மணமுறிவு என்ற சொல்லில் மிகவும் கலங்கிப் போய் இருப்பது, குறிப்பாக இந்தியாவில் ஆண்கள் தான். என்று முடித்திருந்தேன்.
அதாவது இன்றைய இந்திய தமிழக சூழலில் திருமணமான ஆண் மணவிலக்கு பெற்று இருக்கிறார் என்று தெரிந்தால், அவரைப் பற்றி கேள்விபடுபவர்களின் ஊகம் பெரும்பாலும் அந்த ஆண்,
1. ஒழுக்கமற்றவனாக இருக்கலாம்
2. ஆண்மையற்றவனாக இருக்கலாம்
என்பது போல் நினைக்க ஆரம்பித்துவிடுவார்கள் என்ற அச்சமும், அதைத் தவிர்த்து ஒரு குடும்பத்தை வடிவமைத்து, அனுசரித்து நடத்துவதற்கு தகுதியற்றவன், ஒரு பெண்ணை நான்கு அறை விட்டு தனது கட்டுப்பாட்டில் வைக்கத் தெரியாதவன் என்றெல்லாம் நினைப்பார்கள். எவ்வளவு தான் தன்னளவில் தப்பே செய்யாதவனாக இருந்து தவிர்க்க முடியாத சூழ்நிலையில் திருமண ஒப்பந்தத்தை ரத்து செய்தவர்கள் மேற்கூறிய சில சமுதாய பார்வை காரணமாக தேவையற்ற குற்ற உணர்ச்சியில் வதைபடுபவர்கள் ஆண்களாகவே இருக்கிறார்கள். தன்னுடன் இல்லறம் நடத்திய பெண் தன்னை வேண்டாம் என்று ஒதுக்கும் போது நிராகரிப்பின் வலி என்பது அவனை மன அளவில் முறித்து போட்டுவிடும். குடும்ப நல வழக்காக வரதட்சனை கொடுமை தவிர்த்து நீதிமன்றம் செல்லும் மண முறிவு விண்ணப்ப வழக்குகள் விழுக்காட்டு அளவில் மிக்கவையாக பெண்களாலேயே முன்மொழியப்படுகிறது என்று நினைக்கிறேன்.
முன்பெல்லாம் கணவன் - மனைவிக்கு இடையில் பிணக்குகள் வரும் போது மனைவி கோபித்துக் கொண்டு தனது அம்மா வீட்டுக்குத் தான் செல்வாள், அதன் பிறகு இதற்கு மேல் தாய்வீட்டில் இருந்தால் கணவர் வேறு ஒரு பெண்ணுடன் குடுத்தனம் நடத்த ஆரம்பித்துவிடுவார் என்று அச்சப்பட்டு திரும்பி வந்துவிடுவாள். அல்லது ஒரு மூன்று மாதம் முதல் அதிகமாக ஆறுமாதம் அங்கு இருப்பாள். அதற்கு மேல் அங்கே வைத்துக் கொள்ள முடியாது, 'வாழாவெட்டி' என்று சொல்வார்கள் என அவளே நினைக்க ஆரம்பித்து அல்லது தாய்வீட்டு சொந்தங்கள் இருப்பக்கமும் பேசி சமாதானப்படுத்தி இருவரையும் சேர்த்து வைப்பர். தற்பொழுது கோபித்துக் கொள்ளும் பெண்கள் நேராக கோர்டுக்குத்தான் போகிறார்கள். இதற்கு பெற்றோர் தூண்டுதலும் முதன்மை காரணம். நான் எல்லா பெண்களும் அவ்வாறு செய்கிறார்கள் குறிப்பிடவில்லை. அதே சமயத்தில் ஆண்கள் எல்லோரும் ஒழுக்க சீலர்கள் என்று சொல்லவில்லை. கோபத்தை தற்காலிகமாக தவிர்க்க முடியாமல் ஆதரவுக்கு தாய்வீட்டுக்கு செல்லும் / கொண்டுவிடப்படும் பெண்களை அசடுகள், அறிவிலிகள் என்று சொல்ல முடியாது. அன்றைக்கு திருமணம் ஆன பெண்கள் அடிமைகளாக இருந்தாலும் இல்லறம் என்ற கட்டமைப்பு உடைவதற்கு அவர்கள் காரணமாக இருந்ததில்லை.
சமூகம் என்ற கட்டமைப்பு தோன்றிய காலம் முதல் அதையும், குடும்பத்தையும் தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்தான் ஆண். ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு வரை தாத்தாக்களுக்கு குடும்ப பொறுப்பு என்றால் பணம் ஈட்டுவது மட்டுமே, ஒன்றுக்குமேற்பட்ட மனைவிகளுடன் உல்லாச வாழ்க்கை வாழ்ந்தனர், பலமனைவிகள் என்பது அதன் பிறகு அப்பாக்கள் காலத்தில், சில அப்பாக்களுக்கு சின்ன வீடு என்று சுறுங்கியது, அம்மாக்கள் கதவுக்கு பின்னின்று சத்தம் வெளிவராமல் தலையை மட்டும் வெளியே நீட்டி பயந்தே இல்லறம் நடத்தினர், பெருவாரியான குடும்பங்களில் இல்லற பொறுப்பு அனைத்தையும் பெண்களே சுமந்துவந்தனர். ஆண்கள் சுகவாசியாகவே இருந்தனர். ஆண்களுக்கு திருமணம் தவிர்த்து எந்த சடங்குகளும் இருந்ததில்லை. ஆனால் பெண்களுக்கு வயது வந்ததற்கு விழா, வளைகாப்பு, பட்டாடைகள், ஆபரணங்கள் ஆகியவற்றை எல்லா விழாக்காலங்களிலும் தந்து பெண்களை போற்றவும் செய்தனர். அதுவும் ஒரு பெண் தாயாகிவிட்டால், அவள் பெரிய அளவில் போற்றப்பட்டிருக்கிறாள், தாய்மைக்கு நம்நாட்டில் கொடுக்கும் மதிப்பு வேறு எந்த நாட்டிலும் இல்லை.
ஆனால் படிப்பு விசயத்தில்,
எனது அம்மா சிறுவயதில் பள்ளிக்கு படிக்க சென்ற போது தாத்தாவினால் தடுக்கப்பட்டு, 'எப்படியும் சட்டிப்பானைதான் கழுவப் போறே, படித்து என்ன ஆகப்போகிறது ?' என்ற கேள்வியுடன் அடி உதையுட்டன் 3ஆம் வகுப்போடு நிறுத்தப்பட்டாராம். அன்றைய சமுதாய கட்டமைப்பில் பெண்கள் வீட்டின் பொறுப்புகளை சுமப்பவர்கள் அதை ஒழுங்காக செய்யும் படி சமையல் வேலை, குழந்தை வளர்ப்பு போன்றவை தெரிந்தால் போதும் என்ற மனநிலைதான் இருந்தது.
பெண்களுக்கு சம உரிமை, பெண் கல்வி பெற வேண்டும் என்ற சிந்தனையில் பெண்கள் படித்து வேலைக்கு வர ஆரம்பித்துவிட்டார்கள். பெண்கள் சமூகத்தைப் பொறுத்து நல்ல முன்னேற்றம். அதனால் முன்பு போல் பெண்கள் ஆண்களை சார்ந்து இருக்க வேண்டிய தேவை என்று எதுவுமில்லை. ஒன்றை ஒன்று சார்ந்து இருக்கும் போது விலாகதும் இருக்கும், இது இல்லற அமைப்புக்கும் பொருந்தும்.
பிணக்கு என்று வரும் போது, இன்னும் பழைய நினைப்பில் 'படித்து வேலைக்கு சென்று விட்டாலும், நீ பொம்பள தானே ?' என்று ஆண்கள் கேட்கும் போது பெண்கள், 'தாம் எந்த விதத்தில் உனக்கு குறைந்துவிட்டேன் ?' என்று கேட்க ஆரம்பித்து, இருவரும் ஒரு முடிவை எட்டுகிறார்கள். இவை தனிப்பட்ட இருவரது ஈகோவினால் வருவது. இதைத் தவிர்த்து கோர்ட் பாடியேறும் மணமுறிவு வழக்குகள் இருப்பக்க சொந்தங்களின் தூண்டுதலால் தான் மிக்கவையாக நிகழ்கின்றன.
ஒழுக்கக் கேடுகளுக்காக இருபக்கமும் நாடும் மண முறிவு குறித்து எனக்கு கருத்து எதுவுமில்லை. அவை சமுகத்தின் தேவையும் கூட. நான் பகிர்ந்து கொள்ள நினைப்பது குடும்ப சூழல் மற்றும் உளவியல் அடிப்படையிலான மண முறிவுகள் குறித்ததே.
அபத்த முடிவாக பார்க்கப்படும் மண முறிவுகள், உண்மையில் அபத்தமா ? இன்றைய பெற்றோர்கள், தங்கள் குழந்தைகளின் இந்த முடிவைப்பற்றி பெரிதும் கவலைப்படுகிறார்கள். அது குறித்தும் பார்த்தோமானால் இன்னும் தெளிவான கருத்து பரிமாற்றம் நிகழும், அடுத்த பகுதியில் பார்கலாம்.
பின்பற்றுபவர்கள்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
மதமும் மார்க்கமும் !
எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"
இறைவன் - மதம்
இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !
-கோவியார்
13 கருத்துகள்:
//அன்றைக்கு திருமணம் ஆன பெண்கள் அடிமைகளாக இருந்தாலும் இல்லறம் என்ற கட்டமைப்பு உடைவதற்கு அவர்கள் காரணமாக இருந்ததில்லை.//
இந்த வாக்கியத்தில் முரண்பாடு தான் இருக்கிறது . அடிமைகளாக இருக்கும் பெண்கள் இல்லற கட்டமைப்பு உடைவதற்கு காரணமாக இருக்காதிருப்பது ஒன்றும் ஆச்சரியம் இல்லையே?
//தாய்மைக்கு நம்நாட்டில் கொடுக்கும் மதிப்பு வேறு எந்த நாட்டிலும் இல்லை.//
இதெல்லாம் சொல்லிகிட வேண்டியது தான் .எல்லா நாட்டிலும் தாய்மைக்கு நல்ல மதிப்பு தான் கொடுக்கிறார்கள் .அதே நேரத்தில் தனி மனித சுதந்திரத்தையும் பேணுகிறார்கள் (இரண்டு பக்கத்திலும்)
//இந்த வாக்கியத்தில் முரண்பாடு தான் இருக்கிறது . அடிமைகளாக இருக்கும் பெண்கள் இல்லற கட்டமைப்பு உடைவதற்கு காரணமாக இருக்காதிருப்பது ஒன்றும் ஆச்சரியம் இல்லையே?//
ஜோ,
நான் சொல்ல வந்தது அந்த பொருளில் அல்ல. அடிமைகளாக இருந்தாலும், எதிர்த்து கோபித்துக் கொண்டு செல்வது வழக்கமாக இருந்திருக்கிறது. போய்விட்டு வரட்டம் என்று கணவரும் விட்டுவிடுவார். சரியில்லை என்றால் கணவனே தாய்வீட்டுக்கு கொண்டு விட்டுவிட்டு வருவார். வெட்டிக் கொண்டு போகமாட்டார்கள்.
நல்ல தொடர்.
மணமுறிவுகளின் சமுதாய பொருளாதார காரணங்கள் ஆராயத்தக்கவை.
தொடரவும். நன்றி.
//ஜோ / Joe said...
இதெல்லாம் சொல்லிகிட வேண்டியது தான் .எல்லா நாட்டிலும் தாய்மைக்கு நல்ல மதிப்பு தான் கொடுக்கிறார்கள் .அதே நேரத்தில் தனி மனித சுதந்திரத்தையும் பேணுகிறார்கள் (இரண்டு பக்கத்திலும்)
//
அன்னைத் தெரசா, சாரதா தேவி, ஜான்சி ரானி, இன்னும் எத்தனையோ அன்னையர்களை இந்தியாவில் தாய்மையை போற்றுதலுக்காக குறிப்பிட முடியும். மற்றநாடுகளில் தாய்மை என்ற பெயரில் பெண்கள் போற்றப்படுவது மிகக் குறைவே, அன்னை தெரிசா இந்தியாவிற்கு சேவைக்கு வரவில்லை என்றால் அவர் 'அன்னை' ஆகி இருப்பாரா ? அவர் பெயரே வெளியில் தெரியாமல் போய் இருக்கும்
//அன்னை தெரிசா இந்தியாவிற்கு சேவைக்கு வரவில்லை என்றால் அவர் 'அன்னை' ஆகி இருப்பாரா ?//
இருப்பார் .கன்னியர் இல்லங்களில் தலைமைப்பொறுப்பில் இருப்பவர்கள் மதர் என்றழைக்கப்படுவது உலகம் முழுவதும் தான் .இந்தியாவில் மட்டுமல்ல.
பொட்டைகோழிக் கூவியா பொழுது விடியப்போகுதுன்னு சொல்லிக்கிட்டு இருந்த ஆண்கள் சேவல் கூவாட்டாலும் பொழுது விடியும் நேரம் வந்தால் தானே விடிஞ்சுரும்னு உணராமப்போயிட்டாங்க. இல்லே?
//ஜோ / Joe said...
இருப்பார் .கன்னியர் இல்லங்களில் தலைமைப்பொறுப்பில் இருப்பவர்கள் மதர் என்றழைக்கப்படுவது உலகம் முழுவதும் தான் .இந்தியாவில் மட்டுமல்ல.
//
நீங்கள் சொல்வதை மறுக்கவில்லை. ஆனால் அந்த சேவைக்கு அது ஒரு பட்டம் மட்டுமே, போப்பாண்டவருக்கு இணையாக மதிக்கப்படும் உலக அளவில் பெண்மணிகள் இல்லை. இந்தியர்களால் அன்னையாக அடையாளப்படுத்தா விட்டால் அன்னை தெரசாவும், புனிதராக அடையாள படுத்தப்படாமல் மதர் தெரசா என்று தான் அழைக்கப்பட்டு இருப்பார். அவர் மட்டுமல்ல, அன்னிபெசண்ட் அம்மையார், ஒளவையார்கள், இஸ்லாம் நாச்சியார்கள், பிக்குனிகள் இன்னும் பலர் தெய்வங்களாகவே போற்றப்பட்டனர், ஏசுவை பெற்றதால் தெய்வ நிலைக்கு உயர்த்தியதால் மட்டுமே மேரிமாதா போற்றப்படுகிறார். மற்ற பெண்களையெல்லாம் உலக அளவில் தாய்மை என்பது தெய்வத்தன்மைக்கு ஒப்பானதாக நினைக்கப்படவில்லை.
//துளசி கோபால் said...
பொட்டைகோழிக் கூவியா பொழுது விடியப்போகுதுன்னு சொல்லிக்கிட்டு இருந்த ஆண்கள் சேவல் கூவாட்டாலும் பொழுது விடியும் நேரம் வந்தால் தானே விடிஞ்சுரும்னு உணராமப்போயிட்டாங்க. இல்லே?
//
மிகச் சரி.
:)
பெட்டை கோழிகள் சேவல்களின் கழுத்தை நெறிப்பதால் இனிசேவல்களால் கூவவும் முடியாது. அப்பறம் எங்கே பொழுதுவிடியறதைப்பற்றி பேசமுடியும்.
:)
//பெட்டை கோழிகள் சேவல்களின் கழுத்தை நெறிப்பதால் இனிசேவல்களால் கூவவும் முடியாது//
வெட்டுக்கிளிகளா? :-)))))
//போப்பாண்டவருக்கு இணையாக மதிக்கப்படும் உலக அளவில் பெண்மணிகள் இல்லை.//
இப்போது இல்லை .ஆனால் இதற்கு முன் பலர் இருந்திருக்கிறார்கள் . போப்பாண்டவர்களை விட புனிதர்களாக அறிவிக்கப்பட்டவர்களுக்கு தான் மதிப்பு அதிகம் .அன்னை தெரசா இன்னும் புனிதராக அறிவிக்கப்படவில்லை (எதிர் காலத்தில் நடக்கும்) .ஆனால் தெரசா என்றொரு புனிதர் ஏற்கனவே இருக்கிறார் .அவர் பெயரைத் தான் ஆக்னஸ் என்ற பெயர் கொண்ட அன்னை தெரசா சூட்டிக்கொண்டார் .எனவே இவரை கல்கத்தாவின் தெரசா (Terasa of Culcutta) என்று திருச்சபை அழைக்கிறது.
கோவி.கண்ணன்,
பெண்கள் திருமணமான புதிதில் அவ்வப்போது தாய் வீட்டுக்குப் போவதென்பது அங்கீகரிக்கப்பட்ட சமூக ஒழுங்கே. ஏனென்றால் கணவன் மனைவி இருவருக்குமே அவ்வப்போது தங்களைப் பகுத்துப் பார்த்துக் கொள்ள இரண்டு பேரின் குறை நிறைகளை ஆய்ந்து கொள்ள இந்த வகை தற்காலிகப் பிரிவுகள் பழைய பெரியவர்களால் அனுமதிக்கப்பட்டன. இன்னும் சொல்லப் போனால் வரவேற்கவும் பட்டன.
இப்போது ஆணுக்கு சமமாகப் பெண்ணும் சம்பாதிக்க ஆரம்பித்து விட்டதால், 'நான் ஏன் போக வேண்டும் உன்னைத் துரத்துகிறேன்' என்கிற நிலையை அவர்கள் எடுக்கும் வண்ணம் சட்டம் போட்டிருக்கிறார்கள்.
தம்பதியர் பிரிவில், பெண் தாய் வீட்டிற்குப் போனதற்குக் காரணம் பொருளாதார சார்பு நிலை அல்ல. அவளுடைய ஹார்மோன் ஏற்றத் தாழ்வுகளால் ஏற்படும் மனநிலை மாற்றங்களைப் பெற்றவர்களால் தான் புரிந்து கொள்ளவும் சகித்துக் கொள்ளவும் முடியும் என்பதால் தான்.
இதெல்லாம் பெண்ணியப் புரட்சியாளர்கள் எந்த அளவு கருத்தில் கொண்டு முடிவெடுக்கிறார்கள் அல்லது முடிவெடுக்கத் தூண்டுகிறார்கள் என்று புரியவில்லை.
எல்லாவற்றிற்கும் மேலாகப் பெண்ணுக்கு வளைகாப்பில் கண்ணாடி வளையல் போடுவது அதன் கலகல சப்தம் குழந்தைக்கு சுகமாக இருக்கும் என்பது போன்ற அடிப்படை விஷயங்களைத் தாண்டி, தலைப்பிரசவம் தாய் வீட்டில் வைத்ததற்கும் முக்கியக் காரணம் உண்டு. பிரசவத்தின் பிறகு ஏற்படும் ஹார்மோனல் இம்பேலன்ஸில் பல பெண்களுக்கு ஏற்படும் சிந்தனைக் கோளாறு பிரச்னைகளை (இதனைப் பெற்றோரிடம் கோவித்துக் கொண்டு காதல் கல்யாணம் செய்து தனியே பிள்ளை பெற்றவர்கள் உணர்ந்திருப்பார்கள்) ஒரு தாயால் தான் உணர்ந்து சரிக் கட்டிப் போக முடியும்; அதோடு ஆரம்ப நாட்களின் பிள்ளைப் பராமரிப்பு விஷயத்தில் பெண்ணால் தன் தாயை மட்டுமே நம்பி குழந்தையைக் கொடுக்க முடியும் என்பதால் தான்.
SO CALLED சம உரிமைக்கும் பொருளாதார சுதந்திரத்திற்கும் பெண்கள் கொடுத்துள்ள / கொடுத்து வரும் விலை கொஞ்ச நஞ்சமல்ல. அதன் அதிகபட்ச விலை தான் மன முறிவுகளும் மண முறிவுகளும்.
பொதுவாக நன்றி உணர்வு என்கிற விஷயத்திலும், குற்ற உணர்வு என்கிற விஷயத்திலும் ஆண்கள் EMOTIONALLY பலவீனமானவர்கள். மனைவியை இழந்த பிறகான ஆண்களின் வாழ்நாட்கள், கணவனை இழந்த பிறகான மனைவியின் வாழ்நாட்கள் குறித்த கணக்கெடுப்பே நடந்திருக்கிறது. புள்ளிவிவர முடிவு என்னவாக இருந்திருக்கும் என்று நான் சொல்லத் தேவையில்லை, படிக்கின்ற எல்லோரும் அறிவர்.
தொடரை இப்பொழுதுதான் பார்க்க நேர்ந்தது.
//அரை பிளேடு said...
நல்ல தொடர்.
மணமுறிவுகளின் சமுதாய பொருளாதார காரணங்கள் ஆராயத்தக்கவை.
தொடரவும். நன்றி.//
ரிப்பீட்...
துளசி கூறியதுபோல ஆண்கள் வெட்டுக் கிளிகள்தான்.
கோவி //மற்ற பெண்களையெல்லாம் உலக அளவில் தாய்மை என்பது தெய்வத்தன்மைக்கு ஒப்பானதாக நினைக்கப்படவில்லை.//
இது கீழைத்தேயம் மற்றும் மேலைத்தேயம் என்கிற அரசியல் பார்வைகள் குறித்த பிரச்சனை. இந்தியாவில் பெண்ணை தாயகவும் தெய்வமாகவும் போற்றுவது என்பது ஒரு தந்திரம்தான். இந்த தந்திரம் நினைவு நிலையில் உருவானது இல்லை. நினைவிலியில் உருவானது. இதன் முரண்நிலையாக பெண்ணை பேயாக நினைப்பதும் இருக்கிறது. பேய் மற்றும் தெய்வம் என்கிற இருநிலைகள்தான் பெண்களுக்கு கையளிக்கப்பட்டுள்ளது.
ரத்ணேஷ் //அவளுடைய ஹார்மோன் ஏற்றத் தாழ்வுகளால் ஏற்படும் மனநிலை மாற்றங்களைப் பெற்றவர்களால் தான் புரிந்து கொள்ளவும் சகித்துக் கொள்ளவும் முடியும் என்பதால் தான். //
இது புதிய கருத்து. ஆழ்ந்த உளவியல் மற்றும் உடலியல் பிண்ணனியை வினக்ககிறது.
//இதெல்லாம் பெண்ணியப் புரட்சியாளர்கள் எந்த அளவு கருத்தில் கொண்டு முடிவெடுக்கிறார்கள் அல்லது முடிவெடுக்கத் தூண்டுகிறார்கள் என்று புரியவில்லை.//
ஒரு தகவலுக்காக.. தீவிரப் பெண்ணிய புரட்சியாளர்கள் குடும்பம் என்கிற அமைப்பையே நிராகரிக்கிறார்கள். அவர்கள் கேட்பது நெகிழ்வான ஒருவகை கூட்டு வாழ்க்கை.
//SO CALLED சம உரிமைக்கும் பொருளாதார சுதந்திரத்திற்கும் பெண்கள் கொடுத்துள்ள / கொடுத்து வரும் விலை கொஞ்ச நஞ்சமல்ல. அதன் அதிகபட்ச விலை தான் மன முறிவுகளும் மண முறிவுகளும்.//
இது ஏற்புடைய ஒரு பார்வையே. இதன் மறுதலை.. so called ற்கே இந்நிலை என்றால் நிஜமான நிலைக்கு... ? என்கிற கேள்வியும் உள்ளது இதனுள்.
மணம் என்கிற ஒழுங்கமைப்பிற்குள் மணமுறிவு என்பதும் இருக்கத்தான் செய்யும். அதற்கான சமூகப் பொருளியல் மற்றும் கலாச்சார கட்டுமானங்கள் ஆகியவற்றையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
கருத்துரையிடுக