பின்பற்றுபவர்கள்

1 ஏப்ரல், 2008

ஈழத் 'தமிழர்கள்' குறித்து இனி பேசப்போவதில்லை !

ஏப்ரல் ஒன்றுக்காக எழுதவில்லை. தலைப்பு பொய்யையும் பேசவில்லை. பள்ளிக் கூடம் படிக்கும் போது நாம் எடுக்கும் உறுதி மொழி என்ன ? இந்தியனாக பிறந்ததில் பெருமை அடைகிறேன், எனது தாய் திருநாடான பாரதத்தை நேசிக்கிறேன். அதன் கண்ணியம் காப்பேன். நான் இந்தியனாகவே என்னை நினைக்கிறேன்.

நான் என்னை தமிழனாக நினைத்தால் நான் ஒரு பிரிவினைவாதி - இதுதானே அந்த உறுதி மொழியை ஏற்றுக் கொள்வதன் மூலம் நாம் மறைமுகமாக ஏற்றுக் கொள்வது ?

இலங்கையிலோ, மலேசியாவிலோ இந்திய வம்சாவளியினர் நசுக்கப்படும் பொழுது இந்தியாவில் வாழும் இந்தியர்கள் அவர்களை தமிழனாகப் பார்த்ததன் விளைவோ ? இவர்கள் பிரிவினை வாதிகள் என்று கூறி இந்தியாவில் தமிழர்கள் அல்லாத நாய் கூட அது குறித்து கவலைப்படுவதில்லை. தலிபான் தீவிரவாதி ஒரு விமானத்தைக் கடத்திச் செல்கிறான். அதில் ரூபன் கத்தியால் மற்றும் 100 பேர் இந்தியர்களாக பயணம் செய்தார்கள், அவர்களை இந்திக்காரர்கள் என்று சொல்லிக் கொண்டு இருந்தோமா ? அல்கொய்தாவின் பிடியில் சிக்கி அல்ஜெசிரா தொலைகாட்சியில் மரண பயந்துடன் தெரிந்த முகங்களுக்கெல்லாம் மாநில அடையாளத்தைப் பார்த்து தமிழர்கள் மகிழ்ந்தார்களா ? பிஜிதீவில் ஆட்சிமாற்றம் ஏற்பட்டு இந்திய வம்சாவளியினர் சிறைபிடிக்கப்பட்ட போது எந்த மாநிலத்துக்காரர்கள் அது தங்களுக்கு தொடர்பில்லாதது போல் பார்த்தார்கள் ?

வெளிநாட்டில் தமிழன் அவமானப்படுவது அவன் தலைவிதியாகவே இருக்கட்டும்? இந்தியாவுக்குள் ஏன் இந்த இழிநிலை ? காரணம் இந்தியாவுக்குள்ளும் தமிழன் இந்தியன் அல்ல, தமிழன் அடிவாங்கினால் இந்திய அரசாங்கமும் அதை கண்டுகொள்ளாது ?

இலங்கையிலும் சரி, மலேசியாவிலும் சரி இந்தியர்களுக்கு பிரச்சனை என்றால் இந்தியாவில் தமிழன் தவிர வேறு எவனும் அலட்டிக் கொள்வதே இல்லை. ஒருவேளை ஈழத்தமிழர்கள் என்று சொல்லாமல் ஈழவாழ் இந்திய வம்சாவளியினர் என்று சொல்லி இருந்தால் இந்திய அரசு இலங்கை அரசை அடக்கி வைத்திருக்குமோ? அது போல் மலேசிய தமிழர்கள் என்று சொல்லாமல் மலேசிய வாழ் இந்தியர்கள் என்று சொல்லி இருந்தால் இந்திய அரசாங்கம் வெகுவிரைவாக பேசி இருக்குமோ ? எங்கு தமிழனுக்கு பிரச்சனை என்றாலும் தமிழக முதல்வர்கள் ஞாபகப்படுத்தவில்லை என்றால் இந்திய அரசாங்கத்தையே எழுப்ப முடியாது என்றே நினைக்கும் படியே எல்லாம் நடக்கிறது. இதில் கர்நாடகா முதல் பிறமாநிலக்காரர்களைக் குறைத்து சொல்ல என்ன இருக்கிறது ?

வெளிநாட்டில் தமிழன் தமிழனாகத்தான் பார்க்கப்படுகின்றனா ? எந்த நாட்டிலும் தமிழன் தமிழனாகப் பார்க்கப்படுவதில்லை, இந்தியன் என்றே பிறரால் அழைக்கப்படுகிறார்கள். சிங்கப்பூர்வாழ் இந்தியர்கள், மலேயா வாழ் இந்தியர்கள், மாலத்தீவு இந்தியர்கள் என்றே சொல்லப்படுகின்றனர். அவர்களுக்கு பிரச்சனை என்றால் மட்டும் ஒட்டு மொத்த இந்தியாவே அது தமிழர்களின் தனிப்பட்ட பிரச்சனை போல் நினைப்பது ஏன் ? மொழிப்பெரும்பான்மை என்பதைத் தவிர்த்து தமிழன் எந்தவிதத்தில் தான் இந்தியன் இல்லை என்று காட்டிக் கொள்கிறான்? தமிழன் என்கிற மொழி பண்பாடு அடையாளத்தை ஒரு இனத்தின் அடையாளம் போல் சித்தரிக்கப்பட்டுவிட்டு புறக்கணிக்கப்படுகிறோம் என்பது கர்நாடகத்திலும் பிற மாநிலங்களில் தமிழர்களுக்கு எதிராக நடக்கும் வன்முறைகளே வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன. ஆண்டாண்டு காலம் பிறமாநிலங்களில் வாழ்ந்தாலும் நம்மை ஒரு தனி இனமாக கருதி ஒதுக்கப்படுவதால் நமக்கு தமிழ்த்தாய் வாழ்த்து போதுமே! தேசிய கீதமும், இந்தியன் என்ற அடையாளமும் நமக்கு எதற்கு ?


ஈழத்தமிழர்கள் என்ற 'தமிழ்மொழி' அடையாளத்தில் இலங்கையில் போராட்டம் நடைபெறாமல் ஈழவாழ் இந்திய வம்சாவழியினர் என்ற அடையாளத்தில் போராடி இருந்தால் இந்த பிரச்சனை தீர்ந்திருக்கும் என்று நினைக்கிறீர்களா ?

தற்பொழுது கூட ஈழ இந்தியர் பிரச்சனைகள் என்று பெயர் மாற்றிக் கொண்டால் முழு இந்தியாவையே அதற்கு ஆதரவாக திரட்ட முடியுமா ? தேசியவாதிகளே மற்றும் தமிழ் தேசியவாதிகளே ஈழத்தமிழர்கள் வாழ்க்கை கண்டுக் கொள்ளப் படாமல் போனதற்கு அவர்கள் தமிழர் என்பது தான் காரணாமா ? அவர்கள் இந்திய வம்சாவளியினர் இல்லையா ?

நீங்கள் இந்தியரா ? என்று ஒரு சிங்களரிடம் கேட்டுப் பாருங்கள் . இல்லை நான் ஏசியன் அல்லது சிங்களன் என்றே சொல்லுவார் ஒருகாலும் இந்தியன் என்றோ இந்திய வம்சாவளியினர் என்று சொல்லிக் கொள்ள மாட்டார்கள். வெளிநாடுவாழ் தமிழர்கள் அவ்வாறெல்லாம் சொல்லிக் கொள்வது இல்லை. இந்தியாவில் அவர்களுக்கு தொப்புள் கொடி உறவு என்றும் இருக்கிறது.

ஈழப்பிரச்சனை தீரததற்கு தமிழ்தான் அடையாளம் என்ற ஒரு காரணமிருந்தால், நான் தமிழன் என்று சொல்லிக் கொள்ளாமல் இந்தியன் என்றே சொல்லிக் கொள்கிறேன். ஈழப்பிரச்சனை ஈழவாழ் இந்தியர்களின் போராட்டமாக மாற்றி நினைத்துக் கொள்கிறேன். ஈழவிடுதலைக்கு தமிழன் என்ற அடையாளம் தடையாக இருந்தால் எனக்கும் அது தேவையற்றதே.

முட்டாள்கள் தின சிந்தனையாக, இந்தியாவுக்குள்ளும் தமிழன் என்ற ஒரே காரணத்தால் பக்கத்து மாநிலத்தில் பிறந்து வளர்ந்து தமிழை தாய்மொழியாக கொண்டுள்ள தமிழர்கள் தாக்கப்பட்டு இரத்தம் சிந்தும் போது நாம் 'இந்தியர்' என்று சொல்லிக் கொண்டு நம்மை நாமே ஏமாற்றிக்கொள்கிறோமா ? இல்லை... நீங்கள் இந்தியர்கள் அல்ல, தமிழர்கள் என்று அவர்கள் ஒரு இனமாக அடையாளப்படுத்துவதை அப்படியே ஏற்றுக் கொள்கிறோமா ?

பின்குறிப்பு :

ரத்னேஷ் அண்ணாவின் கீழ்கண்ட பின்னூட்டம் தான் இந்த இடுகைக்கு காரணமாக அமைந்தது. அவருக்கு எனது நன்றி !

RATHNESH said...
என்ன கோவி.கண்ணன்,

//தமிழர்கள் மீதோ, பிறமானிலத்தவர் மீதோ தாக்குதல் நடத்த முடிவு செய்து கொள்ள கர்நாடகமோ, மகாராஷ்டிராவோ தனிநாடு அல்ல.//

தனிநாடுகள் என்றால் தாக்குதல் நடத்தலாமா? அப்போ, இலங்கையிலும் மலேஷியாவிலும் நடக்கும் தாக்குதல்கள் தங்களுக்கு ஆட்சேபணையானவை அல்ல?

23 கருத்துகள்:

ஜெகதீசன் சொன்னது…

//
ஈழத்தமிழர்கள் என்ற 'தமிழ்மொழி' அடையாளத்தில் இலங்கையில் போராட்டம் நடைபெறாமல் ஈழவாழ் இந்திய வம்சாவழியினர் என்ற அடையாளத்தில் போராடி இருந்தால் இந்த பிரச்சனை தீர்ந்திருக்கும் என்று நினைக்கிறீர்களா ?
//

ஈழத்தமிழர்கள் "இந்திய வம்சாவழியினரா"? எப்படி? அவர்களது வேரே ஈழம் தானே?
அவர்கள் மண்ணின் மைந்தர்கள் (மலையகத் தமிழர் மட்டுமே இந்திய(?) வம்சாவழித் தமிழர்).....

உங்கள் வாதம் "இந்தியாவிலிருந்து வந்த உங்களுக்கு எதற்கு தனி நாடு ?" என்று கேட்கும் மூடர்களுக்கு பலம் சேர்ப்பதாக இருக்கிறது....

கோவி.கண்ணன் சொன்னது…

//உங்கள் வாதம் "இந்தியாவிலிருந்து வந்த உங்களுக்கு எதற்கு தனி நாடு ?" என்று கேட்கும் மூடர்களுக்கு பலம் சேர்ப்பதாக இருக்கிறது....//

வாழும் நாட்டை நேசித்தே வந்தாலும்
பிரித்தே பார்க்கும் போது பிரிந்து சென்று தனிநாடு கேட்பதில் என்ன தவறு இருக்கிறது ?

ஜெகதீசன் சொன்னது…

//
வாழும் நாட்டை நேசித்தே வந்தாலும்
பிரித்தே பார்க்கும் போது பிரிந்து சென்று தனிநாடு கேட்பதில் என்ன தவறு இருக்கிறது ?
//
புதசெவி...

ஈழத்தமிழர்கள் இந்திய வம்சாவழியினர் இல்லை. அவர்களின் வேரே ஈழம் தான்.. தனி நாடு அவர்களின் உரிமை!!!!!!!!!

கோவி.கண்ணன் சொன்னது…

//புதசெவி...

ஈழத்தமிழர்கள் இந்திய வம்சாவழியினர் இல்லை. அவர்களின் வேரே ஈழம் தான்.. தனி நாடு அவர்களின் உரிமை!!!!!!!!!//

இலங்கை இந்தியாவிற்கு வெகு தொலைவில் இல்லை, அது ஒரு தனிநாடு என்பது அரசியல் காரணங்களுக்கான ஒன்று. ஈழத்தமிழர்கள் எந்த நூற்றாண்டில் அங்கு புலம் பெயர்ந்தார்கள் என்பது தெரியாது. அவர்கள் இந்திய வம்சாவழியினர்தான் குறிப்பாக தமிழர்கள்.

முத்துகுமரன் சொன்னது…

கால வேறுபாடுகளில் புவியில் பல்வேறு நிலப்பிரிவுகள் தோன்றீன என்பது அறிவியல். ஈழம் தனித்தன்மை உடையது. ஈழம் இந்தியாவுடன் இணைந்திருந்த பகுதி என்பதை விட தமிழகத்தோடு இணைந்திருந்த ஒரு பகுதி என்பதே பொருத்தமானதாக இருக்கும். உண்மையான்னதாகவும் இருக்கும்.

//ஈழத்தமிழர்கள் என்ற 'தமிழ்மொழி' அடையாளத்தில் இலங்கையில் போராட்டம் நடைபெறாமல் ஈழவாழ் இந்திய வம்சாவழியினர் என்ற அடையாளத்தில் போராடி இருந்தால் இந்த பிரச்சனை தீர்ந்திருக்கும் என்று நினைக்கிறீர்களா ?//
பெயரினால் பெரிய அளவில் எந்த மாற்றமும் ஏற்பட்டுவிடப்போவதில்லை. வெளியுறவு கொள்கை என்பது சில தனி நபர்களின் விருப்பு வெறுப்புகளின் படி தீர்மானிக்கப்படுவதால் வந்த குழப்பமே ஈழ விசயத்தில் இவ்வளவு நீண்ட இழுபறி.

//தேசிய கீதமும், இந்தியன் என்ற அடையாளமும் நமக்கு எதற்கு ?//
இந்த சிந்தனை நம்மை சுற்றியிருக்கும் மாநிலங்களின் தொடர்ச்சியான தமிழர் விரோதோப்போக்குகளினால், அதிகரித்துவிடுவதற்கான சாத்தியகூறுகள்தான் அதிகம் தென்படுகின்றன. அது சரியா தவறா என்ற கேள்விகளுக்கு செல்வதை விட அப்படி நேருவதும் நேராதிருப்பதும் மத்திய அரசின் செயல்களைப் பொறுத்தே அமையும் என்பதுதான் கசப்பான உண்மை. இந்தியா என்பது இந்திய ஒன்றியம்தான் என்பதை நாம் ஒத்துகொண்டேதான் ஆக வேண்டும்.

''ஒரு தாய் மக்கள் நாம் என்போம் ''- ஏட்டுச்சுரக்காய் கறிக்குதவாது கதைதான்.

ஜெகதீசன் சொன்னது…

//
ஈழத்தமிழர்கள் எந்த நூற்றாண்டில் அங்கு புலம் பெயர்ந்தார்கள் என்பது தெரியாது
//
?????????????????????????????????????????????????????????

அவர்கள் மண்ணின் மைந்தர்கள் புலம் பெயர்ந்தோர் இல்லை............

ஜெகதீசன் சொன்னது…

அண்ணா, ஈழத் தமிழர் பற்றிய உங்கள் எண்ணம் தவறாக இருக்கிறது (நான் நினைப்பதும் தவறாக இருக்கலாம்)..

இடுகையின் மையக்கருத்திலிருந்து விலகுவது போல் இருப்பதால் இந்த விவாதத்தை இன்னொரு இடத்தில் வைத்துக்கொள்ளலாம்...

கோவி.கண்ணன் சொன்னது…

// ஜெகதீசன் said...
அண்ணா, ஈழத் தமிழர் பற்றிய உங்கள் எண்ணம் தவறாக இருக்கிறது (நான் நினைப்பதும் தவறாக இருக்கலாம்)..

இடுகையின் மையக்கருத்திலிருந்து விலகுவது போல் இருப்பதால் இந்த விவாதத்தை இன்னொரு இடத்தில் வைத்துக்கொள்ளலாம்...

11:24 PM, April 01, 2008
//

மற்றவர்கள் என்ன கூறுகிறார்கள் என்றும் பார்ப்போம்.

கொழுவி சொன்னது…

அவர்கள் இந்திய வம்சாவழியினர்தான் குறிப்பாக தமிழர்கள்.//

அப்போ நான் இந்தியனா ?
ஜெய் கிந்த்
பாரத மாதாக்கு ஜே..

கோவி - உங்களுக்கு சொல்ல எதுவுமில்லை. ஈழத்தின் பூர்வீக குடிகள் யாரென்று சகல வழிகளிலும் நிறுவியாயிற்று. அவற்றைத் தேடியெடுத்து படிக்கச் சொல்வதைத் தவிர யாதொன்றும் சொல்வதற்கில்லை.

கோவி.கண்ணன் சொன்னது…

//கொழுவி said...
அவர்கள் இந்திய வம்சாவழியினர்தான் குறிப்பாக தமிழர்கள்.//

அப்போ நான் இந்தியனா ?
ஜெய் கிந்த்
பாரத மாதாக்கு ஜே..

கோவி - உங்களுக்கு சொல்ல எதுவுமில்லை. ஈழத்தின் பூர்வீக குடிகள் யாரென்று சகல வழிகளிலும் நிறுவியாயிற்று. அவற்றைத் தேடியெடுத்து படிக்கச் சொல்வதைத் தவிர யாதொன்றும் சொல்வதற்கில்லை.
//

பூர்வீக குடிகள் என்ற பிரச்சனைக்கு செல்லவில்லை, பாரத மாதாகீ ஜெ வும் தேவை இல்லை. அது குடியுறிமை உள்ளவர்கள் சொல்வது.

ஈழத்தமிழர்கள் தமிழர் தானே ? குறிப்பாக இந்திய இனம் தானே ?

ஜெகதீசன் சொன்னது…

கோவி அண்ணா,
"இந்திய இனம்", "இந்திய வம்சாவளி" இரண்டையும் விளக்க முடியுமா?

எதை வைத்து தமிழர்கள் குறிப்பாக ஈழத் தமிழர் "இந்திய இனம்" என்று சொல்கிறீர்கள்?
எல்லா விண்ணப்பங்களிலும் "race",
"indian" என்று போடுவதால் மட்டுமா?

அற்புதன் சொன்னது…

பூர்வ குடிகள் என்றால் இந்தியாவில் திராவிடரும் ஈழத்தில் திராவிடரும் அவர்கள் மூதாதையரானா ஆபிரிக்க மனிதனுமே.

இந்திய உபகண்டமும் ஈழமும் ஒரே பண்பாட்டுப் பிரதேசம்.தமிழ்,சிங்கள பெரும் இனக் குழுக்களும் ஈழத்தில் தோற்றம் பெற்றாலும், இரண்டும் உருவாகியது இந்திய உபகண்டத்தில் இருந்து காலத்துக்குக் காலம் புலம் பெயர்ந்த வெவ்வேறு இனக் குழுக்களால் தான்.இந்தியா என்னும் தேசமும், சிறிலங்கா என்னும் தேசமும் உருவானது காலனிய ஆதிக்கத்தினால் தான்.அதன் முன் தென் இந்தியாவை ஆட்சி செய்த பல அரசர்கள் (சோழர்,பாண்டியர்)இன்றைய சிறிலங்காவின் வடகிழக்கு மற்றும் தெற்கில் பொலனறுவை,கண்டி வரை ஒரே நாடாக ஆட்சி செலுத்தினர்.

இந்தியர்களோ, தமிழர்களோ , மனிதர்கள் என்னும் அடிப்படையில் ஏன் இந்தியர்களால் குரல் கொடுக்க முடியாமால் இருக்கிறது.உலகின் எங்கோ ஒரு மூலையில் இருக்கும் கனேடியனுக்கும்,நோர்விஜியனுக்கும், ஜேர்மனியனுக்கும் ஆபிரிக்கனுக்கும் இருக்கும் மனிதாபிமானம் எமது இன்றைய அண்டை நாட்டாரிடம் ஏன் இல்லை?

TBCD சொன்னது…

இந்தியா முழுவதும் ஒரே இனமா..

என்ன கூத்து இது...

ஒவ்வொரு சாதியும், ஒவ்வொரு இனமாக இருக்க வேண்டும்.

எப்படி, சீனருக்கும், ஐரோப்பியர்களுக்கும், உடற்கூறு வித்தியாசங்கள் இருக்கிறதோ, அதுப் போலவே, ஒவ்வொரு சாதியினருக்கும் இருக்கே.

அனைவரும் சமம் என்பது சமத்துவம்.

ஒரே இனம் என்பது அறிவீனம்.

இந்தியா ஒரு போட் பூரி ஆப் கல்சர்ஸ்..

ஓவ்வொரு காலக் கட்டத்தில் இடம் பெயர்ந்தோர், தெற்கு நோக்கி வரும் போது, அந்த அந்த இனங்கள் தோன்றியிருக்கனும்.

மக்கள் தொகை பெருகும் போது, எல்லாம் ஒரே இடத்தில் வந்திருக்கவேண்டும், கூடவே நகரமயக்ககுதலும் அதற்கு துனை புரிந்திருக்க வேண்டும்.


//

ஈழத்தமிழர்கள் தமிழர் தானே ? குறிப்பாக இந்திய இனம் தானே ?

//

ILA (a) இளா சொன்னது…

தமிழனுக்கு மட்டும் இந்தப் பிரச்சினைன்னு நினைக்காதீங்க. மும்பையில நடக்கிற பிரச்சினை தெரியும்னு நினைக்கிறேன். அங்கே பீகாரிகளும், உபி மக்கள் பாதிக்கப்பட்டுக்கிட்டு இருக்கிறாங்க. நம்மை அடிச்சா மட்டும்தான் நமக்கு வலிக்கும்னா சமூக சிந்தனை எதுக்கு?

தமிழன் சொன்னது…

அன்புள்ள கண்ணன்,

தங்களை போல் ஒரு சிலரும் ஈழ தமிழர் குறித்து எழுதவில்லை என்றால் எப்படி, தயவு செய்து தங்கள் மற்றவற்றை பற்றி எழுதுவதை நிறுத்துங்கள், ஈழ தமிழர் ஆதரவு பேச்சை நிறுத்த வேண்டாம். ஈன பிறவிகளாக பிறந்த தமிழன் கூட என்றாவது ஒருநாள் உணர்வான் அதுவரை எழுதுங்கள்.

சின்னக்குட்டி சொன்னது…

வணக்கம் கண்ணன் ...ஈழத்து உணவும் என்று சங்க கால பாடலில் கூட் இருந்ததாக கூறுவார்கள். தமிழகத்தின் தென் பகுதியான கடல் கொண்ட நிலப்பகுதியில் உண்மையான சங்க வளர்த்த மதுரை இருந்ததாக கூறுவார்கள் அப்படியும் கூற்று உண்டு தரை இணைப்பாக இருந்ததாம்

இந்த கூற்றுக்கு வலு சேர்ப்பது போல் எழுத்தாளர் புதுமைபித்தனின் புனைகதை ஒன்றான கபாடபுரத்தில் இப்படி வர்ணிக்கிறார்

கடலுக்கு அடியில் உள்ள நகரத்தில் அகப்பட்டுள்ளான் அந்த கதை நகர்வில்

அடே அதைத் தொடாதே என்று அதட்டியது ஒரு குரல்

நான் திடுக்கிட்டு திரும்பினேன். குரல் ஆணோ பெண்ணோ என்று சந்தேகபடும் படியாக இருந்தது. வாக்கு தமிழ் என்றாலும் தொனிப்பு யாழ்ப்பாணத்துக்காரர் ரீதியில் இருந்தது.சுற்றுமுற்றும் பார்த்தேன் யாரும் தென்படவில்லை.

நான் இங்கே தான் இருக்கிறேன் இதோ என்னை பார் என்றது அந்த குரல்

இதை விட இயக்கர், நாகர் பூர்வீக குடிகள் ஈழத்தின் இருந்ததாக கூறுபவர்களின் கூற்று உண்டு

அத்திவெட்டி ஜோதிபாரதி சொன்னது…

சிங்கள இனத்தவர்கள் இந்தியாவின் வடமாநிலமான ஒரிசா பிகார் போன்ற பகுதிகளில் இருந்து இலங்கைக்குச் சென்று குடியேறியவர்கள் என்று சொல்கிறார்கள். ஒரு காலத்தில் தமிழகமும், ஈழமும் கூட ஒன்றாக இருந்திருக்கலாம். ஏனென்றால் ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்துக்கு பக்கத்தில் தான் ஈழம் இருக்கிறது. அதேபோல் இராமேஸ்வரம் பாம்பன்-தலைமன்னார். ஒரு சிங்களவன் என்னதான் நான் ஸ்ரீலங்கன் என்று சொன்னாலும் அனைத்துலக சமுகம் அவனை இந்திய சமூகம் என்றே நினைக்கிறது. இதை நான் கண்கூடாகப் பார்த்தேன். அதே போல் பங்காளதேஷ், பாகிஸ்தான்,மாலத்தீவு,நேபாளம் எல்லாம்.
இதைத் தான் வம்சாவழி என்று சொல்கிறோம் என்று நினைக்கிறேன். உங்கள் கருத்து?

அன்புடன்,
ஜோதிபாரதி.

இறக்குவானை நிர்ஷன் சொன்னது…

ஆரம்ப காலத்தில் இந்திய துணைக்கண்டத்துடன் இணைந்தே இலங்கை காணப்பட்டது. பின்னர் காலநிலைக்கூறுகளால் பிரிவடைந்து சீலம் என்று பெயர்பெற்றது. இலங்கைக்கு பூர்வீகக் குடிகளாக வந்த ஆரியரும் சரி விஜய வம்சாவளியினரும் சரி இந்தியாவிலிருந்து வந்ததாகவே வரலாறு கூறுகிறது. சீலத்தில்( இலங்கையில்) தனியாகப் பிறந்து வளர்ந்த இனத்தவர் என்று இருக்கவில்லை.ஈழத்தமிழர் என்று குறிப்பிடப்படுபவர்கள் சீலத்தின் ஆதித்தமிழர்களாவர்.
எந்தவொரு வகையிலும் தமிழர்களே தம்மைப் பிரித்துப் பார்ப்பதை ஒருபோதும் நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன்.
குறிப்பாக இங்கு சிறுபான்மையாக உள்ள தமிழர்கள் தான் அதிக பிரிவினையுடன் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். அதுவே தமிழரை அடக்க முற்படுபவர்களுக்கு முன்சக்தி கொடுப்பதாக இருக்கிறது.

//ஒருவேளை ஈழத்தமிழர்கள் என்று சொல்லாமல் ஈழவாழ் இந்திய வம்சாவளியினர் என்று சொல்லி இருந்தால் இந்திய அரசு இலங்கை அரசை அடக்கி வைத்திருக்குமோ?//

ஏன் இந்திய வமிசாவளித்தமிழர்கள் என அழைக்கப்படும் இலங்கை மலையக மக்கள் பட்டினியால் தினமும் செத்துக்கொண்டிருக்கிறார்கள். அவர்களுடைய உரிமையைக் கூட பெற்றுக்கொள்ள முடியாமல் யாரும் குரல்கொடுக்க முன்வராமல் இரத்தவியர்வை சிந்தி பாடுபடுகிறார்கள். இவர்களுக்கு இந்திய அரசாங்கம் என்ன செய்தது?

இதுபற்றிய என்னுடைய பதிவொன்றை இங்கு பாருங்கள்
http://puthiyamalayagam.blogspot.com/2007/12/blog-post_04.html

ஜோ/Joe சொன்னது…

எனக்கு தெரிந்தவரை சிங்கப்பூர் ,மலேசிய தமிழர்களைப் போல இலங்கைத் தமிழர்கள் சில நூறு ஆண்டுகளுக்கு முன் தமிழகத்திலிருந்து சென்றவர்கள் அல்ல . தோட்டத்தொழிலாளர்கள் ,பின்னர் வியாபார ரீதியில் சென்று குடியேறியன் சிலர் தவிர மற்ற தமிழர்கள் அந்த நாட்டு பூர்வீக குடிகள்.

கோவி.கண்ணன் சொன்னது…

//bala has left a new comment on your post "ஈழத் 'தமிழர்கள்' குறித்து இனி பேசப்போவதில்லை !":

//ஈழத் தமிழர்கள் குறித்துன் பேசப்போவதில்லை////

பாலா,

உங்கள் பின்னூட்டம் இனி எப்போதுமே வெளிடப்படமாட்டாது, இங்கு பவிசு மாதிரி பேசிக் கொண்டு வெள்ளிக் கிழமை கேள்விகளில் என்னை(யும்) இழித்துரைக்கும் உங்கள் பின்னூட்டக் கருத்து எனக்கு தேவையற்றது.

துரை,செந்தாமரைக்கண்ணன் சொன்னது…

//இலங்கை இந்தியாவிற்கு வெகு தொலைவில் இல்லை, அது ஒரு தனிநாடு என்பது அரசியல் காரணங்களுக்கான ஒன்று. ஈழத்தமிழர்கள் எந்த நூற்றாண்டில் அங்கு புலம் பெயர்ந்தார்கள் என்பது தெரியாது. அவர்கள் இந்திய வம்சாவழியினர்தான் குறிப்பாக தமிழர்கள்.//

நேபாளம், பூடான், பர்மா, பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தானும் இந்தியாவிற்கு வெகு தொலைவில் இல்லை.

நையாண்டி நைனா சொன்னது…

முதலில் ஒரு செய்தியை இங்கு முன் வைக்கிறேன், . திரு ஜெகதீசனும், திரு. கோவியாரும் விவாதம் திசை மாறாதவாறு தங்களின் விவாதத்தை சுருக்கி நோட்டம் இட்டு கொண்டிருக்கிறார்கள். இருப்பினும், இந்த பதிவின் விவாதம் திசை மாறி போகிறதோ என்று எண்ணுகிறேன்.

/*ஏப்ரல் ஒன்றுக்காக எழுதவில்லை. தலைப்பு பொய்யையும் பேசவில்லை. */

என்னை போல நையாண்டி- வாலாக்களுக்கு ஏப்ரல் 1 தான் பண்டிகை தினம். அன்று இது போல் மிக தீவிர கருத்துக்கள் கண்டு நெஞ்சு கொதிக்கிறது. ( கொதித்த நெஞ்சை நேற்றே கொட்டி விட்டேன் - அதனை மட்டுருத்தி நல்வழி படுத்திய அண்ணன் கோவியாருக்கு நன்றி)

/*பள்ளிக் கூடம் படிக்கும் போது நாம் எடுக்கும் உறுதி மொழி என்ன ? இந்தியனாக பிறந்ததில் பெருமை அடைகிறேன், எனது தாய் திருநாடான பாரதத்தை நேசிக்கிறேன். அதன் கண்ணியம் காப்பேன். நான் இந்தியனாகவே என்னை நினைக்கிறேன்.

நான் என்னை தமிழனாக நினைத்தால் நான் ஒரு பிரிவினைவாதி - இதுதானே அந்த உறுதி மொழியை ஏற்றுக் கொள்வதன் மூலம் நாம் மறைமுகமாக ஏற்றுக் கொள்வது ?*/


நீதிமன்றங்களில் புனிதமாக கருதப் படுகிற ஏதோ ஒரு நூலின் மேல் சத்தியம் செய்ய சொல்லி பின் வழக்காடுவார்கள், அதன் பிறகு அவர் சொல்வது அத்தனையும் உண்மையோ???
சத்தியம் செய்துவிட்டு பொய் சொல்கிறார்களே, அது போலத்தான் இதுவும்.

மகாராஸ்ட்டிரத்தில், மகாராஸ்ட்டிரா மராத்தியருக்கே; கர்நாடகா கண்ணடர்களுக்கே என்று கர்நாடகத்தில்; என்றால் இந்தியா இந்தியர்களுக்கே என்ற கோசம், என்னாவது? இந்தியாவை ஆள நினைக்கும் தேசிய கட்சிகளும் சரி, இன்ன பிற அலுவலகங்களும் இதனை ஏன் கண்டிக்க வில்லை, குறிப்பாக உச்ச நீதி மன்றம், தேர்தல் ஆணையம் போன்றவைகள். இந்த நிலை நீடித்தால் அந்த அந்த மாநிலத்திற்கு அந்த அந்த மாநிலத்தவறே நீதிபதிகளாக, ஆட்சி தலைவராக, விசாரணை மன்ற குழு உறுப்பினர்களாகவும், தலைவர்களாகவும் வர வேண்டும் என்ற கோரிக்கை எழும். அப்படி எழும் பட்சத்தில் மொத்த இந்தியாவின் நிர்வாகமும் சீர்குலையும்.

மேலும் ஒரு ஆட்சி நடைபெரும்பொழுது, ஒரு சிறு வன்முறை கும்பல் கலகம் மற்றும் சேதம் விளைவிக்கும் பொழுது,
அது அந்த அரசாங்கத்தை கேவலப்படுத்துவதாக இல்லை?
கர்நாடகாவில் நடைபெறுவது 'வாட்டாள்' நாகராஜ் அவர்களின் ஆட்சியா? ராக்சன வெதிக்கே என்ன அங்குள்ள இராணுவமா? அப்படியே அவர் அங்கு தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் அமைச்சராக இருந்தால் கூட,
இவ்வாறு வன்முறை செய்ய சட்டம் அனுமதிக்க வில்லையே.

மேலும், இலங்கை தமிழரோ அல்ல இந்தியரோ, இல்லை இலங்கை அல்லது வேறு ஒரு இடமோ, இனமோ, அவர்களின் சமூக நீதி, வாழ்வுரிமை மறுக்க படும்பொழுதும், வல்லான் வகுத்ததே வாய்க்கால் என்று அடக்குமுறை கையாளப்படும்பொழுது கண்டிக்க வேண்டியது, ஒவ்வொரு மனிதனின் கடமை. இதனை செய்யும் யாரும் மனிதரே, மனித தெய்வமே.

மாவீரன் என அழைக்கப்பெரும் அலெக்சந்தரும், மகாவீரர் என்று போற்றப்படும் வர்த்தமானரும் ஒரே வரலாற்று புத்தகத்தில் இருந்தாலும், எவன் வந்தாலும் என் வாளால் வெட்டுவேன், வெற்றி கொள்வேன் என்ற மாவீரனை விட,
எவன் வந்தாலும் என் அன்பால் சிறை பிடிப்பேன் என்று ஆய்தம் தாங்கா மகாவீரரே சிறந்த வீரர், அவரை வழிபடும் மக்கள் கூட்டம் இன்றும் உள்ளது.

ஆக, இந்தியா இந்தியர்களுக்கே என்ற கோசம் விண்ணை முட்டி சாதிக்கட்டும். நம் ஒற்றுமை ஓங்கட்டும் அன்று நாம், ஈழ மக்கள் என்ன? எந்த மக்களுக்கும் நாம் கொடுக்கும் ஆதரவு ஒலி உலகத்தின் காதில் பேரிகை ஒலியாக விழும்.

வன்னியன் சொன்னது…

நல்ல முடிபு எடுத்துள்ளீர்கள்.
வாழ்த்து.

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்