பின்பற்றுபவர்கள்

22 மே, 2006

நீயும் நானும்

எனக்கு நினைவு தெரிந்த நாள் முதல்
உன்னை எனக்கு தெரியும்.

என்னைப் போல்தான் நீயும் இருக்கிறாய்
என்பதால் உன்னை எனக்கு பிடிக்கும்

அறுபடைவீடுகொண்ட பணக்கார நண்பனாய்
உன்னை நினைத்து உவகைகொண்டேன்

நீ இருக்கும் இடமெல்லாம் உன்னைத்
தேடி தேடி நான் அடைந்தேன்

தமிழுக்கு தெய்வம் என்று போற்றிய
உன்புகழில் நானும் குளிர்காய்ந்தேன்

என்னைப் போலவே நீ இருப்பதால்
நம் இருவருக்கும் நல்ல ஒற்றுமை என்றிருந்தேன்

உன்னையும் விட்டு என்னால் விலகமுடியும்
என்று ஒருநாளும் நினைத்ததில்லை

ஒருநாள் தான் தெரிந்தது உன்னைப் 'பற்றிய
நூலிழை' வேறுபாடு உனக்கும் எனக்கும் இருந்தது

உன்னை 'இடையில் பற்றிய நூலிலை'
என்னிடம் நீ நெருங்குவதிலிருந்து தடுக்கிறது.

பிறகு நான் எப்படி நம் இருவரும், தெரிந்தே
ஒன்றென்று பொய்யாக எண்ண முடியும் ?

உன் உருவத்தை என் உள்ளத்திலிருந்து
உடைத்தெரிந்து அருவத்தை மட்டும் வைத்துக்கொண்டேன்

அதுவும் நீ என்னோடு எனக்குமுன் பிறந்தவன்
என்னைச் சேர்ந்தவன் என்பதற்காகத் தான்

நீ என்றாவது என்னை காண ஆவல் கொண்டால்
புற அடையாளங்களை, 'நூலிலை' வேறுபாட்டையும்

துறந்து விட்டுவா.

அதுவரை உன்மேல் கோபமாக ஏதோ ஒருமலைக்
குன்றில் உன்னை எண்ணி அமர்ந்திருப்பேன்

8 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

//அதுவரை உன்மேல் கோபமாக ஏதோ ஒருமலைக்
குன்றில் உன்னை எண்ணி அமர்ந்திருப்பேன்//

அங்கிருந்து கொஞ்சம் திரும்பி பாருங்க அங்கயே வீருப்பான் நீங்கள் வணங்கும் வேலன்.

கோவி.கண்ணன் சொன்னது…

//அங்கிருந்து கொஞ்சம் திரும்பி பாருங்க அங்கயே வீருப்பான் நீங்கள் வணங்கும் வேலன். //

அங்கேயே இருக்கும் வேலன் எனக்கு தேவையில்லை, என்னைத் தேடும் வேலன் தான் எனக்கு வேண்டும்

பெயரில்லா சொன்னது…

"உன்னைத் தேடும் வேலன்"

நூலிழை அளவில் எனைப் பிரிய நினைத்தவனே!
நூலைத் துறந்து எனைக்காண வா எனச் சொன்னவனே!
பாலறிந்த பருவம் தொட்டு என்னுடன் இருப்பவனே!
நூல் மறந்து நெருங்கி வா; நின்னை அறிந்து கொள்ள!

பார்க்கும் இடமெங்கும் நீக்கமற இருப்பவன் யான்!
நீர்க்கும் விழிகளினால் எனை என்றும் ரசித்தவன் நீ!
கார்க்கும் எனைக் காண மனமின்றி நூலைப் பார்ப்பவனே!
யார்க்கும் பயமின்றி எனை உணர்ந்து வா!

நீ காணும் நூலெல்லாம் வெளியிலுள்ள விசித்திரங்கள்!
நீ கண்ட உன் வேலன் உன்னுடன் தான் இருக்கின்றேன் !
வீணான மனமயக்கம் தந்தவனும் நானன்றோ!
வீம்பை விட்டுவிட்டு வந்துவிடு என்னுடனே!

உடைத்தெறிந்தேன் என்று இங்கு சொல்லுவதும்
ஓடிப்போய் உட்கார்ந்தேன் மலைமுகட்டில் என்பதுவும்
விடைதெரியா விந்தைக்கு விடைகாண இச்சிப்பதும்
மடையர் செய்யும் செயலன்றோ? மகன் நீ செய்வதேனோ?

நான் போடும்[?!] முப்புரிநூல் ஒருதடையாய் இருக்குதென்று
வீண்பழியை நீ சுமத்தி வெறுத்தொதுக்கிப் போகின்றாய்!
உன்பழியை என்பழியாய் எடுத்தாண்டு உனைக்காக்க
அன்றொரு நாள் நான் மணந்த வேட்டுவச்சியை நினைத்திடுவாய்!

நூலென்றும், வேலென்றும், காலென்றும், தாளென்றும்
மாலென்றும், மருகனென்றும், மகனென்றும், மன்னனென்றும்
நாளெல்லாம் நானிலத்தில் நல்லவர்கள் சொல்லுவதும்
நூலுக்கு - தமிழ் நூலுக்கு- நானளிக்கும் பெருமையென்பதுணர்வாய்!

தலைப்பினிலே சொன்னவண்ணம், "நீயும் நானும்"
அன்றிருந்தோம், இன்றுமிருக்கிறோம்!
விருத்தாலும், வெறுத்தாலும் எப்படியும் நானுன்னை
மறுத்தொதுக்கிச் செல்ல மாட்டேன்
மறுப்பது கடவுளுக்கு வேண்டுமெனில் இயலலாம்
நண்பருக்குள் நடக்குமோ?
நீ வாழி!

பெயரில்லா சொன்னது…

அழகாகச் சொன்ன உண்மை!அருமையான சிந்தனை!!
தொடரவும்.
யோகன்

பெயரில்லா சொன்னது…

உன்னைக்காண மலையெங்கும் தேடினால்
என்னைக் காண சென்றிருப்பதாய் கூறினர்
என்னைக் காண எங்கு சென்றானவன் எனக்கு தெரியாமல் எங்கு ஒளிந்தான்
தேடித்தேடி களைத்தபோது
மனதிலிருந்து முருகனின் குரல்
உன்னில் நானும் என்னில் நீயும்
இடைவெளியின்றி உறைந்தோம் அருகில்
என்றான் மருகன் எந்தன் முருகன்.

கோவி.கண்ணன் சொன்னது…

//"உன்னைத் தேடும் வேலன்"//
எஸ் கே உங்கள் எதிர் கவிதையும் அருமை. நீங்கள் நன்றாக வெண்பா போல் நேர்த்தியாக எழுதுகிறீர்கள். நல்ல முயற்ச்சி வாழ்த்துக்கள். நான் உருவ வழிபாடுகளைத் துரந்து பல ஆண்டுகள் ஆகிவிட்டது. பழைய நினைப்பில் எழுதியது. அந்த 'நீயும் நானும்'.

கோவி.கண்ணன் சொன்னது…

//paarvai said...
அழகாகச் சொன்ன உண்மை!அருமையான சிந்தனை!!
தொடரவும்.
யோகன்
//
பார்வையின் பார்வைக்கும் கருத்துகளுக்கும் நன்றி

கோவி.கண்ணன் சொன்னது…

//உன்னைக்காண மலையெங்கும் தேடினால்
என்னைக் காண சென்றிருப்பதாய் கூறினர்
என்னைக் காண எங்கு சென்றானவன் எனக்கு தெரியாமல் எங்கு ஒளிந்தான்
தேடித்தேடி களைத்தபோது
மனதிலிருந்து முருகனின் குரல்
உன்னில் நானும் என்னில் நீயும்
இடைவெளியின்றி உறைந்தோம் அருகில்
என்றான் மருகன் எந்தன் முருகன். //

உங்கள் கவிதை சொல்வது அத்வைதம். நன்றாக இருக்கிறது. வருகைக்கு நன்றி

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்