பின்பற்றுபவர்கள்

20 நவம்பர், 2007

அமெரிக்க சிட்டுகுருவி லேகியம் - செல்புட்

முன்பெல்லாம் தளர்ந்து போன 'வாலிப - வயோதிக' அன்பர்களுக்கு சிட்டுக் குருவி லேகியத்தை சித்த மருத்துவர்கள் மட்டுமே ரூம் போட்டு தங்கி கொடுத்துவிட்டு செல்வார்கள். இதற்கனவே ஒரே மாதிரியான மாதாந்திர சுற்றுப்பயண விளம்பரங்கள் நக்கீரன், துக்ளக் மற்றும் பல இதழ்களில் பின் முன் அட்டைக்குள் மற்றும் நடு பக்கங்களில் வரும்.

தற்போது இது போன்ற வேறு மருத்துவம் தொடர்புடைய பொருள்களை பொதுமக்கள் தயவினால் வெளியில் விடுகிறார்கள். சர்வரோக நிவாரணி என்று வடமொழியில் சொல்லப்படும் அனைத்து கேடுகளுக்கான மருந்தும் ஒரே ஒரு சொட்டு 'இந்த' ப்ராடெக்ட் பயன்படுத்தினால் தீர்ந்துவிடும் என்று விற்கச் சொல்லி சங்கிலி (ஆண்களுக்கு ஏது தாலி ?) அறுக்கிறார்கள்.

நான்கு ஆண்டுகளுக்கு முன்பு என்னுடன் ஒரே நிறுவனத்தில் பணியாற்றிய சீனர் ஒருவர் வேலையை விட்டு சென்று ஒருவருடம் கழித்து என்னை செல்பேசிக்கு தொடர்பு கொண்டார். அதாவது மூன்று வருடங்களுக்கு முன்பு, ஆங்கில உரையாடல் தான். சிங்கிலீசில் இருக்கும் அதனால் தமிழிலேயே தருகிறேன்.

MR SUM : ஹலோ கண்ணன், எப்படி இருக்கிறீர்கள்

நான் : ஹலோ Mr Sum, நல்லா இருக்கிறேன்.

MR SUM : நான் இந்தவாரம் உங்க அலுவலகம் வழியாகத்தான் போகிறேன், நேரம் இருந்தால் சொல்லுங்க, காபி சாப்பிடுவோம்.

நான் : பரவாயில்லை, நீங்களே நினைவு வைத்து அழைத்து பேசுகிறீர்கள், மகிழ்ச்சியாக இருக்கிறது அலுவலகம் முடிந்த நேரத்தில் நீங்க எங்கே கூப்பிட்டாலும் வருவேன்.

MR SUM : ஓ அப்படியா ? சரி நாளைக்கு அல்ஜுனைட் போவேன், அது பக்கத்தில் அங்கே பார்ப்போமா ?

எனக்கும் அலுவலகத்தில் இருந்து அவ்விடம் அருகில் என்பதால் சரி என்று சொன்னேன். மறுநாள் தொலைபேசி வருகையை உறுதி படுத்திக் கொண்டார். என்னை இவ்வளவு மதிக்கிறரே என்று நானும் வியந்து போனேன்.

அருகில் இருந்த உணவு அங்காடியில் உட்கார்ந்து பேசினோம்.

MR SUM : ம் இன்னிக்கு என்னோட ட்ரீட் அதனால் நீங்க என்ன வேண்டுமென்று சொல்லுங்க வாங்கி வருகிறேன்.

நான் : ஐ யம் சாரி..நான் உடனே சென்றுவிடலாம் என்பதால் வீட்டில் சாப்பாடு வேண்டாம் என்று சொல்லவில்லை, என் மனைவி செய்து வைத்திருப்பார். அதனால் எனக்கு ஒன்றும் வேண்டாம், காபி வேண்டுமானால் ஆர்டர் பண்ணுங்கள்

சீனர்கள் எப்போதும் வெளியில் சாப்பிடுபவர்கள், எனவே அவர் இரவு உணவு சாப்பிடும் நோக்கில் அவருக்கு வேண்டியதை வாங்கி கொண்டு எனக்கு காபி வாங்கி வந்தார்.

MR SUM : மிஸ்டர் கண்ணன், அலுவலகத்தில் வேலை செய்கிறீர்களே, அந்த சம்பளம் போதும் என்று நினைக்கிறீர்களா ?

வழக்கம் போல் எவ்வளவு தான் கையில் இருந்தாலும் பஞ்சப்பாட்டை மற்றவர்களிடம் பகிர்ந்து கொண்டால் ஒரு திருப்தி கிடைக்குமே அதை நினைத்து.

நான் : ஹூம்... கஷ்டம் தான், சிங்கையில் ஸ்கூல் பீஸ், வீட்டு வாடகை எல்லாம் அதிகம் அதனால் சரியாக இருக்கு

MR SUM : எதாவது சேமிப்பு வைத்திருக்கிறீர்களா ?

நான் : இன்ஸுரன்ஸ் தவிர வேற்றெதிலும் சேமிப்பது இல்லை. வருவதும் போவதும் சரியாக இருக்கும்

MR SUM : திடிரென்று வேலை போனால் என்ன செய்வீர்கள்

நான் : திறமை இருக்கு, ஒரு மாதத்திற்குள் வேறு வேலை தேடிவிடுவேன்

MR SUM : அப்ப நீங்க முன்னெச்சரிக்கையாக இல்லை ?

நான் : இல்லை

MR SUM : நான் கூட அப்படித்தான், முன்பு ஒரு நிறுவனத்தில் வேலை செய்தேன், திடிரென்று Shut-Down பண்ணிட்டாங்க, வேலை போச்சு

நான் : அச்சச்சோ

MR SUM : பதறாதிங்க... சாமாளிச்சேன்

நான் : சேவிங்க்ஸ் இருந்திருக்கும்

MR SUM : அது இல்லை, நாம அலுவலகம் முடிந்து நேர வீட்டுக்கு போறோம், டிவி பார்கிறோம், அப்பறம் படுத்துவிடுகிறோம்,

நான் : ம்

MR SUM : அதுபோல் அலுவலக நேரம் தவிர்த்து நமக்கு கிடைக்கும் நேரங்களை வீணாக்கிவிடுகிறோம்

நான் : ம்

MR SUM : அந்த நேரத்தை உரிய வழியில் செலவு செய்தால், நம்மால் பணம் சம்பாதிக்க முடியும். நான் அலுவலகத்தில் கிடைக்கும் சம்பளத்தை விட மாதம் 5000 வெள்ளிகள் கூடுதலாக சம்பாதிக்கிறேன்

(இப்ப தான் இவர் என்னமோ சொல்லப் போகிறார் என்றே தோன்றியது, அதன் பிறகு கேள்விகளை அவரே கேட்டு அவரே பதிலை சொல்லி வந்தார், கையில் கொண்டு வந்த ப்ராடக்ட் விவரங்களை எடுத்து ஒவ்வொன்றாக விளக்கினார்)

MR SUM : நாம் வயத்துக்கு சாப்பிடுகிறோம், இரத்தத்தில் உள்ள செல்களுக்கு அது சரியான உணவா ? இதபாருங்க அருமையான ப்ராடெக்ட், தண்ணீரில் ஒரே ஒரு சொட்டு போட்டு தினமும் குடித்தீர்கள் என்றால் புத்துணர்ச்சி கிடைக்கும். செல்கள் விரிவடையும், செல்கள் இனப்பெருக்கம் நடக்கும், இளமையாக உணர்வீர்கள். இது செல்லுக்கான உணவு, ஆண்டி பயாடிக் மாதிரி எந்த வியாதியும் அண்டாது, ஆனால் சைடு எபக்ட் இல்லாதது, இது பேரு தான் செல்புட்

என்று சொல்லி ஒரு 75 மிலி பாட்டிலை எடுத்து காட்டி, அதிலிருந்து இரண்டு சொட்டு தண்ணீருக்குள் போட்டு என்னை குடிக்கச் சொன்னார், புளிப்பாக இருந்தது.

MR SUM : இந்த நிறுவனம் அமெரிக்காவில் தொடங்கப்பட்டது, இந்த பராடெக்ட் மார்கெட்டில் நன்றாக போகுது ஆனால் பொது சந்தையில் இதனை வாங்க முடியாது, அதற்கு நீங்கள் 'இந்த' நிறுவனத்தில் உறுப்பினராக சேரனும்.

நான் : ம்

MR SUM : நான் இதுவரை எனக்கு நெருக்கமானவர்களை, நம்பிக்கையானவர்களை மட்டுமே சேர்த்திருக்கிறேன்.

நான் : ம்

MR SUM : இப்ப சொல்லுங்க, நான் கையில் வைத்திருக்கும் இந்த பாட்டில் யாருக்கு ?

மாட்டிவிட்டோம் என்ற அந்த சோகத்திலும் கண்டுபிடித்துவிட்டது போல் பெருமையாக சொன்னேன்

நான் : எனக்கு தான்.

MR SUM : யூ சோ கிளவர். கம் ஐ வில் ப்ரிங் டு த ஆபிஸ்

அருகில் தான் அந்த அலுவலகம் இருக்கிறது என்று அப்பொழுதுதான் தெரிந்தது.

என் வாயாலேயே மாட்டியாச்சே

அப்பறம், எதோ அதற்கு நடைமுறை பாரங்களை நிரப்ப சொல்லி 120 வெள்ளி பணத்தை வாங்கிக் கொண்டு ஒரு பாட்டில் செல்புட் திரவத்தை ( 75 ml) கொடுத்து, கூடவே சின்ன தண்ணீர் ஸ்பேரே, அதில் ஒரு சொட்டு செல்புட் திரவத்தை போட்டு சோர்வாக இருக்கும் போது முகத்தில் அடித்துக் கொள்ளச் சொன்னார். அவ்வப்போது தண்ணீர் அருந்தும் போதெல்லாம் செல்புட் ஒரு சொட்டு போட்டு குடிக்கனும், இந்த பாட்டில் 1 மாதத்திற்கு தீராது என்றார்.

MR SUM : இதை அடுத்த முறை வாங்கும் போது உங்களுக்கு 120 வெளிக்கு பதிலாக 75 க்கு கிடைக்கும், அதைத்தவிர்த்து நீங்கள் உறுப்பினர்களை அறிமுகப்படுத்தினால் ஒரு உறுப்பினருக்கு 25 வெள்ளிகளும், அவர்கள் வாங்கும் பொருள்களுக்கான கமிசனில் ஒரு பகுதி உங்களுக்கு கிடைக்கும்,

நான் : ம்..

MR SUM : எனக்கு இந்த விற்பனை மூலம் 5000 கிடைக்குது என்று சொன்னேன் இல்லையா, அந்த தொகை உறுப்பினர்கள் சேர சேர உயரும். இது என்னோட சொந்த பிசினஸ் போல், நேரம் கிடைக்கும் போதெல்லாம் செய்கிறேன்.

நான் : ம்..

MR SUM : உங்க நண்பர்களிடம் இதைப் பற்றி சொல்லுங்க, நாம் இரண்டு பேருமே போய் அவர்களை மீட் பண்ணுவோம். சுறுசுறுப்பாக இருந்தால் வருமானம் கொட்டும்.

அத்தோடு விடை பெற்று வந்தேன். வாங்கி வந்த செல் புட் பாட்டில் மூன்றாண்டுகள் ஆகியும் வீட்டினுள் இன்னும் எதோ ஒரு மூலையில் திறக்கப்படாமல் கிடக்கிறது. அதைப் பார்க்கும் போதெல்லாம் 120 வெள்ளியை முழுங்கிய பூதம் உள்ளிருப்பதாக நினைப்பேன்.

*******

அடுத்து மல்டி மார்கெட்டிங் பிடுங்கல் அனுபவத்தில் ... ஆன் த வே... ஆம் வே !

பின்குறிப்பு : இந்த நிறுவனங்கள் எல்லாமே எந்த நாட்டிலும் அந்தநாட்டு அரசாங்க அனுமதி பெற்றெ நடத்துகின்றன. எனவே குறிப்பிட்டு குற்றம் போல் சொல்ல முடியாது. எச்சரிக்கைகாக அனுபவத்தை எழுதுகிறேன். இது போன்ற தொழில்களில் வாய் உள்ளவர்கள் பிழைப்பார்கள். அவர்கள் தான் நடத்துகிறார்கள்.

4 கருத்துகள்:

RATHNESH சொன்னது…

கோவி.கண்ணன்,

சூப்பர் பார்ட்டியா இருக்கீங்க. தமிழ்நாட்டுக்கு எப்போ வர்றீங்க? நான் லீவு போட்டு ஏதாவது ஏஜன்ஸி எடுத்துட்டுக் காத்திருக்கேன் ஏர்போர்ட்டிலேயே. உங்களை மாதிரி நாலு பேர் கிடைச்சா போதுமே, அஸ்ஸாமில் லோல் படுவது குறித்து மறுபரிசீலனை செய்யலாம் போலிருக்கே.

அப்பாவித்தனத்துக்கு ஒரு அளவே இல்லையா? சாமிகள்ட்ட மட்டும் ஏமாறாம இருந்தா போதுமா? ஆசாமிகளிடம் . . .?

ரூபஸ் சொன்னது…

//அடுத்து மல்டி மார்கெட்டிங் பிடுங்கல் அனுபவத்தில் ... ஆன் த வே... ஆம் வே !//

இதேமாதிரி என்னோட அலுவலகத்துல வேலை பார்க்கிற ஒரு செக்குரிட்டி ஆம்வே ஆளுன்னு சொல்லி சாதரண சோப்பை எக்கச்சக்க விலைக்கு என்கிட்ட வித்துட்டார்..
ரொம்ப கவனமா இருக்க வேண்டியிருக்கு..

ஜெகதீசன் சொன்னது…

இவ்வளவு நல்லவரா நீங்க
:)))

M Poovannan சொன்னது…

அடிக்கடி என் 'செல்' (போன்) மக்கர் செய்கிறது அதற்கு ஏதாவது 'புட்' வைத்தியம் சொல்லுங்களேன்

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்