பின்பற்றுபவர்கள்

9 பிப்ரவரி, 2013

பல்லு போன சொல்லு மட்டும் தான் போகுமா ?


இதை ஒரு விழிப்புணர்வு பதிவு என்று நினைத்து தான் எழுதுகிறேன், உங்களுக்கு இந்த இடற்பாடு இருந்தால் பதிவை படித்து முடித்து முயற்சி செய்யுங்கள், சிறுவயதில் (7 - 8) வயதில் இனிப்பு சாப்பிடும் ஆவல் எனக்கு கட்டுப்படுத்த முடியாத அளவில் இருந்தது, தீபாவளிக்கு செய்யும் இனிப்பு பண்டங்கள், கெட்டி உருண்டை, அதிரசம், சீனி உருண்டை, கோவிலுக்கு போடும் மாவிளக்கு இவற்றில் எங்கள் வீட்டில் 75 விழுக்காடு தின்று தீர்ப்பது நான் தான், அதுமட்டும் இல்லாமல் அம்மா வீட்டில் இல்லாத பொழுது சீனியை கரண்டி கரண்டியாக அள்ளி தின்பேன், போன வாரம் தானே ஒருகிலோ வாங்கினேன் என்னா ஆயிருக்கும் என்று யோசித்து கொண்டு இருப்பார்கள், அதனால் ஏற்பட்ட எதிர்வினை கடைவாய் பற்களில் சேதம், பால் பற்கள் விழுந்து முளைந்திருந்தவைகளில் சேதாமாகியது, அந்த கால வளர்ப்பில் குழந்தைகளை இரவில் பல் துலக்கச் சொல்லும் கெட்ட பழக்கமெல்லாம் எங்கள் பெற்றோர்களிடமும் இல்லை, அது தவிர நாம பல் துலக்க பயன்படுத்துவது பயோரியா, கோபால் பற்படி,(அதன் இனிப்பு சுவையால் துலக்கி வெளியே துப்புவது ரொம்ப குறைவு) அவைகள் இல்லாத பொழுது இருக்கவே இருக்கு,  உமி கரி, வரட்டி சாம்பல் (சப்பென்றெ இருந்தாலும் சுவைதான்) , திருநீறு, செங்கல் தூள், இப்படியெல்லாம் பல்லை துலக்கி இருந்தால் அந்த பல் தான் துலங்குமா ? 10 ஆம் வகுப்பு படிக்கும் பொழுது இருபக்கமும் பக்கத்திற்கு ஒன்றாக கடவாய் பற்களில் பள்(ல்லு)ளதாக்கு, அதை பல்மருத்துவரிடம் காட்டி அடைக்கலாம் என்று கூட தெரியாது, அப்படியே விட்டதில் நொறுங்கி நொறுங்கி இரண்டு பற்கள் காணாமல் போனது. 

நம்உடல் இருக்கும் உறுப்புகளுக்கு ஏற்ப வளைந்து கொள்ளும், கடவாய்பற்கள் இல்லாத நிலையில் உணவை மென்று உண்ணும் வழக்கம் குறைய பாதி அப்படியே விழுங்கிவிடுவதும், மென்று திங்க வேண்டிய முருங்கைக்காய் வகையறாக்களை மட்டுமே மெல்வது மென்மையான அரிசி சோறு, தோசை இட்லி வகைகளை நாக்குக் சுவை காட்டிவிட்டு அப்படியே விழுங்குவது என்று உணவு உண்ணும் முறையே மாறி போய் இருந்தது, எதனால் மெல்லாமல் விழுங்குறேன் என்பதே எனக்கு அண்மை வரை தெரியாதது, மேல் தாடையிலும் இரண்டு பற்கள் 18 - 19 வயதில் ஆட்டம் காண அதை 30 வயது வரை தாக்குபிடித்து வைத்திருந்தேன், பின்பு ஒருநாள் பட்டாணியை கடிக்க, பட்டாணிக்கு வலி பொறுக்குமா ? உடைத்துவிட்டது பல்லை, மேல் வரிசை பற்களில் முன்புறவரிசையைத் தள்ளி பக்கத்திற்கு ஒன்றாக இரு பற்கள் வேறு வேறு நாட்களில் காணாமல் போனது, விளைவு ?

சோற்றை மென்று சாப்பிடுவதற்கு பதில் விழுங்குவது இதெல்லாம் எனக்கு பிரச்சனையாகத் தெரியவில்லை, ஆனால் முன்வரிசையில் மூன்றாம் பற்கள், காணாமல் போனது வாய்விட்டு சிரிப்பது முக அழகைக் கெடுப்பதாகவே இருந்தது, நாம் சிரிக்கும் பொழுது பார்க்கிறவர்களுக்கு இரண்டு பக்கமும் பற்களில் இடையே  ஓட்டை இருப்பது தெரிந்தம் நமக்கு கொஞ்சமேனும் கூச்சம் மற்றும் அவமானம் ஏற்படும், அதைத் தவிர்க்க, பெரும்பாலும் வாய்குள் சிரிப்பது, உதடை மூடிச் சிரிப்பது என்று பழக்கப்படுத்தி கொண்டேன், வாய் முடி குலுங்கி குலுங்கி சிரிச்சா எப்படி இருக்குமோ ? அப்படி சிரிக்க வேண்டிய நிலை, கிட்டதட்ட 10 ஆண்டுகளுக்கு மேலாக இதுவே என் சிரிப்பு அழகு என்று இருந்தது, கொஞ்சமாக உதடு திறந்து சிரித்தால் ஒன்றும் தெரியாது, ஆனால் அதற்கும் கொஞ்சம் கூடுதலாக சிரித்தால் மேல் பக்கம் நான்காம்  பல் இல்லை என்பது தெரிந்துவிடும்.

இடையில் செயற்கையாக எடுத்து மாட்டும் பக்கத்து ஒன்றாகமேல் வாயை ஒட்டி இருக்கும் க்ளிப் வகை ஒன்றையை பொறுத்திப் பார்த்தேன், எனக்கு சரியாக வரவில்லை, சிரித்தால் க்ளிப் கம்பி தெரியும், சாப்பிடும் பொழுது துணுக்குகள் போய் அடைத்துக் கொண்டு பெரிய தொந்தரவாகவே இருக்கும், சாப்பிட்ட உடனேயே எடுத்து கழுவ வேண்டி இருக்கும், வீட்டில் இருக்கும் பொழுது பரவாயில்லை, வெளியே நான்கு பேருக்கு முன்பு அவ்வாறு செய்ய முடியாது,  தொந்தரவாகவே இருக்கும்,  படுக்கும் பொழுதும் அவற்றை அணிந்திருப்பது பொருத்தமற்றவையாக இருந்தது.  அப்பறம் கழட்டி எரியும் முன்பு அதுவே உடைந்து போக அதன் பிறகு 4 - 5 ஆண்டுகளுக்கு உதடு மூடிச் சிரித்தே பல் பிரச்சனையை சமாளித்து வந்தேன். அதற்கு மேல் மொத்தமாக மேலும் கிழும்  நான்கு பற்கள் இல்லையே என்பதை நான் ஒரு பிரச்சனையாக கருதியதில்லை,  ஆனாலும் அவ்வப்போது இந்த நான்கு பற்கள் இல்லாததால் நாம் முழுமனிதன் இல்லை என்று அதை ஒரு குறையாகவே மனசு உணரும்,

ஓராண்டு முன்பு ஊருக்குப் போன பொழுது தான், இதே பிரச்சனை உள்ள (அண்மையில் மறைந்த) என் தம்பி செராமிக் செயற்கைப் பல் பொருத்தி இருந்ததைப் பார்த்தேன், விவரம் கேட்க இந்த செய்ற்கைப் பல் எடுத்து மாட்டத் தேவை இல்லை, ஒரு முறைப் பொருத்தினால் அப்படியேதான் இருக்கும் (Permanent Fixing), வழக்கமாக பற்கள் துலக்குவது போல் துலக்கிக் கொண்டால் போதும் இதை பராமரிக்கத் தேவை இல்லை என்றான், எனக்கு ஆர்வம் பிறந்தது ஆனாலும் அப்போது செயல்படுத்த கால அவகாசம் இல்லை, பல் மருத்துவர் நமது பல் அச்சுகளை எடுத்து அவற்றை செய்யக் கொடுத்து பொருத்த குறைந்தது ஒருவார கால ஆகும் என்பதால் அடுத்த முறை பார்க்கலாம் என்று வந்துவிட்டேன், 

ஐந்து மாதங்களுக்கு முன்பு வேலை மாற்றும் சூழலில் இடைப்பட்ட 10 நாள் இடைவெளியில் தமிழகம் சென்ற பொழுது, மருத்துவரைப் பார்க்க பற்களை அச்சு எடுத்து ஒருவார காலத்தில் பொருத்திவிட்டார், முதல் இரண்டு நாட்கள்  தொடர்ந்து எதோ பற்களை கடித்துக் கொண்டு இருப்பது போன்ற உணர்வு இருந்தது பிறகு அவை மறைந்துவிட்டன, உணவை நன்றாக மென்று விழுங்க முடிகிறது என்றாலும் பழைய பழக்கமாக அப்படியே விழுங்கும் வழக்கம் இன்னும் மாறவில்லை, என்ன தான் இருந்தாலும் உண்மையான பற்களுக்கும் செராமிக் பற்களுக்கும் அளவு நிரம் உறுதி இவற்றில் பெரிய மாற்றம் இல்லாவிட்டாலும் உண்மையான பற்கள் கொடுக்கும் சுவை, குறிப்பாக முறுங்கைகாய் உள்ளிட்டவற்றைக் கடிக்கும் பொழுது கிடைக்கும் சாற்றின் சுவை வேறுபாடுகளை உணர முடிகிறது, மற்றபடி பெரிய வேறுபாடு இல்லை, வாயைத் திறந்து சிரிக்கலாம்.
(இது நான் இல்லிங்க - எனக்கு மீசை இருக்கும், இணையத்தில் எடுத்தப் படம், இதே  போன்று தான் மேல் தாடையில் பக்கத்திற்கு ஒன்றாக எனக்கு இருபற்கள் இல்லாமல் இருந்தது)

செய்ற்கைப் பற்கள் பொருத்தாமல் ஆண்டுகணக்கில் விட்டுவிட்டால் மற்ற பற்களிடையே இடைவெளிகள் ஏற்படத் துவங்கும், நாளடைவில் பற்கள் உறுதி இழக்கும், கீழ் தாடையில் ஒரு பல் இல்லாவிட்டால் மேல் தாடையில் அதற்கு நேர் மேலே இருக்கும் பற்கள் கீழாக இறங்கத் துவங்கும், சொத்தைப் பற்களை அடைக்காமல் விட்டுவிட்டால் அடிக்கடி பாக்டிரியாக்களால் ஈரல் கட்டி ஏற்படும். அனைத்துப் பற்களையும் 60 வயது வரையிலாவது பாதுக்காக்க வேண்டும், அதற்குள் சிதைந்திருந்தால், விழுந்திருந்தால் அந்த இடத்தில் செயற்கைப் பற்கள் வைத்துக் கொள்வது நல்லது, கடைவாய்பற்களில் எண்ணிக்கைக் குறைய குறைய கன்னம் குழிவிழ முக அழகை கெடுக்கும்.

மேலும் கீழும் இரண்டு பற்களைப் பொருத்த மருத்துவர்கள் செய்வது, எங்கு பல்லைப் பொருத்த வேண்டுமோ அதற்கு இரு பக்கத்திலும் உள்ள பற்களை சுற்றிலும் கொஞ்சம் குறைக்கிறார்கள், பின்னர் அந்தப் பற்களின் உறுதியினால் அதனையும் சேர்த்து மொத்தமாக ஒட்டி இருக்கும் படி மூன்று பற்கள் , அதாவது நடுவில் செயற்கைப் பல் இருபக்கமும் செயற்கைப் பல் உண்மையான பல்லை மூடி இருக்கும் படி ஒரு வித உறுதியான பசையினால் பொருத்துகிறார்கள், பல்லை கொஞ்சம் தேய்த்து எடுக்கும் பொழுது கொஞ்சம் பற்கூச்சம் இருக்கும் மற்றபடி இதற்கு எந்த அறுவை சிகைச்சையும் கிடையாது. இதற்கு பற்களுக்கு பாலம் போடுதல் என்று பெயர் ஆங்கிலத்தில் Bridge என்கிறார்கள், சிங்கையில் மூன்று பற்கள் சேர்ந்த ஒரு பாலத்திற்கு கட்டணம் 4000 வெள்ளிகள் வரை வாங்குகிறார்கள், 3000 வெள்ளுக்கும் குறைவாக இந்த சிகிச்சை இங்கு கிடையாது.

தமிழகத்தில் செயற்கைப் பற்களின் உலோகத்திற்கு ஏற்ப ஒரு பல்லுக்கு 10,000 ரூபாய் வருகிறது, பொதுவாக செராமிக் பாலப் பற்களுக்கு பல்லுக்கு 3000 ருபாய், எனக்கு மொத்தமாக நான்கு செயற்கைப் பற்களுக்கு அக்கம் பக்கம் 8 பற்களை தேய்த்து குறைத்து, நான்கு பாலங்கள் போட 12 பற்கள் கணக்கு. செலவு 36000 ரூபாய் ஆனது, கொஞ்சம் குறைத்துக் கொள்ள முடியுமா என்று மருத்துவரிடம் கேட்டேன், ஒரு பல்லாக இருந்தாலும் 12 பல்லாக இருந்தாலும் நாங்க பல்லு கணக்கு 100 ரூபாய்  கேரளாவிலில் இருந்து செய்து அனுப்பும் கூரியர் கட்டணம் வாங்குவோம், அதை வேண்டுமானால் குறைத்துக் கொள்கிறேன், உங்களுக்கு கூரியர் கட்டணம் 100 ரூபாய் மட்டும் போட்டுக் கொள்கிறேன், 12 பல்லும் ஒரு கூரியர் வழியாகத்தானே வந்திருக்கும் என்பதால் இவ்வாறு ஒப்புக் கொண்டு மொத்தம் 30,900/- வாங்கிக் கொண்டார். சிங்கையில் இதைச் செய்திருந்தால் 16,000 வெள்ளிகள் ஆகி இருக்கும் என்று ஒப்பிட்ட  31,900/- ரூபாய் 16ல் ஒரு பங்கு செலவு தான். ஆனால் 32,000 ஆச்சு என்றதும் எங்க அக்காவே ஆ......! அவ்வளவா ? என்றார்கள்.

பணம் என்ன ? பழைய படி வாய்விட்டு சிரிக்க முடிகிறதே, முன்பைவிட கன்னமும் கொஞ்சம் உப்பலாக வந்து கொண்டு இருக்கிறது. முக்கியமாக நமக்கே நமக்கான சிலவற்றில் நாம் அலட்சியம் காட்டுவது மட்டுமின்றி அப்பறம் பார்க்கலாம் என்று விட்டுவிடும் அதன் பக்கவிளைவுகள் வேறுமாதிரியாக இருக்கும். என்னுடைய குழந்தைகளை நாள் தோறும் இருமுறை பல் துலக்க வைப்பதை பழக்கப் படுத்திவிட்டேன், அவங்க என் அளவுக்கு இனிப்பு வெறியர்களாகவும் இல்லை என்பது வேற.

இப்போதெல்லாம் எனக்கு 'நான் முழுமனிதனா ?' என்ற கேள்வி வருவதே இல்லை.

17 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

அருமையான பதிவு, தேவையற்றவைக்கு பணத்தை விரயமாக்குவதை விட தேவைக்கு பயன்படுத்தல் ஆரோக்கியம். எனக்கும் விபத்தில் முன்பல் போய் செயர்கை பல் வைத்தேன். பற்கள் குறித்த அறிவு நம்மவர் மத்தியில் குறைவே, குறிப்பாக உணவை மென்று தின்னாவிட்டால் குடல் நோய், குடல்வால் சிக்கல், மலச்சிக்கல், குடல், ஆசனவாய் புற்றுநோய், மூலவியாதி போன்றவை ஏற்படலாம். ஆக பற்கள் மீதான கவனம் தேவை அழகு, ஆரோக்கியம் தருவன அவை.

T.V.ராதாகிருஷ்ணன் சொன்னது…

அருமையான பதிவு.

துளசி கோபால் சொன்னது…

அருமை.

இங்கே நியூஸியில் குழந்தைகளுக்குப் பல்முளைக்க ஆரம்பிச்சது முதல் உயர்நிலைப்பள்ளி முடிவது வரை அந்தந்த பேட்டை பள்ளிக்கூடத்துலேயே டெண்டல் க்ளினிக் & நர்ஸ் வசதிகளுடன் அரசு கவனிச்சுக்குது. எல்லாம் இலவசம்தான்.


ஆனால் பல்வரிசை நேராக்க க்ளிப் ப்ரேஸஸ் போடணுமுன்னா நாம் செலவழிக்கணும்.

கீழ் வரிசைப்பல் லேசா ஆடுதுன்னு அதுக்கு உள்புறம் செராமிக் பட்டை ஒன்னு ரொம்ப மெலிசா பொருத்துனாங்க எனக்கு.

பல்மருத்துவம் இங்கே நம்மை விழுங்கும் அளவு செலவு:( சிங்கை போலவேதான்.

ப.கந்தசாமி சொன்னது…

அந்தக்காலத்தில் பல் பராமரிப்பு பற்றிய விழிப்புணர்வு மிகவும் குறைவுதான். தவிர ஊருக்கு ஒரு பல் வைத்தியர் இருந்தாலே அதிகம். அவரும் பல் பிடுங்குவதைத் தவிர வேறோன்றும் செய்ய மாட்டார்.

காலம் போனபின் வருந்தி என்ன பயன்? இன்றைய இளைய சமுதாயத்திற்காவது நல்ல வழி காட்டுவோம்.

கோமதி அரசு சொன்னது…

நல்ல விழிப்புணர்வு கட்டுரை.

Jayadev Das சொன்னது…

Good Article.........

வடுவூர் குமார் சொன்னது…

நீங்கள் சொன்னதால் மட்டுமே தெரிந்தது இந்த ரகசியம்.

மதுரை அழகு சொன்னது…

Informative post!

கோவி.கண்ணன் சொன்னது…

//வடுவூர் குமார் கூறியது...
நீங்கள் சொன்னதால் மட்டுமே தெரிந்தது இந்த ரகசியம்.//

குமார் அண்ணன், இதெல்லாம் ரகசியமில்லை, இதே பல் பிரச்சனை இருப்பவர்கள் காலவிரைவு செய்யாமல் அலுப்பு அடையாமல் சரி செய்து கொள்ள முடியும் என்கிற பரிந்துரை தான், படிப்பவர்களில் ஒரு சிலர் பயன்பெறுவார்கள் என்பதால் எழுதினேன்.

கோவி.கண்ணன் சொன்னது…

//குறிப்பாக உணவை மென்று தின்னாவிட்டால் குடல் நோய், குடல்வால் சிக்கல், மலச்சிக்கல், குடல், ஆசனவாய் புற்றுநோய், மூலவியாதி போன்றவை ஏற்படலாம். ஆக பற்கள் மீதான கவனம் தேவை அழகு, ஆரோக்கியம் தருவன அவை.//

கூடுதல் தகவல், நன்றி தலைவரே

கோவி.கண்ணன் சொன்னது…

// T.V.ராதாகிருஷ்ணன் கூறியது...
அருமையான பதிவு.//

மிக்க நன்றி ஐயா

கோவி.கண்ணன் சொன்னது…

//துளசி கோபால் கூறியது...
அருமை.

இங்கே நியூஸியில் குழந்தைகளுக்குப் பல்முளைக்க ஆரம்பிச்சது முதல் உயர்நிலைப்பள்ளி முடிவது வரை அந்தந்த பேட்டை பள்ளிக்கூடத்துலேயே டெண்டல் க்ளினிக் & நர்ஸ் வசதிகளுடன் அரசு கவனிச்சுக்குது. எல்லாம் இலவசம்தான்.


ஆனால் பல்வரிசை நேராக்க க்ளிப் ப்ரேஸஸ் போடணுமுன்னா நாம் செலவழிக்கணும்.//

இங்கும் பள்ளிகளில் பொதுவான சோதனைகளுக்கும், சிகிச்சைகளுக்கும் பணம் வாங்குவதில்லை, செயற்கைப் பல், காறை நீக்குதல் போன்றவைகள் காஸ்மெட்டிக் சிகிச்சை என்ற வகையில் வருவதால் அதற்கு கட்டணம் கூடுதல், சீனர்கள் பல்பிரச்சனை உள்ளவகள் மிகக் குறைவு, இங்கு பல்சிகிச்சை வேலை பார்க்கும் நிறுவனங்கள் மருத்துவ செலவுக்கு ஆண்டுக்கு 250 வெள்ளிகள் வரை தருவார்கள்.

கோவி.கண்ணன் சொன்னது…

//பழனி. கந்தசாமி கூறியது...
அந்தக்காலத்தில் பல் பராமரிப்பு பற்றிய விழிப்புணர்வு மிகவும் குறைவுதான். தவிர ஊருக்கு ஒரு பல் வைத்தியர் இருந்தாலே அதிகம். அவரும் பல் பிடுங்குவதைத் தவிர வேறோன்றும் செய்ய மாட்டார்.

காலம் போனபின் வருந்தி என்ன பயன்? இன்றைய இளைய சமுதாயத்திற்காவது நல்ல வழி காட்டுவோம்.//

அந்தகால உணவு முறைக்கும் தற்கால உணவு முறைக்குமே பெரிய வேறுபாடுகள் உள்ளன, தற்கால உணவுகள் பற்களை பதம் பார்க்கும், கேழ்வரகு கூழ், கேப்பங்க கஞ்சி என்னும் பழந்தமிழ் உணவுகள் உட்கொண்ட காலத்தில் பல் பிரச்சனை பெரிய அளவில் இருந்திருக்காது என்று நினைக்கிறேன், ஆலும், வேளும் தானே பல் துலக்கப் பயன்படுத்தினார்கள்,இன்னிக்கு ப்ரஸ் பேஸ்ட் பயன்படுத்தினாலும் அந்த அளவுக்கு பல்தூய்மை கிடைப்பதும் இல்லை

கோவி.கண்ணன் சொன்னது…

// கோமதி அரசு கூறியது...
நல்ல விழிப்புணர்வு கட்டுரை.//

மிக்க நன்றி

கோவி.கண்ணன் சொன்னது…

//Jayadev Das கூறியது...
Good Article.........//

மிக்க நன்றி

கோவி.கண்ணன் சொன்னது…

//மதுரை அழகு கூறியது...
Informative post!//

மிக்க நன்றி

யோகன் பாரிஸ்(Johan-Paris) சொன்னது…

பல் பாராமரிப்பின் முக்கியம் பற்றி விளக்கும் அனுபவப் பதிவு.
இங்கு பல் சொத்தையானால் உடனே பிடுங்கமாட்டார்கள். இயன்ற அளவு அதைத் துப்பரவு செய்து அடைக்கவே முயல்கிறார்கள்.
இலங்கையில் என் இளமையில் பலர் பல்வலியென்றதும் பல் பிடுங்கப்பட்டதை அவதானித்துள்ளேன்.
இங்கு நமக்கு சமூகப் பாதுகாப்பு நிதி மூலம் செலவில் 60 விழுக்காடு திருப்பத் தருவார்கள். 15 வயதுக்கு உட்பட்டோருக்கும், 60 வயதுக்கு மேற்பட்டோருக்கும் முற்றாக இலவசமே!
பாடசாலைகளில் பற்பரிசோதனையும் உண்டு. பல் மிதப்புக்கு இளமையிலே கம்பி போட வழி காட்டப்படுவதாலும், இலவசமென்பதாலும், குறிப்பாக இப்போது இளஞ் சமுதாயத்தில் அடுக்கி வைத்தது போல் அழகாக இருக்கும்.
இங்கு பல் வைத்தியருக்கு கிராக்கி அதிகம். பிரஞ்சு பேசும் வேற்று நாட்டு வைத்தியர்களைக் கூட வேலைக்கமர்த்துகிறார்கள்.

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்