சிங்கப்பூரில் பதிமூன்று ஆண்டுகளாக வசிக்கிறேன், இங்கே பெரும்பான்மை சீன இனம் தான், நாட்டின் 70 விழுக்காட்டினர் சீனர்கள், அவர்கள் பேசுவது 'பு-தொங்-க்வா' அல்லது மாண்டரின் எனப்படும் சீன மொழி பொதுவானது என்றாலும் அவர்களுக்குள்ளான வட்டார வழக்குகள் எனப்படும் 'ஹொக்கியன்' மற்றும் 'கான்டனீஸ்' ஆகியவையும் பேசப்படும், ஆனால் அரசு அல்லது பொதுப்பயன்பட்டிற்கும், செய்தித்தாள்களும், தொலைகாட்சிகளும் 'மாண்டரின்' மொழியில் தான் நடத்தப்படுகிறது. சிங்கப்பூரில் சீனம் கற்றுக் கொள்ள வேண்டிய தேவை 10 விழுக்காடு கூட இல்லை, இங்கு குறைந்த எளிதான சொற்களுடன் கூடிய வட்டார ஆங்கிலம் பேசப்பட்டு அதுவே அனைவருக்கும் பொது மொழி ஆகிப்போனதால் மேற்கொண்டு சீனம் படிக்க தேவை என்பது சீனர்கள் தொடர்பில் விற்பனைகள் நடத்தினால் மட்டுமே தேவை என்றாகிறது, வியாபார நிறுவனங்களில் விற்பனைப் பிரிவில் இருப்போருக்கு சீனமொழி தெரிந்திருப்பது தேவையான ஒன்று, காரணம் சிங்கப்பூருக்கு சீனச் சுற்றுலாவாசிகளுடனும், சீன நாட்டினருடன் பேச வேண்டிய தேவையும் இருப்பதால் அவற்றைக் கற்றுக் கொண்டவர்களுக்கு அவ்விதத் தொழில்களில் வாய்ப்புக் கிடைக்கும். என் தொழில் சார்ந்தத் தேவையில் சீனமொழி சார்ப்பு இல்லாததால் கற்றுக் கொள்ள வேண்டிய ஆர்வம் / தூண்டுதல் ஏற்படவில்லை
இந்த ஆண்டு துவக்கத்திலும் நடுவிலும் இருமுறை சீனா சென்ற பொழுது தான், மொழி என்பது ஒரு கண்ணாடித் தடுப்பு அந்தத் தடுப்பை பார்வை ஊடுறுவிச் செல்லும் ஆனால் காது ஊடுறுவாது என்று தெரிந்தது. அதாவது நம்மைச் சுற்றிப் பேசுபவர்கள் இருப்பார்கள் ஆனால் அவர்கள் பேசுவது என்ன என்று நமக்கு எதுவும் புரியாது. நமக்கு புரியாத மொழிப் பேசும் ஊரில் நாம் பேச வாய் இருந்தும் ஊமை தான். அடுத்து வேலைத் தொடர்பில் சீனாவுக்கு செல்வேனோ இல்லையோ கண்டிப்பாக இல்லத்தினருடன் சுற்றுலாவுக்குச் செல்ல முடியும் , பக்கத்துவீட்டு சீனப் பாட்டியிடம் பேசமுடியும், புறம் பேசுபவர்கள் என்னப் பேசுகிறார்கள் என்று அறிந்து கொள்ள முடியும், சீனத் தொலைகாட்சி நிகழ்ச்சிகளைக் காணமுடியும் இத்தேவைகளுக்காக சீனமொழிக் கற்றுக் கொண்டால் என்ன ? என்ற கேள்வியில் அம்மொழி மீது பேரார்வம் எழுந்தது. இருக்கின்ற வேலை, இல்லக் கடமைகள் இதற்கிடையே மொழிப்பாடம் படிக்க நேரம் மற்றும் பணம் செலவு செய்ய மனம் ஒப்பவில்லை. மாற்றுவழி, இணையத்தில் தேட 1000 வெப்தளங்கள் மொழிப்பாடங்கள் எடுத்துவருகின்றன. இருந்தாலும் கணிணி வழியாக எவ்வளவு நேரம் பாடம் படிக்க முடியும் ? ஆப்பிள் ஐபோனில் போட் கேஸ்ட் (PODCasts) MP3 ஒலி வழியாக பாட்டுக் கேட்கப் பயன்படுவது போல் சீன மொழிப் பாடங்களை ஆங்கிலம் வழியாக சீன மொழிச் சொல்லிக் கொடுக்கும் இணைய தளங்கள் கண்ணில் பட்டன, அவற்றில் இலவசமாகக் கிடைப்பதையெல்லாம் தரவிரக்கம் செய்தேன். கிட்டதட்ட 50 மணி நேரங்களுக்கு அவற்றை அலுவலகம் வரும் போது போகும் போது கேட்டு கொஞ்சம் மொழி அடிப்படைகளைக் கற்றுக் கொண்டேன்.
மற்ற மொழிகளைப் போல் எழுத்துகளின் அறிமுகத்துடன் சீன மொழிப்படிப்பது மிகக் கடினம், சிறுவயதில் பள்ளியில் சேர்ந்து படித்தால் அவற்றை உள்வாங்கி ஞாபகத்திறனுடன் மொழி அறிவை ஏற்றிக் கொண்டே செல்ல முடியும், ஆனால் நடுத்தரவயதில் சீன மொழிப் படிக்கும் போது சீன எழுத்துகள் மலைப்பை ஏற்படுத்தும் காரணம் சீன எழுத்துகளின் எண்ணிக்கை 80, 000 ஆனால் அவற்றில் தற்காலத்தில் பயன்படுத்துவதன் எண்ணிக்கை சுமார் 3,000. இந்த 3,000 எழுத்துகளை மனனம் செய்து படிப்பது என்பது மிகக் கடினம். மற்ற மொழிகளைப் போல் அல்லாமல் சீன மொழிகளுக்கு சொல் அல்லது எழுத்து ஒலிப்பில் ஐந்து வகைகள் உண்டு அவற்றை ஹை டோன் (High Tone - High Frequency Tone), ரைஸிங் டோன்(Rising Tone), பாலிங்க் ரைசிங்க் டோன்(Falling Rising Tone), பாலிங்க் டோன் (falling Tone) மற்றும் நியூட்ரல் டோன் (Neutral Tone) என்பர். உதாரணத்திற்கு நம் தமிழில் குறில் நெடில் என்ற இரண்டே உண்டு, ம (குறில்) - மா (நெடில்) ஆங்கிலத்திலும் குறில் நெடில் என்ற வகைகள் இல்லாவிட்டாலும் சொற்களுக்கு ஏற்ற ஒலிப்பை பெற முடியும் என்பது அதன் இலக்கணம், ஆனால் சீன மொழியில் ம்ம, ம்மா, ம்ஆஆஅ, ம (mma, mmaa,maaha, ma) போன்ற நான்கு ஒலிப்புகளுக்கான சொற்களும் அதன் பொருளும் வேறு வேறனாது.
பிற மொழிக்காரர்கள் சீன மொழிப்படிப்பதில் இருக்கும் சிக்கலே அதன் ஒலிப்பு முறைகள் தான், அதில் இருக்கும் ஏற்ற இறக்கங்களை சரியாக உள்வாங்கி புரிந்து கொள்வது கடினம் தான், இருந்தாலும் சீன மொழி 'Contextual Language' (தொடர்புடைய நிகழ்வுக்கேற்ற பொருள் கொண்ட பேச்சுகள்) என்பதால் நிகழ்வுகளுக்கு ஏற்றச் சொற்கள் என்ற முறையில் துவக்க காலங்களில் படிக்கும் போது அவற்றை ஓரளவும் புரிந்து கொள்ள முடியும். அவன், அவள் என்பதற்கு 'Ta' என்ற ஒரே ஒலிப்பைத்தான் பயன்படுத்துவார்கள், ஆனால் அவற்றை எழுத்தாக எழுதும் போது அவன் மற்றும் அவள் வேறு வேறு எழுத்துகளைக் கொண்டதாக இருக்கும். பிற மொழிகளின் இலக்கணத்திற்கும் சீன மொழி இலக்கணத்திற்கும் பெருத்த வேறுபாடுகள் உண்டு, குறிப்பாக காலம் காட்டும் வினைச் சொற்களை அவர்கள் பயன்படுத்துவதில்லை, அதற்கு மாற்றாக 'லெ' என்ற ஒலிப்பில் முடிப்பார்கள், அப்படி முடியும் வரிகள் நடந்து முடிந்தது பற்றிப் பேசப்படுகிறது என்று விளங்கிக் கொள்ளப்படும், மேலும் நாள், நேரம், முன், பின் ஆகியவைகள் அவ்வரிகளில் இருப்பதால் பேசப்படும் காலம் அவற்றை வைத்து புரிந்து கொள்ளப்படும், 'வந்தான், வருவான், வருகிறான்' என்று விகுதியை மாற்றி நாம் அதன் நடப்பு வினை காலம் புரிந்து கொள்வது போலின்றி நேற்று அல்லது இன்று காலை வரும் அவன்' என்பதாக அவர்கள் மொழிகளிலில் காலம் சேர்த்தே எழுதப்படும் பேசப்படும்.
சீனமொழியும் பழங்கால மொழிகளில் ஒன்று மேலும் அது செம்மொழி தகுதி பெற்ற ஒன்று, அதாவது வேர் சொற்கள் நிறைந்த மொழி, எந்த ஒரு வேற்று மொழிப் பெயரையும் அவர்களுடைய மொழியில் உள்ள சொற்களைச் சேர்த்து அமைத்து பயன்படுத்திக் கொள்வார்கள், diàn nǎo - இதன் பொருள் மின்சார(ம்) மூளை இது கணிணி என்னும் பொருளில் விளங்கிக் கொள்ளப்படுகிறது. மின்சாரம் தொடர்புடைய பொருள்களைக் குறிக்கும் வகையில் அவற்றின் முன்பு diàn என்ற ஒலிப்பில் வரும் சீனச் சொல் இருக்கும்.
மொழி மாற்றமே செய்ய வழியில்லாத பொழுது சீனச் சொற்களில் குறிப்பிட்ட ஒலியை கிட்டதட்ட ஒத்துவரும் அளவிற்கான சொற்களை எடுத்து புதிய சொற்களை அமைத்துக் கொள்வார்கள் உதாரணத்திற்கு 'கொ-கொ-கோலா' இவற்றை சீன மொழியில் 'க்லா' என்றும் 'சாக்லேட்' 'சா-க-லே' என்றும் எழுதப்பட்டு சொல்லப்படும்.
பேசுவதற்கு கற்றுக் கொள்வதுடன் படிக்கவும் சீன மொழி எழுத்துகளைக் கற்றுக் கொள்வதில் மற்றொரு சிக்கல், என்னவென்றால் சீன மொழி எழுத்துவடிவத்தில் இரண்டு வகை உண்டு, சீனா, சிங்கப்பூர், மலேசியாவில் 'பு-தொங்-வா' எனப்படும் பொதுவடிவமும், தைவான் நாட்டில் பாரம்பரிய எழுத்து முறையான 'ட்ரெடிசனல் மாண்டரின்' எழுத்துகளும் பயன்படுத்தப்படுகிறது, அவற்றினிடையே மிகப்பெரிய வேறுபாடுகள் உண்டு, பொதுவடிவத்தின் எழுத்துகளில் குறைவான கோடுகள் உண்டு, பாரம்பரிய வடிவத்தில் அவற்றின் எண்ணிக்கை வடிவம் ஆகியவை முற்றிலும் மாறுபட்டது, என்றாலும் 75 விழுக்காடு எழுத்துகள் இரண்டிற்கும் பொதுவானது தான். பொதுவடிவம் மட்டுமே படிக்கத் தெரிந்தவர்களால் கடந்த 30 ஆண்டுகளில் எழுதப்பட்டதை மட்டுமே படிக்க இயலும். சீன மொழி மற்றும் கலாச்சாரம் பற்றி ஆழ்ந்து படிக்க பாரம்பரிய எழுத்துகளை தெரிந்து கொள்வது மிக மிகத் தேவையான ஒன்று.
சீன மொழிக்கு சீன மொழியில் மொழிப்பெயர் 'சுங் வென்(中文)'. அதாவது 'Zhong Qo' (சுங் கோ') என்றால் மைய அல்லது நடு(சுங்) நாடு(கோ) என்ற பொருளில் சீனர்கள் தங்கள் சீன நாட்டிற்கு சுங்-கோ (நடு நாடு) என்று பெயர் வைத்திருக்கிறார்கள், அந்த 'சுங்' மற்றும் மொழி எனப்பொருள் படும் 'Wen' (வென்) சேர்த்து 'சுங் வென்' என்றால் சீன மொழி. பிற நாடுகளில் பு-தொங்-க்வா அதாவது பொதுப் பயன்பாட்டிற்கானது என்ற பொருளில் வரும். 'இந்தியா' என்று அப்படியே எழுத சீனச் சொற்கள் இல்லையாதலால் 'யின்- து (Yin-dhu) என்றே இந்தியாவின் தொடர்புள்ளவற்றில் யின்- து சேர்த்துச் சொல்வார்கள், உதாரணத்திற்கு 'யி-ந்து ரென்' என்றால் இந்தியர் என்று பொருள். அது போலவே பிற நாடுகளையும் அந்நாட்டினரையும் குறிக்கும் சொற்கள் இருக்கும். முற்றிலும் அதன் ஆங்கில ஒலிப்புடன் கூட தொடர்பில்லாத வகையில் கூட சில நாடுகளின் பெயர்கள் உண்டு, அவற்றை சீனர்கள் மட்டுமே புரிந்து கொள்வார்கள். நாம தென் ஆப்பிரிக்கா என்று எழுதினால் அதன்பொருள் சவுத் ஆப்ரிக்கா தானே, அதே போல் அமீரகம் என்று நாம் வழங்குவது பிறமொழிக்காரகளுக்கு புரியாது, தென் அமெரிக்காவில் இருக்கும், ஆப்ரிக்கா பொதுவான பேசும் போது புரியும் ஆனால் அதன் முன்பு உள்ள 'தென்' ஒலி என்னவென்று நமக்குத் தெரியும் பிற மொழிக்காரர்களுக்குத் தெரியாது அல்லவா, அது போன்று தான் நாடுகளின் பெயர்கள், ஊர்கள் பெயர்கள் ஆகியவற்றை சீனர்கள் தங்கள் மொழிக்கு ஏற்ற அளவில் மாற்றித்தான் பொருள் கொள்கிறார்கள்.
இதுவரை நான் கற்ற அளவில் 50 எழுத்துக்களின் வடிவம் மனனம் ஆகி இருக்கிறது, 300 சொற்களின் ஒலிகளைப் புரிந்து கொள்ள முடியும், அதை வைத்து என்னைப்பற்றிய அறிமுகம் கொடுத்து அடிப்படையான தகவல்களான 'பேருந்து எங்கே செல்கிறது, இப்ப என்ன மணி ?, இந்த சாலையில் பெயர்' போன்ற எளிமையான கேள்விகளையோ பதில்களையோ கேட்டு பெற முடியும், குறிப்பாக யாராவது சீனர் தவறான எண்ணைச் சுழற்றி அழைத்தால் அவருக்கு சீன மொழியிலேயே 'நீங்கள் தவறான் எண்ணைச் சுழற்றியிருக்கிறீர்கள் என்று கூற முடியும்', சுற்றுலா செல்லத் தேவையான அளவுக்கு தகவல்களை சீன மொழியில் கேட்டுப் பெற முடியும். வெட்டிப் பொழுதுகளை குறைத்துக் கொண்டால் சீன மொழி அறிவை கூட்டிக் கொள்ள முடியும் என்று நம்புகிறேன்
நான் அறிந்த அளவில் சீன மொழிக்கும் தமிழுக்கும் பொதுவான சொல் 'நீ' அதாவது நீங்கள் என்பதன் ஒருமை, அவர்களின் நீஈ என்று ஏற்ற இறக்கமாக இருக்கும், மற்றொரு சொல் மல்லி (பூ வகை) அவர்கள் சற்று திரிந்தது போல் ம-லி என்பார்கள், இன்னும் ஏராளமான சொற்கள் பொதுவாக இருக்கலாம் என்று நினைக்கிறேன், ஆழ்ந்து செல்கையில் அவற்றை அடையாளம் கானமுடியும் என்று நினைக்கிறேன். இன்னும் ஆறுமாத காலங்களுக்குள் படிக்கவும் கற்றுக் கொள்ள நினைத்துக் கொண்டிருக்கிறேன், எனக்கு தெரிந்து நேரடியாக சீன - தமிழ் அகராதி இதுவரை யாரும் எழுதியதில்லை, மலாய் மொழி - தமிழ் மொழிக்கு எழுதி இருக்கிறார்கள். ஏன் சீன மொழிக்கு முயற்சி மேற்கொள்ளவில்லை என்பதன் காரணமாக நான் நினைப்பது, தமிழ் ஆர்வம் மற்றும் பிற மொழி ஆர்வம் கொண்டவர்கள் சீன மொழி கற்றுக் கொண்டிருந்தாலும் அவற்றை பொருத்தி அகராதி நூலாக எழுதும் ஆற்றல் பெற்றிருக்கவில்லையோ என்று நினைக்கிறேன்.
எனக்கு பிற மொழிகளில் ஆங்கிலம், கன்னடம், பேசவும், தெலுங்கு மலையாளம் ஹிந்தியை புரிந்து கொள்ளமுடியும், இந்திய மொழிகளை கற்றுக் கொள்ள உண்மையான ஆர்வம் இருந்தால் கற்றுக்கொள்ளும் காலம் என்பது மூன்று மாதத்திற்கும் குறைவே. சீனமொழிக்கு குறைந்தது ஓர் ஆண்டாவது ஆகலாம் ஏனெனில் சீன மொழி இந்திய மொழிகளுக்கு முற்றிலும் தொடர்பற்ற மொழி மேலும் அவர்களின் ஒலிப்பை நாம் அடையாளம் கண்டு பொருள் உணர்ந்து கொள்வது மனம் ஒன்றிய நல்ல பயிற்சியினால் மட்டுமே முடியும்.
****
சீன மொழியை சீனர்கள் மற்றும் பிற மொழிப் பேசுபவர்களுக்கு கற்றுக் கொடுக்கும் ஒரு மலையாளி பற்றி அடுத்து எழுதுகிறேன். என்னை வியப்படைய வைத்தவர்களில் அம்மலையாளியும் ஒருவர்
பின்பற்றுபவர்கள்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
மதமும் மார்க்கமும் !
எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"
இறைவன் - மதம்
இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !
-கோவியார்
16 கருத்துகள்:
விரிவான நல்ல பகிர்வு.
கஞ்சி - Kanji
Cheers
www.coinsgallery.net
//கஞ்சி - Kanji //
கஞ்சி ஜப்பான் பயன்படுத்தும் சீன எழுத்து முறை ஆச்சே.
:)
//ராமலக்ஷ்மி said...
விரிவான நல்ல பகிர்வு.//
மிக்க நன்றி இராம லக்ஷ்மி
xie xie ni
// Dharan said...
xie xie ni//
Méi wèntí.
:)
விரிவான அறிமுகம். சீனப் பெயர்கள் குறைந்தது 2 எழுத்துடன் பலதைப் பார்த்துள்ளேன். இந்த ஒலி வேறுபாட்டின் வசதியோ?
அடுத்து சீனர் மூக்கால் பேசுவதுபோல் ஒலிப்பதன் காரணம் என்ன? குறைந்த தொனியுடன் வரும் சொற்கள்
மூக்கால் பேசுவதுப்போல் எமக்குக் கேட்கிறதா?
அமெரிக்கர் ஆங்கிலத்தை மூக்கால் பேசுவது வேறு, அது வேண்டுமென்றே வேறுபாடுகாட்டப் பேசுவது போல்
தான் உள்ளது.
//யோகன் பாரிஸ்(Johan-Paris) said...
விரிவான அறிமுகம். சீனப் பெயர்கள் குறைந்தது 2 எழுத்துடன் பலதைப் பார்த்துள்ளேன். இந்த ஒலி வேறுபாட்டின் வசதியோ?
அடுத்து சீனர் மூக்கால் பேசுவதுபோல் ஒலிப்பதன் காரணம் என்ன? குறைந்த தொனியுடன் வரும் சொற்கள்
மூக்கால் பேசுவதுப்போல் எமக்குக் கேட்கிறதா?
அமெரிக்கர் ஆங்கிலத்தை மூக்கால் பேசுவது வேறு, அது வேண்டுமென்றே வேறுபாடுகாட்டப் பேசுவது போல்
தான் உள்ளது.//
யோகன் அண்ணன்,
சீன எழுத்துகள் என்பவை சீனச் சொற்களின் குறியீடுகள், அவற்றை எழுத்து என்று சொல்லாமல் குறியீடு (Not a letter, it is a Character) என்கிறார்கள். ஒன்று முதல் நான்கு சொற்கள் சேர்ந்து ஒரு பொருளைக் குறிக்கும். குளிர் நாடுகளில் முக்குத் துளை அளவு, தொண்டை(குரல்) ஆகியவை அவர்களின் சூழ்நிலைக்கேற்றவாறு மாறி இருக்கும் என்பதால் அவர்களின் மொழிகளில் அதற்கு ஏற்றச் சொற்களை / ஒலிகளை அமைத்திருப்பார்கள்.
சிங்கப்பூர் சீனர்கள் 'R' நன்றாக ஒலிப்பார்கள், ஆனால் சீனச் சீனர்களால் 'ஆற' அடிநாக்கால் உச்சரிப்பார்கள்.
கான் என்ற சொல்லும் காண் தமிழ் ஒரே அர்த்தம்தான்! என்னால் அடிப்படை சீன மொழியை பேச முடியும்! சீனாவில் இருந்தபோது நன்றாக இருந்தது. இப்ப யாராவது பேசி கேட்டால்தான் recollect செய்ய முடிகிறது!
//ராஜரத்தினம் said...
கான் என்ற சொல்லும் காண் தமிழ் ஒரே அர்த்தம்தான்! என்னால் அடிப்படை சீன மொழியை பேச முடியும்! சீனாவில் இருந்தபோது நன்றாக இருந்தது. இப்ப யாராவது பேசி கேட்டால்தான் recollect செய்ய முடிகிறது!//
நீங்கள் சொல்வது சரி, கன் அல்லது கண் கன் என்பார்கள், அதன் பொருள் 'பார்' என்பதாகும், நம்முடைய தமிழ் காண் என்பதற்கு நெருக்கமாக வரும். 'கன் ஸ்சு' 'பார் புத்தகம் அதாவது (புத்தகம்) படித்தல் அல்லது படித்தல்
சீன மொழி கத்துக்கறதுக்கே இத்தனை பாடா இருந்துச்சுன்னா, அந்த மொழியில மத்த பாடங்களை எப்படித்தான் கத்துக்குவாங்களோ?
அவசியம் பல்லவி அய்யர் எழுதிய சீனா திரை விலகும் நேரம் படித்துப் பாருங்க. ஒரு நாட்டின் சமூக வாழ்வை எப்படி எழுதியிருக்கிறார் என்று இன்றும் வியந்து கொண்டே பல முறை படித்துக் கொண்டே இருக்கின்றேன்.
உச்சரிப்பு என்பது கூட கவனமாக கையாள வேண்டிய மொழி சீன மொழி.
நன்றி. ஆனால் 30 ஒலி தரவுகள் தான் உள்ளன. நீங்கள் 120 என குறிப்பிட்டுள்ளீர்கள். மற்றவற்றை எப்படி பெறுவது என விளக்க முடியுமா?
//நன்றி. ஆனால் 30 ஒலி தரவுகள் தான் உள்ளன. நீங்கள் 120 என குறிப்பிட்டுள்ளீர்கள். மற்றவற்றை எப்படி பெறுவது என விளக்க முடியுமா?//
உறுப்பினராக சேர்ந்தால் 450 பாடங்கள் தருவார்கள், கூடவே விளக்க பிடிஎப் - களும் கிடைக்கும்
நன்றி
//Prakasam Prasanna said...
நன்றி//
உங்கள் மின் அஞ்சலை பின்னூட்டத்தில் அனுப்புங்கள், அதை வெளியிடாமல் அந்த மின் அஞ்சலுக்கு வேறு சில பாடாங்களின் இணைப்புத் அனுப்பி வைக்கிறேன்
//
கருத்துரையிடுக