பின்பற்றுபவர்கள்

21 மார்ச், 2011

சீனத்துப் பட்டுமேனி !

வெளிநாடு என்றதும் அந்த ஊர் மண் பச்சைக் நிறத்தில் இருக்குமோன்னு பேரார்வம் எழுவதும், அங்கு போய் பார்த்தப் பிறகு தான், அதுவும் நம்ம ஊர் மண் போல் தான் இருக்கு, என்ன வேறுபாடு மக்கள் பண்பாடு, நாகரீகத்தில் சிறிது மாற்றம் இருக்கும், மற்றபடி வெளிநாட்டினர் வாயினால் தான் கை உதவியுடன் நம்மைப் போல் தான் உணவு உட்கொள்கிறார்கள் என்பதையும், அவர்கள் உணவுப் பொருள்களில் வகையும் சுவையும் மாறுபடுகிறது என்பதையும் அறியலாம்.

*****

அலுவல் தொடர்பில் சீன நாட்டின் ஷாங்காய் நகருக்கும் அதன் தொடர்ச்சியாக அமைந்திருக்கும் சூச்சூவ் (Suzhou) தொழில் நகருக்கும் சென்று வரும் வாய்ப்புக் கிடைத்தது. சூச்சூவ் பட்டுக்கு பெயர் பெற்ற நகரம், பட்டு உற்பத்தியில் செய்யப்பட்ட ஆடைகளுக்கு தனிப்பட்ட கடைகள் உண்டு. பட்டுமேனியாக இருந்த சூச்சூவ் தற்பொழுது பரந்து விரிந்த தொழில் நகரமாகவும், சுற்றுலாத்தலமாகவும் மாறிக் கொண்டு இருக்கிறது. சீனா என்ற சுவடு எழுத்திலும், உணவிலும் தெரிவிதத்தைத் தவிர்த்து சூச்சூவ் நகர் முழுக்க முழுக்க ஐரோப்பிய நகரிய வடிவமைப்பை ஆடையாக அணிந்து கொண்டு காட்சி அளிக்கிறது. ஐரோப்பிய நாடுகளைப் போலவே குளிரான தட்பவெப்ப சூழல் அமையப் பெற்றிருக்கிறது. சுறுக்கமாகச் சொல்லப் போனால் சூச்சூவ் என்பது சீனாவில் அமைந்துள்ள ஐரோப்பிய நகர்.

சீனாவின் விசா நடைமுறைகள் எளிது தான். சுற்றுபயணத்திற்கான விசா பெருவது எளிது, மூன்று திங்கள் வங்கிக் கணக்கு புழக்கம் குறித்தப் பட்டியலுடன், விண்ணப்பத்தை நிரப்பி, விடுதியில் முன்பதிவு செய்த தகவல்களைக் கொடுத்தால் ஒரு முறை சென்று வருவதற்கான நுழைவு அனுமதி கொடுக்கிறார்கள். 30 நாட்கள் வரையில் தங்களாம்,. நான் சென்று வந்தது பிஸ்னஸ் விசா எனப்படும் தொழில்முறை பயணத்திற்கான விசா. செய்தியாளர்களுக்கான தனியான விசா நடைமுறைகளும் உண்டு, எனவே செய்தியாளராகச் சென்றால் அந்த விசாவில் தான் செல்லமுடியும், கண்காணிப்பு இருக்கும், மற்ற விசாக்களில் சென்று செய்திகள் திரட்டினால் சீனச் சிறை கண்டிப்பாக உண்டு, சீனா தங்களைப் பற்றியத் தகவல்கள் குறிப்பிட்ட முன் அனுமதியின்றி செல்வதை விரும்பவதில்லை. அதற்காகவே விசா நடைமுறைகளில் கடுமையைக் கடைபிடிக்கிறது. சீன நாணயம் ஒரு சிங்கப்பூர் வெள்ளிக்கு 5 யுவான் (ரெமிங்பி) அல்லது ஏழு இந்திய ரூபாய்க்கு ஒரு யுவான் என்ற அளவில் இன்றைய நிலவரம் உள்ளது.

நானும் எனது மற்ற இரு சீன நண்பர்களும் சிங்கை - ஷாங்காய் அலுவல் தொடர்பான விமானப் பயணத்தில் ஷாங்காய் நகரில் இறங்கும் போது மாலை 4 மணி ஆகி இருந்தது. சூச்சூவ் நகருக்கான விமான நிலையம் தனியாக இல்லை எனவே சூச்சூவ் செல்பவர்கள் ஷாங்காய் சென்று அதன் பிறகு அங்கிருந்து சூச்சூவ் செல்ல முடியும். எங்களை அழைத்துச் செல்ல எங்கள் நிறுவனத்தின் சிற்றுந்து முன்னேற்பாட்டின்படி அங்கு வந்திருந்தது. அன்று ஞாயிறு ஆகையால் அலுவல் எதுவும் இல்லை. எனவே ஷாங்காய் நகரை சுற்றிப் பார்த்துவிட்டுச் செல்லலாம் என்று நகருக்குள் நுழைந்தோம். மிகவும் நெருக்கமான நகர், மக்கள் தொகையும் மிகுதி என்றாலும் சிறுவீடுகள் எதையும் பார்க்க முடியவில்லை, நகர் முழுக்க சிறிய பெரிய கட்டிடங்களால் நிரம்பி வழிந்தது. சென்னையைப் போலவே ஷாங்காய் திட்டமிடாமல் எழுந்த நகரம். எனவே நேரான சாலைகள் எல்லாம் நகருக்கு வெளியே தான். இருந்தும் நகரின் ஊடாக உயரமான பாலங்களைப் போல் (ப்ளைஓவர்) சாலைகள் வளைந்து செல்கின்றன. சாலைக்கு மிக அருகில் வீடுகள் இருப்பதால் சாலைகளின் போக்குவரத்து இரைச்சல் வீட்டில் உள்ளவர்களை தொந்தரவு செய்யாமல் இருக்க சாலையில் இருபுறமும் கண்ணாடி தடுப்புகளை அமைத்து இரைச்சல் (Noise Pollution) சாலையைக் கடந்து செல்வதைத் தடுத்து வைத்திருக்கின்றனர். இது போன்ற கண்ணாடி தடுப்புகளுடன் ஆன சாலைகளை சீனாவில் மட்டும் தான் பார்த்தேன்.

ஷாங்காய் நகரின் மையத்தில் ஒரு ஆற்றை ஒட்டி அமைந்திருக்கிறது அதன் வானுயர்ந்த கட்டிடங்கள். இரவில் பார்க ஒளிசிந்தும், மின்னும் வண்ண மின் விளக்குகள் அந்த இடமே செயற்கையும் அழகுதான் என்பதாக காட்சிப்படுத்தி இருந்தது. வங்கிகள் மற்றும் பணப் பரிமாற்றம் தொடர்பான நிறுவனங்கள் அந்தக் கட்டிடங்களில் செயல்படுகின்றனர். அந்தப் பகுதி சிங்கப்பூர் ராபிள் ப்ளேஸ் அமைப்பை நினைவுபடுத்தியது. அதன் அருகேயே ஐரோப்பிய நாடுகளின் கட்டிட வடிவமைப்பிலான கட்டிடங்களும் நிறைய இருந்தன. அந்தப் பகுதியில் நிற்கும் போது ஏதோ ஒரு ஐரோப்பிய நாட்டில் இருப்பது போனற உணர்வைக் கொடுத்தது, கூடவே நடுங்க வைக்கும் 6 டிகிரி குளிர் மற்றும் முகத்தில் அறையும் காற்று, அதை மேலும் வலுப்படுத்தியது. அங்கு ஒரு 30 நிமிடங்கள் இருந்துவிட்டு அடுத்து உணவுத் தேடலுக்காக சிற்றுந்தில் சென்றோம். நகர் முழுவதும் ஐரோப்பிய வணிக நிறுவனங்களின் கடைகள் இருந்தன. சீனத்தயாரிப்புகளான சீனக் கடைகள் மிகவும் குறைவு (That means it is hard to find Chinese product stores in china)

சீனாவுக்கு செல்லும் ஐரோப்பியர், ஆப்ரிக்கர் மற்றும் சீனர் தவிர்த்து பிற இனத்தார் குறிப்பாக இந்தியர் மற்றும் எந்த இஸ்லாமியர் ஆனாலும் உணவு மிகவும் அறைகூவலான ஒன்று, அசைவ உணவுப் பிரியர்கள் சமாளிக்க முடியும், சைவர்களுக்கு உணவு மிகவும் கடினம், இஸ்லாமிய உணவான ஹலல் அதைவிடக் கடினம். நான் முன்கூட்டிய சப்பாத்தி, இட்லி மற்றும் உடனடி அரிசி நூ(டு)ல்(ஸ்) (சீனாவுக்கே நூடுல்ஸ்!) கொண்டு சென்றிருந்தேன். என்னுடன் வந்திருந்த சீனர்களுக்கு அங்கிருக்கும் உணவு பொருட்ட அல்ல என்றாலும் அவர்களுடைய சுவையும், உணவுக் கூட்டும் (இன்கிரியண்ட்) வேறுபட்டது என்பதால் தேர்ந்தெடுத்த ஒரு சில உணவுகளை நாடுகிறார்கள். அன்று மதியம் விமானத்தில் கொடுக்கப்பட்ட உணவு எனக்கு போதுமானதாக இருந்ததால் மெக்டோனல்ட் போன்ற ஒரு கடையில் உருளைத் துண்டுகள் (ப்ரஞ்ச் ப்ரைஸ்) மற்றும் சோயா பாலுடன் உணவை முடித்துக் கொண்டேன்.
(Shanghai - Suzhou Huning Exp. way)
இரவு உணவை முடித்த பிறகு சூச்சூவ் நோக்கி இரவு 8:20 வாக்கில் அலுவலக ஊர்தியிலேயே சென்றோம், ஷாங்காயிலிருந்து சுமார் 100 கிமி தொலைவில் அமைந்திருக்கிறது சூச்சூவ் , ஷாங்காயிலிருந்து சூச்சூவ் - விற்கு அதிவிரைவு தொடர்வண்டி (புல்லெட் ட்ரெயின்) சேவைகள் உண்டு 20 நிமிடங்களில் அடைகிறது. ஷாங்காய் - சூச்சூவ் 100 கிமி தொலைவு என்றாலும் அது ஒரு தொடர்ச்சியாகத்தான் இருக்கிறது, அதாவது இருநகரங்களுக்கும் இடையே தொடர்சியாக வீடுகளும் தொழில் கூடங்கள், கட்டிடஙகள் வழிநெடுகிலும் உண்டு, ஷாங்காய் - நான்ஜிங் அதிவிரைவு பெருஞ்சாலையின் வழியில் ஷாங்காயின் துணை நகரமாக சூச்சூவ் அமைந்திருக்கிறது (கூகுள் வரைபடத்தில் தெளிவாகப் பார்க்கலாம்). சென்றடையும் போது இரவு 9:20 ஆகி இருந்தது.120 கிமி வேகத்தில் (நான்கு வாகனங்கள் வழித்தடத்துடன்) செல்லும் அளவுக்கு சாலையின் நீளமும் அகலமும் அமைந்திருந்தது. சீனா என்றதும் மக்கள் நெருக்கம் அமையப் பெற்ற இந்தியாவைப் போன்ற இன்னொரு நாடு என்கிற நினைப்பை முற்றிலும் மாற்றி இருந்தது சாலைகளும், கட்டிடங்களும், தட்பவெப்பமும் என்றால் மிகையல்ல.

*****

சூச்சூவ் நகரில் ஷாங்காயைப் போல் வின்முட்டும் கட்டிடங்கள் ஓரு சில இருந்தன, இன்னும் ஐந்தாண்டுகளில் 100க் கணக்கான உயரக்கட்டிடங்கள் எழுவதற்கான கட்டுமானங்கள் நடந்துவருகின்றன. சுமார் 100 கிமி பரப்பளவில் நிறைய தொழில் பூங்காக்கள், பலமாடிகளுடன் அமைந்த தொகுப்பு வீடுகள், நேரான சாலைகள், நூற்றுகணக்கான மேம்பால சாலைகள், மருத்துவமனைகள், நட்சத்திரவிடுதிகள், விளையாட்டு மைதானங்கள், அழகிய ஏரிகள், அதனை ஒட்டிய பூங்காக்கள், தொகுப்புக் கடைகள் (மால்)காட்சிக் கூடங்கள், அறிவியல் மையங்கள், கடைத் தெருக்கள் நிறைந்து காணப்படுகின்றன. மேற்சொன்னது போல் பெயர் பலகைகளில் சீன எழுத்துக்கள் தவிர்த்து அந்த நகரை சீனாவின் ஒரு பகுதி என்று நம்புவது கடினம் போல் முற்றிலும் ஐரோப்பிய நாடுகளின் நகரைப் போன்றே இருந்தது. கேபிள் தொலைகாட்சி சேவையில் 100க் கணக்கான சீன சானல்கள், அதில் ஒன்றில் அனுபம்கெர் மாண்ட்ரினில் பேசும் நெடுந்தொடர் ஓடியது (டப்பிங் என்றே நினைக்கிறேன்)

குப்பைகளை யாரும் வீசி எறிவதில்லை, தூய்மைக்கு சிங்கப்பூரைப் போன்றே சூச்சூவ் நகரும் எடுத்துகாட்டாக உள்ளது. புகைச்சலான வாகனங்கள் எதையும் பார்க்க முடியவில்லை. இரவில் ஒரு சில பிச்சைக்காரர்கள் தொண்படுகிறார்கள், மற்றபடி அந்த நகரின் உள் அமைப்புப்படி ஏழைகள் வசிக்க வாய்ப்பே இல்லை என்பதால் பணக்காரக் களையுடன் காட்சி அளிக்கிறது நகர். முற்றிலும் பணக்காரத் தன்மை இருந்தால் அங்கு பணத்தை இரைத்து நகரை ஒழுங்குபடித்தி வைத்திருக்க முடிகிறது என்றே நினைக்கிறேன். நகருக்கு வெளியே 15 கிமி தொலைவே நெருக்கமான வீடுகள் அமைந்த கிராமங்கள் காணப்படுகின்றன, அங்கிருந்து துப்புறவு தொழிலாளர்கள் சூச்சூவ் நகருக்கு வந்து செல்கிறார்கள். சீனாவில் எந்த நகரிலும் எனக்கு தெரிந்து ஒரே ஒரு அருவெறுப்பான காட்சி கழிவரையில் துடைக்கும் தாளை கழிவரையனுள் ஒரு குப்பை கூடை வைத்து அதனுள் போடுகிறார்கள். மற்ற நாடுகளில் கழிவுடன் துடைக்கும் தாளை போட்டு தண்ணீர் திறந்துவிடுவது தான் வழக்கம்,. இவர்கள் அதை தனியாக சேகரித்து என்ன செய்கிறார்கள் ? மறுப்பயனீடா ? சீனத் தயாரிப்புகளில் தாளில் செய்யப்பட்ட பொருள்களை வாங்கலாமா என்றெல்லாம் யோசனை வந்தது. நான் அதுபற்றி விவரம் கேட்டபோது யாருக்கும் அதற்கான காரணம் தெளிவாகத் தெரியவில்லை. சீனாவில் வெஸ்டர்ன் டாய்லெட் அறிமுகம் இல்லாத காலங்களில் கழிவை பொட்டலம் கட்டுவதன் வழக்கமாக இந்தப் பழக்கம் தொடர்ந்து இருக்க வேண்டும் என்று சொல்லுகிறார்கள். பயன்படுத்தப்பட்ட ஆணுறைகள் மறுபயனீடாக வேறுறொரு பொருளின் தயாரிபில் இருந்தது அண்மையில் தெரிய வந்து சர்சைக்குள்ளானது. நேற்று ஒரு பதிவில் சிறுவர்களின் சிறுநீரில் அவித்த முட்டை சீனாவில் விரும்பி உண்ணுகிறார்கள் என்ற செய்தியையும் படித்தேன். இவையெல்லாம் சீனாவில் சில அருவெறுப்பான நடைமுறைகள் தொடர்கின்றன என்பதற்கு சான்றாக உள்ளன. மற்றபடி தொழில்வளத்திலும், உள் கட்டமைப்பிலும் வியத்தகு வளர்ச்சி கண்டுள்ளது. அதனை எட்டிப்பிடிக்க இந்தியாவிற்கு 20 ஆண்டுகள் கூட ஆகலாம்.





உலகின் எந்த நாட்டில் வசிக்கும் சீனர்கள் அவர்களின் மொழிப் பிரிவில் எதை தாய்மொழியாகக் கொண்டிருந்தாலும் அனைவரும் அறிந்த மொழியாக மாண்டரின் மொழி அவர்களிடையே பேசப்படுகிறது, பயிற்றுவிக்கப்படுகிறது. சீனாவின் ஒவ்வொரு மாகானத்திலும் தனித்தனி தாய்மொழி இருந்தாலும் அவர்களுக்கான பொது மொழி மாண்டரின். சூச்சூவ் என்பது கூட அதன் மொழிப் பிரிவின் பெயர் தான். எந்த ஒரு சீனரும் எந்த ஒரு பிறப் பகுதி சீனருடன் உரையாட மாண்டரின் பயன்படுத்துகிறார்கள். சீனாவின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு இந்த பொது மொழி பயன்படுகிறது, அலுவலக மொழியாகவும் மாண்டரின் பயன்படுத்துகிறார்கள். சீனாவில் ஆங்கிலம் தெரிந்தவர்கள் மிகவும் குறைவு. எங்களது சீன அலுவலகத்தில் ஆங்கிலம் தெரிந்தவர்களே இல்லை. 99 விழுக்காட்டினர் சீனாவில் ஆங்கில அறிவு அற்றவர்களாக உள்ளனர். ஆனால் சாலைகளின் பெயர்கள் மற்றும் பிற தகவல் பலகைகள் ஆங்கிலத்திலும் எழுதப்படுகிறது. அந்த வகையில் ஆங்கிலம் தெரிந்தவர்கள் சீனாவினுள் சென்று வர வாய்ப்பு ஏற்படுத்தித் தரப்படுள்ளது. மாண்ட்ரின் மொழி சொம்மொழி மற்றும் இலக்கிய வளம் நிறைந்த மொழி என்பதால் அவர்களால் அதை சீனர்களுக்குள் பொதுப்படுத்திக் கொள்ள முடிந்தது.

நம் இந்தியாவில் இந்தியை அவ்வாறு கொண்டு வர முயற்சித்து தோல்வியில் முடிந்தது, காரணம் இந்தியில் இலக்கிய வளமோ, செம்மொழி தகுதிகள் எதுவுமே இல்லாத ஒரு வளர்ச்சியடையாத மொழி (ட்ரைபல் லாங்குவேஜ், இந்தி அபிமானிகள் மன்னிக்க), குறிப்பாகச் சொல்லவேண்டுமென்றால் தொடர்பு மொழி என்பதைத் தவிர்த்து சீனர்களுக்கு ஆங்கிலத்தின் பயன் குறைவு. ஏனெனில் அனைத்து வகையான படிப்புகளையும் சீன மொழியிலேயே அவர்களால் படித்துவிடும் அளவுக்கு அவர்களின் மொழியில் இலக்கிய வளம் உண்டு. இந்தியாவில் ஒரு காலத்தில் சமஸ்கிரதம் பொது மொழி என்ற தகுதியுடன் வளைய வந்தது. வேதம் படிப்பவனை நக்கை அறு மூக்கை அறு என்று மனுவா(ந்)திகள் மொழி ஆளுமையை கையில் எடுத்ததும், பிறரால் சமஸ்கிரதம் புறக்கணிக்கப்பட்டது. என்னைக் கேட்டால் ஆங்கிலம் இந்தியாவிற்கான பொதுமொழிக்கான அனைத்துத் தகுதிகளையும் கொண்டது என்பேன். ஆங்கிலம் பொதுமொழியானால் இந்தியர்களுக்கு அது உலக நாடுகளுடன் ஆன தொடர்பிற்கும், தொழில் வளர்த்திற்கும் எல்லாவிதத்திலும் பயனளிக்கும், இந்தியா சீனாவிற்கு கடுக்காய் கொடுக்க ஆங்கில அறிவே முதன்மையாக உள்ளது. இந்தியாவின் மொழிதான் இந்தியாவின் பொதுமொழிக்கான தகுதி பெற்றதாக அமையமுடியும் என்ற கூற்றை நான் வெகுவாகவே எதிர்கிறேன். ஏனெனில் இந்தியாவில் இந்தி நுழைந்ததற்கும் ஆங்கிலம் நுழைந்ததற்கும் ஒரு சில நூற்றாண்டுகளே வேறுபாடு என்பதை எவரும் மறுக்க முடியாது.





(Jinjihu - Lake)
சூச்சூவ் நகருக்குச் செல்வோர் அங்கிருக்கும் அழகிய ஏரிகளை தவிர்க்கக் கூடாது. "ஜின்ஜிஹு" என்ற பெயருடன் அழகிய ஏரி நகரின் நீர் தேவைகளை நிறைவு செய்வதுடன், வார இறுதியின் பொழுது போக்கிடத்தின் ஒன்றாகவும் அமைந்திருக்கிறது. "hu" என்றால் ஏரியாம், அப்படி என்றால் அந்த ஏரியின் பெயர் "ஜின்ஜி" அதே போன்று சாலைகளின் பெயர்களுடன் "லு" அமைந்திருக்கிறது, லு என்றால் சாலை. முகமன் கூற "நீ ஹாவ்" என்கிறார்கள் அதாவது அதன் பொருள் "நீங்கள் நலமா ?" அதற்கு விடையாக "ஹாவ்" என்றால் நலம் என்று பொருள். "ஸ்ஸீ.....ஸ்ஸீ(xie xie)" என்றால் நன்றி வருகிறேன் என்று பொருள். சீன மொழிக்கும் தமிழுகும் பொதுவான சொல் "நீ", தமிழில் அதன் பொருள் முன்னிலை ஒருமை. சீன மொழியில் முன்னிலை மட்டுமே ஒருமை பண்மை விகுதி தனியாக சேர்த்துக் கொள்கிறார்கள்.

நகரில் பொதுப் போக்குவரத்து பேருந்துகள் முழுக்க முழுக்க குளிரூட்டப்பட்டவை, நடத்துனர் கிடையாது. ஓட்டுனர் மட்டுமே. வாடகை சிற்றுந்துகளில் ஓட்டுனரைச் சுற்றிலும் பாதுகாப்புத் தடுப்பு உள்ளது. அதன் மூலம் ஓட்டுனர் சமூக எதிரிகளால் தாக்கப்படுவது தடுக்கப்படுவதும், அவரிடம் இருந்து பணம் பிடுங்கிக் கொண்டு ஓடுவதும் தவிர்க்கபடுகிறதாம். நகருக்குள் சுற்றிப்பார்க்க சுற்றுலா நிறுவனங்கள் ஏற்பாடு செய்து தருகின்றன. சைவ உணவு ? அது பெரிய இடற் இல்லை. சீன உணவு எல்லாம் (ஆர்டரின் பெயரில்) உடனடியாக செய்து தரப்படுபவை. நமக்கு தேவையான சீன உணவு வகையில் அசைவம் தவிர்த்து சமைக்கச் சொல்லிக் கேட்டால் கிடைக்கிறது. குழாய் தண்ணீர் குடிப்பதற்கேற்ற சுவையில் இல்லை. ஷாங்காய் புத்தோங் விமான நிலையம் சிங்கப்பூர் அளவுக்கு சிறப்பாக இல்லை என்றாலும் சர்வதேச தரத்துடன் அமைந்திருக்கிறது. சிங்கப்பூர் 40 ஆண்டுகளில் கண்ட வளர்ச்சியை சூச்சூவ் 5 ஆண்டுகளில் கண்டுள்ளது, இதற்கு முதமைக் காரணம் சிங்கப்பூர் தொழில் அதிபர்களின் சூச்சூவ் நகரில் செய்துள்ள முதலீடு ஆகும். சிங்கப்பூரில் உள்ள இந்தியர்கள் இந்திய இந்தியர்களிடம் தங்களுக்கு கொம்பு முளைத்துள்ளது போன்று நடந்து கொள்வதைப் போலவே சீனாவிற்கு வெளியே பிற நாடுகளில் வசிக்கும் சீனர்கள், சீனாவின் சீனர்கள் வளர்ச்சி கண்டிருந்தாலும் அவர்களைப் பற்றி இவர்கள் அவ்வாறே நினைப்புக் கொண்டிருக்கிறார்கள், கொள்கிறார்கள். வளர்ந்த நாடுகளில் வசிப்பவர்கள் யாரும் வளரும் நாடுகளின் வளர்ச்சியை போற்றுவதில்லை, காரணம் பொறாமை என்பதைவிட ஒப்பீட்டு அளவில் தாங்கள் உயர்ந்தவர்கள் என்று சொல்வதற்கான காரணம் மறைந்துவருகிறது என்கிற தாழ்வுணர்ச்சியாகக் கூட இருக்கும் என்றே நினைக்கிறேன்.









(புறநகர் பகுதி மற்றும் சுற்றுலா தலம், டைகர் ஹில்ஸ் சீனக் கோவில்)

போதுமென்றே நினைக்கிறேன். எழுதத் தகவல்கள் இருந்தாலும் படிப்பவரின் அயற்சியையும் கருத்தில் கொண்டு முடித்துக் கொள்கிறேன். நல்லது நண்பர்களே. எழுத்துப் பிழைகளை பொறுத்துக் கொள்க. மடிக் கணனியில் தட்டச்சும் பொழுது எழுத்துப் பிழைகள் தட்டச்சு விசை மாறுபாடுகளால் ஏற்பட்டுவிடுகிறது. மேசைக்கணிணியில் என்னால் பிழையின்றி தட்டச்ச முடியும்.

33 கருத்துகள்:

துளசி கோபால் சொன்னது…

அருமை அருமை.

PB Raj சொன்னது…

சிங்கப்பூரில் உள்ள இந்தியர்கள் இந்திய இந்தியர்களிடம் தங்களுக்கு கொம்பு முளைத்துள்ளது போன்று நடந்து கொள்வதைப் போலவே


அருமையான பதிவு...அருமையான மொழி நடை ....

மீனாட்சி சுந்தரம் சொன்னது…

பெரியவா....தொடர் பதிவு எழுதுங்கோ...
தகவல்கள் படங்கள் அருமை

நிகழ்காலத்தில்... சொன்னது…

அலுவல் சம்பந்தமான பயணம் ஆனாலும் கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி எங்களுக்கு தந்தமைக்கு வாழ்த்துகள் கோவியாரே:)

✨முருகு தமிழ் அறிவன்✨ சொன்னது…

கண்ணன்,
சூச்சூவ் இல்லை.
நகரின் பெயர் சூஷொ. அப்படித்தான் சீனர்கள் உச்சரிக்கிறார்கள்..

சைவ உணவுக் காரர்கள் அப்படி ஒன்றும் எளிதாக நாளை ஓட்டி விட முடியாது...ஃப்ரைட் ரைஸ் என்று ஆர்டர் கொடுத்தாலும் சிறு மீன்கள் கலந்த அரிசி உணவுதான் வரும்..


இன்னொரு முக்கியத் தகவலை விட்டு விட்டீர்கள்..சீனாவில் சூஷொ இன்னொரு முக்கியத்துவம் வாய்ந்த நகரம்,சீனாவின் மிக அழகான பெண்களில் சூஷொ நகரப் பெண்களும் குறிப்பிடத் தகுந்தவர்கள்-புள்ளி விவரங்களின் படி.

கட்டமைப்பு வசதிகள் மேம்பாட்டில் இந்தியா கடலளவு முயற்சி செய்தால்தான் சீனாவை எட்டிப் பிடிக்க முடியும்..

ஷாங்காய் க்கும் சூஷொ விற்கும் இடைப்பட்ட சாலையில் பெரிய கால்வாயை இணைக்கும் இரும்பு தொங்கு பாலம் ஒன்று போதும் சான்றுக்கு...

பிழைகள் தவிர்க்கப்பட்டிருக்கலாம்..நன்றி.

கோவி.கண்ணன் சொன்னது…

//அறிவன்#11802717200764379909 said...
கண்ணன்,
சூச்சூவ் இல்லை.
நகரின் பெயர் சூஷொ. அப்படித்தான் சீனர்கள் உச்சரிக்கிறார்கள்..
//

அறிவன் சார் விக்கிப்பீடியாவிலும் Suzhou (simplified Chinese: 苏州; pinyin: Sūzhōu; Suzhou dialect: [səu tsøʏ]), previously transliterated as Su-chou, Suchow, சூச்சவ் அல்லது சூச்சூவ் என்றே இருக்கிறது, எங்க அலுவலக சீனர்கள் சூச்சவ் என்றே குறிப்பிட்டார்கள்.

//சைவ உணவுக் காரர்கள் அப்படி ஒன்றும் எளிதாக நாளை ஓட்டி விட முடியாது...ஃப்ரைட் ரைஸ் என்று ஆர்டர் கொடுத்தாலும் சிறு மீன்கள் கலந்த அரிசி உணவுதான் வரும்..//

நான் போன உணவகங்களில் எனக்கு சைவ உணவு குறிப்பிட்டுச் சொல்லி வாங்கித்தந்தார்கள். கருவாடு, உப்புகண்டம் எதுவும் இல்லை. :)

அங்குள்ள உணவு வகைகளைப் பார்த்தப் பிறகு இங்கு சிங்கையில் இருக்கும் சீன உணவு சைவ வகையறாவாகத் தெரிகிறது :)

தகவல்களுக்கு நன்றி.

கோவி.கண்ணன் சொன்னது…

னாவின் மிக அழகான பெண்களில் சூஷொ நகரப் பெண்களும் குறிப்பிடத் தகுந்தவர்கள்-புள்ளி விவரங்களின் படி.
***
நான் Suzhou ஐ சீனத்துப் பட்டுமேனி என்று குறிப்பிட்டது சரிதான் போலும்.

:)

தருமி சொன்னது…

எழுத்தும் படமும் எண்ணங்களும் அழகு.

sathishsangkavi.blogspot.com சொன்னது…

சீனாவிற்கு போய்ட்டு வந்த மாதிரி இருக்கு படித்ததும்...

Unknown சொன்னது…

நல்ல பயணக்கட்டுரையாக உள்ளது.அருமை.

கிருஷ்ண மூர்த்தி S சொன்னது…

சீனப் பயணம் குறித்த பதிவு நன்றாக இருக்கிறது கோவி! ஆனால் எதனாலோ முழுமையடையாத மாதிரி முடிந்திருக்கிறதே! இரண்டு மூன்று பகுதிகளாக, இன்னும் கொஞ்சம் விவரங்களோடு சொல்லியிருக்கலாமோ?

:-)))

சிநேகிதன் அக்பர் சொன்னது…

அதுதானே பார்த்தேன். அண்ணன் பதிவுல எழுத்துப்பிழையான்னு :)

பயண அனுபவம் அருமையாக இருந்தது.

Test சொன்னது…

உங்கள் பயணம் ( + பயணப் பதிவும் ) இனிதே தொடர வாழ்த்துக்கள் அண்ணா

பதிவும், புகைப்படமும் அருமை, குறிப்பாக Jinjihu - Lake

ஜோதிஜி சொன்னது…

என்ன காரணமோ தெரியல டீச்சர் இன்னமும் இந்த சீனாவை ஏன் விட்டு வைத்திருக்கிறார் என்று தெரியவில்லை. சற்று நேரத்திற்கு முன்பு தான் கிளியனூர் இஸ்மத் துருக்கி சென்று வந்தது குறித்து இதைப் போல ஒரு நீண்ட இடுகை எழுதியிருந்தார். நீங்களும் அதைப் போல சீனா. ஏற்கனவே ரவி சீனா குறித்து பொதுப்படையான விசயங்களைப் பற்றி படித்தற்குப் பிறகு இப்போது உங்கள் மூலம் இந்த வாய்ப்பு. நன்றி. படித்துக் கொண்டு வரும் என் வியாதி (எழுத்துப் பிழை) கவனித்துக் கொண்டு வந்தேன். கடைசியில் ஒரே போடாக போட்டு விட்டீங்க.

பொதுவாக சீனா குறித்து நான் கேட்பது படிப்பது எல்லாமே நகர்புற சம்மந்தப்பட்ட விசயங்கள் தான். ஆனால் படு கேவலமாக உள்ளடங்கிய பகுதிகள் புறக்கணிக்கப்பட்டு வருவதை யாராவது எழுத வேண்டும்.

20 நிமிடத்தில் 100 கிமீ பயணமா? தலைசுற்றுகிறது. சீனாவை விட எல்லாதகுதிகளும் நம் நாட்டில் இருக்கிறது. என்னவொன்று இந்த கொள்ளைக்கார கூட்டத்தை ப்ரைடு ரைஸ் செய்து சாப்பிட்டு விட்டால் எளிதாக இந்தியா சரியான பாதைக்கு வந்து விடும்.

ஸ்வாமி ஓம்கார் சொன்னது…

அருமையான விவரிப்பு..

இனி உங்களை “சூச்சூவ் மாரி”னு கூப்பிடலாமா :)

ஆ.ஞானசேகரன் சொன்னது…

ம்ம்ம் அருமை... வாழ்த்துகள்

நாகை சங்கர் சொன்னது…

ஏனோ “அழகிய ஏரி” என்பது எனக்கு படிக்கும் போது ”அழகிரி”யாக தோன்றுகிறது.

கோவி.கண்ணன் சொன்னது…

துளசி கோபால் said...
அருமை அருமை.

******

நன்றி அம்மா

கோவி.கண்ணன் சொன்னது…

பிரியமுடன் பிரபு said...
nice

****

நன்றி பிரபு

கோவி.கண்ணன் சொன்னது…

//மீனாட்சி சுந்தரம் said...
பெரியவா....தொடர் பதிவு எழுதுங்கோ...
தகவல்கள் படங்கள் அருமை//

ஆள் வச்சு தான் எழுதனும்.
:)

கோவி.கண்ணன் சொன்னது…

//ராயல் ராஜ்(பெயரில் மட்டும்) said...
சிங்கப்பூரில் உள்ள இந்தியர்கள் இந்திய இந்தியர்களிடம் தங்களுக்கு கொம்பு முளைத்துள்ளது போன்று நடந்து கொள்வதைப் போலவே


அருமையான பதிவு...அருமையான மொழி நடை ....//

பாராட்டுக்கு மிக்க நன்றி

கோவி.கண்ணன் சொன்னது…

//நிகழ்காலத்தில்... said...
அலுவல் சம்பந்தமான பயணம் ஆனாலும் கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி எங்களுக்கு தந்தமைக்கு வாழ்த்துகள் கோவியாரே:)//

முடிந்த மட்டும் கண்ணை மேயவிட்டேன். :)

கோவி.கண்ணன் சொன்னது…

//தருமி said...
எழுத்தும் படமும் எண்ணங்களும் அழகு.//

மிக்க நன்றி ஐயா

கோவி.கண்ணன் சொன்னது…

// சங்கவி said...
சீனாவிற்கு போய்ட்டு வந்த மாதிரி இருக்கு படித்ததும்...//

ஐரோப்பிய நாடுகளுக்குச் செல்லும் செலவை விட சீன செல்ல செலவு குறைவு தான்.

கோவி.கண்ணன் சொன்னது…

//நந்தா ஆண்டாள்மகன் said...
நல்ல பயணக்கட்டுரையாக உள்ளது.அருமை.

6:14 PM, March 21, 2011//

மிக்க நன்றி

கோவி.கண்ணன் சொன்னது…

//எஸ். கிருஷ்ணமூர்த்தி said...
சீனப் பயணம் குறித்த பதிவு நன்றாக இருக்கிறது கோவி! ஆனால் எதனாலோ முழுமையடையாத மாதிரி முடிந்திருக்கிறதே! இரண்டு மூன்று பகுதிகளாக, இன்னும் கொஞ்சம் விவரங்களோடு சொல்லியிருக்கலாமோ?

:-)))

8:05 PM//

திட்ட மிட்ட சுற்றுலா பயணம் என்றால் நன்றாக எழுதி இருக்க முடியும் என்றே நினைக்கிறேன். இந்தப் பதிவு கண்ணில் பட்ட காட்சி அடிப்படையில் எழுதி இருக்கிறேன்.

பாராட்டுக்கு மிக்க நன்றி ஐயா

கோவி.கண்ணன் சொன்னது…

//சிநேகிதன் அக்பர் said...
அதுதானே பார்த்தேன். அண்ணன் பதிவுல எழுத்துப்பிழையான்னு :)

பயண அனுபவம் அருமையாக இருந்தது.

9:44 PM, March 21, 2011//

மடிக்கணிணியில் விசை நெருக்கமாக இருக்கிறது, அதனால் அடிக்கும் போது எழுத்து மாற்றி விழுந்துவிடுவதுடன் திடிர் என கர்சர் மேலே எங்காவது தட்டச்சி எழுத்துப் பிழையை கூட்டிவிட்டது. பொருத்தருள்க.
:)

கோவி.கண்ணன் சொன்னது…

// Logan said...
உங்கள் பயணம் ( + பயணப் பதிவும் ) இனிதே தொடர வாழ்த்துக்கள் அண்ணா

பதிவும், புகைப்படமும் அருமை, குறிப்பாக Jinjihu - Lake//

அன்பின் லோகன், பாராட்டுக்கு மிக்க நன்றி. சுற்றுலாவாகச் செல்லவும் சூச்செவ் நல்ல நகரம்

கோவி.கண்ணன் சொன்னது…

//பொதுவாக சீனா குறித்து நான் கேட்பது படிப்பது எல்லாமே நகர்புற சம்மந்தப்பட்ட விசயங்கள் தான். ஆனால் படு கேவலமாக உள்ளடங்கிய பகுதிகள் புறக்கணிக்கப்பட்டு வருவதை யாராவது எழுத வேண்டும்.//

சீனா தனக்குள்ளே தன்னிரைவு அடைந்த நகரங்களை நாடுகளைப் போல் உருவாக்குகிறது. நகரங்களில் நடுத்தரவர்கமும், மேல் தட்டும் தான் வசிக்கமுடியும் என்ற நிலை தான் அங்குள்ளது.

சென்னை நகரில் குடிசைகள் அகற்றப்பட்டால் எஞ்சி இருப்பது பணக்காரர்களும் வாடகைக் கொடுக்க வசதி உள்ள நடுத்தர வர்கமும் தான் மிஞ்சும். சீன நகரங்களில் குடிசைகள் இல்லை என்னும் போது அதையே நினைக்கத் தோன்றுகிறது. ஒலிம்பிக் சமயத்தில் பெய்ஜிங்கில் ஏழைகள் துறத்தப்பட்ட செய்திகள் தான் மீடியாவை எட்டியதே :)



//20 நிமிடத்தில் 100 கிமீ பயணமா? தலைசுற்றுகிறது. //

நான் பயணம் செய்யவில்லை ஆனால் புல்லெட் ரயில் செல்வதைப் பார்த்தேன், நம்ம ஊர் எக்ஸ்ப்ரஸை பாஸ்ர்ட் பார்வேர்டில் ஓட்டினால் எப்படி இருக்குமோ அது போன்ற வேகம்.

கோவி.கண்ணன் சொன்னது…

//ஸ்வாமி ஓம்கார் said...
அருமையான விவரிப்பு..

இனி உங்களை “சூச்சூவ் மாரி”னு கூப்பிடலாமா :)

10:39 PM, March 21, 20//

மாரி என்றால் மழைதானே :)

கோவி.கண்ணன் சொன்னது…

//ஆ.ஞானசேகரன் said...
ம்ம்ம் அருமை... வாழ்த்துகள்

12:52 AM, March 22, 2011

//

நன்றி சார்

கோவி.கண்ணன் சொன்னது…

//நாகை சங்கர் said...
ஏனோ “அழகிய ஏரி” என்பது எனக்கு படிக்கும் போது ”அழகிரி”யாக தோன்றுகிறது.

1:04 AM, March 22, 2011//

அங்கிட்டு ஒண்ணும் அழகிரி பேமிலி இடம் வாங்கிப் போட்டது போல் தெரியல

R.Gopi சொன்னது…

பாஸ்ஸ்ஸ்ஸ்........

ஒரு பழைய பதிவிற்கு இப்போது பின்னூட்டம் இடுகிறேன் என்று தவறாக எண்ண வேண்டாம்... இந்த சீனா பற்றிய பதிவு படு சூப்பர்...

மிக மிக அருமையாக எழுதி இருக்கிறீர்கள்... நிறைய விஷயங்களை உள்ளடக்கி, ஏகப்பட்ட புகைப்படங்களை கொண்ட இந்த பதிவை படிப்பவர்கள், தாங்களே சீனாவை ஒரு ரவுண்ட் வந்ததை போலிருக்கிறது...

நல்ல விஷயத்தை எவ்வளவு நாள் கழித்து வேண்டுமானாலும் பாராட்டலாம் என்று நினைத்ததால், இந்த பின்னூட்டம்..

வாழ்த்துகள் தலைவா...

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்