பின்பற்றுபவர்கள்

3 ஜூலை, 2006

மரணத்துடன் ஒரு நேருக்கு நேர் ... !

இம்மாத தேன்கூடு போட்டித் தலைப்பைப் பார்த்ததும் கொஞ்சம் பயம். கதையா, கவிதையா, கட்டுரையா ? எதை எழுதுவது ? ... கூடவே நிறைய கேள்விகள். யாரிடம் கேட்பது ? தத்துவங்களா, மதநூல்களா ? என்று நினைத்த நான்... வேண்டாம் அவற்றுள் எது சரி என்பது தெரியவில்லை ... ஒரே குழப்பமாக இருக்கிறது... மதங்கள் பிறவிகளைப் பற்றி ... சொர்க்கம் ... நரகம் என்பது பற்றியெல்லாம் சொல்லுகின்றன, அவற்றைப் பற்றி தெரிந்து கொள்ளவும் ஆர்வம் இல்லை. மதங்கள் மரணம் பற்றி நேரிடியாக சொல்லாமால் மறைமுகமாக சொல்லுகின்றன. நமக்கு தேவை பதில்கள் அது வெட்டு ஒன்று நிறைய துண்டுகள் என்பதைப் போல் இருக்க வேண்டும் என்று நினைத்து மத நூல்களை ஆராய்வதை கைவிட்டேன். இறந்த அன்பு சொந்தங்கள் நினைவில் வந்துபோனார்கள். தூக்கம் வந்தது அப்படியே தூங்கிவிட்டேன்.




ஆழமற்ற தூக்கதில் எண்ணங்கள் ... தூக்கத்தில் மீண்டும் துறத்தியது கேள்விகள் ... கேள்விகள் குடைந்து கொண்டிருந்தன. ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் ஒரு மிருகம் தூங்குவதாக சொல்கிறார்களே... கையில் வெண்ணையை வைத்துக் கொண்டு கடையில் நெய் வாங்கச் செல்வதா ? பிறகு எனக்குள்ளும் அது தூங்கிக் கொண்டே குடியிருக்கிறது என்பதை ஒருவாறு தெறிந்து கொண்டேன். அதையே எழுப்பி கேள்வி கேட்டால் என்ன ? என்ற துணிவுடன், பயத்தை கொஞ்ச நேரம் மூட்டைக் கட்டி ஓராமாக வைத்து ...அமைதியாக யோசித்து... யோசித்து மெல்ல நெருங்கிச் சென்று அதனை எழுப்பினேன்.

எழுப்புவதே பெரும் சிரமாக இருந்தது. மெதுவாக எழுந்து கண் விழிக்காமல் சோம்பல் முறித்த மரணத்துடன் உறையாடத் தொடங்கினேன்.

கோவி : மிஸ்டர் மரணம், கொஞ்சம் கண்விழித்துப் பாருங்கள் நான் யாரென்று தெரிகிறாதா ?

மரணம் : தெரிகிறது... என்னை கண்விழிக்க வற்புறுத்தாதே, நான் கண்விழித்தால் பார்பதற்கு நீ இருக்க மாட்டாய், கால நண்பனான உன்மீது எனக்கு அக்கரை உண்டு. கண் திறக்காமல் விளிப்பு நிலையில் இருந்து கேட்டுக் கொள்கிறேன். உனக்கு என்ன தெரிய வேண்டும் என்பதை ஒன்று ஒன்றாகக் கேள் என்றது மரணம்

பயம் தனிந்தது, நொகிழ்ந்து போய் கும்பிட்டேன்,

'தவறு செய்யப் பார்த்தேன், நல்ல வேளை அது கண்ணை திறக்க முயற்சிக்கவில்லை' என்று நிம்மதி பெருமூச்சி விட்டு விட்டு,

கோவி : அன்பு மரணமே, என் மீதான அக்கரைக்கு நன்றி. இதை நான் வாழ்நாள் முழுதும் மறக்க மாட்டேன்.

மரணம் : சரி, விசயத்துக்கு வா !

கோவி : மிஸ்டர் மரணம், உங்களைப் பற்றி கொஞ்சம் சொல்ல முடியுமா ?

ஆழ்ந்த மவுனத்திற்கு பிறகு மரணம் பேசியது

மரணம் : நான் ஒரு நிகழ்வு, காலத்தின் ஊடாகவே நானும் இருக்கிறேன். உயிர்கள் என்னை தனித்தனியாக உணருகின்றன.

கோவி : புரியவில்லை ! கொஞ்சம் விளக்குங்களேன் ?

மரணம் : கருப்பையில் உயிர் துடிக்க ஆரம்பித்த அதே வேளையில், நானும் கூடவே பிறக்கின்றேன். அப்படியில்லை என்றால் அந்த உயிர்துடிப்பதற்கு முன்பே பிறக்கின்றேன். அதாவது அந்த உயிர் அப்போதே பிறந்து இறந்துவிட்டது என்று கூட சொல்லலாம்.

கோவி : இன்னும் குழப்பமாகவே இருக்கிறது !

மரணம் : அதாவது பிறக்காத ஒன்றுடன் நான் இணைவதில்லை. பிறந்த ஒன்றை நான் விடுவதும் இல்லை !

கோவி : பிறப்புடன் இணைந்து பிறப்பதாக சொல்லுகிறீர்கள். தனி உயிர்களை தற்போதைக்கு சற்று மறப்போம். ஒரு முக்கிய கேள்வி, உங்களின் கருப்பு வண்ணத்தில் மறைந்து, இறந்து போன சாம்ராஜியங்கள் பற்றி என்ன நினைக்கிறீர்கள் ?

மரணம் : நான் பார்க்காத சாம்ராஜ்ஜியங்களா ? சாம்ராஜ்ஜியங்களின் பெரிய பெரிய மகுடங்களின் தலைகளை, அதாவது மன்னர்களை மாற்றி அழகு பார்த்தியிருக்கிறேன். அதன் எழுச்சி, வீழ்ச்சிகளை நானே முடிவும் செய்தும் இருக்கிறேன். பல சாம்ராஜ்யங்கள் சிறப்புற்றதும், சீர்கெட்ட சாம்ராஜ்யங்கள் அழிவுற்றதும் என்னால் தான்.

கோவி : அது சரி... சிறியோர், பெரியோர் என்ற வயதுகளை நீங்கள் எப்படி கையாளுகிறீர்கள் ?

ஒரு குழந்தையின் கூதுகுல சிரிப்புடன் சொல்லத் தொடங்கியது மரணம்
மரணம் : குழந்தை மணம் வேண்டும், வேண்டும் என்று எல்லோரும் சொல்கிறார்களே, அதே மன நிலையில்தான் அவர்களை அணைக்கும் பொழுது எனக்கும் ஏற்படுகிறது. கால(டைம்) தேவன் எனக்கு கொடுக்கும் ஒரு விளையாட்டு பொம்மையாகத் தான் அவர்களை நினைக்கிறேன். விளையாட்டு குணம் என்னிடம் அப்பொழுது வந்துவிடுகிறது. வயது வேறுபாடின்றி தொட்டு விளையாடுகின்றேன்.

கோவி : சந்தித்த கோர அனுபவங்கள் ?

மரணம் :என்று நான் காலத்துடன் இணைந்தோனோ அன்று முதல் இன்று வரை எத்தனையோ கோர நிகழ்வுகள், அழிவுகள் அவை என் விருப்பமில்லாமல், ஒரு தூக்கு தண்டனை நிறைவேற்றும் காவல் அலுவலர் என்ற மனநிலையில், கடைமையை செய் என்பது போல் நிகழ்ந்துவிடுகிறது. ஒன்றை நினைத்து... மற்றொன்றிக்கு ஆறுதல் தேடிக் கொள்கிறேன். இடைப்பட்ட காலத்தில் காலதேவனின் கால அவகாசம் தான் என்னை ஆற்றிக் கொள்ள வைக்கிறது.

கோவி : ஏழை, பணக்காரன் என்ற பாகுபாட்டை நீ எவ்வாறு அணுகுகின்றாய் ?

மெல்லச் சிரித்ததுச் சொன்னது ....
மரணம் : எனக்கேது பாகுபாடு ? நான் அவர்களை பார்க்கும் போது என்பார்வையில் எந்த வேறுபாடும் இருப்பதில்லை, இவர்கள் எல்லோருமே சமமாகவே என்னுள் அடக்கமாகிறார்கள்

மரணத்துடன் கொஞ்சம் நட்பு ஆகிவிட்டது என்று தெரிந்தது ... ஒருமைக்கு மாறி,
கோவி : உயர்ந்தவன், தாழ்ந்தவன் என்ற பேதம் பார்ப்பாயா ?

கேலியாக சிரித்தது மரணம் ...
மரணம் : சாவு மணியை கையில் வைத்துக் கொண்டு அடிக்காமல் விடுவேனா ? ஏற்றத் தாழ்வு என்னிடம் இல்லை என்று உறக்க கேட்கும் படி மணியடித்திருக்கிறேன். தூங்குவது போல் நடிப்பவர்களே, கேட்காதது போலவும் நடிக்கின்றனர். எங்கே சென்று விடுவார்கள் ? நான் பார்க்காமல் விடுவேனா ? இதைப் புரிந்து கொள்பவர் மிகச் சிலரே என்பது என் ஆதங்கம். பலரும் புரிந்து கொள்ளும் போது காலம் கடந்து போயிருக்கிறது.
என்று வருத்தத்துடன் சொன்னது மரணம்.

கோவி : நீ சொல்வது சரியா தவறா என்பது தெரியவில்லை, அன்பு உறவுகளுக்குள் நுழைந்து திடீரென்று தட்டிப் பறிப்பது சரியா ?

மரணம் : முன்பே சொல்லிவிட்டேன், சரி தவறு என்ற கேள்விகளுக்கு எனக்கு பதில் யாரும் சொல்வதில்லை ... எனக்கு தெரிவதும் இல்லை. காலதேவனின் கட்டளை எதுவோ, அது கடமை என்ற அளவில் அதைச் செய்கிறேன். உறவுகள் ஒன்றுக் ஒன்று சேர்வதினாலோ, தற்காலிகமாக பிரிவதாலோ, தங்களுக்குள் தாங்களே புரிந்து கொள்வதைக் காட்டிலும் நிரந்தரமாக பிரியும் போது தான் உறவுகளின் உன்னதங்களை புரிந்து கொள்கிறார்கள். இவற்றைப் பார்க்கும் போது அது எனக்கு ஆறுதலாக அமைந்து விடுகிறது. எல்லாவித காயங்களுக்கும் தான் காலன் களிம்பு மருந்து போடுகிறானே !

கோவி : வருத்தமான விசயம் அது. மண்ணிக்கவும்... ஒரு ஆர்வக்கோளாறு கேள்வி இது, நீ வருவதை முன் கூட்டியே சொன்னால் குறைந்தா போய்விடுவாய் ?

மறுபடியும் நகைத்தது,
மரணம் : ம்... சொல்லாம் .... நான் செய்யும் வேலையை அவர்களே செய்து மற்றோரை வாழவிடாமல் செய்துவிடுவார்கள். நாளைக்கு சாகப் போகிறோம் என்று இன்றைக்கே வேண்டாதவர்களை எல்லாம் வீழ்த்த முயற்சிப்பார்கள். தனக்கு கிடைத்தது (மரண தேதி) எல்லோருக்கும் கிடைக்க வேண்டும் என்ற தாரள நிலையை எல்லோரும் எடுத்துவிட்டால் கால தேவனிடம் யார் பதில் சொல்வது?. தேவையற்ற குழப்பங்கள் ஏற்படும். அது எனக்கு மாற்றான வாழுதல் என்ற நிலைக்கு நான் செய்யும் துரோகம்.

கோவி : மதம் பற்றிய உன் மீதன மரண கருத்துக்கள் பற்றி என்ன நினைக்கிறாய் ?

மெல்லச் சிரித்தது மரணம் ...
மரணம் : என் மீது பயம் காரணமாகவே மனிதன் தேடிக் அலைந்து உருவாக்கிக் கொண்டது மதங்கள் ஆகும். என் வாழ்வில் எத்தனையோ மதங்களையும், என்னைப் பற்றிய தத்துவங்களையும் பார்த்திருக்கிறேன், மதங்கள், தத்துவங்கள் அவை நீர்த்துப் போகும் போது அவற்றை என் சவ குழியில் புதைத்திருக்கிறேன். பிறப்புகள் போலவே மதங்களும் என்மீதான புதிய கருத்துக்களுடன் மீண்டும் பிறந்து கொண்டே இருக்கின்றன.

கோவி : சபாஷ், எனக்கு வருத்தமாக இருப்பது ஒன்று. உன்னை தானாகவே தேடி வருபவர்கள் பற்றி என்ன நினைக்கிறாய் ?

மரணம் : நீ கேட்பது தற்கொலையை என்று புரிகிறது, இருந்தாலும் கொலையைப் பற்றியும் சொல்லிவிடுகிறேன். இதற்கு நான் பொறுப்பேற்றுக் கொள்வது இல்லை. விரும்புவர்களையும், விருப்பின்றி தள்ளப் படுபவர்களையும் நினைத்து நான் கண்ணீர்விடுவதும் உண்டு. மீழத் துயரில் என்னை நோக்கி கை நீட்டுபவர்களை அணைத்துக் கொள்கிறேன். கொலைக் கரங்களுக்கு இடையில் சூழ்நிலை கைதியாகிறேன். அப்போது அவர்களின் ஆத்ம சாந்திக்காக பிராத்தனை செய்வதைத் தவிர வேறொன்றும் நான் செய்வதில்லை. என்னைப் பற்றி புரிந்துணர்வு, விழிப்புணர்வு இல்லாததாலேயே இத்தகைய கொடுமைகள் நடந்து முடிந்துவிடுகின்றன. இதற்கு குற்றம் சொல்வது என்றால் கால தேவனையும் (டைம்), பொறுப்பற்றவர்களையும், அடுத்தவர் நலன் கெடுப்பவர்களையுமே குற்றம் சொல்ல வேண்டும்.

கோவி : ஏதோ சொல்கிறாய்... எனக்கு முழுவதும் உடன்பாடு இல்லை. நீ சொல்வது தேற்றிக் கொள்வதற்காக என்ற ரீதியில் எடுத்துக் கொள்கிறேன்... கடைசி கேள்வி, மரணமே உனக்கு மரணம் உண்டா ?

வெகுண்டு கோபப்படுவது போல் தோன்றியது. கண்ணை திறக்க முயற்சிப்பது போல் தெரிந்தது.

கோவி : அமைதி! அமைதி!... அடுத்தவர் மரணம் பற்றிச் சொல்லும் போது அமைதியாக இருந்த நீ ... உன்னைப் பற்றிகேட்கும் போது கோபம் வருகிறதே மரணம் என்றால் உனக்கும் பயமா ?

சிறிது நேர மவுனத்திற்கு பின் மெதுவாக,

மரணம் : உன்னுடைய கேள்வி எனக்கு எதிராக இருப்பது போல் தோன்றியதும், சற்று கலவரப்பட்டது உண்மை. நீ கேட்பது சரியான கேள்வி என்பதால் ஆழ்ந்து யோசித்து அமைதியானேன். மரணத்திற்கு மரணமா ? மரணம் இறந்துவிட்டது என்றால் அது மீண்டும் பிறந்துவிட்டது என்று தானே அர்த்தம். அப்படி பிறந்துவிட்டால் எனக்கு மரணமில்லை எனக் கொள்ளலாம்... அதாவது மரணத்திற்கு மரணமே இல்லை... மரணம் என்றுமே வாழ்கிறது. கால தேவனின் கடைசி மூச்சி இருக்கும் வரை வாழ்கிறது. போதும் மேலும் நோண்டாதே ... என்றோ ஒரு நாள் மீண்டும் சந்திப்போம். அன்று நீ என்னுடன் இருப்பாய்.
என்று அப்படியே தூங்கிவிட்டது.

ஏதோ ஏதோ உணர்வுகள். சிலிர்ப்புகள் எழுந்து அடங்கியது. மெல்ல கண்விழித்துப் பார்த்தும், எல்லாம் கனவு என்று தெளிந்தேன். மரணத்தின் மீதான என்பயம் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்தது ... அதன்பிறகு தூக்கம் வரவில்லை. நடந்தவற்றை எழுதினேன்.

எல்லாவித சாவுகளுக்கும் கேள்வி எழுப்பிய நான் ஒன்றுக்கு மட்டும் வாய்த்திறக்கவில்லை. அதற்கு மரணமே மரண ஓலம் எழுப்புமோ என்ற பயம் தான் காரணம். ஆம்...! மரணமும் கலங்கி ஓலமிடும் என்றால் அது பட்டினிச் சாவுதான். இதற்கான காரணம் மரணத்திற்குத் தெரியாது ... மனிதர்களிடம் மட்டுமே இதற்கான காரணம் இருக்கிறது.


ரணம் மட்டுமே வாழ்கிறது ...

கருப்பையில் உயிரின் முதல் துடிப்பில்
பிறப்புடன் சேர்ந்தே பிறப்பெடுக்கிறது மரணம் !

சாம்ராஜிய மா மகுடங்களின் தலைகளை
மாற்றி அழகு பார்க்கிறது மரணம் !

சிறுவயதோ, முதுமையோ எதற்கும் அஞ்சாமல்
தொட்டு விளையாடும் கள்ளமற்றது மரணம் !

ஏழை, பணக்காரன் என்ற பாகுபாட்டை
உடைத்து சமநீதி வழங்குகிறது மரணம் !

உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்ற வேறுபாடின்றி
ஒரே மரணக்குழியில் புதைக்கிறது மரணம் !

உறவுகளை உணர்த்தி, உள்ளங்களை திருத்தும்
ஒப்பற்ற நிலைத்த தத்துவம் மரணம் !

இரவுபகலென்று இயற்க்கையின் இரட்டை நிலையில்
அமைதி இரவாக எண்ணப்படுவது மரணம் !

உயிர் என்பது ஊசலாட்டம் என்று
ஒயிலாடி சுட்டு உணர்த்துவது மரணம் !

மட்டில்லா துன்பங்கள் எத்தனை வந்தாலும்
எட்டி ஓடாமல் கட்டியணைப்பது மரணம் !

மரண தத்துவங்களும் மறித்துப் போனாலும்,
அன்றும், இனிஎன்றும் மறிக்காதது மரணம் !

நொடி பிசகாமல், காலம் தாழ்தாது
நாட்களை எண்ணிச்செயல் ஆற்றவது மரணம் !

காலதேவன் காலமாகிப் போகும்வரை இவ்வுலகில்
கடைசிவரை வாழ்வது மரணம் ... மரணம் மட்டுமே !



பின் குறிப்பு : இந்த பதிவில் வந்தது யாவும் என் கற்பனையே ... எந்த நம்பிக்கையும் பொய் என்று சொல்லுவதற்காக எழுதப்படவில்லை. உள் உணர்வுகளையும், சொந்தக் கருத்துக்களை மட்டும் பகிர்ந்து கொள்கிறேன். உங்களுக்கு மாறுபட்ட கருத்து இருந்தால் அதையும் மதிக்கிறேன்.

வளர்ச்சிதை மாற்றம் - என்னுடைய கவிதைக்கு வாக்களித்தவர்களும், பின்னூட்டமிட்ட பதிவாளர் நண்பர்கள், நண்பிகளுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்

அன்புடன் கோவி.கண்ணன்

38 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

//அதாவது பிறக்காத ஒன்றுடன் நான் இணைவதில்லை. பிறந்த ஒன்றை நான் விடுவதும் இல்லை !//

Good one

பெயரில்லா சொன்னது…

வழக்கம் போல நன்றாக இருக்கிறது கோவி.... வெற்றி பெற வாழ்த்துக்கள்!!!

கோவி.கண்ணன் சொன்னது…

நன்மனம், லக்கி லுக் ... ரொம்ப வேகமாக இருக்கிறீர்கள். பதிவிட்டு 5 நிமிடம் கூட ஆகவில்லை. வாழ்த்துக்களுக்கு நன்றி !

பெயரில்லா சொன்னது…

//

உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்ற வேறுபாடின்றி
ஒரே மரணக்குழியில் புதைக்கிறது மரணம் !



மட்டில்லா துன்பங்கள் எத்தனை வந்தாலும்
எட்டி ஓடாமல் கட்டியணைப்பது மரணம் !

மரண தத்துவங்களும் மறித்துப் போனாலும்,
அன்றும், இனிஎன்றும் மறிக்காதது மரணம் !

//

நன்றாக உள்ளது வெற்றி பெற வாழ்த்துக்கள்

பெயரில்லா சொன்னது…

நல்லா இருக்கு கண்ணன்!
இன்னும் அழ்ந்து படிக்க வேண்டும் என்று நினைக்கின்றேன். படிக்கிறேன்.

சுனாமியை கண்ட பிறகும் நீங்கள் பாகுபாட்டை குறித்து கேள்வி எழுப்பியது சரியா....

கோவி.கண்ணன் சொன்னது…

//
நாகை சிவா said...
சுனாமியை கண்ட பிறகும் நீங்கள் பாகுபாட்டை குறித்து கேள்வி எழுப்பியது சரியா....
//

ஒன்றை நினைத்து... மற்றொன்றிக்கு ஆறுதல் தேடிக் கொள்கிறேன். இடைப்பட்ட காலத்தில் காலதேவனின் கால அவகாசம் தான் என்னை ஆற்றிக் கொள்ள வைக்கிறது.

கோவி.கண்ணன் சொன்னது…

//மின்னுது மின்னல் said...
நன்றாக உள்ளது வெற்றி பெற வாழ்த்துக்கள் //
மின்னல் உங்கள் 'பளிச்' என்ற பாராட்டுகளுக்கு நன்றி

பெயரில்லா சொன்னது…

மரண அடி கோவியாரே..

வாழ்த்துக்கள்!!

பெயரில்லா சொன்னது…

மிக அருமை. என் பல கேள்விகளுக்கு மரணத்திடம் இருந்து பதில் கிடைத்து விட்டது.

//நான் ஒரு நிகழ்வு, காலத்தின் ஊடாகவே நானும் இருக்கிறேன். உயிர்கள் என்னை தனித்தனியாக உணருகின்றன//

எல்லோருமே ஒரு முறைதான் பிறப்பையும் இறப்பையும் உணரமுடியும்.

வெற்றி பெற வாழ்த்துக்கள் கோவி.யாரே!

பெயரில்லா சொன்னது…

கோவி.கண்ணன் அய்யா,

// கடைசிவரை வாழ்வது மரணம் ... மரணம் மட்டுமே ! //

மிக மிக அருமை.

என்னிடம் வார்த்தைகள் இல்லை பாராட்ட...

மிக்க நன்றி!!

பெயரில்லா சொன்னது…

கோவி,

மரணத்தை சந்தித்து திரும்பி வந்திருக்கீங்க! :)

ரொம்பப் பிடிச்சது "பிறப்புடன் சேர்ந்தே பிறப்பெடுக்கிறது மரணம் !"

வாழ்த்துக்கள்! :)

கோவி.கண்ணன் சொன்னது…

//கப்பி பய said...
மரண அடி கோவியாரே..
//

ரொம்ப வலிக்குதுங்கோ !

கோவி.கண்ணன் சொன்னது…

//மகேஸ் said...
மிக அருமை. என் பல கேள்விகளுக்கு மரணத்திடம் இருந்து பதில் கிடைத்து விட்டது.

வெற்றி பெற வாழ்த்துக்கள் கோவி.யாரே!
//
மரணபயம் நீங்கிவிட்டதா ...?

வாழ்த்துகளுக்கு நன்றி திரு மகேஸ் அவர்களே !

கோவி.கண்ணன் சொன்னது…

//Sivabalan said...
கோவி.கண்ணன் அய்யா,

என்னிடம் வார்த்தைகள் இல்லை பாராட்ட...//

திரு சிவ பாலன் உங்கள் பாராட்டுகள் நெகிழ்ச்சியாக இருக்கிறது. நன்றி ...நன்றி ...நன்றி

கோவி.கண்ணன் சொன்னது…

//இளவஞ்சி said...
கோவி,

மரணத்தை சந்தித்து திரும்பி வந்திருக்கீங்க! :)
//

இளவஞ்சி ஆமங்க அதை நினைச்சாலே அச்சமாக இருக்கிறது. நீங்கள் தேர்ந்தெடுத்த தலைப்பு 'உயிருள்ள' தலைப்பு. உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி ...

பெயரில்லா சொன்னது…

உங்கள் கண்ணோட்டத்திலிருந்து அணுகிய மரணத்துடனான சந்திப்பு, பல கருத்துகளைப் பிரதிபலிக்கிறது.
ஆனால், இன்னதென்று வரையறுக்காமல் விட்டிருக்கிறது.
அதுவும் சரிதான்!
மரணத்தை யாரால் வரையறுக்க முடியும்?
வாழ்த்துகள்!

சுருங்கச் சொன்னால் பரிசு தருவதில்லை என ஒரு நீள்பதிவோ!!
:))

பெயரில்லா சொன்னது…

மரணத்துடன் விவாதித்த கோவி.கண்ணன் (நசிகேதன் ?!) வாழ்க .

(கவிதையைத் தனியா இன்னொரு பதிவா போட்டிருக்கலாமோ ?)

கோஷமிடும்
பச்சோந்தி

பெயரில்லா சொன்னது…

அருமையான படைப்பு கோவியாரே!
வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்.


இந்த வாரம் தங்களுடையதாக இருப்பினும் இப்பதிவின் பகுதிகளை (மட்டும்)ஏனோ எனக்கு கலாய்க்க மனம் வரவில்லை.
:)

இது போல் உடலும் உயிரும் உரையாடிக் கொள்ளும்படி நான் எழுதிய கவிதை பிரிவுரைப் படலம் என்ற மீள்பதிவு பாருங்கள்.

பெயரில்லா சொன்னது…

பிறந்த எல்லா உயிருக்கும் மரணம் கூடவே இருக்கு. ஆனா எங்கே, எப்ப, எப்படின்றதுதான்
மர்மம். அது வெளிபட்டுட்டா வாழ்க்கையிலே பிடிப்பு விட்டுப்போயிரும் இல்லையா?

அதான் மரணம் அப்படிப் பேசிய காரணம்.

கோவி.கண்ணன் சொன்னது…

//SK said...
உங்கள் கண்ணோட்டத்திலிருந்து அணுகிய மரணத்துடனான சந்திப்பு
//
எஸ்கே அய்யா,
உங்கள் கருத்துக்களுக்கு நன்றி ... உங்கள் கருத்துக்களை ஆவலுடன் எப்போதும் எதிர்பார்க்கிறேன் !

//சுருங்கச் சொன்னால் பரிசு தருவதில்லை என ஒரு நீள்பதிவோ!!
:)) //
மரணம் தரும் பரிசு(?)க்கு முன் மற்றதெல்லாம் பெரியது என்று நினைக்கவில்லை :)

கோவி.கண்ணன் சொன்னது…

//Chameleon - பச்சோந்தி said...
மரணத்துடன் விவாதித்த கோவி.கண்ணன் (நசிகேதன் ?!) வாழ்க .

(கவிதையைத் தனியா இன்னொரு பதிவா போட்டிருக்கலாமோ ?)

கோஷமிடும்
பச்சோந்தி

//

வண்ண வேஷமிடும் பச்சோந்தி கோஷமிடும் பச்சோந்தி யாக 'மாறி'யிருக்கிறீர்கள் :)

//(கவிதையைத் தனியா இன்னொரு பதிவா போட்டிருக்கலாமோ ?)//

கவிதைதான் முதலில் எழுதினேன். எத்தனை பேர் கவிதை படிக்கிறார்கள் என்று எண்ணத்தை மாற்றி ... பின் பேட்டியாக நினைத்து எழுதி ... பின் கனவு கண்ட கதையாக மாற்றினேன்.

வருக்கைக்கு கருத்துக்கும் நன்றி

கோவி.கண்ணன் சொன்னது…

//At 10:54 AM, துளசி கோபால் said…

பிறந்த எல்லா உயிருக்கும் மரணம் கூடவே இருக்கு. ஆனா எங்கே, எப்ப, எப்படின்றதுதான்
மர்மம். அது வெளிபட்டுட்டா வாழ்க்கையிலே பிடிப்பு விட்டுப்போயிரும் இல்லையா?

அதான் மரணம் அப்படிப் பேசிய காரணம்.
//
துளசியக்கா சரியாகத்தான் சொல்லுகிறீர்கள். இதைப் பற்றி வேறு எதுவும் சிந்திக்கவும் முடியாது

பெயரில்லா சொன்னது…

//கருப்பையில் உயிரின் முதல் துடிப்பில்
பிறப்புடன் சேர்ந்தே பிறப்பெடுக்கிறது மரணம் //
Excellant

பெயரில்லா சொன்னது…

அது நிகழும் வரை சொல்ல ஒன்றுமில்லை.
நிகழ்ந்த பிறகு சொல்ல வழியில்லை.
இன்னிலையில் உங்கள் உரையாடல் ஆறுதலாக இருக்கிறது.
வெற்றிக்கு வாழ்த்துக்கள்.

கோவி.கண்ணன் சொன்னது…

//valli said...
அது நிகழும் வரை சொல்ல ஒன்றுமில்லை.
நிகழ்ந்த பிறகு சொல்ல வழியில்லை.
இன்னிலையில் உங்கள் உரையாடல் ஆறுதலாக இருக்கிறது.
வெற்றிக்கு வாழ்த்துக்கள்.
//
வள்ளி அவர்களே,
என்னுடைய எழுத்துக்கள் உங்களுக்கு ஆறுதல் தந்தால் அதுவே நெகிழ்ச்சியாக இருக்கிறது. போட்டிக்காக எழுதியது என்றாலும் நல்ல கருத்துக்களை சொல்ல வேண்டுமென்பது தான் நோக்கம் !

பெயரில்லா சொன்னது…

கோவி,

இப்பொழுது உங்களுடையெ பதிவுகளை எல்லாம் "தோண்ட" ஆரம்பித்திருக்கிறேன், முத்தெடுக்க முத்தெடுக்க உங்களிடமும் காண்பித்துச் செல்கிறேன்.

உங்கள் "மரணத்துடன்" பதிவை ஆழ்ந்து படிக்க விரும்புவதால், கொஞ்சம் கொஞ்சமாக வந்து வந்துப் படித்துச் செல்கிறேன்...

இது வரை ஒரு ஐந்து அல்லது ஆறு முறை வந்து போயிருக்கிறேன். வாழ்வியல் நிசர்சனத்தை மரணம் மட்டுமே உணர்த்த முடியும் என்று அருமையாக விளக்கியுள்ளீர்கள். கவிஞர் கண்ணதாசன் கூட எங்கோ கூறியிருப்பார் "வாழ்க்கையின், மகிமையை உணர, இடுகாட்டுக் சென்று வா - அல்லது அவர் அவ்வாறு எப்பொழுதெல்லாம் மனத் தொய்வில் இருப்பாரோ அப்பொழுதெல்லாம் சுடுகாட்டுப் பக்கம் சென்று வருவதாக, புத்துணர்வு பெரும் வண்ணம்."

ஹீம்... இன்னும் வருகிறென். அருமை.

கோவி.கண்ணன் சொன்னது…

//இது வரை ஒரு ஐந்து அல்லது ஆறு முறை வந்து போயிருக்கிறேன். வாழ்வியல் நிசர்சனத்தை மரணம் மட்டுமே உணர்த்த முடியும் என்று அருமையாக விளக்கியுள்ளீர்கள். //
தெகா..
மரணம் தவிர்க்க முடியாத நிகழ்வு ... படிப்பவர்களுக்கு கண்டிப்பாக பயம் ஏற்படுத்தக் கூடாது என்ற எச்சரிக்கை உணர்வுடன் எழுதினேன். கொஞ்சம் நகைச் சுவையாக சொல்லுவதால் இது சிறப்பாக அமைந்துவிட்டதாக நினைக்கிறேன்

பெயரில்லா சொன்னது…

நன்றாக இருக்கிறது கோவி.கண்ணன். நான் முன்னால் இட்ட பின்னூட்டம் எட்டவில்லையோ ?
வெற்றி பெற வாழ்த்துக்கள் !

கோவி.கண்ணன் சொன்னது…

//At 2:09 PM, மணியன் said…

நன்றாக இருக்கிறது கோவி.கண்ணன். நான் முன்னால் இட்ட பின்னூட்டம் எட்டவில்லையோ ?
வெற்றி பெற வாழ்த்துக்கள் !
//
திரு மணியன் இருக்கலாம்... இந்த பதிவுக்கு உங்கள் பின்னூட்டம் வரவில்லை.
எல்லோர் மனதிலும் இருக்கும் பொதுவான மரணம் பற்றிய கருத்தாக இருப்பதால் ஒத்துப் போவதாக இருக்கிறது என்று நினைக்கிறேன். தங்கள் வருகைக்கும் மறுமொழி ஊக்கம் கொடுக்கிறது. நன்றிகள்

பெயரில்லா சொன்னது…

வெற்றி பெற வாழ்த்துக்கள் !!

பெயரில்லா சொன்னது…

நானே கலந்துக்கலாமுன்னு எண்ணம் இருந்ததாலே என்னுடையதை இடும் வரை மற்றவர்கள் எழுதினதை படிக்க வேண்டாமுன்னு நினைச்சேன். அதனால இப்போதான் படிக்கிறேன்.

///
மரணம் : அதாவது பிறக்காத ஒன்றுடன் நான் இணைவதில்லை. பிறந்த ஒன்றை நான் விடுவதும் இல்லை !
///

பின்னியிருக்கீங்க வெற்றி பெற வாழ்த்துக்கள்.

கோவி.கண்ணன் சொன்னது…

//குமரன் எண்ணம் said... நானே கலந்துக்கலாமுன்னு எண்ணம் இருந்ததாலே என்னுடையதை இடும் வரை மற்றவர்கள் எழுதினதை படிக்க வேண்டாமுன்னு நினைச்சேன். அதனால இப்போதான் படிக்கிறேன்.//

சில எண்ணங்கள் சிலருக்கு ஒத்துப் போதும் என்பது உங்கள் மரணம் பற்றிய பதிவை படித்தபோதே தெரிந்தது.

கோவி.கண்ணன் சொன்னது…

//Thekkikattan said...
உங்கள் "மரணத்துடன்" பதிவை ஆழ்ந்து படிக்க விரும்புவதால், கொஞ்சம் கொஞ்சமாக வந்து வந்துப் படித்துச் செல்கிறேன்...//

தெக .. உங்களுக்கு நேரம் கிடைக்கும் போது படித்துவிட்டு கருத்துக்களை தெரிவியுங்கள்.

RATHNESH சொன்னது…

கோவி.கண்ணன்,

நசிகேதன் போய்க் காத்திருந்து வரமாகத் தெரிந்து கொண்ட விஷயங்களை, உங்களுக்குள் இருந்து தட்டி எழுப்பியே அறிந்திருக்கிறீர்கள் என்றால் நீங்க ரொம்பப் பெரிய ஆள்தான்.

அருமையான சொல்லாடல். கோர்வையான கருத்துப் பொழிவு. பிசிறு தட்டாத போக்கு. அனுபவித்துப் படிக்க முடிந்தது. நன்றி.

வடுவூர் குமார் சொன்னது…

தூங்கும் போது கூட யோசனையா??
நன்றாக இருக்கு-கேள்வி பதில்.

WARNING!!! சொன்னது…

மிக மிக தாமதமான பின்னூட்டம்தான்
தவறிருந்தால் மண்ணிக்கவும்.
சிறிய திருத்தம்/சந்தேகம்:-
மரணம் இறந்தால் அது எப்படி மீண்டும் பிறந்ததாக அர்த்தம்.
பிறப்போடு பிறந்தது மரணம்.எனவே "என்று பிறப்பு இறக்கிறதோ அன்று நானும் இறப்பேன்" என்று மரணம் பதில் கூறுவதாக அமைத்திருக்கலாம்.

கோவி.கண்ணன் சொன்னது…

//WARNING!!! said...

மிக மிக தாமதமான பின்னூட்டம்தான்
தவறிருந்தால் மண்ணிக்கவும்.
சிறிய திருத்தம்/சந்தேகம்:-
மரணம் இறந்தால் அது எப்படி மீண்டும் பிறந்ததாக அர்த்தம்.
பிறப்போடு பிறந்தது மரணம்.எனவே "என்று பிறப்பு இறக்கிறதோ அன்று நானும் இறப்பேன்" என்று மரணம் பதில் கூறுவதாக அமைத்திருக்கலாம்.

12:23 AM, November 24, 2009//

மரணம் என்றால் இறப்பு, மரணத்தின் இறப்பு என்றால் மரணம் பிறப்பெடுத்தது என்று தானே பொருள்.

வாழ்க்கை அல்லது மரணம் (வாழ்க்கைக்கு பிறகு) இரண்டில் எதாவது ஒன்று தான் எந்த ஒரு சமயத்திலும் இருக்கும்

WARNING!!! சொன்னது…

//மரணம் என்றால் இறப்பு, மரணத்தின் இறப்பு என்றால் மரணம் பிறப்பெடுத்தது என்று தானே பொருள்.//

எனக்கு தங்கள் கூற்று புரியவில்லை.
ஒருவேளை கணித அடிப்படையில்((-)*(-)=(+))என்கிறீர்களா?

//வாழ்க்கை அல்லது மரணம் (வாழ்க்கைக்கு பிறகு) இரண்டில் எதாவது ஒன்று தான் எந்த ஒரு சமயத்திலும் இருக்கும்//
பிறகெப்படி தங்கள் மரணம் மட்டும் தாங்கள் வாழ்ந்து கொண்டிருக்கும் போதே(தற்பொழுது) உங்களுக்குள் உறங்கி(உறங்குதல்=உயிரோடிருத்தலின் ஒரு நிலையே)கொண்டிருக்கிறது?

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்