பின்பற்றுபவர்கள்

24 அக்டோபர், 2011

தீவாளி !

தீபாவளி என்று எழுத்துக் குறையாமல் (அக்ஷ்ரம் சுத்தமாக..ம்பா) சொல்லிப் பழகி இருக்கவில்லை, நாங்கள் சிறுவயதில் பெற்றோர்களைப் பார்த்து தீவாளி இன்னும் 40 நாளில் 30 நாளில் 20 நாளில் 10 நாளில் வருது என்று நாட்களை மகிழ்ச்சியோடு எண்ணிக் கொண்டிருப்போம், காரணம் புத்தாடை, பட்டாசு கொஞ்சம் காசு கிடைக்கும், அப்பா வாங்கிவரும் பட்டாசுகளை வயதுக்கேற்ற வகைகளை பங்குபிரித்து தீவாளிக்கு முதல் நாள் இரவில் துவங்கும் வெடிச்சத்தம் மறுநாள் நடு இரவு வரைத் தொடரும், வெடிக்காத வெடிகளைப் பொறுக்கி எடுத்து வந்து நண்பர்களுடன் சேர்ந்து அவற்றின் மருந்துகளை ஒன்றாகக் கொட்டி பத்தவைத்துவிடுவோம், பல தடவை திடிரென்று பற்றிக் கொண்டு கைகளை ஓரளவுக்கு வேகை வைத்திருக்கிறது என்றாலும் அந்த பயமின்றி அதே வேலை மறு ஆண்டுகளிலும் தொடரும்.

முதல் நாள் பின்னிரவில் தூங்கச் சென்றாலும் அதிகாலை 5 மணிக்கு எழுப்பி விட்டு, முகம் கழுவச் சொல்லி, பல் விளக்கச் சொல்லி சாமி அறைக்கு அழைத்துச் சென்று நிற்கவைப்பார்கள், அதற்கு முன்பே புத்தாடைகளுக்கு சந்தனமும், குங்கமும் இட்டு வைத்து, நல்லெண்ணை, சீயக்காய் வைத்து கொஞ்சம் சாம்பிராணி போட்டு சாமி கும்பிடச் சொல்லி, ஒவ்வொருவருக்கும் அப்பாதான் தலையில் எண்ணை வைத்து தேய்த்துவிடுவார், தீவாளி லேசான குளிர்காலம் ஆகையால் வெதுவெதுப்பான வெண்ணீர் சுடவைத்து அண்டாவில் கலக்கி வைத்திருப்பார்கள், எண்ணைப் போக சீயக்காய் தேய்த்து குளிப்பாட்டி விடுவார்கள்.

அம்மா உள்ளிட்ட அனைவரும் குளித்த பின்பு, புத்தாடைகளை அணிந்து, விடிய விடிய செய்த அன்றைய பலகாரங்களான சுழியம், மசால்வடை, மெதுவடை, இட்லி, தோசை ஆகியவற்றுடன் முன்பே செய்த முறுக்கு, கெட்டி உருண்டை, சீனி உருண்டை, அதிரசம், சோமாசா உள்ளிட்டவைகளுடன் கொஞ்சம் பட்டாசுகளையும் சேர்த்து சாமி அறையில் வைத்து படைத்துவிட்டு சூடம் கொளுத்தியதும் கும்பிட்டுவிட்டு, அம்மா அப்பா காலில் விழுந்து ஆசி வாங்க வேண்டும், கண்டிப்பாக ஒன்று அல்லது இரண்டு ரூபாய் ஆசியுடன் சேர்ந்தே கிடைக்கும், பிறகு அனைவரையும் வரிசையில் அமரச் செய்து உணவு உண்போம், அக்கம் பக்கம் உறவினர்கள் வீட்டுக்குச் செல்ல அவர்களும் சில்லரைகள் மற்றும் பலகாரங்களைக் கொடுப்பார்கள், எண்ணைப் பலகாரங்களைத் தின்று தின்று மதியம் பசியே எடுக்காது.

பின்னர் நண்பர்கள் (10 - 15 வயது) புடைசூழ திரையரங்கிற்குச் செல்வோம், மதியம் சென்றால் மாலைக்காட்சிக்குத்தான் டிக்கெட் கிடைக்கும், மூன்று மணி நேரம் அடுத்தக் காட்சிக்காக நீள் வரிசையில் நின்றால் தான் அதுவும் கிட்டும், படம் பார்க்க வரும் கிட்டதட்ட 90 விழுக்காட்டினர் புத்தாடை அணிந்திருப்பர். படம் பார்த்துவிட்டு வீட்டுக்கு வந்து எஞ்சிய வெடிகளில் கொஞ்சம் கார்திகை மாத சொக்கப்பானையுடன் வெடிக்க எடுத்து வைத்துவிட்டு மீதத்தை கொளுத்துவோம், அப்படியாக ஆண்டு ஆண்டுக்கு தீபாவளி செல்லும். சின்ன வயசில உடம்புல அறுவாள் மனையா இருக்கும் ? ஒரு ஆண்டுக்கு மேல் எந்த ஆடையும் கிழியாமல் இருந்ததில்லை, ஆனால் என் குழந்தைகளுக்கு சிறியதாகிவிட்டது என்று பயன்படுத்தாமல் விடுப்பதைத் தவிர்த்து எந்த ஆடைகளும் கிழிவதே இல்லை. பள்ளிச் சீருடைத் தவிர்த்து புத்தாடை வாங்கும் பழக்கம் ஏழ்மையான குடும்பங்களுக்கு தீபாவளி அன்று தான் வாய்ப்பே. அப்படித்தான் எங்களுக்கு புத்தாடை கிடைக்கும் என்பதால் தீபாவளி வருகிறதென்றால் மகிழ்ச்சி பொங்கும்.

*****

இன்றும் பழக்க வழக்கங்களாக பண்டிகைகள் தொடரத்தான் செய்கின்றன, இன்றைய தேதிகளில் ஆடை வியாபரங்கள் உள்ளிட்ட தீபாவளி வியாபரங்கள் பெருகி இருக்கும் அளவுக்கு கொண்டாட்டங்கள் பெருகி இருக்கவில்லை என்பதே உண்மை. ஆண்கள் வெள்ளைக்காரன் பேண்டுக்கு மாறிவிட்டு பெண்களை மட்டும் இந்திய ஆடைகளை அணிய பணிக்கிறார்கள், பண்பாடுகளை பெண்கள் மூலம் தான் காக்க முயற்சிக்கிறார்கள் என்ற எண்ணம் என்னிடம் இருந்தது, ஆனால் புடவைகள் மற்றும் பஞ்சாபி சல்வார் உடைகளில் இன்றைய வடிவமைப்பு மற்றும் அதன் விலைகளை வைத்துப் பார்க்கும் போது பெண்கள் இன்னும் ஆடைகளை மாற்றிக் கொள்ளாமல் இருக்க ஆண்களின் கட்டுப்பாடு காரணம் அல்ல, அவற்றின் விலைகளும் அவற்றின் பகட்டுமே காரணம் என்று புரிந்தது, 25 ஆயிரம் மதிப்புள்ள பட்டுப்புடைவுக்கு கிடைக்கும் மதிப்பு என்ன தான் நவீன நவநாகரக விலை உயர்ந்த ஆடை அணிந்திருந்தாலும் கிடைப்பதில்லை என்பதால் தான் பெண்கள் இன்னமும் புடவைக்கும் சல்வாருக்கும் விடைச் சொல்லாமல் இருக்கிறார்கள் என்பது தீபாவளி துணிச்சந்தைகளை வைத்து தெரிந்து கொண்டேன்.

பட்டாசுகளுக்கு மவுசு குறைந்துள்ளதை சென்னையில் என்னால் வெளிப்படையாகப் பார்க்க முடிந்தது, பெரிய அளவு கூட்டமில்லை, விலைகளும் விண்முட்டும் அளவுக்கு இருந்தது, பட்டாசுகளைப் புறக்கணிப்பது நல்லது தான். 'சின்ன சின்ன பிஞ்சு விரல்களாய் தீப்பெட்டிக்குள் தூங்குகிறது தீக்குச்சிகள்' என்று சிறுவர்களை வேலை வாங்கும் தீப்பெட்டித் தொழில் பற்றிய கவிதையை எப்போதோ படித்திருக்கிறேன்,

குழந்தைகளுக்கு தேவையான உடைமைகளை அவ்வப்போது வாங்குவதால் தீபாவளிக்கு வாங்குவது என்பதில் எந்த தனிச்சிறப்போ அவர்களுக்கு எதிர்பார்ப்போ எதுவும் இல்லை, அது ஒரு வழக்கமாகத் தொடர்கிறது அவ்வளவே.

இன்றைய தீபாவளிகள் தீவாளி அல்ல, இன்றைய தீபாவெளிகள் பணப்புழக்கம் ஏற்படுத்த மட்டுமே வழி செய்கிறது, துணி உள்ளிட்ட சந்தைகளின் விற்பனையைப் பெருக்குகிறது. அனால் முந்தைய தீவாளிகளில் கொண்டாட்டங்களும் இருந்தன. பண்டிகைகளை மறந்துவிட்டால் பண்பாட்டை தொலைத்துவிடுவோம் என்கிற அச்சத்தில் தான் தீபாவளிகள் ஒப்பேறி வருகின்றன. சிங்கையில் தீபாவளிக்கு விடுமுறை என்பது இங்குள்ள இந்துக்களுக்கு கிடைத்த வரம் தான். சிங்கையில் குட்டி இந்தியா பகுதிகள் களைகட்டி இருக்கும்.

இராவணனைக் கொன்றது தான் தீபாவளி என்று வட இந்தியாவிலும், நரகாசூரனை கிருஷ்ணன் அழித்தான் என தென்னிந்திய தீபாவளி கதைகளின் நதிமூல ரிஷி மூலங்கள் எதுவாக இருந்தாலும் மக்கள் வாழ்க்கையில் சில மகிழ்ச்சிகளைக் கொடுக்கிறது என்பதில் மாற்றுக் கருத்து இல்லை,அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துகள்,

6 கருத்துகள்:

kaialavuman சொன்னது…

தங்களுக்கும் ”தீவாளி” நல்வாழ்த்துகள்.

suvanappiriyan சொன்னது…

”தீவாளி” நல்வாழ்த்துகள்.

naren சொன்னது…

பள்ளிக்கூடத்தில் தீபாவளிப் பற்றி ஒவ்வொரு வருடமும் தீபாவளிப் நெருங்கும்போது, தீபாவளிப் பற்றி கட்டுரை எழுத சொல்வார்களே, அதை சொல்லவில்லையே??

கோவி.கண்ணன் சொன்னது…

//வேங்கட ஸ்ரீனிவாசன் said...
தங்களுக்கும் ”தீவாளி” நல்வாழ்த்துகள்.//

வாழ்த்துகளுக்கு நன்றி சார், உங்கள் குடும்பத்தினருக்கும் நல்வாழ்த்துகள்

கோவி.கண்ணன் சொன்னது…

//சுவனப்பிரியன் said...
”தீவாளி” நல்வாழ்த்துகள்.//

நன்றி சுவனப்பிரியன்.

கோவி.கண்ணன் சொன்னது…

//naren said...
பள்ளிக்கூடத்தில் தீபாவளிப் பற்றி ஒவ்வொரு வருடமும் தீபாவளிப் நெருங்கும்போது, தீபாவளிப் பற்றி கட்டுரை எழுத சொல்வார்களே, அதை சொல்லவில்லையே??//

:)
தீபாவளிக்கு முறுக்கு சுட்ட எண்ணைய எங்கம்மா எங்க தலையில் தேங்கா எண்ணை போல தேய்த்துவிட உடன்படிப்பவர்கள் கிண்டல் செய்வாங்க. யார் உடை நல்லா இருக்கு என்பதில் பொறாமையே வரும், வகுப்புத் தோழன் அணிந்து வந்த கருநீல ட்ரான்ஸ்பெரண்ட் சட்டை இன்னும் நினைவில் இருக்கு.

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்