மொழிகள் வெறும் தகவல் தொடர்பு சாதனமாகவே தோன்றிய காலத்தில் இருந்தது, அதாவது பறவைகள், விலங்குகளின் குரல் ஒலி போல் ஒரு தகவல் பரிமாற்றத்திற்காகவே முதன் முதலில் மொழிகள் ஏற்பட்டு இருக்க வேண்டும். உலகில் உள்ள எந்த மொழியும் (கணனி மொழி தவிர்த்து) தோன்றிய காலத்தில் எழுத்துடனே தோன்றி இருந்ததற்கான கூறுகளே (ஆதாரம்) இல்லை.
பறவைகளின், விலங்குகளின் தொண்டை மற்றும் நாக்கு அமைப்பிற்கு ஏற்றார் போல் குரல் ஒலி இருக்கும், ஒரு குறிப்பிட்ட வகை பறவைகளின் குரல் ஒலி அதே வகை இன்னொரு பறவையின் குரல் ஒலியை ஒத்தே இருக்கும், இது போன்று தான் ஒவ்வொரு வகை விலங்குகளுக்கும் ஒலியிளவில் ஏற்ற இரக்கம் இருக்கும். அவை தம் சூழலுக்கு, தேவைக்கு ஏற்ப எழுப்பும் ஒலிகள் எல்லாம் ஒரே அளவில் (wave length) தான் இருக்கும்.
மனிதன் சமூக விலங்கு, பழங்குடி(ஆதிவாசி)களாக இருந்தாலும் தனக்கென சமூகம் அமைத்துக் கொண்டவன், குழுவாகவே வாழப் பழக்கப்பட்டவன், பழங்கால மனித குழுக்களில் அந்தந்த குழுக்களுக்குள் தோற்ற அமைப்பும் குரல் ஒலியும் ஒன்று போலவே இருந்திருக்கலாம், காலப்போக்கில் இனக்குழுக்கள் கலந்த போது பல்வேறு நிற இனங்களில் கலப்பில், இனக்குழுக்களுக்குள் பல்வேறு முகசாயல் உடைய மனிதனாக பரிணாமம் பெற்றுவிட்டான். சீனர்கள் என்றாலே அவர்களது முகம் இப்படித்தான் இருக்கும், எல்லோருமே நகல் (க்ளோனிங்) செய்யப்பட்டவர்கள் போல இருக்கிறார்கள் என்றே நினைப்போம், ஆனால் அவர்களுடன் நாள் தோறும் பழகுபவர்களுக்கு அவர்களின் ஒவ்வொரு முகமும் இந்தியர்களைப் போலவே வேறுவேறு வடிவானது என்பது தெரியும். மேற்கு இந்திய மட்டை(கிரிக்கெட்) ஆட்டக்காரர்களைப் பார்த்தபிறகும் கருப்பின மக்களைக் கூட நாம் ஒரே தோற்றம் முடையவர்கள் என்றே நினைக்கிறோம், அவை வெறும் உடல் அமைப்புதான், முக அமைப்பு, குரல் ஒலி எந்த ஒரு இனத்திலும் இரட்டையர்கள், உடன்பிறந்தோர் தவிர்த்து ஒன்றுபோலவே இருக்காது.
முதலாக காணப்பட்ட மனித குழுக்களுள் ஒவ்வொன்றிலும் அவர்களுக்குள் குரல் ஓலியும் தோற்றமும் ஏறக்குறைய ஒன்று போலவே இருந்திருக்க வேண்டும், அவர்களுக்குள் எழுப்பிக் கொண்ட ஒலிகளே நாளடைவில் வேறுப்பட்ட தகவல் பரிமாற்றத்திற்கான சுட்டொலிகளாக ( அல், உல், குல் - அங்கே, இங்கே, பக்கத்திலே) மாறி மொழியாக வளர்ந்திருக்கிறது. நாகரீகம் வளர்ச்சியடையாத இனக்குழுக்களுக்கு தகவல் சேமிப்பு என்பதற்கான தேவையே இல்லை, ஏனென்றால் அவர்கள் எளிய ஆயுதங்களை செய்வது, வேட்டையாடுவது மற்றும் குடில்களை அமைத்துக் கொள்வது என்பது மட்டுமே அவர்கள் வாழ்நாளில் தெரிந்து கொள்ளவேண்டியவை. அதனால் அவர்களுக்கு பேசும் மொழியில் எழுத்துக்கள் தேவையற்றதாகவும், பேசும் மொழியே மூத்தோர் வழி வாய்வழியாக அறியப்பட்டு அவர்களுக்குள் புழங்கி வந்தது. அது போன்ற பழங்குடியினரின் மொழிகள் எத்தனை ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் அந்த மொழி சிதையாமலேயே இருக்கும்.
நாகரீகம் பெற்ற இனக்குழுக்கள் மொழியை தகவல் பரிமாற்றத்திற்காக பயன்படுத்துவது என்பதிலிருந்து தகவல் சேமிப்பு என்பதை நோக்கி மொழியை கொண்டு செல்ல முயன்ற போது எழுத்து என்பது அதற்கு இன்றியமையாதது, தேவை (அத்யாவசியம், அவசியம்) என்றாகியது.
தொடரும்...
பின்பற்றுபவர்கள்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
மதமும் மார்க்கமும் !
எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"
இறைவன் - மதம்
இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !
-கோவியார்
9 கருத்துகள்:
//அது போன்ற பழங்குடியினரின் மொழிகள் எத்தனை ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் அந்த மொழி சிதையாமலேயே இருக்கும்.//
உண்மையான வார்த்தை. எழுத்து ரூபங்களில் வரும் மொழிகளைப் பற்றி அவ்வாறு கூற இயலாததுதான். ஆனால் இம்மாதிரி மாறுவதே அம்மொழியின் வளர்ச்சியாகவும் பார்க்கப்படுகிறது. டி.என்.ஏ.க்களில் ம்யூட்டேஷன்கள் ஏற்படுவதால்தானே சிருஷ்டியில் இவ்வளவு வகைகள் உண்டாயிற்று.
இன்னொரு கோணமும் உண்டு. பழங்குடியினர் மொழிக்கு ஆவணப்படுத்தல் இல்லையென்பதால் அந்த மொழி பேசுபவர்கள் காலத்தின் கட்டாயத்தால் இல்லாமல் போகும்போது மொழியே இல்லாமல் போய் விடுகிறது.
தொடர் சுவாரசியமாக உள்ளது. மேலும் எதிர்ப்பார்க்கிறேன்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
ஆம். இன்னும் காட்டுவாசி பழங்குடியினர், தனி மொழிகளை பேசிவருகிறார்கள். ஒலி வடிவம் மட்டுமே கொண்டது. எழுத்து வடிவம் இல்லை. எவ்வளவு நாளாக இருக்கின்றன என்பதற்கு ஆதாரங்கள் இருக்கின்றனவா?
அன்புடன்,
ஜோதிபாரதி.
சிருஷ்டி என்றால் என்ன? அர்த்தம் விளங்கிக் கொள்ள வேண்டிக் கேட்கிறேன்.
அன்புடன்,
ஜோதிபாரதி.
// dondu(#11168674346665545885) said...

//
டோண்டு ராகவன்,
நீங்கள் மொழிகள் பற்றி அறிந்தவர் என்பதால் உங்கள் கருத்துக்கள் சிறப்பானவையே.
//ஆவணப்படுத்தல் இல்லையென்பதால் அந்த மொழி பேசுபவர்கள் காலத்தின் கட்டாயத்தால் இல்லாமல் போகும்போது மொழியே இல்லாமல் போய் விடுகிறது//
இங்கு சிறிது மாறுபடுகிறேன்,
அந்த மொழி அழிந்ததற்கு காரணம், அம்மக்கள் நாகரீக வளர்ச்சி பெற்று பிரிதொரு குழுவின் மொழிகளை பேசுபவர்களாக மாறி இருக்கலாம், அல்லது அந்த இனக்குழுவே அழிந்து போய் இருக்கலாம், ஆசிய நாடுகளில் வாழும் பல்வேறு பலங்குடியினர்களின் அவர்தம் மொழிகள் அழிந்து போனதாக தெரியவில்லை.
இன்றைக்கு அழிவு நிலையில் இருக்கும் மொழிகள் எனபட்டியலில் இருப்பவை நாகரீகம் பெற்றவர்களால் பேசமறுக்கப்பட்டு, மறக்கப்பட்டு ஏற்கனவே எழுத்துவடிவம் பெற்றுவிட்ட மொழிகளே மிக்கவை.
பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி,
இந்த தொடர் 50 விழுக்காடு எழுதி முடித்துவிட்டேன், மீதம் இருப்பவைகளுக்கு ஆவணங்களை தேடிப்போட வேண்டி இருக்கிறது, வாரம் ஒருமுறையாவது இந்த தொடர் தொடரும்.
//ஜோதிபாரதி said...
ஆம். இன்னும் காட்டுவாசி பழங்குடியினர், தனி மொழிகளை பேசிவருகிறார்கள். ஒலி வடிவம் மட்டுமே கொண்டது. எழுத்து வடிவம் இல்லை. எவ்வளவு நாளாக இருக்கின்றன என்பதற்கு ஆதாரங்கள் இருக்கின்றனவா?
அன்புடன்,
ஜோதிபாரதி.
10:34 AM, April 19, 2008 //
மனித இனம் பரிணாமம் பெற்று தற்பொழுது இருக்கும் உருவத்தை அடைந்திருப்பதாகச் சொல்கிறார்கள். அது ஏற்றுக் கொள்ளத் தக்கது என்ற அளவுக்குத்தான் இருக்கிறது, உண்மை என்ற அளவுக்கு இல்லை. கற்கால ஆராய்ச்சிகள் எல்லாமும் ஏற்றுக் கொள்ளத் தக்கவை என்ற அளவில் தான் அதன் முடிவுகள் இருக்கும், அவை உண்மை என்று அறுதி இட்டுக் கூறமுடியாது.
மனிதன் இனக்குழுக்களாக இருந்த காலத்தில் தமக்குள் உரையாட தொடங்கிய காலத்தில் இருந்தே, பறவைகள் ஒலி எழுப்பிக் கொள்வதைப் போலவே அவனுக்கென்ற சுட்டொலிகள் இருக்கின்றன அவை வளர்ச்சி பெற்று இன்றைக்கு மொழிகள் என்ற நிலையில் இருக்கின்றன.
http://en.wikipedia.org/wiki/Language
இதைப்படிங்க நன்றாக இருக்கும்
//ஜோதிபாரதி said...
சிருஷ்டி என்றால் என்ன? அர்த்தம் விளங்கிக் கொள்ள வேண்டிக் கேட்கிறேன்.
அன்புடன்,
ஜோதிபாரதி.
//
ஜோதி,
'சிருஷ்டி' இது டோண்டு ராகவன் சொல்லி இருப்பது, அதற்கு அவர் விளக்கம் சொல்லுவார்.
எனது விளக்கம் விளங்கிக்கொண்ட வரையில் சொல்கிறேன்.
சிந்தையில் தோன்றுவதை கண்முன் உருவாக்கிக் காட்டுவது 'சிருஷ்டி' - இறை நம்பிக்கையாளர்களுக்கு பிடித்தமான சொல், எல்லாம் இறைவனின் சிந்தையின் வழி அவன் விருப்பப்படி தோன்றியவை என்று சொல்லுவார்கள். இறைவன் அவ்வாறு செய்வதற்கான தேவையோ, நோக்கமோ இதுவரை எந்த மதமோ, புரோணங்களோ விளக்கியதில்லை. இந்துமதத்தில் இருக்கும் ஒரு பழைய (புராணத்தில்) இலக்கியத்தில் பிரம்மன் தூங்கினான், எழுந்தான் என்ற கணக்கெல்லாம் சொல்லுவார்கள், அவன் ஏன் தூங்கினான் ஏன் எழுந்தான் என்றெல்லாம் சொல்லப்பட்டது இல்லை.
'சிருஷ்டி' என்ற சொல்லின் பொருள் இருப்பது உண்மை, சிருஷ்டி உண்மை என்று நான் நம்புவதில்லை. எனது நம்பிக்கை எந்த ஒரு பொருளையும் மற்றொரு பொருளின் சிதைவின்றி உருவாக்கவே முடியாது, அதாவது பல்வேறு தோற்றங்களுக்கான காரணம், அவை மற்றொரு பொருளின் சிதைவே. எளிமையாகச் சொல்லப் போனால் மூலப் பொருள் என்ற முதல் பொருள் இருந்ததே இல்லை.
// கோவி.கண்ணன் said...
//ஜோதிபாரதி said...
ஆம். இன்னும் காட்டுவாசி பழங்குடியினர், தனி மொழிகளை பேசிவருகிறார்கள். ஒலி வடிவம் மட்டுமே கொண்டது. எழுத்து வடிவம் இல்லை. எவ்வளவு நாளாக இருக்கின்றன என்பதற்கு ஆதாரங்கள் இருக்கின்றனவா?
அன்புடன்,
ஜோதிபாரதி.
10:34 AM, April 19, 2008 //
மனித இனம் பரிணாமம் பெற்று தற்பொழுது இருக்கும் உருவத்தை அடைந்திருப்பதாகச் சொல்கிறார்கள். அது ஏற்றுக் கொள்ளத் தக்கது என்ற அளவுக்குத்தான் இருக்கிறது, உண்மை என்ற அளவுக்கு இல்லை. கற்கால ஆராய்ச்சிகள் எல்லாமும் ஏற்றுக் கொள்ளத் தக்கவை என்ற அளவில் தான் அதன் முடிவுகள் இருக்கும், அவை உண்மை என்று அறுதி இட்டுக் கூறமுடியாது.
மனிதன் இனக்குழுக்களாக இருந்த காலத்தில் தமக்குள் உரையாட தொடங்கிய காலத்தில் இருந்தே, பறவைகள் ஒலி எழுப்பிக் கொள்வதைப் போலவே அவனுக்கென்ற சுட்டொலிகள் இருக்கின்றன அவை வளர்ச்சி பெற்று இன்றைக்கு மொழிகள் என்ற நிலையில் இருக்கின்றன.
http://en.wikipedia.org/wiki/Language
இதைப்படிங்க நன்றாக இருக்கும்//
விளக்கமான தகவலுக்கு நன்றி திரு.கோவி.கண்ணன்.
உங்கள் பதிவுகள் பல்வேறு பரிணாமங்களில் இருக்கின்றன. எல்லோருக்கும் அமைவதில்லை. தங்கள் தமிழ்ப் பணி சிறக்க வாழ்த்துக்கள்!
//கோவி.கண்ணன் said...
//ஜோதிபாரதி said...
சிருஷ்டி என்றால் என்ன? அர்த்தம் விளங்கிக் கொள்ள வேண்டிக் கேட்கிறேன்.
அன்புடன்,
ஜோதிபாரதி.
//
ஜோதி,
'சிருஷ்டி' இது டோண்டு ராகவன் சொல்லி இருப்பது, அதற்கு அவர் விளக்கம் சொல்லுவார்.
எனது விளக்கம் விளங்கிக்கொண்ட வரையில் சொல்கிறேன்.
சிந்தையில் தோன்றுவதை கண்முன் உருவாக்கிக் காட்டுவது 'சிருஷ்டி' - இறை நம்பிக்கையாளர்களுக்கு பிடித்தமான சொல், எல்லாம் இறைவனின் சிந்தையின் வழி அவன் விருப்பப்படி தோன்றியவை என்று சொல்லுவார்கள். இறைவன் அவ்வாறு செய்வதற்கான தேவையோ, நோக்கமோ இதுவரை எந்த மதமோ, புரோணங்களோ விளக்கியதில்லை. இந்துமதத்தில் இருக்கும் ஒரு பழைய (புராணத்தில்) இலக்கியத்தில் பிரம்மன் தூங்கினான், எழுந்தான் என்ற கணக்கெல்லாம் சொல்லுவார்கள், அவன் ஏன் தூங்கினான் ஏன் எழுந்தான் என்றெல்லாம் சொல்லப்பட்டது இல்லை.
'சிருஷ்டி' என்ற சொல்லின் பொருள் இருப்பது உண்மை, சிருஷ்டி உண்மை என்று நான் நம்புவதில்லை. எனது நம்பிக்கை எந்த ஒரு பொருளையும் மற்றொரு பொருளின் சிதைவின்றி உருவாக்கவே முடியாது, அதாவது பல்வேறு தோற்றங்களுக்கான காரணம், அவை மற்றொரு பொருளின் சிதைவே. எளிமையாகச் சொல்லப் போனால் மூலப் பொருள் என்ற முதல் பொருள் இருந்ததே இல்லை.//
டோண்டு அய்யா விளக்குவதற்கு முன்பு தாங்கள் விளக்கியதற்கு நன்றி.
942 பக்கங்கள் கொண்ட எனது தமிழகராதியில் சிருஷ்டி என்பது இல்லை. சிருட்டி என்றிருக்கிறது, அதற்கு படைப்பு அல்லது சிறந்தது என்று பொருள் விளங்கிக் கொள்ளவேண்டும் என்று இருக்கிறது. நாம் படைப்பு என்றே விளங்கிக் கொள்வோமே.
இன்னொரு, வீரமாமுனிவர் எழுதிய தமிழகராதியில் பார்த்தேன் சிருட்டித்தல் என்றால் படைப்பித்தல் என்றிருக்கிறது. மொழியியல் வல்லுநர் திரு. டோண்டு அவர்களின் பல்வேறு வார்த்தைப் பிரயோகங்கள், சில நேரம் நமக்கு, அதற்கு சரியான தமிழ் வார்த்தையைத் தேட வைத்து விடுகிறது. என்னா. கொஞ்சம் நேரம் எடுக்கும் புரிந்துகொள்வதற்கு. வேறொன்றுமில்லை.
அன்புடன்,
ஜோதிபாரதி.
Nice. Expecting the next parts!!!
இந்த இடத்தில் நான் சிருஷ்டி என்பதை இறை அர்த்தத்தில் கூறவில்லை. டார்வின் கோட்பாட்டின்படி இயற்கையில் எது நிலைத்து நிற்கிறதோ அதுவே வெற்றி பெறுகிறது என்பர் பலர். ஒரு மொழி காலத்தின் தேவைக்கேற்ப தன்னை மாற்றிக் கொள்வதால் அதிக பலத்துடன் விளங்குகிறது. உதாரணத்துக்கு ஆங்கிலம் சர்வசாதாரணமாக பிறமொழிகளிலிருந்து வார்த்தைகளை கடனாகப் பெற்று லோக்கலைசேஷன் செய்து கொள்கிறது. அதன்படி தமிழ்ச்சொல் அரிசியிலிருந்து rice என்று வந்தது என்பதை தமிழைத் தாய்மொழியாக கொண்ட நான் நம்ப ஆசைப்படுவேன். அவ்வாறு மாற்றம் பெறுவதைத்தான் ம்யூட்டேஷன் எனக் கூறினார்கள்.
பழையன கழிதலும் புதியன புகுதலும் என்று சர்வ சாதாரணமாகக் கூறப்படுவதின் பின்னால் இயற்கையின் மிகப்பெரிய ரகசியம் ஒளிந்துள்ளது. இந்த செயல்பாடும் சிருஷ்டியில் வரும். மற்றப்படி ஆறு நாட்களில் இறைவன் உலகைப் படைத்தான், ஏழாம் நாள் ஓய்வு கொண்டான், அல்லது உலக முடிவில் பிரளயம் வந்து ஆலிலையில் குழந்தை கிருஷ்ணன் தோன்றுவான் என்ற ஆட்டத்துக்கெல்லாம் நான் வரவில்லை.
அன்புடன்,
டோண்டு ராகவன்
கருத்துரையிடுக