*****
நான் சீன மொழியை பயிற்சி வகுப்புக்குச் செல்லாமல் நானே படிக்க முடிவெடுத்து இணையத்தை தோண்டிய போது கண்ணில் பட்டவை பல இணைய தளங்கள், அவற்றில் http://popupchinese.com/
என்ற தளத்தில் தான் முதன் முறை நுழைந்தேன், அதில் இருக்கும் சீனப்பாடங்களை விட பாடம் சொல்லிக் கொடுக்கப் பயன்படும் ஆங்கிலம் வெகுவாகவே ஈர்த்தது. இன்றைய தேதிக்கு Mp3 வடிவில் சீனம் சொல்லிக் கொடுக்க 100க் கணக்கான இணையத் தளங்கள் உள்ளன, நம்புங்கள் அவற்றின் 90 விழுக்காட்டை நடத்துபவர்கள் சீனர் அல்லாத ஐரோப்பியர்கள், ஆம் ஐரோப்பியர்களே பிற மொழி ஆர்வமிக்கவர்களாகவும் அவற்றை தொழிலாக்கிக் கொள்பவர்களாகவும் இருக்கிறார்கள், இங்கிலாந்தின் கல்வி நிறுவனங்கள் உலகெங்கிலும் செயல்படுகின்றன. சீனாவின் பல்வேறு நகரங்களில் அலுவலங்களை அமைத்து அங்கிருந்து இணையம் மற்றும் போட் கேஸ்ட்ஸ் (POD Casts) வழியாக சீனப் பாடங்களை நடத்தும் தொழிலை பல்வேறு ஐரோப்பிய நாட்டினர் செய்துவருகின்றனர். மேலே குறிப்பிட்ட இணையத் தளத்தின் இலவச பாடங்களை தரவிரக்கிக் கேட்டுக் கொண்டு இருந்தேன், ஒரு பாடத்தில் 'எங்கள் பாடத்தில் சில வற்றில் பிழை இருக்கும், அவை தவறான பொருளை உங்களுக்குச் சொல்லிக் கொடுக்கும், எங்கேயாவது அவமானப்படுவீர்கள், பணம் கட்டிப் படிப்பவர்களுக்கே நாங்கள் சரியான பாடங்களை அளிக்கிறோம்' என்ற ஒரு (இலவச) பாடத்தின் துவக்கத்தில் சொன்னார்கள், இது என்னடா வம்பாப் போச்சு, இலவசத்திற்கு வாய்ப்பே இல்லையா ? ஒரு வேளை நான் பணம் கொடுத்து பாடங்களைப் பெற நினைத்தாலும் இவர்களின் சொல்லிக் கொடுக்கும் தரம் ? பற்றி பணத்தைக் கொடுத்துவிட்டு யோசிக்க முடியாது என்ற சிந்தனைகளில் சில மாதங்கள் அந்தப் பக்கமே போகவில்லை.
சென்ற மாதத்தில் ஒரு நாள் ஐபோனை நோண்டிக் கொண்டிருக்கும் போது POD Casts என்ற வசதியும், அவற்றில் இலவசமாக வருபவற்றிற்கு பணம் கொடுக்கத் தேவை இல்லை என்கிற விவரமும் தெரிந்து சீன மொழிக் குறித்த பாடங்களைத் தேடினேன். 'மெல்னிக்ஸ்' என்கிற ஐரிஸ்காரர் 'Mandarin Chinese என்கிற தன்னுடையை melnyks.com - ன் இலவசங்களைக் கொடுத்து இருந்தார். கிட்டதட்ட 10 நிமிட அளவு கொண்ட 100 பாடங்கள்,. கேட்க நன்றாக இருந்தது ஆனால் மனதில் பதியும் வண்ணம் மொழிப் பெயர்ப்பு இல்லை, நேரடி மொழிப் பெயர்ப்பாக இல்லாமல் விளக்கம் என்ற அளவில் தான் ஆங்கிலம் பயன்படுத்தி பாடங்கள் எடுத்து இருந்தார். நமக்கு ஒரு வரியை எடுத்தால் அதில் இருக்கும் ஒவ்வொரு சொல்லுக்கும் விளக்கம் சொல்லி அதன் பின் அந்த வரி என்ன சொல்லுகிறது என்றுச் சொன்னால் தான் சொல்லின் பொருள் புரிந்து அடுத்து அந்த சொல் வரும் மற்ற வரிகளின் பொருள்களை நாம் ஊகப்படுத்திக் கொண்டு மொழித்திறனை வளர்த்துக் கொள்ள முடியும், மெல்னிக்ஸின் பாடம் வெறும் மொழிப்பெயர்பாகவே இருந்ததால் அதில் வரும் 50 விழுக்காட்டுச் சொற்களுக்கு மேல் நேரடிப் பொருளை புரிந்து கொள்ளமுடியவில்லை.
இதற்கிடையே மற்றொரு http://chinesepod.com/ தளத்தில் ஐபாட் இலவசங்களை தரவிறக்கிக் கேட்டேன், அவை மாறுபட்டு இருந்தாலும் பாடம் தொடர்பான பேச்சுகளில் ஆங்கிலம் மிகுதியாகவே இருந்தது. கடைசியாக http://www.chineselearnonline.com/ என்ற தளத்தின் இலவசங்களை கேட்கத்துவங்கினேன், தெளிவான ஆண் குரலில் எளிமையான ஆங்கிலம் கூடவே தைவானைச் சேர்ந்தவர்களை வைத்து சீன வாக்கியங்களை பேசச் செய்து கொடுக்கப்படும் விளக்கம், குறிப்பாக சொல்லுக்கு சொல், பின்னர் வரிக்கு நேரடி பொருள், பின்னர் வரி என்னச் சொல்கிறது என்பதற்கான ஆங்கில புரிதல் கேட்கவும் நன்றாகவே மனதில் பதிந்தது, ஒரு நாளைக்கு 10 நிமிடப் பாடங்கள் 10 ஐக் கூடத் தொடர்ச்சியாகக் கேட்க முடியும், காரணம் அடுத்தப்பாடத்தின் தொடர்ச்சி முந்தைய பாடங்களில் கற்றுக் கொண்ட சொற்களுடன் புதிய சொற்களைச் சேர்த்து (Progressive Learning) தொடர் பாடங்களாக இருந்தது.
ஏற்கனவே ஆதம் தன்னைப் பற்றி தாம் கன்னடியன் (கனடா நாட்டைச் சேர்ந்தவன்) என்று அறிமுகம் கொடுத்து இருந்தார் தன்னைப்பற்றி, 'ஐ அம் ஆதம், யு ஆர் லிசனிங்க் டு புரொகிரெசிவ் கோர்ஸ் ஆன் மேண்டரின் ஆன்லைன்' என்று துவங்கும் Host ஆதம் பற்றித் தெரிந்து கொள்ளலாம் என்று அந்த தளத்திற்குச் சென்றேன். பார்க்க கருப்பினத்தைச் சேர்ந்த ஒருவராகத் தெரிந்தார், பிறகு வேறு தளங்களில் தேடிப்பார்க்கும் போது தான் அவருடைய உண்மையான பெயர் 'ஆதர்ஷ் மேனன்' தாய் தந்தையர் இடம் பெயர கனடா நாட்டில் பிறந்து வளர்ந்தவர் என்று தெரிந்தது.
ஆதர்ஷ் மேனன்' ஆதம் என்று பெயர் மாற்றிக் கொள்ள சீனர்களுக்கு எளிமையான பெயரே நினைவில் நிற்கும் என்பதால் மற்றும் ஆங்கிலத்தில் வரும் 'Adarsh Menon) என்பதன் சுறுக்கம் என்று நினைக்கிறேன். ஆதம் சீன மொழிச் சொல்லிக் கொடுக்க முடிவெடுத்தது எப்படி ?
கிட்டதட்ட 2003 ஆம் ஆண்டு ஆங்கில ஆசிரியராக தைவானுக்குள் அடியெடுத்து வைத்தாராம், பிறகு ஆங்கிலத்தில் திரும்ப திரும்ப ஒரே பாடத்தை எடுப்பது சலிக்கவே சீனமொழியைக் கற்றுக் கொள்ள முனைந்து ஏறத்தாள மூன்று ஆண்டுகள் பல்வேறு சேகரிப்புகளுடன் சீன மொழியை கற்று தேர்ந்து 2006ல் முதன் முறையாக POD Casts வழியாக சீன மொழிச் சொல்லிக் கொடுக்கும் தொழிலை செய்யத் துவங்கினாராம். ஒரு பேட்டியின் போது இவற்றை தெளிவாகச் சொல்லி இருக்கிறார், 'நான் சீன மொழியைக் கற்றுக் கொள்ளும் போது ஏற்பட்ட சிரமங்கள் என்னை இந்தத் தொழிலுக்குள் தள்ளியது, என்னைப் போல் மொழி கற்றுக் கொள்ளவருபவர்களின் சிரமங்கள் உணர்ந்தே எனது சீன பாடங்களை அதற்கேற்றவாறு அமைத்துள்ளேன் அதாவது பிற மொழிக்காரர்கள் எதை எதிர்பார்ப்பார்கள் என்ற தேவை எனக்கு முழுமையாகத் தெரிந்தது'
கிட்டதட்ட ஆறு ஆண்டுகளாக சீன மொழிப்பாடம் எடுத்துவரும் ஆதர்ஷ் மேனனின் ஆங்கிலப் பேச்சில் மலையாள வாடை மருந்துக்கு கூட இல்லை. தற்போது தைவான் பல்கலைகழங்கள் சிலவற்றிற்கு இணையவழி சீனப்பாடங்களை ஆயத்தம் செய்து மொத்தமாக விற்று வருகிறாராம். கூடவே தைவானின் சீன உணவு வகைகள் மற்றும் அவை சிறப்பாக தயாரித்து கிடைக்கும் சுவையான உணவங்கள் பற்றிய பட்டியலுடன் கூடை ஆப்பிள் மென் பொருள் மற்றும் இணைய தளம் (Foodjing.com) ஆகியவற்றால் வருமானம் பார்த்துவருகிறார்.
சீன மொழிக் கற்றுக் கொள்ள இவர் 10 நிமிட அளவில் செய்த 430 பாடங்களை அமைத்துள்ளார், முதல் 40 பாடம் ஆங்கிலத்திலும் பிறகு கொஞ்சம் கொஞ்சமாக சீன மொழியிலேயே சொல்லிக் கொடுக்கப்பட்டு, 120 பாடங்களுக்கு பிறகானவை சீன மொழிகளினாலேயே சொல்லிக் கொடுக்கப்படுகிறது, அதாவது 120 பாடங்களை நாம் கடக்கும் போது ஓரளவு சீன மொழியை புரிந்து கொண்டும் அதன் பின் வரும் பாட விளக்கங்களுக்கான சீன சொற்களையும் கற்றுக் கொண்டு செல்ல முடியும். நான் 120 பாடங்கள் வரையில் தான் படித்துள்ளேன், முற்றிலும் படிக்கும் போது பெரிதாக விவாதம் என்ற அளவுக்கு பேச முடியாவிட்டாலும், எதிரே இருப்பவர் சீனம் பேசினால் புரிந்து கொள்ளமுடியும் என்றே நினைக்கிறேன்.
******
David Siteman Garland என்ற ஒருவர் உழைப்பால் முன்னேறியவர்களை பேட்டி எடுத்து வலையேற்றுவது தான் இவர் வேலை, இதற்காக David Siteman Garland வலைத்தளம் ஒன்றை அமைத்துள்ளார், உழைப்பால் உயரங்களை எட்டியவர்களின் 40 நிமிடங்கள் வீடியோ பேட்டிகளை எடுத்து இவர் தளத்தில் ஏற்றுகிறார். இவ்வாறு செய்வதன் மூலமே இவர் புகழ் அடைந்துள்ளார், இவரது தளத்தின் வழியாக ஒருவர் அறியப்படுவது ஒரு அங்கீகாரம் / பெருமை என்ற அளவில் உள்ளது. David Siteman Garland வலைத்தளத்தில் 'ஆதர்ஷ் மேனனின்' பேட்டி கிழே உள்ளது. ஆங்கிலேயர்கள் 'மேனன்' என்பதை மேனியன் என்று ஒலிக்கிறார்கள் என்பது இங்கு குறிப்பிடத் தகுந்த நகைச் சுவை.
இந்த இடுகை நான் நேற்று எழுதிய
4 கருத்துகள்:
தங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்களும், தகவலுக்கு நன்றியும்
XIE XIE
//'நான் சீன மொழியைக் கற்றுக் கொள்ளும் போது ஏற்பட்ட சிரமங்கள் என்னை இந்தத் தொழிலுக்குள் தள்ளியது, என்னைப் போல் மொழி கற்றுக் கொள்ளவருபவர்களின் சிரமங்கள் உணர்ந்தே எனது சீன பாடங்களை அதற்கேற்றவாறு அமைத்துள்ளேன் அதாவது பிற மொழிக்காரர்கள் எதை எதிர்பார்ப்பார்கள் என்ற தேவை எனக்கு முழுமையாகத் தெரிந்தது'//
இதைத்தான் பாம்பின் கால் பாம்பறியுமென்பதோ? சுவாரசியமான புத்திசாலியின் சரிதை!
வாடகைக்கு வீடு பிடித்துக் கொடுக்கும் தொழிலுக்கு எப்போதும் தேவை இருக்கும், நாம் பார்க்கும் வேலையை விட இதில் கூடுதலான வருமானம் வரும் வாய்ப்பு இருக்கிறது என்று உணர்ந்து புதிய தொழிலுக்கு மாறுகிறவன் தன் வாழ்க்கையைப் பாதையை மாற்றி வென்றவர்கள் வரிசைக்கு வருகிறான், இதை வெறும் உதாரணத்திற்குத் தான் சொல்கிறேன்.
அருமையான உதாரணம்..
பயனுள்ள பகிர்வுக்குப் பாராட்டுக்கள்..
கருத்துரையிடுக