பின்பற்றுபவர்கள்

26 ஏப்ரல், 2008

தமிழகத்துக்குத் தேவை ஒரு தலித் முதல்வர் !

"பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும்" - என பெண்களின் முன்னேற்றம் குறித்த நடுத்தரவரக்கத்தினரின் கவலையை பாரதி பாடிவைத்தான். முன்னேறிய சமூகமாக மாறிக் கொண்டிருப்பவர்களுக்கு இவை ஏற்புடைய கருத்துக்கள். இந்திய தேசத்தில் பெண்கள் எந்த அளவுக்கு இழிவு படுத்தப்படுகிறார்களோ, அந்த அளவுக்கு உயர்வும் படுத்தப்பட்டு இருக்கிறார்கள், விதவை என்றாலே முகத்தை மறைத்துக் கொண்டு சகுனம் பார்ப்பவர்கள் இருக்கும் இந்தியாவில் தான் அன்னை இந்திரா - விதவை பிரதமர் வழிநடத்தி இருக்கிறார்.
பெண் சமுகம் மட்டுமல்ல எந்த ஒரு சமூகமும் மேலெழுவதற்கு படிப்பதாலும், உயர் பதவியில் அமர்வதாலும் தாழ்வுணர்ச்சியில் இருந்து மீண்டுவர முடியும்.

சுதந்திர போராட்டகாலத்திற்கு முன்பு வரை நாடார்கள் தீண்டத்தகாத சமூகமாகவே இருந்தனர், நாடார்கள் மதம் மாறியதற்கு கிறித்துவ மதத்தில் இருந்த கொள்கைகளோ, கோட்பாடுகளோ அல்லது எந்த ஒரு ஈர்ப்போ காரணம் இல்லை. நாடார்கள் மற்றும் வன்னியர்களில் கிறித்துவர்கள் மிகுந்தவர்களாக இருப்பதற்கு காரணம் அவர்கள் தாழ்த்தப்பட்டவராக இருந்து, ஒருகாலத்தில் தீண்டத்தாகதவர்களாக நடத்தப்பட்டதே காரணம். இன்றைக்கு எந்த ஒரு நாடார் சமூகத்தினரையும் சாதி சொல்லி திட்டும் நிலை இல்லை, ஒரு காலத்தில் நாடார்கள், வண்ணார்கள் ஆகியோரை இழிவு படுத்தும் ஆயிரம் பழமொழிகள் இருந்தது, இப்பொழுது அந்த பழமொழிகளை எவராவது நினைவு வைத்துச் சொன்னால் மட்டுமே, இப்படியும் கூட அவர்களை இழித்துக் கூறி இருக்கிறார்களா என்று வியப்படைவார்கள்.

நாடார் சமூகம் ஒரே நாளில் விழிப்பு பெற்றுவிட வில்லை, தினத்தந்தி அதிபர் சிபா ஆதித்தனார் போன்றோர்கள் முன்னேறியதும் தங்கள் சமூகம் அடிமைப்பட்டு கிடப்பதிலிருந்து மீட்கவேண்டும் என்று தொடர்ந்து ஊக்கம் கொடுத்துவந்தார்கள், அதன்படி நாடார்களில் பலர் நன்கு படித்து பெரிய நிறுவனங்களை திறமையாக நடத்தும் HCL சிவசாமி நாடார், விஜிபி சந்தோசம் போன்ற தொழில் அதிபர்களாக உயர்ந்தார்கள், இன்றைக்கு சரவணபனுடன் போட்டியிடும் உணவகங்கள் ஒன்று கூட இல்லை, சரவணாஸ்டோருடன் போட்டியிடும் நிறுவன்ங்கள் கூட நாடார்களுக்கு உடமை உள்ளவையாகவே இருக்கின்ற அளவுக்கு நாடார்கள் பொருளாதாரத்தில் உயர்நிலையை அடைந்திருக்கிறார்கள்.

இவர்களெல்லாம் இன்று உயர்ந்து நிலையை எட்டி இருப்பதற்கு, அயோத்திதாசார் போன்றவர்கள் போராடியதும், காமராஜர் என்ற நாடார் குல பெருமகனார் தமிழக முதல்வராக பதவி அடைந்ததும் காரணம், காமராஜர் நாடார்களை வளர்த்துவிட்டார் என்று கூட சொல்கிறார்கள், அதுபற்றி எனக்கு தெரியாது. ஒரு சமூகமே தீண்டாமைக் கொடுமைகளில் இருந்து மீள்வதற்கு தங்கள் சமூகத்தில் ஒருவர் உயர்ந்த பதவியில் அமர்ந்துவிட்டார் என்ற பெருமையே காரணமாக அமைந்துவிட்டது என்றால் மறுக்க முடியுமா ?

சாதியற்ற சமூகம் நல்லதுதான் வரவேற்கத்தக்கதே, ஆனால் எல்லோரும் சமமாக இருந்தால் சாதி தேவை இல்லை, 'ஏண்டா... சாதியைப் பேசுகிறாய் ? என்று கேட்டு செருப்பால் கூட அடிக்கலாம், ஆனால் நிலைமை அவ்வாறு இல்லையே, தங்களைவிட பொருளாதாரத்தில் கல்வி அறிவில் பின்தங்கி இருக்கிறார்கள் என்ற ஒரே காரணத்தினால் தானே தலித்துகளை இன்றும் கீழ்சாதிக்காரர்கள் என்றே சொல்லிக் கொண்டு, வெளிப்படையாக வன்னிய கிறித்துவர்கள் தலித் கிறித்துவர்களுடன் ஒரே சர்ச்சுக்கு செல்ல விருப்பமில்லை, நாங்கள் இந்துக்களாகவே மாறிவிடுகிறோம் என்றெல்லாம் தீண்டாமை தீ அணையாமல் பார்த்துக் கொள்கிறார்கள், முன்பு தீண்டத்தாகாதவர்களாக கருதப்பட்ட நாடார்களை, அவ்வாறே எவரும் தீண்டத்தகாதவராக பார்க்கும் நிலை இன்று இல்லையே, அவர்கள் பொருளாதார மற்றும் கல்வி வாய்ப்பில் முன்னேறி இருப்பதே காரணம்.

தலித் பெருமக்களுக்கு இடஒதுக்கீடு என்று இருக்கிறது அவர்களால் ஏன் முன்னேற முடியவில்லை ? 10 வயதில் வேலைக்குச் சென்றால் தான் வாழ்க்கை என்று இருக்கும் 90 விழுக்காட்டு தலித்பெருமக்களுக்கு இருக்கும் இட ஒதுக்கீடுகளால் என்ன பயன் ? இருந்தாலும் அப்படியும் படிப்பின் அருமை தெரிந்து, கடினப்பட்டாவது படித்துவருபவர்களுக்கு இட ஒதுக்கீடு நல்ல வாய்ப்பாகத்தான் அமைகிறது. படிப்பதைத் தவிர வேறு சிந்தனைக்கு இடம் கொடுக்காமல் படிக்கவைக்கும் பிற சாதிக்கார பிள்ளைகளுடன், வயிற்றுப்பசியுடன் பள்ளிக்கு அடி எடுத்துவைத்தவன் போட்டிப் போட முடியாது என்பதாலேயே இட ஒதுக்கீடு தலித் பெருமக்களுக்கு குறையைப் போக்க ஓரளவுக்கு உதவுகிறது.

தலித் சமூகம் மீதான தீண்டாமைக் கொடுமைகள், மற்றும் ஒதுக்கிவைக்கப்படும் இழிவுகள் முற்றிலும் நீங்க வேண்டுமென்றால், தலித் மக்களில் இருந்து ஒருவர் முதல்வராக வரவேண்டும், அவ்வாறு ஒருமுறை வந்துவிட்டால் கூட அம்மக்கள் விழிப்புணர்வு பெற்று தாழ்வு படுத்துபவனின் குரல்வளையை மிதிப்பார்கள். அவர்களுக்கு பதவியின் அருமையும் படிப்பின் அருமையும் தெரிந்து ஆண்டைகளிடம் இருந்து விடுதலை அடைவார்கள். தமிழகத்தைப் பெறுத்தவரையில் ரிசர்வு செய்யப்பட்ட தொகுதிகளில் கூட அவர்களின் விருப்பத்திற்கு ஒருவரை தேர்ந்தெடுக்க முடியாமால் அங்கெல்லாம் கூட அதே சமூகத்துக்கு கட்சிக்காரர்களை நிறுத்தி அவர்களையெல்லாம் எதோ ஒரு கட்சி சார்பானவர்களாக மாற்றி ,அவர்களை ஏமாற்றியே அவர்களின் ஓட்டில் எல்லாக் கட்சிகளும் ஆட்சியில் அமர்ந்தும் கொண்டு இருக்கின்றனர்.

எந்த ஒரு பெரிய கட்சியும், கட்சிக் கொள்கைகள் என்ற முழக்கத்தில் தலித் ஒருவரை முதல்வராக ஆக்குவோம் என்ற வரி கூட சொல்வது இல்லை. மக்கள் செல்வாக்கை நிரூபணம் செய்ய வாக்குச் சீட்டே நல்ல கருவி. தலித் பெருமக்கள் அதை விழிப்புடன் பயன்படுத்தினால் பல மாவட்டங்களில் செல்வாக்கு பெற்ற வாக்களர்களாக மாறுவார்கள். திருமாவளவன் போன்ற தலித் சமுகத்து தலைவர்கள் தமிழக முதல்வராக ஆனால் மட்டுமே இரட்டைக் குவளைமுறையும், சாதிவெறியால் முடங்கிக் கிடக்கும் பாப்பாபட்டி போன்ற கிராமங்களில் எதிர்காலத்தில் தேர்தல் நடத்த எதிர்ப்பு இருக்காது.

'திராவிடப்' பெயரில் இருக்கும் கட்சிகள், முதல்வர் பதவியை வாரிசுகளுக்கு உயில் எழுதிவைக்காமல் எதிர்காலத்தில் ஒரு தலித் முதல்வரை உருவாக்கினால், உண்மையிலேயே தமிழகத்தில் சமத்துவம் மலரும். உத்திரபிரதேசத்தில் மாயாவதி முதல்வராக ஆனது போலவே தமிழகத்தில் ஒரு தலித் முதல்வர் உருவாகவேண்டும். அப்பொழுதுதான் தமிழகத்தில் சாதிகள் இருந்தாலும் சாதி வேற்றுமைகள் மறையும்.

பின்குறிப்பு : தலித் என்ற சொல் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் குறித்து சொல்லப்படும் பொதுச் சொல். அப்படிச் சொல்லக் கூடாது என்று எதிர்ப்புகள் கூட இருக்கிறது, கட்டுரைக்காக அந்த சொல்லைப் பயன்படுத்தி இருக்கிறேன். வேறெந்த நோக்கமும் இல்லை.

8 கருத்துகள்:

Me சொன்னது…

இதே கருத்தைதான் ஞாநி தன்னுடைய ஓ பக்கங்களில் (கலைஞர் ஓய்வு பெறவேண்டும் என்று எழுதியதற்கு முந்தைய கட்டுரை என்று நினைக்கிறேன்)ஒரு கட்டுரையில் எழுதியிருக்கிறார். அதிமுக வில் இதற்கு வாய்ப்பே இல்லை. அவர்கள் வாக்கு வங்கி அப்படி. விஜ‌ய‌காந்தும், ச‌ர‌த்குமாரும் க‌ட்சி தொட‌ங்கிய‌தே அவ‌ர்க‌ள் முத‌ல்வ‌ர் ஆக‌வேண்டும் என்கிற‌ எண்ண‌த்தோடுதான். காங்கிர‌ஸ், பாஜ‌க‌ எல்லாம் த‌மிழ‌க‌த்தில் சொந்தக் காலில் நிற்கும் என்ப‌தோ ப‌க‌ல் க‌ன‌வு. திமுக‌ விலோ க‌லைஞ‌ருக்குப் பிற‌கு அவ‌ர‌து வாரிசுகளில் யாராவ‌து ஒருவ‌ர்தான் த‌லைமைப் பொறுப்பிற்கு வ‌ருவார் என்ப‌து நிச்சயிக்க‌ப்ப‌ட்ட ஒன்று.

இந்நிலையில் த‌மிழ‌க‌த்திற்கு தாழ்த்த‌ப்ப‌ட்ட‌ ச‌முதாய‌த்தைச் சேர்ந்த‌ ஓருவ‌ர் முத‌ல்வ‌ராக‌ வ‌ருவ‌து என்ப‌த‌ற்கான‌ வாய்ப்புக‌ள் மிக‌மிக‌ குறைவு என்ப‌துதான் என் க‌ருத்தாகும். ஆயினும் ந‌ம்பிக்கையிருக்கிற‌து, காத்திருப்போம்.

யோகன் பாரிஸ்(Johan-Paris) சொன்னது…

//'திராவிடப்' பெயரில் இருக்கும் கட்சிகள், முதல்வர் பதவியை வாரிசுகளுக்கு உயில் எழுதிவைக்காமல் எதிர்காலத்தில் ஒரு தலித் முதல்வரை உருவாக்கினால், உண்மையிலேயே தமிழகத்தில் சமத்துவம் மலரும். உத்திரபிரதேசத்தில் மாயாவதி முதல்வராக ஆனது போலவே தமிழகத்தில் ஒரு தலித் முதல்வர் உருவாகவேண்டும். அப்பொழுதுதான் தமிழகத்தில் சாதிகள் இருந்தாலும் சாதி வேற்றுமைகள் மறையும். //

ஆயிரத்தில் ஒரு வார்த்தை....இதன் உட்பொருள் புரிந்தாலும் நடைமுறைப் படுத்த முற்படுவார்களா???
அரசியலில் தலைவராக இருக்க சாதி தேவையே....

கோவி.கண்ணன் சொன்னது…

//இந்நிலையில் த‌மிழ‌க‌த்திற்கு தாழ்த்த‌ப்ப‌ட்ட‌ ச‌முதாய‌த்தைச் சேர்ந்த‌ ஓருவ‌ர் முத‌ல்வ‌ராக‌ வ‌ருவ‌து என்ப‌த‌ற்கான‌ வாய்ப்புக‌ள் மிக‌மிக‌ குறைவு என்ப‌துதான் என் க‌ருத்தாகும். ஆயினும் ந‌ம்பிக்கையிருக்கிற‌து, காத்திருப்போம்.//

உறையூர்காரன்,

உண்மையான சமூகவிடுதலை என்பது தாழ்த்தப்பட்ட ஒருவரை முதல்வராக ஆக்குவதினால் தான் ஏற்படும், அதைச் செய்ய மனசில்லாமல் பேசும் திராவிட அரசியலெல்லாம் பம்மாத்து அரசியலே, பார்பன அரசியலைவிட கொஞ்சம் சகித்துக் கொள்ளும் படி இருப்பதால் பார்பனர் அல்லாதோர் திராவிட அரசியலை சகித்துக் கொள்கிறார்கள். ஏற்றுக் கொள்வதாக பொருள் கொள்ள முடியாது.

கோவி.கண்ணன் சொன்னது…

//ஆயிரத்தில் ஒரு வார்த்தை....இதன் உட்பொருள் புரிந்தாலும் நடைமுறைப் படுத்த முற்படுவார்களா???
அரசியலில் தலைவராக இருக்க சாதி தேவையே....//

யோகன் ஐயா,
ஆண்டை சாதிக்காரர்கள் என்னதான் தலித் சமூகத்தினருக்காக நீலிக் கண்ணீர் வடித்தாலும் தாழ்த்தப்பட்டவர்களுக்கு வழிவிடாவிட்டால் சமத்துவம் மலரவே மலராது !

ரூபஸ் சொன்னது…

//'திராவிடப்' பெயரில் இருக்கும் கட்சிகள், முதல்வர் பதவியை வாரிசுகளுக்கு உயில் எழுதிவைக்காமல் எதிர்காலத்தில் ஒரு தலித் முதல்வரை உருவாக்கினால், உண்மையிலேயே தமிழகத்தில் சமத்துவம் மலரும். உத்திரபிரதேசத்தில் மாயாவதி முதல்வராக ஆனது போலவே தமிழகத்தில் ஒரு தலித் முதல்வர் உருவாகவேண்டும். அப்பொழுதுதான் தமிழகத்தில் சாதிகள் இருந்தாலும் சாதி வேற்றுமைகள் மறையும்.
//

நல்லதொரு யோசனை..

சாத்தியப்படுத்துவதுதான் சிரமம்

துளசி கோபால் சொன்னது…

இதுக்குக் 'காலம்'தான் பதில் சொல்லணும்.

கோவி.கண்ணன் சொன்னது…

//ரூபஸ் said...

நல்லதொரு யோசனை..

சாத்தியப்படுத்துவதுதான் சிரமம்//

ரூபஸ் நன்றி !
தலித் பெருமக்கள் சிந்தித்து அரசியல் கட்சிகளைப் புறக்கணித்தால் சாத்தியம் ஏற்படும்,

கோவி.கண்ணன் சொன்னது…

//துளசி கோபால் said...
இதுக்குக் 'காலம்'தான் பதில் சொல்லணும்.

5:04 AM, April 27, 2008
//

துளசி அம்மா,

"காலத்தில்" குறிப்பெழுதி வைத்துவிட்டாகிவிட்டது, பார்ப்போமே ! நடந்தால் நன்மை !

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்