தேச 'ஒற்று'மை !
தேசத்தின் வியப்பிது,
தேர்தல் நாளில் தான் கண்டுகொண்டேன்,
நம் அனைவரின் கைகளில் ஒற்று'மை' !
தேர்தல் மை எல்லோருக்கும் வைக்கப்படுகிறது, இந்தியாவெங்கிலும் ஒரே பணம் ஒரே மதிப்பில் இருக்கிறது இவையே தேச ஒற்றுமை. மற்றவை எல்லாமும் மாநில நலம் சார்ந்தவைதான், பிரதமந்திரியாக ஒருவர் தேர்ந்தெடுக்கப்பட்டால் அவர் பொதுவான வராகத்தானே இருக்க வேண்டும், அவர் தேர்ந்தெடுக்கப் பட்டவுடனே அவரது தொகுதி தலைகீழாக மாறும், மற்ற ஊர்களிலெல்லாம் அவருக்கு தொடர்பு இல்லையா ? (அவர் பிறந்ததால் அந்த ஊருக்கு கிடைக்கும் புண்ணியமோ ) பிரதமர் என்ற அளவில் கூட தேச ஒற்றுமையின் அழகே (லெட்சனம்) இந்த அளவில் தான். உண்மையான இந்திய தேச ஒற்றுமையை, அந்நாட்டின் மக்கள் புலம்பெயர்ந்த / வேலைக்காக இடம்பெயர்ந்த வெளிநாடுகளில், அவர்கள் இந்தியர்கள் என்ற உணர்வில் ஒருவருக்கொருவர் உதவி செய்வது ஆதரவாக இருப்பதிலிருந்து... தேச ஒற்றுமை இந்தியாவைப் பொருத்த அளவில் வெளிநாடுகளில் தான் பார்க்க முடிகிறது. சிங்கை போன்ற நாடுகளில் உலக ஒற்றுமையையும் பார்க்கலாம், ஒரே மேசையில் அமர்ந்து ஆறு வெவ்வேறு நாட்டினர் உணவு உண்பதையும், ஒரே அலுவகலத்தில் வேலைசெய்து, ஒருவர் வீட்டு நிகழ்ச்சிக்கு அவர்களெல்லாம் வந்து கெளரவிப்பதையும் கூட பார்க்கலாம். இந்தியாவில் இருக்கும் போது அருமை பெருமை அறியப்படாத, தெரிந்து கொள்ள முடியாத பல்வேறு மாநில கலைகளும் வெளிநாட்டில் இருக்கும் போது கண்ணுற அவ்வப்போது வாய்ப்பு கிடைக்கிறது.
மதிப்பு மிக்க கலாம் அவர்களின் கருப்பு வெள்ளைக் கனவான 2020 ஆண்டில் இந்திய வல்லரசு என்பதற்கு வண்ணம் தீட்டும் திட்டங்களை நடுவன் அரசு தொடங்கி இருக்கிறது. அதில் ஒரு திட்டமாக சுற்றுலா வளர்ச்சி திட்டமும் உள்ளது. இந்திய இயற்கை அமைப்புகளும், தட்பவெப்பமும், இயற்கை வளங்களிலும் வெறெந்த நாட்டிலும் காணக்கிடைக்காத அளவுக்கு மிகுந்தே இருக்கிறது, நமது கவனக் குறைவினால் அதை நாமும் கண்ணுறாமல், வெளிநாட்டினர் வந்தால் முகம் சுழிக்கும் அளவுக்கு பராமரிப்பு இன்றி வைத்திருக்கிறோம், தற்பொழுது இந்திய அரசு சுற்றுலா தளங்களை அழகுபடுத்தி வெளிநாட்டினரைக் கவரும் வண்ணம் பல்வேறு நாடுகளில் இந்திய சுற்றுலா கண்காட்சி நடத்திவருகிறது. நமது நாட்டில் இவ்வளவு வளங்களும், இயற்கை அமைப்புகளும் இருக்கிறது என்பதே அது போன்ற கண்காட்சிகளுக்குச் செல்லும் போது தான் தெரியவருகிறது. அவற்றைக் காண வெளினாட்டினர் வரும் போது நமக்கெல்லம் உண்மையில் மகிழ்ச்சியாகவும் பெருமையாகவும் இருக்கிறது. வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு வெளிநாட்டினர் இந்தியாவைப் போற்றும் போது கிடைக்கும் மகிழ்ச்சி வேறெதிலும் இல்லை. அது போன்று இந்தியாவின் ஊழல் போன்றவற்றை அவர்கள் சுட்டிக் காட்டும் போது தலைகுனிவாகவும்(அவமானம்) இருக்கும்.
வெளிநாட்டினரை இந்தியாவிற்கு ஈர்க்கும் நடவடிக்கையால் அவர்களது அன்னிய பண வரவு இந்தியாவில் பெருகும். அதுமட்டுமல்ல, உலக அளவில் இந்தியா என்றால் ஏழை நாடு மட்டுமே என்ற எண்ணம் மாறும். அவர்களுக்கு மனநிறைவு இருந்தால் நம்நாட்டில் முதலீடு செய்வார்கள், வேலை வாய்ப்பு பெருகும் (எல்லோருக்கும் தெரிந்தவைதான்) . அந்தவகையில் தற்போதைய இந்திய அரசு சுற்றுலாதுறையில் கவனம் செலுத்தி இருப்பது இந்தியர்கள் அனைவராலும் வரவேற்க்கத் தக்கது. இவற்றைச் செய்தால் மட்டுமே போதாது, இந்தியாவின் மீது ஈர்பில் வரும் சுற்றுலா பயணிகளான வெளிநாட்டினருக்கு தகுந்த பாதுகாப்பு அளிப்பது இந்தியாவின் கடமை, வெளிநாட்டினரை ஏமாற்றி குற்றம் புரிபவர்களுக்கு கடுமையான தண்டனைகள் வழங்கப்பட வேண்டும், ஒருவெளிநாட்டினரின் உயிர் இந்திய மண்ணில் கொலை செய்யப்பட்டால் அந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் அனைவருக்குமே இந்தியா என்றால் கொலைகார, கொள்ளைக்கார நாடு என்ற எண்ணம் வந்துவிடும். அதைத் தடுக்கும் விதமாக வெளிநாட்டினருக்கு எந்த கெடுதலும் வந்துவிடாமல் சுற்றுலாத்துறையினர் பார்த்துக் கொள்ள வேண்டும்.
அண்மையில் இந்திய சுற்றூலா வளர்ச்சிக்கழகத்தின் சார்பில் சுற்றுலா கண்காட்சியும் கலைநிகழ்ச்சியும் நடைபெற்றது. கிட்டத்தட்ட 15 மாநிலங்களின் கலைஞர்கள் கலந்து கொண்டு நிகழ்சிகளை நடத்தினர், பஞ்சாபி பங்க்ரா நடனம், மணிப்புரி இசைநடனம், அஸ்ஸாம் இசை நடனம் (ரத்னேஷ் அண்ணா கவனிக்க), மேற்கு வங்காள் கல்கத்தா காளி நாட்டிய நடனம், இராஜஸ்தான் பாடல்கள், குஜராத் பொம்மலாட்டம், மலையள களரி சண்டை, தமிழக
உறுமி மேளத்துடன் கரகம் (ஜமாலன் சார் கவனிக்க) ஆகியவை இலவச நிகழ்ச்சிகளாக சிறப்பாக நடைபெற்றது. நிகழ்ச்சியைப்பற்றிய விமர்சனம் எதுவும் இல்லை. எல்லாம் நிறைவாகவே இருந்தது.
எனக்கு மிகவும் பிடித்திருந்தது மணிப்புர் இசை கருவிகளுடன் சுழன்று ஆடிய நடனம், அடுத்து நரம்பை முறுக்கேற்றும் மேளம், நாதஸ்வரத்துடன் கூடிய நம்ம ஊர் கரகம்.
(குஜராத்)
மேற்கு வங்காளம்
இராஜஸ்தான்
(உத்தரபிரதேசம்?)
(கேரளா)
(மணிப்பூர்)
(குஜராத்)
(அஸ்ஸாம்)
(பஞ்சாபி)
(நம்மவூர் கரகம)
மேற்கண்டது மகிழ்வான செய்தி, அதிலும் மறைவான கசப்பு கீழே
**************
திரைக்குப்பின்னால் : நிகழ்ச்சி முடிந்தது தமிழக கலைஞர்களிடம், கேரள கலைஞர்களிடம் பேச்சுக் கொடுத்தேன், தமிழகம், தஞ்சாவூரை சேர்ந்த கலைஞர்களில், 4 இசைகலைஞர்கள் ஆண்கள் 3 கரகாட்ட பெண்கலைஞர்கள் என 7 பேர் வந்திருந்தனர். அவர்களிடம் புலம்பலைக் கேட்க்க முடிந்தது.
"தங்கும் இடம், சாப்பாட்டுக்கெல்லாம் பிரச்சனை இல்லை சார், ஆனால் சம்பளம் ரொம்ப கம்மியாக கொடுக்கிறார்கள்" என்றார் ஒருவர், பக்கத்தில் நின்ற என்னைப் போன்ற பார்வையாளர் 'ஊரு சம்பளத்தைக் கணக்கு பண்ணி கொடுப்பாங்களோ' என்றார், அதற்கு 'அப்படி கொடுத்தாலும் பரவாயில்லை, ஊருல ஒருநாளைக்கு தண்ணி செலவோடு 500 ரூபாய் கிடைக்கும், இங்கு அதுவுமில்லை' என்றார்.
அதுதவிர "இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மற்ற மாநிலக்காரர்களுக்கும் இதே நிலமைதான், இந்த கலைஞர்களுக்கு தேவையானதை செய்து கொடுக்க வேண்டியர் என பொறுப்பு கொடுக்கப் பட்டவருக்கு இந்தியைத் தவிர வேறு மொழி தெரியவில்லை. எங்கள் குழு ஒவ்வொன்றிற்கும் அந்த குழுவில் ஒருவரை தலைவர் என்று சொல்லி அவரிடம் மட்டுமே பொறுப்பாளர் பேசுகிறார், வேறு விபரம் கேட்டாலும் சொல்ல மாட்டேன்கிறார்கள்"
நான் சந்தடி சாக்கில்,"ஏன்ய்யா தார் பூசி இந்தியை அழிச்சிட்டு இப்படி பொலம்புறிங்க, இந்தி படிச்சிருக்கலாம்லே" - நூல்விட்டு கேட்டேன், "அட போங்க சார் மற்ற மாநிலகலைஞர்களும் பொறுப்பாளர் பேசுற இந்தி புரியாமல் விழிக்கிறார்கள், எங்களுக்கு புரிந்திருக்கும் என நினைத்து ஆங்கிலத்தில் வடமாநில கலைஞர்கள் விபரம் கேட்கிறார்கள், இங்கிலீஸ் பேசினாலும் ஓரளவு அனைவருக்கும் புரியும், இந்திகாரனிடம் மாட்டிக்கிட்டு கொடுமையாக இருக்கு" - என்றார்
அழைத்துவரப்படும் இந்திய கலைஞர்களும் மகிழ்ச்சி அடையும் வண்ணம் நடந்து கொள்வதும் சுற்றுலாவளர்ச்சி கழகத்தின் கடமைதான். வயிற்றுப்பாடு என்றாலும் கலைஞர்கள் கலைகளை காப்பவர்கள், அவர்களுக்கு உரிய கவுரவும், ஊதியமும் வழங்கப்பட வேண்டும்
(பிரச்சனை பண்ணாதிங்கப்பா)
படங்கள் அனைத்தும் செல்பேசிவழியாக எடுத்தவை 'பளிச்' சென்று இருக்காது.
ஜமாலன் சாருக்கு தனித்தகவல் : ஜமாலன், கரகாட்டக்கலைஞர்களைப் பற்றி வினவினேன், கரகாட்ட பெண் கலைஞர்கள் செரீனா, செரீபாவுக்கு உறவுக்காரவங்களாம், வயசானதால் பழைய ஆளுங்களெல்லாம் தற்போது ஆடுவது இல்லையாம். :(
12 கருத்துகள்:
குஜராத் நடனம் சூப்பர். போட்டோவில் பார்ப்பதற்கே நன்றாக இருக்கிறது.
படங்கள் அத்தனையும் நன்றாக உள்ளன.
நீங்கள் சொல்வது உண்மை. வெளிநாடுகளில் சென்றால் ஒற்றுமை தானாக வந்து விடுகிறது. இந்தியருக்குள் மட்டும் அல்ல ; அண்டை தேசத்தாருடனும்.
சீனாகாரனுடன் சாப்பாடு பாகிஸ்தானிய விடுதியில். ஒருவன் காஷ்மீரை பிடுங்குகிறான். இன்னொருவன் அருணாச்சல பிரதேசத்தை.
ஆனால் ஒற்றுமையாய் ஹிந்தி (தமிழனுக்கு கிரந்த எழுத்துக்கள் தேவை இல்லை என்று கூறினீர்களோ? :) ) பாட்டு கேட்டுக் கொண்டு சாப்பிடுகிறோம்.
படங்கள் அருமை! சிங்கப்பூர் தொலைக்காட்சியில் "Incredible India !" விளம்பரம் வரும்போது கொஞ்சம் மகிழ்ச்சியாகத் தான் இருக்கிறது. நம்முடைய எல்லா சகோதரர்களுக்கும் அப்படிதான் இருக்கும் என்று நம்புகிறேன். மொழி,மதம், சாதி வாரியா அடித்துக் கொள்வதுதான் வேதனையாக உள்ளது.
இந்திகாரர்களுக்கு(அவங்க நாடுதான் இந்தியான்னு நினைக்கிறவங்க, நம்மை இரண்டாந்தரமாகப் பாக்கிறவங்க) நம்ம ஊரு நையாண்டி மேளம் எல்லாம் பிடிக்காதே...! கரகம் பார்த்ததில் மகிழ்ச்சி!
அன்புடன்,
ஜோதிபாரதி.
இதைச் சொல்ல, இத்தாம் பெரிய பதிவா..
உள் குத்தை தேட வைக்காதீங்க..
தலைப்பிலே வையுங்க... :P
///
"அட போங்க சார் மற்ற மாநிலகலைஞர்களும் பொறுப்பாளர் பேசுற இந்தி புரியாமல் விழிக்கிறார்கள், எங்களுக்கு புரிந்திருக்கும் என நினைத்து ஆங்கிலத்தில் வடமாநில கலைஞர்கள் விபரம் கேட்கிறார்கள், இங்கிலீஸ் பேசினாலும் ஓரளவு அனைவருக்கும் புரியும், இந்திகாரனிடம் மாட்டிக்கிட்டு கொடுமையாக இருக்கு" - என்றார்
///
(அப்பாடா, கோர்த்துவிட்டாச்சு, நிம்மதி..)
மங்களூர் சிவா,
உங்களுக்கு எந்த படம் புடிக்கும் எல்லோருக்குமே தெரியுமே !
நேயர் விருப்பமாக நான் கேட்டது என்ன ஆச்சு ?
// வந்தியத்தேவன் said...
படங்கள் அத்தனையும் நன்றாக உள்ளன.
நீங்கள் சொல்வது உண்மை. வெளிநாடுகளில் சென்றால் ஒற்றுமை தானாக வந்து விடுகிறது. இந்தியருக்குள் மட்டும் அல்ல ; அண்டை தேசத்தாருடனும்.
சீனாகாரனுடன் சாப்பாடு பாகிஸ்தானிய விடுதியில். ஒருவன் காஷ்மீரை பிடுங்குகிறான். இன்னொருவன் அருணாச்சல பிரதேசத்தை.
ஆனால் ஒற்றுமையாய் ஹிந்தி (தமிழனுக்கு கிரந்த எழுத்துக்கள் தேவை இல்லை என்று கூறினீர்களோ? :) ) பாட்டு கேட்டுக் கொண்டு சாப்பிடுகிறோம்.
//
வந்தியத்தேவன் அவர்களே கருத்துக்கு நன்றி.
தமிழனுக்கு கிரந்த எழுத்துக்கள் தேவை இல்லை என்று நான் எங்கும் சொன்னது இல்லை, pa, ba, bha, pha என்பது போல் 'ப' வரிசைகளை எழுத கிரந்த எழுத்துக்கள் தேவை இல்லை என்று சொல்லி இருப்பேன்.
எடுத்துக்காட்டாக,
எழுத்து அமைப்பிலேயே அந்த ஒலிகள் இயல்பாக அமைந்திருக்கிறது,
முழுக்க முழுக்க செந்தமிழில் எழுதும் போது கிரந்த எழுத்துக்கள் தேவை இருக்காது, பிறமொழி பெயர்ச் சொற்களை எழுத கிரந்த எழுத்துக்கள் தேவைப்படும், அவை ஏற்கனவே ஜ்,ஷ்,ஸ்,ஹ் போன்ற தமிழ் வடிவ கிரந்த எழுத்துக்களை பிறமொழிச் பெயர் சொற்களை மொழி மாற்றவழி இல்லை என்றால் அப்படியே எழுத பயன்படுத்தலாம், குஷ்பு இதை தமிழில் மாற்றி குசுபு (நன்றி ரத்னேஷ்) என்று எழுதினால் அவ்வளவு நன்றாக இருக்காது, எவரது பெயரையும் அவரது விருப்பத்துக்கு மாறாக தன்னிச்சையாக தமிழில் எழுதுபவர்கள் மாற்றி எழுதுவதிலும் உடன்பட்டவனல்ல. இதை நான் என்பதிவில் தொடர்ந்து எழுதிவருகிறேன்.
இந்த கிரந்த எழுத்துக்களால் தமிழ் மொழி இலக்கன அமைப்பில் எந்த கலப்பையும் செய்துவிட முடியாது.
கலைச்சொற்கள் என்பவைகள் வேறு தொழில் துறை, புதிய பொருள்களுக்கு இடப்பெரும் அந்த பெயர்களின் பொருளில் நாமும் தமிழில் மாற்றி எழுத முடிந்தால் தமிழ் சொற்களின் எண்ணிக்கை பெருகி மொழிவளமாக இருக்கும்.
எடுத்துக்காட்டு
மேனேஜர் - மேலாளர்
சேல்ஸ் மேன் - விற்பனையாளர்
பஸ் ஸ்டாண்டு - பேருந்து நிலையம்
போன்றவைகள் கலைச் சொற்களுக்கு எடுத்துக் காட்டு.
காஃபி - கொட்டை வடிநீர் என்று மாற்ற உடன்பட்டவனல்ல, காஃபி என்றே சொல்லலாம்.
வினைச்சொற்களை வேர்சொற்களாக கொண்ட வேற்றுமொழிச் சொற்களை தமிழாக்க முடியும், வெறும் பெயர் சொல்லை தமிழ்படுத்த முடியாது.
தமிழில் பெயர் இல்லாத விலங்கின் பெயர்களை அப்படியே பயன்படுத்தலாம்
எ.கா : கங்காரு
சாப்ட்வேர் - என்பதை அழகாக மென்பொருள் என்று மொழி பெயர்த்து இருக்கிறார்கள், இதையெல்லாம் அபத்தம் என்று சொல்லமுடியாது.
எதை எதையெல்லாம் மொழிப்பெயர்களாம் என்று வரையறை இல்லாததால் கண்டபடி ஒருசிலர் மொழிப்பெயர்கிறார்கள், மாற்றுக்குரலில் எதையும் மொழிப்பெயர்க்காமல் அப்படியே எழுதிக் கொள் என்கிறார்கள் ஒருசாரர்
இரண்டுமே தவறு, எவற்றை மொழிபெயர்த்தால் பொருள் ஒட்டிவராதோ அவற்றையெல்லாம் மொழிபெயர்க்கவே கூடாது.
மொழிபெயர்பிலும் நிறைய மாற்றம் வந்திருக்கிறது பாருங்கள்
முன்பு டெலிவிசன் பெட்டி என்றால் தொலைக்காட்சி பெட்டி என்போம், இப்பொழுது பெட்டியை விட்டாகிவிட்டது, தொலைவும் போகிவிட்டது, டிவிடியை போட்டு படம் பார்பதால் தொலைக்காட்சி பெட்டி என்ற பொருள் சரிவராது, சின்னத்திரை என்று மாற்றிக் கொண்டிருக்கிறார்கள், ஆங்கிலத்தில் இன்னும் வடிவம் மாறினாலும் எல் சி டி டெலிவிசன் என்று தான் சொல்கிறார்கள். சரியான ஆங்கிலச் சொல் வீடியோ பாக்ஸ், இப்போது எங்கே டெலிவிசன், எல்லாமே அண்மை விசன் தானே.
எந்த ஒரு பெயர் சொல்லிலும் அதன் பொருள் இருந்தால் அதை தமிழுக்கு மாற்ற முடியும், பொருளில்லாத பெயர் சொற்களை மொழிமாற்ற முடியாது.
கீ போர்ட் - விசை பலகை,
சிடி (காம்பேக்ட் டிஸ்க்) - குறும் தகடு
பொதுவான வண்ணங்கள் தவிர்த்து பல வண்ணங்களுக்கு ஆங்கிலப் பெயர் உண்டு, தமிழில் அது போல் இல்லை அப்படியெ பயன்படுத்தலாம்.
(IVORY) ஐவரி கலர், இதை எப்படி தமிழ்படுத்த முடியும், வேண்டுமானல் தந்த நிறம் என்று சொல்லலாம், பொருத்தமாக இருக்குமா என்று தெரியவில்லை.
// TBCD said...
இதைச் சொல்ல, இத்தாம் பெரிய பதிவா..
உள் குத்தை தேட வைக்காதீங்க..
தலைப்பிலே வையுங்க... :)
(அப்பாடா, கோர்த்துவிட்டாச்சு, நிம்மதி..)
//
அடப்பாவி நீயே காட்டிக் கொடுத்துடுவ போல இருக்கே,
அதுவும் இடுகை தொடர்பில் இருப்பது, நேரடியாக பார்த்ததால் குறிப்பிட்டேன்.
:)
//ஜோதிபாரதி said...
படங்கள் அருமை! சிங்கப்பூர் தொலைக்காட்சியில் "Incredible India !" விளம்பரம் வரும்போது கொஞ்சம் மகிழ்ச்சியாகத் தான் இருக்கிறது. நம்முடைய எல்லா சகோதரர்களுக்கும் அப்படிதான் இருக்கும் என்று நம்புகிறேன். மொழி,மதம், சாதி வாரியா அடித்துக் கொள்வதுதான் வேதனையாக உள்ளது.
இந்திகாரர்களுக்கு(அவங்க நாடுதான் இந்தியான்னு நினைக்கிறவங்க, நம்மை இரண்டாந்தரமாகப் பாக்கிறவங்க) நம்ம ஊரு நையாண்டி மேளம் எல்லாம் பிடிக்காதே...! கரகம் பார்த்ததில் மகிழ்ச்சி!
அன்புடன்,
ஜோதிபாரதி.
//
ஜோதி,
சிங்கையில் இருக்கும் இந்தியர்களின் விழுக்காடு படிதான் பார்வையாளர்கள் வந்திருந்தனர். தமிழர்கள் நிறைய பேர் போல் தெரியும், வட இந்தியர்களும் கனிசமான அளவில் வந்திருந்தனர்.
விளம்பரம் பார்த்து மகிழ்ந்தீர்களா ?
நாமெல்லாம் இந்தியாவில் இருக்கும் போது எப்போதும் இந்தியாவை திட்டிக் கொண்டிருப்போம், வெளிநாடு வந்துவிட்டால் பெருமை படுவோம்,
மற்றொரு குழு இருக்கிறது, தேசியம், ஹிந்து ராஷ்டரம் என்றெல்லாம் இந்தியாவில் இருக்கும் போது புகழ்ந்து பேசுவார்கள், கேட்பதற்கு சுதந்திர போராட்ட தியாகி பேசுவது போலவே இருக்கும், அவர்களில் பலர் வெளிநாட்டுக்கு வந்துவிட்டால் போது, இந்தியாவெல்லாம் ஒரு நாடா அமெரிக்காவைப் போல் வருமா என்பார்கள்.
இரண்டுக்கும் எவ்வளவு வேறுபாடு இருக்கிறது.
இந்தியாவில் இருக்கும் போது நமக்கு அதன் மேல் ஆற்றமையால் கோபம் வரும், வெளியில் வந்துவிட்டால் பரிவு வரும். அவர்கள் மறந்தே போய்விடுவார்கள்
//ஜெகதீசன் said...
:)
//
தம்பி ஜெகா,
சிரிப்பானைத்தவிர எதும் எழுதக்கூடாத விரதமா ?
எப்போ முடியும். நான் வேண்டுமானால் சூஸ் வாங்கி கொடுத்து விரதம் முடிக்க ஏற்பாடு செய்கிறேன்.
//....pa, ba, bha, pha என்பது போல் 'ப' வரிசைகளை எழுத கிரந்த எழுத்துக்கள் தேவை இல்லை என்று சொல்லி இருப்பேன்.
....எழுத்து அமைப்பிலேயே அந்த ஒலிகள் இயல்பாக அமைந்திருக்கிறது...//
உண்மையில் இதை குறிக்கவும் கிரந்தம் தேவை என்று தான் கூறுகிறது. மலையாளம் புத்திசாலித்தனமாக இதை எல்லாம் எடுத்துக் கொண்டதோ என்று தோன்றுகிறது.
எழுத்து அமைப்பில் ஒலிகள் எவ்வாறு இயல்பாய் அமைந்திருக்கிறது என்று கூறுகிறீர்கள்?
"தமிழில் வரிவடிவமும் ஒலிவடிவமும் ஒன்று. ஆங்கிலம் போல அல்ல" என்று சொல்லி வந்தார்கள். ஆனால் ஒரு வரிவடிவதிற்கு இரண்டு ஒலிவடிவம்
இருக்கிறதே!
பாருங்கள். அர்த்தம் தெரியாமல் சொன்னால் பாபா, பாப்பா இரண்டும் ஒரே போல் ஒலிக்கலாம்.
எங்களுக்கு முன்பு தமிழ் பாட நூலில் பாயம்மா என்ற கதை வந்தது. இதை எல்லாரும் எதோ பாய் விற்கும் அம்மா போல என்ற தொனியில் சொல்லி வந்தோம். கடைசியில் தான் தெரிந்தது அவர் முஸ்லீம் பெண்மணி - அதனால் பா(ba)யம்மா என்று.
// இந்த கிரந்த எழுத்துக்களால் தமிழ் மொழி இலக்கன அமைப்பில் எந்த கலப்பையும் செய்துவிட முடியாது.//
பிற மொழிச் சொற்கள் கலந்தாலும் இலக்கண அமைப்பில் ஒன்றும் செய்ய முடியாது. (அதற்காக நான் பிறமொழிக் கலப்பை ஆதரிக்கிறேன் என்று நினைக்காதீர்கள். நான் இன்னும் ஒரு முடிவுக்கு வரவில்லை! வீட்டு பாடம் பாக்கி இருக்கிறது! :) )
// காஃபி - கொட்டை வடிநீர் என்று மாற்ற உடன்பட்டவனல்ல, காஃபி என்றே சொல்லலாம்.//
தேநீர் என்று கூறலாம் என்றால் குளம்பி (கொட்டை) நீர் என்று ஏன் கூறக் கூடாது?
//வினைச்சொற்களை வேர்சொற்களாக கொண்ட வேற்றுமொழிச் சொற்களை தமிழாக்க முடியும், வெறும் பெயர் சொல்லை தமிழ்படுத்த முடியாது.//
அருமையாக சொல்லி இருக்கிறீர்கள். உடன்படுகிறேன்.
(சாப்ட்வேர் - மென்பொருள் சரி, hardware - தமிழாக்கம் என்ன ?)
// எதை எதையெல்லாம் மொழிப்பெயர்களாம் என்று வரையறை இல்லாததால் கண்டபடி ஒருசிலர் மொழிப்பெயர்கிறார்கள், //
யுனிகோடு என்பதை ஒருங்குறி என்று மொழி பெயர்க்கலாமா என்ற சர்ச்சையை நினைவு கூர்கிறேன். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
இது பெயர்ச் சொல் என்பதால் கூடாதா? இல்லை காரணப் பெயர்ச்சொல் என்பதால் செய்யலாமா?
//முன்பு டெலிவிசன் பெட்டி என்றால் தொலைக்காட்சி பெட்டி என்போம், இப்பொழுது பெட்டியை விட்டாகிவிட்டது, தொலைவும் போகிவிட்டது,
டிவிடியை போட்டு படம் பார்பதால் தொலைக்காட்சி பெட்டி என்ற பொருள் சரிவராது//
:)))
கண் கெடாமல் இருக்க நாம் தொலைவில் அமர்ந்து பார்க்க்க வேண்டிய பெட்டி என்று வைத்துக் கொள்ளலாமா?
சில சமயம் காரணப் பெயர்கள் காரணம் இல்லாமல் போவதும் உண்டு.
பறப்பதால் பறவை. - நெருப்புக் கோழி (ostrich) பறக்கா விட்டாலும் பறவை தான்.
//உண்மையில் இதை குறிக்கவும் கிரந்தம் தேவை என்று தான் கூறுகிறது. மலையாளம் புத்திசாலித்தனமாக இதை எல்லாம் எடுத்துக் கொண்டதோ என்று தோன்றுகிறது. //
இதைக் குறித்து எனக்கு மாறுபட்ட கருத்துக்கள் உண்டு.
ஏற்கனவே இதுபற்றி எழுதி இருக்கிறேன்
http://govikannan.blogspot.com/2007/01/blog-post_17.html
மேலும் ஒரு கட்டுரை எழுத உள்ளேன்.
//எழுத்து அமைப்பில் ஒலிகள் எவ்வாறு இயல்பாய் அமைந்திருக்கிறது என்று கூறுகிறீர்கள்?
//
தங்கை - thangai இதில் ga என்ற ஒலி இயல்பாகவே வரும்.
//"தமிழில் வரிவடிவமும் ஒலிவடிவமும் ஒன்று. ஆங்கிலம் போல அல்ல" என்று சொல்லி வந்தார்கள். ஆனால் ஒரு வரிவடிவதிற்கு இரண்டு ஒலிவடிவம்
இருக்கிறதே!//
அதெல்லாம் ஆங்கிலத்திலும் உண்டு
car கார்
cat - காட் அல்ல கேட்
//பாருங்கள். அர்த்தம் தெரியாமல் சொன்னால் பாபா, பாப்பா இரண்டும் ஒரே போல் ஒலிக்கலாம்.
//
எழுதுவது போலே ஒலிக்காமல் பழக்கத்தின் காரணமாக ஒலிக்கும் முறை பல மொழிகளிலும் உண்டு. மேலே சொன்னது தான். ஆங்கிலத்தில் இவை அளவில் மிக்கவையாக உள்ளது
//எங்களுக்கு முன்பு தமிழ் பாட நூலில் பாயம்மா என்ற கதை வந்தது. இதை எல்லாரும் எதோ பாய் விற்கும் அம்மா போல என்ற தொனியில் சொல்லி வந்தோம். கடைசியில் தான் தெரிந்தது அவர் முஸ்லீம் பெண்மணி - அதனால் பா(ba)யம்மா என்று. //
நம்ம கிராம பகுதிகளில் ரசினி, பாக்கியராசு என்று தான் சொல்வார்கள் அவர்களுக்கு சரியாகத் சொல்லத்தெரியவில்லை என்பீர்களா ?
ஒலிகள் பழகுவது படித்துப் பழகுவதனால் தான் pa ba எழுத்து மட்டுமே, பழக்கத்தில் வந்தால் மட்டுமே சரியாக சொல்ல முடியும்.
//
பிற மொழிச் சொற்கள் கலந்தாலும் இலக்கண அமைப்பில் ஒன்றும் செய்ய முடியாது. (அதற்காக நான் பிறமொழிக் கலப்பை ஆதரிக்கிறேன் என்று நினைக்காதீர்கள். நான் இன்னும் ஒரு முடிவுக்கு வரவில்லை! வீட்டு பாடம் பாக்கி இருக்கிறது! :) )//
நான் வினைச் சொற்கள் குறித்து சொன்னேன், வெட்டினான் எண்பதை கட் பண்ணினான் என்று சொன்னால் அது மொழி கொலைதான்.
//தேநீர் என்று கூறலாம் என்றால் குளம்பி (கொட்டை) நீர் என்று ஏன் கூறக் கூடாது?//
தேநீர் புழக்கத்தில் இருக்கு தேயிலை நீர் > தே (teh) என்பதே ஆங்கிலத்தில் டீ (Tea) என்று திரிந்தது, சீன மொழியிலும் 'தே' தான்
(சாப்ட்வேர் - மென்பொருள் சரி, hardware - தமிழாக்கம் என்ன ?)
வன்பொருள் :) நேரடி மொழியாக்கம் தான், ஆங்கில பொருள் சரி என்றால் தமிழும் சரிதான்
//யுனிகோடு என்பதை ஒருங்குறி என்று மொழி பெயர்க்கலாமா என்ற சர்ச்சையை நினைவு கூர்கிறேன்.
//
ஒருங்குறி சரியான சொல்தான், ஆங்கில பொருளின் நேரடி தமிழாக்கம்
//:)))
கண் கெடாமல் இருக்க நாம் தொலைவில் அமர்ந்து பார்க்க்க வேண்டிய பெட்டி என்று வைத்துக் கொள்ளலாமா? //
:))
எவ்வளவு தொலைவு அமர்ந்து என்பது காட்சித்திரையின் அளவு பொருத்தது
:)
//சில சமயம் காரணப் பெயர்கள் காரணம் இல்லாமல் போவதும் உண்டு.
பறப்பதால் பறவை. - நெருப்புக் கோழி (ostrich) பறக்கா விட்டாலும் பறவை தான்.//
அது பறவை இனம், பறப்பதற்கான இறக்கை இருக்கிறது, அதன் பருமன் காரணமாக பறக்க முடியவில்லை.
வான்கோழி வானத்தில் பறக்குமா என்று கேட்க முடியுமா ?
:)
மிக்க நன்றி வந்தியதேவன் அவர்களே
என்னையும் ரத்ணேஷையும் மாநிலப் பிரதிநிதியாக ஆக்கிவிட்டீர்களே என்று முதலில் எண்ணினேன்... இறுதியில் கரகாட்டம் சரீனா என்று நம்ம ரசிகர் மன்றப் பிரதிநிதியாக ஆக்கியதற்கு மகிழ்ச்சி.
இந்தியா என்றாலே ராஜஸ்தான் உடை, ஒட்டகம், கைநிறைய வளையல் அணிந்த பெண்கள் என்பதான பண்பாட்டையே காட்டும் பி.பி.சி. துவங்கி இந்திய விளம்பரங்கள் (Incredible India) வரை இந்தியப் பண்பாட்டை ஒற்றைப்பண்பாடாக காட்ட முயல்வதிலிருந்து இத்தகைய கலை விழாக்கள் ஆறுதலானவை. அதிலும் தமிழ்ப் பண்பாடு என்றால் பரதமே காட்டப்படுவதும் இல்லாவிட்டால் கோலம்போடும் பெப்சி உமா அல்லது பல கைகளுடன் துர்காவை நினைவூட்டும் அரைகுறை ஆடையில் கவர்ச்சிப் புயல் எனப்படும் சிரேயா.. ஆகியவர்களை தமிழகப் பணபாட்டு பிரதிநிதிகாளாக காட்டும் (deccan cronicle advt. ) நிலையிலிருந்து இத்தகைய முயற்சிகள் கொஞ்சம் பன்முகத்தன்மையைக் காட்ட முனைகிறது. மற்றொரு அவலம் கரகாட்டம் போன்ற கிராமியக்கலைகள் அழிந்தும் சினிமாக்களால் சீரழிந்தும் மாறியும் போய்க்கொண்டுள்ளன. குறைந்தபட்சம் இவை அவற்றை காக்கலாம். அதே நேரத்தில் கலைஞர்களை மதிக்கம் லட்சணத்தையும் நீங்கள் சுட்டியிருப்பது இத்தகையவர்கள் அதிகாரம் பயன்படுத்தும் விதம் கலை அல்ல சுயலாபம் என்பதை வெட்ட வெளிச்சமாக்கியுள்ளது.
மொழி குறித்த விவாதம் (பின்னொட்டங்கள்) அருமையாக உள்ளது.
நன்றி.
கருத்துரையிடுக