பின்பற்றுபவர்கள்

30 டிசம்பர், 2011

நாகை புயல் பற்றிய அனுபவம் !

1952, 1977 நாகை வாசிகளால் மறக்க முடியாத இரு ஆண்டுகள், ஆம் இந்த இரு ஆண்டுகளில் நாகையை பலத்த சூறைகாற்றுடன் புயல்கள் தாக்கின. இரண்டு முறை தான் புயல் நாகையை தாக்கியுள்ளது என்றாலும் நாகையும் புயலும் தமிழக மக்களால் ஒன்றை ஒன்று நினைவு படுத்துகையில் தொடர்பாக வரும் பெயர்கள், 'நாகை என்றாலே புயல் அடிக்கும் ஊர்' என்ற எண்ணத்தை உறுவாக்கியது. 1952 ஆம் ஆண்டு புயலைப் பற்றி எனக்கு எதுவும் தெரியாது அப்போது பிறந்திருக்கவில்லை. அம்மா அப்பாதான் அதுபற்றிக் கூறி இருக்கிறார்கள். ஆனால் 1977 ஆம் ஆண்டு புயலை நேரில் உணர்ந்திருக்கிறேன். எம்ஜிஆர் ஆட்சிக்கு வந்த ஆண்டு தான் அது என்று நினைக்கிறேன்.

அப்போது ஐந்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன், நாகையில் தீபாவளிக்கு பிந்தைய ஐப்பசி - கார்த்திகை மாதங்களில் கடல் கொந்தளிப்புகள் எப்போதுமே இருக்கும், நாகையை அடுத்து வேதாரண்யம் கோடியக்கரையில் நில அமைப்பும், கடல் கடற்கரை அமைப்புகளும் புவியல் ரீதியாக மாறுவதால் புயல் பெரும்பாலும் கரையைக் கடக்க அந்த இடத்தையே தேர்ந்தெடுக்கிறது, அது போல் குறைந்த காற்றழுத்த மண்டலங்கள் உருவாக அந்தப்பகுதி கடலின் கிழக்கை தேர்ந்தெடுக்கிறது என்று ஊகிக்கிறேன்.

1977 க்கு முன் பெரியவர்கள் புயல் அப்படி இருக்கும் இப்படி இருக்கும் என்று சொல்லிக் கொண்டு இருந்தார்கள், அதை 1977 ல் நேரடியாக அனுபவிக்கும் போது தான் அவற்றின் தாக்கம் உணர்ந்தேன். பொதுவாகவே இந்திய புயல்கள் மழையோடு தான் வருகின்றன, புயல்வரும் முன்பே அதன் காற்றழுத்த மண்டலங்கள் மேகங்களை கூட்டி இருக்கும், மழை பெய்து கொண்டிருக்கும் போது புயலும் கரை கடந்துவிடும். பலத்த காற்றுடன் கூடிய மழையாகத்தாக பிற இடங்களில் நடக்கும் நிகழ்வு புயல்காற்றுடன் மழையாக புயல் அடிக்கும் இடங்களில் இருக்கும்.

நான் அறிந்த 1977 புயல் சரியாக பின்னிரவில் துவங்கி விடியற்காலை 5.30 மணிக்கு ஓய்ந்தது, அப்போது எங்கள் தெருவில் எங்கள் வீடு தவிர்த்து 10 குடும்பங்கள் உண்டு, அதில் எங்கள் வீடு தான் சிமென்டினால் கட்டப்பட்ட வீடு, நள்ளிரவுக்கு புயல் துவங்கியதுமே சன்னல் கதவுகள் அனைத்தையும் பெற்றோர்கள் சாத்திவிட்டு எங்களையெல்லாம் ஓரமாக உட்காரவைத்தார்கள், வீடு தலையில் இடிந்துவிழுமோ என்ற பயம் அவர்களுக்கு இருந்தாலும் எங்களிடம் அதையெல்லாம் சொல்லவில்லை, திடிரென்று தெருவிளக்குகள், வீட்டில் உள்ள மின்சாரமும் தடைபட்டது, சிம்னி விளக்கை கொளுத்தி வைத்தால் அதுவும் வெளியே அடிக்கும் காற்று சந்து பொந்துகளில் புறப்பட்டு வந்து விளக்குகளை அனைத்தது. ஆனாலும் அவ்வப்போது அடிக்கும் மின்னல் வெளியே பெரும்காற்று வீசுவதில் அசையும் மரங்களை படம்பிடித்துக் காட்டின.

தெருவில் வசித்தவர்களின் கூரைகள் பிய்த்துக் கொண்டு வீடே சரிய ஒவ்வொரு குடும்பமாக எங்கள் வீட்டை நோக்கி தடுமாறி மிகுந்த போராட்டங்களுடன் காற்றை எதிர்த்து எங்கள் வீட்டுக்குள் வந்தனர், எங்கள் பெற்றோர்கள் அனைவரையும் உள்ளே வரவழைத்தனர், அன்றைக்கு புயலுக்கு ஒதுங்க எங்கள் வீட்டிற்கு வந்தது சுமார் 50 பேர்களாகவது இருக்கும், அவ்வளவு பேரைத் தாங்கும் அளவுக்கு வீடு இல்லாவிட்டாலும், வேற வழியே இல்லை என்ற நிலையில் உட்காரவாவது பாதுகாப்பான இடம் கிடைக்கட்டம் என்று வெளியே சென்று என் அப்பா வாசலுக்கு வருபவர்களை உள்ளே இழுத்து இழுத்து விட்டுக்கொண்டிருந்தார். வீடு இழந்தவர்கள் எல்லாம் போச்சே என்று அழுது கொண்டிருந்தனர், எங்கள் வீட்டிற்குள் பெரியோர்களையும், சிறுவர்களையும் கொண்டுவருவதற்கு மிகவும் சிரமப்பட்டனர், மொத்தமே 200 மீட்டர் தொலைவிற்குள் இருந்த குடும்பங்கள் தான் என்றாலும் 160 கிமி வேகத்தில் வீசும் காற்று அடுத்த அடி வைக்கவிடாது தள்ளிவிடும் ஆற்றல் பெற்றது கூடவே மழை, கடும் இருட்டு, கண்ணை திறந்து பார்த்துக் கொண்டிருந்தாலே மரங்களில் இருந்து காற்றினால் பிய்த்து எரியப்படும் இலைகள் கண்ணை பழுதாக்கும் அளவுக்கு வந்து விழும், தெருவில் சாய்ந்து கிடக்கும் மரங்கள் அனைத்தையும் தாண்டித்தான் வேறு இடத்தை அடைய முடியும், பக்கத்தில் பள்ளிக்கூடம் இருந்தாலும் பூட்டப்பட்டு இருக்கும் என்பதால் தெருவில் இருந்தவர்கள் எங்கள் வீட்டிற்கு அடைக்கலம் நாடினர்.

புயல் முடிந்த காலை வெளியே வந்து பார்த்தால் எந்த ஒரு மின் விளக்கு மரமும் நின்ற இடத்தில் இல்லை, ஒன்று படுத்து கிடந்தது, அல்லது வளைந்து பக்கத்தில் எதன் மீதாவது சாய்ந்து கிடந்தது, பிள்ளையார் கோயிலுக்கு எதிரே இருந்த மிகப் பெரிய ஆரசமரம் சாய்ந்து கிடந்தது, சிறுவயதில் பொழுது போக்காக அதனடியில் கூடிக் களித்திருந்தோம், மாங்காய் சீசன் வேறு என்பதால்மா மரங்கள் இருந்த இடங்களில் தரையெங்கும் மாங்காய்கள், அவற்றை மூடி சாய்ந்து கிடந்த மாமரங்கள், பிள்ளையார் கோவில் வளாகத்தில் இருந்த தென்னைமரங்களில் பலவற்றை காணமுடியவில்லை, எல்லாம் சாய்ந்துவிட்டது, ஊரில் 60 விழுக்காட்டு மரங்கள் அனைத்துமே சாய்ந்துவிட்டன, சாலை போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டு இருந்தது, பறவைகள், கோழிகள் செத்துக் கிடந்தன, கால்நடைகள் (வயிறு உப்ப) செத்துக் கிடந்தன, சுவர் இடிந்துவிழுந்து, மரம் விழுந்து சிலர் செத்துப் போய் இருந்தார்கள், ஊரே பதட்டத்துடன், பயத்துடன் இருந்தது.



புயல் முடிந்தாலும் அவர்கள் எங்கு செல்வார்கள், ஏற்கனவே வீடுகள் இருந்த களைக்கப்பட்டு குட்டிச் சுவர் போன்று நின்றன, அவர்களுக்கும் உடனடி போக்கிடம் இல்லை, புயல் முடிந்த நாள் முதல் அடுத்த பதினைந்து நாளைக்கு சாப்பாடு, சமையல் எல்லாம் பொதுவாகவே நடந்தது. சிலர் பள்ளுக்கூடங்களில் அமைக்கப்பட்ட தற்காலிக முகாம்களுக்குச் சென்று தங்கினர்

பள்ளிகளெல்லாம் 15 நாட்கள் விடுமுறை விடப்பட்டு பொதுமக்களுக்கு திறந்துவிடப்பட்டு இருந்தது, பல்வேறு நல அமைப்புகள் மற்றும் அரசு உதவிகளாக உணவுப் பொருள்கள் துணிகள் பாதிக்கப்பட்டவர்களுக்கு கிடைத்தன. இப்போது நினைத்தாலும் புயலுக்கு முன் இருந்த மரங்கள், அருகில் இருந்த (பழைய) கூரை வீடுகள் நிழலாக தெரியத்தான் செய்கிறது. இன்னும் கூட தெருவில் வசித்தவர்களில் மீதம் இருப்போர் எங்கள் வீட்டிற்கு அடைக்கலம் வந்ததை நினைவு வைத்திருக்கின்றனர், அப்போது சிறியவர்களாக இருந்தவர்களுக்கு தற்போது 35 - 40 வயதாகிவிட்டது, இளைஞர்களாக இருந்தவர்கள் முதுமை அடைந்துவிட்டார்கள், முதியவர்களாக இருந்தவர்கள் ம்ரணித்துவிட்டார்கள்

2 கருத்துகள்:

பித்தனின் வாக்கு சொன்னது…

good post anna, but no comments for it. It shows how you faced hard in your beginning years of writing.

ஜோதிஜி சொன்னது…

வளமும் நலமும் பெற 2012 புத்தாண்டு நல்வாழ்த்துகள்

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்