பின்பற்றுபவர்கள்

30 நவம்பர், 2007

கந்தன் காப்பாற்றப்பட்டான் ! (சிறுகதை)

கந்தன் சிறுவயதில் இருந்தே பக்திமான், எதை செய்தாலும் அம்மாவிடம், அப்பாவிடம் சொல்கிறானோ இல்லையோ, மனதிற்குள் கடவுளுக்கும், அந்த சாமியாருக்கும் சொல்லாமல் செய்வதே இல்லை.

"அப்பா, இண்டர்வுயூவுக்கு போகிறேன்"

"எல்லாம் நல்ல படியாக நடக்கும்பா... கோவிலுக்கு வேண்டிக்கோ"

கந்தன் இயல்பாகவே திறமை உள்ளவன் தான், இருந்தாலும் வேண்டுதல் இல்லாமல் எதைச் செய்வதற்கு மனம் அவனுக்கு என்றைக்குமே ஒப்பவதில்லை. சிறுவயது முதலே அப்பா கொடுக்கும் பாக்கெட் மணிகளை சேமித்து வைத்து கோவில் திருவிழாக்களில் விற்கப்படும் கடவுள் சிலைகளை வாங்கி வந்து சாமி அறையில் அலங்கரிப்பது கந்தனுக்கு வழக்கம்.

நினைத்தபடி வேலையும் கிடைத்தது, திருமணம் ஆகியது, இரு குழந்தைகள் இருக்கிறார்கள்.

கந்தனுக்கு வேலை விசயமாக ஒருமுறை மும்பை செல்ல வேண்டிய நிலை, அன்று காலை 9.00 மணி ப்ளைட்டை பிடிக்க வேண்டும், கடைசி நேரத்தில் ஒரு கோப்பை மறந்து வைத்துவிட்டதால், வீட்டிற்கு காரை திருப்பிக் கொண்டு வந்தான், எடுத்து திரும்பவும் ஏர்போர்ட் செல்லும் போது, போக்குவரத்து நெரிசல், விமான நிலையத்தை குறிப்பிட்ட நேரத்தில் அடைய முடியவில்லை. விமானம் புறப்பட்டு சென்ற அறிவிப்பை படித்துவிட்டு சோகமாக, இருந்தாலும் அன்று சென்றே ஆகவேண்டிய நிலை, அடுத்த விமானம் 4 மணிநேரம் சென்றதும் தான் கிடைக்கும், வேறு வழியின்றி, அடுத்த விமானத்திற்காக காத்திருந்தான்.

திடிரென்று விமான நிலையத்தை பரபரப்பு தொற்றிக் கொண்டது, விசாரித்ததில் இவன் சென்றிருக்க வேண்டிய விமானம் தரையிறங்கும் போது விபத்தில் சிக்கி தீப்பிடித்ததாகவும், பிஸ்னஸ் கிளாசில் பயணம் செய்தவர்கள், விமானிகள் அனைவரும் கருகி இறந்ததாகவும், மற்ற இருக்கைகளில் இருந்தவர்கள் பலத்த காயங்களுடன் மருத்துவமனைக்கு கொண்டு சென்று இருப்பதாகவும் செய்திகள் அறிவிக்கப்பட்டன.

கந்தனுக்கு தூக்கிவாரிப்போட்டது, படக் படக் என்று இதயம் அடிக்கவே, நெஞ்சில் கை வைத்தான், சாமியாரின் உருவ டாலர் தட்டுப்பட்டது, தான் நம்பும் கடவுளும், கழுத்தில் டாலராக தொங்கும் அந்த சாமியாரும் காப்பாற்றிவிட்டதாக நெகிழ்ந்தான். மறுநாள் அதற்கும் மறுநாள் கந்தன் தான் விபத்தில் இருந்து தப்பியதற்கு காரணம் சாமியார் தம்மை விமானத்திற்கு செல்ல விடாமல் தனக்கு ஞாபக மறதி ஏற்படுத்தி கோப்பை வைத்துச் சென்றதால் தான் விமான பயணம் தடை பெற்று தாம் காப்பாற்றப்பட்டதாக நினைத்தான். நினைத்துப் பார்க்கும் போதெல்லாம் கந்தன் மெய்சிலிர்த்தான். சாமியாரின் புகழ் ஒரே நாளில் கந்தனின் பத்திரிக்கை பேட்டி மூலம் வேகமாக பரவியது, ஆன்மிக இதழ்களும் இதை சிறப்பு கட்டுரையாக்கி வெளியிட்டது.

கடவுள் நம்புவர்களை கைவிட மாட்டார், அந்த சாமியாரை நம்புவர்களுக்கு அவர் அபயம் தரும் ஆண்டவன் என்ற எண்ணம் ஆன்மிக அன்பர்களிடம் அசைக்க முடியாத எண்ணத்தை ஏற்படுத்தியது. சாமியாருக்கு கூடுதலாக பக்தர்கள் கிடைத்தார்கள்.

********

இது நடந்து ஆறுமாதம் சென்று கந்தன் குடும்பத்தினர், அதாவது அவனும், அவன் மனைவியும், அவர்களுடைய இரு குழந்தைகளும் கொடைக்கானல் சுற்றுலா சென்றார்கள், காரின் முகப்பில் சிறு அளவில் கந்தன் வணங்கும் தெய்வங்கள், அந்த சாமியாரின் ஆசி கொடுப்பது போன்ற உருவ படம் எல்லாம் இருந்தது, பஜனை பாடல்கள் காரில் ஒலித்துக் கொண்டு இருந்தது, கொண்டை ஊசி வளைவை சுற்றி சுற்றி கார் ஏறிக் கொண்டிருந்தது, ஒரு வளைவில் திடிரென்று காருக்கு மூச்சு வாங்கியதும், மனைவி குழந்தைகளை காரினுள் இருக்கச் சொல்லிவிட்டு, காரை நிறுத்திவிட்டு கீழே இறங்கி என்ன வென்று பார்கலாம் இறங்கினான், இறங்கியதும் இயற்கை உபாதை அழைக்கவே கொஞ்சம் 10 அடி தள்ளி சென்று சிறுநீர் கழித்துக் கொண்டு இருக்கும் போது காதை பிளக்கும் 'டமார்' ஓசை, திடுக்கிட்டு திரும்பி பார்த்தான், இதயமே நின்றுவிடும் போல் இருந்தது, எதிரே வந்த லாரி கார் மீது மோதியதால், மலைச்சரிவில் கார் உருண்டு கொண்டிருந்தது, இந்த முறையும், கந்தன் மீண்டும் அதே கடவுளால், அதே சாமியாரின் கடைக்கண் பார்வையால் காப்பாற்றப்பட்டான். இருந்தும் கந்தன் திகைத்துப் போய் கற்சிலையாக அசையாது நின்று கொண்டிருந்தான்.

**********************

பின்குறிப்பு : தனக்கும், தன்னை சேர்ந்தவர்க்ளுக்கும் ஆபத்து இல்லை என்றால் கோரவிபத்தில் இறந்தவர்கள் குறித்து சிறிதும் கவலைகொள்ளாமல், தாம் தப்பித்தது கடவுள் தம்மீது பொழிந்த கருணை மழை என்று தான் நினைக்கத் தோன்றும்.

ஆத்திகனோ, நாத்திகனோ, ஒருவன் நல்லவனாக இருந்தாலும் என்றோ ஒருநாள் இறக்கத்தான் போகிறான், நோய், விபத்து, மரணம் எல்லாம் எல்லோருக்கும் பொதுவானது, இவற்றில் சிக்குவதும் அதிர்ஷ்டவசமாக மீழ்வதும் எல்லாருக்கும் நடப்பவைதான். மீட்சியை நம்பிக்கையின் காரணிகளாக மிகைப்படுத்திச் சொல்வதை ஏற்கமுடியவில்லை. நம்பிக்கை என்ற அளவில் எதுவும் சரியே, ஆனால் அவை விளம்பரப் படுத்தப்படும் போது கேலிக் குறியதாகவும் ஆகிறது.

இது எந்த கதைக்கான எதிர்வினையும் அல்ல. நம்பிக்கை என்ற அளவில் எழுதப்படுவதால் கந்தபுராணம் மற்றும் பக்திகதைகளை நான் படிப்பது இல்லை. இது முழுக்க முழுக்க என் சொந்த கற்பனை.

15 கருத்துகள்:

ஜெகதீசன் சொன்னது…

நல்ல கருத்து!! நல்ல கதை...

G.Ragavan சொன்னது…

இது சிறுகதை மாதிரித் தெரியலையே... ;)

இங்க ரெண்டு இருக்கு. சாமியாரு ஒன்னு. சாமி ஒன்னு. சாமியார்களை நான் நம்புறதில்லை. கடவுளை நம்புறேன். நம்மைக் காப்பாற்றுவார்னு ஒரு நம்பிக்கை. உழைப்பும் பிழைப்பும் துன்பமும் அனைத்தும் அவன் பொறுப்பு என்று நம்புகிறேன். அடி விழுந்தாலும் அவன் அடிதான். அணைத்தாலும் அவன் அணைப்புதான். இதுதான் என் கருத்து.

கோவி.கண்ணன் சொன்னது…

//G.Ragavan said...
இது சிறுகதை மாதிரித் தெரியலையே... ;)
//

ஜிரா,

சிறுகதை என்றால் ஒரு ஆரம்பம், அப்பறம் ஒரு 'மெசேஜ்' இருக்கும், இதில் இல்லையா ?
:)

நம்பிக்கை குறித்து எதுவும் சொல்லவில்லை ஜிரா, நம்பிக்கைகள் விளம்பரப்படுத்தப்படுவதைத்தான் குறிப்பிட்டேன்.
:)

தப்பு என்றால் சொல்லுங்க பிள்ளையாருக்கு குட்டிக்கொள்கிறேன்.
:))))))

RATHNESH சொன்னது…

கந்தன் எங்கே காப்பாற்றப்பட்டிருக்கிறான்? கோவி.கண்ணனிடம் அல்லவா மாட்டிக் கொண்டிருக்கிறான்!

சுனாமியில் தப்பியவர்கள், 'கடவுள் கருணையால்' என்று சொன்னபோது இங்கிதம் தெரியாதவன் என்று சொல்லப்பட்டாலும் பரவாயில்லை என்று இரண்டொரு சபைகளிலேயே எழுந்து கண்டித்திருக்கிறேன். (அந்த சமயங்களில் அங்கே தான் இருந்தேன்).

ரூபஸ் சொன்னது…

//நம்பிக்கை என்ற அளவில் எதுவும் சரியே, ஆனால் அவை விளம்பரப் படுத்தப்படும் போது கேலிக் குறியதாகவும் ஆகிறது.//

இந்த இடம் எனக்கு பிடிச்சிருக்குங்க..

நல்லாயிருக்கு..

அது எப்படிங்க .. ஒரு நாள் பார்க்கலன்னா குறைச்சலா மூன்று பதிவு போட்டு அசத்தி விடுகிறீர்கள்..

கோவி.கண்ணன் சொன்னது…

//ரூபஸ் said...
இந்த இடம் எனக்கு பிடிச்சிருக்குங்க..

நல்லாயிருக்கு.. //

நன்றி !

//அது எப்படிங்க .. ஒரு நாள் பார்க்கலன்னா குறைச்சலா மூன்று பதிவு போட்டு அசத்தி விடுகிறீர்கள்..
//

அதுவா ? எனக்கு என் நண்பர் இரத்னேசுக்கும் அறிவிக்கப்படாத போட்டி. :)

இரத்னேஷ்,

ஜோக்குக்குத்தான் சொன்னேன். உங்களுடன் என்னால் போட்டி போட முடியாது. உங்க வேகத்துக்கு என்னால் பதிவெழுத முடியாது.

குமரன் (Kumaran) சொன்னது…

சிறுகதை நல்லா இருக்கு கோவி.கண்ணன். உங்க மெசேஜை நல்லா சொல்லியிருக்கு. 'கந்தன்' என்ற பெயரை இட்டதால் எந்தக் கதைக்கும் எதிர்வினை இல்லை என்று டிஸ்கி போட வேண்டி வந்ததோன்னு நினைக்கிறேன். :-)

இரத்னேஷ். நீங்கள் சொன்னதைப் போன்று நானும் பலமுறை பலரிடம் சொல்லியிருக்கிறேன்.

பாச மலர் / Paasa Malar சொன்னது…

நல்ல கருத்துகள் சொன்ன நல்ல கதை...இது போன்ற பல கதாபாத்திரங்கள் வாழ்க்கையில் அதிகம் சந்திக்கிறோம்..

கோவி.கண்ணன் சொன்னது…

//குமரன் (Kumaran) said...
சிறுகதை நல்லா இருக்கு கோவி.கண்ணன். உங்க மெசேஜை நல்லா சொல்லியிருக்கு. 'கந்தன்' என்ற பெயரை இட்டதால் எந்தக் கதைக்கும் எதிர்வினை இல்லை என்று டிஸ்கி போட வேண்டி வந்ததோன்னு நினைக்கிறேன். :-)
//

பாராட்டுக்கு நன்றி குமரன்,

கதையில் சொல்லும் மெசேஜைவிட நண்பர்களின் மனதை புண்படுத்தக் கூடாது என்பதுதான் தேவை மிக்கது. அதற்குத்தான் டிஸ்கி. :)

//இரத்னேஷ். நீங்கள் சொன்னதைப் போன்று நானும் பலமுறை பலரிடம் சொல்லியிருக்கிறேன்.
//

குமரன் சரிதான்,

தனக்கு அருள் கிடைத்து காப்பாற்றப்பட்டேன் என்று சொல்வது மறைமுகமாக மற்றவர்களை பாவிகள் போல சித்தரிக்கும் அபாயம் இருக்கிறது. மித மிஞ்சிய உணர்ச்சிகளை கட்டுப்படுத்திக் கொண்டு இறந்தவர்களின் நிலையையும் இழப்பு என்றே கருதவேண்டும். உங்களுக்கும், இரத்னேஷுக்கும் அந்த பக்குவம் இருப்பதை பாராட்டுகிறேன்.

கோவி.கண்ணன் சொன்னது…

//ஜெகதீசன் said...
நல்ல கருத்து!! நல்ல கதை...
//

பாராட்டுக்கு நன்றி !

கோவி.கண்ணன் சொன்னது…

//RATHNESH said...
கந்தன் எங்கே காப்பாற்றப்பட்டிருக்கிறான்? கோவி.கண்ணனிடம் அல்லவா மாட்டிக் கொண்டிருக்கிறான்!//

ரத்னேஷ்,
கந்தன் பாத்திரமாக சிக்கியது என்னமோ உண்மைதான். கந்தன் மீது பற்றுதலால் கந்தனை நான் கதையில் சாகடிக்கவில்லை. :)


//சுனாமியில் தப்பியவர்கள், 'கடவுள் கருணையால்' என்று சொன்னபோது இங்கிதம் தெரியாதவன் என்று சொல்லப்பட்டாலும் பரவாயில்லை என்று இரண்டொரு சபைகளிலேயே எழுந்து கண்டித்திருக்கிறேன். (அந்த சமயங்களில் அங்கே தான் இருந்தேன்).

10:54 PM, November 30, 2007
//

பாராட்டுக்கள், இறந்தவர்களின் ஆத்மா அப்படி சொன்ன அவர்களை மன்னித்து, உங்களை நிச்சயம் போற்றி இருக்கும்.

கோவி.கண்ணன் சொன்னது…

///பாச மலர் said...
நல்ல கருத்துகள் சொன்ன நல்ல கதை...இது போன்ற பல கதாபாத்திரங்கள் வாழ்க்கையில் அதிகம் சந்திக்கிறோம்..
//

பாசமலர், பாராட்டுக்கு நன்றி.

இதுபோன்ற பாத்திரங்கள் மேலே குறிப்பிட்ட முதல் பாதி சம்பவங்களை சொல்லித்தான் பார்த்திருப்போம்.
இரண்டாம் பாதி புனிதம் / நம்பிக்கை கட்டமைப்பு கெட்டுவிடும் என்பதால் எப்போதும் மறைக்கப்பட்டுவிடும்.
:(

மங்களூர் சிவா சொன்னது…

இது போல பலப்பல பதிவுகள் தங்களிடமிருந்து வர ஆண்டவன் அருள் புரியட்டும்.

ஸ்மைலி எதுவும் இல்லை.

கோவி.கண்ணன் சொன்னது…

//மங்களூர் சிவா said...
இது போல பலப்பல பதிவுகள் தங்களிடமிருந்து வர ஆண்டவன் அருள் புரியட்டும்.

ஸ்மைலி எதுவும் இல்லை.
//

மங்களூர் சிவா,

இதுவும் ஒரு பெரிய ஆண்டவர் ஆசிர்வாதத்தில் எழுதியதுதான், தூரத்தில் இருந்தாலும் கந்தன் பெயர் இதில் இருப்பதால் கடைக்கண்ணால் பார்த்து ஆசிர்வதித்தும் விட்டார்.
:)

துரைடேனியல் சொன்னது…

கதை நல்லாருக்கே. சுட்டி தந்ததிற்கு நன்றி. நன்றாக எழுதுகிறீர்கள். வாழ்த்துக்கள் சகோ.

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்