சிங்கப்பூர் பொதும்க்களிடம் கேள்வியாக வைத்து அதற்கு விடையாக பல இனசமூகமாக இருந்தாலும் ஒற்றுமையாக நாம் நம் நாட்டின் எதிர்காலத்திற்கு நம்மை தயார்படுத்திக் கொள்ள வேண்டும் என்று கூறி தலைமை ஏற்று, மூத்தவர், சிங்கப்பூரின் தந்தை என்று சிங்கப்பூரார்களால் அழைத்துப் போற்றப்பட்ட திரு லீக்வான்யூ அவர்களின் வழிகாட்டுதலும் கடந்த 46 ஆண்டுகளாக சிங்கப்பூர் சிங்க நடைபோட்டு வருகிறது. ஆசியாவின் பொது முகம் என்பது போல் பல்வேறு இன, மொழி மற்றும் மத அடையாளங்களுடன் இருக்கும் சிங்கப்பூரை காணும் ஆசியர் அல்லாத ஒருவர் ஆசியாவின் அனைத்து பண்புகளையும் கண்டு செல்வர். ஆசியாவின் நுழைவாயிலாகவும், ஆசியாவின் வர்தக மையமாகவும் சிங்கப்பூர் தொடர்ந்து இருந்துவருவதும் அதற்கேற்ற வசதிகளைக் கொண்டிருப்பதும் சிங்கப்பூரின் பலம்.
பல்வேறு சமூக இன மக்கள் வசிக்கும் எந்த ஒரு நாடாக இருந்தாலும் அவர்களுக்குள் அல்லது அவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து கொண்டாடும் பொதுவான ஒரே விழா அந்நாட்டின் தேசிய நாளாகத்தான் இருக்கும், இவை சிலநாடுகளில் விடுதலை பெற்ற நாளாகவோ, குடியரசு நாளாகவோ, நாட்டின் பிறந்த நாளாகவோ இருக்கும்
******
இந்த ஆண்டு சிங்கப்பூர் வரும் ஆகஸ்ட் 9 ஆம் நாள் தனது 46 ஆம் ஆண்டு பிறந்த நாளைக் கொண்டாடுகிறது, சிங்கப்பூர் தனித்த நாடு என்று அடையாளம் கிடைத்த நாடே சிங்கப்பூரின் பிறந்த நாளாகும், சிங்கப்பூரின் பிறந்த நாள் கொண்டாட்டாம் ஒரு திங்கள் (மாதம்) முன்பாக தொடங்கி இரு திங்கள்களுக்கு தொடர்ச்சியாகக் கொண்டாடப்படும், அரசு அலுவலகங்கள், வீடுகள் அனைத்திலும் சிங்கப்பூரின் தேசிய கொடி முகப்பில் வைக்கப்பட்டிருக்கும், நகரெங்கிலும் கொடிகளும் தோரணங்களும் அலங்கரிக்கப்பட்டிருக்கும். ஆகஸ்ட் 9 நாள் சிங்கப்பூரின் தேசிய நாள், அன்று பொது விடுமுறை, விழாவிற்காக அமைக்கப் பெற்ற வளாகத்தில், மாலையில் பிரதமர், ஆளுனர், அமைச்சர் மற்றும் பொதுமக்கள் பார்வையாளராக அமர்ந்திருக்க இராணுவ, உள்நாட்டு பாதுகாப்பினர் அணிவகுப்பு மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெரும், ஆகஸ்ட் 9 ஆம் தேதி நிகழ்ச்சிகான ஒத்திகை ஒரு திங்களுக்கு முன்பாகவே வாரம் தோறும் சனிக்கிழமைகளில் நடைபெரும், ஒத்திகையும், விழா நாள் நிகழ்விற்கும் பெரிய வேறுபாடுகள் இல்லை, நாட்டின் தலைவர்கள் தவிர்த்து பொதுமக்கள் முன்னிலையில் ஒத்திகைகள் நடைபெரும், இதற்குக்காரணம் பல்வேறு தரப்பினருக்கு விழாவைக் காணுவதற்கு நல்வாய்ப்பு ஏற்படுத்தித் தருவது மற்றும் விழா முன்னோட்டத்திலேயே நன்கு பயிற்சி பெற்று விழா நடைபெறும் அன்று மேலும் சிறப்பாக நிகழ்ச்சியை அமைப்பதும் தான். ஒத்திகை நிகழ்ச்சிகளுக்கு முன்பே பலமுறை தனித்தனிக் குழுக்களாக ஒத்திகைகளை செய்தே படைப்பார்கள் என்பதால் ஒத்திகை நிகழ்சிகள் விழாநாளை ஒத்த நிகழ்ச்சியாக அமைந்துவிடுகிறது.
சிங்கப்பூரில் கடந்த 13 ஆண்டுகளாக வசித்துவருகிறேன், சிங்கப்பூர் தேசிய நாள் கொண்டாட்டத்தை ஆண்டு தவறாமல் தொலைகாட்சிகளில் கண்டு களிப்பது உண்டு, நேரடியாக பார்க்கும் வாய்ப்பு கிடைத்திருக்கவில்லை, இருந்தாலும் நிழல் காட்சியாக தொலைகாட்சியின் வழியாக பார்த்துக் கொண்டிருக்கும் போதே, விழா நிகழ்ச்சிகளில் விழா மைதானத்திற்கு மேலே பறந்த விமானங்கள், ஹெலிகாப்டர்கள் அடுத்த சில வினாடிகளில் நம் வசிக்கும் வீட்டை கடந்து சென்று கொண்டிருக்கும், வீட்டுக்கு வெளியே வந்து பார்த்தால் அவற்றின் ஒலியோ உருவமோ கூட தெண்படும், கடந்து செல்லும். அடுத்தடுத்த வினாடிகளில் 'இப்ப டீ வில பார்த்த ஹெலிகாப்டர்....தோ வருது பாரு....' என்று இல்லத்தினரை வெளியே பார்க்கச் சொல்லிக் காட்ட அக்காட்சி இன்பம், அவை விவரிக்க முடியாத உணரத்தக்க ஒன்று. அன்றாட வாழ்க்கையை சிங்கப்பூர் வாழ்க்கையாகவே வாழப்பழகி, சிங்கப்பூரைப் பிரிய மனமின்றிய வாழ்க்கை தான் என்னுடையது, காரணம் மகனும் மகளும் இங்கேயே பிறந்து வாழ்க்கிறார்கள், அவர்களுக்கு இந்திய வாழ்க்கைச் சுழலை எதிர்கொள்ளும் மன நிலையை நான் ஏற்படுத்தித்தரவும் இல்லை. வாழும் எந்த ஒரு நாட்டையும் நேசித்தால் மட்டுமே அந்த நாட்டில் நாம் மனம் ஒன்றி வாழ முடியும். இதுவரை எனது வாழ்வில் கால்பங்கு சிங்கப்பூரில் கழிந்துவிட்டது. அடுத்தும் குழந்தைகளின் எதிர்கால நலனின் நாட்டமாக இப்படியே தொடரும். இதுவரை நேரடியாக கண்டு களித்திருக்காத தேசிய நாள் கொண்டாட்டத்தை இந்த ஆண்டு ஒத்திகை நிகழ்வாக கண்டு களிக்கும் வாய்ப்பு சென்ற சனிக்கிழமை கிடைத்தது.
விழா மைதானம், சிங்கப்பூரின் புதிய அடையளங்களுல் ஒன்றான மெரினா சான்ட்ஸ் முன்பாக மெரினா பே எனப்படும் கடல் தளத்தில் தெப்ப மேடையில் அமைக்கப்பட்டிருக்கிறது, கடந்த ஐந்து ஆண்டுகளாக அங்கு தான் நிகழ்சிகளை நடத்துகிறார்கள், பார்முலா எப் 1 கார் பந்தயங்களும் அந்தப்பகுதியில் தான் நடந்துவர ஏற்பாடுகள் செய்யப்படும், விழா மைதானத்திற்கு இரண்டு மணிகள் முன்பாக அதாவது மாலை நான்கு மணி முதலாக அனுமதிக்கிறார்கள், கைபைகள் மற்றும் உடைமைகள் எக்ஸ்ரே சோதனைக்கு உட்படுத்தப்பட்டு பின்னர் அனுமதிக்கப்படுகிறது, விழாவின் பார்வையாளர்கள் அனைவருக்கும் நினைவு பரிசு பை இலவசமாக வழங்கப்படுகிறது, அதனுள் தொப்பி, மின் ஒளி கைவிளக்கு, குடிநீர் பாட்டில்கள், திண்பண்டங்கள் பல்வேறு பொருள்கள் மற்றும் விழா குறித்த முக ஒட்டிகள் (Face Tattoo) இருந்தது. ஏறத்தாழ 25 ஆயிரம் பார்வையாளர்கள் அமரும் அரங்கம், அனைவரும் வந்து அமர இரண்டு மணி நேரம் ஆகிறது, நிகழ்ச்சி தொடங்க இரண்டு மணி நேரம் ஆகும் என்பதால் ஏற்கனவே அதுவரை அமர்ந்து வருபவர்களுக்கு அலுப்பு ஏற்படாமல் இருக்க நிகழ்ச்சி அட்டைகளைக் கொடுத்து புகைப்படம் எடுத்து அதை முக நூலில் (பேஸ் புக்) வெளியிட இருப்பதாகச் சொல்லி சுட்டி குறித்த சீட்டு கொடுக்கிறார்கள், மேலும் குழந்தைகளுக்கு பலூன் உருவங்களைச் செய்து தருகிறார்கள், அரங்கத்தின் முன்பாக அமைக்கப்பட்ட மிகப் பெரிய திரையில் ஒலி / ஒளிக்காட்சிகளை ஓடவிடுகிறார்கள், நானும் மகளும் இரண்டு மணி நேரம் முன்பாகச் சென்றிருந்தாலும் நிகழ்ச்சி எப்போது துவங்குமோ என்று எங்களுக்கு அலுப்பு ஏற்படவில்லை.
நிகழ்ச்சி குறித்த நேரத்தில் சரியாக மாலை ஆறுமணிக்கு துவங்கியது, உள்ளூர் கலைஞர்கள் பங்குபெற்ற டிரம் மற்றும் இசை நிகழ்ச்சி அதனை வழி நடத்தியவர்கள் சிங்கப்பூர் தொலைகாட்சியில் புகழ்பெற்றவர்கள். அதன் பிறகு எல்லோரையும் மேலே பார்க்கச் சொன்னார்கள், கண்ணுக்கு எட்டிய தொலைவில் வெள்ளை எள்ளு அளவில் விமானம் பறந்து சென்று கொண்டிருந்தது, கிட்டதட்ட 10 ஆயிரம் அடி உயரமாம், அதிலிருந்து 5 வான்குடை வீரர்கள் குதித்திருக்கிறார்கள் என்பது சில வினாடிகளில் தென்பட்டது, பின்னர் அவர்கள் வானில் வட்டமடித்து இரண்டு நிமிடத்திற்கு பிறகு ஒவ்வொருவராக விழா மேடையின் முன்பாக சரியாக இறங்கினார்கள். அவர்களில் சிலர் பலமுறை பயிற்சி பெற்றவர்களாகவும், ஒரு சிலர் இம்முறை தேசிய நிகழ்ச்சிகளுக்காக முதன்முறையாக குதிப்பவராகவும் இருந்தனர், மேலிருந்து பார்க்கும் போது சிவப்பு வண்ணக் மக்கள் கூட்டத்தையும் அவர்களின் ஆரவாரமும் கண்டு மெய்சிலிர்த்தாகக் குறிப்பிட்டார்கள், அவர்கள் மேலிருந்து இறங்கும் காட்சி மெய்சிலிர்பாக இருந்தது, கரணம் தப்பினால் மரணம் தான், ஆனால் இவர்கள் குடைச் சிறகு விரியாவிட்டால் சிதறல் தான், நினைத்தாலே அச்சமூட்டுகிறது.
அதன் பின்னர் ஆபத்தான வேளைகளில் உள்நாட்டு பாதுகாப்பு எவ்வாறு நடைபெறுகிறது என்பது காட்டப்பட்டது, இந்நிகழ்ச்சியில் வெடிகுண்டுகளை செயல் இழக்க வைப்பது, மற்றும் இயந்திர உருவங்கள் (ரோபோ) செயல்பாடு மற்றும், இராணுவ வண்டிகள், ஹெலிகாப்டர் ஆகியவை மேடைக்கு அருகேயே சாகசங்கள் செய்து காட்டின. உயர உயர கட்டிடங்களுக்கு இடையே அவை வந்தது மிகப் பெரிய பறவை ஒன்று அங்கு இரையெடுக்க வந்து வட்டமடித்தது போன்று இருந்தது. அதிலிருந்து சில வீரர்கள் கடலுக்குள் குதித்து தீவிரவாத செயல்குறித்து ஆய்வு நடத்தினார்கள். பின்னர் சிங்கப்பூரின் தேசிய கொடியைத் தாங்கிய ஹெலிகாப்டர்கள் விழா மைதானத்தின் மேலாக பறந்தது. பின்னர் தேசிய கொடியேற்றம் என வழக்காமாக சுற்றுலாவாக பார்கும் அந்த மெரினா பே பகுதியில் இவ்வகைக்காட்சிகள் வியப்பூட்டின. அனைத்து காட்சிகளும் நேரிடையாகவும் அங்கே அமைக்கப்பட்ட அகலத் திரையிலும் மிகப் பெரிதாகப் பார்க்கும்படியும் அமைந்திருந்தன.
பிறகு இராணுவம் மற்றும் உள்நாட்டு பாதுகாப்பு படையினரின் அணிவகுப்பு, பின்னர் அமைச்சர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் வருகை, பின்னர் இராணுவ உயர் அலுவலரால் அரசு தலைவரின் அனுமதி பெற்று நிகழ்ச்சி துவங்குவதற்கான ஒப்பம், அரசு தலைவர் அணிவகுப்பை பார்வை இடுதல் (பொதுவாக நாட்டின் ஆளுனர் தான் அணிவகுப்பை அருகில் சென்று பார்வை இடுவார்) , அங்கே கடல் பகுதியில் மிதவை மேடையில் வைக்கப்பட்ட பீரங்கிகள் தொடர்ந்து இடைவெளி விட்டு முழங்கிக் கொண்டு இருந்தன.
'உங்களுக்கு முன்பாக எதிரே வானத்தைப் பாருங்கள்' என்றார்கள், பார்க்க.........தொலைவில் சிறிதாகத் தெரிந்து பின்னர் சீறிப்பாய்ந்து காற்றைக் கிழித்தபடி 'எப்' வகை போர் விமானங்கள் ஐந்து ஒன்றாகப் பறந்து பின்னர் விரிந்து சென்றது.
பின்னர் சிங்கப்பூரின் பல்வேறு உணவு வகைகள் குறித்த உருவங்களை தாங்கியவர்களின் கலை நிகழ்ச்சிகள், மேடைப்பாடல்கள், இசை மற்றும் சிங்கப்பூர் எவ்வாறு கடந்த 30 ஆண்டுகளில் வளர்ந்துள்ளது என்பது குறித்த பொருளில் அமைக்கப்பட்ட நிகழ்ச்சிகள் நடந்தேறின.
இறுதியாக கண்கவர் பல வண்ண வான வேடிக்கை நிகழ்ச்சிகள் தொடர்ச்சியாக 10 நிமிடங்கள் கண் கொள்ளக்காட்சியாக அமைந்தன, கூடவே லேசர் ஒளிகற்றைகள், அந்த இடமே ஒளி வண்ணங்களால் ஒலிகளாலும் ஒளிர்ந்தது, பொறிந்தது. சரியாக 8. 20க்கு நிகழ்ச்சிகள் நிறைவுக்கு வந்து தேசிய பாடல் ஒலிக்கப்பெற்று ஒத்திகை நிகழ்ச்சி நிறைவு பெற்றது. எத்தனை பெரிய திரைகளில் எந்த வித ஒலி அமைப்புகளை வைத்து ஒரு நிகழ்ச்சியை நிழலாகக் தொலைக்காட்சியில் நேரடி காட்சியாகக் (லைவ் டெலிகாஸ்ட்) கண்டாலும், சாட்சியாக அமர்ந்து நேரடியாக காண்பதும் அதன் துய்ப்பும் விவரிக்க முடியாத ஒன்று.
சிங்கப்பூரின் தேசிய நாள் நிகழ்ச்சி வரும் ஆகஸ்ட் 9 ஆம் தேதி நடைபெறுகிறது, அதன் நேரடி ஒளிபரப்பும் இணையங்களில் காணக்கிடைக்கும், அதன் இணைப்பு பின்னர் தருகிறேன்.
மஜுலா சிங்கப்பூரா மலாய் மொழி சொற்றொடர், இதன் பொருள் முன்னேறட்டும் சிங்கப்பூர்.
மேலும் படங்களுக்கு
2 கருத்துகள்:
நானும் சிங்கப்பூர் பார்க்கப்போறேனே! ஒரு டூரிஸ்ட் கம்பெனி மூலம் செப்டம்பர் கடைசி வாரத்தில் வருவதாகப் பிளான்.
//DrPKandaswamyPhD said...
நானும் சிங்கப்பூர் பார்க்கப்போறேனே! ஒரு டூரிஸ்ட் கம்பெனி மூலம் செப்டம்பர் கடைசி வாரத்தில் வருவதாகப் பிளான்.//
அப்படியா ? மிக்க மகிழ்ச்சி, சந்திப்போம்.
மணற்கேணி வெற்றியாளர்கள் செப் முதல்வாரத்தில் இங்கு வருகிறார்கள்
கருத்துரையிடுக