பின்பற்றுபவர்கள்

15 அக்டோபர், 2009

தன்னிலை மறத்தல் !

விழிப்பு தூக்கம் இவை மாறி மாறி வருவதில் தூக்கம் என்பது ஓய்வுக்கென்றாலும் நல்லதொரு சூழலில் தூங்கும் மகிழ்வே தனிதான். தூக்கம் என்பது தற்காலிகம் என்பதால் தூக்கத்தை விரும்பாதவர் எவரும் இல்லை, விழிப்போமா இல்லையா என்கிற எந்த ஒரு உத்திரவாதமும் இல்லாவிடிலும் தூங்குவதிலும் தூங்கச் சொல்வதிலும் இருக்கும் மகிழ்ச்சியே தனிதான். எந்த ஒரு சலனமும் இல்லாத அமைதியை மனம் விரும்புகிறது என்பதே தூக்கம் வராவிட்டாலும் கூட நாம் தூங்க விரும்புவதைக் குறிக்கிறது. விழிப்பு வாழ்க்கையில் அன்று எதோ ஒரு சாதனை நிகழ்த்தியவர்கள் கூட இந்த மகிழ்ச்சியை கொண்டாட, அந்த உணர்விலேயே இருக்க நாம் தூங்கமலேயே இருப்போம் என்றெல்லாம் நினைப்பதே இல்லை, அதற்கு மாறாக மகிழ்வுடன் உறங்கிப் போவார்கள். சாதனைகள் கொடுக்கும் மன மகிழ்ச்சியைவிட மனம் விரும்புவது நல்லதொரு அமைதியையே என்பதே நாம் உணராமல் தான் இருக்கிறோம். சோம்பல்களினால், அசதிகளினால் வரும் தூக்கங்களைத் தவித்துப் பார்த்தால் சாதனைகள், பிற மகிழ்வுகள் அனைத்தும் தற்காலிகமானவை என்பதை நம் உள்ளுணர்வு உணர்ந்துள்ளதால் அதிலெல்லாம் கிடைக்காத ஒரு மனமகிழ்வு தூக்கத்தில் தான் கிடைக்கிறது என்பதால் நாம் தூக்கத்தை பெரிதும் விரும்புகிறோம்.

மனித மனம் விரும்புவது தெளிந்த நீரோடை போன்ற மன அமைதியே, கூடவே மிதப்பது பறப்பது போன்ற ஒரு உணர்வு இருந்தால் அதை பெரிதும் விரும்பும். அதுபோன்ற தேடலில் சிலர் ஆன்மிகத்தை நாடுகிறார்கள், பலர் மதுவை, பிற போதைகளை நாடுகிறார்கள். தன்னிலை மறப்பதற்கான தீர்வு அல்லது மன உந்துதல் ஆகியவற்றை முன்னிட்ட தேடலாக இறைத்தேடல் அதன் தொடர்பில் ஆன்மிகம், தியானம், யோகம், வழிபாடு, தொழுகை இவையெல்லாம் ஏற்பட்டு இருந்தாலும் அதில் மனதை நிறுத்துவது இயலாத ஒன்று அல்லது உடனடியாக பலன் கிடைக்காது அல்லது பொறுமை அற்றவர்கள் தன்னிலையை மறக்க நாடுவது மதுவகைகள். கடவுள் நம்பிக்கை ஆன்மிக நம்பிக்கையற்றவர்களின் உள்ளுணர்வுகளின் தோடல் கூட தன்னிலை மறப்பதைப் பற்றியதாக இருப்பதால் அதன் தீர்வுக்காக மதுவை நாடுபவர்களும் உள்ளனர். வயது வந்தவர்களின் காமவேட்கையும் கூட உடலின்பம் சார்ந்தது என்றாலும் அதைத்தாண்டிய தன்னிலை மறப்பு அதில் கிடைக்கிறது என்பதால் அதை விரும்பாதவர்க்கள் குறைவு. மதுவோ, தூக்கமோ, காமமோ இவை தன்னிலை மறப்பதற்குக் கிடைக்கும் தற்காலிகத் தேவைகளே, ஆகையால் தான் அவைகள் 'சிற்றின்பமாகச்' சொல்லப்படுகிறது.

என்றைக்காவது விழிப்போம் என்கிற நம்பிக்கை இருந்தால் இறப்புக் கூட பெரும் தூக்கம் என்பதாகவே எடுத்துக் கொண்டு அது பற்றிய பயம் குறைந்து அதை வரவேற்கும் மனது ஏற்பட்டிருக்கும், ஆனால் இறப்பு என்பது விழிக்காத தூக்கம் என்பதால் அதைத் தவிர்த்து புற மகிழ்ச்சியாக நாம் நினைத்திருந்தது எதுவுமே நமக்கு திரும்பக் கிடைக்காது என்பதால் தான் மரணம் மனிதனுக்கு பயத்தை ஏற்படுத்துகிறது. உண்மையில் மரணம் என்பது உடலை துறக்கும் பயம் என்பதைவிட உறவுகளை, உடமைகளை இழக்கிறோம் என்பதால் தான் ஏற்படுகிறது.

மரணம் மீண்டும் விழிப்பு நிலை தராது என்கிற அறிவு இல்லாத விலங்குகள் எதற்குமே மரணபயம் கிடையாது, அவைகள் தன்னை தற்காத்துக் கொள்ளத் துடிக்கும் பயம் என்பது அவை ஏற்படுத்தும் உடல் சார்ந்த வலிகளில் இருந்து தப்பித்துக் கொள்வதற்கு மட்டுமே.

தன்னிலை மறப்பதும், அது தற்காலிகமாக இருக்க வேண்டும் என்பதும் ஒவ்வொரு மனித மனத்தின் விருப்பமாகத்தான் இருக்கிறது. எவ்வளவு மகிழ்ச்சியுடன் ஒருவரை வைத்திருந்து நீங்கள் விழித்துக் கொண்டு தான் இனி இருக்கப் போகிறீர்கள் என்று வரம் கொடுத்தால் அதை அவர் சாபமாகத்தான் கொள்வர். ஏனெனில் மனம் தற்காலிக விழிப்பு நிலையை விரும்புவது போலவே தற்காலிக தன்னிலை மறப்பதையும் விரும்புகிறது.

பிறரை துன்புறுத்தாத காமம், குடி, போதைப் பொருள் போன்ற சிற்றின்பமாக தேடிக் கொள்பவை உடலின்பம் என்றாலும் அதை நாடுபவர்களின் உள்ளுணர்வு தற்காலிக தன்னிலை மறப்பை நாடுகிறது என்றும் கொள்ளலாம் என்றே நினைக்கிறேன். அவற்றில் கிடைக்கும் இன்ப நுகர்ச்சியின் மன அமைதியின் காலம் போதுமானவையாக இல்லை என்பதாலும், அவை கிடைக்கும் வழிகள் பல்வேறு உடல் கோளாறுகளை ஏற்படுத்தக் கூடியவை என்பதாலும் அதை சிற்றின்பமாக, கேடுவிளைவிப்பதாகச் சொல்லி, காலம் நீட்டித்துக் கிடைக்கக் கூடிய பேரின்ப வழிகளாக ஒரு சில ஆன்மிகக் கோட்பாடுகள், தியானம், யோகம், வழிபாடு, தொழுகை என வேறுவழியில் கொஞ்சம் நீட்டித்து கிடைக்கக் கூடியதை தேடுபவர்கள் ஆன்மிகவாதிகளாகவும் அவை பேரின்ப வழிகள் எனச் சொல்லப்படுகின்றன. எது எப்படியோ மனித மனம் என்றும் விரும்புவது தன்னிலைமறக்கக் செய்யக் கூடிய ஒரு நல்ல உணர்வைத்தான்.

*****

அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துகள். மீண்டும் அக்டோபர் 26 ஆம் தேதிக்குப் பிறகு சந்திக்கிறேன்

10 கருத்துகள்:

ஸ்வாமி ஓம்கார் சொன்னது…

கட்டுரை கரு அருமை.

வழக்கமான உங்கள் நடையில்.. :)

//ஆன்மிகம், தியானம், யோகம், வழிபாடு, தொழுகை//

இவை தன்னிலை மறக்க செய்வதில்லை. தன்னிலை 'உணர' செய்யப்படுகிறது.

ஆரம்ப நிலையில் தன்னிலை மறப்பதாக தெரிந்தாலும்.. அதை தாண்டினால் இதைவிட பெரும் உலகம் விரியும். பிறகு எங்கே மறக்க?

சில ஆன்மீக சாதகர்கள் கூட குங்கிலியம் மற்றும் மூலிகையால் போதை ஏற்படுத்திக்கொள்வார்கள். அது தெளிவான வழி அல்ல என அனைத்து ஆன்மீக வழிகாட்டிகளாலும் கூறப்பட்டுள்ளது.


நிறைவாக ஒன்று சொல்ல விரும்புகிறேன்..

me the first-u :)

கோவி.கண்ணன் சொன்னது…

//ஸ்வாமி ஓம்கார் said...
கட்டுரை கரு அருமை.

வழக்கமான உங்கள் நடையில்.. :)

//ஆன்மிகம், தியானம், யோகம், வழிபாடு, தொழுகை//

இவை தன்னிலை மறக்க செய்வதில்லை. தன்னிலை 'உணர' செய்யப்படுகிறது.

ஆரம்ப நிலையில் தன்னிலை மறப்பதாக தெரிந்தாலும்.. அதை தாண்டினால் இதைவிட பெரும் உலகம் விரியும். பிறகு எங்கே மறக்க?

சில ஆன்மீக சாதகர்கள் கூட குங்கிலியம் மற்றும் மூலிகையால் போதை ஏற்படுத்திக்கொள்வார்கள். அது தெளிவான வழி அல்ல என அனைத்து ஆன்மீக வழிகாட்டிகளாலும் கூறப்பட்டுள்ளது.
//

கருத்துக்கு மிக்க நன்றி !


//நிறைவாக ஒன்று சொல்ல விரும்புகிறேன்..

me the first-u :)//

இன்னாது சின்னப் பிள்ளைத்தனமாக ?

அவ்வ்வ்வ்

ஸ்வாமி ஓம்கார் சொன்னது…

உள்ளே சின்னபுள்ளையா இருந்தாத்தானே நல்லது :)

திருமூலர் நீங்க சொன்னதை 4 வரியில் சொல்லரார் பாருங்கோ :)

சத்தியை வேண்டிச் சமயத்தோர் கள்ளுண்பர்
சத்தி அழிந்தது தம்மை மறத்தலால்
சத்தி சிவஞானம் தன்னில் தலைப்பட்டுச்
சத்திய ஞானஆ னந்தத்திற் சார்தலே.
திருமந்திரம் - 332.

கோவி.கண்ணன் சொன்னது…

//ஸ்வாமி ஓம்கார் said...
உள்ளே சின்னபுள்ளையா இருந்தாத்தானே நல்லது :)

திருமூலர் நீங்க சொன்னதை 4 வரியில் சொல்லரார் பாருங்கோ :)

சத்தியை வேண்டிச் சமயத்தோர் கள்ளுண்பர்
சத்தி அழிந்தது தம்மை மறத்தலால்
சத்தி சிவஞானம் தன்னில் தலைப்பட்டுச்
சத்திய ஞானஆ னந்தத்திற் சார்தலே.
திருமந்திரம் - 332.
//

ஆகா அருமை.

வால்பையன் சொன்னது…

தூக்கத்தை பற்றி அசால்டா சொல்லிட்டிங்க!

இன்ஸோமேனியான்னா என்னான்னு தெரியுமா உங்களுக்கு!?

பித்தனின் வாக்கு சொன்னது…

ஆவ்வ்வ் ரொம்ப தூக்கமா வருது. இது மாதிரி துக்கத்தை மறக்கவும் வழி சொன்னா நல்லா இருக்கும். நல்ல கட்டுரை. நன்றி.

சிங்கக்குட்டி சொன்னது…

//தியானம், யோகம், வழிபாடு, தொழுகை என வேறுவழியில் கொஞ்சம் நீட்டித்து கிடைக்கக் கூடியது//

தன்னிலை மறப்பு இல்லை நண்பா,

அது தன்னிலை உணர்ந்து நாம் யாரென்று நாமே அறிவது.

Indy சொன்னது…

மீண்டும் ஒரு மொக்கை பதிவு.

ஆ.ஞானசேகரன் சொன்னது…

//என்றைக்காவது விழிப்போம் என்கிற நம்பிக்கை இருந்தால் இறப்புக் கூட பெரும் தூக்கம் என்பதாகவே எடுத்துக் கொண்டு அது பற்றிய பயம் குறைந்து அதை வரவேற்கும் மனது ஏற்பட்டிருக்கும்,//

நல்லாயிருக்கே

மங்களூர் சிவா சொன்னது…

குடும்பத்தினர் அனைவருக்கும் இனிய தீபாவளி திருநாள் நல்வாழ்த்துக்கள்.

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்