பின்பற்றுபவர்கள்

22 நவம்பர், 2007

பரிசு பொருள்களாக என்ன கொடுப்பது ?

பிறந்தநாள், மணநாள்,திருமணம் போன்ற நிகழ்வுகளில் பரிசளிப்பது என்பது நடைமுறை. சிலருக்கு பரிசு பெற்றுக் கொள்வது பிடிக்காது. வருகையின் போது பரிசுகளை தவிர்க்கவும் என்று அழைப்பிதழில் எழுதி இருப்பார்கள். அன்பு போதும் பொருள் வேண்டாம் என்று சொல்வதாக எடுத்துக் கொள்ளலாம்.

திருமணத்தின் போது பரிசு கொடுப்பது (மொய் எழுதுவது) என்பது இழிவு போல் ஆகிவிட்டதால் எங்காவது வீன் பணத்தை விரயம் செய்துவிட்டால் அல்லது உடன்பாடில்லாமல் கொடுத்துவிட்டால் 'மொய் எழுதினேன்' என்று சொல்வது வழக்காகிவிட்ட படியால், சிலர் திருமணத்தின் போது பரிசு வேண்டாம் என்று வெளிப்படையாக சொல்வது பாராட்டத்தக்கது தான்.

அதே சமயத்தில் திருமணம் என்னும் நிகழ்வில் ஏற்படும் பெரும் பொருட்செலவை சமாளிக்க ஏழை எளியோர் நடுத்தர இல்லங்களுக்கு பரிசாக பணம் கிடைத்தால் அது செலவை ஓரளவு ஈடு செய்யும். பிச்சை என்னும் இழிந்த நிலைக்கு செல்லாமல் வீட்டுக்கு அழைத்து விருந்து வைத்து ஏழ் நிலையை உணர்த்தி மொய் பெரும் காட்சி ஒன்றை 'மொய் விருந்து' என்ற பெயரில் சின்னக் கவுண்டர் படத்தில் மிகவும் உணர்ச்சி முழுமையாக படமாக்கி இருப்பார் இயக்குனர் ஆர்விஉதயகுமார்.

எனக்கு வந்த பரிசு பொருள்கள் எல்லாம் சமையல் தொடர்புள்ளதாகவே இருந்திருக்கிறது, மிக்ஸி, ஜூஸர் அப்புறம் டைனிங் செட் ( ஆறு கோப்பைகளும், தண்ணீர் ஊற்றும் பெரிய ஜார் ஒன்றும் இருக்கும்). எந்த நிகழ்வுக்கும் ஒரு பத்து பேரை அழைத்திருந்தாலும் அதில் மூவர் டைனிங் செட், இருவர் ஜூஸர், ஒருவர் மிக்ஸி மற்றவர்கள் குழந்தைக்கான விளையாட்டு பொம்மைகளை வாங்கி வந்துவிடுவார்கள். அதிலும் பார்தோமேயேனால் பெரும்பாலும் டைனிங் செட்டில் புதிதாக பேப்பர் வாங்கி சுற்றி இருப்பது அப்பட்டமாக தெரியும், அதாவது அவர்களுக்கு வந்ததை அப்படியே புதிய ராப்பிங் பேப்பரை ஒட்டி கொண்டு வந்து கொடுத்துவிட்டு செல்வார்கள். பிரித்து பார்த்துவிட்டு 'இதுக்கு அவர்கள் கொடுக்காமலே இருந்திருக்கலாம்' என்று மனைவி அலுத்துக் கொண்டு சொல்லும் போது 'பத்திரமாக எடுத்துவை' என்று பொருளுடன் (அர்தத்துடன்) சொல்லி சமாளிப்பேன். பரிசு பெருள்கள் பெயரளவுக்கு கொடுப்பதை தவிர்க்கலாம்.

ஒருவரின் அழைப்பை ஏற்று அவருக்கு பரிசு கொடுக்க வேண்டும் என்று முடிவு செய்துவிட்டால், பட்ஜெட்டை சொல்லி அவர்களிடமே 'உங்களுக்கு என்ன வேண்டும் ?' என்று கேட்டு அதை வாங்கிக் கொடுப்பதில் தவறு அல்ல, திருமணம் ஆனவர்கள் பெற்றோர்களுக்கோ, உடன் பிறந்தவர்களுக்கோ, மனைவிக்கோ, குழந்தைகளுக்கோ எதாவது வாங்கிக் கொடுக்க விரும்பினால் 'என்ன வேண்டும் ?' என்று கேட்டு அதன்படி தானே வாங்கிக் கொடுக்கிறார்கள். பெற்றுக் கொள்பவர்களுக்கும் அது மனநிறைவை அளிக்கும். மற்றவர்களுக்கு பரிசு பொருள் கொடுக்கும் போது எதிர்பாராவிதமாக பெறுபவர்களுக்கு வியப்பளிக்கும் வண்ணம் பரிசளிக்க விரும்பினால் அவர்கள் என்ன விரும்புவார்கள் என்று அவர்களிடம் கேட்காமல் அறிந்து அதை வாங்கி கொடுத்து அசத்தினால் அதுவும் சிறப்பாக இருக்கும்.

10 ஆண்டுகளுக்கு முன்பு நண்பர் ஒருவரின் திருமணத்திற்கு என்னால் நேரில் செல்ல முடியாத நிலைமை, அவரிடம் வெளிப்படையாக சொல்லி என்ன பரிசு வேண்டும் என்று கேட்டேன். அவர் சொல்லவில்லை. திருமண நாளை நோக்கி காத்திருக்கும் அவர் ஓயாமல் ஒரு பாடலை முனுமுனுத்துக் கொண்டிருந்தார். 'மாலை என்னை வாட்டுது, மண நாளை மனம் தேடுது... நாட்கள் நகராதோ...பொழுதும் போகாதோ'. எதற்காக அதே பாடலை பாடுகிறார் என்று புரிந்தது, நன்றாக ஓட்டினோம். 'இந்த பாடல் டி.ஆரின் இனிமையான பாடல், உங்களிடன் கேசட் இருந்தால் கொடுங்கள்' என்று கேட்டேன், இல்லை நானும் தேடிக் கொண்டிருக்கிறேன் கிடைக்கவில்லை என்றார். அடுத்த நாள் ஊருக்குப் போனபோது அந்த கேசட்டை வாங்கி அவருக்கு கொடுத்தே ஆகவேண்டும் என்று கடைகடையாக ஏறினேன், அந்த பாடல் இடம் பெற்ற படம் 'பூக்களை பறிக்காதீர்கள்' , கடைசியில் ஒருகடையில் கிடைத்தது. அத்துடன் அந்த படத்தின் வீடியோ கேசட்டையும் வாங்கி, அழகான பேப்பரில் சுற்றி, அவர் திருமணத்திற்கு ஒருவாரத்திற்கு முன்பாகவே கொடுத்தேன். மறுநாள் பிரித்து பார்த்துவிட்டு மிகவும் நெகிழ்ந்து போனார்.

பரிசு கொடுப்பது தவிர்க்க முடியாது என்று உணர்ந்தால் அவர்களுக்கு என்ன தேவை என்று அறிந்து கொடுப்பது நலம். எது என்று அறிய முடியாவிட்டால் பணத்தை பரிசு பாக்கெட்டில் போட்டு கொடுத்தால் தேவையான நேரத்தில் அவர்களுக்கு அது நல்ல பயன்பாடாக இருக்கும்.

12 கருத்துகள்:

Mohandoss சொன்னது…

இப்பொழுதெல்லாம் இது பெரிய விஷயமாய்த் தெரியவில்லை,

500, 1000 என்று வைப்பதாகயிருந்தால் gift voucher வாங்கிக் கொடுத்துவிடுகிறேன். இந்தப் பக்கம் பெங்களூரில் இது பழக்கமான ஒன்றே. அவர்களும் அவர்களுக்குத் தேவையானதை வாங்கிக் கொள்வார்கள். பணமாக வாங்கவில்லை என்ற உணர்வு அவர்களுக்கு, நமக்கு அவர்கள் அவர்களுக்குத் தேவையானதை வாங்கிக்கொள்வார்கள் என்பதில் ஒரு சந்தோஷம்.

RATHNESH சொன்னது…

என்னுடைய பாணி கூடியவரை புத்தகங்கள். கூடுதலாகச் செய்வதென்றால் பெயர் பொறிக்காமல் வெள்ளி. அவர்கள் வேறு யாருக்கும் பரிசளிக்க வேண்டிய கட்டாயம் வரும் போது உபயோகமாகுமே.

ரூபஸ் சொன்னது…

//ஒருவரின் அழைப்பை ஏற்று அவருக்கு பரிசு கொடுக்க வேண்டும் என்று முடிவு செய்துவிட்டால், பட்ஜெட்டை சொல்லி அவர்களிடமே 'உங்களுக்கு என்ன வேண்டும் ?' என்று கேட்டு அதை வாங்கிக் கொடுப்பதில் தவறு அல்ல//

இது நல்ல யோசனை சார்..

cheena (சீனா) சொன்னது…

மூன்று மறு மொழிகளுமே ஏற்கத்தக்கவைதான். என் பழக்கம் - வாழ்க வளமுடன் என்று பணமாகக் கொடுப்பது தான்.

G.Ragavan சொன்னது…

என்ன பரிசு வேண்டும் என்று கேட்டுக் குடுப்பதில் தவறில்லை. குறிப்பாக நெருங்கிய நண்பர்களுக்குள் இது நடைமுறைப்படும். எல்லாரிடமும் என்ன வேண்டும் என்று கேட்க முடியாது. அந்தச் சூழலில் gift vouchers எனப்படும் பரிசோலைகள் சிறந்தவை. முன்பெல்லாம் எனக்கு வரும் vouchers புத்தகக் கடையுடையதாகவே இருக்கும். இங்கு ஆம்ஸ்டர்டாம் வந்த பிறகு இங்குள்ளவர்கள் என்னுடைய பிறந்தநாளுக்குக் கொடுத்த பரிசும் ஒரு புத்தகம். உள்ளூரில் இருக்கும் இடங்களைப் பற்றி வண்ண வண்ணப் படங்கள் கொண்ட...புத்தகம். :)

Unknown சொன்னது…

ஒருவருக்கு இது போன்ற சமயங்களில் கொடுக்கும் பரிசு, கொடுத்தவர் வீட்டில் நடக்கும் ஒரு நிகழ்வின் போது வேறொரு பொருளாக திருப்ப வேண்டிய கடன் என்ற நிலையில் பார்க்கப்படுகிறது. எனவே அந்த நேரத்தில் கொடுப்பதையும் வாங்குவதையும் தவிர்ப்பதே நல்லதாக தெரிகிறது.

நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் காரியம் என்றில்லாமல் நினைத்தபோது கொடுக்க வேண்டும். ஒரு பொருளைப் பார்க்கும்போது அந்நண்பர்/உறவினர் அதை விரும்பினாரே என நினைவுக்கு வந்து அதை வாங்கித் தரும்போது அவருக்கும் நமக்கும் மனநிறைவாக இருக்கும்.

கோவி.கண்ணன் சொன்னது…

//மோகன்தாஸ் said...
இப்பொழுதெல்லாம் இது பெரிய விஷயமாய்த் தெரியவில்லை,

500, 1000 என்று வைப்பதாகயிருந்தால் gift voucher வாங்கிக் கொடுத்துவிடுகிறேன். இந்தப் பக்கம் பெங்களூரில் இது பழக்கமான ஒன்றே. அவர்களும் அவர்களுக்குத் தேவையானதை வாங்கிக் கொள்வார்கள். பணமாக வாங்கவில்லை என்ற உணர்வு அவர்களுக்கு, நமக்கு அவர்கள் அவர்களுக்குத் தேவையானதை வாங்கிக்கொள்வார்கள் என்பதில் ஒரு சந்தோஷம்.
//

மோகன் தாஸ்,

gift voucher - நல்ல மாற்று, ஆம் அவர்களுக்கு தேவையானதை வாங்கிக் கொள்வார்கள். இதில் ஒரே ஒரு அனுகூலமின்மை அந்த கிப்ட் வவுச்சரை அந்த கடையில் தான் பயன்படுத்த முடியும்.

இங்கு சிங்கையில் கிப்ட் வவுச்சர் என்பது ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் படி இருக்கும், அந்த காம்ப்ளக்சில் அங்கிருக்கும் எந்த கடையில் வேண்டுமானாலும் பொருள்களை வாங்கிக் கொள்ளலாம்.

கோவி.கண்ணன் சொன்னது…

//RATHNESH said...
என்னுடைய பாணி கூடியவரை புத்தகங்கள். கூடுதலாகச் செய்வதென்றால் பெயர் பொறிக்காமல் வெள்ளி. அவர்கள் வேறு யாருக்கும் பரிசளிக்க வேண்டிய கட்டாயம் வரும் போது உபயோகமாகுமே.
//

உங்களுக்கு புத்தகம் தான் பிடிக்கும், அதனால் உங்களுக்கு புத்தகம் தான் என்சார்பில் கொடுப்பதென்றால் கிடைக்கும்.

நீங்கள் புத்தகங்கள் வாங்கிக் கொடுத்தால், அதை வாங்கிக் கொள்பவர்களுக்கு வாசிக்கும் பழக்கம் இருக்கிறதா என்று தெரிந்து தானே கொடுக்கிறீர்கள் ?

பெயர் பொறிக்காமல் பரிசளிப்பது நல்ல பழக்கம், நம்ம ஆளுங்க பணம் எவ்வளவு என்று குறித்திருக்கும் ஸ்டிக்கரை கவனமாக பெயர்த்து எடுப்பார்கள். விலை அதிகம் என்பது தெரிந்துவிடாமல் இருப்பதற்காகவா ? அல்லது 'என்ன சீப்பாக வாங்கி வந்-திருக்கிறார்கள் ?' என்று நினைத்துவிடுவார்கள் என்றா தெரியவில்லை. நான் பரிசு கொடுக்கும் பொருள்களின் விலையை கேட்டால் சொல்லிவிடுவேன்.
:)

இறைவனுக்கு பரிசு ? கோவிலுக்கு கொடுக்கும் டியூப்லைடில் 'உபயம் மஞ்சக்காடு இராஜகோபாலன்' என்று பெரிதாக வெளிச்சத்தை மறைக்கு படி சிகப்பில் எழுதப்பட்டு இருக்கும். நம்ம ஆட்கள் ஈகையிலும் இலவச விளம்பரம் தேடிக் கொள்வார்கள்.

கோவி.கண்ணன் சொன்னது…

//ரூபஸ் said...
இது நல்ல யோசனை சார்..//

ரூபஸ் மிக்க நன்றி,

நீங்கள் உங்கள் வலைப்பூவில் புரைபைல் படத்தில் போட்டிருக்கும் சிறுவரின் புகைப்படம் சூப்பர்.

கோவி.கண்ணன் சொன்னது…

//cheena (சீனா) said...
மூன்று மறு மொழிகளுமே ஏற்கத்தக்கவைதான். என் பழக்கம் - வாழ்க வளமுடன் என்று பணமாகக் கொடுப்பது தான்.
//

சீனா ஐயா,
இதுவும் சிறந்த பழக்கம், நாம் வாங்கிக் கொடுப்பதைவிட அந்த பணம் அவர்களுக்கு தேவையான சமயத்தில் உதவும்.

கோவி.கண்ணன் சொன்னது…

//G.Ragavan said...
என்ன பரிசு வேண்டும் என்று கேட்டுக் குடுப்பதில் தவறில்லை. குறிப்பாக நெருங்கிய நண்பர்களுக்குள் இது நடைமுறைப்படும். எல்லாரிடமும் என்ன வேண்டும் என்று கேட்க முடியாது. அந்தச் சூழலில் gift vouchers எனப்படும் பரிசோலைகள் சிறந்தவை. முன்பெல்லாம் எனக்கு வரும் vouchers புத்தகக் கடையுடையதாகவே இருக்கும். இங்கு ஆம்ஸ்டர்டாம் வந்த பிறகு இங்குள்ளவர்கள் என்னுடைய பிறந்தநாளுக்குக் கொடுத்த பரிசும் ஒரு புத்தகம். உள்ளூரில் இருக்கும் இடங்களைப் பற்றி வண்ண வண்ணப் படங்கள் கொண்ட...புத்தகம். :)
//

ஜிரா,

உங்களுக்கு பரிசளிப்பவர்கள் நீங்கள் ஒரு புத்தக புலி என்று தெரிந்தே கொடுக்கிறார்கள். உங்க திருமணத்திற்கு பிறகு வந்து குவியும் புத்தகங்களை வைத்து நீங்கள் புத்தக கடை திறக்கலாம்.
:)

கிப்ட் வவுச்சர், கிப்ட் காசோலை நல்ல பழக்கம். எனது சாய்ஸ் கிப்ட் காசோலை

கோவி.கண்ணன் சொன்னது…

//சுல்தான் said...
ஒருவருக்கு இது போன்ற சமயங்களில் கொடுக்கும் பரிசு, கொடுத்தவர் வீட்டில் நடக்கும் ஒரு நிகழ்வின் போது வேறொரு பொருளாக திருப்ப வேண்டிய கடன் என்ற நிலையில் பார்க்கப்படுகிறது. எனவே அந்த நேரத்தில் கொடுப்பதையும் வாங்குவதையும் தவிர்ப்பதே நல்லதாக தெரிகிறது.//

சுல்தான் ஐயா,

பெரிய பொருட்செலவை, பல கைகள் இணைந்து செய்வதாக எடுத்துக் கொள்ளலாம். 'கொண்டுவந்தால் தான் உறவு' என்ற பழமொழியே இருக்கிறது. நம் சமூகங்கள் இன்னும் நீங்கள் சொல்லும் உயர்ந்த நிலைக்கு செல்லவில்லை.

//நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் காரியம் என்றில்லாமல் நினைத்தபோது கொடுக்க வேண்டும். ஒரு பொருளைப் பார்க்கும்போது அந்நண்பர்/உறவினர் அதை விரும்பினாரே என நினைவுக்கு வந்து அதை வாங்கித் தரும்போது அவருக்கும் நமக்கும் மனநிறைவாக இருக்கும்.
//

இது பெஸ்ட். நமது அன்பர்களுக்கு எது பிடிக்கும் என்பதை அறிந்து அது கண்ணில் படும் போது வாங்கி எதிர்பாரவிதமாக அவர்களுக்கு கொடுக்கும் போது கிடைக்கும் நெகிழ்ச்சிக்கும் அளவே இல்லை.

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்