பின்பற்றுபவர்கள்

23 நவம்பர், 2007

ஏழுமலை, சபரிமலைக்கு போட்டியாக திருவண்ணாமலை !

கடவுள் மொழியை கடந்தவர், மலையை கடந்தவர், மாநிலத்தை கடந்தவர், கடலை (நாடுகளை) கடந்தவர், என்று சொல்லுவார்கள். இவையெல்லாம் சொல்லப்படுவது பாமரனுக்கு மட்டும் தான். பாமரர்களைத் தவிர்த்து அதில் ஈடுபாட்டுடன் இருப்பவர் பெரும்பாலும் ஒருபக்கமாகத் தான் இருப்பார்கள், திருப்பதிக்கு செல்லும் வைணவர்கள், சிவதலங்களை புறக்கணிப்பதும் அது போன்று தீவிர சைவர்களும் நடப்பதும் உண்டு.

தமிழகத்திலிருந்து திரண்டு சென்று வரும் பக்தர்களின் கருணை பார்வையால் உண்டியலை நிரப்பிக் கொள்ளும் பாக்கியம் ஆந்திர திருப்பதிக்கும், கேரள சபரிமலைக்கும் தான் கிடைத்தது. கடந்த 10 ஆண்டுகளாக தமிழக பக்தர்களின் திடீர் கருணை பார்வை தமிழக கோவில்களின் பக்கமும் திரும்பி இருப்பது நலமான செயல்தான். குறிப்பாக திருஅண்ணாமலையார் கோவிலுக்கு செல்வதும், மலையை சுற்றிவருவதும் (கிரி வலம்) நடந்தேறிவருகிறது.
உண்டியல் காசு பார்க்கும் ஆலயம் அடியார்களுக்கு எவ்வித வசதியும் செய்து கொடுப்பது இல்லை என்ற செய்திகளும், மலையைச் சுற்றிவரும் பக்தர்கள் சமூக பகைவர்களின் தாக்குதாலுக்கு உள்ளாவதும், இடிராசாக்களின் பெண்கள் மீதான பாலியல் வன்முறைகளும் முழுமதி (பெளர்னமி) தோறும் நடந்தேறுகிறது.

திருவண்ணாமலை தீபத் திருநாளான நேற்றும் பக்தர்கள் கூட்டம் கட்டுக்கு அடங்காத அளவுக்கு குவிந்திருப்பதாக செய்திகள் வருகிறது. காசுள்ள கனவான்களுக்கு எல்லாவித வசதியும் கிடைக்கிறதாம். மற்றவர்கள் எப்போதும் போல் மிதிபட்டு கொண்டிருக்கிறார்கள். கருணாநிதி அரசு போதிய பாதுகாப்பு செய்யவில்லை என்ற ரெடிமேட் காரணங்கள் அவற்றையெல்லாம் புறந்தள்ளிவிடும்.

திருவண்ணாமலை திருப்பதி போன்று ஆன்மிக நிறுவனமாக வளர்ந்துவிட்ட நிலையிலும் கோவில் நிர்வாகக் குழுக்கள் திருப்பதியில் பக்தர்களுக்கு செய்வது போல் எதையும் செய்வதில்லை.

*****

திருவண்ணாமலை பற்றி மேலும் சில தகவல்கள்,

காஞ்சிபுரத்துக்கு அடுத்து திருவண்ணாமலை ஒருகாலத்தில் சமணர்களின் கட்டுப்பாட்டில் இருந்தது, ஞான சம்பந்தர்காலத்திற்கு பிறகு அங்கிருந்த சமணர்களை துறத்திவிட்டு சைவர்கள் அதை வளைத்தனர். அண்ணா மலையார் என்ற பெயரில் உறைந்த சிவன் அருணாச்சலேஸ்வரர் என்று வைதீக மதம் மாற்றப்பட்டார். சாமிகளுக்கே மதமாற்றம் அதுவும் 6 - 7 ஆம் நூற்றாண்டுகளில். உலகிலேயே கடவுளுக்கும் கூட மதமாற்றம் முதலில் நிகழ்ந்தது தமிழகத்தில் தான் என்பதில் நாமெல்லாம் பெருமை கொள்ளலாம். சமணர்கள் ஆதிக்கம் இருந்த இடங்களிலெல்லாம் பின்னால் சைவம் நிலைபெற்றது ( எ.கா திருவண்ணாமலை, காஞ்சிபுரம் மற்றும் மதுரை)

திருவண்ணாமலை தீபம் : சமணர்கள் விளக்கு எரிக்க நெய்க்கு மாற்றாக விளக்கெண்ணையை கண்டுபிடித்து கொண்டாடிய போது ஏற்றப்பட்டது தான் திருவண்ணாமலை தீபம், தற்போது இந்து மத திருவிழாவாக வடிவம் பெற்றுவிட்டது. இது பற்றிய குறிப்பை எழுதியவர் அயோத்தி தாசபண்டிதர்.

எது எப்படி மாறினாலும் அவை நடந்தவை அறிந்து கொள்வதில் தவறல்ல, அதே நேரத்தில் தமிழக பக்தர்களின் மனம் தற்போதைய சீசனில் தமிழக கோவில்கள் பக்கம் மாறி இருப்பது வரவேற்கத்தக்கது.

அண்ணாமலையாருக்கு அரோகரா !

7 கருத்துகள்:

பாரதிய நவீன இளவரசன் சொன்னது…

நல்ல பதிவு. திருவண்ணாமலைக்கு நான் ஒரு முறைதான் சென்று வந்திருக்கிறேன். ஆனால், நான் அங்கு சென்றிருந்தபோது, நிறைய வடநாட்டவரை (குறிப்பாக ராஜஸ்தான்-மார்வாரி) சமூகத்தினரைக் காணநேரிட்டது.

அதுபோலவே, தமிழகத்தைச் சேர்ந்த தஞ்சைப் பெரியகோவில், மதுரை மீனாட்சி அம்மன் கோவில், ராமேஸ்வரம் போன்ற திருத்தலங்களுக்கும் பல வடநாட்டவரும் (ஏன், வெளிநாட்டவரும்) வந்தவண்ணமே உள்ளனர்.

நான் கொல்கத்தாவிலும், புதுடில்லியிலும் சில தினங்களே தங்க நேர்ந்தபோது, தமிழகக் கோவில் கட்டடக்கலைப் பற்றியும் சிறப்புகள் பற்றியும் பல வடநாட்டு நண்பர்கள் வியந்து கூறக் கேட்டேன்.

இன்றைய உலகமயமாக்கல் சூழ்நிலையில் இயந்திர வாழ்க்கையில் சிக்கிவிட்ட மனிதனுக்கு, எங்கே சார், உள்ளூர் கோவிலுக்குப் போவதற்கே நேரம் கிடைப்பதில்லை, அவர் எங்கே வெளிமாநிலத்திற்கெல்லாம் போகப்போகிறார்கள்.

போகிறபோக்கில், இனி ஆன்லைனில்தான் தரிசனங்கள் நடைபெறும்போல!

கோவில்கள், தெய்வம்... மொழி, பிரதேசம், தேசம் எல்லாமே கடந்தவைதான்.. இது பாமரர்களுக்கு மட்டுமல்ல, எல்லாருக்குமே அப்படித்தான். நிறைய வெளிமாநிலத்தவரை, வேளாங்கன்னிக்கு வரத்தான் செய்கிறார்கள். பல கோடிபேர், பல தேசத்தவர், சவுதி அரேபியாவிலுள்ள மக்காவிற்கும், மதீனாவிற்கும் சென்றுவரத்தான் செய்கிறார்கள்.

சீனு சொன்னது…

//அது போன்று தீவிர சைவர்களும் நடப்பதும் உண்டு.//

ஆனால் இந்த தீவிர சைவர்கள் என்பவர்கள் வெகு குறைவானவர்கள், திருப்பதிக்கு செல்லும் வைணவர்களை ஒப்பிடும் பொழுது. சைவர்கள் பெரும்பாலும் கடவுளிடம் பேதம் பார்ப்பதில்லை. எங்கள் தெருவில் பக்ரீத் பண்டிகையின் போது எங்கள் தெரு வழியாக அவர்கள் கடவுளை(?) அலங்கரித்து எடுத்து செல்லும் பொழுது எங்கள் தெரு ஆட்கள் வழிபட்டிருக்கிரார்கள்.

RATHNESH சொன்னது…

நண்பரே, ஒரு சந்தேகம். அரோகரா என்கிற வார்த்தை முருகன் கோவில்களில் உபயோகிக்கப்படுவது தானே? சிவன் கோவில்களில் சொல்லுவார்களா? இல்லைஎன்றால் அண்ணாமலையாருக்கு மட்டும் எப்படி கூடுதலாக . . .?

Balaji Chitra Ganesan சொன்னது…

ஒரு காலத்தில் காவடி எடுத்து முருகன் கோவிலுக்குச் சென்றவர்கள்தான் தமிழர்கள். இப்போது முருகன் out-of-fashion ஆகிவிட்டார்.

வவ்வால் சொன்னது…

ரத்னேஷ்,
//அரோகரா என்கிற வார்த்தை முருகன் கோவில்களில் உபயோகிக்கப்படுவது தானே? சிவன் கோவில்களில் சொல்லுவார்களா? இல்லைஎன்றால் அண்ணாமலையாருக்கு மட்டும் எப்படி கூடுதலாக . . .?//

அது சிவனுக்கு சொல்வது தான் ... வாரிசு என்பதால் முருகனுக்கும் சொல்ல ஆரம்பித்துவிட்டார்கள்,
ஹர ஹர என்பதை தான் அரோகரா என்று தமிழ் படுத்திவிட்டார்கள்,

ஹரன் = சிவன்.

திருமூலர் கூட

அரகர என்ன அரியதொன்றில்லை
அரகர என்ன அறிகிலர் மாந்தர்
அரகர என்ன அமரரும் ஆவர்
அரகர என்ன அறும் பிறப்பன்றே.

ஹர ஹர என்பதை அரகர என்று தமிழ் ஆக்கியுள்ளார் அப்படியே அரோகரா ஆகிவிட்டது.

செல்வமுத்துகுமரன் சொன்னது…

அண்ணாமலையார் - அருணாசலேஸ்வரர்
உண்ணாமுலையம்மை - அபீதகுசலாம்பாள்

இரண்டு பெயர்களும் இன்றைக்கும் வழங்கி வருவதுதான் - ஒன்றிலிருந்து மற்றொன்றாக மாறியதல்ல. யாருக்கு எது வருகிறதோ அப்படியே அழைப்பது வழக்கு. திருச்சியை பெயர் வாயில் நுழையாத வெள்ளையர்கள் ட்ரிச்சியாக மாற்றி அழைத்தாலும் ஒரிஜினல் பெயரும் எங்கும் ஓடிவிடாது. வெளிமாநில பக்தர்களும் வடமொழியறிந்தவர்களும் அருணாசலம் என்றாலும் நம்மவர்கள் அண்ணாமலையான் என்றாலும் அழைக்கப் படுவது ஒரே தெய்வம்தான்.
திருப்பதியில் பக்தர்களின் வசதிக்குப் போக மீதிப் பணம்தான் அரசுக்குப் போகும் - அதற்கு முக்கியக் காரணம் தேவஸ்தானத்தின் சுயாட்சி. நம்ம ஊர் ஹிந்து சமய அறநிலையத்துறை போல கரை வேட்டிகளின் கைகளுக்கு போகாத காரணத்தால்தான் அங்கேனும் கொஞ்சம் உருப்படியான விஷயங்கள் நடந்து கொண்டிருக்கிறது.

கோவி.கண்ணன் சொன்னது…

//செல்வமுத்துகுமரன் said...
அண்ணாமலையார் - அருணாசலேஸ்வரர்
உண்ணாமுலையம்மை - அபீதகுசலாம்பாள்

இரண்டு பெயர்களும் இன்றைக்கும் வழங்கி வருவதுதான் - ஒன்றிலிருந்து மற்றொன்றாக மாறியதல்ல. யாருக்கு எது வருகிறதோ அப்படியே அழைப்பது வழக்கு. திருச்சியை பெயர் வாயில் நுழையாத வெள்ளையர்கள் ட்ரிச்சியாக மாற்றி அழைத்தாலும் ஒரிஜினல் பெயரும் எங்கும் ஓடிவிடாது. வெளிமாநில பக்தர்களும் வடமொழியறிந்தவர்களும் அருணாசலம் என்றாலும் நம்மவர்கள் அண்ணாமலையான் என்றாலும் அழைக்கப் படுவது ஒரே தெய்வம்தான்.
திருப்பதியில் பக்தர்களின் வசதிக்குப் போக மீதிப் பணம்தான் அரசுக்குப் போகும் - அதற்கு முக்கியக் காரணம் தேவஸ்தானத்தின் சுயாட்சி. நம்ம ஊர் ஹிந்து சமய அறநிலையத்துறை போல கரை வேட்டிகளின் கைகளுக்கு போகாத காரணத்தால்தான் அங்கேனும் கொஞ்சம் உருப்படியான விஷயங்கள் நடந்து கொண்டிருக்கிறது.
//

செல்வமுத்துகுமரன் ,

நல்ல தகவல்கள்.

தமிழில்

ஜீசஸ் - ஏசு
மேரி - மாதா
மெகமட் - முகமது நபி
அல்லா - எல்லாம் வல்ல இறைவன்

என்று பெயர் மாற்றி சொல்லுவதற்கு எளிதாக வழங்கப்படுகிறது. இதேபோல் வடமொழியில் இந்து மதம் சாராத பிற மதம் சார்ந்தவர்களுக்கு எளிதாக வழங்கும் படி என்ன பெயர் இருக்கிறது என்று சொன்னால் தெரிந்து கொள்வேன்.

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்