பின்பற்றுபவர்கள்

18 ஜனவரி, 2011

தமிழ்மணம் விருதுகள் 2010 - சில எண்ணங்கள் !

முதலில் நடந்து முடிந்த தமிழ்மணம் விருதுகள் 2010 வெற்றியாளர்களுக்கு நல்வாழ்த்துகள். சென்ற ஆண்டுகளை விட இந்த ஆண்டு மிகுதியான பதிவர்கள் போட்டிக்கு இடுகையை முன்மொழிந்துள்ளார்கள். இதற்கு பதிவர்கள் எண்ணிக்கை உயர்ந்திருப்பது முதன்மையான காரணம் என்றே நினைக்கிறேன். மொத்தம் 1511க்கு மேற்பட்ட இடுகைகள் போட்டியில் பங்கு பெற்றன. முதல்கட்ட வாக்கெடுப்பில் இத்தனை இடுகைகளையும் போதிய நேரமின்மையால் அனைத்து பதிவர்களும், வாசகர்களும் படித்து வாக்களித்திருப்பார்களா என்பது ஐயமே. ஏற்கனவே படித்த இடுகைகளைக் கருத்தில் கொண்டும், அறிந்தவர்கள் தெரிந்தவர்கள் போட்டி இடுகிறார்கள் ஊக்கப்படுத்த வேண்டும் என்கிற அடிப்படையில் முதல்கட்ட வாக்கெடுப்பு முடிவுகள் அமைந்தன. முதல் கட்ட பொதுவாக்கெடுப்பில் 1551 இடுகைகளில் இருந்து இரண்டாம் கட்டத்திற்கு இடுகைகள் தேர்வாகிய போது போட்டிப் பட்டியல் எண்ணிக்கையை 200 ஆகக் குறைந்தது என்றாலும் போட்டியிடத் தகுதியான கட்டுரைகள் பல ஆதரவாளர்கள் இன்மையால் வாக்குகள் இல்லாமல் இரண்டாம் கட்டப் பட்டியலில் இடம்பெறவில்லை என்பதும் உண்மைதான். நான் அறிந்தவகையில் சில பிரிவின் போட்டி இடுகைகள் உள்ளடக்கத் தரத்திற்காக வெற்றிப் பெறவேண்டும் என்று வாக்களித்திருந்ததாலும் அவை இரண்டாம் கட்ட வாக்கெடுப்பிற்குள் நுழையவே இல்லை, பலர் வாசித்திருக்காமல் விடுபட்டதால் போதிய வாக்கின்மையால் தகுதி இழந்திருக்கக் கூடும் என்றே நினைக்கிறேன்.

இரண்டாம் கட்ட வாக்கெடுப்பு முடிவு நிலையும் இதே தான் என்றாலும் போட்டி இடும் இடுகைகள் எண்ணிக்கை 200 என்பதால், முதல்கட்ட வாக்கெடுப்பில் வாக்களித்தவர்கள் பலர் அனைத்தையும் படித்துப் பார்த்து வாக்களித்திருப்பர். இரண்டாம் கட்ட முடிவில் 80 விழுக்காட்டுக் கட்டுரைகள் போட்டியிடும் தன்மையில் இருந்தது. 20 பிரிவுகளில் பிரிவுக்கு ஐந்தாக இரண்டாம்கட்ட முடிவு அறிவிக்கப்பட்டது. அதன் பிறகு பதிவர்களால் ஏற்படுத்தப்பட்ட நடுவர் குழுவிற்கு தமிழ்மணம் அனுப்பி வைத்தனர். ஒவ்வொரு நடுவருக்கும் இருபிரிவுகள் என 40 நடுவர்களுக்கு அனுப்பப் பட்டிருந்தது, அதில் எனக்கு இருபிரிவிற்கான நடுவராக இருக்கும் வாய்பு கிடைத்தது. எனக்கு அனுப்பட்ட அதே இருபிரிவுகள் வேறொரு நடுவருக்கும் அனுப்பப் பட்டிருக்க வேண்டும். நான் நடுவராக இருந்த இரு பிரிவுகளில் ஒன்றில் இரு இடுகைகளை முதல் பரிசுக்கு பரிந்துரைத்திருந்தேன். இரண்டாம் பரிசுக்கு ஒரு இடுகையும் பரிந்துரைத்திருந்தேன். ஆனால் வெற்றி அறிவிப்பில் முதலிடம் பெற்ற இருவரில் ஒருவர் முதலிடம் பெற்றதாகவும் மற்றவர் இரண்டாம் இடத்திற்கும் விருது வழங்கப்பட்டுள்ளது. அதே பிரிவின் மற்றொரு நடுவர் பார்வையின் மதிப்பீட்டையும் ஒப்பிட்டு அவ்வாறு முடிவுகள் அமைந்திருக்கும் என்றே நினைக்கிறேன், ஆனால் மற்றொரு பிரிவில் நான் தேர்வு செய்தபடியே முடிவுகள் அமைந்திருந்தன, அதே முடிவை மற்றொரு நடுவரும் வழங்கி இருப்பார் என்றே நினைக்கிறேன்.

இவற்றை ஏன் சொல்கிறேன் என்றால் இதில் எனது அரசியல் நோக்கமோ, குழப்படி செய்யும் நோக்கமோ ஒன்றும் இல்லை. சொல்ல வருவது இது தான், போட்டியில் கடைசிவரை ஒரு சில நல்ல இடுகைகள் செல்ல முடியாமல், முதல்கட்டத்திலேயே பட்டியலில் இடம்பிடிக்காமல் போனதற்கு போட்டி எண்ணிக்கை மிகுந்திருந்ததே ஆகும். இரண்டாம் இடம் கிடைத்த பலரில் சிலருக்கு முதலிடம் கிடைக்கமல் போனதற்கு நடுவர்களின் மதிப்பீடும் காரணம். உங்கள் கட்டுரை தரமானதாக இருந்து போட்டியில் விருது வெல்லவில்லை, அல்லது முதலிடம் கிடைக்கவில்லை என்று வருந்தினால் மேற்கண்டதை கவனத்தில் கொள்ளுங்கள். போட்டியில் வெற்றி பெற முடியாமல் போவதற்கு சில சமயம் உழைப்பு என்பதைத் தாண்டி இது போன்ற காரணங்களும் அமைந்துவிடும் என்பது மிகவும் வருத்தத்துக்குரிய நடைமுறை உண்மை. தெரிந்தவர்களுக்கு வாக்களிக்க வேண்டும் என்கிற மனநிலையை மாற்றிக் கொண்டால் இந்த வருத்தம் ஏற்படுபவர்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறையும். இதை வாக்களிப்பவர்கள் மட்டுமின்றி தெரிந்தவர்களின் வாக்கு பலம் இருக்கிறது என்பதற்காக தன்னுடைய எழுத்து மற்றும் இடுகை பற்றி நன்கு அறிந்தவர்களும் கவனத்தில் கொண்டால் மேலும் குறையும். போட்டிக்கு இடுகையை அனுப்பும் முன் தன்னுடைய எழுத்தின் தன்மையை மேம்படுத்திக் கொண்டு போட்டியிடுவதும் மிகவும் தேவையான ஒன்று என்பதை போட்டியாளர்கள் கவனத்தில் கொள்வது இன்னும் சிறப்பு. எல்லோருக்கும் போட்டியிட உரிமை உள்ளது, அதே வேளை தெரிந்தவர் வாக்கு பலம் அந்த உரிமையை வெற்றியாக்கிக் காட்டும் என்று நினைப்பது கடைசி கட்டம் வரை நிலைப்பது இல்லை. போட்டியின் இறுதி முடிவை கவனத்தில் கொண்டு, வரும் காலத்தில் எழுத்தின் தன்மைகளை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என்று நினைப்பதே எதிர்வரும் போட்டியில் வெற்றி ஈட்டித்தரும் சிறந்த வழியாக அமையும், இவ்வாறு மேம்படுத்திக் கொள்ள வெற்றிபெற்ற இடுகைகளை வாசித்துப் பார்ப்பது மிகவும் தேவையான ஒன்று.

இது போன்று ஆயிரக்கணக்கானோர் கலந்து கொள்ளும் போட்டியில் இதே போன்று நடைமுறைச் சிக்கல்கள் நடைமுறைதான் என்பதை நாம் ஒப்புக் கொண்டு தமிழ்மணம் நிர்வாகத்தை கண்டிப்பாக பாராட்டவேண்டும். இதற்கு அவர்கள் செலவிட்ட நேரமும், உழைப்பும் தன்னார்வத்தால், தமிழார்வத்தால் ஏற்படுவது மட்டுமே. வெற்றி என்பது மகுடம், நன்றாக எழுதியும் சிலருக்கு அது கைகூடாமல் போனதற்கு மேற்சொன்ன நடைமுறைக் காரணிகளும் உள்ளன. என்னைப் பொருத்த அளவில் வெற்றி வாய்ப்பு பலருக்கும் கிடைக்க வேண்டும் என்று நினைப்பேன், அதே போன்று மருத்துவர் புருனோ மற்றும் வினவு, மேலும் வெளிப்படையாக அறிவித்துக் கொள்ளாத சிலர் இந்த முறை போட்டியில் பங்குபெறவில்லை. ஏற்கனவே தகுதியடைந்தவர்கள் வழிவிட்டால் தான் மேலும் தகுதியானவர்களை அடையாளம் காணமுடியும், இது என்னுடைய நம்பிக்கை.

தமிழ்மணம் விருதுகள் 2010 வெற்றியாளர்கள் மட்டும் கலந்து கொண்டவர்கள் அனைவருக்கும் பாராட்டுகள் மற்றும் நல்வாழ்த்துகள், என்னை நடுவரில் ஒருவராக தேர்ந்தெடுத்த தமிழ்மணம் விருது குழுவினருக்கு நன்றி.

8 கருத்துகள்:

மாணவன் சொன்னது…

//இது போன்று ஆயிரக்கணக்கானோர் கலந்து கொள்ளும் போட்டியில் இதே போன்று நடைமுறைச் சிக்கல்கள் நடைமுறைதான் என்பதை நாம் ஒப்புக் கொண்டு தமிழ்மணம் நிர்வாகத்தை கண்டிப்பாக பாராட்டவேண்டும். இதற்கு அவர்கள் செலவிட்ட நேரமும், உழைப்பும் தன்னார்வத்தால், தமிழார்வத்தால் ஏற்படுவது மட்டுமே. //

தமிழுக்கும் தமிழ் வலைப்பதிவர்களுக்கும் ஒரு அங்கீகாரம் கொடுத்து இதுபோன்று நடத்துவதே நிச்சயமாக நாம் பாராட்டவும் பெருமைப்பட வேண்டிய விஷயம்

மாணவன் சொன்னது…

வெற்றியாளர்கள் அனைவருக்கும் மற்றும் நடுவராக இருந்து செயல்பட்ட உங்களுக்கும் வாழ்த்துக்கள் சார்

சிவகுமாரன் சொன்னது…

நீங்கள் நடுவராய் இருந்தீர்களா ? பெரிய ஆள் சார் நீங்கள். வாழ்த்துக்கள் சார்

Jackiesekar சொன்னது…

கோவி... நீங்கள் சொல்லியது எல்லாம் 100க்கு 100 உண்மை

கோவி.கண்ணன் சொன்னது…

//
சிவகுமாரன் said...
நீங்கள் நடுவராய் இருந்தீர்களா ? பெரிய ஆள் சார் நீங்கள். வாழ்த்துக்கள் சார்

11:25 PM, January 18, 2011//

திரு சிவகுமரன்,
இதில் தனிச்சிறப்பு ஒன்றும் இல்லை. என்னைப் போல் 40 பதிவர்கள் நடுவர்களாக இருந்திருக்கிறார்கள். இருந்தாலும் மகிழ்ச்சி தான். மிக்க நன்றி

கோவி.கண்ணன் சொன்னது…

//
ஜாக்கி சேகர் said...
கோவி... நீங்கள் சொல்லியது எல்லாம் 100க்கு 100 உண்மை

2:19 AM, January 19, 2011//

நன்றி ஜாக்கி.

கோவி.கண்ணன் சொன்னது…

//
மாணவன் said...
வெற்றியாளர்கள் அனைவருக்கும் மற்றும் நடுவராக இருந்து செயல்பட்ட உங்களுக்கும் வாழ்த்துக்கள் சார்

5:13 PM, January 18, 2011//

மாணவன் சார். மிக்க நன்றி

ஜோ/Joe சொன்னது…

தெளிவா சொல்லியிருக்கீங்க கோவியாரே!

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்