பின்பற்றுபவர்கள்

28 செப்டம்பர், 2011

வலைப்பதிவு நண்பர் ஸ்வாமி ஓம்கார் !

வலையுலகையில் நான் கண்ட வரையில் என் கருத்துகளுக்கு மாற்றுக் கருத்து கொண்டோர் தான் என்னிடம் நல்ல நெருக்கம் வைத்துள்ளனர், மதிப்பும் அன்பும் வைத்துள்ளனர். மனித மனம் ஆன்மீகம், மதம், நாத்திகம் இவற்றையெல்லாம் தாண்டி நல்ல மனிதர்களையே நாடுகிறது என்பதை என் நட்புகளால் நான் அறிந்துள்ளேன், எந்த ஒருவரின் தனியான கொள்கைகள், நம்பிக்கைகள் புதிய நட்புகளுக்கு தடைவிதிப்பது இல்லை.ஒரே குடும்பத்தில் பல்வேறு கட்சியின் உறுப்பினர்கள் இருப்பதால் அவர்களுக்குள் சகோதரச் சண்டைகள் வந்துவிடுமா என்ன ?

அமாவாசைக்கும் அப்துல்காதருக்கும் இருக்கும் தொடர்பு தான் எனக்கும் ஸ்வாமி ஓம்காருக்கும், அமாவாசைக்கு அடுத்த மூன்றாம் நாள் பிறை வந்துவிடும் அதனால் அப்துல்காதருக்கும் அமாவாசைக்கும் மறைமுகத் தொடர்பு உண்டு. ரொம்ப மொக்கையா இருக்கா ? ஸ்வாமி ஓம்காரின் பதிவுகள் தற்பொழுது தமிழ்மணத்தில் திரட்டப்படுவதில்லை, ஜோதிடம் மற்றும் ஆன்மீகம் தொடர்பில் சொந்த 'பிஸ்னஸ்' ஆக எழுதுகிறார் என்ற குற்றச் சாட்டில் அவரது வலைப் பதிவை தமிழ்மணம் தடை செய்திருக்கிறதாம். தமிழ்மணத்தில் இணைத்திருக்கும் நிறையப் பதிவர்கள் சுய விளம்பரத்திற்கும், பதிவுகளில் விளம்பரங்களை வெளியிட்டும் பலன் தேடிவரும் போது ஓம்கார் அந்த அளவுக்கெல்லாம் எதுவும் செய்யவில்லை. தமிழ்மணம் கட்டண சேவையில் முகப்பில் அவரது வலைதளத்தை இணைப்பதற்கான விவரம் கேட்டிருந்தாராம், தமிழ்மணம் 'ஆஹா கமர்சியல் வலைத்தளம்' என்று கண்டு கொண்டு முடக்கிவிட்டார்கள். தமிழ்மணம் திரட்டியின் வழியாக நிறைய நண்பர்களைப் பெற்று இருக்கிறேன், எனவே தமிழ்மணத்தின் திடிர் நடவடிக்கை எனக்கு வருத்தம் அளிக்கவில்லை என்று கூறினார்.

தான் தேர்ந்தெடுத்துள்ள சாமியார் வாழ்க்கையில் மந்திரம் தந்திரம் செய்து மக்களை ஏமாற்றிப் பிழைக்காமல் 'போஜனத்திற்காக' விரும்புவோருக்கு மட்டும் ஜோதிடம் சொல்லி வருகிறார், ஜோதிட, தியான, யோகா வகுப்புகளை நடத்துகிறார். இதை அவர் செய்யவில்லை என்றால் 'ஸ்வஸ்தப்படுத்தும்' வேலை செய்து பெரும் பொருளீட்டி கார்ப்ரேட் சாமியார் அந்தஸ்தை அடைந்திருப்பார், தன்னைத் தேடிவரும் பினாமி வாய்ப்புகளையெல்லாம் புறக்கணித்துவிட்டு சாமியார் தொழிலின் இலக்கணமே தெரியாமல் சாமியார் ஆகிவிட்டாரே என்கிற பரிதாபம் தான் என்னை அவர் பக்கம் ஈர்த்தது. எனக்கும் அவருக்கும் கொள்கை ரீதியாக உடன்பாடு இல்லை, 'மரம் சீடியை படிக்கும்', 'அஹம் பிரம்மாஸ்மி' போன்ற அவரது கூற்றுகளை நான் ஏற்றுக் கொள்வதும் இல்லை. ஒரு சாமியாரிடம் நான் எதிர்பார்காதவைத் தவிர்த்து அவரிடம் தமிழ் பற்றும், அதனைப் பற்றிய திருமூலரின் திருமந்திரம் உள்ளிட்டவைகளில் அவரது ஈடுபாடு எனக்கும் அவருக்குமான நட்பிற்கான இணைப்பாக இருந்தது. என்னைப் பொருத்த அளவில் தமிழை முன்னிறுத்தும் ஆன்மிகவாது நாத்திகமாவது இரண்டுமே போற்றத் தக்கவை தான். அதில் எனக்கு எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. அறிஞர் அண்ணாவின் பேச்சுகளில் கட்டுண்டு போவது போலவே சுகி.சிவம் உள்ளிட்டோரின் பேச்சுகளிலும் ஈர்க்கப்பட்டிருப்பேன். இவற்றையெல்லாம் விட மனித நேயம் தெரிந்தவர் எந்த இனம், மொழி, மதம் என்றாலும் கூட நம்மை ஈர்த்துவிடுவர் என்பது தானே உண்மை ? ஸ்வாமி ஓம்கார் அடிப்படையில் மனித நேயம் மிக்கவராகவும் இருந்தார், முதல் முறை சந்தித்த போதே தான் அன்றாடம் அருந்தும் ஆப்பிள் ஜூஸை எனக்கும் கொடுத்தார் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன் :)

சிங்கைக்கு ஸ்வாமி ஓம்கார் வருவது இது இரண்டாம் முறை, முதல் முறை பயணத்தின் போது 'தினம் தினம் திருமந்திரம்' என்ற தலைப்பில் சிங்கை வடபத்திர காளியம்மன் கோயிலில் ஒரு மணி நேரம் உரை நிகழ்த்தினார், போதிய விளம்பரமின்மை, நிகழ்ச்சிக்கு பெரிய அளவில் 'ரெகமண்டேசன்' இல்லாத நிலையிலும் கூட குறிப்பிட்ட அளவினர் கலந்து கொண்டனர், அதில் பதிவர்களும் பலர். சிங்கப்பூருக்கு ஸ்வாமி ஓம்கார் அறிமுகம் என்பதைவிட ஸ்வாமி ஓம்காருக்கு சிங்கப்பூர் அறிமுகம் என்ற அளவில் தான் நடந்தது, அதன் பிறகு ஒன்னரை ஆண்டுகள் கழித்து மீண்டும் சிங்கப்பூர் வந்தார்,
சிங்கப்பூர் இலக்கியம் மட்டும் ஆன்மீக வட்டப் பெரியோர்களான திரு வரதராஜன் மற்றும் திரு கே ஆர் குமார் ஐயா ஏற்பாட்டில் குயின்ஸ்வே ஞான முனீஸ்வரன் கோயிலில் சென்ற 17 செப் 2011 'அன்றாட வாழ்வில் திருமந்திரம்' என்ற தலைப்பில் ஸ்வாமி ஓம்கார் சொற்பொழிவு நடந்தது, 100க்கும் அதிமானோர் கலந்து கொண்டனர், சிங்கையில் 50 பேருக்கு மேல் வருவதே அரிது, ஏனெனில் வார இறுதியில் தான் தமிழ் நிகழ்ச்சிகளை பலரும் நடத்துவர், ஒரே நாளில் பல நிகழ்ச்சிகள் நடக்கும், எனவே ஒரே இடத்தில் நகரின் மையப்பகுதியைத் தள்ளி வெளியே நடக்கும் ஒரு நிகழ்ச்சிக்கு 100 பேர் என்பது நிறைவான கூட்டம் என்றே சொல்லலாம். ஏற்பாட்டாளர்களுக்கு இந்தக் கூட்டம் மகிழ்ச்சியைக் கொடுத்தது. கூட்டம் இடையில் எழுந்து செல்லாத அளவுக்கு ஓம்காரின் பேச்சுகளிலும் கோர்வை இருந்தது.


அதன் பின்னர் மலேசியா ஈப்போ சென்று இருவேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார், அந்நிகழ்ச்சிகளை மலேசியாவில் இருக்கும் ஜவஹர் அண்ணன் பார்த்துக் கொண்டார், அங்கும் ஓம்காரின் நிகழ்ச்சிகளுக்கு நல்ல வரவேற்ப்புக் கிடைத்ததாம். பின்னர் சென்ற சனிக்கிழமை சிங்கை தேங்க் சாலை தெண்டாயுதபாணி' கோயிலில் 'திருமந்திரம் என்னும் அருமந்திரம்' என்ற உரை நிகழ்த்தினார். வேறு சில பணிகளால் நான் அதற்குச் செல்லவில்லை. இந்த நிகழ்ச்சிகளின் மூலம் அவருக்கும் நல்லோர் பலருக்கும் அறிமுகம் கிடைத்திருக்கிறது

இந்நிகழ்ச்சிகளுக்கு இடையே எங்கள் வீட்டிற்கும் வந்து சென்றார். இன்று சிங்கையில் இருந்து திருச்சிக்கு விமானத்தில் சென்று பின்னர் தொடர் வண்டியில் கோவை செல்கிறார். அவருக்கு அறிமுகமானவர்களிடையே என்னை 'நண்பர்' என்று தான் சொல்லி அறிமுகம் செய்து வைத்தார். நானும் அவரிடம் ஒரு சாமியாரிடம் பழகுவது போல் பவ்யம் எதுவும் காட்டாமல் இயல்பாகவே பழகிவருகிறேன்.

(உடன் இருப்பவர் பதிவர் வெற்றிக்கதிரவன்)

10 கருத்துகள்:

-/பெயரிலி. சொன்னது…

பதிவர் கோவி.கண்ணன்,
நெடுங்காலமாகத் தமிழ்மணத்திலே இணைந்திருந்து அதன் வளர்ச்சியிலே அக்கறை கொண்டுள்ள பதிவரென்பதாலே, உங்களுக்கு இங்கே என்னாலான விளக்கம்.

ஒரு வாரத்துக்குமுன்னாலே அப்பதிவினை நான் "விரும்பினால், பணம் சார்ந்த பிரிவிலே சேருங்கள்" என மாற்றினேன். அவரின் வலைப்பதிவிலே உள்ள கருத்துகளிலே எனக்கேதும் பதிவென்ற அளவிலே சிக்கலில்லை. ஆனால், கடந்த ஆண்டிலே பார்த்தீர்களென்றால், ஜோதிடம், ஜாதி, மதம், கட்சி, வணிகம் சார்ந்த பதிவுகளை இப்படியாகவே ஒதுக்கிவைக்கவேண்டிய நிலையிலே தமிழ்மணம் இருப்பதைக் கண்டிருப்பீர்கள். ஸ்வாமி ஓம்காரின் பதிவு நெடுங்காலமாகத் தமிழ்மணத்திலே இருந்த ஒன்றென்பது உண்மை. அதுபோலவேயிருந்த வேறு சில (சகல நிறுவனமயப்பட்)ட மதம் சார்ந்த பதிவுகளும் தனிப்பட ஒதுக்கப்படவேண்டிய நிலை. இன்னமும் இருக்கக்கூடிய அப்படியான சில பதிவுகளையும் விரைவிலே குறிப்பிட்ட வகையின்கீழே போட வேண்டிவரும். ஓம்காரின் பதிவு நிதானமான, கருத்தான பதிவாகவே இருக்கக்கூடும்.. ஆயினும், மதம் சார்ந்து வரும் பல பதிவுகள் கொண்டிருக்கும் உள்ளடக்கங்களும் தொனியும் தமிழ்மணத்தின் நோக்கிற்குத் தீங்கானவையாகவே தோன்றியதாலே மதம்/ஜாதி/ஜோதிடப்பதிவுகளை முற்றாகவே ஒதுக்கவேண்டிருந்தது.

புரிதலுக்கு நன்றி.

-/பெயரிலி. சொன்னது…

/தமிழ்மணம் கட்டண சேவையில் முகப்பில் அவரது வலைதளத்தை இணைப்பதற்கான விவரம் கேட்டிருந்தாராம், தமிழ்மணம் 'ஆஹா கமர்சியல் வலைத்தளம்' என்று கண்டு கொண்டு முடக்கிவிட்டார்கள்/

என்றகூற்றிலே பதிவினை முடக்கியவன் என்றளவிலே என்பக்கத்திலே எத்துணை உண்மையுமில்லை. அவர் கட்டணசேவையிலே கேட்டிருப்பதை நான் அறியேன். தமிழ்மணம் நிர்வாகிகளுக்கான அஞ்சல்களைத் தொடர்ந்து நான் பார்ப்பதில்லை. சேர்ப்பது, வகை பிரித்து விலக்குவது போன்ற செயற்பாடுகளிலே மட்டுமே கவனம் கொண்டிருப்பதாலே, சிலவேளைகளிலே இவரது அஞ்சல் என் பார்வையிலிருந்து தவறிப்போயிருக்கலாம்.

காகம் இருக்கப் பனம்பழம் விழுந்த கதையாகவே தெரிகின்றது.

கோவி.கண்ணன் சொன்னது…

//-/பெயரிலி. said...
பதிவர் கோவி.கண்ணன்,
நெடுங்காலமாகத் தமிழ்மணத்திலே இணைந்திருந்து அதன் வளர்ச்சியிலே அக்கறை கொண்டுள்ள பதிவரென்பதாலே, உங்களுக்கு இங்கே என்னாலான விளக்கம்.//

மிக்க நன்றி பெயரிலி சார்.
நான் குற்றச் சாட்டாக அந்த தகவலைப் பதியவில்லை, பிறப் பதிவர்கள் அறிந்து கொள்ள, அவரது பதிவுகள் திரட்டப்படுவதில்லை எனும் 'வெறும் தகவலுக்கா'கத்தான் பதிந்தேன்.

விவாதக்களங்களாக, தகவல்களாக, கட்டுரைகளாக இல்லாமல் 'வெறும் கொள்கை சார்ந்து, மதம் சார்ந்து' மற்றும் கட் & பேஸ்டுகளாக இயங்கும் பிற பதிவர்களின் பதிவுகளுக்கும் உங்கள் தடைகளை விரிவு படுத்துவீர்கள் என்றே நம்புகிறேன்.

கோவி.கண்ணன் சொன்னது…

//என்றகூற்றிலே பதிவினை முடக்கியவன் என்றளவிலே என்பக்கத்திலே எத்துணை உண்மையுமில்லை. அவர் கட்டணசேவையிலே கேட்டிருப்பதை நான் அறியேன்//

அவர் கட்டண சேவை விவரம் கேட்டிருந்ததாக என்னிடம் சொன்னார், ஆனால் அந்தக்காரணத்தினால் முடக்கிவிட்டார்கள் என்று அவர் கூறவில்லை, அது காரணமாக இருக்கலாம் என்று நான் தான் ஊகித்தேன். மற்றபடி காக்கை உட்கார பனம் பழம் விழுந்தக் கதையாக நீங்கள் முடக்கியதற்கும் கட்டண சேவை விவரம் கேட்டதற்கும் முடிச்சு விழுந்ததிருக்கிறது என்பது உங்கள் விளக்கத்திற்கு பிறகே தெரிகிறது, நன்றி பெயரிலி சார்.

-/பெயரிலி. சொன்னது…

/விவாதக்களங்களாக, தகவல்களாக, கட்டுரைகளாக இல்லாமல் 'வெறும் கொள்கை சார்ந்து, மதம் சார்ந்து' மற்றும் கட் & பேஸ்டுகளாக இயங்கும் பிற பதிவர்களின் பதிவுகளுக்கும் உங்கள் தடைகளை விரிவு படுத்துவீர்கள் என்றே நம்புகிறேன்./

அப்படித்தான் நடக்கின்றது. நிறையப் பதிவுகள் சேர்க்கவே படாமலே போவதாலே பதிவர்கள் அறியவே வாய்ப்பில்லை; சேர்க்கப்படாதவர்களாலே திட்டு வாங்கும் தமிழ்மணம் நடத்துனர்கள் மட்டுமே அறிய அரிய வாய்ப்பு ;-)

ஏற்கனவே இருப்பவற்றிலும், வெட்டி ஒட்டும் பதிவுகளாகக் கண்டுகொள்ளப்படுகின்றவையும் விலக்கப்படுகின்றன. ஆரம்பத்திலே ஓரிரு பதிவுகள் சொந்தமாகப் போடுவதாலே, சேர்த்துக்கொள்ள, பின்னாலே "வெட்டு&ஒட்டு", "நில், கவனி, ஓட்டுப்போடு" பதிவுகளைக் கண்காணிப்பதற்கு உலக உளவுநிறுவனங்கள் அனைத்தும் சேர்ந்தாலும்போதாது.

கே.ஆர்.பி.செந்தில் சொன்னது…

எதிர்கருத்துகளைக்கூட சிரித்தபடி எதிர்கொள்ளும் அவரின் பக்குவம் நான் வியக்கும் ஒன்று.

குறும்பன் சொன்னது…

//என்னைப் பொருத்த அளவில் தமிழை முன்னிறுத்தும் ஆன்மிகவாது நாத்திகமாவது இரண்டுமே போற்றத் தக்கவை தான். // அவர் திருமந்திரம் குறித்து அதிகம் பேசுகிறார் அதிகம் விளக்கம் தெரிந்து வைத்துள்ளார் என்பது உண்மை, ஆனால் அவருக்கு தமிழ் மேல் பெரிய பற்று இல்லை. அவருக்கு வடமொழி மேல் பெரிய பற்று இருக்குன்னு சொன்னா அது உண்மை, அது தவறல்ல. ஆனால் தமிழ் மேல் பெரிய பற்று என்ற உங்கள் கூற்று உண்மையல்ல. அண்ணாவுக்கு இராமாயணம் நன்றாக தெரியும் என்பதால் அவரை வைணவ பற்று உடையவர் என்று சொல்வதை போல் இது உள்ளது.

கோவி.கண்ணன் சொன்னது…

//அவர் திருமந்திரம் குறித்து அதிகம் பேசுகிறார் அதிகம் விளக்கம் தெரிந்து வைத்துள்ளார் என்பது உண்மை, ஆனால் அவருக்கு தமிழ் மேல் பெரிய பற்று இல்லை. அவருக்கு வடமொழி மேல் பெரிய பற்று இருக்குன்னு சொன்னா அது உண்மை, அது தவறல்ல. ஆனால் தமிழ் மேல் பெரிய பற்று என்ற உங்கள் கூற்று உண்மையல்ல. அண்ணாவுக்கு இராமாயணம் நன்றாக தெரியும் என்பதால் அவரை வைணவ பற்று உடையவர் என்று சொல்வதை போல் இது உள்ளது.//

நான் வடமொழி இலக்கியங்களை விரும்புவதில்லை, அவர் ஆன்மிகக்திற்காக அவற்றை நாடவேண்டிய தேவை இருக்கிறது, அதை வைத்து அவர் தமிழை பற்றிக் கொள்ளவில்லை என்று சொல்ல முடியாது, வலைப்பதிவில் மற்றொரு நண்பர் கூட தமிழும் சமஸ்கிரதமும் எனது இரு கண்கள் என்பார், அவரது தமிழ்பற்றை நான் குறைத்து மதிப்பிடவில்லை.

அண்ணாவுக்கு இராமயாணம் மட்டுமல்ல, திருமுறைகளும் நன்கு தெரியும் அதனால் தான் திருமூலர் எடுத்துச் சொன்ன 'ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்' என்பதை தனது கொள்கையாக ஆக்கிக்கொண்டு அந்தச் சொல்லைப் பரப்பினார். அண்ணா எந்த அளவுக்கு நாத்திகன் என்று நீங்கள் நம்புகிறீர்களோ, அவர் எழுதியவைகளைப் படித்ததை வைத்து நானும் அவரனந்த அளவுக்கு ஆத்திகராக இருக்கக் கூடும் என்றே நம்புகிறேன். அண்ணாவின் கொள்கைகளில் நாத்திகம் பின் தள்ளி பார்பனியமும், மதவாதம், மூட நம்பிக்கை எதிர்ப்பு முன்னிலைப்படுத்தப்பட்டது என்பது என் எண்ணம்

கோவி.கண்ணன் சொன்னது…

//கே.ஆர்.பி.செந்தில் said...
எதிர்கருத்துகளைக்கூட சிரித்தபடி எதிர்கொள்ளும் அவரின் பக்குவம் நான் வியக்கும் ஒன்று.//

கருத்துக்கு மிக்க நன்றி செந்தில்

வால்பையன் சொன்னது…

பழைய பதிவானாலும் புதிய பின்னூட்டம்

ஓம்கார்(இயற்பெயர் தெரியவில்லை)

பழகின வரையில் நல்ல மனிதனாக இருக்கிறார், நான் எப்போதும் சொல்வேன் கருத்து வேறு நட்பு வேறு என்று. ஆன்மீகம் குறித்து நான் விவாதிக்க அழைத்த போது நேரில் வேண்டாமே என்றது எனக்கு பிடித்திருந்தது!

ஓம்காரை ஓம்காராக நான் நண்பராக ஏற்றுகொள்கிறேன்

சுவாமி ஓம்காராக என்னால் முடியவே முடியாது. அப்புறம் அவருக்கு எனக்கு பதில் சொல்லியே காலம் போகிடும்!

:)

ஓம்காரின் புற்றுநோய் குறித்தான விழிப்புணர்வு வகுப்பிற்கு எனது தளத்தில் விளம்பரம் கூட கொடுத்திருந்தேன். மனித நேயமுள்ளவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் என் நண்பர்களே!

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்