பின்பற்றுபவர்கள்

16 ஆகஸ்ட், 2011

சென்றவார அறுசுவை உணர்வுகள் !

இனிப்பு : எங்க ஊரு நாகைக்குச் சென்று சென்ற வியாழன் அப்படியே (பாலையூர் - எ - பாலூர்) கிராமத்தில் இருக்கும் வயலுக்குச் சென்றிருந்தேன், கிழக்கு கடற்கரைச் சாலை அந்தப் பகுதியில் புதிதாகச் செல்வதால் இருசக்கர வாகனத்தில் சாலையில் கீழே இறங்கி ஒரு கி.மீ குறுகிய பாதையில் வண்டியை ஓட்டினால் போதும் அடைந்துவிடலாம், கிட்டதட்ட ஐந்து ஆறு ஆண்டுகள் ஆகிற்று அப்படிப்பட்ட பச்சைகளைப் பார்க்க. பெரும்பாலும் ஊருக்குச் செல்லும் காலம் மழைக்காலம் அல்லது அறுவடை முடிந்த பிறகு என்பதால் வயல்வெளிகளுக்குச் செல்ல வாய்ப்பு கிடைத்திருக்கவில்லை. முன்பெல்லாம் விவசாயம் துவங்கி அறுவடை வரை ஊருக்குள் மக்கள் அங்கும் இங்கும் சென்று கொண்டிருப்பார்கள், இப்போதெல்லாம் அவ்வாறு பார்க்க முடியவில்லை, வேலைக்கு ஆள் கிடைப்பதே கடினம்.

நகரங்களுக்கு பலர் பெயர்ந்துவிட்டார்கள், சிறுவிவசாயிகளே தங்கள் நிலங்களில் வேலை பார்த்துக் கொண்டு பிற விவசாயிகளுக்கும் செய்து தருகிறார்கள், வேலைக்கு ஆள் கிடைக்காத சூழலில், விவசாயம் பார்க்க முடியாததால் பல விளைநிலங்கள் வீட்டு மனைகளாக மாறிவருகின்றன. கதிர் அறுக்க, நாற்று நட எந்திரங்கள் இருக்கின்றன, ஆனாலும் அவற்றை இயக்க முன்கூட்டியே முன்பதிவு செய்ய வேண்டி இருக்கிறது, கிராமங்களில் மாட்டுவண்டிகளையோ, மாடுகளையோ பார்க்க முடியவில்லை, நெல் அறுத்து குவித்து வைத்த வைக்கோல் போர் விலை போகாமல், யாரும் வாங்காமல் அப்படியே தான் கிடக்கிறது. அம்மா காலம் வரையிலும் எங்க வயலில் தட்டுத்தடுமாறி விவசாயம் நடக்கும், அதன் பிறகு என்ன ஆகும் என்று இப்போது தெரியவில்லை, இதையெல்லாம் நினைத்துக் கொண்டு வயலில் இறங்கி நடந்தேன், முன்கூட்டியே அம்மா அங்கு சென்றுவிட்டதால் எதிர்கொண்டார்கள். வயல் வெளி என்ன ஒரு பசுமை, கண்ணுக்கு எட்டிய தொலைவுக்கு கண் கொள்ளாக் காட்சி. வாய்க்காலுக்கு முதல் மடை என்பதால் வாய்க்காலில் தண்ணீர் வரும் போது தண்ணீர் பாய்ச்ச வசதியான வயல்வெளி தான். சிறுவயதில் படிக்கிற காலத்தில் அங்கு செல்ல விருப்பம் இருக்காது, ஏனென்றால் கொஞ்சம் கொஞ்சம் இறங்கி வேலை செய்யச் சொல்லுவார்கள். பயிர் சுனை பட்டால் கை காலெல்லாம் அரிக்கும், இப்ப பார்க்க குளிர்ச்சியாக இருக்கு, அதுவும் மாலை 5 மணிக்கு மேல் மஞ்சள் வெயிலில் சுற்றிலில் பச்சை வெளிகள்.

அம்மா





களையெடுக்கும் பெண்மணி


புளிப்பு : சென்னையில் நண்பர் வசிக்கும் அபார்ட்மெண்ட் எனப்படும் அடுக்கு மாடி குடியிருப்பு ஒன்றுக்குச் சென்றிருந்தேன், அது ஒரு 7ஜி ரயின்போ காலனி போல் குடியிருப்பு பகுதிகளுக்கு ச-ரி-க-ம-ப-த-நி- என்று ஏழு ஆங்கில எழுத்தில் பெயர் வைத்திருந்தார்கள், அன்றைய நாள் ஞாயிறு குடியிருப்பு வாசிகள் அனைவரும் சேர்ந்து 'நம் குடும்பம்' என்ற பெயரில் இணைந்து கொண்டாடினார்கள், கோலப் போட்டிகளெல்லாம் நடைபெற்றது, கோலங்களில் மயில் கோலம் முதல் பரிசாகவும், கதகளி முகம் இரண்டாம் பரிசாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டது, கோலங்களில் பல மயில் கோலங்கள் இருந்தன.

பல மாநில மக்கள் அந்த குடியிருப்பில் வசித்தாலும் தமிழ் கோலத்திற்கு முதல் பரிசு. தமிழக மக்கள் இன்னும் கலை உணர்வோடு தான் இருக்கிறார்கள் என்று தெரிந்தது. இருப்பிடங்களின் சூழல்களை நல்ல முறையில் உருவாக்கிக் கொள்ள இது போன்ற தனிப்பட்ட விழாக்கள் தேவை, அங்கு வசித்த அனைத்து சிறுவர் சிறுமியர்களையும் மேடை ஏற்றி எதோ அவர்களின் திறமைகளை வெளிப்படுத்த வைத்து, ஒருவரையும் ஏமாற்றாமல் அனைவருக்கும் பரிசுகளைக் கொடுத்தனர். நல்லா தமிழும் ஆங்கிலமும் தெரிந்த எந்த இருவரும் கூட ஆங்கிலத்தில் பேசிக் கொண்டிருந்தது கொஞ்சம் எரிச்சலாகவே இருந்தது, அங்கே வசித்த இந்திக்காரர்கள் அவர்களுக்குள் இந்தியில் மட்டுமே பேசிக் கொண்டிருந்தனர். வெள்ளைக்காரர்கள் தற்போது பேசாமல் விட்ட 'சார் சார்' தமிழகத்தில் வியாதியாகவே பரவி இருக்கிறது.



முதல் பரிசு பெற்றது



இரண்டாம் பரிசு பெற்றது




உப்பு : கிழக்கு கடற்கரைச் சாலை வழியாக பயணித்தேன், இதுவரை பலமுறை அந்த வழியில் சென்றிருந்தாலும் பகலில் சென்றதில்லை, சோழிங்க நல்லூர் தாண்டி 'இயற்கை எழில் கொஞ்சும் கிழக்கு கடற்கரைச் சாலை உங்களை இனிதே வரவேற்கிறது' என்ற வரவேற்பு பலகை இருந்தது. இயற்கை எழில் ஒன்றும் அவ்வளவாக ஈர்க்க வில்லை, உப்பளங்கள் இருக்கின்றன, வீட்டுமனைகள் வருவதற்கான கற்கள் நடப்பட்டு இருக்கின்றன, சாலைகளும் நேரானதாகவோ அகலமாகவே இல்லை, சாலை நடுவே தடுப்புகள் இல்லை, அந்த சாலையில் மணிக்கு 60 கிமி மேல் செல்வது பாதுகாப்பற்றது, நாள் தோறும் நடக்கும் விபத்துகளே கண்கூடு. இரவில் எந்த ஒரு போக்குவரத்து விளக்கும் கிடையாது. ஈசிஆர் சாலை எமன் குடியிருக்கும் சாலை தான்.

நான் கண்ட ஒரே இயற்கை எழில் லேசான மழை பெய்ததும் ஏற்பட்ட அழகான வானவில் தான். அதைத் தாண்டி பாண்டிச்சேரி சென்றேன் பாண்டி முதல்வர் இரங்கசாமிக்கு ஆகஸ்ட் 4 ஆம் தேதி பிறந்தநாளாம், 'அழகிரி டைப்' மிதமிஞ்சிய புகழ்ச்சி சுவரொட்டிகள் பாண்டி எங்கும் இரங்கசாமியின் பல்வேறு 'போஸ்களில்' சுவரொட்டிகள் முகம் சுளிக்க வைத்தது, அதில் ஒன்று தெய்வத்திருமகன் போஸ்டரின் நடுவே இரங்கசாமியின் படம் இருப்பது போன்றும் அடிக்கப்பட்டு இருந்தது, மனநலம் குன்றிய நாயகனாகக் காட்டப்பட்ட படத்தில் ரங்கசாமி முகம் ஒட்டுதல், வாழ்த்தா, வதையா ? ஒட்டியவர்களுக்கே வெளிச்சம். டிவிஎஸ் பிப்டியில் வரும் முதல்வருக்கு இவ்வளவு ஆடம்பர போஸ்டர்களா ? அடுப்பொடிகள் வேலைகள் தான், பாவம் வாழ்த்துவதற்கு பதில் வசைபாடி, முகம் சுளிப்போர் மிகுதி, எதுக்கு இத்தனை ஆடம்பரம், தேவையா அட போங்க சார். தமிழகம் - பாண்டியின் போஸ்டர் பண்பாடு ரசிக்க முடியவில்லை. இரங்கசாமிக்கு அடுப்பொடிகளே ஆப்பு வைத்துவிடுவார்கள் போல. பாண்டியைச் சேர்ந்த காரைக்காலில் சுவரொட்டிகள் கண்ணில் படவில்லை.






துவர்ப்பு : சென்ற வெள்ளிக்கிழமை சென்னை மெரினா சாலை வழியாக பயணித்தேன், கண்ணகி சிலை மிடுக்காக நின்று கொண்டிருந்தது, இன்னும் அம்மா விசுவாசிகள் கண்ணில் படவில்லையோ, இல்லை அதற்காகவே அந்தப்பகுதி சிலைகள் ஒட்டுமொத்தமாக அப்புறப்படுத்தப்படுமோ யார் கண்டது. பொதுச் சுவர்களில் அழகான ஓவியங்கள் வரையப்பட்டுள்ளது சென்னையில் கவர்ந்ததில் ஒன்று, அம்மாவுக்கு பிறந்த நாள் வரும் வரையில் அவைகள் இருக்கும் என்றே நினைக்கிறேன்.

கடந்த 20 ஆண்டுகளில் நான் பார்த்த வரையில் சென்னையில் மாற்றமே இல்லாத பகுதி பாரிஸ் கார்னர் தான். அங்கே இருக்கும் மொத்த விற்பனைக்கடைகளை சேட்டுகளும் மலையாளிகளும். கொஞ்சம் தெலுங்கர்களும் ஆக்கிரமித்துள்ளனர், அவர்களிடமிருந்து சில்லரை விற்பனைக்காக தமிழர்கள் பொருள்கள் வாங்கி வருகின்றனர். சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் புதிய மின்னனு சாதனங்களின் வாயிலாகவே அந்த இடங்கள் இருக்கின்றன, உலக நாடுகள் சீனப் பொருள்களைத் தவிர்த்தாலும் அவர்களுக்கு இந்தியா குறிப்பாக தமிழகம் 'சிவப்பு' கம்பளம் விரித்து வைத்துக் கொண்டுள்ளது.





காரம் : அந்தப் பகுதியில் அமைந்த சரவண பவனுக்குச் சென்றிருந்தேன், குளிர்சாதன அறையில் உட்கார இடம் கிடைக்கவில்லை. முன்பெல்லாம் சனி / ஞாயிற்றில் தான் உட்கார இடம் கிடைகாது, தற்போதெல்லாம் வெளியே சாப்பிடுவர்கள் மிகுந்துவிட்டார்கள், அல்லது வீட்டுச் சமையல்கள் குறைந்துவிட்டதோ என்று நினைக்க வேண்டி இருக்கிறது. சரவணா ஸ்பெசல் மீல்சாம். என்ன வென்று வாங்கினேன். 'அடப்பாவிகளா .........இவ்வளவு சாப்பிட்டுவிட்டு எப்படி உயிரோடு இருக்கிறீர்கள் ?' என்று நினைக்கத் தோன்றியது. அதில் அஜினமோட்டோ இல்லாத வகைகளே இல்லை, யாரு கேட்கிறார்கள். சுவை சுவை சுவையோ சுவை என்றே அனைத்து உணவு கடைகளிலும் அஜி(ர்)னமோடோ சேர்கப்படுகிறது.

உணவில் உப்பு அளவு, கொழுப்பு அளவு பற்றியாரும் கவலைப்படுவதாகத் தெரியவில்லை. 'என்னன்னு தெரியலை சார், நேத்து வரைக்கும் நல்லாதான் இருந்தார், இன்னிக்கு டக்குன்னு போய் சேர்ந்துட்டார்' யாரேனும் சொன்னால் விசாரித்து பாருங்கள், நேற்று அவர் ஏதேனும் புல்மீல்ஸ் கட்டி இருக்கக் கூடும். சென்னையில் அசைவ உணவுக்கடைகள் சைவ உணவு கடைகள் அளவுக்கு பெருகிவிட்டது, முன்பெல்லாம் 'சுத்தமின்மை' (அதாவது அசைவம் நன்றாக தூய்மை செய்து சமைக்கமாட்டார்கள் என்பதாக) காரணமாக வெளியே அசைவம் சாப்பிட மக்கள் தயங்குவார்கள், இப்ப பழகிக் கொண்டார்கள் என்றே நினைக்கிறேன்.

வரும் போது ஏசி பேருந்து பயணம் மிகக் குறைந்த பயணிகள், ஒரு அரைக்கிறுக்கன் செருப்பணியாத தன் காலை யாருமற்ற இருக்கை மீது வைத்திருந்தான். நடத்தினர் சொன்னதும் எடுத்துக் கொண்டான். அவன் அரைக்கிறுக்கன் என்பது அவன் செருப்பே அணிந்து வந்திருக்கவில்லை என்பதால் உறுதிபடுத்திக் கொண்டேன். ஏசி பேருந்தில் செல்பவர்கள் சாதாரணப் பேருந்தில் செல்பவர்களை ஏளனமாகப் பார்ப்பார்களாமே, அவர்கள் அந்த அரைக்கிறுக்கன் கால் வைத்த இடத்தில் கூட உட்கார நேரிடலாம்.


(இந்தப்படத்திற்கு என்ன செய்தியா ? மேலே இருக்கும் படத்தைப் போன்று தான், எந்த மரியாதையும் கிடைப்பதாகத் தெரியவில்லை, 1000 கோடிகளை விழுங்கிவிட்டு மதிப்பற்று கிடக்கிறது)

அன்று மாலை தி.நகர் அஞ்சு மாடி சென்னை சில்க்ஸ் சென்றேன். உள்ளே இரண்டாம் மாடிக்குச் சென்று 'எங்கப்பா டாய்லெட் ?' 'மூனாம் மாடியில் இருக்கு சார்' நாளுக்கு கோடிகளில் விற்பனை ஆகும் கடையில் மூன்றாம் மாடியில் தான் கழிவறையா ? மக்கள் வீட்டை விட்டு வெளியே போனால் ஒண்ணுக்கு ரண்டுக்கு போகவே மாட்டாங்களா ? ஏனிப்படி ? ஐஞ்சு மாடிக்கு ஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணு ?. உள்ளே அவசரத்துக்குச் சென்றால் 'வெஸ்டர்ன் டாய்லெட்' ஒண்ணே ஒண்ணு தான், அதிலும் சீட் கிடையாது, அதில உட்கார முடியுமா ? ஒருவழியாக முடித்து வந்தேன். ஏன் கோடிக்கணக்கில் வியாபாரம் செய்யும் இவர்கள் வாடிக்கையாளர்களின் பணத்தில் வைத்திருக்கும் குறியின் கவனம் சிறிதேனும் வருபவர்களுக்கு நல்ல கழிவறை ஏற்படுத்தித் தர வைக்க முடியவில்லை. அரசுகளின் கவனமின்மையும் காரணம், வாடிக்கையாளருக்கு தேவையான வசதிகள் இல்லை என்றால் அனுமதிகளை நீக்கலாமே. அப்போது அலறி அடித்து வசதி செய்வார்களோ.




சென்னையில் ஆட்டோக்கள் குறைந்து அந்த இடத்தை மாருதி வேன் போன்ற கூட்டுப் பயண வாகனங்கள் நிறைய ஓடுகின்றன, 8 பேர் வரை பயணம் செய்ய ஏற்ற வகையிலும், 5 கிமிதொலைவு வரை 10 ரூபாய்க்கு அழைத்துச் செல்கிறார்கள். இவை ஓரளவு போக்கு வரத்து நெருக்கத்தை குறைத்து இருக்கிறது என்றே நினைக்கிறேன்.

சாலை குண்டு குழிகள், தண்ணீர் இன்மை, மின்சார துண்டிப்பு, கொசுக்கடி இவற்றில் எதையும் பற்றி கவலைப்படாமல் ஆடி வெள்ளி கூழ் ஊற்றும் நிகழ்ச்சி சென்னையில் அங்காங்கே சென்னையின் காலம்காலமாக வாழ்பவர்கள் நடத்திவருகிறார்கள், 'ஆத்தாள கும்புட்டு துண்ணூறு இட்டுனு போ....பாசாயிடுவ' எந்திரன் வசனம் நினைவுக்கு வந்தது.

கசப்பு : ஞாயிற்றுக் கிழமை மதியம் 1:15 விமானம், எல்லாம் முடித்து விமானத்திற்கு செல்லும் முன் காத்திருக்கும் அறைக்குச் சென்றேன், அந்த கூடத்தில் நடுப்பகுதிக்கு சற்று தள்ளி 'ஸ்மோக்கிங் அறைக்கு' எதிரே ஒரு நடுத்தரம் கடந்த பெண் மணி கிடத்தப்பட்டு இருந்தார், அவர் இறந்து விட்டார் என்பது அவரது அசைவற்ற உடலே சொன்னது. அவரது உடலில் இருந்த நகைகளை கழட்டி பாதுக்காப்பிற்காக கணக்கு வைத்துக் கொண்டிருந்தனர் ஒரு கடைநிலை ஊழிய பெண் மணி மூலமாக காவலர்கள், அங்கு நடப்பதைப் பார்த்தால் சென்ற அரைமணிக்குள் தான் அவர் இறந்திருக்கக் கூடும் என்றே தோன்றியது. இலங்கையில் இருந்து தமிழகத்தை சுற்றிப்பார்க்க வந்தவராம், திரும்பப் போகும் முன் இதய வலியால் உயிர் துறந்திருக்கிறார், அவர் தமிழர் , 55 வயது என்று காவலர்களின் உரையாடலில் இருந்து தெர்ந்தது, பெயர் ஊரைக் கூட யாருக்கு அலைபேசி வழியாக தெரிவித்து ஆணை யிட்டுக் கொண்டிருந்தனர், எனக்கு பெயரும் ஊரும் நினைவுக்கு வர இயலவில்லை.

கிட்டதட்ட 1.30 மணி நேரம் அவ்வாரே கிடத்தப்பட்டு இருந்தார், காவல் துறை மற்றும் பிற துறைகளைச் சேர்ந்தோர் அருகில் நின்று கொண்டிருந்தனர், அங்கு வந்த பயணிகள் ஒருவருக்கும் அந்தப் பகுதியை தாண்டி செல்ல மனம் செல்லவில்லை. இறந்தவர் தெரிந்தவராக இருக்க வாய்ப்பில்லை என்றே தவிர்த்தனர், வழக்கமாக 'புகைப்பிடிக்கும் அறைக்கு' செல்லும் ஒருசிலர் கூட பயத்தின் காரணமாக அங்கு செல்லவில்லை. நான் தொலைவில் இருந்து கூட உடலை படம் எடுக்க விரும்பவில்லை. எதிர்பாராவிதமாக மரண மடைந்த ஒருவரை காவல் துறை முறைப்படியான நடவடிக்கை ('புரோசிஜர்') என்ற பெயரில் அங்கேயே கிடத்தி இருந்தது முகம் சுளிக்க வைக்காவிட்டாலும் வருத்தம் ஏற்படச் செய்யதது, உறவினர்கள் யாரும் அற்ற ஒருவராக அவர் கிடத்தி இருந்தது ஏற்கத்தக்கதே அல்ல, அவர் உடலுக்கு கொஞ்சமேனும் மரியாதைக் கொடுத்து, புரொசிஜர் படி உடனே அவரை அப்புறப்படுத்தாவிட்டாலும் சுற்றிலும் தற்காலிக திரையாவது அமைத்திருக்கலாம்.

அவருக்கும் மரியதை கொடுக்காவிட்டாலும் கூட விமானத்தில் ஏறக்காத்திருந்தவர்களுக்கு ஒருவித அச்சம் இருந்தது ஏனெனில் அவர்களில் பலர் வயதான பெற்றோர்களை பிரிந்து வந்திருக்கக் கூடும், அவர்களை நினைத்தாவது உடலை மறைத்திருக்கலாம். மற்றும் வயதானவர்களே கூட இருக்கக் கூடும். வழக்கமாக விமானத்திற்கு காத்திருக்கும் போது பயணத்தின் போது அசைப்போட்டபடியும், சில நண்பர்களுக்கு அலைபேசிக் கொண்டு இருப்பேன், ஆனால் இந்த முறை 'பாவம் அந்த பெண்மணி, அவரது உயிருக்கு தெரிந்திருக்கிறது நாடுகள் என்பது பெயர்களால் பிரிக்கப்பட்ட ஒரே மண், எங்கு பிரிந்தால் என்ன ?' ஆனால் அருகில் உறவினர்கள் இல்லையே' என்பது தான்.

2 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

ஒரு வாரத்திற்கு போடும் பதிவுகளை ஒன்றாக ஒரே பதிவில் போட்டுவிட்டீர்கள்..

ஒவ்வொன்றுக்கும் அறுசுவைகளின் ஒன்றை தலைப்பிட்டது அசத்தல்..

///தி.நகர் அஞ்சு மாடி சென்னை சில்க் சென்றேன். உள்ளே இரண்டாம் மாடிக்குச் சென்று 'எங்கப்பா டாய்லெட் ?' 'மூனாம் மாடியில் இருக்கு சார்' நாளுக்கு கோடிகளில் விற்பனை ஆகும் கடையில் மூனாம் மாடியில் தான் கழிவறையா ? ///

தி.நகரில் பல அடுக்குமாடி கடைகளில் எல்லாவற்றிலும் இந்த நிலைமைதான்..

நல்ல பகிர்வு நண்பரே!

Unknown சொன்னது…

இறுதியில் மனதை கரைய வைத்துவிட்டீர்கள்..

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்