பின்பற்றுபவர்கள்

19 டிசம்பர், 2011

ஒரு மொழி அழிந்தால் என்னவாகும் (1) ?

மொழிகள் பேசப்படாமல் அழிவதிலும், அல்லது பிற மொழியினரால் அழிக்கப்படுவதிலும் அது பிறரிடம் திணிக்கப்படுவதிலும் உடன்பாடு அற்றவன், காமம் என்பது இனிமையான உணர்வு என்றாலும் ஒப்புதலுடன் கூடுதல் மற்றும் வன்புணர்வாக தீர்த்துக் கொள்ளப்படுதல் என்பதன் மிகப் பெரிய வேறுபாடுகளைப் போன்றது பிற மொழியை தனிப்பட்ட ஒருவர் விரும்பிக் கற்பது மற்றும் அதன் மீது தொடர்ந்து செய்யும் புறக்கணிப்பு.

எப்போதும் அறிவீனர்கள் அல்லது மேம்போக்களர்களின், பொதுப் புத்தியாளர்களின் கூற்று 'மொழிங்கிறது பேசுவதற்குத்தானே (Medium of Communication) அதற்கும் மேல் என்ன இருக்கு ?' என்கிறார்கள், பெருவாரியானவர்களின் புரிதல் கூட இத்தகையது தான், அவை வெறும் அடிப்படைப் புரிதல். மொழி என்பது பேசுவதற்கு மட்டும் தான் என்ற நிலை மனிதன் தோன்றிய காலம் தொடர்ந்து இருந்தால் காக்கைக் கூட்டம் எங்கும் வாழ்ந்தாலும் ஒன்று போல் கரைவது என்ற நிலையில் தான் மனிதனின் மொழி ஒன்றாகவே இருந்திருக்கும். இங்கே முதன்மையாக கவனத்தில் கொள்வது என்ன வென்றால் மதவாதிகளின் படைப்புக் கூற்றுகளை உடைத்துப் போடுவதன் மறைமுக கருவியாகவே இருக்கிறது, மனிதன் படைக்கப்பட்டு இருந்தால் அவனுடைய மொழி ஒன்றாகவே இருந்திருக்கும், அல்லது அடிப்படைச் சொற்களான தாய் தந்தை உறவு முறைப் பெயர்களாவது ஒன்றாக இருக்க வேண்டும், ஒரே மொழிக் குடும்பத்தைச் சேர்ந்த மொழிகளுக்குள் கூட சொற்கள் அவ்வாறு இல்லை என்பது கவனிக்கத் தக்கது. மனிதன் படைக்கப்பட்டு பல்கிப் பெருகினான் என்ற மதவாதக் கூற்றை மொழிக் கூறுகள் முற்றாக உடைக்கிறது என்பதை மறுப்பதற்கில்லை. அதுமொழிப் பற்றிய சமூகக் கருத்து அல்லது மாற்றுப் புரிதல் தான், இங்கு கூற வருவது மொழிப் பற்றிய அரசியல் சார்ந்த புரிந்துணர்வுகள் இல்லை.

மொழி என்பது மனிதனின் வாழும் சூழலுக்கேற்ப உருவாக்கப்படுகிறது அல்லது உருப்பெறுகிறது என்பது தான் மொழியாளர்களின் மொழிக் குறித்த அடிப்படை பாடம், மொழியின் தோற்றம் என்பவை ஒரு மனிதன் வாழும் சூழலில் தம்மைச் சுற்றியுள்ளவற்றைப் பற்றி கதைப்பதற்கு உருவாக்கப்பட்ட சுட்டுச் சொற்களாக இருந்து பின்னர் அவர்களிடையே தகவல் பரிமாற்றம் மற்றும் தொகுப்பு ஒலிகள் என்ற அளவில் வளர்ந்து தத்தம் சந்ததியினரிடையே வரலாற்று ஒலிகோப்பாக தலைமுறை தலைமுறையாக கடத்தப்படுவது ஆகும்.

மனித ஒலிகள் அத்தனையும் ஒலி அலைவரிசையினுள் அடக்கம் என்றாலும் ஒரு குறிப்பிட்ட மொழிக் குறித்த சரியான ஒலிப்பு (உச்சரிப்பு) ஒன்றை பிற மொழியினரால் அப்படியே உள்வாங்க முடியாது, இதற்கு அடிப்படைக்காரணம் மொழிச் சொற்களின் அல்லது குரல் ஒலிகளின் தோற்றம் அல்லது உருவாக்கம் என்பவை மனித தொண்டை அமைப்பு, முக்குத் துளை, மூக்கு வடிவம் ஆகியவற்றை உள்ளடக்கியது. மிக்க குளிர் மிகுந்த நாடுகளில் வசிப்போரின் மூக்கு அமைப்புகளும் புறத்தோற்றம் மற்றும் நிறம் கூட பிற இடங்களில் வசிப்பவரை ஒப்பிட மாறுபட்ட ஒன்றாகவே இருக்கும், வாயை நன்கு திறந்து பேசினால் குளிரையும் உள்ளிழுக்க வேண்டிய சூழலைத் தவிர்க்க அவர்களின் சொற்கள் மற்றும் சொற்களின் ஒலி அமைப்பு உதடுகளை அதிகம் விரிக்காமல் அல்லது வாயைத் திறந்து (உதடு ஒட்டும் ஒட்டாது என்பது போல்) பேசப்படும் சொற்களின் எண்ணிக்கையும் மிகக் குறைந்ததாகவே இருக்கும், மாறாக வெப்ப நாடுகளில் வசிப்போருக்கு மூச்சுவிடுதல் ஒரு பெரிய இடற்பாடு இல்லை என்பதால் அவர்களின் மொழிகளில் இயல்பாகவே பல்வேறு ஒலிகளை கொண்ட சொற்கள் இருக்கும். மனிதன் தொடர்ந்து இடம் பெயர்ந்து கொண்டே இருப்பதால் சூழலுக்கு ஏற்ப முந்தைய மொழிகளின் திரிபுகளும் கண்டு கொண்ட புதிய நில அமைப்புகள் அவற்றின் தன்மை, பயனுக்கான, பொருளுக்கான புதிய சொற்களின் உருவாக்கங்களும் சேர கிளை மொழிகள் உருவாகின்றன. இது மொழிகள் உருவாக்கம் மற்றும் கிளைத்தல் பற்றிய மொழியாளர்களின் அடிப்படைப் புரிதல்.

மொழிகள் பண்பாட்டுக் கூறுகள் என்கிறார்கள், அதாவது ஒரு மொழிப் பேசுபவர்களின் கலைத் திறன் மற்றும் பண்பாடு அவற்றின் பழக்க வழக்கங்கள் அவர்கள் பேசும் மொழியின் வாயிலாகவே அவர்களிடையே தொடர்சிகளை காக்கிறது. குழுக்களுக்குள் மனிதப் (புலம்) பரவல் இல்லாத காலங்களில் எழுத்துகளின் தேவை என்பதற்காக இன்றியமையாத பிற காரணங்கள் எதுவும் இல்லை, நாகரீக வளர்ச்சி அல்லது அறிவின் சேமிப்பு, குரல்களை எடுத்துச் செல்ல இன்றியமையாமை என்ற தேவை ஏற்பட்ட போது (பொதுவாக மன்னர் ஆட்சி, நாகரீக சமூகம் என்று வளர்ந்த நிலையில்) எழுத்திற்கான தேவை ஏற்பட நாகரீகம் வளர்ந்த நிலையில் இருந்த மொழி இனங்கள் தங்களுக்கான எழுத்துளை அமைத்துக் கொண்டன. எழுத்துகள் இல்லாத மொழிக்குழுக்கள் பேசுவதன் மூலம் மட்டுமே தத்தம் சந்திகளிடைய முன்பு தாம் சேகரித்த தகவல் மற்றும் தொழில் குறித்த அறிவுகளை மாற்றிக் கொடுத்துக் கொண்டிருந்தனர்.

ஒரு மொழி அழிந்தால் என்ன ஆகும் ? மொழிகள் அழிவதற்கு பல காரணங்கள் உள்ளன, தற்காலத்தில் பொருள் ஈட்டப் பயன்படாத மொழி என்ற அளவில் தாய்மொழிகள் ( தொல் பொருள் காப்பகங்களில்) தள்ளிவிடப்படுகின்றன. தொடர்ச்சியான புலம் பெயர்வு மற்றும் பிறமொழியினரின் படையெடுப்புகள், திணிப்புகள், புறக்கணிப்புகள் என்ற அளவீடுகள் மொழி அழிவதற்கான முதல் காரணிகளாக உள்ளன, அவைத்தவிர்த்து குறிப்பிட்ட மொழிப் பேசுபவர்களின் பொறுப்பின்மை. ஒரு மொழிப் பேசப்படாமல் தவிர்க்கப்பட்டால் அவற்றில் புதைந்துள்ள அறிவு சார்ந்தவைகளும் சேர்ந்தே அழிந்து போகும், உதாரணத்திற்கு குறிப்பிட்ட மூலிகைக் குறித்த பயன்பாடுகள் அவற்றை வளர்ப்பது மருந்தாக்குவது ஆகியவை மொழிக் குறியீடாகவே பயன்படுத்தப்பட்டு வந்திருக்கும் போது அம்மொழியே அழிந்த பிறகு அம்மூலிகையின் பயன்பாடு குறித்த பயன்பாடுகளும் அழிந்தே போகும், தமிழில் பழைய மருத்துவ நூல்கள் யாவிலும் சித்தமருத்துவ முறைகள் பாடல்களாக மறைமுகப் பொருளில் தான் கூறப்பட்டுள்ளது, அவற்றின் பொருள் புரிந்து அம்மூலிகையை மருந்தாகப் பயன்படுத்த நல்ல தமிழ் மொழி அறிவும், அச்செய்யுள்களின் மறை பொருள்களை விளங்கிக் கொள்ளும் ஆற்றலும் இருந்தால் மட்டுமே முடியும்.

மூலிகை மட்டும் அல்ல, விவசாயம், வேட்டை ஆடுதல், கட்டுமானம், பிற தொழில் மற்றும் அன்றாடப் பயன்பாடுகள் ஆகியவற்றின் கருவூலமாக மொழி இருந்து வந்திருக்கிறது, குறிப்பிட்ட சில வகை ஆக்கங்களை பிறர் அறிந்து கொண்டால் பேராபத்து அல்லது தம் தொழிலைச் செய்ய முடியாது என்ற அளவில் சங்கேதமாகவே எந்த ஒரு மொழியில் பல கூறுகள் அமைந்துள்ளன, இன்றைக்கு இராணுவ இரகசியங்களைக் கோட் செய்வது போன்றவை அவை, குறிப்பிட்ட கோட் முறைப்பற்றிய விளக்கங்கள் அழிந்து போகும் போது காத்த இராணுவ ரகசியகங்கள் எவருக்குமே புலப்படாமல் அழிந்து போவது போன்றவை அவை. இராணுவ ரகசியங்கள் மறைந்து போவது இராணுவத்திற்கு இழப்பு அன்று, ஒட்டுமொத்தமாக அந்த நாட்டுகே இழப்பு, மொழியாளர்களின் கூற்று மிகத் தெளிவாக

ஒரு மொழியின் அழிவு என்பவை தனிப்பட்ட அம்மொழிப் பேசுபவர்களுக்கான இழப்பு அல்ல மாறாக அவை ஒட்டு மொத்த மனித குலத்திற்கான ஈடு செய்ய இயலாத இழப்பு தான் என்பதை நம்புங்கள் என்கிறார்கள். ஒரு மொழி அழியும் போது அம்மொழிப் பேசியவர்களின் அம்மொழி வழியாக அறிந்திருந்த தனிப்பட்ட அறிவுத் திறன்களையும் சேர்த்தே உலகம் இழக்கிறதாம்.

ஒரு மொழி அழியும் போதும் மேலும் என்ன ஆகும் ? பிரிதொரு பகுதியில் பார்ப்போம்.

Ref :
When Languages Die: The Extinction of the World's Languages and the Erosion of Human Knowledge

5 கருத்துகள்:

சார்வாகன் சொன்னது…

அருமையான் பதிவு நண்பரே,
ஒரு மொழி என்பது பல மரபு வழி தகவல்களின் கருவூலம் என்பதை தெளிவாக விள்க்கியுள்ளீர்கள்.தொடர்கிறேன்.வாழ்த்துகள்.

ஸ்வாமி ஓம்கார் சொன்னது…

அருமை

Thozhirkalam Channel சொன்னது…

சிறந்த பதிவுகள்...

வாழ்த்துக்கள்..

வரவேற்கிறோம்...

priyamudanprabu சொன்னது…

Nice

கோவி.கண்ணன் சொன்னது…

சார்வாகன் மிக்க நன்றி

ஸ்வாமி ஓம்கார் மிக்க நன்றி

Cpede News மிக்க நன்றி

பிரபு மிக்க நன்றி

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்