திரட்டிகளை பிரபலமாக்குவது எப்படி ?
Tuesday, October 25, 2011
முன்குறிப்பு : நான் எந்த திரட்டி அமைப்பிலும் நடத்துனராகவோ ஓட்டுனராகவோ இல்லை, சில திரட்டிகளில் இணைந்திருக்கிறேன், நான் இங்கு எழுதுவது கூட திரட்டிகள் வளர்ச்சி பற்றிய விமர்சனம் தான், பிறரை / தனிப்பட்ட திரட்டியை தனிப்பட்ட முறையில் காயப்படுத்தாமல் எதையும் விமர்சனம் செய்யும் உரிமை அனைவருக்குமே உண்டு, அந்த புரிந்துணர்வில் தான் வலைப்பதிவுலகமும் அவற்றைத் தாங்கிச் செல்லும் திரட்டிகளும் உள்ளன என்கிற அடிப்படை புரிந்துணர்வில் தான் இதை எழுதுகிறேன். பதிவர் நண்பர்கள் சிலர் திரட்டி நடத்துகிறார்கள், உங்களுக்கும் திரட்டி நடத்துவது பற்றி விருப்பம் ஏதேனும் இருந்தாலோ, அதன் தொடர்பிலான மற்ற தகவல்களை தெரிந்து கொள்ள ஆவல் இருந்தாலோ கீழ்கண்டவற்றைப் படிக்கலாம்.
*******
* பிரபல கால்பந்து விளையாட்டு வீரர் டேவிட் பெக்கம் பெர்பூயும் (வாசனை திரவிய) நிறுவனம் துவங்கியுள்ளார், அவருக்கு அவர் விற்பதை விளம்பரம் செய்ய அவர் பெயரே போதும், திரட்டி துவங்க வேண்டுமென்றால் முதலில் பிரபல பதிவர் ஆகனும், மூன்றாண்டுக்கு முன்பு துவங்கிய திரட்டிகளில் பிரபலப்பதிவர் அல்லாதவர்கள் துவங்கும் திரட்டிகள் (தமிழ்மணம், தேன்கூடு தமிழிஷ், தமிழ்வெளி தவிர்த்து) வெறெதுவும் பிரபலமாகவில்லை, காரணம் திரட்டி ஓனர்கள் யார் என்று வெளிப்படையாகத் தெரியாததால் திரட்டிகளுக்கு அறிமுகம் கிடைக்கவில்லை. திரட்டித் துவங்க பிரபல பதிவர் அந்தஸ்து மிக மிக அவசியம். உங்களுக்குள் திரட்டி துவங்கும் கனவு இருந்தால் முதலில் பிரபல பதிவர் ஆகுங்கள், பிரபலப் பதிவர் ஆக என்ன என்ன எழுத வேண்டும் என்பதை பிரபலப் பதிவர்களின் பதிவுகளைப் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள், அதை நானே சொன்னால் விமர்சனம் ஆகிவிடும்.
* பிரபல பதிவர் ஆகி திரட்டி துவங்கியவுடன் அதை அடுத்த கட்ட மார்கெட்டிங்க் செய்வது முக்கியம், அதற்கு உங்களை பிரபலம் ஆக்கிய திரட்டியிலேயே அதையும் செய்துவிட முடியும். உலகிலேயே உன்னதமானது இந்த புது மாடல் டெலிவிசன் தான் என்பது பழைய டிவியில் விளம்பரமாக ஓடும் போது பழைய டிவி எப்படி நாணாதோ அதே போன்று தான் பழைய திரட்டிகள் புதிய திரட்டிகளின் விளம்பரங்களை சகித்துக் கொள்கிறார்கள், காரணம் பழைய திரட்டிகளின் புரிந்துணர்வு அவற்றை போட்டியாக கருதாமல் மாற்றாக இருக்கட்டுமே என்று நினைப்பதாக இருக்கும், எந்த ஒரு பழைய திரட்டியும் புதிய திரட்டிகளின் வருகையை ரசிக்கிறதோ இல்லையோ, கண்டிப்பாக போட்டியாக நினைப்பது இல்லை என்பதே புதிய திரட்டிகளின் பலம் என்பதை உணர்ந்தாலே உங்கள் திரட்டிகள் அந்த பழைய திரட்டிகள் வழியாக விளம்பரம் செய்ய பிரபலமாகும்.
* பிறகு கூகுள் பஸ், கூகுள் + மற்றும் அனைத்து சமூக இணைய தளங்களிலும் உங்களை நண்பர்களாக நினைப்பவர்கள், இணைத்திருப்பவர்கள் அடிக்கடி உங்கள் திரட்டி பற்றிய விளம்பரங்களை சகித்துக் கொள்வார்களா என்ற எண்ணமெல்லாம் விட்டுவிட்டு நாள்தோறும் திரட்டி பற்றி, வசதிகள் பற்றி எழுதிக் கொண்டே இருங்கள், உங்கள் விளம்பரம் பிடிக்காதவர்கள் அவர்களாகவே ம்யூட் செய்து கொள்வார்கள், உங்களைக் கடிந்து கொள்ள மாட்டார்கள், ஏனென்றால் எந்த பிரபலப் பதிவரையும் நேரடியாக விமர்சனம் செய்ய இணைந்திருப்பவர்கள் தயங்குவார்கள். அப்படியும் எவரேனும் விமர்சனம் செய்தால் அதுவும் பொருட்டல்ல, உலகில் அனைத்து விற்பனையாளர்களின் வெற்றிக்குப் பின்பும் புறக்கணிப்பின் வலி உள்ளது என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்
* மிக முக்கியமானது அலெக்சா ரேங்கில் உங்கள் திரட்டியில் இடம் என்ன என்பதை நீங்கள் விளம்பரம் செய்தே ஆகவேண்டும், கூடவே தற்போதைய திரட்டி வரிசையில் நீங்கள் எவ்வளவு தூரம் பிறத் திரட்டிகளைக் புரட்டி முன்னேறி இருக்கிறீர்கள் என்பதையும் விளம்பரமாகச் செய்ய வேண்டும், அதற்கு உங்கள் நண்பர்களும் மதீப்பீடு கொடுத்து சமூக இணையத் தளங்களில் விளம்பரம் கொடுத்து, பிற திரட்டிகளை முடிந்தால் விமர்சனம் செய்து கூட உங்கள் திரட்டிகளை அவர்கள் பிரபலப்படுத்திவிடுவார்கள்
* திரட்டியின் பெயர் ? அது தமிழுக்கு தொடர்ப்பு இல்லாமலும் தமிழிஷ் போல பாதி தொடர்பிலும், இண்டலி, சுண்டலி போல் முற்றிலும் தொடர்பே இல்லாமல் இருக்கலாம், ஆனாலும் நாம் தமிழுக்குத்தான் சேவை செய்கிறோம் என்ற நினைப்பு இருந்தாலே போதும்
* அடுத்து எதாவது ஸ்பான்ஸர் பிடித்து பதிவர்களுக்கான போட்டிகளை நடத்த வேண்டும், இவற்றையெல்லாம் முறையாகச் செய்யும் போது உங்கள் திரட்டி மிக விரைவில் ஆரம்பித்து இரண்டே நாளில் கூட பிரபலமாகிவிடும்
* முக்கியமாக பதிவர்களுக்காக பதிவர்களால் நடத்தப்படும் திரட்டியின் விளம்பர வருமானத்தில் பதிவர்களுக்கும் (பதிவுகளின் எண்ணிக்கை அடிப்படையில்) பங்கு கிடைக்கும் என்பதை திரட்டியின் தீமாக வைத்துக் கொள்ளுங்கள்.
* பிரபல இணையத்தளங்கள் நக்கீரன், தினமலர் போல் வெப்டிவியையும் உங்கள் திரட்டிகளில் வைத்திருப்பது மேலும் பதிவர் மற்றும் வருகையாளர் எண்ணிக்கையைக் கூட உதவும்
******
* கடைசியாக மிகவும் தெரிந்து கொள்ள வேண்டிய ஆபத்தான தகவல், திரட்டி நடத்துபவரின் ஓய்வு நேரங்களைத் தாண்டி தூக்க நேரத்தையும் திரட்டி தின்றுவிடும், கூடவே பதிவர் பஞ்சாயத்து முதற்கொண்டு, எவரேனும் ஆபாசத் தளங்களை இணைத்திருக்கிறார்களா என்று கண்கொத்திப் பாம்பாக செல் போனை ஆன் செய்துவிட்டு விழிப்போடு இருக்க வேண்டும்.
யப்பாடா பதிவை பிரபலமாக்குவது, பிரபலப் பதிவர் ஆகுவது எப்படி என்று தான் பல பதிவர்கள் மொக்கையாக எழுதியுள்ளார்கள், முதன் முதலில் திரட்டியை பிரபலப்படுத்தவது எப்படி என்கிற (மொக்கை) இடுகையை இட்டு பெருமை எனக்கே சாரும், ஜெமோவும் கூடவே ஞானியும் உரித்தாக்கிக் கொள்கிறேன்.











