக்கிறார்கள் என்று தெரியவில்லை, கண்டிப்பாக ஆங்கில வழிக் கல்விதான் குழந்தை படிக்கப் போகிறது என்று தெரிந்தும் ஏன் அவற்றை குழந்தைப் பருவத்தில் இருந்து திணிக்கிறார்கள் என்றும் தெரியவில்லை. எளிதில் கற்றுக் கொள்ளக் கூடியது மற்றும் சமுகம், கலை இலக்கியத் தொடர்பிற்கு மிகவும் தேவையானது என்ற அளவில் தாய்மொழி தான் குழந்தைக்கு உணவுடன் சேர்த்து ஊட்டப்பட வேண்டும்.
எனக்கு தெரிந்த நெருங்கிய நண்பர் 'பையன் சிரமப்படுவான் என்று ஆங்கிலத்தில் பேசி வளர்த்தோம், தற்பொழுது அவனுக்கு தமிழ் புரிந்தாலும் பேச தடுமாறுகிறான், அந்த தவறை மகள் பிறந்த பிறகு செய்யக் கூடாது என்பதற்காக அவளிடம் தமிழிலும் பேசுகிறோம்' என்றார். குழந்தைகளுக்கு எளிய ஆங்கிலமும் தமிழுடன் சேர்த்துச் சொல்லிக் கொடுப்பது நல்லது, ஆனால் ஆங்கிலமே போதும் என்று நினைப்பது அவர்களுக்கு கிடைக்க வேண்டிய மற்றொரு மொழி ஆற்றலை முளையிலேயே கிள்ளி எரிவது போன்றது. நாம் வாரிசுகளுக்கு முறைப்படியாக கொடுக்கும் அழியாதச் செல்வங்களுல் தாய் மொழியும் ஒன்று. போதிய ஊக்கம் கொடுத்தால் ஏனையவற்றை அவர்களே வளர்த்துக் கொள்வார்கள்.
ஒரு குழந்தைக்கு தாய்மொழியில் பெயர் சூட்டுவதால் தாய் மொழிப் பெயர்கள் இன்னும் 100 ஆண்டுகளுக்கு நிலைக்கும், ஒரு குழந்தைக்கு தாய் மொழி பயிற்றுவித்தால் மொழி சார்ந்து இயங்கும் கலைகளும், இலக்கியங்களும் இன்னும் ஒரு 100 ஆண்டுகளுக்கு படைக்கப்படும் வாய்பையும், தேவையையும் ஏற்படுத்தும், தாய்மொழி எதுவாக இருந்தாலும் அந்த மொழிப் பேசுபவர்களின் கடமை என்ற அளவில் இவை செயலாக்கம் பெரும் போது மொழிகளுக்கு அழிவு என்று யாரும் பேசவே முடியாது. தமிழ் இல்லத்து குழந்தைகளுக்கு 99 விழுக்காட்டு தாய்மொழிப் பெயர் வைக்கும் பழக்கம் இல்லை என்பது நாம் பெருமைப் படக் கூடிய ஒன்று இல்லை. 'ஸ்டைல். பெயர் ராசி' என்ற முடிவில் தாய்மொழிப் பெயர் வைக்கும் பழக்கம் அற்று போய்விட்டது.
இதையெல்லாம் ஏன் இங்கே எழுதுகிறேன் என்றால் என் பையன் தன்னைப் பற்றி அப்பா என்ன எழுதி இருக்கிறார் என்று ஆவலுடன் படிக்கும் பொழுது தனக்கு தமிழ் பெயர் வைத்ததன் காரணத்தையும் சேர்த்தே தெரிந்து கொள்வான், அவனுடைய வாரிசுகளுக்கும் தமிழ் பெயர் வைக்க விரும்புவான்.
*****
கடந்த ஞாயிறு (19 ஆகஸ்டு 2012) செங்கதிரின் இரண்டாம் அகவை நிறைவுற்றது, அக்கம் பக்கம் குழந்தைகளுடன் மிக சிறிய விழாவாக வீட்டில் கொண்டாடி மகிழ்ந்தோம், அவனுக்கு பாண்டா கரடி பொம்மை மிகவும் பிடிக்கும் அதானல் அவனுக்கு பிடித்த பாண்டா கேக்.
அலைபேசி, மின் அஞ்சல் மற்றும் கூகுள் கூ(ட்)டல் வழியாக வாழ்த்திய அனைத்து பதிவுலக உறவுகள் மற்றும் நண்பர்களுக்கும் மிக்க நன்றி.
அலைபேசி, மின் அஞ்சல் மற்றும் கூகுள் கூ(ட்)டல் வழியாக வாழ்த்திய அனைத்து பதிவுலக உறவுகள் மற்றும் நண்பர்களுக்கும் மிக்க நன்றி.
16 கருத்துகள்:
கருத்துக்கள் அனைத்தும் அருமை...
நல்லதொரு கருத்துடன் முடித்துள்ளீர்கள்... நன்றி...
/// ஸ்டைல். பெயர் ராசி ///
காலத்தின் கொடுமை...
இன்று நாம் அல்லது குழந்தைகள் 'ஐயா' என்று சொன்னால் மேலும் கீழும் பார்க்கிறார்கள்... 'அப்படி சொல்லக் கூடாது' என்று திட்டு வேறு...
அந்தளவு ஆங்கில மோகம் பெற்றோர்களுக்கு...
மற்ற மொழிகளை கற்பதில் தவறில்லை... கற்றால் தான் உலகம் சுற்ற முடியும் (மற்றவர் துணையின்றி) ...
தாய் மொழியே சரியாக கற்கவில்லை என்றால், பிற மொழிகளை எப்படி கற்க முடியும்...?
ஆங்கிலத்தை ஆங்கிலமாக கற்க வேண்டும்... அதை தன் தாய்மொழியில் மொழி பெயர்த்து கற்றால் எப்படி வரும்...? அதுவும் தாய் மொழியே சரியாக புரியாமல்...?
இதோ என் குழந்தை ஒரு மொழியை ஆர்வமாக கற்றுக் கொள்கிறார்... அந்த மொழியைப் பார்த்தால்... கண்ணிருந்தும் குருடனைப் போல் உணர்கிறேன்...
நன்றி சார்...
குழந்தை செங்கதிருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்!
// குழந்தைகளுக்கு தாய்மொழிப் பேச்சு வழக்கு குழந்தைப் பருவத்தில் பயிற்றுவைக்காவிட்டால் பின்னர் அவர்களுக்கு அதன் மீது கவன ஈர்ப்பு வரவே வராது,//
கோவிகண்ணன் இதை ஏற்றுக்கொள்கிறேன். இது பற்றி முன்பே தெரிந்து இருந்தாலும் தற்போது இன்னும் கவனமாக இருக்க வேண்டும் என்று நினைவு படுத்துகிறது.
சிவ செங்கதிருக்கு என்னுடைய (தாமதமான) பிறந்த நாள் வாழ்த்துகள்.
தாய்மொழி எதுவாக இருந்தாலும் அந்த மொழிப் பேசுபவர்களின் கடமை என்ற அளவில் செயலாக்கம் பெறும் போது மொழிகளுக்கு அழிவு என்று யாரும் பேசவே முடியாது.
சிறப்பான பகிர்வுகள்..
குழந்தைக்கு இனிய வாழ்த்துகள்..!
முதற்கண், செங்கதிருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்!
அங்கு வந்தும் இல்லம் வந்து நேரில் காணும் வாய்ப்பைப் பெறமுடியாமல் என் பயணம் அமைந்து
விட்டது!
அடுத்து மே திங்கள் வரும்போது
தங்கள் இல்லம் வருவேன்!
தங்களின் இன்றைய பதிவு அனைத்து பெற்றோரும் அவசியம் படித்து, நடைமுறைப் படுத்தினால் தாய்
மொழி உறுதியாக வளரும், வாழும் என்
பதில் ஐயமில்லை! நன்றி!
//
முதற்கண், செங்கதிருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்!
அங்கு வந்தும் இல்லம் வந்து நேரில் காணும் வாய்ப்பைப் பெறமுடியாமல் என் பயணம் அமைந்து
விட்டது!
அடுத்து மே திங்கள் வரும்போது
தங்கள் இல்லம் வருவேன்!//
மிக்க நன்றி ஐயா, அது பெரும்பேறு. தமிழையே மூச்சுக்காற்றாக கொண்டும் தாங்கள் வருகை மிக்க மகிழ்ச்சி கொடுக்கக் கூடியதாக இருக்கும்,
//தங்களின் இன்றைய பதிவு அனைத்து பெற்றோரும் அவசியம் படித்து, நடைமுறைப் படுத்தினால் தாய்
மொழி உறுதியாக வளரும், வாழும் என்
பதில் ஐயமில்லை! நன்றி! //
மிக்க நன்றி ஐயா.
//ஆங்கிலத்தை ஆங்கிலமாக கற்க வேண்டும்... அதை தன் தாய்மொழியில் மொழி பெயர்த்து கற்றால் எப்படி வரும்...? அதுவும் தாய் மொழியே சரியாக புரியாமல்...?//
சிறப்பு. நன்றி தனபால்
//ராமலக்ஷ்மி கூறியது...
குழந்தை செங்கதிருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்!//
தங்கள் அன்புக்கு மிக்க நன்றி மேடம்
//
சிவ செங்கதிருக்கு என்னுடைய (தாமதமான) பிறந்த நாள் வாழ்த்துகள்.//
வாழ்த்துகளுக்கு காலம் நேரம் தேவை இல்லை, வாழ்த்த நேரம் கிடைக்கும் பொழுது வாழ்த்தலாம்.
நன்றி கிரி
//இராஜராஜேஸ்வரி கூறியது...
தாய்மொழி எதுவாக இருந்தாலும் அந்த மொழிப் பேசுபவர்களின் கடமை என்ற அளவில் செயலாக்கம் பெறும் போது மொழிகளுக்கு அழிவு என்று யாரும் பேசவே முடியாது.
சிறப்பான பகிர்வுகள்..
குழந்தைக்கு இனிய வாழ்த்துகள்..!//
தங்கள் அன்புக்கு மிக்க நன்றி மேடம்.
பையனுக்கு வாழ்த்துகள்.
இங்கு தில்லியில் எங்கள் வீட்டில் நாங்கள் குழந்தைகளுடன் தமிழில் தான் பேசுவோம். சில நேரங்களில் (குறிப்பாக விளையாடும் பொழுது) குழ்ந்தைகள் இருவரும் தங்களுக்குள் பேசும் பொழுது ஹிந்தியில் உரையாடினாலும் அவர்களைத் தமிழிலேயே பேசச் சொல்லுவோம்.
தில்லி வந்த புதிதில் பார்த்த அத்தனை (தமிழர்களின்) குழந்தைகளும் தங்களுக்குள் ஹிந்தியிலேயே உரையாடுவதைக் கண்டுள்ளதால் நிகழ்ந்த படிப்பினைதான் இதற்குக் காரணம்.
நல்ல பதிவு. குழந்தைக்கு இனிய பிறந்ததின வாழ்த்துகள்.
சிவ செங்கதிருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
வெளிநாடுகளில் பிள்ளை வளர்க்கும் அனைவருக்கும் தேவையான அறிவுரைகள் நிரம்பிய பதிவு.
நாட்கள் எப்படி இறக்கை கட்டிப் பறக்குது பாருங்க குழந்தை இருக்கும் வீட்டில்!!!!
ஒரு சின்ன உயிர் வீட்டுக்குள்ளே வந்துவிட்டால் நம் வீடு என்ற உலகம் அக்குழந்தையைச் சுற்றியேதான் சுழலும்.
அதுக்குள்ளே ரெண்டு வயசா!!!!!
இனிய பிறந்தநாள் வாழ்த்து(க்)கள் செங்கதிரே!
செங்கதிருக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்.
சிவ செங்கதிருக்கு இனிய பிறந்த வாழ்த்துகள்
(தாமதமாக)
கருத்துரையிடுக