பின்பற்றுபவர்கள்

28 மார்ச், 2007

ஒவ்வாமை !

ஒவ்வாமை மனிதருக்கு மனிதர் வேறுபாடு உள்ள ஒரு உணர்வு. சிலருக்கு மனதளவில் சிலவற்றைப் பார்க்கும் போது ஒவ்வாமையாக இருக்கும், சிலருக்கு சில மருந்துகளினால் ஒவ்வாமை ஏற்படும் அது உடலளவிலான ஒவ்வாமை. மன அளவிலான ஒவ்வாமை என்பது வேண்டிய வெறுப்போ வேண்டா வெறுப்போ, நேரிடையாக பாதிக்கப்படாவிட்டாலும் இவற்றை சில சமயங்களில் கொள்கையாகவே வைத்திருந்து அதிலிருந்து சற்றும் பின்வாங்காது அத்தகைய உணர்வுகளில் ஒப்புமையாகவே இருப்போம். தேவையற்ற வெறுப்பு, காழ்ப்புணர்வு இவைகளெல்லாம் மருத்துவ காரணமின்றி மனக் காராணங்களால் இருக்கும் ஒவ்வாமைகள். அவ்வாறு இருப்பவர்கள் தாம் மன அளவில் பாதிக்கப்பட்டு இருக்கிறோம் என்று தெரியாமலேயே அதே நிலையில் இருப்பார்கள். நண்பர்கள், நன்கு தெரிந்தவர்கள் அவர்களுடன் பேசி இவற்றை சரிசெய்ய முடியும். மனம் விட்டுப் பேசினால் அதன் காரணிகள் தெரியும். உளவியல் ரீதியாக அனுகவேண்டியது இவை. இத்தகைய ஒவ்வாமைகள் நாளடைவில் சமபந்தப் பட்டவர்களின் இயல்பாகவே மாறிப் போகும் ஆபத்தும் மிக மிக அதிகம்.

பிறந்து வளரும் போதே நாம் சில விலங்குகள், பூச்சி இனங்கள், ஊர்வன ஆகியவற்றில் சிலவற்றின் மீது ஈர்ப்பு மற்றும் சிலவற்றின் மீது தேவையற்ற வெறுப்பு மற்றும் பயம் இயல்பாகவே அமைந்துவிடுகிறது. நான் எங்கள் ஊரில் சிலர் குறிப்பாக பெண்கள் பாம்புக்கு பயப்படுவார்களை அறிந்து இருக்கிறேன். அவர்களிடம் சென்று 'பாம்பு' என்று சொன்னாலே 'ப்ல் கிட்டி' மயங்கிவிடுவார்கள். அப்படிபட்டவர்களிடம் சிறுவயதில் 'பாம்பு' என்று சொல்லியும், தென்னை ஓலையை அவர்கள் மீது தூக்கிப் போட்டு அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறேன். ஒரு மளிகைக் கடைக் காராரும் அப்படிபட்ட சிலரிடம் வம்பு வளர்த்தார். அதாவது மளிகை சாமனுடன் ப்ளாஸ்டிக் பாம்பு ஒன்றையும் கூடவே வைத்து அவர்களை பயப்படவைப்பார். பாம்புக்கு பயப்படும் அந்த பெண் (பேரிளம்) கடுமையான வசை மொழிகளை அவரை அறியாது சொல்லி திட்டுவார். இது எல்லாம் முன்பு தமாசாக இருக்கும்.

இன்னும் நான் பார்த்த சிலர் கரப்பான் பூச்சியைப் பார்த்தால் காத(10 மைல்) தூரம் ஓடுவார்கள். நண்பர் ஒருவர் திரைப்படத்தில் பாம்பு வரும் காட்சியை பார்த்தவுடன் 'உவ்வே' என்று தலையைக் குணிந்து கொள்வார். சிலர் நாய்களைப் பார்த்தால் நடுங்குவார்கள், பூனை சிலருக்கு அருகில் வரும்போது நடுக்கமே வந்துவிடும். நானும் கூட முறைத்துப் பார்க்கும் பூனைகளைப் பார்த்து நடுங்குவேன். தெரு நாய்கள் அருகில் வந்தால் உடனே மயிர்கூச்சல் வரும். பூரான், பல்லி (சென்னையில் Balli என்று சொல்வார்கள்) ஆகியவற்றை பார்த்தவுடனே சிலர் பயப்படுவார்கள்.
பாம்புகளை மிக அருகில் பார்த்தால் எனக்கும் பயமாகவே இருக்கும்.

இயற்கையிலேயே பருந்தைக் கண்டு தாய் கோழியின் இறக்கைக்குள் பதுங்கும் கோழிக் குஞ்சு போல நமக்குள் இருக்கும் பாதுகாப்பு உணர்வு நம்மை அறியாமல் நடுங்க வைத்துவிடுகிறது. விலங்குகள் திடீர்தாக்குதல் நடத்தும் என்ற அச்ச உணர்வும் ஒரு காரணமாக இருக்கும். மன அளவில் இருக்கும் ஒவ்வாமைகள் பெரும்பாலும் தேவையற்ற அச்சமாகவே இருக்கிறது. நண்பர்களே உங்களுக்கு ஒவ்வாமை ஏற்படுத்தும் விலங்குகள், ஊர்வன உண்டா ?

27 மார்ச், 2007

கிரிக்கெட் வீரர்களை எந்த அளவுக்கு நம்பலாம் ?

விளையாட்டு வீரர்கள் ஆகட்டும் சினிமா நடிகர்கள், அரசியல் வாதிகள் ஆகட்டும் நம்ம ஆளுங்க அவங்களுக்கு ரசிக கண்மணிகள் ஆகிவிட்டால் அதன் பிறகு இவர்கள் அவர்களை கடவுள் அளவுக்கு உயரத்தில் வைத்துப் பார்க்கிறார்கள். இதில் குறிப்பாக ரஜினி ரசிகர்கள் வெறி எடுத்தவர்கள் என்று சொல்வதில் எனக்கு ஒன்றும் தயக்கம் இல்லை. அது போல இந்திய அளவுக்கு கிரிக்கெட் வீரர் சச்சினுக்கு ஆதரவு அடியார்கள் இருக்கிறார்கள்.

சச்சினுக்கு வயது ஆகிவிட்டது அவரால் விளையாட்டில் முன்னைப் போல் முனைப்புடன் விளையாட முடியாது. கிரிக்கெட், கால்பந்து ஆகிய பல விளையாட்டுக்களில் புது இரத்தங்களால் தான் சாதனை படைக்க முடியும். அதிக ரன் குவித்தவர் என்பதற்காக இந்த உலக கோப்பை கால் இறுதி போட்டி வாய்பைக் கூட சச்சின் போன்றவர்களின் காலடியில் வைத்துவிட்டு தலை குணிகிறது கிரிக்கெட் வாரியம். விளையாட்டு போன்ற துறைகளில் திறமைக்குத்தான் மதிப்பு கொடுக்க வேண்டும் அனுபவத்துக்கு அல்ல. கிரிக்கெட் வீரர்கள் சம வயது உடைய வீரர்களிடமே மோதுகிறார்கள் என்று சொல்லவே முடியாது. இவர்களுடைய கடந்த கால தவறுகளை புதியவர்கள் நன்றாக படித்தே வந்து இருப்பார்கள். எனவே அனுபவ மிக்கவர்களை வீழ்த்துவது என்பது அவர்களுக்கு மிகவும் எளிது. புதியவர்களின் அனுகுமுறை எவ்வாறு அமையும் என்பது அனுபவமிக்க கிரிக்கெட் வீரர்களுக்கு புரியாமல் போவதால் எளிதில் பெவிலியனுக்கு திரும்பி விடுகிறார்கள்.

100 கோடி இந்தியர்களில் கிரிக்கெட் விளையாடும் இளைஞர்களே இல்லை என்பது போல் பழம் பெருச்சாளிகளையே அனுப்பி தோல்வியை சந்தித்து இருப்பது வெட்கக் கேடு. வாய்ப்புக்காக காத்திருப்போர் பலர் இருக்கையில் சச்சின், கங்குலி போன்றவர்களுக்கே வாய்ப்புகள் வழங்கி அதிக ரன் குவித்தவீரர் என்ற உயரத்தை எவரும் தொடாத வண்ணம் அவர்கள் மேலும் மேலும் அடைய செய்வது தான் சாதனையா ?
கிரிக்கெட் வாரியத்தை ஏமாற்றும் புக்கிகள் போலத்தான் நம்பும் கிரிக்கெட் ரசிகர்களை கிரிக்கெட் வாரியம் ஏமாற்றி வருகிறது.

சச்சின் போல தோற்றம் உடையவர்களை தேடி தேடி உதைக்கிறார்கள் என்பது கண்டனத்துக்கு உரியது. அவரை தலைமேல் தூக்கி வைத்துக் கொண்ட ஆட அவர் சொன்னாரா ? அவரின் சக்தியை மீறி அவரை நம்பிவிட்டதற்கு அவர் எப்படி காரணமாக முடியும். இது போன்ற கீழ்த்தரமான நடவடிக்கைகளை ரசிகர்கள் நிறுத்திவிட்டு நன்றாக ஆடக் கூடியவர்கள் எவராக இருந்தாலும் அது பாகிஸ்தான் வீரராக இருந்தாலும் பாராட்டுவது நலம். இந்தியா வெல்ல வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே போதாது, சம பலம் உள்ளவர்களிடம் மோதுகிறோம் என்று விளையாட்டை விளையாட்டாக நினைக்க வேண்டும். இங்கு பிரார்தனைகள் யாகங்கள் இவையெல்லாமே வீரர்களின் தன்னம்பிக்கையை குறைப்பது என்பது இப்பொழுது வெட்ட வெளிச்சம் ஆகி உள்ளது. இது போன்ற தேவையற்றதை செய்வதைவிட வீரர்களின் தன்னம்பிக்கைக்கு ஊக்கம் அளிக்கும் விதத்தில் அவர்கள் தோல்வியை தழுவும் போது பாராட்டி தட்டிக் கொடுப்பது நல்லது.

தோல்விக்கு காரணமாக வீரர்களை மட்டும் குறை சொல்வது என்னைப் பொருத்த அளவில் கண்டனத்துக்கு உரியது. குருவி தலையில் பனம்பழம் போல் பெரும் சுமையை ஏற்றிவிட்டு அவரகளை மட்டும் குறை சொல்வது ஏற்புடையது அல்ல.

25 மார்ச், 2007

தமிழாசிரியர் ஆன கைப்புள்ள

நம்ம கைப்புள்ள ஈரோ வேசம் கட்டினாராம் காட்டியும் அடிக்கடி காணாமல் போய்டுறார். தேடிப் புடிச்சு கலாய்க்கலாம்னு தேடினதில் ஒரு எலிமென்டிரி ஸ்கூலுல வாத்தியார் கெட்டப்புப் போட்டது பற்றி ரகசிய தகவல் கசிய. ...விடுவோமா ? நைசா பார்த்திக்கு கைப்பேசி வழி தகவகல் கொடுத்தாச்சு. பார்த்தி யாரு ? அவரும் முட்டி மோதி மாவாட்ட (எபி அல்ல) கல்வித்துறையில் இயக்குனராக பொறுப்பேற்று குண்டக்க மண்டக்க விலாச ஆரம்பிச்சு இருக்கார். இன்ஸ்பெக்சன் என்ற பெயரில் குறிப்பிட்ட ஸ்கூலுக்கு தடாலடியாக நுழைந்துவிட்டார்.

இடம் : மாநகராட்சி பள்ளி

கைப்புள்ள : பசங்களா, நல்லா திரும்வும் சொல்லுங்க

பசங்கள் : "அறம் செய்ய விரும்பு" கோரசாக சொல்கிறார்கள்

கைப்புள்ள : அது...! நல்லா பாத்துக்குங்க, கேட்டுக்குங்க, எவனோ ஒரு கேணப்பய இன்னிக்கு இன்ஸ்பெக்சனுக்கு வரப் போறானாம், நீங்க சொல்ற ஆத்திச் சூடியைக் கேட்டுவிட்டு, ஆத்தாடி பய புள்ளைங்க இருக்குற ஸ்கூல் பக்கம் இனி எட்டிக் கூடப் பார்க்கப் படாதுன்னு ஓடிடனும் சரியா ?

பசங்க : சரிங்க ஐயா (கோரசாக கத்துகிறார்கள்)

பார்த்தி உள்ளே நுழைகிறார், கைப்புள்ளையைப் பார்த்து 'இவன எங்கேயோ பார்த்து இருக்கிறோமே, ம் ஹூம் இருக்காது' கைப்புள்ள ஆசிரியர் கெட்டப்பில் இருப்பதால் உடனடியாக கண்டு கொள்ள முடியவில்லை.

கைப்புள்ள : வணக்கம் சார், பசங்களா சாருக்கு குட் மார்னிங் சொல்லுங்க

பசங்க : காலை வணக்கம் ஐயா - (கோரசாக கத்துகிறார்கள்)

பார்த்தி : மிஸ்டர் ... சாரி .. ஐயா கைப்புள்ள நீ தமிழாசிரியர் தானே ?

கைப்புள்ள : பார்த்தா தெரியல,

பார்த்தி : பார்த்தா தெரியறத்துக்கு நீ... சாரி நீங்க என்ன பாம்பே மிட்டாய் விக்கிறவனா ?

கைப்புள்ள மனசுக்குள்... இவன் அவன் தான் எச்சரிக்கையாக இருக்கனும், வாயைக் கொடுத்து வம்பில மாட்டிக்கக் கூடாது' ன்னு நெனச்சு



கைப்புள்ள : ஆமாம் நான் தமிழாசிரியர் தான். பரவாயில்ல சின்னவன் தான் நானு நிய்யீ வாப்போன்னு கூப்பிடு... அப்பு நம்ம பக்கமெல்லாம் எல்லாரையும் அப்புன்னு தான் கூப்பிடுவோம்.

பார்த்தி : அப்படி வா வழிக்கு, நீ தமிழாசிரியர்னு சொல்ற... அப்பறாம் ஏன் பசங்க கிட்ட 'குட் மார்னிங் சொல்ல சொன்னே, வணக்கம் னு தமிழ்ல சொல்லச் சொல்லி இருக்கனுமே ?

கைப்புள்ள : அப்பு, அப்பு தமிழலில சொன்னாலும் ஆங்கிலத்தில சொன்னாலும் ஒன்னுதானப்ப்பு ?

பார்த்தி : இப்ப ரெண்டு அப்பு அப்பப் போறேன், அது எப்படி தமிழில சொல்றதும் ஆங்கிலத்துல சொல்றதும் ஒன்னா இருக்க முடியும் ? உங்க சித்தப்பாவை போய் அங்கிள் னு ஆங்கிலத்தில் சொன்னினா செருப்பால அடிப்பாரு தெரியுமா ?

கைப்புள்ள : தப்புதேங். ..

பார்த்தி : உங்கிட்ட படிச்சாலும் பசங்க ஒழுங்காதான் தமிழில்ல சொல்றாங்க, கெடுத்துப்புடாதா.. சரி இங்கே என்ன பாடம் நடக்குது ?

கைப்புள்ள : 'அரஞ் செய்ய விரும்பு' சொல்லிக் கொடுத்துக்கிட்டு இருக்கேன்.

பார்த்தி : ம்...அரம்... செய்ய விரும்பு சொல்லிக் கொடுக்கிற...? (நோட்டமிட்ட வாறு )அதுக்கு தான் மேஜயில் ரம்பம் எல்லாம் எடுத்து வச்சிருக்கியா ?

கைப்புள்ள : ஏட்டுக் கல்வி சோறுபோடுமாப்பு ? வெறும் பாட்ட மட்டும் படிச்சா போதாதுன்னு தான் கைத்தொழிலும் சொல்லித் தர்ரேன். தமிழாசிரியர்னு தமிழு மட்டும் சொல்லிக் கொடுக்கல அப்பு, வேலையும் கத்துக் கொடுக்கிறேன்


பார்த்தி புரிந்து கொண்டு கடுப்பாகிறார்

பார்த்தி : மண்ணாங்கட்டி, முதலில் அறம்னா என்னன்னு சொல்லு ?

கைப்புள்ள : இவ்வளத்தண்டி மேசையில இருக்குது பார்த்தா தெரியல...? அரம்னா... அரம்னா ரம்பம்!!! அதான் சொல்லிக் கொடுக்கிறேன். பசங்க ரம்பம் செய்யக் கத்துக்கிட்டா ஆசாரி வேலை செஞ்சு பொழைச்சுக்க மாட்டாங்களா ? எல்லா புள்ளையுமே நல்லா படிக்கிறதுல்ல அப்பு, அவிங்க எதாவது வேலை செஞ்சு பொழைச்சுக்க வேணாமா ? எப்படி....?

பார்த்தி : மடைய மடையா , அறம்னா தருமம் ! தருமம் என்றால் ஏழைக்களுக்கு உதவனும் னு சொல்வது.

கைப்புள்ள : அட இதுல இம்புட்டு பெரிய சங்கதி இருக்கா ?

பார்த்தி : பேச்ச மாத்தாதே, ஆமாம் உன்னை எங்கேயோ பார்த்து இருக்கிறேன், உன் கையைக் காட்டு... கைப்புள்ள காட்டுகிறார், இரும்பு பிடித்த முரடாக இருக்கிறது உள்ளங்கை

பார்த்தி : இதுக்கு முன்னால் மரத்தடி ஸ்கூலுக்கு நீ தானே மணி அடிச்சுகிட்டு இருந்த ?

கைப்புள்ள மனசுக்குள் ' ஆக கண்டுபிடிச்சுட்டான்யா கண்டுபிடிச்சிட்டான்' மறைக்க முடியாது என்று நினைத்தவராக

கைப்புள்ள : ஆமாப்பு, அங்கிட்டு நான் பாட்டுக்கு மணி அடிச்சு பொழப்பு நடத்திக்கிட்டு இருந்தேன், அங்கிட்டும் கரண்டு பெல்ல வச்சு ஆப்பு அடிச்சிட்டானுங்க, அங்கின இங்கின கொஞ்சி வாத்தியார் வேலைய வாங்கினா... மணியாட்டி சார்னு கூப்பிட ஆரம்பிச்சிடுச்சி பயபுள்ளைங்க... அதான் அந்த ஸ்கூலு வேணாம்னு இங்கிட்டு வந்திட்டேன்

உடனே..
பசங்க : "மணியாட்டி சார்... மணியாட்டி சார் " - மாணவர்கள் கோரசாக கத்துகிறார்கள்

கைப்புள்ள : நல்லா இருப்பிய்யா நிய்யீ ... இங்கிட்டும் வந்து போட்டு கொடுத்திட்டியே பாவி... அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

பார்த்தி : அமாண்டா.... அறத்துக்கு என்ன அர்த்தம்னு தெரியாம பாடம் நடத்திக்கிட்டு இருப்ப.. அத நாங்க பார்த்துட்டு உனக்கு 'சபாஷ்' போட்டுட்டு போவனுமா ?

கைப்புள்ள : அப்பு ! இது கெவர்மண்ட் வேல அம்புட்டு சீக்கிறமா கை வச்சிட முடியாது தெரியுமுல்ல ?

பார்த்தி : அவ்வளவு தெணாவெட்டா ? உன்னை தண்ணியில்லா காட்டுக்கு மாத்தா சொல்றேன்.. ம் ஹூம் சரிப்படாது அங்கிட்டும் போய் 'கண்றொன்று சொல்லேல்' னு கன்னுக்குட்டிக்கு ஒன்னு ரெண்டு சொல்லிக் கொடுக்க ஆரம்பிச்சிடுவ... இனி என் ஆபிசில நீ தான் பெருக்கி, கூட்டி தண்ணி பிடிச்சு வக்கிற. என்ன சரியா ?

கைப்புள்ள : ஆகா தூக்க வச்சுட்டான்யா தூக்க வச்சுட்டான் தண்ணிப் பானையை தூக்க வச்சுட்டான்

பார்த்தி எதையோ எழுதி தலமை ஆசிரியரிடம் கொடுக்கிறார்.

கைப்புள்ள : மணியடிச்சு சோறுதின்னேன் இப்ப இவன்கிட்ட போயி தண்ணி வச்சுட்டுத்தான் திங்கனும் போல இருக்கு........ம் விதி யார விட்டுச்சு அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

இந்திய அணிக்காக இன்னுமொரு யாகம் செய்யலாம்

இந்தியா ஒலக கோப்பையை வெல்ல வேண்டும், இல்லையென்றால் 2000 கோடி நட்டமாம். ஏற்கனவே செஞ்ச யாகத்துல என்ன கொறை(யுது)ன்னு தெரியல. இப்பவும் சரியா செஞ்சுட்டா நமக்குதான் கோப்பை. இல்லையின்னா வீரர்கள வச்சு வெளம்பரம் எடுத்துவங்க உலக அளவுல கோப்பையை வச்சு பிச்ச எடுக்கிற நெலமைக்கு வந்துடுவாங்கலாம்.

கடைசியாக ஒரு சான்ஸ் இருக்காம், இந்திய அணிகிட்ட தோத்த பெர்முடாவும், இந்திய அணிக்கிட்ட ஜெயச்ச பங்களா தேசும் நாளைக்கு மோதுறாங்களாம். இதுல பங்களா தோத்தால் இந்தியா 8 க்கு போகும் இல்லாட்டி வீட்டுக்கு போகுமாம்.

அதுனால இரவோடு இரவாக பெர்முடா ஜெயிக்கனும்னு 'சரியான' ஒரு யாகம் வளர்த்தா ஜெயிக்க சான்ஸ் இருக்காம்.

பழசெல்லாம் ஞாபகம் வருது

படத்தில் தினமலர் 14000 ரன்கள் எடுத்தாரென்று ஹலைட் பண்ணி இருக்கிறது படிக்க தவறாதீர்கள். இது புகழ்ச்சியா இகழ்ச்சியான்னு ஒன்னும் புரியல. பாலிட்டிக்ஸ் தெரிஞ்சவங்கதான் சொல்லனும். :)

21 மார்ச், 2007

விளக்குமா(ற்)று சிந்தனை !

பயனற்ற பொருள் என்று எதுவும் இருக்கிறதா ? மனித கழிவை பன்றி விரும்பி உண்ணுகிறது அதன் கழிவு எருவாக மறுசுழற்சியில் பயிருக்கு உரமாகிறது. புதிது என்று நமக்கு தெரிவதெல்லாம் தோற்றம் - மறைவு சுழற்சியில் கிடைக்கும் மறுபயனீடு அல்லது புதுப்பிக்கப்பட்டது என்ற இயற்கை நியதியில் தான் அடங்குகிறது. பஞ்ச பூதங்களை உண்டு அதற்குள்ளே அடக்கமாகும் மனித உடலும் கூட இதில் அடக்கம்.

வசைச் சொல்லாக 'வெளக்கமாறு பிஞ்சிடும்' என்று திட்டும் குழாயடி சண்டைகளைப் எங்கள் ஊரில் பார்த்து இருக்கிறேன். விளக்கமாற்றை ஏன் வசைச் சொல்லுக்கு பயன்படுத்துகிறார்கள் என்பது தெரியவில்லை. அது பயனுள்ள ஒரு பொருள்தானே, காலை விடியலின் முதலில், சாணம் கரைத்துத் தெளித்துவிட்டு தொடுவது விளக்கமாறுதானே. ஒருவேலை அதற்கு கொடுத்த இடம் கருதி அவ்வாறு சொல்கிறார்களா ? அல்லது அது செய்யும் வேலையினால் அதனை குறைத்து மதிப்பிடுகிறார்களா ?
விளக்கமாறு ஒவ்வொரு வட்டாரத்திலும் ஒவ்வொரு பெயரில் வழங்கப்படுகிறது. எங்கள் ஊரில் விளக்கமாறு என்று சொல்லுவோம், சிலர் வாருகோல் என்பார்கள், சென்னையில் துடப்பம், துடைப்பம் என்று சொல்லுகிறார்கள். தென்னை ஓலை விளக்குமாறு தான் இன்னமும் கிராமங்களில் மிகுந்து புழக்கத்தில் இருக்கிறது. நகர வாசிகள் பூந்துடப்பத்துக்கு மாறிவிட்டார்கள். எந்த விளக்கமாறாக இருந்தாலும் தொட்ட பின்பு கை கழுவி கைசுத்தமாக இருப்பது சுகாதாரம். முன்பு மனிதர்களும் விளக்கமாறு செய்த வேலையைச் செய்கிறார்கள் என்று அவர்களையும் தொட்ட பின்பு குளிக்க வேண்டும் என்ற இழிவு நிலை இருந்தது. இன்று பரவாயில்லை விளக்கமாற்றிற்கு மட்டும் தான் அந்த மகத்துவம் என்று முற்றுப்புள்ளி வைத்தாகிவிட்டது, ஆனால் இன்னும் ஆலமரத்தடி பெருசுகள் கிராமத்தில் தீண்டாமை வன்கொடுமைகள் செய்துகொண்டிருக்கின்றன. பல்லாக்கில் போகிறவரை ஆடிவிட்டு போகட்டம் அவர்கள் காலமும் முடியப் போகிறது. அதைவைத்து ஏனையோர்கள் இன்னும் தீண்டாமையில் இருக்கிறார்கள் என்று சொல்ல முடியாது.

பணக்கார வீடுகளில் மின் சாதன விளக்குமாறு (வாக்குவம் கீளினர்) வந்துவிட்டது. இதுவும் அதே வேலையச் செய்தாலும் பெயர் சொல்லில் பெருத்த வேறுபாடு உள்ளதால் (சலூன் - ப்யூட்டி பார்லர் என்பது போல) அதை யாரும் மூலையில் போடுவதில்லை. அதற்கு உயரியமரியாதைக் கொடுத்து பாதுகாப்பாகத் தான் வைத்திருக்கிறார்கள்.

விளக்கமாறு பற்றி எதும் சுவையாக சொல்ல முடியுமா ? முடியுமே ! மசால் தோசை என்றதும் சுவை ஞாபகம் வருகிறதல்லவா ? ஓட்டலில் சூடான பெரிய கடப்பா கல்லில் தண்ணிரைத் தெளிப்பார்கள். 'சொய்ய்ய்ய்ங்' என்று இரைச்சலில் அடுத்து அதன் மேல் 'பரட் பரட்' என்று தனிப்பட்ட (ப்ரத்யோக) விளக்குமாற்றின் உரசல் ஒலி. அப்பறம் அந்த கல்லில் இடப்பட்ட தோசை மாவில் சூடான மசால் தோசை. சுவையான செய்தி.

விளக்குமாறு பற்றி கனமான எதும் சொல்ல முடியுமா ? ம். விளக்குமாறு மற்றும் உருவச்சிலை பற்றிச் சொல்லப் போகிறேன். ஆ ! 'பெரியாரிஸ்ட்' என்று வெளியில் சத்தமாக குரல். மனதுக்குள் 'சண்டாளன்' என்று நினைத்தால் அது ஒரு கனமான தகவல் தான் :). நான் +2 படிக்கும் போது தேர்வு கால விடுமுறைக்கு படிப்பதற்கு எங்கள் ஊரில் உள்ள நீலாயதாட்சி அம்மன் கோவிலுக்குச் செல்வேன். நல்ல குளுமையாக இருக்கும். படிப்பில் கவனம் செலுத்த சரியான இடம். ஒருமுறை அப்படி படித்துக் கொண்டிருக்கும் போது கோவில் சன்னதியில் சுற்றி சுவற்றில் பதித்து இருக்கும் துர்க்கை அம்மன், மற்றம் சில உருவச் சிலைகளை கழுவிக் கொண்டிருந்தார்கள். நெருங்கிப் போய் பார்த்தேன். கட்டை விளக்குமாற்றை திருப்பிப் பிடித்து எண்ணைப் பிசுக்கு போக பலமாக சிலையின் முகத்தில் தேய்து கழுவிக் கொண்டிருந்தார்கள். 'நாமெல்லாம் பயபக்தியுடன் வணக்கும் தெய்வச் சிலையை விளக்குமாறு கொண்டு முகத்தில் தேய்கிறார்களே' என்று மனதை அந்த நிகழ்ச்சி வெகுவாக பாதித்தது.

அப்பறம் தான் நினைத்தேன் 'விளக்குமாறு விளக்கமாறாக பிறந்தாலும்' அது இருக்கும் இடத்தைப் பொருத்து அதன் பிறவிப் பயன் இருக்கிறது போலும் என்று ஆறுதல் படுத்திக் கொண்டேன். நன்றாக துப்புறவு செய்வது என எல்லா விளக்கமாறும் ஒரே வேலையைத்தான் செய்கின்றன. தேய்ந்ததும் குப்பையில் வீசி எறிந்துவிட்டு திரும்பிப் பார்க்கமல் வந்துவிடுகிறோம். நம் உடலைவிட மனம் சுமக்கும் அழுக்குகள் அளவிட முடியாத ஒன்று. திரும்பாத இடத்திற்கு செல்லும் வரை சேர்த்துக் கொண்டிருக்கிறோம் குப்பைகளை.

19 மார்ச், 2007

நண்பர்களே மன்னிக்க வேண்டுகிறேன் !

தமிழ்மணம் மறுமொழி இடுகை திரட்டியில் எனது பதிவுகள் அனைத்தும் வரிசையாக வந்துள்ளது. நான் எதுவும் செய்யவில்லை. இது எப்படி என்று தெரியவில்லை.


யார் வைத்த சூனியமோ தெரியவில்லை. பொறுத்து அருள்க !

இது கொத்தனாருக்கு அர்பணம் !

மதமாற்றமா ? மனமற்றமா ?

'பரலோகத்தில் இருக்கும் பரமபிதாவே' எல்லோரையும் ரட்சிப்பது போல் மதம் மாறிய தலித்துகளையும் / ஆதிதிராவிடர்களையும் ரட்சிக்கிறாரா ? இல்லை. மதம் மாறிய பின்பு கிறித்துவ ஆதிதிராவிடர்கள் என்ற அடையாளத்துடனே இருக்கிறார்கள். கல்விக் கேள்விகளில் முன்னேறி இருக்கிறார்களா ? என்று கூர்ந்து பார்த்தால் இல்லை என்று தான் எனக்கு தெரிந்தவரையில் இருக்கிறது.

எங்கள் தெருவில் ஆதிதிராவிடக் குடும்பம் ஒன்று இருந்தது. அவர்களுக்கு சில சொந்தக்காரர்களும் இருந்தனர். அந்த குடும்பத்தில் இருந்த பையன் என்னுடன் 10ஆம் வகுப்பு வரை படித்த என் தோழன். அந்த பையன் பிறக்கும் முன்பு அவர்கள் குடும்பம் எப்படியோ கிறித்துவ பாதிரியார்களால் மதம் மாற்றப் பட்டுவிட்டனர். பின்னர் பிறந்த குழந்தைகள் கிறித்துவ பெயரைத் தாங்கி பெர்னார்ட், ஆரோக்கியநாதன் மரிய செல்வி எனவும் பெற்றோர்களின் பெயர் மணிநாதனிலிருந்து மரியநாதன் ஆகியது, இந்திராணி என்ற பெயர் அற்புத மேரி என்று ஆகியது. அவர்களுடைய பாட்டிக்கு வயதான காரணத்தால் மதம் மாற்றப்படவில்லை. இவர்கள் ஏசுவையும், கன்னி மேரியையும் ஏற்றுக் கொண்டதற்காக காணிக்கையாக 2 செண்ட் நிலம் (அளவீடு சரியாக தெரியவில்லை) கிறித்துவர்கள் நிறைந்த மற்றொரு பகுதியில் கொடுக்கப்பட்டது கிறித்துவ அமைப்புகள் மூலம் கொடுக்கப்பட்டது. எனது சிறுவயது தோழராக ஆரோக்கிய நாதன் என்ற நண்பர் பத்தாம் வகுப்பு வரை என்னுடன் படித்தார். ஆறாம் வகுப்பு படிக்கும் போது அவர்களுக்கு கிடைத்த 2 செண்ட் நிலத்தில் வீடுகட்டிக் கொண்டு சென்றுவிட்டார்கள். எங்கள் தெருவில் இருந்த வீட்டையும் விற்றுவிட்டார்கள்.

நண்பரின் தந்தை அரிசி மில்லில் கூலி வேலை பார்த்து வந்தார். மூன்று பிள்ளைகளையும் படிக்க வைத்தார் எனவே முன்பு வீடு விற்ற காசு முழுவதும் தீர்ந்து போனதும் கிடைத்த 2 செண்ட் நிலத்தில் 1 செண்டில் அவர்களின் வீடு இருந்தது போக மீதம் இருந்த 1 செண்ட் நிலத்தையும் விற்றுவிட்டனர். அவர்கள் கிறித்துவர்களாக மாறியதால் சோதனை வந்து விற்றார்கள் என்று சொல்லவில்லை. இது எல்லாம் ஏழ்மையில் எங்கும் நடப்பதுதான். என் நண்பர் சரியாக படிக்கவில்லை, பத்ததாம் வகுப்பில் தோல்வி என்பதால் பிரிண்டிங் வேலைக்குச் சென்று விட்டார். அடுத்து அவருடைய தம்பி ஓரளவுக்கு படித்து தேறி இருந்தான். ஐடிஐ என்னும் தொழில் கல்விக்கு விண்ணப்பிக்கும் போது அவனுடைய மதிப்பெண்படி அவனுக்கு இடம் கிடைக்கவில்லை. விண்ணப்ப படிவத்தில் 'கிறித்துவ ஆதிதிராவிடர்' என்று போட்டும் அரசாங்க விதிமுறையினால் அவனுக்கு இடம் கிடைக்கவில்லை. அண்ணனைப் போலவே தம்பியும் பிரிண்டிங் வேலைக்குச் செல்ல வேண்டியதாக ஆயிற்று.

இவர்கள் மதம் மாறியதால் ஆதிதிராவிடர்களுக்கு கிடைக்க வேண்டிய ஞாயமான உரிமையும், ஒதுக்கீடும் ஆதிதிராவிடர்களாக இருந்தும் இவர்களுக்கு கிடைக்காமல் போனது. தலித்துகள் மதம் மாறினாலும் தலித்தாகவே பார்க்கப்படுகின்றனர் என்ற உண்மை தெரியாது பல தலித்துகள் தங்களுக்கு கிடைத்திருக்க வேண்டிய சலுகைகளை இழந்து தவிக்கின்றனர். தேவாலய வட்டாரங்களிலும் தலித்துகள் தனித்தே பார்க்கப் படுகின்றனர் என்பதை அதில் உள்ளவர்களே ஒப்புக் கொள்ளும் சிலுவையில் அறையும் உண்மை.

சென்னையில் நான் பொறியியல் கல்லூரியில் படித்த போது அதே போல் வேறு கிறித்துவ நண்பர் எனக்கு கிடைத்தார். ஆனால் அவர் பெயரையோ, மதத்தையோ ஆவணங்களில் மாற்றிக் கொள்ளவில்லை, இந்து என்றே அறியப்பட்டார். எனவே அவருக்கு அரசாங்க சலுகை கிடைப்பதில் தடை இருக்கவில்லை. இந்து மதம் மற்றும் ஏனைய மதங்களைப் பற்றி இங்கு நான் சொல்லவில்லை. மதமாற்றம் குறித்து பலபதிவுகளில் மதமாற்றம் என்பது என்பது மனமாற்றம் என்ற சொல்லாடலில் சொல்கின்றனர். மதமாற்றம் என்பது மனமாற்றமாக அவர்களாகவே விரும்பி தேர்ந்தெடுக்க வேண்டிய ஒரு மாற்றுவழியாக இருந்தால் அவர்களுக்கு தனிப்பட்ட இழப்புகள் என்று எதுவும் இருக்காது. மதங்கள் வியாபாரமாகப் போகும் போது அதன் பயனீட்டாளர்கள் வாழ்நாள் முழுவதும் வருத்தப்பட்டு பாரம் சுமக்கின்றனர் அதன் வலியை சந்ததியனரும் அனுபவிக்கின்றனர்.

8 மார்ச், 2007

சுற்றிச் சுற்றி வந்தேங்க - சென்னை 2

சிங்கையில் இருந்து கிளம்பும் முன் நண்பர் குழலியிடம் சென்னை வலைப்பதிவாளர்கள் தொடர்பு எண்கள் கேட்டிருந்தேன். பாலபாரதியின் எண்ணைக் கொடுத்து ... 'எப்போதும் வலை நண்பர்களின் தொடர்பில் இருக்கும் பாலபாரதியைப் பார்த்தீர்கள் என்றால் அவர் அங்கிருக்கும் நண்பர்களை சந்திக்க உதவுவார்' அதன் படியே முதலில் பாலபாரதியை சந்திப்போம் என்று வித்தலோகா சென்றேன். ஏற்கனவே நண்பர் குழலி என் நிழல்படம் அவரது நிழல்படக் கருவி மூலம் காட்டி இருந்தார் எனவே பாலபாராதி வித்தலோகா கடையின் கண்ணாடி தடுப்பு சுவருக்கு பின் இருந்தே என்னை அடையாளம் கண்டு கொண்டு கை அசைத்தார்.

உள்ளே சென்றேன்... மற்ற நண்பர்கள் போலவே தழுவி ... கைகுலுக்கி கொண்டோம். அவர் நல்ல உயரம் ... உயரத்துக்கேற்ற உடல் வாகு ... எதற்கும் கவலைப்படாமல் எல்லாவற்றையும் சந்திக்க முடியும் என்பது போன்ற முக உணர்வுகள் ... உண்மையிலும் இளைஞர். புத்தகக் கடையில் உள்ள புத்தகங்களைக் காட்டினார். வலையுலகை அறியாத என் நண்பர் சுஜாதாவின் நாவல்களை வாங்கினார். எனக்கு பாலபாராதியே புத்தகங்களைத் தேர்வு செய்து கொடுத்தார். 'தெரிந்தவர்களுக்கு தள்ளுபடி இல்லையா ?' என்றேன். 'அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை' எனச் சொல்ல ... புத்தகங்களில் இருந்த விலைப்பட்டியல் படி ரசீதுக்கு பணம் கொடுத்துப் பெற்றுக் கொண்டேன்.

'மற்ற வலைபதிவு நண்பர்களுக்கு தொலைபேசியில் தெரிவித்து நாளை பகல் உணவுக்கு வரச் சொல்கிறேன், நாளை பிற்பகல் 1 மணிக்கு வந்துவிடுங்கள் ' என்றார். சரி என்று சொல்லிவிட்டு அங்கிருந்து நானும் என் நண்பரும் மாலை 6 மணிக்குக் கிளம்பினோம். பின்பு தேவி காம்ளெக்ஸ் சென்று 7 மணி காட்சி 'தீபாவளி' படத்துக்கு 2 சீட்டுக்கள் பெற்றுக் கொண்டு ... படத்திற்கு நேரம் இருந்ததால் ஹக்கின் பாதாம்ஸ் சென்று எதாவது புத்தகங்கள் வாங்கலாம் என்று அங்கு சென்றேன். 'மறைந்து போன தமிழ் நூல்கள்' - மயிலை சீனி. வெங்கடசாமி எழுதிய புத்தகம் ஒன்று வாங்கிக் கொண்டேன். பின்பு மாலை 7 மணியை நெருங்க தீபாவளி படம் பார்த்துவிட்டு வீட்டுக்குச் செல்ல அன்றைய நாள் முடிந்தது.

மறுநாள் 22 பெப் 2007 அன்று வேறொரு நண்பரை அழைத்து பகல் 12:50க்கு வித்தலோக சென்றேன். பாலபாரதியுடன் பேசிக் கொண்டு இருக்கும் போது முதலில் வந்தவர் எனக்கு அறிமுகம் இல்லாதவர். பாலபாரதி அறிமுகப் படுத்தினார். இவர் 'தங்கவேலு' புளியமரம் என்ற பெயரில் பதிவு வைத்திருப்பவர் என்றார். பதிவின் பெயரைக் கேட்டதும் எனக்கு நினைவு வந்தது ... 'நான் தந்தையான போது' என அந்த பதிவில் எழுதப்பட்ட ஒரு இடுகை. மிக நல்ல கட்டுரை ... என்று சொல்வதைவிட ... நிகழ்வைப் பற்றி இயல்பாகவும் நெகழ்வாகவும் எழுதப்பட்ட ஒரு இடுகை. அந்த இடுகை நினைவு வந்ததும் ... அந்த இடுகையை எழுதியவர் இவர் என்று தெரிந்து கொண்டு அது குறித்துப் பாராட்டிப் பேசினேன். எனது இடுகைகளையும் படித்துவருவதாக சொன்னார்.

சிறிது நேரத்தில் மின்னலாக எங்கிருந்தோ வந்து சேர்ந்தார் வலைப்பூ சுனாமி என்ற அழைக்கப்படும் லக்கி லுக். அழகான லுக் ... அதிர்ஷ்ட பார்வை என்பது பொருத்தமான பெயர். நம் பக்கத்து வீட்டுப் பையன் போல எளிதில் கவரும் ...மிகச் சாதாரண தோற்றம். இயல்பாக சென்னை மொழியில் பேசும் அவரைப் பார்க்க வியப்பாக இருந்தது. அவர் இருக்கும் இடம் களைகட்டும் என்பது மிகை அல்ல. மிக அருகில் மணி அடித்ததும் அனைவரும் திரும்பிப் பார்க்க யானைத் தலைவி வந்தாங்க ... அதாவது பா.க.ச மகளீர் அணித் தலைவி பொன்ஸ் (பூரணா) தன்னுடைய வாகனத்தில் வந்து இறங்கினாங்க. ஒருவருக்கொருவர் (பரஸ்பர) வணக்கம் தெரித்துவிட்டு. நன்பகல் உணவுக்கு செல்லலாம் என தீர்மானித்தோம். எல்லோரும் இரு சக்கர வாகனம் வைத்திருந்ததால் பாலபாரதி லக்கியின் வண்டியில் பின் இருக்கையில் அமர்ந்து கொண்டார். நான் புளியமரம் தங்கவேலு அவர்களின் வண்டியில் அமரந்து கொள்ள மைலாப்பூர் நோக்கிச் சென்றோம்.

சங்கீதா ரெஸ்டாரெண்ட் வந்தோம். அது இவர்கள் அடிக்கடி சந்திக்கும் ரகசிய இடம் என்று நினைக்கும் படி இவர்களின் பேச்சு இருந்தது. மேலே குளிரூட்டப்பட்ட அறைக்குச் சென்று உணவு சொல்லிவிட்டு வருவதற்குள் பதிவுகள், பதிவர்கள், சர்சைகள் பற்றி பேச்சு நடந்தது. அமுக அமைப்பின் செயல்பாடுகள் குறித்து லக்கி பகிர்ந்து கொண்டார். பொன்ஸ், பாலபாரதி மற்றும் தங்கவேலு பா.க.ச வேர்ட் ப்ரஸ்சில் எழுதும் புதிய பதிவை எப்படி கொண்டு செல்வது என்று (கவலை ?) தெரிவித்தனர். அமுக அபிமானிகள் இருந்தும் பின்னூட்டம் திரட்டியில் காட்டுவதாக தற்போதைக்கு எந்த திட்டமும் இல்லை என்றார்கள். உணவு வந்தது எல்லோரும் சாப்பாடு சாப்பிட்டோம். பொன்ஸ் மட்டும் சிற்றுண்டி (சோளப் பொறியான்னு கேட்காதிங்க) எடுத்துக் கொண்டார். பேச்சு விவாகாரம் போளி(லி)கள் ... போண்டா என்று சென்றது.

தின்றுமுடித்து ஹோட்டலை விட்டு வெளியில் வந்ததும் என்னையும் சேர்த்து மற்ற மூவரை நிழல் படம் எடுக்க பொன்ஸ் உதவி செய்தார். அங்கேயே விடைபெறுவதாக கையைத் தூக்கி ஆசிகொடுத்துச் சென்றார். பின்பு நாங்கள் 4 பேரும் வித்தலோகா வந்து சேர்ந்தோம். புளியமரம் தங்கவேலுவை பற்றி தனிப்பட்ட முறையில் கேட்டபோது தாம் ஒரு சித்த மருத்துவர் என்றார். வலைப்பதிவில் நாள் முழுவதும் விழுந்து கிடப்பதாகவும். வீட்டுக் கணனிக்கு சுகவீனம் ஆனதால் சிறிது நாட்களாக வீட்டில் பொறுப்பாக நடந்து கொள்வதாகவும் சொன்னார். தற்போதைக்கு வீட்டு கணனிக்கு மருத்துவம் பார்க்கப் போவதில்லை. அலுவலகத்தில் மட்டுமே கணனியைப் பயன்படுத்துவது என்று மன உறுதி பூண்டுள்ளதாக சொன்னார். அவரும் விடை பெற பின்பு லக்கியிடம் சிறுது அளாவினேன் ... சிறிது நேரத்தில் கிளம்பி சென்றுவிட்டார்.

அதன் பிறகு என் நண்பரை வரச் சொல்லிவிட்டு பாலபாரதியுடன் பேசிக் கொண்டிருந்தேன். தாம் கவிதை எழுதுவதைப் பற்றி சில கவிதைகளைக் காட்டினார். என் நண்பர் வந்ததும் அவருக்கு தமிழ் தட்டச்சு உதவும் மென்பொருள்கள் வலைத் தளங்கள் குறித்து பாடம் நடத்தினார். இப்படி மணி மாலை 4ஐத் தொட அவர் துறத்தும் முன் பெரும்தன்மையாக விடை பெறுவதாக சொல்லி கிளம்பினேன். அன்று இரவே சென்னையில் இருந்து கிளம்பி பிறந்தகம் நாகைக்கு மறுநாள் காலை வந்து சேர்ந்தேன்.

இந்த சந்திப்பில் நான் பார்த்வர்கள் எல்லோருமே வலைப்பதிவில் அறிமுகமாகி உண்மையில் நான் முகம் பார்க்காதவர்கள் தான். ஆனால் ஒவ்வொருவரிடமும் முன்பே நன்கு பழகியது போன்ற உணர்வு அவர்களைச் சந்திக்கும் போது இருந்தது. சென்னையில் வரவனையான் செந்தில் மற்றும் மிதக்கும் வெளி சுகுனாதிவாகர் இருவரையும் சந்திக்க வேண்டுமென்று நினைத்திருந்தேன். வரவனையான் அன்று சென்னையில் இல்லை. சுகுனாதிவாகரிடம் சொல்வதற்கு பாலபாரதி மறந்துவிட்டேன் என்றார்.

மூன்று நாள் நாகை - திண்டுக்கல் - கோவை - சென்னை - நாகை என தொடர் பயணத்தில் 7 பதிவர்களை சந்தித்தேன். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு தனித்துவம் இருந்தது. இந்த இடுகைகளைப் படித்துவிட்டு முன்பே தமிழகம் செல்வதைக் குறிப்பிட்டு இருந்தால் சந்தித்து இருக்கலாம் என்று செந்தில் குமரன், உங்கள் நண்பன் சரவணன் மற்றும் கோவையில் இருந்து சூப்பர் சுப்ரா என்ற பதிவு நண்பர்கள் தெரிவித்தனர். அவர்களுக்கு வருத்தம் தெரிவித்து ... அடுத்தமுறை முன்கூட்டியே வருகையைச் சொல்லி உறுதியாக சந்திப்பேன் என்று தெரிவிக்கிறேன்.

நான் சந்தித்த திரு ஞானவெட்டியான் ஐயா, சுப்பையா ஐயா, நாமக்கல் சிபியார், ஆவிகள் அண்ணாச்சி மற்றும் அம்மணி, பாலபாரதி, லக்கி லுக், பொன்ஸ் மற்றும் தங்கவேல் ஆகியோர்களை சந்தித்தற்கு நான் பெருமகிழ்ச்சியையும் நன்றியையும் இப்பதிவின் மூலம் தெரிவித்துக் கொள்கிறேன்.

இதுவரை தொடரைப் படித்தும், படித்து பாராட்டிய அனைத்து பதிவு நண்பர்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். மென்மேலும் வளர்க நம் பதிவுலக நண்பர்களின் புரிந்துணர்வும் ஒற்றுமையும் .

பின்குறிப்பு : ஊருக்கு போய் வந்ததில் ஆறு இடுகைகள் எழுத எனக்கு செய்திகள் கிடைத்தது. சிங்கை திரும்பும் போது பத்து இடுகைக்கு விசயம் தேறும் என்று நண்பர் எஸ்கே ஐயா வாழ்த்தி இருந்தார் என்பதை நினைவு கூறுகிறேன். :)

நட்புடன்
கோவி.கண்ணன்


முந்தைய இடுகைகள் ...
சுற்றிச் சுற்றி வந்தேங்க - சென்னை 1
சுற்றிச் சுற்றி வந்தேங்க - திண்டுக்கல் 1
சுற்றிச் சுற்றி வந்தேங்க - திண்டுக்கல் 2
சுற்றிச் சுற்றி வந்தேங்க - கோவை 1
சுற்றி சுற்றி வந்தேங்க - கோவை 2

7 மார்ச், 2007

சுற்றிச் சுற்றி வந்தேங்க - சென்னை 1

கோவை பேருந்து நிலையத்தில் ... சென்னைக்கு கிளம்பும் முன் ... 'புகை உடலுக்குப் பகை' என்ற வாசகம் சிபியாரின் பதிவில் இருப்பதைக் குறித்து கேட்டேன். அது நல்ல செய்தி பதிவில் வழிவுறுத்துவது நன்மை என்றார். நல்லது... பகையை மறக்கலாம் தவறில்லை என்று நின்று ஒரு 5 நிமிடம் பேசிவிட்டு ... சென்னைச் செல்லும் பேருந்து அந்த நேரத்தில் இருக்காது என்பதால் சேலம் சென்று சென்னை செல்லலாம் என நினைத்து சேலம் பேருந்தில் ஏறச் சென்றேன். சிறு நினைவு பரிசு ஒன்றை கொடுத்தார். ஊரில் சென்று பிரித்துப் பாருங்கள் என்று சொல்லி விடை பெற்றார்.

கோவையிலிருந்து சேலம் 4 மணி நேர பயணம் ரூ 52 கட்டணம். படக்காட்சி (வீடியோ) ஓடியது. தொடர்ச்சியான பயணத்தால் உடல் சோர்வு ... இருந்தாலும் நள்ளிரவு தாண்டி பேருந்தில் செல்வதால் திருட்டு பயம் ... இரவு பயணத்தில் ஏற்படும் சங்கடம் ...தூக்கத்தை தள்ளிப் போட்டது ... 10 ஆண்டுகளுக்கு முன்பு திருச்சியிலிருந்து சேலம் செல்லும் பேருந்து பயணத்தின் போது நடுத்தர வயதை தாண்டிய ஒரு நபர் ... நல்ல தூக்கத்தில் இருந்த என்னிடம் அடிமடியில் கைவைக்க (பணம் தேடுவதற்கு அல்ல) ... நான் திடுக்கிட்டு எழுந்து என்ன நடக்கிறது என புரிந்து கொண்டு ... வேறு ஒரு இருக்கையில் அமர்ந்தேன். இது போன்ற சம்பவம் மீண்டும் நிகழ்ந்துவிட்டால்... அல்லது நல்ல தூக்கத்தில் பணப்பை திருடு போனால் என்ன செய்வது என நினைத்து பணத்தை பிரித்து... பிரித்து இரண்டு மூன்று இடங்களில் வைத்து யோசித்துக் கொண்டே இருக்கும் போது ... என்னை அறியாமல் தூங்கிவிட்டேன்.

பேருந்தில் அனைத்து விளக்குகளும் எரிந்து என்னை விழிப்படைய செய்த போது சேலம் வந்து சேர்ந்ததையும், உடமைகள் பத்திரமாக இருப்பதையும் அறிந்து கொண்டேன். மணி அப்போது அதிகாலை 4 மணி. சேலத்தில் இறங்கி ஆகிவிட்டது ...அடுத்து சென்னை செல்ல வேண்டும் அதுவும் நெடும் பயணம் என்பதால் ... காலை கடமைகளை முடிக்கலாம் என்று நினைத்து சேலம் பேருந்து நிலையத்தில் பொது குளியல் அறையை (இடக்கரடக்கல்) தேடிச் சென்றேன். மாநகராட்சிக்கே உள்ள ...வழக்கம் போல் பராமரிப்பு இன்றி ... விளக்கின்றி இருந்தாலும் பலர் சென்று வந்தனர்... உள்ளே குவாட்டர் பாட்டிலில் மண்ணெண்ணை ஊற்றப்ப்ட்டு எரிய வைக்கப்பட்ட விளக்கு ஒன்று மட்டுமே இருந்தது. அதுவும் தனி அறையில் இல்லை. கரும் இருட்டு ... வேறு வழி இல்லை என்று பயன்படுத்தினேன். வெளியில் காசு வசூலிப்பவர் சப்த்தமாக பாடிக் கொண்டிருந்தார் 'யாரும் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால் எல்லாம் சவுக்கியமே' ஆகா ! ... என்ன சூழ்நிலை!! எத்தகைய பொருத்தமான பாடல்!!! சுகாதாரத்தை எளிமையாக வழியுருத்துகிறாரே என்று மனதுக்குள் சிரித்தபடி முகம் கை கால் கழுவிவிட்டு ... அங்கு தண்ணீர் எடுத்து ஊற்றுபவரும் காசு கேட்டு கெஞ்ச அவருக்கும் கொடுத்துவிட்டு வெளியில் வந்தேன்.

சென்னை செல்லும் தனியார் பேருந்தில் ஏறி அமரும் போது மணி 5 ஆகி இருந்தது. பகல் 12 மணியைத் தாண்டி சென்னையை அடைவதாக நடத்துனர் சொன்னார். முதலில் வசந்த மாளிகை ஓடியது... பின்பு உலகம் சுற்றும் வாலிபன் அப்போது உளுந்தூர் பேட்டையை தாண்டி விழுப்புரம் அருகில் சென்று கொண்டிருந்தது பேருந்து. நீண்ட வாகன நெருக்கடி (டிராபிக் ஜாம்) ... மெதுவாக ஊர்ந்து சென்றது பேருந்து... பிறகு எதோ ஊருக்குள் திருப்பி குறுக்கு வழியில் விழுப்புரம் வந்து சேர்ந்தது பேருந்து. இடையில் ஒரு இடத்தில் பேருந்தை நிறுத்தி இளைப்பாறினார்கள். திண்டிவனம் தாண்டி செல்லும் போது மணி காலை 10க்கு மேல் ஆகி இருந்தது. அப்போது படக்காட்சியில் 'திருடா திருடி' படம் ஓடியது... படம் முடிவை நெருங்குவதற்குள் சென்னை கத்திப்பாரா சந்திப்பை அடைந்ததும் அங்கேயே இறாங்கினேன். மணி பிற்பகல் 1. அங்கிருந்து சகோதரி வீட்டுக்குச் சென்று குளித்துவிட்டு ... மதிய உணவிற்கு பிறகு சிறிது ஓய்வெடுத்துவிட்டு கைத்தொலைபேசியை எடுத்து பா.க.ச பொதுச் செயலாளர் பதிவர் பாலபாரதிக்கு தொலைபேசினேன்.

5 மணி வரை வித்லோகவில் இருப்பதாக பாலபாரதி சொன்னார். சரி அங்கேயே சென்று சந்திக்கலாம் என முடிவு செய்து என் நண்பரை இரு சக்கர வாகனம் (பைக்) எடுத்துவரச் சொல்லி ... பால பாரதியை சந்திக்க வித்தலோகா புத்தகக் கடைக்குச் சென்றேன்.

தொடரும்...

முந்தைய இடுகைகள் ...

சுற்றிச் சுற்றி வந்தேங்க - திண்டுக்கல் 1
சுற்றிச் சுற்றி வந்தேங்க - திண்டுக்கல் 2
சுத்திச் சுத்தி வந்தேங்க - கோவை 1
சுத்திச் சுத்தி வந்தேங்க - கோவை 2

6 மார்ச், 2007

சுத்திச் சுத்தி வந்தேங்க - கோவை 2

சுப்பையா ஐயாவிற்கு நான் கோவை வந்துவிட்டதைத் தெரிவித்து.. அவரைப் பார்க்க காந்திபுரம் நோக்கி நானும் சிபியாரும் சென்று கொண்டிருந்தோம்

கோவை செல்வது இது முதல் தடவை இல்லை என்றாலும் சிறுவயதில் மருதமலைக் கோவிலுக்கு கோவை வழி சென்றது என்ற அளவில் கோவை மண் ஏற்கனவே அறிமுகமானது தான். ஆனால் அதிக அளவில் நினைவில் வைத்துக் கொள்ளும் அளவுக்கு அந்த வயதில் கோவையைப் பற்றிய எண்ணங்கள் எதுவும் இல்லை. எனவே கோவையின் 'சில்'லென்ற காற்று புத்துணர்வு அளிக்கும் போது கோவை புதிய அனுபவமாகவே இருந்தது.

சென்ற நேரம் இரவு 10:30க்கு மேல் என்பதால் கோவையின் இயல்பழகை தரிசிக்கும் வாய்ப்பு கிட்டவில்லை... என்றெல்லாம் யோசித்தபடியும், சிபியாருடன் பேசியபடியே காந்திபுரம் பேருந்து நிலையத்தை நோக்கி பைக்கில் பயணித்தேன். 5 நிமிட பயணத்திற்கு பின் தானியங்கி பணமெடுக்கும் இயந்திரத்தின் (atm) முன்பு பைக்கை நிறுத்திவிட்டு சிபி உள்ளே சென்றார்... நான் வெளியில் நின்று கொண்டிருந்தேன். மெல்லிய காற்று கூடவே மல்லிகை நறுமணம், ஜல்ஜல் கொலுசு ஒலி ... இந்த நேரத்தில் ? யார் அது ? என்று கேட்பதற்கு முன் ... 'ஹாய் கோவி, நான் தான் ஆவி அம்மணி !, வருக வருக !' என்றது. குளிரில் வியர்த்தாலும்... பழக்கப்பட்டது தானே என்று புரிந்து கொண்டு... 'நீ எப்படி இங்கே ?' என்று கேட்டேன். 'நான் கோவையில் தான் இருக்கிறேன், சிபியாரிடம் இதுபற்றி கேட்காதீர்கள், அவருக்கே தெரியாது' என்று பை பை சொல்லி மறைந்தது. அதற்குள் சிபியார் வந்துவிட்டார்.

மீண்டும் காந்திபுரம் நோக்கிய பயணத்தில். எனக்குப் பின் எவரோ உட்கார்ந்திருப்பது போன்ற உணர்வு, முதுகில் செல்லமாக தட்டியது போல இருந்தது. காதுக்குள் மெல்லியதாக கிசுகிசுப்பில் 'ஹலோ ! கோவி.. நான் தான் ஆவி அண்ணாச்சி ... நானும் இங்கதான் இருக்கேன்...இரவில் மட்டும் சிபியாருக்கு தெரியாமல் பைக்கில் உட்கார்ந்திருப்பேன். நீங்கள் கவனிக்காமல் என்மீது உட்கார்ந்து இருக்கிறீர்கள். என்றது குரல். 'ஆகா ! நல்லா மாட்டிக் கிட்டேனே...' என்று நினைத்துக் கொண்டிருக்கும் போது காந்திபுரம் பேருந்து நிலையத்தை அடைந்து வாத்தியார் ஐயாவைப் பார்த்தோம்.

சுப்பையா ஐயா பார்ப்பதற்கு வாத்தியார் போலவே இருந்தார்... இருவருக்கும் கைகுலுக்கினார். அருகில் இருந்த உணவு விடுதிக்குள் (ஓட்டல்) சென்றோம். சிறிய ஆஞ்சநேயர் லாமினேடட் படம் கொடுத்து... 'இதைப் பாருங்கள் நாமக்கல் ஆஞ்சநேயர், உங்களுக்கென்றே ... எடுத்து வந்தேன் ... இது உங்கள் அப்பாவுக்கு' என்று இன்னும் சில படங்களையும் கொடுத்தார். சிபியாரிடம் சில படங்களையும், ஒரு புத்தகத்தையும் கொடுத்தார். எனக்கு ஒன்றும் புரியவில்லை. நாமக்கல் ஆஞ்சநேயருக்கும் எனக்கும் என்ன சம்பந்தம், அப்பாவுக்கு என்று சொல்லி வேறு சில படங்களையும், கொடுக்கிறாரே' என்று கொஞ்சம் ஆழ்ந்து சிந்தித்தபோது 'பளிச்' என்று எண்ணம் தோன்றியது.[புரிந்தது]

'சிபியாரே.... உங்களை கோவி.கண்ணன் என்றும் ... என்னை சிபி என்றும் நினைத்துக் கொடுக்கிறார் என்றேன்'. [அப்போது] உடனே இருவரும் சிரித்தோம். அவருக்கு அப்போதுதான் புரிந்தது ஆளை மாற்றி நினைத்துக் கொண்டிருந்தது. இதில் என்ன தமாஷ் என்றால், அவரும், சிபியும் ஏற்கனவே நேரடியாக சந்தித்து இருக்கின்றனர். சிபியாரின் திடீர் தொப்பையின் ஏகபோக வளர்ச்சியால் வாத்தியாருக்கு குழப்பம் ஏற்பட்டு இருக்க வேண்டும்.
அதன் பிறகு எல்லோரும் சிரித்து இயல்புக்கு (நிதானத்துக்கு) வந்தோம். எனக்கு மசால் தோசை.. சிபிக்கு பூரி .. வாத்தியார் ஐயாவுக்கு காஃபி சொல்லி சாப்பிட்டுக் கொண்டே பேசினோம்.

வாத்தியார் ஐயா பேசிக் கொண்டிருந்தால் நாம் கேட்டுக் கொண்டே... கேட்டுக் கொண்டே இருக்கலாம்.. சொற்பொழிவு போன்ற மடைதிறந்த பேச்சு... வலையுலகில் எழுத ஆரம்பிக்கும் முன் சிற்றிதழ்களில் எழுதிய அனுபவம்... கண்ணதாசன் நண்பர் மற்றும் கண்ணதாசனின் குருவுடன் ஏற்பட்ட பழக்கம் ... தமிழ்வாணன் பற்றிய தகவல் பகிர்வு ... என சொல்லிக் கொண்டே வந்தார்... ஒரு மணி நேர சந்திப்பில் ... பதிவுலகின் செயல்பாடுகள் பற்றி குறிப்பிட்டார்... எவையெல்லாம் தவிர்த்தால் ... பதிவுலகம் முன்னேற்ற பாதையில் பயனுற அமையும் என்று தற்போதைய கறைகள் பற்றி அக்கறைகளை வாத்தியாருக்கே உரிய பாணியில் சொன்னார். துடிப்புள்ள இளைஞராக அவரது பேச்சும் நடவடிக்கையும் இருந்தது.

அன்றைய இனிய நல்லிரவு .... நடு இரவு நேரம் நெருங்கவே, வாத்தியார்.... 'கோவையில் இன்றிரவு தங்கிவிட்டு... பார்க்க வேண்டிய இடங்கள் நிறைய இருக்கிறது பார்த்துவிட்டுச் செல்லுங்களேன்' என்றார்... கால அவகாசம் அதிகம் இல்லை என்பதால் ... அடுத்த முறை குடும்பத்துடன் வந்து கோவையை ரசிக்கிறேன் என்று சொன்னேன். பின்பு அவர் விடை பெறுவதாக சொல்ல ... சிறிய நிழற்பட நிகழ்விற்குப் (வைபவத்திற்கு) பிறகு விடை பெற்றார்.

சிபியாரும் நானும் இருந்தோம்... சென்னைக்கு செல்லும் பேருந்து தேடி பேருந்து நிலையத்துக்கு வந்தோம்.

தொடரும்...

5 மார்ச், 2007

சுத்திச் சுத்தி வந்தேங்க - கோவை 1

திண்டுக்கல்லை விட்டு கோவை செல்ல வேண்டும் ... நேர்வழிச் சாலைத் தடம் எதுவென்று தெரியாததால் ... ஏற்கனவே தொலைபேசி வழி சந்திக்க விருப்பம் தெரிவித்து என் வருகையைத் தெரிவித்து இருந்த இரு நண்பர்களுடன் ஒருவரான நாமக்கல் சிபியைத் தொடர்பு கொண்டேன் ... நேரடி பேருந்து திண்டுக்கல்லில் இருந்து கோவைக்கு குறைவு ... எனவே பல்லடம் வழியாக வாருங்கள் என்றார்.

யோசித்துக் கொண்டு இருக்கும் போது பொள்ளாச்சி செல்லும் பேருந்தைப் பார்த்தேன் ... நடத்துனரிடம் விசாரித்தேன் ... பொள்ளாச்சி வழி கோவை செல்வதும் நேரான வழி என்று சொன்னார். ஏறி உட்கார்ந்தேன். பேருந்து மாலை 6.15 மணிக்கு புறப்பட்டது. பொள்ளாச்சி சென்று அடைய இரவு 9 மணி ஆகும் என்றார்கள். படக்காட்சியில் (வீடியோ) எம்ஜிஆர் படம் ஓடியது. பேருந்து பழனி வழியாக செல்லும் என்பதை அறிந்தேன்.

அந்தி வானத்தை மிகவும் மஞ்சள் குளிக்க வைத்து தானும் மிகவும் (அதிகம்) சிவந்ததால் வெட்கப்பட்ட சூரியன் மெல்ல மலைகளுக்கு பின்னால் முகம் மறைத்துக் கொள்ளச் சென்றதும் இரவின் விழிப்பு தொடங்க ஆரம்பித்தது. ஒட்டன் சத்திரம் தாண்டியதும் பழனி செல்லும் வழியில் கேரளாவுக்கு வெட்டுவதற்காக லாரியில் ஏற்றிக் கொண்டு செல்லப்படும் எருமை மாடுகளின் இறுதிப் பயணத்தை பார்த்ததும் மவுன அஞ்சலி செலுத்தினேன். தொலைவில் பொன்மலையாக ஒளிர்ந்த ஒரு மலையைக் கண்டதும் பேருந்து பழனியை நெருங்குவதாக உணர்ந்தேன். முன்பு பெற்றோருடன் பழனிமலைக்குப் படியேறியது நினைவு வந்தது. அங்கு முருகன் ஒப்பனையில் (வேஷம்) கையேந்தும் சிறுவர்களும் ... காலால் மிதிக்கப்பட்ட முற்காலத்து பஞ்சாமிர்த்தங்களும், பெண்களுக்கும் நெற்றிக் கண் உண்டாக்கும் கலப்பட குங்குமம் ... ஆண்களுக்கு நிரந்தர பட்டைத் தழும்புகளை உருவாக்கும் தரமற்ற திருநீரு ... ஏனோ மனத்துக்கு வந்து தொலைத்தது ... இவை ஏதும் அறியா சிறுவனாகவே இருந்திருக்கலாம் என்று நினைத்துக் கொண்டே இருக்கும் போது பழனி மலை அடிவாரத்தின் அருகில் இருக்கும் பேருந்து நிலையத்தை பேருந்து அடைந்தது 10 நிமிடம் நின்று புறப்பட்டது.

பழனியைப் பற்றிய பழைய எண்ணங்கள் தானாகவே விடைபெற ... பொள்ளாச்சியை நோக்கி பேருந்து பயணத்தில் இடை இடையே நாமக்கல்லாரும் சுப்பையா வாத்தியார் ஐயாவும் தொலை பேசி வழி தொடர்பு கொண்டு நான் கோவை சென்று அடையும் நேரத்தை பற்றி அக்கரையுடன் வினவினார்கள். உடுமலைப் பேட்டையில் 5 நிமிடம் நின்றது. அதன் பிறகு இரவு 9 மணிக்கு பொள்ளாச்சியை அடைந்தேன் ... உடனடியாக கோவை செல்லும் பேருந்து கிடைத்தது... அரை மணி நேரப் பயணத்தில் கோவையின் நகர எல்லையை பேருந்து அடைந்தது.... இடையே நாமக்கல்லார் தொலைபேசி வழி தொடர்பு கொண்டு பேருந்து உக்கடம் பேருந்து நிலையத்திற்கு செல்கிறதா ? அல்லது காந்திபுரம் பேருந்து நிலையமா ? என்றார் ... பேருந்து நடத்துனரிடம் கேட்டேன் 'உக்கடம்' என்றார் ... எனவே சிபியாரை உக்கடம் வரச் சொன்னேன். இரவு 10:15 இருக்கும் போது உக்கடம் பேருந்து நிலையத்தை பேருந்து அடைந்ததும் கூடவே வந்த பிறைநிலவும் விடை பெற்றது.

இறங்கியதும் தொலைபேசி வழி தொடர்பு கொள்ள அருகில் ஆட்டோ நிலையம் பக்கம் இருப்பதாகவும் உடனே வருவதாகவும் சொல்லிவிட்டு ... அப்படியே வெளியில் வாருங்கள் என்றார் ... வெளியில் சென்று பார்த்தேன் ... ஆளைக் காணவில்லை... திரும்பவும் தொடர்பு கொள்ளும் முன்பு மீண்டும் பேருந்து நிலையத்திற்குள் வந்தேன் ... தொலைபேசி வந்தது ... உடனே தொடர்பு துண்டானது ... எதிர் பக்கத்தின் வழியே அருகில் ஒருவர் நெருங்கி வந்தார் ... நல்ல உயரம் ... நெருங்கும் முன்பே புரிந்து கொண்டேன்...
வாங்க கோவி என்று வரவேற்று தழுவிக் கொண்டார் ... வாத்தியார் ஐயா காந்திபுரம் பேருந்து நிலையத்தில் காத்திருப்பதாக சொன்னார்... சிபியாரின் பைக்கில் ஏறி வாத்தியாரைப் பார்க்க காந்திபுரம் பேருந்து நிலையம் நோக்கி சென்றோம்....

தொடரும் ...

ஞானவெட்டியான் ஐயாவை சந்தித்தது குறித்து எழுதப்பட்ட இடுகைகள்,
சுற்றிச் சுற்றி வந்தேங்க - திண்டுக்கல் 1
சுற்றிச் சுற்றி வந்தேங்க - திண்டுக்கல் 2

1 மார்ச், 2007

சுற்றிச் சுற்றி வந்தேங்க - திண்டுக்கல் 2

முன்பகுதி ...

நான் முன்பு ஒரு முறை ஞானவெட்டியான் ஐயாவுடன் செல்பேசி வழி ஒரு முறை 20 நிமிட நேரம் பேசி இருக்கிறேன்.
அவர் உருவப் படத்தை இணைய பதிவில் பார்த்து இருக்கிறேன். சற்று முறுக்கு மீசையுடன் இருப்பார். அதன் பிறகு சந்திக்கச் சென்ற அன்று நேரடியாகப் பார்த்தேன். பச்சை வண்ண 'டி' சட்டையில் (சர்டில்) கள்ளழகராக நின்று வரவேற்றார். மீசையில் முறுக்கு இல்லை ம.பொ.சி மீசை போல அடர்வாக இருந்தது. கன்னக் கதுப்புகள் அந்த படத்தில் இருப்பதை விட சற்று மிகையாகவே இருந்தது. அறிமுக கைகுலுக்கல் முடிந்ததும் வீட்டின் முற்பகுதியில் உள்ள வரவேற்பறைக்கு அழைத்துச் சென்றார். மணி மாலை 3:45 ஆகி இருந்தது

பலவகையான (சகல விதமான) கணனி தொடர்புடைய கருவிகளுடன் (சாதனம்) அவருக்கென்ற தனிப்பட்ட (ப்ரத்தியோக) அறையில் இருந்தது. எல்சிடி 17" கணனி திரை பெரிய எழுத்துக்களில் படிப்பதற்கு ஏற்ப மாற்றி வைத்திருந்தார். குட்டி நூலகமும் அதில் ஆன்மிக, சித்தர் பற்றி நூல்கள் இருந்தன.

வாங்கிச் சென்ற பழங்களைக் கொடுத்துவிட்டு எதிரதிரே அமர்ந்து உரையாடினோம். தன் துணைவியாரை அழைத்து அறிமுகப் படுத்தினார். ஐயாவுக்கு ஏற்ற குணநலன்களுடன் இருப்பதை பார்த்தவுடன் புரிந்து கொள்ள முடிந்தது. அவர் சற்று உடல் நலக் குறைவாக இருப்பதால் மிகுந்த (அதிக) நேரம் உரையாட முடியாது என்று என்பதால் ஐயாவுடன் உரையாடத் துடங்கினேன்.

அவர் 5 ஆண்டுகளுக்கு (வருடங்களுக்கு) மேலாக வலையில் எழுதி வருவதாகவும், கடந்த 2 ஆண்டுகளாக வலைப்பதிவில் எழுதி வருவதாகவும் சொன்னார். எண்ணிக்கையில் மிகுந்த அளவில் வலைப் பக்கங்களை வைத்திருப்பவர் பட்டியலில் எனக்கு தெரிந்து இவரும் அன்பு நண்பர் குமரனும் இருக்கிறார்கள்.

பேச்சு தற்போதைய வலைப்பதிவு நடப்புகளை (விவகாரங்கள்) பற்றி சென்றது. பதிவர்களில் பலர் தற்போது கருத்தொற்றுமையின்றி காழ்புணர்வில் சிக்கிக் கொண்டுள்ளார்கள் என்று கவலை தெரிவித்தார். வலைப்பதிவு எழுதுவர்களின் அகவை (வயது) 20 முதல் 70 வரை இருப்பதால், பல வேறுபாடுகள் வெளிப்படையா கண்ணுற முடிகிறதென்றேன். இளைஞர்களின் கருத்துக்கள் சூடாகத்தான் இருக்கும் என்று என் கருத்தைத் தெரிவித்தேன்.

பின்பு என்னிடம், என்னை சந்தித்து எதாவது ஆன்மிகம் அல்லது சித்தர் தத்துவத்தில் விளக்கம் (சந்தேகம்) பெறவேண்டும் என்பது போன்ற முதலான (முக்கிய) நோக்கம் இருக்கிறதா என்று வினவினார்.

ஐயா, விளக்கம் கேட்கும் அளவிற்கெல்லாம் நான் ஆன்மிகத்தில் வளரவோ ஆராய்சி நடத்தவோ இல்லை. உங்களைப் போன்ற நடமாடும் தெய்வங்களை சந்திக்க வேண்டும் என்ற ஆவாலில் பார்க்க வந்தேன்... அன்பும் நல்லாசியும் (ஆசிர்வாதம்) வேண்டும் என்பதைத் தவிர இந்த சந்திப்பில் எந்த நோக்கமும் இல்லை என்றேன்.

பின்பு அவருடன் தொடர்ந்து தொடர்பு கொள்பவர்களைப் பற்றி குறிப்பிட்டார் அதில் திருமதிகள் மதி கந்தசாமி, துளசி கோபால் ஆகியோறைப் பற்றியும், வளவு இராமகி ஐயாவுடன் தனக்கு உள்ள நட்பைப் பற்றி குறிப்பிட்டார். ஓசை செல்லாவுடன் இருக்கும் நட்பு பற்றியும், ஓசை செல்ல அவருக்கு இணைய தளம் அமைக்க உதவியதையும் தெரிவித்தார். 20 குழந்தைகளுக்கு கல்விக்கு உதவியதாகவும், சில பொது நல சேவை அமைப்புகளில் வழிநடத்தும் ஆலோசகராக இருப்பதாகவும் தன்னுடைய நற்செயல்களைப் பற்றி மிக எளிமையாக எடுத்துச் சொன்னார். வங்கி மேலாளராக தான் பணிபுரிந்ததை பற்றிச் சொன்னார்.
தன்னுடைய 95 அகவையுடைய அப்பா திருச்சியில் வசிப்பதாகவும், தம் தமக்கை புதுச்சேரியில் வசிப்பதாகவும் மாதம் ஒருமுறை அவர்களை சந்தித்து வருவது பற்றி நெகிழ்சியாக குறிப்பிட்டார்.

அவர் புது ப்ளாக்கரில் உள்ள டெம்ளேட் எனப்படும் கருவிப் பட்டையை அக்கு வேராக ஆணி வேராக பிரித்து வைத்துப் பயன்படுத்துகிறார். இந்த அளவுக்கு அவருடைய கணனி அறிவு என்னை வியப்படைய வைத்தது.

பேசிக் கொண்டிருக்கும் போது நேரம் சென்றதே தெரியவில்லை. படக் கருவி கொண்டு சென்றதால், புகைப்படம் எடுத்துக் கொள்கிறேன் என்றேன். மஞ்சள் வண்ண சட்டை அனிந்து கொண்டார். இரண்டு படங்களை எடுத்தேன். நானும் அவரும் சேர்ந்து நிற்க ஐயாவின் துனைவியார் ஒரு படம் எடுத்து கொடுத்தார். இடையே அவருடைய துணைவியார் சுவையான ப்ரூ காப்பி கொடுத்து விருந்தோம்பல் (உபசரிப்பு) செய்யதார். அடுத்த ஊருக்குச் செல்ல திட்டம் இருந்ததால் விடை பெறுவதாக அறிவித்தேன். பிறகு தம்பதிகளிடம் விழுந்து ஆசிபெற்றேன். திருநீறு பூசி விட்டார். சிறிய அளவிலான பூசை அறை பித்தளை விளக்கொன்றை நினைவு பரிசாக கொடுத்தார். ஐயாவின் உடல் நிலையை கருத்தில் கொண்டு அங்கேயே விடை பெற்றேன். வாசல் வரை வந்து வழியனுப்பினார்.

அங்கிருந்து திண்டுக்கல் பேருந்து நிலையத்திற்கு ஆட்டோ எடுத்து வந்து சேரும் போது மாலை மணி 6 ஆகி இருந்தது.

அடுத்து கோவையை நோக்கிய பயணம் ....

தொடரும்....

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்