பின்பற்றுபவர்கள்
18 டிசம்பர், 2011
மம்பட்டியான் !
அப்பன் நடித்த ஒரு படத்தை மகன் நடித்து அதை அப்பனே இயக்கிய படமாக பிரசாந்த் நடிக்க தியாகராஜன் இயக்கிய மம்பட்டியான் படம் பார்க்க இந்த வாரத் தனிமை தூண்டியது. திரையரங்கிற்குச் சென்றேன் மொத்தமே 40 பேருக்கும் குறைவாக அதுவும் 35 - 45 வயதினராக இருந்தனர். அறிவிக்கப்பட்ட படி (செடியூல்) சிங்கையில் ஒற்றை ஆளுக்கு கூட படம் ஓட்டுவார்கள்.
வெற்றி அடைந்த பழையப் படங்களை தூசித் தட்டி இன்றைய வடிவங்களுடன் எடுத்தப் படங்கள் வெற்றியடைந்துள்ளன, குறிப்பாக பில்லா, பில்லா படத்தின் கதையை திரும்ப எடுக்கும் போது அடிப்படைக் கதைகள் கடத்தல் அதில் ஆள் மாறாட்டம், அவை இன்றும் நடப்பவை என்பதால் கதை ஓட்டத்தில் இன்றைய உத்திகளை நுழைத்து (பழைய படத்தில் நாள்குறிப்பேடு, இன்றைய பென் ட்ரைவ்) வெற்றிகரமாக எடுத்திருந்தனர், கூடவே இன்றைய நடிகைகளின் கவர்ச்சியும் அதன் ஏற்ற இரக்கம் அந்தப்படத்தின் வெற்றியை மேலும் கூட்டி இருந்தது.
மம்பட்டியான் அன்றைக்கு எடுத்தாலும் இன்றைக்கு எடுத்தாலும் அவை நடைபெற்ற காலத்தையும் காட்ட வேண்டிய கட்டாயத்தில் இன்றைய உத்திகள் என்று எதையும் காட்டிவிட முடியாது என்பது இந்த மறு உருவாக்கப்படத்தின் பின்னடைவு, நடிகர்களும் கதைக் கள படப்பிடிப்பு இடங்களும் மாறி இருக்கிறதன்றி புதிதாக பார்த்து ரசிக்க ஒன்றும் இல்லை.
பழைய பதிப்பான மலையூர் மம்பட்டியான் படத்தில் தியாகராஜன், சரிதா, கவுண்டமணி, ஜெயமாலினி, செந்தில் மற்றும் சங்கிலி முருகன் தவிர்த்து வேறு யார் நடித்திருந்தார்கள் என்பது நினைவுக்கு வரவில்லை.
******
நீண்ட நாளுக்கு பிறகு பிரசாந்த் நடித்த படத்தை (பொன்னர் சங்கர் இதுவரை பார்க்கவில்லை) பார்த்தேன், உடலை ஏற்றி இருக்கிறார், படம் முழுவதும் முண்டா பணியனில் உடல் ஏற்றத்தைக் காட்டுகிறார், திமிரும் சண்டைக்காட்சிகள் ஏசு நாதர் போன்று வளர்த்த முடி மற்றும் தாடி படத்தின் பாத்திரத்திற்கேற்ற இறுக்கத்தைக் கொண்டுவரவில்லை., இரவு பத்துமணிக்கு மேலான காட்சியாக அமைப்பட்டதில் கூட மீரா ஜாஸ்மின் புதிய பூவைப் போல் முழு ஒப்பனையுடன் இருந்தார், கிராமத்து அப்பாவி மற்றும் சீற வேண்டிய நேரத்தில் சீறும் பெண்ணாக பழைய படத்தில் சரிதா மிகச் சிறப்பாக செய்திருப்பார், அதில் சரிதா பேசிய அதே வசனங்கள் மீரா ஜாஸ்மினுக்கும் அப்படியே வைத்திருக்கிறார்கள், ஆட்டக்காரியாக வரும் முமைத்கான் ஜெயமாலினியைத் தாண்டி கவர்ச்சி காட்டியுள்ளார், பழையப் படத்தில் ஜெயமாலினி பாத்திரம் கவர்ச்சியைத் தாண்டி மனதைவிட்டு அகலாத ஒன்றாக அவரது நடிப்பு இருக்கும், முமைத்கான் வேகாத இரைச்சிக் கோழித்துண்டைப் போல் (உடையில் மட்டும்) அரைகுறையாக இருந்தது.
வடிவேலு கவுண்டமனி செய்த மைனர் பாத்திரத்தை செய்திருக்கிறார், எத்தனை திறமையான ஒரு நகைச்சுவை நடிகரை அரசியல் பேராசைக்காரர்கள் தன்னலத்தினால் பயன்படுத்தியும் புறக்கணித்தும் முடக்கிப் போட்டுள்ளனர் என்று நினைக்க வைத்திருந்தார், 40 பேர் படம் பார்த்தாலும் 25 பேர் வடிவேலுவின் அறிமுகக் காட்சியில் விசில் அடித்தனர், பிரகாஷ்ராஜ் இன்ஸ்பெக்டர் வேடம், தனக்கு கொடுக்கப்பட்ட காட்சிகள் அமைப்புகளுக்கு இந்த அளவுக்கு மேல் செய்ய ஒன்றுமில்லை என்ற அளைவில் தான் வந்து போகிறார். போலி மம்பட்டியானாக பழைய படத்தில் நடித்த சங்கிலி முருகனுக்கு மாற்றாக இதில் ரியாஸ்கான், உடல் தோற்றம் தவிர்த்து சங்கில் பாத்திரத்தின் பயமுறுத்தலை இவரும் ஒழுங்காகக் கொண்டுவரவில்லை பொருத்தமாகவும் இல்லை.
'கருப்பண்ண சாமி வரான்' பாட்டை இன்னும் கொஞ்சம் துள்ளல் இசையாக்கி இருக்கலாம் புது இசையமைப்பாளர் (தமன்) சரியாகச் செய்யவில்லை, இளையராஜவின் பழைய பாடல்கள் ரீமிக்ஸ் கேட்கும் படி இருந்தது ஆறுதல் குறிப்பாக சின்னப் பொண்ணு சேலை (இளையராஜா. சார்........என்ன டியூன்யா அது .சே மனுசன் கொண்ணுட்டார்)
மலை கிராமம் மற்றும் அதன் சூழல், மலைக்காடுகள் குளிர்ச்சியான அழகான படப்பிடிப்பு, கடைசி கட்ட துரத்தல் சண்டைக்காட்சிகள் அசத்தல்.
******
நல்ல கதை அம்சங்களுடன் வரும் புதிய இயக்குனர்கள் வெற்றியடை ஏற்கனவே அறிமுகமாகமான திறமையான முகங்கள் நடிகராக போட்டால் எளிதான வெற்றியை அடைந்துவிட முடியும் விக்ரமன் லிங்குசாமி ஆகியோர் அப்படித்தான் வெற்றிகரமான இயக்குனர்களாக உருவானார்கள், பிரசாந்த் புதிய இயக்குனர்களுக்கு வாய்ப்பளித்து தன்னை மீண்டும் நிலை நிறுத்திக்கொள்ளலாம். மணிரத்தினம் ஷங்கர் படத்தில் நடித்திருந்தாலும் கூட மினிமம் கேரண்டி நடிகர் என்னும் சிறப்பைப் பெற இவரால் முடியவில்லை, ஒருவேளை தனிப்பட்ட (மண) வாழ்க்கையின் தோல்விகூட அதற்கான அவரது முயற்சியை தடை செய்திருக்கலாம். நல்ல உடல் தோற்றம், சண்டை, நடனம் அனைத்தும் தெரிந்து நல்ல நடிகர் ஒருவரை விட்டுவிட்டு 10 கோடி 20 கோடி என்று சில நடிகர்களுக்கு கட்டிவிட்டு கால்சீட்டுகளுக்கு காத்திருப்போர் பிரசாந்த் போன்றவர்களை புறக்கணிக்காமல் வாய்ப்பளித்தால் தமிழ் சினிமாவின் தோல்விகளின் எண்ணிக்கை குறையலாம், ரசிகர்களுக்கும் நல்ல படங்கள் கிடைக்கலாம்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
மதமும் மார்க்கமும் !
எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"
இறைவன் - மதம்
இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !
-கோவியார்
7 கருத்துகள்:
பிரசாந்தின் மண வாழ்க்கை திரை வாழ்க்கை இரண்டையும் பார்க்கும் விதியை நம்பத்தான் வேண்டியிருக்கு.
\\நீண்ட நாளுக்கு பிறகு பிரசாந்த் நடித்த படத்தை (பொன்னர் சங்கர் இதுவரை பார்க்கவில்லை) பார்த்தேன்,//
பிரசாந்த் படம் பார்க்கலையா? இல்லையென்றால் படமே பார்க்கலையா? தமனை அறிமுக இசையமைப்பாளர் என்று சொல்லி இருக்கீர்கள். தமன் ஏற்கனவே பல படம் இசையமைத்து விட்டார்.
//பிரசாந்த் படம் பார்க்கலையா? இல்லையென்றால் படமே பார்க்கலையா? தமனை அறிமுக இசையமைப்பாளர் என்று சொல்லி இருக்கீர்கள். தமன் ஏற்கனவே பல படம் இசையமைத்து விட்டார்.//
இதற்கு முந்தைய பிரசாந்த் படம் பார்க்கவில்லை, தமன் அறிமுக இசை அமைப்பாளர் என்பதற்கு பதில் புதிய இசையமைப்பாளர் என்று வாசிக்கவும். சுட்டியதற்கு நன்றி
//ஜோதிஜி திருப்பூர் said...
பிரசாந்தின் மண வாழ்க்கை திரை வாழ்க்கை இரண்டையும் பார்க்கும் விதியை நம்பத்தான் வேண்டியிருக்கு.//
திரைப்பட நடிகர்கள் ஏகப்பட்ட செண்டிமெண்ட் பார்த்தாலும் அவர்களுக்கு பொதுமக்கள் போன்ற சறுக்கல் உண்டு என்பதை அவர்கள் உணர்வது இல்லையே
நல்ல அலசல். பழைய பிரசாந்த் எனக்குப் பிடிக்கும். ஹரியின் 'தமிழ்' படத்தில் நன்றாக நடித்திருப்பார். கண்ணெதிரே தோன்றினாள் செமையாக இருக்கும். தியாகராஜனிடமிருந்து அவருக்கு சரியான வழிகாட்டுதல் கிடைக்கவில்லை எனக் கருதுகிறேன்.
//ரிஷி said...
நல்ல அலசல். பழைய பிரசாந்த் எனக்குப் பிடிக்கும். ஹரியின் 'தமிழ்' படத்தில் நன்றாக நடித்திருப்பார். கண்ணெதிரே தோன்றினாள் செமையாக இருக்கும். தியாகராஜனிடமிருந்து அவருக்கு சரியான வழிகாட்டுதல் கிடைக்கவில்லை எனக் கருதுகிறேன்.//
தியாகராஜனைவிட நடிப்பு அனுபவம் மற்றும் நிறைய படங்களில் நடித்தவர் பிரசாந்த், தியாகராஜனின் வழிகாட்டுதல் தேவையற்ற ஒன்று, இவராகவே முனைந்து செயல்பட முடியும்
//தியாகராஜனைவிட நடிப்பு அனுபவம் மற்றும் நிறைய படங்களில் நடித்தவர் பிரசாந்த், தியாகராஜனின் வழிகாட்டுதல் தேவையற்ற ஒன்று, இவராகவே முனைந்து செயல்பட முடியும்//
உண்மைதான். ஆனால் ஏன் தியாகராஜன் பிரசாந்தை நிழல் போலத் தொடர்கிறார் என்பதுதான் புரியவில்லை. சிம்புவை தனியே விட்டுவிட்டு எப்படி டி.ஆர் எட்ட நின்று பார்த்து மகிழ்கிறாரோ அது போல ஏன் இவர் இல்லை என்பதே கேள்வி. பிற தயாரிப்பாளர்களின் படங்களையும் பிரசாந்த் தேர்ந்தெடுப்பதில் தியாகராஜனின் தலையீடு இருப்பதாகவே கருதுகிறேன். இது ஒரு 'வழிகாட்டல்' என்பதாக தியாகராஜன் கருதினால், அது தவறான வழிகாட்டலாக அமைந்திருக்கிறது என்று கூறுகிறேன்.
கருத்துரையிடுக